யெகோவா தன்னுடைய மக்களை வழிநடத்துகிறார்
“யெகோவா எப்போதும் உங்களை வழிநடத்துவார்.”—ஏசா. 58:11.
1, 2. (அ) யெகோவாவின் சாட்சிகளுக்கும் மற்ற மதங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? (ஆ) இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் எதைப் பற்றி பார்ப்போம்?
“உங்களுடைய தலைவர் யார்?” மக்கள் அடிக்கடி இந்தக் கேள்வியை யெகோவாவின் சாட்சிகளிடம் கேட்கிறார்கள். ஏனென்றால், நிறைய மதங்களில், ஓர் ஆண் அல்லது பெண் அவர்களுக்குத் தலைவராக இருக்கிறார். ஆனால், ஓர் அபூரண மனிதர் நம்முடைய தலைவர் அல்ல; இயேசு கிறிஸ்துதான் நம்முடைய தலைவர்! இதை நினைத்தால் நமக்குப் பெருமையாக இருக்கிறது, இல்லையா? நாம் நம்முடைய தலைவராகிய இயேசுவைப் பின்பற்றுகிறோம். இயேசு, தன்னுடைய அப்பாவாகவும் தலைவராகவும் இருக்கிற யெகோவாவைப் பின்பற்றுகிறார்.—மத். 23:10.
2 இன்று கடவுளுடைய மக்களை வழிநடத்த “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” என்ற ஒரு தொகுதி இருக்கிறது. (மத். 24:45) இருந்தாலும், தன்னுடைய மகன் இயேசுவின் மூலம் யெகோவாதான் நம்மை உண்மையிலேயே வழிநடத்துகிறார். இதை எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்கான 3 காரணங்களை இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் பார்ப்போம். அப்போது, தன்னுடைய மக்களை வழிநடத்துவதற்கு யெகோவா சில மனிதர்களைப் பயன்படுத்தியிருந்தாலும், அன்றுமுதல் இன்றுவரை தன்னுடைய மக்களை யெகோவாதான் உண்மையிலேயே வழிநடத்துகிறார் என்பதை நம்மால் தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.—ஏசா. 58:11.
கடவுளுடைய சக்தி அவர்களைப் பலப்படுத்தியது
3. இஸ்ரவேலர்களை வழிநடத்த மோசேக்கு எது உதவியது?
3 கடவுளுடைய பிரதிநிதிகளைக் கடவுளுடைய சக்தி பலப்படுத்தியது. மோசே இஸ்ரவேலர்களுடைய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முக்கியமான பொறுப்பைச் செய்ய அவருக்கு எது உதவியது? யெகோவா தன்னுடைய சக்தியை மோசேக்குக் கொடுத்தார் என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 63:11-14-ஐ வாசியுங்கள்.) மோசேக்கு யெகோவாவுடைய சக்தி உதவி செய்ததால், யெகோவாதான் தன்னுடைய மக்களை உண்மையிலேயே வழிநடத்திக்கொண்டிருந்தார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
4. மோசேக்குக் கடவுளுடைய சக்தி இருந்ததை மக்களால் எப்படிப் புரிந்துகொள்ள முடிந்தது? (ஆரம்பப் படம்)
4 மோசேக்குக் கடவுளுடைய சக்தி இருந்ததை மக்கள் புரிந்துகொண்டார்களா? நிச்சயம் புரிந்துகொண்டார்கள்! அற்புதங்களைச் செய்யவும், எகிப்தின் சக்திவாய்ந்த ஆட்சியாளரான பார்வோனிடம் கடவுளுடைய பெயரைத் தெரியப்படுத்தவும் மோசேக்குக் கடவுளுடைய சக்தி உதவியது. (யாத். 7:1-3) அன்பான, பொறுமையான தலைவராக இருப்பதற்கும் கடவுளுடைய சக்தி அவருக்கு உதவியது. கொடூரமாகவும், சுயநலமாகவும் நடந்துகொண்ட மற்ற நாட்டு தலைவர்களிலிருந்து மோசே வித்தியாசமானவராக இருந்தார். (யாத். 5:2, 6-9) யெகோவா மோசேயைத் தன்னுடைய மக்களின் தலைவராகத் தேர்ந்தெடுத்திருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது.
