மாற்கு எழுதியது
8 அந்த நாட்களில், மக்கள் மறுபடியும் ஒரு பெரிய கூட்டமாகக் கூடிவந்தபோது, அவர்களிடம் சாப்பிட எதுவும் இருக்கவில்லை; அதனால், அவர் தன்னுடைய சீஷர்களைக் கூப்பிட்டு, 2 “இந்த மக்களைப் பார்க்கும்போது என் மனம் உருகுகிறது;+ இவர்கள் மூன்று நாட்களாக என்னோடு இருக்கிறார்கள், சாப்பிடுவதற்கும் இவர்களிடம் ஒன்றுமே இல்லை.+ 3 இவர்களை நான் பட்டினியாக வீட்டுக்கு அனுப்பிவிட்டால், போகிற வழியிலேயே மயங்கி விழுந்துவிடுவார்கள். அதுவும் இவர்களில் சிலர் ரொம்பத் தூரத்திலிருந்து வந்திருக்கிறார்கள்” என்று சொன்னார். 4 அதற்கு அவருடைய சீஷர்கள், “ஒதுக்குப்புறமான இந்த இடத்தில் இந்த மக்களுக்குத் தேவையான ரொட்டிகளை எங்கிருந்து வாங்க முடியும்?” என்று கேட்டார்கள். 5 அப்போது அவர், “உங்களிடம் எத்தனை ரொட்டிகள் இருக்கின்றன?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஏழு”+ என்று சொன்னார்கள். 6 அப்போது, தரையில் உட்காரும்படி கூட்டத்தாரிடம் அவர் சொன்னார்; பின்பு அந்த ஏழு ரொட்டிகளை எடுத்து, கடவுளுக்கு நன்றி சொல்லி, அவற்றைப் பிட்டு, பரிமாறுவதற்காகச் சீஷர்களிடம் கொடுத்தார், அவர்களும் அதைக் கூட்டத்தாருக்குப் பரிமாறினார்கள்.+ 7 அவர்களிடம் சில சிறுமீன்களும் இருந்தன; அவற்றுக்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு, பரிமாறுவதற்காக அவர்களிடம் கொடுத்தார். 8 எல்லாரும் திருப்தியாகச் சாப்பிட்டார்கள்; அதன் பின்பு, மீதியான ரொட்டித் துண்டுகளை ஏழு பெரிய கூடைகள் நிறைய அவர்கள் சேகரித்தார்கள்.+ 9 அங்கே சுமார் 4,000 ஆண்கள் இருந்தார்கள். பின்பு, அவர்களை அவர் அனுப்பி வைத்தார்.
10 அதன்பின், சீஷர்களோடு உடனடியாகப் படகில் ஏறி தல்மனூத்தா பகுதிக்குப் போனார்.+ 11 பரிசேயர்கள் அங்கே வந்து அவரோடு வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள்; அவரைச் சோதிப்பதற்காக, வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைக் காட்டும்படி கேட்டார்கள்.+ 12 அப்போது அவர் உள்ளம் குமுறிப் பெருமூச்சுவிட்டு, “இந்தத் தலைமுறையினர் ஏன்தான் அடையாளத்தைக் கேட்கிறார்களோ?+ உண்மையாகவே சொல்கிறேன், இந்தத் தலைமுறையினருக்கு எந்த அடையாளமும் கொடுக்கப்படாது”+ என்று சொன்னார். 13 அதன் பின்பு, அவர்களை விட்டுவிட்டு மறுபடியும் படகில் ஏறி அக்கரைக்குப் போனார்.
14 ரொட்டிகளை எடுத்துக்கொண்டுவர சீஷர்கள் மறந்துவிட்டார்கள், ஒரேவொரு ரொட்டியைத் தவிர வேறொன்றுமே படகில் இல்லை.+ 15 அவர் அவர்களிடம், “பரிசேயர்களுடைய புளித்த மாவையும் ஏரோதுவுடைய புளித்த மாவையும் குறித்து ஜாக்கிரதையாகவும் விழிப்பாகவும் இருங்கள்”+ என்று தெளிவாக எச்சரித்தார். 16 அப்போது, ரொட்டியை எடுத்துக்கொண்டு வராததற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தார்கள். 17 அவர் இதைப் பார்த்துவிட்டு, “ரொட்டியை எடுத்துக்கொண்டு வராததற்காக ஏன் இப்படி வாக்குவாதம் செய்கிறீர்கள்? இன்னுமா நீங்கள் உணரவில்லை? இன்னுமா புரிந்துகொள்ளவில்லை? புரிந்துகொள்ள முடியாதளவுக்கு உங்கள் இதயம் இன்னும் மந்தமாகத்தான் இருக்கிறதா? 18 ‘கண் இருந்தும் பார்க்காமல் இருக்கிறீர்களா, காது இருந்தும் கேட்காமல் இருக்கிறீர்களா?’ 19 உங்களுக்கு ஞாபகமில்லையா, நான் ஐந்து ரொட்டிகளைப் பிட்டு+ 5,000 ஆண்களுக்குக் கொடுத்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய சேகரித்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “பன்னிரண்டு”+ என்று சொன்னார்கள். 20 “நான் ஏழு ரொட்டிகளைப் பிட்டு 4,000 ஆண்களுக்குக் கொடுத்தபோது, மீதியான துண்டுகளை எத்தனை பெரிய கூடைகள் நிறைய சேகரித்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஏழு”+ என்று சொன்னார்கள். 21 அப்போது அவர், “இன்னுமா உங்களுக்குப் புரியவில்லை?” என்று கேட்டார்.
