உங்களுக்கு “கிறிஸ்துவின் சிந்தை” இருக்கிறதா?
‘பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், . . . கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே இருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகம் செய்வாராக.’—ரோமர் 15:6.
1. கிறிஸ்தவமண்டல ஓவியங்கள் பலவற்றில், இயேசு எவ்வாறு சித்தரிக்கப்படுகிறார், இது சரியல்ல என்று எப்படி சொல்லலாம்?
“அவர் சிரித்ததை ஒருதடவைகூட பார்த்ததேயில்லை.” பூர்வ ரோம அதிகாரி ஒருவரால் எழுதப்பட்டதாக பொய்யாய் சொல்லிக் கொள்ளப்படும் ஓர் ஆவணத்தில் இப்படித்தான் இயேசு வர்ணிக்கப்படுகிறார். ஏறக்குறைய 11-ம் நூற்றாண்டிலிருந்தே இருக்கும் இந்த ஆவணம், அநேக ஓவியர்கள்மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது. a பல ஓவியங்களில், இயேசு சோகமே உருவானவராய் புன்சிரிப்பு துளியுமின்றி காணப்படுகிறார். ஆனால், அது இயேசுவைப் பற்றிய சரியான சித்தரிப்பாக இருக்க முடியாது. ஏனெனில் சுவிசேஷங்கள் அவரை ஆழ்ந்த உணர்ச்சிகளுடைய கனிவும் இரக்க குணமும் படைத்த மனிதராகவே சித்தரித்துக் காட்டுகின்றன.
2. ‘கிறிஸ்து இயேசுவுக்கிருந்த அதே சிந்தையை’ நம்மில் எவ்வாறு வளர்க்கலாம், இதனால் நமக்கென்ன பயன்?
2 அப்படியானால், இயேசுவை சரியாக அறிந்துகொள்வதற்கு, அவர் பூமியில் வாழ்ந்தபோது உண்மையிலேயே எப்படிப்பட்ட நபராக இருந்தார் என்பதைப் பற்றிய திருத்தமான புரிந்துகொள்ளுதலால் நம்முடைய மனதையும் இருதயத்தையும் நிரப்ப வேண்டும். ஆகையால், ‘கிறிஸ்துவின் சிந்தையை’—அதாவது அவருடைய உணர்வுகள், பகுத்தறியும் திறமை, எண்ணங்கள், நியாயங்களை—நுணுக்கமாக படம்பிடித்துக் காட்டுகிற சுவிசேஷ விவரங்கள் சிலவற்றை நாம் ஆராயலாம். (1 கொரிந்தியர் 2:16) அப்படி ஆராய்கையில், ‘கிறிஸ்து இயேசுவுக்கு இருந்த அதே சிந்தையை’ நாம் எவ்வாறு வளர்க்கலாம் என்பதை சிந்தித்துப் பார்ப்போமாக. (ரோமர் 15:5, 6) இது, நம்முடைய வாழ்க்கையிலும், மற்றவர்களோடு நம்முடைய உறவிலும் அவரது மாதிரியை சிறப்பாய் பின்பற்ற உதவும்.—யோவான் 13:15.
எளிதில் அணுகத்தக்கவர்
3, 4. (அ) மாற்கு 10:13-16-ல் பதிவுசெய்துள்ள விவரத்தின் சூழல் என்ன? (ஆ) சிறு பிள்ளைகள் இயேசுவிடம் வருவதை அவருடைய சீஷர்கள் தடைசெய்ய முயன்றபோது, அவர் என்ன செய்தார்?
3 இயேசுவிடம் ஜனங்கள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள். பல்வேறு சந்தர்ப்பங்களில், பலதரப்பட்ட வயதினரும் பின்னணியிலிருந்து வந்தவர்களும் தடங்கலின்றி அவரை அணுகினார்கள். மாற்கு 10:13-16-ல் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவத்தை கவனியுங்கள். அது அவருடைய ஊழியம் முடியும் தருவாயில், கடும் வேதனையான மரணத்தை சந்திப்பதற்கு கடைசி தடவையாக எருசலேமை நோக்கிச் செல்கையில் நடந்தது.—மாற்கு 10:32-34.