5. தன்னுடைய மக்களை வழிநடத்த வேறு யாருக்கெல்லாம் யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்தார்?
5 தன்னுடைய மக்களை வழிநடத்த வேறு யாருக்கெல்லாம் யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்தார்? ‘நூனின் மகனாகிய யோசுவா கடவுளுடைய சக்தியால் நிறைந்திருந்தார்.’ (உபா. 34:9) “யெகோவாவின் சக்தி கிதியோனுக்குக் கிடைத்தது.” (நியா. 6:34) “யெகோவாவின் சக்தியால் தாவீது பலம் பெற்றார்.” (1 சா. 16:13) தங்களுடைய சொந்த சக்தியால் செய்ய முடியாத விஷயங்களைச் செய்து முடிப்பதற்கு இவர்கள் எல்லாரும் கடவுளுடைய சக்தியை நம்பியிருந்தார்கள். (யோசு. 11:16, 17; நியா. 7:7, 22; 1 சா. 17:37, 50) பெரிய பெரிய காரியங்களைச் செய்வதற்கு யெகோவாதான் அவர்களுக்குப் பலம் கொடுத்தார். அதனால், யெகோவாவுக்குத்தான் எல்லா புகழும் சேர வேண்டும்.
6. இஸ்ரவேலில் இருந்த தலைவர்களுக்குத் தன்னுடைய மக்கள் மரியாதை காட்ட வேண்டும் என்று யெகோவா ஏன் எதிர்பார்த்தார்?
6 மோசே, யோசுவா, கிதியோன், தாவீது ஆகியவர்களுக்குக் கடவுளுடைய சக்தி இருந்ததைப் பார்த்தபோது, இஸ்ரவேலர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அவர்களுக்கு மரியாதை காட்டியிருக்க வேண்டும்! மோசேயைப் பற்றி மக்கள் குறை சொன்னபோது, “இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்த ஜனங்கள் எனக்கு மரியாதை காட்டாமல் இருப்பார்கள்?” என்று யெகோவா கேட்டார். (எண். 14:2, 11) தன்னுடைய மக்களை வழிநடத்த, யெகோவாதான் அவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. மக்கள் அவர்களுக்குக் கீழ்ப்படிந்தபோது, அவர்கள் உண்மையிலேயே யெகோவாவைத்தான் தங்களுடைய தலைவராகப் பின்பற்றினார்கள்!
தேவதூதர்கள் அவர்களுக்கு உதவினார்கள்
7. தேவதூதர்கள் எப்படி மோசேக்கு உதவினார்கள்?
7 கடவுளுடைய பிரதிநிதிகளுக்கு தேவதூதர்கள் உதவினார்கள். (எபிரெயர் 1:7, 14-ஐ வாசியுங்கள்.) மோசேயை வழிநடத்த யெகோவா தேவதூதர்களைப் பயன்படுத்தினார். முதலாவதாக, ஒரு தேவதூதர் ‘முட்புதரில் தோன்றி,’ மோசேக்கு ஒரு பொறுப்பைக் கொடுத்தார். அதாவது, இஸ்ரவேலர்களை விடுவித்து அவர்களை வழிநடத்தும் பொறுப்பைக் கொடுத்தார். (அப். 7:35) இரண்டாவதாக, மோசேக்குத் திருச்சட்டத்தைக் கொடுப்பதற்காக யெகோவா தேவதூதர்களைப் பயன்படுத்தினார். இஸ்ரவேலர்களுக்குக் கற்றுக்கொடுக்க அந்தத் திருச்சட்டம் மோசேக்கு உதவியது. (கலா. 3:19) மூன்றாவதாக, “நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு இந்த ஜனங்களைக் கூட்டிக்கொண்டு போ. இதோ! என் தூதர் உங்கள் முன்னால் போய் வழிகாட்டுவார்” என்று யெகோவா மோசேயிடம் சொன்னார். (யாத். 32:34) இந்த வேலைகளையெல்லாம் ஒரு தேவதூதர் செய்தது போல பைபிள் சொல்வதில்லை. இருந்தாலும், மோசே மக்களுக்குக் கற்றுக்கொடுத்த விதத்திலிருந்தும் அவர்களை வழிநடத்திய விதத்திலிருந்தும் தேவதூதர்கள்தான் அவருக்கு உதவி செய்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
8. யோசுவாவுக்கும் எசேக்கியாவுக்கும் தேவதூதர்கள் எப்படி உதவினார்கள்?
