“ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்”?
மீண்டும் கிறிஸ்மஸ் பண்டிகை காலம். உலகெங்கும் மக்கள் ஒரு பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். யாருடைய பிறந்த நாளை? கடவுளுடைய குமாரனுடைய பிறந்த நாளையா அல்லது முதல் நூற்றாண்டில் தான் வாழ்ந்த பகுதியில் பிரபலமாக விளங்கிய மதத்தை சீர்திருத்த நினைத்த யூத பக்தனுடைய பிறந்த நாளையா? ஏழைகளின் தோழனுடைய பிறந்த நாளையா, ரோம சாம்ராஜ்யத்திற்கு அச்சுறுத்தலாக இருந்ததால் கொலை செய்யப்பட்ட ஒரு கலகக்காரனுடைய பிறந்த நாளையா அல்லது சுய அறிவையும் ஞானோதயத்தையும் வலியுறுத்திய ஒரு ஞானியின் பிறந்த நாளையா? ‘உண்மையில் இயேசு கிறிஸ்து யார்?’ இதை நீங்கள் சிந்தித்துப் பார்ப்பதற்கு நல்ல காரணமுண்டு.
இந்தக் கேள்விக்கு மக்களுடைய பதில் என்ன என்பதை அறிவதில் இயேசுவே ஆர்வமுடையவராக இருந்தார். ஒரு சமயம் தமது சீஷர்களிடம், “ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்” என்று கேட்டார். (மாற்கு 8:27) ஏன் அப்படி கேட்டார்? ஏனென்றால் அவரை பின்பற்றுவதை ஏற்கெனவே அநேகர் நிறுத்தியிருந்தார்கள். மற்றவர்களோ அவர் ராஜாவாக மறுத்ததால் குழப்பமும் ஏமாற்றமும் அடைந்திருந்தார்கள். அதோடு, எதிரிகள் அவரிடம் சவால்விட்டபோது, தாம் யார் என்பதை நிரூபிக்க வானத்திலிருந்து எந்த அடையாளத்தையும் காண்பிக்கவில்லை. இப்படியிருக்க, அவருடைய கேள்விக்கு அப்போஸ்தலர்கள் பதிலளிக்கையில் என்ன சொன்னார்கள்? மக்கள் மத்தியில் பரவலாக நிலவிய கருத்துக்கள் சிலவற்றை குறிப்பிட்டார்கள்: “சிலர் யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள்.” (மத்தேயு 16:13, 14) ஆனால் அந்த சமயத்தில் இயேசுவைப் பற்றி பாலஸ்தீனாவில் பரவியிருந்த இழிவான பட்டப்பெயர்களை—தேவதூஷணம் செய்பவர், பித்தலாட்டக்காரர், கள்ள தீர்க்கதரிசி, பைத்தியம் பிடித்தவர் போன்ற பெயர்களை—அவர்கள் குறிப்பிடவில்லை.
இயேசுவைப் பற்றிய பல கருத்துக்கள்
இயேசு அதே கேள்வியை இன்றைக்கு கேட்டால், “அறிஞர்கள் என்னை யார் என்று சொல்கிறார்கள்?” என சற்று மாற்றி ஒருவேளை கேட்கலாம். எல்லா பதில்களையும் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது விடை இப்படித்தான் இருக்கும்: வித்தியாசப்பட்ட பல கருத்துக்கள் இருக்கின்றன. இயேசுவையும் அவர் சொன்னவற்றையும் செய்தவற்றையும் குறித்து பலருக்கும் பலவிதமான கருத்துக்கள் இருப்பதாக சிக்காகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் ட்ரேஸி சொன்னார். இயேசு உண்மையிலேயே யார் என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு, சமூகவியல், மனிதவியல், மற்றும் இலக்கியம் சார்ந்த சிக்கலான முறைகள் பலவற்றை கடந்த நூற்றாண்டில் அறிஞர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடைசியில், இயேசு யார் என்று அவர்கள் கருதுகிறார்கள்?
உலகத்தின் முடிவை முன்னுரைத்து, மனந்திரும்புங்கள் என சொல்லி வந்த ஒரு யூத தீர்க்கதரிசியே இந்த சரித்திரப்பூர்வ இயேசு என அறிஞர்கள் சிலர் தொடர்ந்து கூறிவருகிறார்கள். ஆனால் கடவுளுடைய குமாரன், மேசியா, மீட்பர் என சொல்ல மறுக்கிறார்கள். அவர் ஏற்கெனவே பரலோகத்தில் வாழ்ந்தவர் என்பதையும் அவருடைய உயிர்த்தெழுதலையும் பற்றிய பைபிள் பதிவை பெரும்பாலான அறிஞர்கள் சந்தேகிக்கிறார்கள். இன்னும் சிலரோ, முன்மாதிரியான வாழ்க்கையாலும் போதனைகளாலும் பல மதங்களை தூண்டிய சாதாரண மனிதரே இயேசு என்றும், நாளடைவில் அம்மதங்கள் கிறிஸ்தவமயமாயின என்றும் சொல்கிறார்கள். இன்றைய இறையியல் (ஆங்கிலம்) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளபடி, இன்னும் பலர் இயேசுவை, “வேதாந்தி, நாடோடியாக திரியும் ஞானி, அல்லது இறை சக்தி பெற்ற படிப்பறிவில்லாத மனிதர்; சமுதாயத்தை சீர்திருத்துபவர், சமுதாய ஒழுங்கில் குறைகண்டுபிடிக்கும் ஒரு ஹிப்பி கவிஞன், அல்லது வன்முறையிலும் கலகத்திலும் ஈடுபடுகிற சந்தேகத்திற்குரிய ஏழை கிராமவாசிகளிடம் பழகி அவர்களை அம்பலப்படுத்தும் பாலஸ்தீன உளவாளி” என்ற கண்ணோட்டத்திலேயே காண்கிறார்கள்.
