நீதிமான்களுக்கு உயிர்த்தெழுதல் உண்டு
‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று தேவனிடத்தில் நான் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.’—அப்போஸ்தலர் 24:15.
1. ஆதாமும் ஏவாளும் பாவத்துக்குள் விழுந்து போன சமயத்திலிருந்து என்ன நிலைமைகளை எல்லா மனிதர்களும் எதிர்ப்பட்டிருக்கின்றனர்?
“செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:10) நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாமும் ஏவாளும் பாவத்துக்குள் விழுந்துபோன சமயத்திலிருந்து மனிதவர்க்கத்தின் ஒவ்வொரு சந்ததியும் எதிர்ப்பட்டிருக்கும் ஒரு நிலைமையை நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஒருசில வார்த்தைகளின் மூலம் ஞானவானாகிய சாலொமோன் ராஜா விவரிக்கிறார். விதிவிலக்கின்றி, மரணம் இறுதியில் எல்லாரையும்—செல்வந்தனையும், ஏழையையும், ராஜாவையும், குடிமகனையும், விசுவாசமுள்ளவரையும், விசுவாசமில்லாதவரையும் விழுங்கியிருக்கிறது. உண்மையிலேயே மரணம் ‘அரசனாக ஆண்டுகொண்டு வந்திருக்கிறது.’—ரோமர் 5:17, NW.
2. இந்த முடிவின் காலத்தின் போது விசுவாசமுள்ள சிலர் ஏன் ஏமாற்றமடைந்திருக்கலாம்?
2 மருத்துவ விஞ்ஞானத்தின் நவீன முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், இந்த 20-ஆம் நூற்றாண்டிலும்கூட மரணம் இன்னும் அரசனாக ஆட்சிசெய்து வருகிறது. இது ஆச்சரியமாக இல்லையென்றாலும், இந்த நீண்டகால எதிரியாகிய மரணத்தை எதிர்ப்படுகையில், சிலர் சற்று ஏமாற்றமடைந்திருக்கின்றனர். ஏன்? 1920-களில், உவாட்ச்டவர் சொஸைட்டி “இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இலட்சக்கணக்கானோர் ஒருபோதும் மரிக்கமாட்டார்கள்,” என்ற செய்தியை அறிவித்தது. இந்த இலட்சக்கணக்கானோர் யாராக இருப்பார்கள்? இவர்கள் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய இயேசுவின் குறிப்பிலுள்ள ‘செம்மறியாடுகள்’ ஆவர். (மத்தேயு 25:31-46) கடைசி காலத்தின்போது இந்தச் செம்மறியாடுகளைப் போன்றவர்கள் தோன்றுவார்கள் என்பதாக முன்னறிவிக்கப்பட்டிருந்தது. இவர்களுடைய நம்பிக்கை பரதீஸிய பூமியில் நித்திய வாழ்க்கையாக இருக்கும். காலம் செல்லச் செல்ல, யெகோவாவின் நோக்கங்களில் இந்தச் ‘செம்மறியாடுகளின்’ ஸ்தானத்தைப் பற்றிய மேம்பட்ட ஒரு புரிந்துகொள்ளுதலை கடவுளுடைய மக்கள் பெற்றுக்கொண்டனர். இந்தக் கீழ்ப்படிதலுள்ளவர்கள் பிடிவாதமுள்ள ‘வெள்ளாடுகளிலிருந்து’ பிரிக்கப்பட வேண்டும் என்பதையும், பின்னவர் அழிக்கப்பட்ட பின்பு, அவர்கள் தங்களுக்காக ஆயத்தம் செய்து வைக்கப்பட்டிருக்கும் ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியைச் சுதந்தரித்துக்கொள்வர் என்பதையும் அவர்கள் உணர்ந்தனர்.
செம்மறியாடுகள் போன்றவர்களைக் கூட்டிச்சேர்த்தல்
3. கடவுளுடைய மக்கள் 1935 முதற்கொண்டு எந்த வேலையின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்தி வந்திருக்கின்றனர்?