4 அந்தக் காட்சியை கற்பனைசெய்து பாருங்கள். கைக்குழந்தைகளையும் சிறு பிள்ளைகளையும் ஆசீர்வதிப்பதற்கு அவர்களை இயேசுவிடம் ஜனங்கள் கொண்டுவருகிறார்கள். b எனினும், அந்தப் பிள்ளைகள் இயேசுவிடம் வருவதை சீஷர்கள் தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்கள். கடும் சோதனைமிக்க அந்த வாரங்களில், பிள்ளைகள் இயேசுவை தொந்தரவு செய்வதை அவர் விரும்பமாட்டாரென சீஷர்கள் ஒருவேளை நினைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் நினைப்பது தவறு. சீஷர்கள் செய்வதைத் தெரிந்துகொண்ட இயேசு விசனமடைகிறார். “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்” என்று சொல்லி, அந்தப் பிள்ளைகளைத் தம்மிடம் வரும்படி அழைக்கிறார். (மாற்கு 10:14) பின்பு, உண்மையிலேயே கனிவையும் அன்பையும் வெளிப்படுத்துகிற ஒன்றை அவர் செய்கிறார். அந்த விவரப்பதிவு இவ்வாறு சொல்கிறது: “அவர்களை தம்முடைய கையில் தூக்கிக்கொண்டு ஆசீர்வதித்தார்.” (மாற்கு 10:16) இயேசு தம்முடைய அன்புக் கரங்களால் அவர்களை தூக்குகையில், அந்தப் பிள்ளைகள் பயப்படாமல் அவரிடம் போகிறார்கள் என்பது தெளிவாயிருக்கிறது.
5. இயேசு எத்தகையவராக இருந்தார் என்பதைப் பற்றி மாற்கு 10:13-16-ல் உள்ள விவரம் நமக்கு என்ன சொல்கிறது?
5 அந்தச் சுருக்கமான விவரப்பதிவு, இயேசு எப்படிப்பட்ட நபர் என்பதைப் பற்றி நமக்கு அதிகம் சொல்கிறது. அவர் அணுகத்தக்கவராக இருந்தார் என்பதை கவனியுங்கள். முன்பு பரலோகத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தபோதிலும், அபூரண மனிதரை பயப்படுத்துபவராகவோ இழிவுபடுத்துபவராகவோ இல்லை. (யோவான் 17:5) சிறு பிள்ளைகளும்கூட அவரிடம் பயப்படாமல் சென்றது குறிப்பிடத்தக்கது அல்லவா? ஒருபோதும் சிரிக்காமல், மகிழ்ச்சியற்று விறைப்பாக இருந்திருந்தால், அவரிடம் சிறு பிள்ளைகள் நிச்சயமாகவே ஈர்க்கப்பட்டிருக்க மாட்டார்கள்! இயேசு கனிவானவர், அக்கறையானவர் என்பதை மக்கள் அறிந்திருந்தார்கள், தங்களை விரட்டிவிட மாட்டார் என்ற நம்பிக்கை வைத்திருந்தார்கள், அதனால்தான் எல்லா வயதினரும் அவரை அணுகினார்கள்.
6. எவ்வாறு மூப்பர்கள் தங்களை இன்னும் நன்றாக அணுகத்தக்கவர்களாக்கலாம்?
6 இந்த விவரப் பதிவை சிந்தனை செய்துபார்த்து, நாம் இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘கிறிஸ்துவின் சிந்தை எனக்கு இருக்கிறதா? நான் அணுகத்தக்கவ[னள]ய் இருக்கிறேனா?’ இந்தக் கொடிய காலங்களில், ‘காற்றுக்கு ஒதுக்கு’ போன்று கடவுளுடைய ஆடுகளுக்கு அணுகத்தக்க மேய்ப்பர்கள் தேவை. (ஏசாயா 32:1, 2; 2 தீமோத்தேயு 3:1) மூப்பர்களே, உங்கள் சகோதரர்மீது உள்ளார்ந்த இருதயப்பூர்வ அக்கறையை வளர்த்து, அவர்களுக்காக உங்களையே அர்ப்பணம் செய்ய மனமுள்ளோராக இருந்தால், உங்களுடைய அக்கறை அவர்களுக்குத் தெரியவரும். உங்கள் முகபாவத்தில் அதைக் காண்பார்கள், உங்களுடைய குரலின் தொனியில் அதை கேட்பார்கள், உங்களுடைய தயவான குணத்தில் அதை கவனிப்பார்கள். இத்தகைய உண்மையான அன்பும் அக்கறையும், பிள்ளைகள் உட்பட, எல்லாரும் உங்களை அணுகுவதை எளிதாக்கும், உங்கள்மீது நம்பிக்கையையும் உண்டாக்கலாம். ஒரு மூப்பரிடம் எப்படி தன் மனதில் இருந்ததை கொட்டிவிட முடிந்தது என்பதைப் பற்றி ஒரு கிறிஸ்தவ பெண் இவ்வாறு சொன்னார்கள்: “அவர் கனிவோடும் பரிவோடும் என்னிடம் பேசினார்: அப்படி இல்லாவிட்டால், ஒருவேளை நான் ஒரு வார்த்தைகூட சொல்லியிருக்க மாட்டேன். அவர் என்னை பாதுகாப்பாய் உணர செய்தார்.”