22 பின்பு, அவர்கள் பெத்சாயிதாவுக்கு வந்துசேர்ந்தார்கள்; அங்கே பார்வையில்லாத ஒருவனை மக்கள் அவரிடம் கூட்டிக்கொண்டு வந்து, அவனைத் தொடச் சொல்லிக் கெஞ்சினார்கள்.+ 23 அதனால், அவர் அந்த மனிதனுடைய கையைப் பிடித்து கிராமத்துக்கு வெளியே கூட்டிக்கொண்டு போனார். பிறகு, அவனுடைய கண்கள்மேல் உமிழ்ந்து,+ அவன்மேல் கைகளை வைத்து, “ஏதாவது தெரிகிறதா?” என்று கேட்டார். 24 அந்த மனிதன் நிமிர்ந்து பார்த்து, “ஆட்கள் நடமாடுவது தெரிகிறது; ஆனால், அவர்கள் மரங்களைப் போல் தெரிகிறார்கள்” என்று சொன்னான். 25 மறுபடியும் அவர் அந்த மனிதனுடைய கண்கள்மேல் கைகளை வைத்தார்; அப்போது அவனுக்கு முழுமையாகப் பார்வை கிடைத்தது, எல்லாமே அவனுக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. 26 பின்பு அவர், “இப்போது கிராமத்துக்குள் போகாதே” என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.
27 அதன் பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் பிலிப்புச் செசரியாவில் இருக்கிற கிராமங்களுக்குப் போனார்கள்; வழியில் அவர் தன்னுடைய சீஷர்களிடம், “நான் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?”+ என்று கேட்டார். 28 அதற்கு அவர்கள், “சிலர் யோவான் ஸ்நானகர்*+ என்றும், வேறு சிலர் எலியா+ என்றும், இன்னும் சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்கிறார்கள்” என்றார்கள். 29 அப்போது அவர், “ஆனால் நீங்கள் என்னை யாரென்று சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பேதுரு, “நீங்கள் கிறிஸ்து”+ என்று சொன்னார். 30 அப்போது, தன்னைப் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று அவர்களுக்குக் கண்டிப்புடன் கட்டளையிட்டார்.+ 31 அதோடு, மனிதகுமாரன் பல பாடுகள் பட வேண்டும், பெரியோர்களாலும்* முதன்மை குருமார்களாலும் வேத அறிஞர்களாலும் ஒதுக்கித்தள்ளப்பட்டு, கொலை செய்யப்பட வேண்டும்,+ மூன்று நாட்களுக்குப் பின்பு உயிரோடு எழுப்பப்பட வேண்டும்+ என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். 32 இதையெல்லாம் அவர்களிடம் வெளிப்படையாகவே சொன்னார். ஆனால், பேதுரு அவரைத் தனியாகக் கூட்டிக்கொண்டுபோய் அவரிடம் அதட்டலாகப் பேச ஆரம்பித்தார்.+ 33 அப்போது அவர் தன்னுடைய சீஷர்கள் பக்கம் திரும்பிக்கொண்டு பேதுருவிடம், “என் பின்னால் போ, சாத்தானே!* நீ கடவுளைப் போல் யோசிக்காமல் மனுஷர்களைப் போல் யோசிக்கிறாய்”+ என்று சொல்லிக் கண்டித்தார்.
34 கூட்டத்தாரையும் சீஷர்களையும் அவர் தன்னிடம் கூப்பிட்டு, “யாராவது என்னைப் பின்பற்றிவர விரும்பினால், அவர் தன்னையே துறந்து, தன் சித்திரவதைக் கம்பத்தை* சுமந்துகொண்டு தொடர்ந்து என் பின்னால் வரட்டும்.+ 35 தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறவன் அதை இழந்துபோவான்; ஆனால், எனக்காகவும் நல்ல செய்திக்காகவும் தன் உயிரை இழப்பவன் அதைக் காப்பாற்றிக்கொள்வான்.+ 36 சொல்லப்போனால், ஒருவர் இந்த உலகத்தில் இருக்கிற எல்லாவற்றையும் சம்பாதித்தாலும் தன் உயிரை இழந்துவிட்டால் என்ன பிரயோஜனம்?+ 37 உயிருக்கு ஈடாக ஒருவரால் எதைக் கொடுக்க முடியும்?+ 38 விசுவாசதுரோகமும் பாவமும் செய்கிற இந்தத் தலைமுறையினரில் ஒருவன் என்னைக் குறித்தும் என் வார்த்தைகளைக் குறித்தும் வெட்கப்பட்டால், மனிதகுமாரன் தன்னுடைய தகப்பனின்* மகிமையில் பரிசுத்த தூதர்களோடு வரும்போது+ அவனைக் குறித்து வெட்கப்படுவார்”+ என்று சொன்னார்.