யோவான் எழுதியது
12 பஸ்கா பண்டிகைக்கு ஆறு நாட்களுக்கு முன்பு இயேசு பெத்தானியாவுக்கு வந்துசேர்ந்தார். அங்குதான் அவர் உயிரோடு எழுப்பிய லாசரு+ இருந்தான். 2 அங்கே அவருக்குச் சாயங்கால உணவு பரிமாறப்பட்டது. மார்த்தாள்தான் பரிமாறிக்கொண்டிருந்தாள்,+ அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்களில் லாசருவும் ஒருவன். 3 அப்போது மரியாள் சுத்தமான, மிகவும் விலை உயர்ந்த சடாமாஞ்சி என்ற வாசனை எண்ணெயை எடுத்துவந்தாள். ஒரு ராத்தல்* அளவுள்ள அந்த எண்ணெயை இயேசுவின் பாதங்களில் ஊற்றி, தன்னுடைய கூந்தலால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள். வீடு முழுவதும் அந்த எண்ணெய் வாசம் வீசியது.+ 4 ஆனால், அவருடைய சீஷர்களில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாஸ் இஸ்காரியோத்து,+ 5 “இந்த வாசனை எண்ணெயை 300 தினாரியுவுக்கு* விற்று ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா?” என்று கேட்டான். 6 ஏழைகள் மீதுள்ள அக்கறையால் அல்ல, அவன் திருடனாக இருந்ததால்தான் அப்படிச் சொன்னான். பணப்பெட்டி அவனிடம் இருந்ததால், அதில் போடப்பட்ட பணத்தைத் திருடுவது அவனுடைய வழக்கமாக இருந்தது. 7 அதற்கு இயேசு, “இவளை ஒன்றும் சொல்லாதே, அடக்க நாளுக்கு என்னைத் தயார்செய்வதற்காக அவள் இதைச் செய்யட்டும்.+ 8 ஏனென்றால், ஏழைகள் எப்போதும் உங்களோடு இருக்கிறார்கள்,+ ஆனால், நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை”+ என்று சொன்னார்.
9 அவர் அங்கே இருப்பதைக் கேள்விப்பட்டு யூதர்களில் நிறைய பேர் கூட்டமாக வந்தார்கள். இயேசுவைப் பார்ப்பதற்காக மட்டுமல்ல, அவர் உயிரோடு எழுப்பிய லாசருவைப் பார்ப்பதற்காகவும் வந்தார்கள்.+ 10 அதனால், லாசருவையும் கொலை செய்ய முதன்மை குருமார்கள் திட்டம் தீட்டினார்கள். 11 ஏனென்றால், லாசருவினால்தான் யூதர்களில் நிறைய பேர் இயேசுவிடம் போய், அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்.+
12 அடுத்த நாள், பண்டிகைக்கு வந்திருந்த ஏராளமான மக்கள் இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டார்கள். 13 அதனால், குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவரைப் பார்க்கப் போனார்கள். பின்பு, “கடவுளே, இவரைக் காத்தருளுங்கள்! யெகோவாவின்* பெயரில் வருகிற+ இஸ்ரவேலின் ராஜா ஆசீர்வதிக்கப்பட்டவர்!”+ என்று ஆரவாரம் செய்ய ஆரம்பித்தார்கள். 14 இயேசு ஒரு கழுதைக்குட்டியைப் பார்த்தபோது அதன்மேல் உட்கார்ந்தார்.+ 15 “சீயோன் மகளே, பயப்படாதே. இதோ! உன் ராஜா ஒரு கழுதைக்குட்டியின் மேல் ஏறிவருகிறார்”+ என்று எழுதப்பட்டுள்ளபடியே இது நடந்தது. 16 இவற்றை அவருடைய சீஷர்கள் ஆரம்பத்தில் புரிந்துகொள்ளவில்லை. ஆனால், அவரைப் பற்றிய இந்த விஷயங்கள் முன்பே எழுதப்பட்டிருந்தன என்பதும், அவற்றின்படியே தாங்கள் அவருக்குச் செய்தார்கள் என்பதும், இயேசு மகிமைப்படுத்தப்பட்ட பிறகுதான்+ அவர்களுடைய ஞாபகத்துக்கு வந்தன.+
17 லாசருவை அவர் கல்லறையிலிருந்து* வெளியே வரும்படி கூப்பிட்டு உயிர்த்தெழுப்பியபோது+ அவரோடிருந்த மக்கள், அங்கு நடந்ததைப் பற்றிச் சாட்சி கொடுத்துவந்தார்கள்.+ 18 அவர் செய்த இந்த அற்புதத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட மக்களும் அவரைச் சந்திக்கப் போனார்கள். 19 அதனால் பரிசேயர்கள் ஒருவருக்கொருவர், “பாருங்கள், நம்மால் எதுவுமே செய்ய முடியவில்லை. உலகமே அவன் பின்னால் போய்விட்டது”+ என்று பேசிக்கொண்டார்கள்.