மற்றவர்கள்மீது கரிசனை காட்டுவது
7. (அ) மற்றவர்களின் உணர்வுகளை மதிப்பதை இயேசு எவ்வாறு காட்டினார்? (ஆ) ஒரு குருடன் படிப்படியாக பார்வையடையும்படி செய்ததன் காரணம் என்னவாக இருக்கலாம்?
7 இயேசு மற்றவர்கள்மீது கரிசனை காட்டினார். மற்றவர்களுடைய உணர்ச்சிகளை மதித்தார். துன்பத்தில் இருந்தவர்களைக் கண்ட மாத்திரத்தில் அவர் நெஞ்சம் இளகியது. அதனால் துன்பத்திலிருந்து அவர்களை விடுவிக்க தூண்டப்பட்டார். (மத்தேயு 14:14) மற்றவர்களின் குறைபாடுகளையும் தேவைகளையும்கூட கவனத்தில் எடுத்துக்கொண்டார். (யோவான் 16:12) ஒருமுறை குருடன் ஒருவனை ஜனங்கள் இயேசுவிடம் அழைத்துவந்து, அவனை சுகப்படுத்த அவரை கெஞ்சி கேட்டார்கள். அந்த மனிதனுக்கு படிப்படியாக பார்வை அளித்தார். முதலில் அந்த மனிதன், ஆட்களை மங்கலாக மட்டுமே கண்டார்—‘மரங்களை நடக்கிற மனுஷரை போல கண்டார்.’ பின்பு, தெளிவான பார்வையை அளித்தார். அந்த மனிதனை ஏன் படிப்படியாக சுகப்படுத்தினார்? இருளிலேயே பழக்கப்பட்டிருந்தவன் சூரிய ஒளியையும் சிக்கலான உலகையும் திடீரென கண்டு அதிர்ச்சியடையாதிருக்க அப்படி செய்திருக்கலாம்.—மாற்கு 8:22-26.
8, 9. (அ) இயேசுவும் அவருடைய சீஷர்களும் தெக்கப்போலி பிரதேசத்திற்கு வந்தவுடன் என்ன நடந்தது? (ஆ) காது கேளாமல் இருந்தவனை இயேசு சுகப்படுத்தினதை விவரியுங்கள்.
8 பொ.ச. 32-ன் பஸ்காவுக்குப் பின் நடந்த ஒரு சம்பவத்தையும் கவனியுங்கள். இயேசுவும் அவருடைய சீஷர்களும் கலிலேயா கடலுக்குக் கிழக்கே அமைந்திருந்த தெக்கப்போலி பிரதேசத்துக்கு வந்தார்கள். அங்கே திரளான ஜனங்கள் விரைவிலேயே அவர்களை கண்டுபிடித்து, பிணியாளிகளையும், குருடர், ஊமையர், சப்பாணிகள் போன்றவர்களையும் இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லாரையும் அவர் சுகப்படுத்தினார். (மத்தேயு 15:29, 30) ஒரு மனிதனை மட்டும் இயேசு தனியாக கவனித்துக்கொண்டது நம் கவனத்தைக் கவருகிறது. இந்தச் சம்பவத்தை சுவிசேஷ எழுத்தாளர் மாற்கு மட்டுமே பதிவுசெய்தார். அவர் நடந்ததை அறிவிக்கிறார்.—மாற்கு 7:31-35.