இவற்றைவிட விசித்திரமான கருத்துக்களும் இருக்கின்றன. கறுப்பரான இயேசுவின் தோற்றம் ராப் இசையிலும் நகர்ப்புற கலையிலும், நடனங்களிலும்கூட காட்சிக்கு வருகிறது.a இயேசு உண்மையில் ஒரு பெண் என பலர் ஊகிக்கிறார்கள். 1993-ன் கோடைகாலத்தில் கலிபோர்னியாவிலுள்ள ஆரஞ்ச் கௌன்டி கண்காட்சிக்கு வந்திருந்தோர் “கிறிஸ்டி”யின் சிலையைக் கண்டார்கள்; அது ஆடையின்றி சிலுவையில் தொங்கும் பெண் “கிறிஸ்து”வின் சிலை. கிட்டத்தட்ட அதே சமயத்தில், நியூ யார்க்கில் “கிறிஸ்டா”வின், அதாவது சிலுவையில் அறையப்பட்ட பெண் “இயேசு”வின் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இவ்விரண்டு சிலைகளும் அதிக சர்ச்சையைக் கிளப்பின. 1999-ன் ஆரம்பத்தில் “சிறுவன் இயேசுவும் ஏஞ்சல் எனும் அவருடைய நாயும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளும் அன்பை பற்றிய” புத்தகம் வாடிக்கையாளர்களின் கண்களில் பட்டது. அவர்களுக்கு இடையே இருந்த உறவு “ஆன்மீக ரீதியில் மனதை தொடுகிறது” என அது விளக்குகிறது. “மேலும் அந்த சிறுவனும் நாயும் எந்தளவுக்கு ஒருவருக்கொருவர் தங்கள் உயிரை தியாகம் செய்ய மனமுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் அது காட்டுகிறது.”
இது உண்மையிலேயே முக்கியமா?
இயேசு யாராக இருந்தார், இப்போது யாராக இருக்கிறார் என்பதை நீங்கள் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? அதற்கு ஒரு காரணம் என்னவெனில், நெப்போலியன் குறிப்பிட்டபடி, “இயேசு கிறிஸ்து காணக்கூடாதவராக இருந்துகொண்டே தம்முடைய அடியார்களின்மீது செல்வாக்கும் அதிகாரமும் செலுத்தியிருக்கிறார்.” இயேசுவின் சக்திவாய்ந்த போதனைகளும், வாழ்க்கை முறையும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஓர் எழுத்தாளர் பொருத்தமாகவே இவ்வாறு குறிப்பிட்டார்: “இதுவரை அணிவகுத்துச் சென்ற அனைத்து படைகளும், கட்டப்பட்ட அனைத்து கப்பற்படைகளும், அமர்த்தப்பட்ட அனைத்து சட்ட மாமன்றங்களும், ஆட்சி செய்த அனைத்து அரசர்களும் ஒட்டுமொத்தமாகக்கூட இப்பூமியில் உள்ள மனிதரின் வாழ்க்கையில் இந்தளவுக்கு பலமான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.”
இயேசு யாராக இருந்தார், இப்போது யாராக இருக்கிறார் என்பதை அறிவதற்கு மற்றொரு காரணம் என்னவெனில், உங்கள் எதிர்கால வாழ்க்கையில் அவர் நேரடியாக செல்வாக்கு செலுத்துவார். ஏற்கெனவே பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட இந்த அரசாங்கத்தின்—இயேசுவால் ஆளப்படும் கடவுளுடைய ராஜ்யத்தின்—பிரஜையாக இருப்பதற்குரிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. சீரழிக்கப்பட்டு வரும் இந்தப் பூமி, இயேசுவின் வழிநடத்துதலால் அதன் மகத்தான உயிரியல் பல்வகைமையையும், சமநிலையான சூழியலையும் மீண்டும் பெறும். இயேசுவின் ராஜ்யம் பட்டினியால் வாடுகிறவர்களுடைய வாட்டத்தைப் போக்கும், ஏழை எளியவர்களை பராமரிக்கும், சுகவீனரை சுகப்படுத்தும், மரித்தோரை உயிருக்குக் கொண்டுவரும் என பைபிள் தீர்க்கதரிசனம் நமக்கு உறுதியளிக்கிறது.
இப்படிப்பட்ட ஓர் அரசாங்கம் மிகவும் தேவைப்படுவதால், அதை எப்படிப்பட்ட நபர் தலைமைதாங்கி வழிநடத்துகிறார் என்பதை நீங்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள விரும்புவீர்கள். நிஜ இயேசுவைப் பற்றி அறிந்துகொள்வதற்கு அடுத்த கட்டுரை உங்களுக்கு உதவும்.
[அடிக்குறிப்பு]
a இயேசுவின் தோற்றத்தைப் பற்றி அறிய டிசம்பர் 8, 1998 விழித்தெழு!-வில் “இயேசு பார்ப்பதற்கு எப்படி இருந்தார்?” என்ற கட்டுரையைக் காண்க.