கடவுள் அனுமதித்திருக்கும் துன்பத்திற்கு முடிவு அருகில்
எங்கு பார்த்தாலும் துன்பமோ துன்பம்! சிலர் தாங்களே துன்பத்தை வருவித்துக்கொள்கிறார்கள். பால்வினை நோய்களுக்கு ஆளாகிறார்கள் அல்லது போதைப்பொருளையோ மதுபானத்தையோ துஷ்பிரயோகம் செய்வதால் அல்லது புகைபிடிப்பதால் அதன் விளைவுகளை அறுவடை செய்கிறார்கள். அல்லது நல்ல உணவுப் பழக்கங்களைப் பின்பற்றாததால் உடல்நல பிரச்சினைகளை எதிர்ப்படுகிறார்கள். ஆனால், பெரும்பாலான துன்பங்கள் சராசரி மனிதனால் கட்டுப்படுத்த முடியா காரணிகளால் அல்லது சம்பவங்களால்—போர், இன கலவரம், குற்றச்செயல், வறுமை, பஞ்சம், நோய் ஆகியவற்றால்—நேரிடுகின்றன. வயோதிபத்தாலும் மரணத்தாலும் ஏற்படும் துன்பங்களும் பொதுவாக மனிதரால் கட்டுப்படுத்த முடியா துன்பங்களே.
“தேவன் அன்பாகவே இருக்கிறார்” என பைபிள் உறுதியளிக்கிறது. (1 யோவான் 4:8) அப்படியானால், ஏன் இத்தனை நூற்றாண்டுகளாக அன்பான கடவுள் இந்தத் துன்பங்களையெல்லாம் அனுமதித்திருக்கிறார்? இதை எப்பொழுது மாற்றுவார்? இப்படிப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு, மனிதருக்காக கடவுள் கொண்டுள்ள நோக்கத்தை நாம் ஆராய்வது அவசியமாகும். கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார், அதைக் குறித்து என்ன செய்யப்போகிறார் என்பதை புரிந்துகொள்ள இது நமக்கு உதவி செய்யும்.
சுயாதீனம் எனும் பரிசு
கடவுள் முதல் மனிதனை வெறுமனே மூளையுள்ள ஓர் உடலாக மட்டும் படைக்கவில்லை. அதோடு, ஆதாம் ஏவாளை புத்தியில்லா ரோபோட்டுகளாகவும் படைக்கவில்லை. தாங்களே சுயமாக தெரிந்தெடுக்கும் திறமையை அவர்களுக்குக் கொடுத்திருந்தார். அது ஓர் உன்னதமான பரிசு, ஏனென்றால் “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.” (ஆதியாகமம் 1:31) ஆம், “அவர் கிரியை உத்தமமானது.” (உபாகமம் 32:4) நாம் அனைவரும் இந்தத் திறமையை உயர்வாக மதிக்கிறோம், ஏனென்றால் எதையும் தெரிந்தெடுக்கும் உரிமையில்லாமல் நம்முடைய சிந்தைகளும் செயல்களும் கட்டுப்படுத்தப்படுவதை விரும்ப மாட்டோம்.
ஆனால், சுயமாக தெரிந்தெடுக்கும் இந்த உன்னத திறமையை எவ்வித கட்டுப்பாடுமின்றி பயன்படுத்துவது சரியா? ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு கடவுள் கொடுத்த கட்டளைகளில் இதற்கான பதிலை பைபிள் தருகிறது: “சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்.” (1 பேதுரு 2:16) எல்லாருடைய நன்மைக்காக கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும். ஆகவே, இந்தச் சுயாதீனம் சட்டத்தால் வழிநடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அராஜகம்தான் ஆட்சிசெய்யும்.
யாருடைய சட்டத்தால்?
யாருடைய சட்டம் சுதந்திரத்திற்கு சரியான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியிருந்தது? இந்தக் கேள்விக்குரிய பதிலுக்கும் கடவுள் துன்பத்தை அனுமதித்திருப்பதற்கான அடிப்படை காரணத்திற்கும் சம்பந்தமுள்ளது. கடவுளே மனிதரை படைத்ததால், தங்களுடைய நன்மைக்காகவும் பிறருடைய நன்மைக்காகவும் எந்தெந்த சட்டங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதை அவரே மிக நன்றாக அறிந்திருக்கிறார். அதை பைபிள் இவ்வாறு சொல்கிறது: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் [“யெகோவா,” NW] நானே.”—ஏசாயா 48:17.