3 ‘உண்மையுள்ள அடிமை,’ 1935-ஆம் ஆண்டு முதற்கொண்டு செம்மறியாடுகள் போன்றவர்களைக் கண்டுபிடித்து, அவர்களை யெகோவாவின் அமைப்புக்குள் கொண்டு வருவதன் பேரில் தனது கவனத்தை ஒருமுகப்படுத்தி இருக்கிறது. (மத்தேயு 24:45, NW; யோவான் 10:16) கற்றுக்கொள்ள விருப்பமுள்ள இந்த நபர்கள், யெகோவாவின் பரலோக ராஜ்யத்தில் இயேசு இப்போது ராஜாவாக ஆட்சி செய்கிறார் என்றும், இந்தத் துன்மார்க்க ஒழுங்குமுறை முடிவடைந்து நீதி வாசமாயிருக்கும் புதிய உலகம் கொண்டுவரப்படுவதற்கு நேரம் விரைந்து வந்துகொண்டிருக்கிறது என்பதையும் அறிய வந்திருக்கின்றனர். (2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 12:10) அந்தப் புதிய உலகில், “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்,” என்ற ஏசாயாவின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் நிறைவேற்றமடையும்.—ஏசாயா 25:8.
4. யெகோவாவின் பேரரசுரிமை நியாயமானது என்பது அர்மகெதோனில் நிரூபிக்கப்படுவதைக் காண உண்மையாகவே எதிர்பார்த்திருந்த போதிலும், வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் பலருக்கு என்ன சம்பவித்திருக்கிறது?
4 சாத்தானின் உலகத்துக்கு முடிவு வெகு அருகாமையில் இருப்பதால், மகா பாபிலோனின் மீதும் மீதமுள்ள சாத்தானிய உலகின் மீதும் வரப்போகும் உபத்திரவத்தின்போது யெகோவாவின் பேரரசுரிமை நியாயமானது என்று நிரூபிக்கப்படும் வரையாக வாழ்ந்திருக்க, செம்மறியாட்டைப் போன்ற கிறிஸ்தவர்கள் வெகுவாக விரும்புவர். (வெளிப்படுத்துதல் 19:1-3, 19-21) பெரும் எண்ணிக்கையான நபர்களுக்கு, அதைக் காணும் வாய்ப்பு கிட்டவில்லை. மரித்துப்போக மாட்டோம் என்று எண்ணிய ‘இலட்சக்கணக்கானோரில்’ அநேகர் உண்மையில் மரித்துப் போயிருக்கின்றனர். சிலர் சிறைச்சாலைகளிலும் சித்திரவதை முகாம்களிலும் அல்லது மத வெறியர்களின் கைகளிலும் சத்தியத்திற்காக இரத்தசாட்சிகளாக மரித்தனர். மற்றவர்கள் விபத்துக்கள் அல்லது இயற்கை காரணங்கள் என்பதாக சொல்லப்படும் வியாதி, முதுமை போன்றவற்றின் காரணமாக மரித்திருக்கின்றனர். (சங்கீதம் 90:9, 10; பிரசங்கி 9:11) முடிவு வருவதற்கு முன் இன்னும் அநேகர் மரித்துப்போவர் என்பது தெளிவாயிருக்கிறது. நீதி வாசமாயிருக்கும் ஒரு புதிய உலகைப் பற்றிய வாக்குறுதியின் நிறைவேற்றத்தை அப்படிப்பட்டவர்கள் எப்படிக் காண்பர்?
உயிர்த்தெழுதல் நம்பிக்கை
5, 6. அர்மகெதோனுக்கு முன்பாக மரித்துப்போகும் பூமிக்குரிய நம்பிக்கையுடையோருக்கு என்ன எதிர்காலம் இருக்கிறது?