20 பண்டிகையின்போது கடவுளை வணங்குவதற்காக வந்தவர்களில் சில கிரேக்கர்களும் இருந்தார்கள். 21 கலிலேயாவில் இருக்கிற பெத்சாயிதாவைச் சேர்ந்த பிலிப்புவிடம்+ அவர்கள் போய், “ஐயா, நாங்கள் இயேசுவைப் பார்க்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்கள். 22 பிலிப்பு போய் இதை அந்திரேயாவிடம் சொன்னார். பின்பு, அந்திரேயாவும் பிலிப்புவும் போய் இயேசுவிடம் சொன்னார்கள்.
23 இயேசு அவர்களிடம், “மனிதகுமாரன் மகிமைப்படுத்தப்படும் நேரம் வந்துவிட்டது.+ 24 உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், கோதுமை மணி நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் அது ஒரே மணியாகத்தான் இருக்கும்; அது செத்தால்தான்+ அதிக விளைச்சலைத் தரும். 25 தன் உயிரை நேசிக்கிறவன் அதை இழந்துபோவான்.* இந்த உலகத்தில் தன் உயிரை வெறுக்கிறவனோ+ அதைப் பாதுகாத்துக்கொண்டு முடிவில்லாத வாழ்வைப் பெறுவான்.+ 26 ஒருவன் எனக்கு ஊழியம் செய்ய விரும்பினால், அவன் என்னைப் பின்பற்றி வரவேண்டும், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியனும் இருப்பான்.+ ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால், அவனை என் தகப்பன் கெளரவிப்பார். 27 இப்போது என் மனம் கலங்குகிறது,+ நான் என்ன சொல்வேன்? தகப்பனே, இந்தச் சோதனையிலிருந்து* என்னைக் காப்பாற்றுங்கள்.+ இருந்தாலும், நான் இந்தச் சோதனையை எதிர்ப்பட்டே ஆக வேண்டும். 28 தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று சொன்னார். அப்போது, “நான் அதை மகிமைப்படுத்தினேன், மறுபடியும் மகிமைப்படுத்துவேன்”+ என்று வானத்திலிருந்து ஒரு குரல்+ வந்தது.
29 அங்கே கூட்டமாக நின்றுகொண்டிருந்த மக்கள் இதைக் கேட்டு, இடி இடித்ததென்று பேசிக்கொண்டார்கள். மற்றவர்களோ, “ஒரு தேவதூதர் இவரோடு பேசினார்” என்று சொன்னார்கள். 30 அதற்கு இயேசு, “இந்தக் குரல் எனக்காக அல்ல, உங்களுக்காக வந்தது. 31 இப்போதே இந்த உலகம் நியாயந்தீர்க்கப்படுகிறது, இந்த உலகத்தை ஆளுகிறவன்+ வீழ்த்தப்படுவான்.+ 32 ஆனால், நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது*+ எல்லா விதமான மக்களையும் என்னிடம் ஈர்த்துக்கொள்வேன்” என்று சொன்னார். 33 எப்படிச் சாகப்போகிறார்+ என்பதைச் சுட்டிக்காட்டவே அவர் அப்படிச் சொன்னார். 34 அப்போது மக்கள் அவரிடம், “கிறிஸ்து என்றென்றும் இருப்பார் என்று திருச்சட்டத்தில் சொல்லப்பட்டிருப்பதைக் கேட்டிருக்கிறோம்.+ அப்படியிருக்கும்போது, மனிதகுமாரன் உயர்த்தப்படுவார் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?+ யார் இந்த மனிதகுமாரன்?” என்று கேட்டார்கள். 35 அதற்கு இயேசு அவர்களிடம், “இன்னும் கொஞ்சக் காலத்துக்குத்தான் ஒளி உங்களோடு இருக்கும். இருள் உங்களை அடக்கி ஆளாதபடி, ஒளி உங்களோடு இருக்கும்போதே நடந்துபோங்கள். இருளில் நடந்துபோகும் ஒருவனுக்கு தான் போகிற இடம் தெரியாது.+ 36 நீங்கள் ஒளியின் பிள்ளைகளாவதற்கு+ ஒளி உங்களோடு இருக்கும்போதே அதில் விசுவாசம் வையுங்கள்” என்று சொன்னார்.