முக்கிய குறிப்பு இதுவே: கடவுளுடைய உதவியின்றி சுதந்திரமாக வாழ மனிதர்கள் படைக்கப்படவில்லை. அவர்களுடைய வெற்றியும் மகிழ்ச்சியும் அவருடைய நீதியான சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதிலேயே சார்ந்திருக்கும்படி கடவுள் அவர்களை படைத்தார். கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய எரேமியா இவ்வாறு சொன்னார்: “கர்த்தாவே, [“யெகோவாவே,” NW] மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.”—எரேமியா 10:23.
புவி ஈர்ப்பு விசை போன்ற இயற்கை சட்டங்களுக்கு கட்டுப்பட்டிருக்கும்படியே மனிதரை கடவுள் உண்டாக்கினார். அதைப் போலவே, அவருடைய நன்னெறி முறைகளுக்கும் கட்டுப்பட்டிருக்கும்படியே மனிதரை உண்டாக்கினார். இவை ஒன்றுபட்ட சமுதாயத்தைப் படைப்பதற்கு வடிவமைக்கப்பட்டன. ஆகவே, “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் [“யெகோவாவில்,” NW] நம்பிக்கையாயிரு” என்று கடவுளுடைய வார்த்தை உந்துவிப்பதில் நல்ல காரணம் இருக்கிறது அல்லவா?—நீதிமொழிகள் 3:5.
எனவே, கடவுளுடைய ஆட்சியின்றி மனித குடும்பம் தானாகவே வெற்றிகரமாக வாழ முடியாது. அவரைவிட்டு விலகி சுதந்திரமாக இருப்பதற்கு முயற்சிசெய்து மனிதர் ஏற்படுத்தும் சமுதாய, பொருளாதார, அரசியல், மற்றும் மத அமைப்பு முறைகள் ஒன்றுக்கொன்று முரண்படும்; அதன் விளைவு? ‘மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுவான்.’—பிரசங்கி 8:9.
என்ன நடந்தது?
முதல் பெற்றோராகிய ஆதாமுக்கும் ஏவாளுக்கும் கடவுள் பரிபூரண ஆரம்பத்தைக் கொடுத்தார். அவர்களுக்கு பரிபூரண உடலும் மனதும் இருந்தது, பரதீஸ் தோட்டமாகிய வீடும் இருந்தது. அவர்கள் கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிந்திருந்தால், தொடர்ந்து பரிபூரணராகவும் மகிழ்ச்சியாகவும் இருந்திருப்பார்கள். காலப்போக்கில், பூங்காவனம் போன்ற பரதீஸ் பூமியில் வாழும் பரிபூரண, மகிழ்ச்சி ததும்பும் மனித குடும்பம் முழுவதற்கும் பெற்றோராக இருந்திருப்பார்கள். அதுவே மனிதருக்கு கடவுள் வைத்திருந்த நோக்கம்.—ஆதியாகமம் 1:27-29; 2:15.
ஆனால், நம்முடைய ஆதி பெற்றோர் தங்களுக்கிருந்த சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்தார்கள். கடவுளுடைய உதவியின்றி தாங்களே வெற்றிகரமாக வாழ முடியும் என தப்புக்கணக்குப் போட்டார்கள். அவர் தந்த சட்டங்களின் வரம்பை வேண்டுமென்றே மீறினார்கள். (ஆதியாகமம், 3-ம் அதிகாரம்) அவருடைய ஆட்சியை நிராகரித்துவிட்டதால், அவர்களை கடவுள் தொடர்ந்து பரிபூரணமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் இல்லை. “அவர்களே தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகளாக நிலைத்திருக்கவில்லை; இதற்கு அவர்களே காரணம்.”—உபாகமம் 32:5, NW.
கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனது முதற்கொண்டு, ஆதாமும் ஏவாளும் உடலாலும் உள்ளத்தாலும் சீரழிய ஆரம்பித்தார்கள். ஜீவ ஊற்று யெகோவாவிடத்தில் இருக்கிறது. (சங்கீதம் 36:9) ஆகவே முதல் மானிட ஜோடி யெகோவாவிடமிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டதால் அபூரணராகி, இறுதியில் இறந்தார்கள். (ஆதியாகமம் 3:19) மரபியல் சட்டங்களுக்கு இசைவாக, அவர்களுடைய சந்ததியாரும் அவர்களுடைய பெற்றோர் வைத்திருந்த ஆஸ்தியையே சுதந்தரிக்க முடிந்தது. அது என்ன? அபூரணமும் மரணமுமே. இதனால் அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “ஒரே மனுஷனாலே [ஆதாமினாலே] பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது போலவும் இதுவுமாயிற்று.”—ரோமர் 5:12.