5 ரோம ஆளுநர் பேலிக்ஸ் முன்பு அப்போஸ்தலனாகிய பவுல் பேசும்போது அந்தக் கேள்விக்குப் பதில் கொடுத்தார். அப்போஸ்தலர் 24:15-ல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி, பவுல் தைரியமாக அறிவித்தார்: ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று தேவனிடத்தில் நான் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.’ மிகவும் மோசமான கஷ்டகாலங்களை எதிர்ப்படுகையில், உயிர்த்தெழுதல் நம்பிக்கை நமக்குத் தைரியம் கொடுக்கிறது. நோய்வாய்ப்பட்டு தாங்கள் மரித்துப்போவார்கள் என்று உணரும் நம்முடைய அன்பான நண்பர்கள், அந்த நம்பிக்கை இருப்பதன் காரணத்தால் அளவுக்குமீறி உற்சாகமிழந்து விடுவதில்லை. என்ன சம்பவித்தாலும், உண்மைத்தன்மைக்குக் கிடைக்கும் பலனைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். துன்புறுத்துவோரின் கைகளில் மரணத்தை எதிர்ப்படும் நம்முடைய தைரியமுள்ள சகோதர சகோதரிகளும், தங்களைத் துன்புறுத்துவோர் எவ்விதத்திலும் வெற்றியடைய முடியாது என்பதை இந்த உயிர்த்தெழுதல் நம்பிக்கையின் காரணமாக அறிந்திருக்கின்றனர். (மத்தேயு 10:28) சபையில் இருக்கும் ஒருவர் மரித்துப் போனால், நாம் அந்த நபரை இழந்துவிட்டதால் துக்கப்படுகிறோம். ஆனால் அதே சமயத்தில், அவரோ அல்லது அவளோ, வேறே ஆடுகளில் ஒருவராக இருந்தால், நம்முடைய உடன்விசுவாசி இறுதிவரை உண்மையுள்ளவராக நிரூபித்து, இப்போது ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார், கடவுளின் புதிய உலகில் எதிர்கால வாழ்வை நிச்சயமாக பெற்றுக்கொள்வார் என்பதைக் குறித்து சந்தோஷப்படுகிறோம்.—1 தெசலோனிக்கேயர் 4:13.
6 ஆம், உயிர்த்தெழுதல் நம்பிக்கை, நம்முடைய விசுவாசத்தின் ஒரு முக்கியமான அம்சமாயிருக்கிறது. ஆனால், உயிர்த்தெழுதலில் நம்முடைய நம்பிக்கை ஏன் அவ்வளவு பலமானதாய் இருக்கிறது? அந்த நம்பிக்கையை யார் பகிர்ந்துகொள்கின்றனர்?
7. உயிர்த்தெழுதல் என்பது என்ன, அது நிச்சயம் என்பதை வெளிப்படுத்தும் ஒருசில வேதவாக்கியங்கள் யாவை?
7 “உயிர்த்தெழுதல்” என்ற சொல்லுக்கு கிரேக்க மொழியில் உள்ள பதம் அனஸ்டாசிஸ். அது “எழுந்து நிற்பது” என்று சொல்லர்த்தமாகவே பொருள்படுகிறது. மரித்தோரிலிருந்து எழுவதை இது அடிப்படையாகக் குறிப்பிடுகிறது. “உயிர்த்தெழுதல்” என்ற சொல் எபிரெய வேதாகமத்தில் காணப்படுவதில்லை என்பது அக்கறையூட்டுவதாக இருக்கிறது, ஆனாலும் உயிர்த்தெழுதல் நம்பிக்கை அங்கு தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. உதாரணமாக, யோபு துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கையில் பேசிய வார்த்தைகளில் அது தெரிகிறது: “நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, . . . என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும்.” (யோபு 14:13) அதே போன்று ஓசியா 13:14-ல் நாம் வாசிக்கிறோம்: “அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே?” 1 கொரிந்தியர் 15:55-ல் அப்போஸ்தலன் பவுல், இந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டி, மரணத்தின்மீது முன்னறிவிக்கப்பட்ட வெற்றி உயிர்த்தெழுதலின் மூலமாக சாதிக்கப்படும் என்பதாகக் காண்பித்தார். (நிச்சயமாகவே, அந்த வேதவாக்கியத்தில் பவுல் பரலோக உயிர்த்தெழுதலைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.)
