மத்தேயு எழுதியது
9 அதனால் அவர் படகில் ஏறி, கடலைக் கடந்து தன்னுடைய சொந்த ஊருக்குப் போனார்.+ 2 அப்போது சிலர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவனைப் படுக்கையோடு அவரிடம் தூக்கிக்கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்து, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், “மகனே, தைரியமாயிரு; உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன”+ என்று சொன்னார். 3 அங்கே இருந்த வேத அறிஞர்கள் சிலர், “இவன் தெய்வ நிந்தனை செய்கிறான்”+ என்று தங்களுக்குத் தாங்களே சொல்லிக்கொண்டார்கள். 4 இயேசு அவர்களுடைய எண்ணங்களைப் புரிந்துகொண்டு, “உங்கள் இதயத்தில் ஏன் பொல்லாத காரியங்களை யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்?+ 5 ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிட்டன’ என்று சொல்வது சுலபமா, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வது சுலபமா?+ 6 ஆனாலும், பூமியில் பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் மனிதகுமாரனுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வதற்காக—” என்று சொல்லிவிட்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவனிடம், “எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ”+ என்று சொன்னார். 7 அவனும் எழுந்து தன்னுடைய வீட்டுக்குப் போனான். 8 இதைப் பார்த்ததும் அங்கிருந்த மக்கள் பயந்துபோனார்கள்; இப்படிப்பட்ட அதிகாரத்தை மனிதர்களுக்குக் கொடுத்த கடவுளை அவர்கள் மகிமைப்படுத்தினார்கள்.
9 அதன் பின்பு, இயேசு அங்கிருந்து போய்க்கொண்டிருந்தபோது வரி வசூலிக்கும் அலுவலகத்தில் மத்தேயு என்ற ஒருவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்று சொன்னார்; உடனே மத்தேயு எழுந்து அவரைப் பின்பற்றிப் போனார்.+ 10 பின்பு, அவருடைய வீட்டில் இயேசு சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது* வரி வசூலிப்பவர்கள் பலரும், பாவிகள் பலரும் அங்கே வந்து அவரோடும் அவருடைய சீஷர்களோடும் சேர்ந்து சாப்பிட* ஆரம்பித்தார்கள்.+ 11 இதைப் பார்த்த பரிசேயர்கள் அவருடைய சீஷர்களிடம், “உங்கள் போதகர் ஏன் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுகிறார்?”+ என்று கேட்டார்கள். 12 அது அவருடைய காதில் விழுந்தபோது, “ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை.+ 13 அதனால், ‘பலியை அல்ல, இரக்கத்தைத்தான் நான் விரும்புகிறேன்’+ என்று சொல்லப்பட்டதன் அர்த்தத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள். நீதிமான்களை அல்ல, பாவிகளைத்தான் நான் அழைக்க வந்தேன்” என்று சொன்னார்.
14 பின்பு, யோவானுடைய சீஷர்கள் அவரிடம் வந்து, “நாங்களும் பரிசேயர்களும் தவறாமல் விரதம் இருக்கிறோம்; ஆனால், உங்களுடைய சீஷர்கள் ஏன் விரதம் இருப்பதில்லை?”+ என்று கேட்டார்கள். 15 அதற்கு இயேசு, “மணமகன்+ தங்களோடு இருக்கும்வரை அவருடைய நண்பர்கள்+ துக்கப்பட வேண்டிய அவசியம் இல்லைதானே? ஆனால், மணமகன் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் வரும்,+ அப்போது அவர்கள் துக்கப்பட்டு விரதம் இருப்பார்கள். 16 புதிய துணியைப் பழைய உடையில் வைத்து யாருமே ஒட்டுப்போட மாட்டார்கள். ஏனென்றால், புதிய துணி சுருங்கும்போது, பழைய உடையின் கிழிசல் இன்னும் பெரிதாகிவிடும்.+ 17 அதேபோல், பழைய தோல் பைகளில் யாருமே புதிய திராட்சமதுவை ஊற்றி வைக்க மாட்டார்கள்; அப்படி ஊற்றி வைத்தால், அந்தப் பைகள் வெடித்துவிடும்; அப்போது திராட்சமதுவும் கொட்டிவிடும், பைகளும் நாசமாகிவிடும். அதனால்தான், புதிய திராட்சமதுவைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைப்பார்கள்; அப்போது இரண்டுமே வீணாகாமல் இருக்கும்” என்று சொன்னார்.
18 அவர் இந்த விஷயங்களை அவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது, ஒரு தலைவர் அவர் முன்னால் வந்து மண்டிபோட்டு, “இந்நேரத்துக்குள் என் மகள் செத்துப்போயிருப்பாள்; ஆனால், நீங்கள் வந்து அவள்மேல் உங்கள் கையை வைத்தால், அவளுக்கு மறுபடியும் உயிர் வந்துவிடும்”+ என்று சொன்னார்.