முக்கிய விவாதம்—அரசுரிமை
ஆதாமும் ஏவாளும் கடவுளுக்கு எதிராக கலகம் செய்தபோது, அவருடைய அரசுரிமையை, அதாவது ஆட்சி செய்யும் அவருடைய உரிமையை எதிர்த்து சவால்விட்டார்கள். யெகோவா அவர்களை அழித்து, வேறொரு தம்பதியை உண்டாக்கியிருக்க முடியும், ஆனால் யாருடைய ஆட்சியே சரியானது, மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற விவாதத்தை அது தீர்த்து வைத்திருக்காது. மனிதர்கள் தங்களுடைய சொந்த கருத்துக்களுக்கேற்ப சமுதாயங்களை தோற்றுவித்து, கடவுளை விட்டுவிலகி தன்னிச்சையாக ஆட்சிசெய்து வெற்றி பெற முடியுமா என்பதை எந்த சந்தேகத்திற்கும் இடமின்றி நிரூபிக்க அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகால மனித சரித்திரம் நமக்கு என்ன சொல்கிறது? நூற்றாண்டுகளாக மக்கள் பல்வேறு சமுதாய, பொருளாதார, அரசியல், மற்றும் மத அமைப்பு முறைகளை முயன்று பார்த்துவிட்டார்கள். இருந்தாலும், துன்மார்க்கமும் துன்பமும் ஓய்ந்தபாடில்லை. சொல்லப்போனால், ‘பொல்லாதவர்கள் மேன்மேலும் கேடுள்ளவர்களாகியிருக்கிறார்கள்,’ முக்கியமாக நம்முடைய காலத்தில்.—2 தீமோத்தேயு 3:13.
இந்த 20-ம் நூற்றாண்டு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இமாலய சாதனையை கண்டிருக்கிறது. ஆனால் அது முழு மனித சரித்திரத்திலேயே மிகவும் பயங்கரமான துன்பத்தையும் கண்டிருக்கிறது. மருத்துவத்தில் எவ்வளவு முன்னேற்றம் இருந்தாலும்சரி, கடவுளுடைய சட்டம் இன்றும் உண்மையாகவே இருக்கிறது, அதாவது கடவுளை விட்டு—ஜீவ ஊற்றைவிட்டு—விலகிவிடும் மனிதர் நோய்நொடிக்கு ஆளாகிறார்கள், முதுமை எய்துகிறார்கள், கடைசியில் கல்லறைக்குப் போகிறார்கள். மனிதர்கள் ‘தங்களுடைய நடைகளை நடத்த’ முடியாது என்பது எவ்வளவு தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது!
கடவுளுடைய அரசுரிமையே சரியானது
கடவுளுடைய உதவியின்றி மனிதர் தாங்களாகவே ஆளுவது ஒருபோதும் வெற்றிபெற முடியாது என்பதையே கடவுளை விட்டுவிலகி தன்னிச்சையாக செயல்பட்ட இந்த விஷப்பரீட்சை எக்காலத்திற்கும் ஒரே தடவையாக நிரூபித்திருக்கிறது. கடவுளுடைய அரசாட்சியே மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் ஆரோக்கியத்தையும் ஜீவனையும் அள்ளி வழங்கும். மேலும், கடவுளைவிட்டு சுயமாக ஆளும் மனித ஆட்சியின் “கடைசிநாட்களில்” நாம் வாழ்கிறோம் என்பதை யெகோவா தேவனுடைய வாக்குமாறா வார்த்தையாகிய பரிசுத்த பைபிள் காட்டுகிறது. (2 தீமோத்தேயு 3:1-5) இப்படிப்பட்ட மனித ஆட்சியையும் துன்மார்க்கத்தையும் துன்பத்தையும் யெகோவா பொறுத்துக்கொண்டிருப்பது முடிவுக்கு வரப்போகிறது.