8 தேவதூதர்கள் வேறு யாருக்கெல்லாம் உதவினார்கள்? கானானியர்களுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கு “யெகோவாவின் படைத் தளபதி,” அதாவது ஒரு தேவதூதர், யோசுவாவுக்கு உதவியதாக பைபிள் சொல்கிறது. (யோசு. 5:13-15; 6:2, 21) எசேக்கியா ராஜா கடவுளுடைய மக்களை வழிநடத்தியபோது, பிரமாண்டமான அசீரியப் படை எருசலேமை அழிக்கப்போவதாகப் பயமுறுத்தியது. ஆனால், ஒரே ராத்திரியில், “யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார்.”—2 ரா. 19:35.
9. கடவுளுடைய பிரதிநிதிகள் அபூரணர்களாக இருந்தாலும், இஸ்ரவேலர்கள் என்ன செய்யும்படி எதிர்பார்க்கப்பட்டார்கள்?
9 தேவதூதர்கள் பரிபூரணமானவர்கள். ஆனால், அவர்களுடைய உதவியைப் பெற்றுக்கொண்ட மனிதர்கள் பரிபூரணமானவர்கள் கிடையாது. இப்போது சிலரைப் பற்றி கவனிக்கலாம். மோசே, ஒரு சமயம் யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கவில்லை. (எண். 20:12) யோசுவா, தன்னோடு ஒப்பந்தம் செய்ய கிபியோனியர்கள் விரும்பியபோது, தன்னை வழிநடத்தும்படி யெகோவாவிடம் கேட்கவில்லை. (யோசு. 9:14, 15) எசேக்கியா, ஒரு சமயம் பெருமையாக நடந்துகொண்டார். (2 நா. 32:25, 26) இந்தத் தலைவர்கள் எல்லாரும் அபூரணர்களாக இருந்தாலும், இவர்களுடைய வழிநடத்துதலைப் பின்பற்றும்படி இஸ்ரவேலர்கள் எதிர்பார்க்கப்பட்டார்கள். தேவதூதர்களைப் பயன்படுத்தி யெகோவா இவர்களுக்கு உதவி செய்கிறார் என்பதை இஸ்ரவேலர்களால் தெளிவாகப் பார்க்க முடிந்தது. யெகோவாதான் தன்னுடைய மக்களை உண்மையிலேயே வழிநடத்தினார்!
கடவுளுடைய வார்த்தை அவர்களை வழிநடத்தியது
10. மோசே எப்படிக் கடவுளுடைய வார்த்தையால் வழிநடத்தப்பட்டார்?
10 கடவுளுடைய பிரதிநிதிகளை கடவுளுடைய வார்த்தை வழிநடத்தியது. இஸ்ரவேல் தேசத்துக்குக் கொடுக்கப்பட்ட சட்டத்தை, ‘மோசேயின் திருச்சட்டம்’ என்று பைபிள் சொல்கிறது. (1 ரா. 2:3) ஆனால், இஸ்ரவேல் தேசத்துக்கு உண்மையிலேயே சட்டத்தைக் கொடுத்தது யெகோவாதான் என்பதை பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. மோசேயும் அந்தச் சட்டத்துக்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. (2 நா. 34:14) உதாரணத்துக்கு, வழிபாட்டுக் கூடாரத்தை எப்படி அமைக்க வேண்டும் என்று யெகோவா மோசேயிடம் சொன்ன பிறகு, “யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே எல்லாவற்றையும் செய்தார். அவர் அப்படியே செய்தார்.”—யாத். 40:1-16.