விசுவாசிகள் ‘நீதிமான்களாகத் தீர்க்கப்படுதல்’
8, 9. (அ) அபூரண மனிதர்கள் எவ்விதமாக நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் பங்குகொள்ள முடியும்? (ஆ) மரணத்தால் நிறுத்தப்பட முடியாத ஒரு வாழ்க்கைக்கான நம்முடைய நம்பிக்கைக்கு ஆதாரம் என்ன?
8 பாரா 5-ல் உள்ள மேற்கோளின்படி, பேலிக்ஸின் முன்பு பேசும்போது, பவுல், நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் உயிர்த்தெழுதல் இருக்கும் என்று சொன்னார். உயிர்த்தெழுப்பப்படும் நீதிமான்கள் யார்? ஆம், இயல்பாகவே எந்த மனிதனும் நீதிமான் அல்ல. நாம் அனைவரும் பிறப்பிலிருந்து பாவிகள், மேலும் நம்முடைய வாழ்நாள் முழுவதும் பாவங்கள் செய்கிறோம்—இரண்டு காரணங்களுக்காக மரிப்பதற்குத் தகுதியுள்ளவர்களாக இது நம்மைச் செய்கிறது. (ரோமர் 5:12; 6:23) இருப்பினும், ‘நீதிமான்களாகத் தீர்க்கப்படுதல்’ என்ற பதத்தை நாம் பைபிளில் காண்கிறோம். (ரோமர் 3:28) அபூரணர்களாக இருந்தாலும், தங்கள் பாவங்கள் யெகோவாவால் மன்னிக்கப்பட்டிருக்கும் மானிடர்களைக் குறித்து இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.
9 பரலோக நம்பிக்கையுடைய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இந்தப் பதம் அதிக முக்கியமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ரோமர் 5:1-ல் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொல்கிறார்: “இவ்விதமாக நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.” எல்லா அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் விசுவாசத்தின் காரணமாக நீதிமான்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். எதில் விசுவாசம்? இயேசு கிறிஸ்து சிந்தின இரத்தத்தின் பேரில் விசுவாசம் என்று ரோமர் புத்தகத்தில் பவுல் அதிக விவரமாக விளக்குகிறார். (ரோமர் 10:4, 9, 10) இயேசு ஒரு பரிபூரண மனிதனாக மரித்தார். அதற்குப்பின் அவர் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டு, தம் மானிட ஜீவனின் மதிப்பை நம் சார்பாக அளிப்பதற்குப் பரலோகத்துக்கு ஏறிச் சென்றார். (எபிரெயர் 7:26, 27; 9:11, 12) யெகோவா அந்தப் பலியை ஏற்றுக்கொண்டபோது, இயேசு, உண்மையில், பாவத்துக்கும் மரணத்துக்கும் அடிமையாயிருந்த மனித இனத்தை விலைகொடுத்து வாங்கினார். இந்த ஏற்பாட்டில் விசுவாசத்தைக் காண்பிப்பவர்கள் அதிலிருந்து அதிகமாக நன்மையடைகின்றனர். (1 கொரிந்தியர் 15:45) இதன் அடிப்படையில், மரணம் என்ற கொடிய விரோதியால் நிறுத்தப்பட முடியாத ஒரு வாழ்க்கையைச் சுதந்தரித்துக்கொள்ளும் நம்பிக்கையை, விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் பெற்றிருக்கின்றனர்.—யோவான் 3:16.
10, 11. (அ) உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன உயிர்த்தெழுதல் காத்துக்கொண்டிருக்கிறது? (ஆ) கிறிஸ்தவத்துக்கு முன்பு வாழ்ந்த வணக்கத்தார் என்ன வகையான உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டிருந்தனர்?