கடவுள் வெகு சீக்கிரத்தில் மனித விவகாரங்களில் தலையிடுவார். அவருடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “அந்த ராஜாக்களின் [அதாவது, இப்பொழுது இருக்கும் மனித ஆட்சிகளின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [பரலோகத்தில்] எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை [இனி ஒருபோதும் இந்தப் பூமியை மனிதர் ஆட்சிசெய்ய மாட்டார்கள்]; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் [அதாவது, தற்போதைய ஆட்சிகளையெல்லாம்] நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.
பரலோக ராஜ்யத்தின் மூலம் யெகோவாவின் அரசுரிமை நியாய நிரூபணம் செய்யப்படும் என்பதே பைபிளின் கருப்பொருள். இதையே இயேசு தம்முடைய போதனையின் மையக் கருத்தாக வைத்தார். அவர் இவ்வாறு சொன்னார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”—மத்தேயு 24:14.
கடவுளுடைய ஆட்சி மனித ஆட்சியை கவிழ்க்கையில், யார் தப்பிப்பிழைப்பார், யார் தப்பிப்பிழைக்க மாட்டார்? நீதிமொழிகள் 2:21, 22-ல் நமக்கு இவ்வாறு உறுதியளிக்கப்படுகிறது: “செவ்வையானவர்கள் [கடவுளுடைய ஆட்சியை ஆதரிப்பவர்கள்] பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ [கடவுளுடைய ஆட்சியை ஆதரிக்காதவர்களோ] பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்.” கடவுளுடைய ஏவுதலால் சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11, 29.
அதிசயமான புதுவுலகு
கடவுளுடைய ராஜ்ய ஆட்சியில், தற்போதைய பொல்லாத உலகின் முடிவை தப்பிப்பிழைப்பவர்கள் துன்பமோ துன்மார்க்கமோ இல்லாத சுத்திகரிக்கப்பட்ட பூமிக்குள் கொண்டு செல்லப்படுவார்கள். தெய்வீக அறிவுரைகள் மனிதகுலத்திற்கு வழங்கப்படும், “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை [“யெகோவாவை,” NW] அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” (ஏசாயா 11:9) உந்துவிக்கும், நம்பிக்கையூட்டும் இந்தப் போதனை உண்மையிலேயே மனித சமுதாயத்தில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டும். அப்பொழுது, போரோ கொலையோ வன்முறையோ கற்பழிப்போ திருட்டோ அல்லது வேறெந்த குற்றச்செயல்களோ இனிமேல் இருக்காது.
கடவுளுடைய ஆட்சி அவருடைய புதிய உலகில் வாழும் கீழ்ப்படிதலுள்ள மானிடர் மீது உடல் ரீதியிலான அதிசயமான நன்மைகளைப் பொழியும். கடவுளுடைய ஆட்சிக்கு எதிராக செய்யப்பட்ட கலகத்தின் மோசமான சுவடுகள் அனைத்தும் அடியோடு அகற்றப்படும். அபூரணம், நோய், முதுமை, மரணம் ஆகியவை கடந்தகால கதைகளாகிவிடும். பைபிள் நமக்கு இவ்வாறு உறுதிகூறுகிறது: “வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.” மேலும், பைபிள் இவ்வாறு வாக்குறுதி அளிக்கிறது: “அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.” (ஏசாயா 33:24; 35:5, 6) ஒவ்வொரு நாளும்—அதுவும் என்றென்றும்—புதுத் தெம்போடு ஆரோக்கியமாக இருப்பது மெய்சிலிர்க்க வைக்கிறது அல்லவா!
கடவுளுடைய அன்பான வழிநடத்துதலின்கீழ், அந்தப் புதிய உலகில் வாழும் குடிமக்கள் தங்களுடைய சக்தியையும் திறமையையும் உலகளாவிய பரதீஸாக மாற்றுவதற்குப் பயன்படுத்துவார்கள். வாட்டும் வறுமையும், பசியின் கொடுமையும், வீடில்லாத தவிப்பும் சுத்தமாக இருக்காது, ஏனெனில் ஏசாயா தீர்க்கதரிசனம் இவ்வாறு கூறுகிறது: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை.” (ஏசாயா 65:21, 22) உண்மையில், “அவனவன் தன்தன் திராட்சச் செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்.”—மீகா 4:4.
