“நீங்கள் எப்படிப்பட்டவர்களென நிரூபித்துக் கொள்ளுங்கள்”
“நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே சோதித்தறியுங்கள். நீங்கள் எப்படிப்பட்டவர்களென நிரூபித்துக் கொள்ளுங்கள்.”—2 கொரிந்தியர் 13:5, Nw.
1, 2. (அ) நம் நம்பிக்கைகளைக் குறித்து சந்தேகம் எழுந்தால் அது நம்மை எவ்வாறு பாதிக்கும்? (ஆ) முதல் நூற்றாண்டில் கொரிந்து சபையிலிருந்த சிலருக்கு, எந்த வழியில் செல்வதென்ற குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவம் எது?
கிராமப்புறத்திலிருந்து நடந்து வரும் ஒருவர் சாலை இரண்டாகப் பிரியும் ஒரு சந்தியை அடைகிறார். இப்போது, தான் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வழியில் போவதென்ற சந்தேகம் அவருக்கு வந்துவிடுகிறது. அவ்வழியே செல்கிறவர்களிடம் விசாரிக்கிறார், ஆனால் அவர்கள் சொல்வது ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதால் அவர் இன்னும் குழம்பிவிடுகிறார். இந்தக் குழப்பத்தில் தன் பயணத்தைத் தொடர முடியாமல் அங்கேயே நின்றுவிடுகிறார். நம்முடைய நம்பிக்கைகளைக் குறித்து சந்தேகம் எழுந்தால் நாமும் இவ்வாறே செய்வதறியாது திகைத்து நின்றுவிடுவோம். இப்படிப்பட்ட சந்தேகம், நம்மைத் தீர்மானமெடுக்க விடாமல் தடுத்து, எந்த வழியில் செல்ல வேண்டும் என்று தெரியாதபடி குழப்பிவிடும்.
2 முதல் நூற்றாண்டில், கிரீஸிலுள்ள கொரிந்து பட்டணத்திலிருந்த கிறிஸ்தவ சபையில் நடந்த ஒரு சம்பவம் அங்கிருந்த சிலருக்கு அப்படிப்பட்ட ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அப்போஸ்தலன் பவுலுக்குக் கொடுக்கப்பட்டிருந்த அதிகாரத்தைக் குறித்து ‘மகா பிரதான அப்போஸ்தலர்கள்’ சந்தேகத்தைக் கிளப்பிவிட்டு இவ்வாறு சொன்னார்கள்: ‘அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறது.’ (2 கொரிந்தியர் 10:7-12; 11:5, 6) அவர்கள் அப்படிச் சொன்னது, எந்த வழியில் செல்வதென்ற குழப்பத்தை கொரிந்து சபையிலிருந்த சிலருக்கு ஏற்படுத்தியிருக்கலாம்.
3, 4. கொரிந்தியருக்கு பவுல் கொடுத்த ஆலோசனை இன்று நமக்கு ஏன் முக்கியமானதாய் இருக்கிறது?
3 பொ.ச. 50-ல், கொரிந்துவுக்கு பவுல் சென்றிருந்தபோது அங்கு ஒரு சபையை ஏற்படுத்தினார். ‘ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம் பண்ணிக் கொண்டு வந்தார்.’ ஆம், ‘அநேகர் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள்.’ (அப்போஸ்தலர் 18:5-11) கொரிந்துவிலிருந்த சக விசுவாசிகளின் ஆன்மீக நலனில் பவுல் மிகுந்த அக்கறை காட்டினார். அதுமட்டுமல்ல, கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களும், சில விஷயங்களின் பேரில் ஆலோசனை கேட்டு பவுலுக்குக் கடிதம் எழுதியிருந்தார்கள். (1 கொரிந்தியர் 7:1) அதனால் அவர்களுக்குத் தேவையான மிகச் சிறந்த ஓர் ஆலோசனையை அவர் கொடுத்தார்.
4 “நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே சோதித்தறியுங்கள்; எப்படிப்பட்டவர்களென நிரூபித்துக் கொள்ளுங்கள்” என்று பவுல் எழுதினார். (2 கொரிந்தியர் 13:5, NW) இந்த ஆலோசனையைப் பின்பற்றியிருந்தால், யாருடைய வழியில் செல்வதென்ற குழப்பமே கொரிந்துவிலிருந்த சகோதரர்களுக்கு ஏற்பட்டிருக்காது. இன்று நமக்கும்கூட இது பொருந்துகிறது. அப்படியானால், பவுலின் ஆலோசனையை நாம் எப்படிப் பின்பற்றலாம்? நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்பதை எப்படிச் சோதித்தறியலாம்? நாம் எப்படிப்பட்டவர்களென நிரூபிப்பதில் என்னவெல்லாம் உட்பட்டுள்ளது?
“நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே சோதித்தறியுங்கள்”
5, 6. நாம் விசுவாசமுள்ளவர்களாய் இருக்கிறோமா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கு என்ன அளவுகோல் உள்ளது, அது ஏன் கன கச்சிதமானது?
5 பொதுவாக, சோதனை செய்வதற்கு ஒரு பொருள் தேவை; ஓர் அடிப்படைத் தராதரம் அல்லது ஓர் அளவுகோலும் தேவை. நாம் பார்க்கப்போகிற விஷயத்தில் சோதிக்கப்படும் பொருள், நம்முடைய விசுவாசமல்ல, அதாவது நம்முடைய நம்பிக்கைகள் அல்ல. ஆனால், தனிநபர்களாக நாம்தான் சோதிக்கப்படுகிற அந்தப் பொருளாக இருக்கிறோம். இந்தச் சோதனையை நடத்துவதற்கு நம்மிடம் பூரணமான ஓர் அளவுகோல் உள்ளது. அதைப் பற்றி சங்கீதக்காரனாகிய தாவீது இயற்றிய ஒரு பாடல் இவ்வாறு குறிப்பிடுகிறது: “யெகோவாவின் பிரமாணம் குறைவற்றது [அதாவது, பூரணமானது], அது ஜீவனைப் புதுப்பிக்கிறது; யெகோவாவின் சாட்சியம் நம்பிக்கைக்குரியது, அது பேதையை ஞானியாக்குகிறது, யெகோவாவின் கட்டளைகள் நேர்மையானவை, அவை இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கும், யெகோவாவின் கற்பனை தூயது, அது கண்களைத் தெளிவிக்கிறது.” (சங்கீதம் 19:7, 8, திருத்திய மொழிபெயர்ப்பு) பைபிளில், யெகோவாவின் பூரண பிரமாணங்களும், நேர்மையான கட்டளைகளும், நம்பிக்கைக்குரிய சாட்சியங்களும், தூய கற்பனைகளும் உள்ளன. ஆகவே, அதிலுள்ள செய்தியே சோதனை செய்வதற்குரிய கன கச்சிதமான அளவுகோலாக இருக்கிறது.
6 தேவ ஆவியால் ஏவப்பட்ட அந்தச் செய்தியைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு கூறுகிறார்: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும் [அதாவது, கூரானதும்], ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) ஆம், கடவுளுடைய வார்த்தையைக் கொண்டு நம் இருதயத்தை, அதாவது, நாம் உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதை, சோதித்தறிய முடியும். கூரானதும், வல்லமைமிக்கதுமான இந்தச் செய்தியை தனிப்பட்டவர்களாக நம் வாழ்க்கையில் எப்படிப் பொருத்தி பிரயோகிக்க முடியும்? எப்படியென்பதை சங்கீதக்காரன் தெள்ளத் தெளிவாக விளக்குகிறார். “கர்த்தருடைய வேதத்தில் [“யெகோவாவுடைய பிரமாணத்தில்,” NW] பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்” என்பதாக அவர் பாடினார். (சங்கீதம் 1:1, 2) ‘யெகோவாவுடைய பிரமாணம்’ அவருடைய வார்த்தையான பைபிளில் காணப்படுகிறது. யெகோவாவின் வார்த்தையை வாசிப்பதில் நாம் பிரியம் கொள்ள வேண்டும். ஆம், அதைத் தாழ்ந்த குரலில் வாசிப்பதற்கு அல்லது தியானிப்பதற்கு, நாம் நேரம் ஒதுக்க வேண்டும். அவ்வாறு செய்கையில், சோதிக்கப்படுகிறவர்களாகிய நாம், அங்கு எழுதப்பட்டுள்ளவற்றிற்கு ஏற்ப நம்மைச் சோதித்துப் பார்க்க அனுமதிக்க வேண்டும்.
7. நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்பதைச் சோதித்தறிவதற்கு மிக முக்கிய வழி எது?