10 இயேசுவின் மீட்கும் பலியின் உதவியால், உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்டோர், நீதிமான்களென தீர்க்கப்பட்டு, அழியாமையுள்ள ஆவி சிருஷ்டிகளாக இயேசுவைப் போல உயிர்த்தெழுப்பப்படும் நிச்சய நம்பிக்கையைப் பெற்றிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 2:10) அவர்களுடைய உயிர்த்தெழுதல் வெளிப்படுத்துதல் 20:6-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது சொல்கிறது: “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.” இது பரலோக உயிர்த்தெழுதலாகும். ஆனால் பைபிள் அதை ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ என்று அழைப்பதைக் கவனியுங்கள். இது இன்னும் கூடுதலான ஆட்கள் உயிர்த்தெழுப்பப்பட இருப்பதைக் குறிக்கிறது.
11 எபிரெயர் 11-ஆம் அதிகாரத்தில் பவுல், யெகோவா தேவனில் பலமான விசுவாசம் வைத்து கிறிஸ்தவத்துக்கு முன்பு வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்களின் ஒரு நீண்ட பட்டியலைக் குறிப்பிட்டார். இவர்களுக்கும்கூட உயிர்த்தெழுதலில் நம்பிக்கை இருந்தது. அந்த அதிகாரம், வசனம் 35-ல், இஸ்ரவேலின் சரித்திரத்தின் போது நடந்த அற்புதமான உயிர்த்தெழுதல்களைப் பற்றி பவுல் பேசுகிறார். அவர் சொல்கிறார்: “ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறு சிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலை பெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்.” உண்மையுள்ள அந்தப் பண்டைய கால சாட்சிகள், உதாரணமாக எலியாவும் எலிசாவும் செய்ததைக் காட்டிலும் மேம்பட்ட ஓர் உயிர்த்தெழுதலை அடையும்படி எதிர்நோக்கியிருக்கலாம். (1 இராஜாக்கள் 17:17-22; 2 இராஜாக்கள் 4:32-37; 13:20, 21) கடவுளுடைய ஊழியர்கள் தங்கள் விசுவாசத்துக்காக சித்திரவதை செய்யப்படாத, பெண்கள் தங்கள் அன்பானவர்களை மரணத்தில் இழந்துவிட வேண்டியிராத ஓர் உலகுக்குள் உயிர்த்தெழுப்பப்படுவதுதான் அவர்களுடைய நம்பிக்கை. ஆம், நாம் நம்பிக்கொண்டிருக்கும் அதே புதிய உலகுக்குள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழும்பி வருவதைத்தான் அவர்கள் எதிர்பார்த்தனர். (ஏசாயா 65:17-25) இந்தப் புதிய உலகத்தைப்பற்றி நமக்கு யெகோவா வெளிப்படுத்தியிருப்பது போல அந்தளவுக்கு அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. என்றபோதிலும் அது வரும் என்று அவர்கள் அறிந்திருந்தனர், அதில் வாழவேண்டும் என்றும் விரும்பினர்.
பூமிக்குரிய உயிர்த்தெழுதல்
12. கிறிஸ்தவத்துக்கு முன்பு வாழ்ந்த விசுவாசமுள்ளோர் நீதிமான்களென தீர்க்கப்பட்டனரா? விளக்கவும்.