கடவுளுடைய கனிவான கவனிப்புக்கும் கீழ்ப்படிதலுள்ள மனிதருக்கும் இந்தப் பூமி கட்டுப்படும். பைபிள் நமக்கு இந்த வாக்குறுதிகளைத் தருகிறது: “வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும். . . . வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.” (ஏசாயா 35:1, 6) “பூமியிலே ஏராளமான தானியம் இருக்கும்; மலைகளின் உச்சிகளில் வழிந்தோடும்.”—சங்கீதம் 72:16, NW.
மண்ணோடு மண்ணான கோடா கோடி மனிதரைப் பற்றியென்ன? கடவுளுடைய ஞாபகத்தில் இருப்பவர்கள் மீண்டும் உயிரடைவார்கள், ஏனென்றால் ‘நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டு.’ (அப்போஸ்தலர் 24:15) ஆம், மரித்தோர் மீண்டும் உயிரடைவர். கடவுளுடைய ஆட்சியைப் பற்றிய அற்புதமான சத்தியங்கள் அவர்களுக்குப் போதிக்கப்படும், பூத்துக்குலுங்கும் பரதீஸ் பூமியில் என்றென்றும் வாழும் வாய்ப்பும் வழங்கப்படும்.—யோவான் 5:28, 29.
இவற்றின் உதவியால், மனிதகுலத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கோரப் பிடியில் வைத்திருக்கும் துன்பம், வியாதி, மரணம் போன்ற இந்த மோசமான நிலைமைகளை யெகோவா அடியோடு மாற்றுவார். இனி ஒருபோதும் வியாதியே இராது! இனி ஒருபோதும் ஊனமே இராது! ஏன், இனி ஒருபோதும் மரணமே இராது! “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.
இப்படித்தான் கடவுள் துன்பத்தை ஒழித்துக்கட்ட போகிறார். இந்தச் சீர்கேடான உலக சமுதாயத்தை அழித்துவிட்டு, “நீதி வாசமாயிருக்கும்” முற்றிலும் புதிய சமுதாயத்தை உருவாக்குவார். (2 பேதுரு 3:13) எப்பேர்ப்பட்ட நற்செய்தி! இப்படிப்பட்ட புதிய உலகே இன்று நமக்கு உடனடியாக தேவை. அதற்காக நாம் நெடுநாள் காத்திருக்க வேண்டியதில்லை. புதிய உலகம் சீக்கிரத்தில் வரவிருக்கிறது என்பதையும், கடவுள் அனுமதித்திருக்கும் துன்பத்திற்கு முடிவு நெருங்குகிறது என்பதையும் பைபிள் தீர்க்கதரிசனங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம்.—மத்தேயு 24:3-14.
[பக்கம் 8-ன் பெட்டி]
மனித ஆட்சியின் தோல்வி
மனித ஆட்சியைப் பற்றி ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ஹெல்மூட் ஷ்மிட் இவ்வாறு குறிப்பிட்டார்: “மனிதர்களாகிய நாம் . . . எப்பொழுதும் இந்த உலகத்தை அரைகுறையாகத்தான் ஆட்சி செய்திருக்கிறோம், பெரும்பாலான சந்தர்ப்பத்தில் மிக மோசமாகவே ஆட்சி செய்திருக்கிறோம். . . . முழு சமாதானத்துடன் ஒருபோதும் ஆட்சி செய்யவில்லை.” மனித முன்னேற்ற அறிக்கை 1999 (ஆங்கிலம்) இவ்வாறு கூறியது: “சமூக கலவரம், பெருகிவரும் குற்றச்செயல், வீடுகளில் அதிக வன்முறை ஆகியவற்றால் தங்களுடைய சமுதாயத்தின் அடிப்படை அமைப்பு அரித்தழிக்கப்படுவதாக எல்லா நாடுகளும் அறிக்கை செய்கின்றன. . . . உலகளாவிய அச்சுறுத்தல்கள் அதிகரிக்கின்றன, இவற்றை சரிக்கட்டுவதற்கான தேசங்களின் திறமைகளையும், சர்வதேச அளவில் கிடைக்கும் உதவிகளையும் விஞ்சிவிடுகின்றன.”
[பக்கம் 8-ன் படங்கள்]
“[அவர்கள்] மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:11
[பக்கம் 5-ன் படங்களுக்கான நன்றி]
மேலிருந்து மூன்றாவது, தாயும் சேயும்: FAO photo/B. Imevbore; கீழே, வெடிப்பு: U.S. National Archives photo