7 அப்படியானால், நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்பதைச் சோதித்தறிவதற்கு மிக முக்கிய வழி இதுதான்: கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதும், தியானிப்பதும், கற்றுக்கொண்டதற்கு இசைய நம் நடத்தை இருக்கிறதாவென ஆராய்வதுமே ஆகும். கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள நமக்கு ஏராளமான உதவி இருப்பதைக் குறித்து நாம் சந்தோஷப்படலாம்.
8. நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்பதைச் சோதித்தறிவதற்கு “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் வெளியிடுகிற பிரசுரங்கள் நமக்கு எப்படி உதவலாம்?
8 “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பார் வேத வசனங்களுக்கு விளக்கமளித்து வெளியிடுகிற பிரசுரங்களின் வாயிலாக யெகோவா நமக்குப் போதிக்கிறார், பயிற்சியளிக்கிறார். (மத்தேயு 24:45, NW) உதாரணமாக, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தில் உள்ள “தியானிக்க சில கேள்விகள்” என்ற பெட்டியை எடுத்துக்கொள்ளுங்கள்.a தனிப்பட்ட விதமாக தியானிப்பதற்கு இப்புத்தகம் எப்பேர்ப்பட்ட அருமையான வாய்ப்புகளை அளிக்கிறது! காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் சிந்திக்கப்பட்டுள்ள ஏராளமான விஷயங்கள்கூட நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்பதைச் சோதித்தறிய உதவுகின்றன. சமீபத்தில் வெளிவந்த காவற்கோபுர இதழ்களில் நீதிமொழிகள் புத்தகத்தின் அடிப்படையில் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைப் படித்த ஒரு கிறிஸ்தவப் பெண் இவ்வாறு சொன்னாள்: “இந்தக் கட்டுரைகள் ரொம்பவே நடைமுறையானவை. என்னுடைய பேச்சு, நடத்தை, மனப்பான்மை எல்லாமே யெகோவாவின் நீதியான தராதரங்களுக்கு இசைய இருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்க அவை எனக்கு உதவுகின்றன.”
9, 10. நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கு என்னென்ன ஏற்பாடுகளை யெகோவா செய்திருக்கிறார்?
9 சபை கூட்டங்கள், மாநாடுகள் மூலமாகவும்கூட நாம் அதிகமதிகமாக வழிநடத்துதலையும் உற்சாகத்தையும் பெறுகிறோம். இவையும் கடவுள் செய்துள்ள ஆன்மீக ஏற்பாடுகளே; இவற்றைக் குறித்து ஏசாயா இவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்: “கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கு . . . போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்.” (ஏசாயா 2:2, 3) யெகோவாவின் வழிகளைப் பற்றிய இப்படிப்பட்ட போதனையைப் பெறுவது உண்மையில் ஓர் ஆசீர்வாதமே.
10 கிறிஸ்தவ மூப்பர்கள் உட்பட, ஆன்மீகத் தகுதிகளையுடைய மற்றவர்கள் தருகிற ஆலோசனைகளும் முக்கியமானவை. அவர்களைக் குறித்து பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப் பண்ணுங்கள்; நீங்களும் சோதிக்கப்படாதபடிக்கு உங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.’ (கலாத்தியர் 6:1) நம்மைச் சீர்பொருந்தப் பண்ணுவதற்காகச் செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாட்டுக்கு நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம்!
11. நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கு என்ன செய்வது அவசியம்?
11 பிரசுரங்கள், கிறிஸ்தவக் கூட்டங்கள், சபையில் நியமிக்கப்பட்டுள்ள சகோதரர்கள் என எல்லாமே யெகோவா தந்துள்ள அருமையான ஏற்பாடுகள். என்றாலும், நாம் விசுவாசமுள்ளவர்களாய் இருக்கிறோமா என்பதைச் சோதித்துப் பார்ப்பதற்கு சுய பரிசோதனை செய்வது அவசியம். ஆகவே, நம் பிரசுரங்களைப் படிக்கையில், அல்லது வேதப்பூர்வ அறிவுரையைக் கேட்கையில், நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘இது எனக்குப் பொருந்துகிறதா? நான் இதைச் செய்கிறேனா? என்னுடைய கிறிஸ்தவ நம்பிக்கைகளில் உறுதியாக இருக்கிறேனா?’ இவ்விதங்களில் பெற்றுக்கொள்கிற தகவலை நாம் எவ்வாறு கருதுகிறோம் என்பதும்கூட ஆன்மீக ரீதியில் நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது. “ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; . . . ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்.” (1 கொரிந்தியர் 2:14, 15) நம்முடைய பிரசுரங்களில் வாசிப்பவற்றிற்கும், அதோடு கூட்டங்களிலிருந்து, மூப்பர்களிடமிருந்து கேட்பவற்றிற்கும் நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும், அல்லவா? அவற்றின் பேரில் ஆன்மீகக் கண்ணோட்டத்தைக் காத்துக்கொள்ள முயல வேண்டும், அல்லவா?