11, 12. (அ) கடவுளுடைய மக்களை ஆட்சி செய்த யோசுவாவும் மற்ற ராஜாக்களும் என்ன செய்ய வேண்டியிருந்தது? (ஆ) கடவுளுடைய மக்களை வழிநடத்தியவர்களுக்குக் கடவுளுடைய வார்த்தை எப்படி உதவியது?
11 யோசுவா தலைவரானபோது, கடவுளுடைய வார்த்தையின் ஒரு பாகம் அவரிடம் இருந்தது. “அதில் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் கவனமாய்க் கடைப்பிடிப்பதற்காக ராத்திரியும் பகலும் தாழ்ந்த குரலில் அதை வாசி” என்று யெகோவா யோசுவாவிடம் சொன்னார். (யோசு. 1:8) பிற்காலத்தில் கடவுளுடைய மக்களை ஆட்சி செய்த ராஜாக்களும் திருச்சட்டத்தைத் தினமும் வாசிக்க வேண்டியிருந்தது, அதை நகலெடுக்க வேண்டியிருந்தது. ‘திருச்சட்டத்திலுள்ள எல்லா வார்த்தைகளையும் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதன்’ மூலம் அதற்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது.—உபாகமம் 17:18-20-ஐ வாசியுங்கள்.
12 கடவுளுடைய மக்களை வழிநடத்தியவர்களுக்கு கடவுளுடைய வார்த்தை எப்படி உதவியது? யோசியா ராஜாவின் உதாரணத்தைக் கவனியுங்கள். மோசேயின் திருச்சட்டம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, யோசியாவின் செயலாளர் அதை அவருக்கு வாசித்துக்காட்டினார்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) “திருச்சட்ட புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த விஷயங்களைக் கேட்டவுடனே, ராஜா தன்னுடைய உடையைக் கிழித்துக்கொண்டார்.” தேசத்தில் இருந்த சிலைகளையெல்லாம் அழிப்பதற்கும், பஸ்கா பண்டிகையைப் பிரமாண்டமாகக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதற்கும் கடவுளுடைய வார்த்தை யோசியாவைத் தூண்டியது. (2 ரா. 22:11; 23:1-23) யோசியாவும் மற்ற உண்மையுள்ள தலைவர்களும் கடவுளுடைய வார்த்தையைப் பின்பற்றியதால், கடவுளுடைய மக்களுக்குத் தாங்கள் கொடுத்துவந்த அறிவுரைகளை மாற்றிக்கொள்ள அவர்கள் தயாராக இருந்தார்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படிய அவருடைய மக்களை இது தூண்டியது!
13. கடவுளுடைய மக்களின் தலைவர்களுக்கும் மற்ற தேசத்து தலைவர்களுக்கும் என்ன வித்தியாசம் இருந்தது?
13 மக்களை வழிநடத்துவதற்குத் தங்களுடைய ஞானத்தையே மற்ற தேசத்து தலைவர்கள் நம்பியிருந்தார்கள். உதாரணத்துக்கு, கானானிய தலைவர்களும் அவர்களுடைய மக்களும் மோசமான விஷயங்களைச் செய்தார்கள். இரத்த சொந்தங்களோடு உடலுறவுகொண்டார்கள், ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டார்கள், மிருகங்களோடு உறவுகொண்டார்கள், பிள்ளைகளைப் பலி செலுத்தினார்கள், சிலைகளை வணங்கினார்கள். (லேவி. 18:6, 21-25) பாபிலோனிய தலைவர்களும் எகிப்திய தலைவர்களும், கடவுளுடைய மக்களுக்கு இருந்த சுத்தம் சம்பந்தமான சட்டங்களைப் பின்பற்றவில்லை. (எண். 19:13) ஆனால் ஆன்மீக சுத்தத்தையும், உடல் சுத்தத்தையும், ஒழுக்க சுத்தத்தையும் கடைப்பிடிக்கும்படி, கடவுள் நியமித்த தலைவர்கள் தங்கள் மக்களை உற்சாகப்படுத்தினார்கள். யெகோவாதான் தன்னுடைய மக்களை வழிநடத்தி வந்தார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
14. சில தலைவர்களை யெகோவா ஏன் கண்டித்துத் திருத்தினார்?