9 அந்த மனிதன் செவிடனாகவும் சரியாக பேச முடியாதவனாகவும் இருந்தான். இவனுடைய பயத்தை அல்லது கூச்சத்தை இயேசு உணர்ந்திருக்கலாம். பின்பு இயேசு சற்று வழக்கத்திற்கு மாறான ஒன்றை செய்தார். ஜனக்கூட்டத்திலிருந்து ஒதுக்கமான ஓரிடத்திற்கு அந்த மனிதனை தனியே அழைத்துச் சென்றார். பின்பு தாம் செய்யப்போவதை அந்த மனிதனுக்கு சைகைகளால் தெரிவித்தார். ‘தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டார்.’ (மாற்கு 7:33) அடுத்தபடியாக, இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து, ஜெபம் செய்தவாறே பெருமூச்சுவிட்டார். இவ்வாறு, ‘நான் உனக்குச் செய்யவிருப்பது கடவுளுடைய வல்லமையினாலேயே’ என்பதை அந்த மனிதனுக்கு சொல்லாமல் சொன்னார். கடைசியாக இயேசு, “திறக்கப்படுவாயாக” என்று சொன்னார். (மாற்கு 7:34) அப்போது, அந்த மனிதனின் செவி திறந்தது, இப்பொழுது அவனால் இயல்பாக பேசவும் முடிந்தது.
10, 11. சபையிலும் குடும்பத்திலும், மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு நாம் எவ்வாறு கரிசனை காட்டலாம்?
10 மற்றவர்களிடம் எப்பேர்ப்பட்ட கரிசனையை இயேசு காட்டினார்! அவர்களுடைய உணர்ச்சிகளை புரிந்துகொண்டார், இத்தகைய பரிவிரக்கம் அவர்கள் உணர்ச்சிகளைப் புண்படுத்தாத வகைகளில் செயல்பட அவரை உந்துவித்தது. இந்த விஷயத்தில், கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் சிந்தையை வளர்க்கவும் செயலில் காட்டவும் வேண்டும். பைபிள் நமக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறது: ‘நீங்களெல்லாரும் ஒரே மனதும் அனுதாபமும் சகோதர சிநேகமும் உருக்கமும் மனத்தாழ்மையும் உள்ளவர்களாயிருங்கள்.’ (1 பேதுரு 3:8, தி.மொ.) இது நிச்சயமாகவே, மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு கவனம் செலுத்தும் விதத்தில் நாம் பேசுவோராயும் செயல்படுவோராயும் இருக்கும்படி நம்மை செய்கிறது.
11 சபையில் மற்றவர்களுக்கு மதிப்பு கொடுத்து, நம்மை மற்றவர்கள் எவ்வாறு நடத்த வேண்டும் என்று விரும்புவோமோ அவ்வாறே அவர்களை நடத்துவதன்மூலம் பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு காட்டலாம். (மத்தேயு 7:12) இது, நாம் என்ன சொல்கிறோம், எப்படி சொல்கிறோம் என்பதைப் பற்றி கவனமாய் இருப்பதையும் உட்படுத்துகிறது. (கொலோசெயர் 4:6) ‘யோசனையின்றி பேசும் வார்த்தைகள் பட்டயத்தைப்போல் குத்தும்’ என்பதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 12:18, தி.மொ.) குடும்பத்தில் என்ன செய்வது? உண்மையிலேயே ஒருவரையொருவர் நேசிக்கும் கணவனும் மனைவியும் பிறருடைய உணர்ச்சிகளை மதித்து நடந்துகொள்வார்கள். (எபேசியர் 5:33) கடுகடுத்த வார்த்தைகளையும், குறைகூறுதலையும், குத்தலான பேச்சையும் தவிர்க்கிறார்கள். இவை யாவும் எளிதில் ஆறாத புண்பட்ட உணர்ச்சிகளை உண்டாக்கலாம். சிறுபிள்ளைகளுக்கும் உணர்வுகளுண்டு, அன்புள்ள பெற்றோர் இவற்றை கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். பிள்ளைகளை திருத்த வேண்டிய சந்தர்ப்பம் வரும்போது, அவர்களது மதிப்பு குறையாதவாறு கண்டிப்பார்கள். இதனால் பிள்ளைகள் தேவையின்றி மனசங்கடம் அடைவதை தவிர்ப்பார்கள். c (கொலோசெயர் 3:21) இவ்வாறு நாம் மற்றவர்களிடம் கரிசனை காட்டுகையில், கிறிஸ்துவின் சிந்தை நமக்கு இருக்கிறதென்று காட்டுகிறோம்.
மற்றவர்களை மனதார நம்புவது
12. இயேசு தம்முடைய சீஷர்கள்மீது எவ்வாறு சமநிலையான மற்றும் யதார்த்தமான அபிப்ராயம் வைத்திருந்தார்?