12 கிறிஸ்தவத்துக்கு முன்பு வாழ்ந்த இந்த விசுவாசமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அப்புதிய உலகில் உயிர்த்தெழுவதை, நீதிமான்களின் உயிர்த்தெழுதலின் ஒரு பாகமாக நாம் நினைக்க வேண்டுமா? ஆம், ஏனென்றால் பைபிள் அவர்களை நீதிமான்கள் என்று குறிப்பிடுகிறது. உதாரணமாக, பண்டைய காலத்தில் நீதிமான்களென தீர்க்கப்பட்ட ஒரு மனிதனையும் ஒரு பெண்ணையும் பற்றி சீஷனாகிய யாக்கோபு குறிப்பிடுகிறார். அந்த மனிதன் ஆபிரகாம், எபிரெய இனத்தின் முற்பிதா. அவரைக் குறித்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது . . . அவன் தேவனுடைய சிநேகிதன் என்னப்பட்டான்.” அந்தப் பெண் ராகாப், இஸ்ரவேலரல்லாத அவள் யெகோவாவின் பேரில் அதிக விசுவாசத்தை வெளிக்காட்டினாள். அவள் ‘நீதிமானாக தீர்க்கப்பட்டு’ எபிரெய தேசத்தின் பாகமாக ஆனாள். (யாக்கோபு 2:23-25) யெகோவாவின் பேரிலும் அவருடைய வாக்குறுதிகளின் பேரிலும் பலமான விசுவாசத்தைக் காட்டி, மரணம் வரை உண்மையுள்ளவர்களாய் நிலைத்திருந்த பண்டைய கால ஆண்களையும் பெண்களையும் யெகோவா அவர்களுடைய விசுவாசத்தின் அடிப்படையில் நீதிமான்கள் என அறிவித்தார். சந்தேகத்துக்கு இடமின்றி, அவர்கள் ‘நீதிமான்களின் உயிர்த்தெழுதலில்’ பங்குகொள்வர்.
13, 14. (அ) பூமிக்குரிய நம்பிக்கையுடைய கிறிஸ்தவர்கள் நீதிமான்களென தீர்க்கப்பட முடியும் என்பது நமக்கு எப்படித் தெரியும்? (ஆ) இது அவர்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
13 என்றபோதிலும், யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, பூமிக்குரிய நம்பிக்கையைக் கொண்டிருந்து, இந்த முடிவின் காலத்தின்போது மரித்துப்போகும் இன்றுள்ள செம்மறியாட்டைப் போன்ற நபர்களைப் பற்றியென்ன? அவர்கள் நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் பங்குகொள்வார்களா? ஆம், இப்படிப்பட்ட உண்மையுள்ளவர்கள் அடங்கிய ஒரு திரள்கூட்டமான ஜனங்களை அப்போஸ்தலன் யோவான் தரிசனத்தில் கண்டார். அவர்களை எவ்வாறு விவரிக்கிறார் என்பதைக் கவனியுங்கள்: “இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன். அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.”—வெளிப்படுத்துதல் 7:9, 10.
14 இந்த மனத்தாழ்மையுள்ளோர் தங்கள் இரட்சிப்பைக் குறித்து உறுதியான நம்பிக்கையுடையவர்களாக இதை யெகோவாவுக்கும் “ஆட்டுக்குட்டியானவ”ருக்கும் உரித்தாக்குகின்றனர். மேலுமாக, அவர்கள் அனைவரும் யெகோவாவுக்கு முன்பும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பும் வெள்ளை அங்கிகளைத் தரித்து நிற்கிறார்கள். ஏன் வெள்ளை நிற அங்கிகள்? ஒரு பரலோக சிருஷ்டி யோவானிடம் சொல்கிறார்: “இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள்.” (வெளிப்படுத்துதல் 7:14) பைபிளில் வெள்ளை என்பது சுத்தம், நீதி ஆகியவற்றுக்கு அடையாளமாக இருக்கிறது. (சங்கீதம் 51:7; தானியேல் 12:10; வெளிப்படுத்துதல் 19:8) வெள்ளை அங்கிகளைத் தரித்தவர்களாக திரள்கூட்டத்தார் காணப்படுவது, யெகோவா அவர்களை நீதிமான்களாகக் கருதுவதை அர்த்தப்படுத்துகிறது. அது எவ்வாறு முடியும்? ஏனென்றால் அவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்து சிந்தின இரத்தத்தின் பேரில் விசுவாசத்தைக் காண்பிக்கிறார்கள். எனவே மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப்பிழைக்கும் எதிர்பார்ப்பை உடையவர்களாக, கடவுளின் நண்பர்களாக, அவர்கள் நீதிமான்கள் என தீர்க்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, மிகுந்த உபத்திரவத்துக்கு முன்பு மரணத்தை எதிர்ப்படும் ‘திரள்கூட்டத்தைச்’ சேர்ந்த எந்த உண்மையுள்ள ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவனும், நீதிமான்களின் பூமிக்குரிய உயிர்த்தெழுதலில் ஒரு பங்கைக் கொண்டிருக்க நிச்சயமாயிருக்கலாம்.
15. நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய இரு சாராருமே உயிர்த்தெழுப்பப்படப் போவதால், நீதிமான்களின் உயிர்த்தெழுதலிலுள்ள அனுகூலம் என்ன?
15 அந்த உயிர்த்தெழுதல் வெளிப்படுத்துதல் 20-ஆம் அதிகாரம் 13-ம் வசனத்தில் இந்த வார்த்தைகளில் விவரிக்கப்பட்டிருக்கிறது. அது இவ்வாறு சொல்கிறது: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” ஆக, யெகோவாவின் பெரிய ஆயிர வருட நியாயத்தீர்ப்பு நாளின் போது, கடவுளின் ஞாபகத்தில் இருக்கும் அனைவரும்—நீதிமான்களும் அநீதிமான்களும் உயிர்த்தெழுப்பப்படுவர். (அப்போஸ்தலர் 17:31) ஆனால் நீதிமான்களுக்கு அது எவ்வளவு மேலானதாக இருக்கும்! அவர்கள் ஏற்கெனவே விசுவாசமுள்ள வாழ்க்கையை நடத்தியிருக்கின்றனர். ஏற்கெனவே அவர்களுக்கு யெகோவாவோடு ஒரு நெருங்கிய உறவு உள்ளது. யெகோவா தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையையும் அவர்கள் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்தவ சகாப்தத்துக்கு முன் வாழ்ந்த நீதியான சாட்சிகள், வித்தைக் குறித்த யெகோவாவின் வாக்குறுதிகள் எவ்வாறு நிறைவேற்றமடைந்தன என்பதைக் கற்றறிய ஆவலோடு மரணத்திலிருந்து விழித்தெழுவர். (1 பேதுரு 1:10-12) யெகோவா நம்முடைய நாளில் நீதிமான்கள் என்று அறிவிக்கும் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள், இந்தக் காரிய ஒழுங்குமுறையில் நற்செய்தியை அறிவித்தபோது தாங்கள் பேசிய பரதீஸிய பூமியைக் காண்பதற்கு மிகுந்த ஆவலுடன் பிரேதக் குழிகளிலிருந்து வெளியே வருவர். அது என்னே ஓர் சந்தோஷமான சமயமாக இருக்கும்!
16. நம்முடைய நாளில் மரிப்பவர்கள் நியாயத்தீர்ப்பு நாளின்போது உயிர்த்தெழுப்பப்படுவதைப் பற்றி நாம் என்ன சொல்லலாம்?
16 அந்த ஆயிர வருட நியாயத்தீர்ப்பு நாளின் போது, சாத்தானின் காரிய ஒழுங்குமுறையின் இறுதி ஆண்டுகளில் உண்மையுள்ளவர்களாய் மரித்துப்போனவர்கள் எப்போது உயிர்த்தெழுப்பப்படுவர்? அதைக் குறித்து பைபிள் எதுவும் சொல்வது இல்லை. என்றபோதிலும் நீதிமான்களென கருதப்படும் நம்முடைய நாளில் மரிப்பவர்கள், மரித்தோரிலிருந்து திரும்பிவரும் முந்தைய சந்ததிகளை வரவேற்கும் வேலையில் அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கும் திரள்கூட்டத்தாரோடு பங்குகொள்வதற்கு, துவக்கத்திலேயே உயிர்த்தெழுப்பப்படுவர் என்று நினைப்பது நியாயமாக இல்லையா? ஆம், உண்மையிலேயே!