இயேசு இவற்றைச் சொன்ன பின்பு, அவர்களைவிட்டுப் போய் மறைந்துகொண்டார். 37 அவர்கள் முன்னால் அவர் ஏராளமான அடையாளங்களைச் செய்திருந்தும் அவர்மேல் அவர்கள் விசுவாசம் வைக்கவில்லை. 38 ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன இந்த வார்த்தைகள் நிறைவேறும்படியே அப்படி நடந்தது: “யெகோவாவே,* நாங்கள் சொன்ன விஷயத்தை* கேட்டு அதில் விசுவாசம் வைத்தது யார்?+ யெகோவா* யாருக்குத் தன்னுடைய பலத்தை* காட்டியிருக்கிறார்?”+ 39 அதோடு, அவர்கள் நம்பாததற்கான காரணத்தையும் ஏசாயா சொன்னார்: 40 “அவர்கள் தங்களுடைய கண்களால் பார்க்காமலும் இதயத்தால் உணராமலும் என்னிடம் திரும்பி வராமலும் நான் அவர்களைக் குணமாக்காமலும் இருக்கும்படி, அவர்களுடைய கண்களைக் குருடாக்கியிருக்கிறார், அவர்களுடைய இதயத்தை இறுகிப்போகச் செய்திருக்கிறார்.”+ 41 அவருடைய மகிமையைப் பார்த்ததால்தான் ஏசாயா அவரைப் பற்றி இப்படிச் சொன்னார்.+ 42 இருந்தாலும், யூதத் தலைவர்களில்கூட நிறைய பேர் அவர்மேல் விசுவாசம் வைத்தார்கள்.+ ஆனால், தங்களைப் பரிசேயர்கள் ஜெபக்கூடத்திலிருந்து நீக்கிவிடக் கூடாது என்பதற்காக அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளவில்லை.+ 43 கடவுளிடமிருந்து வரும் மகிமையைவிட மனிதர்களிடமிருந்து வரும் மகிமையையே அவர்கள் அதிகமாக விரும்பினார்கள்.+
44 ஆனாலும் இயேசு சத்தமாக, “என்மேல் விசுவாசம் வைக்கிறவன், என்மேல் மட்டுமல்ல, என்னை அனுப்பியவர்மேலும் விசுவாசம் வைக்கிறான்.+ 45 என்னைப் பார்க்கிறவன் என்னை அனுப்பியவரையும் பார்க்கிறான்.+ 46 என்மேல் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவரும் இருளிலேயே+ இருக்காதபடி நான் இந்த உலகத்துக்கு ஒளியாக வந்திருக்கிறேன்.+ 47 ஆனால், ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டு அவற்றைக் கடைப்பிடிக்காமல்போனால், நான் அவனை நியாயந்தீர்க்க மாட்டேன். ஏனென்றால், நான் இந்த உலகத்தை நியாயந்தீர்ப்பதற்காக வரவில்லை, இந்த உலகத்தை மீட்பதற்காகவே வந்தேன்.+ 48 என்னை அலட்சியம் செய்து நான் சொல்கிறவற்றை ஏற்றுக்கொள்ளாத ஒருவனை நியாயந்தீர்க்கும் ஒன்று இருக்கிறது. நான் சொன்ன செய்தியே அது; கடைசி நாளில் அதுவே அவனை நியாயந்தீர்க்கும். 49 ஏனென்றால், நான் சொந்தமாகப் பேசவில்லை, நான் எதைப் பேச வேண்டுமென்றும் எதைக் கற்பிக்க வேண்டுமென்றும் என்னை அனுப்பிய தகப்பனே எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.+ 50 அவருடைய கட்டளையைக் கடைப்பிடிக்கும்போது முடிவில்லாத வாழ்வு+ கிடைக்கும் என்று எனக்குத் தெரியும். அதனால், நான் எதைப் பேசினாலும் என் தகப்பன் எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்”+ என்றார்.