12 இயேசு தம்முடைய சீஷர்கள்மீது சமநிலையான, யதார்த்தமான அபிப்பிராயம் வைத்திருந்தார். அவர்கள் பரிபூரணரல்லர் என்பதை அவர் நன்றாய் அறிந்திருந்தார். மனிதரின் இருதயத்தில் உள்ளதை அவரால் தெரிந்துகொள்ள முடிந்ததே! (யோவான் 2:24, 25) இருந்தபோதிலும், வெறுமனே அவர்களுடைய அபூரணத்தன்மையின் அடிப்படையில் அல்ல, அவர்களுடைய நல்ல பண்புகளின் அடிப்படையிலேயே பார்த்தார். மேலும், யெகோவா தெரிந்தெடுத்த இந்த மனிதரில் திறமை இருப்பதையும் கண்டார். (யோவான் 6:44) இயேசு தம் சீஷர்களை நல்ல கண்ணோட்டத்திலேயே பார்த்தார் என்பது அவர்களை கையாண்ட விதத்திலும் நடத்தின விதத்திலும் தெளிவாக தெரிந்தது. குறிப்பாக, அவர்களை மனதார நம்பினார்.
13. இயேசு தம்முடைய சீஷர்களை நம்பினதை எவ்வாறு வெளிப்படுத்திக் காட்டினார்?
13 அந்த நம்பிக்கையை இயேசு எவ்வாறு வெளிக்காட்டினார்? அவர் பூமியை விட்டுச் செல்கையில், அபிஷேகம் செய்யப்பட்ட தம்முடைய சீஷர்களிடம் ஒரு பெரும் பொறுப்பை ஒப்படைத்தார். உலகளாவிய தம்முடைய ராஜ்ய அக்கறைகளை கவனிக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தார். (மத்தேயு 25:14, 15; லூக்கா 12:42-44) தம்முடைய ஊழியத்தின்போது, அவர்கள்மீது நம்பிக்கை வைத்திருந்ததை சிறிய, மறைமுகமான வழிகளிலும்கூட காண்பித்தார். திரளாக வந்த ஜனங்களுக்கு உணவளிக்க அற்புதமாய் உணவை அதிகமாக்கியபோது, அதை பகிர்ந்தளிக்கும் பொறுப்பை தம்முடைய சீஷர்களுக்குத் தந்தார்.—மத்தேயு 14:15-21; 15:32-37.
14. மாற்கு 4:35-41-ல் பதிவுசெய்யப்பட்டுள்ள விவரத்தை நீங்கள் எவ்வாறு சுருக்கிக் கூறுவீர்கள்?
14 மாற்கு 4:35-41-ல் பதிவுசெய்யப்பட்ட விவரத்தையும் கவனியுங்கள். இந்தச் சந்தர்ப்பத்தில், இயேசுவும் அவருடைய சீஷர்களும் ஒரு படகில் ஏறி, கலிலேயா கடலை கடந்து கிழக்கு நோக்கி சென்றார்கள். அவர்கள் படகை வலிக்க ஆரம்பித்து சிறிது நேரத்திற்குப் பின், இயேசு அந்தப் படகின் பின்புறத்தில் படுத்து நன்றாய் தூங்கிவிட்டார். எனினும், சீக்கிரத்தில் ‘பலத்த சுழல்காற்று உண்டாகியது.’ கலிலேயா கடலில் அத்தகைய புயல்கள் ஏற்படுவது சகஜம்தான். அது, கடல்மட்டத்திற்குக் கீழ், ஏறக்குறைய 200 மீட்டர் ஆழத்தில் இருப்பதால், அதன் சுற்றுப்புற பகுதியைப் பார்க்கிலும் அங்கு காற்று அதிக வெப்பமாக இருக்கிறது; இது, வாயுமண்டல கொந்தளிப்புகளை உண்டாக்குகிறது. இதோடு, பலத்த காற்று வடக்கே நிற்கும் எர்மோன் மலையிலிருந்து, கீழே யோர்தான் பள்ளத்தாக்குமீது மோதியடித்து வீசுகிறது. ஒரு விநாடி அமைதி நிலவினாலும் மறு விநாடிக்குள் கடும் புயலாக மாறிவிடலாம். இதை சிந்தித்துப் பாருங்கள்: பொதுவாக ஏற்படும் அந்தப் புயல்களைப் பற்றி இயேசு அறிந்திருந்தார் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், அவர் கலிலேயாவில் வளர்க்கப்பட்டார். எனினும், அவர் தம்முடைய சீஷர்களின் திறமைகளில் நம்பிக்கை வைத்து, நிம்மதியாக தூங்கினார். அவர்களில் சிலர் மீனவர்களாக இருந்தவர்கள்.—மத்தேயு 4:18, 19.