ஆறுதலைக் கொடுக்கும் ஒரு நம்பிக்கை
17, 18. (அ) உயிர்த்தெழுதல் நம்பிக்கை என்ன ஆறுதலை அளிக்கிறது? (ஆ) யெகோவாவைப் பற்றி என்ன அறிவிக்க நாம் தூண்டப்படுகிறோம்?
17 இன்று கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் உயிர்த்தெழுதல் நம்பிக்கை பலமும் ஆறுதலும் அளிக்கிறது. நாம் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தால், எந்த எதிர்பாராத சம்பவமோ அல்லது எந்த விரோதியோ நம்முடைய பலனை நம்மிடமிருந்து தட்டிப் பறித்துவிட முடியாது. உதாரணமாக, 1992 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தரப் புத்தகத்தில் எதியோபியாவில், தங்கள் விசுவாசத்தை விட்டுக்கொடுப்பதற்குப் பதிலாக மரித்துப்போன தைரியமுள்ள கிறிஸ்தவர்களின் படங்கள் காணப்படுகின்றன. படங்களின் கீழே உள்ள குறிப்பு இவ்விதமாக வாசிக்கிறது: “உயிர்த்தெழுதலில் நாம் காண எதிர்பார்க்கும் முகங்கள்.” இவர்களோடும் மரணத்தை எதிர்ப்படும்போது இதே போன்ற விசுவாசத்தைக் காண்பித்திருக்கும் எண்ணற்ற மற்ற ஆட்களோடும் அறிமுகமாவது என்னே ஒரு சிலாக்கியமாக இருக்கும்!
18 முதுமை அல்லது நோயின் காரணமாக மிகுந்த உபத்திரவத்தினூடே தப்பிப்பிழைக்க முடியாமல் போகும் நம்முடைய சொந்த அன்பானவர்களையும் நண்பர்களையும் பற்றி என்ன? உண்மையுள்ளவர்களாக நிலைத்திருந்தால், உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கு இசைவாக அவர்களுக்கு அற்புதமான எதிர்காலம் இருக்கிறது. இயேசுவின் மீட்கும் பொருள் பலியின்மீது நாமும்கூட தைரியமாக விசுவாசத்தைக் காண்பித்தால் நமக்கு அற்புதமான ஒரு எதிர்காலம் இருக்கும். ஏன்? ஏனென்றால் பவுலைப் போன்று “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று” நாமும் நம்புகிறோம். இந்த நம்பிக்கைக்காக யெகோவாவுக்கு முழு இருதயத்தோடும் நன்றி சொல்கிறோம். நிச்சயமாகவே, சங்கீதக்காரனின் பின்வரும் வார்த்தைகளை எதிரொலிக்க இது நம்மைத் தூண்டுகிறது: “ஜாதிகளுக்குள் அவருடைய [கடவுளுடைய] மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். கர்த்தர் [யெகோவா, NW] பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்.”—சங்கீதம் 96:3, 4.
உங்களால் விளக்கமுடியுமா?
◻ என்ன வேதவாக்கியங்கள் பூமிக்குரிய ஓர் உயிர்த்தெழுதலில் நம்முடைய நம்பிக்கையை உறுதிசெய்ய உதவுகின்றன?
◻ கிறிஸ்தவர்கள் எதன் அடிப்படையில் இப்பொழுது நீதிமான்களென தீர்க்கப்படுகிறார்கள்?
◻ உயிர்த்தெழுதல் நம்பிக்கை எவ்விதமாக நமக்கு தைரியத்தையும் திடதீர்மானத்தையும் அளிக்கிறது?
[பக்கம் 9-ன் படம்]
பவுலைப் போல, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் பரலோக உயிர்த்தெழுதலில் நம்பிக்கைக் கொண்டிருக்கின்றனர்