19 அதனால், இயேசு எழுந்து அவர் பின்னால் போனார்; அவருடைய சீஷர்களும் கூடவே போனார்கள். 20 அப்போது, 12 வருஷங்களாக இரத்தப்போக்கினால்+ அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு பெண், 21 “அவருடைய மேலங்கியைத் தொட்டாலே நான் குணமாகிவிடுவேன்”*+ என்று தனக்குள் சொல்லிக்கொண்டே, அவருக்குப் பின்னால் போய் அவருடைய மேலங்கியின் ஓரத்தை* தொட்டாள்.+ 22 இயேசு அவளைத் திரும்பிப் பார்த்து, “மகளே, தைரியமாயிரு! உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கியிருக்கிறது”*+ என்று சொன்னார். அந்த நொடியே அந்தப் பெண் குணமானாள்.+
23 பின்பு, அந்தத் தலைவருடைய வீட்டுக்கு இயேசு வந்தார்; அங்கே குழல் ஊதுகிறவர்களையும் சத்தமாக அழுதுகொண்டிருந்த கூட்டத்தாரையும் பார்த்து,+ 24 “இங்கிருந்து போய்விடுங்கள்; சிறுமி சாகவில்லை, அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள்”+ என்று சொன்னார். அவர்களோ அவரைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க ஆரம்பித்தார்கள். 25 கூட்டத்தாரை வெளியே அனுப்பியவுடன், அவர் உள்ளே போய் அந்தச் சிறுமியின் கையைப் பிடித்தார்,+ அப்போது அவள் எழுந்துகொண்டாள்.+ 26 இதைப் பற்றிய பேச்சு அந்தப் பகுதியெங்கும் பரவியது.
27 இயேசு அங்கிருந்து புறப்பட்டு வந்துகொண்டிருந்தபோது, கண் தெரியாத இரண்டு பேர்,+ “தாவீதின் மகனே, எங்களுக்கு இரக்கம் காட்டுங்கள்” என்று கத்திக்கொண்டே அவர் பின்னால் போனார்கள். 28 அவர் வீட்டுக்குள் போன பின்பு, கண் தெரியாத அந்த ஆட்கள் அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களிடம், “என்னால் உங்களுக்குப் பார்வை கொடுக்க முடியுமென்று நம்புகிறீர்களா?”+ என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆமாம், எஜமானே” என்று சொன்னார்கள். 29 அப்போது அவர்களுடைய கண்களைத் தொட்டு, “உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு நடக்கட்டும்” என்று சொன்னார். 30 உடனே அவர்களுக்குப் பார்வை கிடைத்தது.+ இயேசு அவர்களிடம், “இந்த விஷயம் யாருக்கும் தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்”+ என்று கண்டிப்புடன் சொன்னார். 31 ஆனால் அவர்கள் வெளியே போய், அந்தப் பகுதியிலிருந்த எல்லாருக்கும் அவரைப் பற்றிச் சொன்னார்கள்.
32 அவர்கள் புறப்பட்டுப் போனபோது, பேய் பிடித்து ஊமையாகிவிட்ட ஒரு மனிதனை மக்கள் அவரிடம் கூட்டிக்கொண்டு வந்தார்கள்.+ 33 அவர் அந்தப் பேயை விரட்டியதும் அவன் பேச ஆரம்பித்தான்.+ மக்கள் எல்லாரும் அதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு, “இந்த மாதிரி ஒன்றை இஸ்ரவேலில் நாங்கள் இதுவரை பார்த்ததே இல்லை”+ என்று சொன்னார்கள். 34 ஆனால் பரிசேயர்கள், “பேய்களுடைய தலைவனின் உதவியால்தான் இவன் பேய்களை விரட்டுகிறான்”+ என்று சொன்னார்கள்.
35 இயேசு எல்லா நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் போய், அங்கிருந்த ஜெபக்கூடங்களில் கற்பித்தார், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கித்தார், எல்லா விதமான நோய்களையும் எல்லா விதமான உடல் பலவீனங்களையும் குணமாக்கினார்.+ 36 மக்கள் கூட்டத்தைப் பார்த்தபோது அவருடைய மனம் உருகியது;+ ஏனென்றால், மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போல் அவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டும்* புறக்கணிக்கப்பட்டும் இருந்தார்கள்.+ 37 அவர் தன்னுடைய சீஷர்களிடம், “அறுவடை அதிகமாக இருக்கிறது, ஆனால் வேலையாட்கள் குறைவாக இருக்கிறார்கள்.+ 38 அதனால், அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பச் சொல்லி அறுவடையின் எஜமானிடம் கெஞ்சிக் கேளுங்கள்”+ என்று சொன்னார்.