15. தம்முடைய சீஷர்களை நம்ப இயேசு மனமுள்ளவராக இருந்ததைப் போலவே நாமும் எவ்வாறு இருக்கலாம்?
15 தம்முடைய சீஷர்களை இயேசு மனதார நம்பியதைப் போலவே நாமும் செய்ய முடியுமா? மற்றவர்களுக்கு பொறுப்புகள் அளிப்பதென்றாலே சிலருக்கு ரொம்ப கஷ்டம். தாங்களே எப்போதும் முன்னின்று நடத்த வேண்டும், நானே செய்தால்தான் எனக்கு திருப்தி, வேறு யார் செய்தாலும் சரிப்பட்டு வராது என்பதாக அவர்கள் ஒருவேளை சிந்திக்கலாம். ஆனால், எல்லாவற்றையும் நாமே செய்ய நினைத்தால் சோர்ந்துவிடுவோம். மேலும், குடும்பத்தை கவனிப்பதை விட்டுவிட்டு அநாவசியமாக நேரத்தை செலவிட நேரிடலாம். அது மட்டுமல்லாமல், பொருத்தமான வேலைகளையும் பொறுப்புகளையும் நாம் மற்றவர்களுக்கு கொடாமல் இருந்தால், அவர்களுக்கு தேவையான அனுபவத்தையும் பயிற்றுவிப்பையும் பெறாதபடி செய்வோராகவும் இருப்போம். மற்றவர்களுக்குப் பொறுப்பளித்து, அவர்களை நம்புவதற்கு நாம் கற்றுக்கொள்வது ஞானமாயிருக்கும். நேர்மையுடன் நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது: ‘இந்தக் காரியத்தில் கிறிஸ்துவின் சிந்தை எனக்கு இருக்கிறதா? தங்களாலான மிகச் சிறந்ததை செய்வார்கள் என்று நம்பி, மற்றவர்களிடம் சில பொறுப்புகளை நான் மனமுவந்து ஒப்படைக்கிறேனா?’
அவர் சீஷர்களிடம் வைத்திருந்த நம்பிக்கையை தெரிவித்தார்
16, 17. இயேசு தம்முடைய பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி இரவில், அப்போஸ்தலர்கள் தம்மை கைவிடுவார்கள் என்பதை அறிந்திருந்தபோதிலும் அவர்களுக்கு என்ன உறுதிகூறினார்?
16 மற்றொரு முக்கியமான விதத்திலும் இயேசு தம்முடைய சீஷர்களை நம்பியதை வெளிப்படுத்திக் காட்டினார். அவர்கள்மீது தமக்கிருந்த நம்பிக்கையை அவர்களிடம் தெரிவித்தார். இது, அவருடைய பூமிக்குரிய வாழ்க்கையின் கடைசி இரவில், தம்முடைய அப்போஸ்தலர்களிடம் பேசிய உறுதியளிக்கும் வார்த்தைகளில் இது தெளிவாக தெரிந்தது. நடந்ததை கவனியுங்கள்.
17 அந்த மாலை முழுக்க இயேசுவுக்கு ஓயாத வேலை! தம்முடைய அப்போஸ்தலர்களின் பாதங்களைக் கழுவுவதன்மூலம், மனத்தாழ்மைக்கு கண்கூடான ஒரு பாடத்தை அவர்களுக்குக் கற்பித்தார். அதன்பின், தம்முடைய மரணத்தின் நினைவுகூருதலாக இருக்கப்போகும் இராப்போஜனத்தை தொடங்கிவைத்தார். பின்பு, அப்போஸ்தலர்கள் தங்களில் யார் பெரியவன் என்பதைக் குறித்து மறுபடியும் தீவிர விவாதத்திற்குள் இறங்கிவிட்டார்கள். எப்போதும் போலவே பொறுமையுடன், அவர்களை கடிந்துகொள்ளாமல் நியாயமான முறையில் இயேசு அறிவுறுத்தினார். எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை அவர்களுக்குச் சொல்கிறார்: “மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள்.” (மத்தேயு 26:31; சகரியா 13:7) உதவி தேவைப்படும் முக்கியமான சமயத்தில், தம்முடைய மிக நெருங்கிய தோழர்கள் தம்மை கைவிடுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். இருப்பினும், அவர்களை கண்டனம் செய்யவில்லை. அதற்கு முற்றிலும் மாறாக, அவர்களிடம் இவ்வாறு சொன்னார்: “ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன்.” (மத்தேயு 26:32) ஆம், அவர்கள் தம்மை கைவிட்டாலும், தாம் அவர்களைக் கைவிடமாட்டார் என்று அவர்களுக்கு உறுதிகூறினார். மிகவும் பயங்கரமான இந்த சோதனை கட்டம் கடந்த பின்பு, அவர்களை மறுபடியும் சந்திப்பார்.