14 கடவுளுடைய மக்களை ஆட்சி செய்த எல்லா ராஜாக்களும் கடவுளுடைய அறிவுரைகளைப் பின்பற்றவில்லை. கடவுளுடைய சக்தியும் தேவதூதர்களும் கடவுளுடைய வார்த்தையும் தங்களை வழிநடத்தியபோது, உண்மையில்லாமல் நடந்துகொண்ட அந்த ராஜாக்கள், அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை. சில சமயங்களில், யெகோவா அந்தத் தலைவர்களைக் கண்டித்துத் திருத்தினார்; அவர்களுக்குப் பதிலாக மற்றவர்களைத் தேர்ந்தெடுத்தார். (1 சா. 13:13, 14) சில காலத்துக்குப் பிறகு, ஒரு பரிபூரணமான தலைவரை அவர் நியமித்தார்.
பரிபூரணமான தலைவரை யெகோவா நியமித்தார்
15. (அ) ஒரு பரிபூரணமான தலைவர் வரப்போகிறார் என்பதைத் தீர்க்கதரிசிகள் எப்படிக் காட்டினார்கள்? (ஆ) அந்தப் பரிபூரணமான தலைவர் யார்?
15 ஒரு பரிபூரணமான தலைவரை நியமிக்கப்போவதாக யெகோவா பல நூற்றாண்டுகளாக தீர்க்கதரிசனம் சொல்லிவந்தார். உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்களிடம் மோசே இப்படிச் சொன்னார்: “உங்கள் கடவுளாகிய யெகோவா உங்கள் சகோதரர்களுக்குள் என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியைத் தேர்ந்தெடுத்து உங்களுக்காக நியமிப்பார். அவர் சொல்வதை நீங்கள் கேட்டு நடக்க வேண்டும்.” (உபா. 18:15) யெகோவா தேர்ந்தெடுக்கப்போகும் இந்த நபர் “தலைவராகவும் அதிகாரியாகவும்” ஆவார் என்று ஏசாயா சொன்னார். (ஏசா. 55:4) ‘தலைவராக’ ஆகப்போகும் மேசியாவைப் பற்றி தானியேல் எழுதினார். (தானி. 9:25) கடைசியில், தானே அந்த “தலைவர்” என்று இயேசு கிறிஸ்து அடையாளம் காட்டினார். (மத்தேயு 23:10-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் சீஷர்கள் முழு மனதோடு அவரைப் பின்பற்றினார்கள். யெகோவாதான் இயேசுவை நியமித்திருக்கிறார் என்றும் முழுமையாக நம்பினார்கள். (யோவா. 6:68, 69) தன்னுடைய மக்களை வழிநடத்த யெகோவா இயேசு கிறிஸ்துவைத்தான் பயன்படுத்தப்போகிறார் என்பதைச் சீஷர்கள் நம்புவதற்கு என்னென்ன ஆதாரங்கள் இருந்தன?
16. கடவுளுடைய சக்தி இயேசுவைப் பலப்படுத்தியது என்று எப்படிச் சொல்லலாம்?