18. கலிலேயாவில் இயேசு தம்முடைய சீஷர்களிடம் என்ன பெரும் பொறுப்பை ஒப்படைத்தார், அப்போஸ்தலர்கள் அதை எவ்வாறு நிறைவேற்றினார்கள்?
18 இயேசு தாம் சொன்னபடியே செய்தார். பிற்பாடு, கலிலேயாவில் மற்ற அநேகருடன் கூடியிருந்த உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்களுக்கு முன் உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு தோன்றினார். (மத்தேயு 28:16, 17; 1 கொரிந்தியர் 15:6) அங்கு அவர்களுக்கு ஒரு பெரிய பொறுப்பை அளித்தார்: “ஆகையால் நீங்கள் போய், சகல தேச ஜனங்களையும் சீஷராக்கி, பிதாவின் குமாரனின் பரிசுத்த ஆவியின் பெயரில் அவர்களை முழுக்காட்டி, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கைக்கொள்ளும்படி அவர்களுக்குப் போதியுங்கள்.” (மத்தேயு 28:19, 20, NW) இந்தப் பொறுப்பை அப்போஸ்தலர்கள் நிறைவேற்றினார்கள் என்பதற்குத் தெளிவான அத்தாட்சியை அப்போஸ்தலருடைய நடபடிகள் புத்தகம் நமக்கு அளிக்கிறது. முதல் நூற்றாண்டில் நற்செய்தியைப் பிரசங்கிக்கும் வேலையை அவர்கள் உண்மையுடன் தொடங்கி நடத்தினார்கள்.—அப்போஸ்தலர் 2:41, 42; 4:33; 5:27-32.
19. உயிர்த்தெழுதலுக்குப் பின்னான இயேசுவின் நடவடிக்கைகள், கிறிஸ்துவின் சிந்தையைப் பற்றி நமக்கு என்ன கற்பிக்கின்றன?
19 கிறிஸ்துவின் சிந்தையைப் பற்றி வெளிப்படுத்தும் விவரப்பதிவு கற்பிப்பது என்ன? அப்போஸ்தலர்கள் மோசமாக நடந்துகொண்டது இயேசுவுக்குத் தெரியும். எனினும், “முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.” (யோவான் 13:1) அவர்களுக்குக் குறைபாடுகள் இருந்தபோதிலும், தாம் அவர்களை நம்பினதை அவர்கள் அறியச் செய்தார். இயேசு அவர்கள்மீது வைத்த நம்பிக்கை வீணாகவில்லை என்பதை கவனியுங்கள். அவர்கள்மீது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அவர் காட்டினது, அவர்களுக்கு கட்டளையிட்ட வேலையை நிறைவேற்ற தங்கள் இருதயங்களில் உறுதியாக தீர்மானித்திருப்பதற்கு அவர்களை பலப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை.
20, 21. நம்முடைய உடன் விசுவாசிகளைப் பற்றி நல்லதையே நினைப்பதை நாம் எவ்வாறு காட்டலாம்?
20 இதன் சம்பந்தமாக, கிறிஸ்துவின் சிந்தையை நாம் எவ்வாறு செயலில் காட்டலாம்? உடன்தோழரான விசுவாசிகளைக் குறித்து நம்பிக்கையற்ற மனப்பான்மை உங்களுக்கு வேண்டாம். அவர்களைப் பற்றி மோசமாக நினைப்பீர்களென்றால், உங்கள் வார்த்தைகளும் செயல்களும் பெரும்பாலும் அதை காட்டிக் கொடுத்துவிடும். (லூக்கா 6:45) எனினும், அன்பு “சகலத்தையும் நம்பும்” என்று பைபிள் நமக்கு சொல்கிறது. (1 கொரிந்தியர் 13:7) அன்பு இருந்தால், மற்றவர்களைப் பற்றி நல்லதையே நினைப்போம்; கெட்டதை நினைக்க மாட்டோம். அன்பு இருந்தால், மற்றவர்களை நோகடிக்க மாட்டோம், உற்சாகப்படுத்துவோம். மக்கள் மிரட்டலுக்கு மசியமாட்டார்கள்; ஆனால் அன்புக்கும் ஊக்குவிப்புக்குமோ அடிமையாவார்கள்! மற்றவர்களில் நம்பிக்கையை வெளிக்காட்டுவதன் மூலம் நாம் அவர்களை ஆறுதல்படுத்தவும் ஊக்குவிக்கவும் முடியும். (1 தெசலோனிக்கேயர் 5:11) கிறிஸ்துவைப் போல் நாமும் நம்முடைய சகோதரரை நல்ல கண்ணோட்டத்திலேயே பார்த்தால், அவர்களை ஊக்குவித்து, அவர்களிடம் உள்ள மிகச் சிறந்ததை அளிக்கும் விதத்தில் அவர்களை நடத்துவோம்.
21 கிறிஸ்துவின் சிந்தையை நம்மில் வளர்த்து செயலில் காட்ட வேண்டுமென்றால், இயேசு செய்த சில காரியங்களை மட்டுமே பின்பற்றினால் போதாது. முந்திய கட்டுரையில் குறிப்பிட்டபடி, உண்மையில் இயேசுவைப் பின்பற்ற, அவரது கண்ணோட்டமே நமக்கும் தேவை. இதை நாம் முதலாவது கற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய ஆள்தன்மையின் மற்றொரு அம்சத்தை, அதாவது அவருக்கு நியமிக்கப்பட்ட வேலையைப் பற்றிய அவருடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் காண்பதற்கு சுவிசேஷங்கள் நமக்கு உதவி செய்கின்றன. இதைப் பற்றி அடுத்த கட்டுரை ஆராயும்.
[அடிக்குறிப்புகள்]
a இயேசுவின் தலைமயிர், தாடி, கண்கள் ஆகியவற்றின் நிறம் உட்பட, அவரது தோற்றத்தை இந்த ஆவணத்தில் அவர் போலியாக விவரித்திருக்கிறார். இந்தப் பொய் வர்ணனை, “இயேசுவின் தோற்றத்தைப் பற்றி ஓவியரின் குறிப்பேடுகளில் உள்ள விவரிப்பை பரவலாக ஏற்றுக்கொள்வதற்காக திட்டமிடப்பட்டது” என பைபிள் மொழிபெயர்ப்பாளர் எட்கர் ஜெ. குட்ஸ்பீட் விளக்குகிறார்.
b அந்தப் பிள்ளைகள் பல்தரப்பட்ட வயதினராக இருந்தார்கள். ‘சிறு பிள்ளைகள்’ என்று இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ள வார்த்தையே யவீருவின் 12 வயது மகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (மாற்கு 5:39, 42; 10:13) எனினும், இதே விவரப்பதிவில், கைக்குழந்தைகளையும் குறிப்பிட பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தையை லூக்கா உபயோகிக்கிறார்.—லூக்கா 1:41; 2:12; 18:15.
c காவற்கோபுரம், ஏப்ரல் 1, 1998 வெளியீட்டில் “அவர்களுடைய மதிப்புக்குரிய நிலைக்கு மரியாதை கொடுக்கிறீர்களா?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
நீங்கள் விளக்க முடியுமா?
• சிறு பிள்ளைகள் இயேசுவிடம் வருவதைத் தடுக்க அவருடைய சீஷர்கள் முயன்றபோது அவர் என்ன செய்தார்?
• என்ன வழிகளில் இயேசு மற்றவர்களை மதித்தார்?
• இயேசுவைப் போல் நாம் எவ்வாறு மற்றவர்களை மனதார நம்பலாம்?
• இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களில் நம்பிக்கை வைத்ததுபோல் நாமும் என்ன செய்யலாம்?
[பக்கம் 16-ன் படம்]
சிறு பிள்ளைகள் இயேசுவைக் கண்டு பயப்படவில்லை
[பக்கம் 17-ன் படம்]
இயேசு மற்றவர்களை பரிவுடன் நடத்தினார்
[பக்கம் 18-ன் படம்]
அணுகத்தக்க மூப்பர்கள் ஓர் ஆசீர்வாதமே