16 இயேசுவைக் கடவுளுடைய சக்தி பலப்படுத்தியது. இயேசு ஞானஸ்நானம் எடுத்தபோது, ‘வானம் திறப்பதையும் கடவுளுடைய சக்தி புறாவைப் போல் அவர்மேல் இறங்குவதையும்’ யோவான் பார்த்தார். அதற்குப் பிறகு, “வனாந்தரத்துக்குப் போகும்படி கடவுளுடைய சக்தி [இயேசுவை] தூண்டியது.” (மாற். 1:10-12) இயேசு பூமியில் ஊழியம் செய்த சமயத்தில், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் அற்புதங்கள் செய்யவும் கடவுளுடைய சக்தி இயேசுவைப் பலப்படுத்தியது. (அப். 10:38) அதோடு அன்பு, சந்தோஷம், பலமான விசுவாசம் போன்ற பண்புகளைக் காட்டவும் கடவுளுடைய சக்தி இயேசுவுக்கு உதவியது. (யோவா. 15:9; எபி. 12:2) இயேசுவுக்கு இருந்தது போல, வேறு எந்தத் தலைவருக்கும் கடவுளுடைய சக்தி இருந்ததாகத் தெரியவில்லை. யெகோவாதான் இயேசுவைத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருந்தார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
17. இயேசுவுக்கு உதவி செய்ய தேவதூதர்கள் என்ன செய்தார்கள்?
17 தேவதூதர்கள் இயேசுவுக்கு உதவினார்கள். இயேசு ஞானஸ்நானம் எடுத்த கொஞ்சக் காலத்திலேயே, “தேவதூதர்கள் வந்து அவருக்குப் பணிவிடை செய்ய ஆரம்பித்தார்கள்.” (மத். 4:11) அவர் இறப்பதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்பு, “பரலோகத்திலிருந்து ஒரு தேவதூதர் அவருக்குத் தோன்றி அவரைப் பலப்படுத்தினார்.” (லூக். 22:43) தேவைப்படும்போது, தனக்கு உதவி செய்வதற்காக யெகோவா தேவதூதர்களை அனுப்புவார் என்று இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.—மத். 26:53.
18, 19. இயேசுவின் வாழ்க்கையையும் அவருடைய போதனைகளையும் கடவுளுடைய வார்த்தை எப்படி வழிநடத்தியது?
18 இயேசுவைக் கடவுளுடைய வார்த்தை வழிநடத்தியது. தன்னுடைய ஊழியத்தை ஆரம்பித்தது முதல் சித்திரவதைக் கம்பத்தில் சாகும்வரை, கடவுளுடைய வார்த்தை தன்னை வழிநடத்த இயேசு அனுமதித்தார். சாகும் சமயத்தில்கூட, மேசியாவைப் பற்றி சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்களை மேற்கோள்காட்டிப் பேசினார். (மத். 4:4; 27:46; லூக். 23:46) அன்றிருந்த மதத் தலைவர்கள் இயேசுவைப் போல இருக்கவில்லை. கடவுளுடைய வார்த்தை தங்கள் பாரம்பரியங்களோடு ஒத்துப்போகாதபோது, அதை ஒதுக்கித்தள்ளினார்கள். ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா சொன்ன வார்த்தைகளை மேற்கோள்காட்டி அந்த மதத் தலைவர்களைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “இந்த ஜனங்கள் என்னை உதட்டளவில் புகழ்கிறார்கள். ஆனால், இவர்களுடைய இதயம் என்னைவிட்டுத் தூரமாக இருக்கிறது. இவர்கள் என்னை வணங்குவது வீண், ஏனென்றால் மனுஷர்களுடைய கோட்பாடுகளைத்தான் இவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்.” (மத். 15:7-9) தன்னுடைய மக்களை வழிநடத்துவதற்கு, தன்னுடைய வார்த்தையைப் பின்பற்றாத ஆட்களை யெகோவா ஒருபோதும் தேர்ந்தெடுக்கவில்லை.
19 மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தபோது, இயேசு கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்தினார். மதத் தலைவர்களோடு வாக்குவாதம் ஏற்பட்டபோது, தன்னுடைய ஞானத்தையோ வாழ்க்கையில் தனக்குக் கிடைத்த அனுபவத்தையோ பயன்படுத்தி இயேசு அவர்களுக்குப் பதில் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, கடவுளுடைய வார்த்தையைத்தான் பயன்படுத்தினார். (மத். 22:33-40) அவர் நினைத்திருந்தால் பரலோகத்தில் அனுபவித்த வாழ்க்கையைப் பற்றியோ, இந்தப் பிரபஞ்சம் படைக்கப்பட்டதைப் பற்றியோ மற்றவர்களிடம் நிறைய பேசியிருக்கலாம். ஆனால், அவர் கடவுளுடைய வார்த்தையை நேசித்ததால், அதைப் பற்றித்தான் மற்றவர்களிடம் பேசினார்; “வேதவசனங்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்கு அவர்களுடைய மனக்கண்களை முழுமையாகத் திறந்தார்.”—லூக். 24:32, 45.
20. (அ) இயேசு எப்படி யெகோவாவுக்குப் புகழ் சேர்த்தார்? (ஆ) இயேசுவின் மனப்பான்மைக்கும் முதலாம் ஏரோது அகிரிப்பாவின் மனப்பான்மைக்கும் என்ன வித்தியாசம் இருந்தது?
20 தான் பேசிய விதத்தைப் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டாலும், தன்னுடைய போதகரான யெகோவாவுக்கே இயேசு எப்போதும் புகழ் சேர்த்தார். (லூக். 4:22) “நல்ல போதகரே” என்று சொல்லி ஒரு பணக்காரன் இயேசுவைப் புகழ நினைத்தபோது, “என்னை ஏன் நல்லவன் என்று சொல்கிறாய்? கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரும் நல்லவர் கிடையாது” என்று மனத்தாழ்மையாகப் பதில் சொன்னார். (மாற். 10:17, 18) சுமார் 8 வருஷங்களுக்குப் பிறகு முதலாம் ஏரோது அகிரிப்பா, யூதாவின் தலைவரானான். அவன் இயேசுவைப் போல மனத்தாழ்மையாக இருக்கவில்லை. ஒருநாள், ஒரு விசேஷ கூட்டத்தில், கண்ணைக் கவருகிற விலை உயர்ந்த ராஜ உடையைப் போட்டுக்கொண்டு, மக்கள் முன்னால் பேசினான். மக்கள் அவன் பேசியதைக் கேட்டபோது, “இது தெய்வக் குரல்! மனுஷக் குரல் அல்ல!” என்று கத்தினார்கள். மற்றவர்கள் தன்னைப் புகழ வேண்டும் என்று ஏரோது ஆசைப்பட்டான். அதனால் என்ன நடந்தது? “கடவுளை அவன் மகிமைப்படுத்தாததால், அந்த நொடியே யெகோவாவின் தூதர் அவனைத் தாக்கினார். இதனால் அவன் வியாதிப்பட்டுப் புழுபுழுத்துச் செத்தான்.” (அப். 12:21-23) யெகோவா நிச்சயம் ஏரோதுவைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது. ஆனால், யெகோவாதான் தன்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதை இயேசு நிரூபித்துக்காட்டினார். மக்களின் மிகச் சிறந்த தலைவரான யெகோவாவுக்கே இயேசு எப்போதும் புகழ் சேர்த்தார்.
21. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?
21 சில வருஷங்களுக்கு மட்டும் அல்ல, பல வருஷங்களுக்கு இயேசு தலைவராக இருக்க வேண்டும் என்று யெகோவா விரும்பினார். உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, “பரலோகத்திலும் பூமியிலும் எனக்கு எல்லா அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். அதோடு, “இதோ! இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்” என்றும் சொன்னார். (மத். 28:18-20) ஆனால், பரலோகத்தில், பார்க்க முடியாத ரூபத்தில் இயேசு இருக்கிறார். அப்படியிருக்கும்போது, கடவுளுடைய மக்களை அவரால் எப்படி வழிநடத்த முடியும்? கடவுளுடைய பிரதிநிதிகளைக் கிறிஸ்தவர்கள் எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடியும்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
a இது மோசேயால் எழுதப்பட்ட மூலப்பிரதியாக இருக்கலாம்.