“நீங்கள் எப்படிப்பட்டவர்களென நிரூபித்துக் கொள்ளுங்கள்”
12. நாம் எப்படிப்பட்டவர்களென நிரூபித்துக் கொள்வதில் என்னவெல்லாம் உட்பட்டுள்ளன?
12 நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை நிரூபித்துக் கொள்வதற்கு நம்மை நாமே ‘தராசில்’ நிறுத்திப் பார்ப்பது அவசியம். ஆம், நாம் சத்தியத்தில் இருக்கலாம், ஆனால் ஆன்மீக ரீதியில் நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம்? நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை நிரூபித்துக் கொள்வதில் முதிர்ச்சிக்கான அத்தாட்சியைக் காண்பிப்பதும், ஆன்மீக ஏற்பாடுகளுக்கு உண்மையான போற்றுதல் காண்பிப்பதும் உட்பட்டுள்ளன.
13. எபிரெயர் 5:14-ன்படி நம்முடைய முதிர்ச்சிக்கு எது அத்தாட்சி அளிக்கிறது?
13 அப்படியானால், கிறிஸ்தவ முதிர்ச்சிக்கான என்ன அத்தாட்சி நம்மில் இருக்கிறதாவென சோதித்துப் பார்க்க வேண்டும்? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்றது திட உணவு. அவர்கள் நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள்.” (எபிரெயர் 5:14, பொது மொழிபெயர்ப்பு) பகுத்தறிவதற்கான நம் ஆற்றல்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் முதிர்ச்சிக்கான அத்தாட்சியை நாம் வெளிக்காட்டுகிறோம். ஒரு விளையாட்டு வீரன் தன் துறையில் சிறந்து விளங்குவதற்காக, உடல் தசைகளை நன்கு பயன்படுத்தி பயிற்சி அளிக்க வேண்டும். அவ்வாறே பைபிள் நியமங்களை நன்கு பயன்படுத்தி பகுத்தறிவதற்கான நம் ஆற்றல்களைப் பயிற்றுவிக்க வேண்டும்.
14, 15. கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆழமான விஷயங்களை ஊக்கமாகப் படிப்பதற்கு ஏன் முயல வேண்டும்?
14 ஆனால், பகுத்தறிவதற்கான நம்முடைய ஆற்றல்களைப் பயிற்றுவிப்பதற்கு முன், நாம் அறிவைப் பெற்றுக்கொள்வது அவசியம். இதற்கு தனிப்பட்ட விதத்தில் ஆராய்ந்து ஊக்கமாகப் படிப்பது இன்றியமையாதது. இப்படித் தனிப்பட்ட விதத்தில் தவறாமல் படிக்கும்போது, முக்கியமாக கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆழமான விஷயங்களைப் படிக்கும்போது, நம்முடைய பகுத்தறியும் ஆற்றல் வளர்கிறது. கடந்த பல ஆண்டுகளாக காவற்கோபுரத்தில் ஆழமான விஷயங்கள் கலந்தாராயப்பட்டிருக்கின்றன. ஆழமான சத்தியங்களைக் கலந்தாராயும் கட்டுரைகளை வாசிக்கும்போது நாம் எப்படி உணருகிறோம்? ‘சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருப்பதால்,’ அதாவது புரிந்துகொள்ள கடினமாயிருப்பதால், அவற்றைப் படிக்காமல் விட்டுவிடுகிறோமா? (2 பேதுரு 3:16) அப்படிச் செய்வதற்குப் பதிலாக, அவற்றில் சொல்லப்பட்டுள்ளவற்றைப் புரிந்துகொள்ள நாம் கூடுதலாக முயற்சியெடுக்கிறோம்.—எபேசியர் 3:18.
15 தனிப்பட்ட விதத்தில் படிப்பது நமக்குக் கடினமாக இருந்தால் என்ன செய்வது? அதை ருசிக்க அல்லது ருசிப்பதற்கான ஆசையை வளர்க்க நாம் முயலுவது மிக மிக அவசியம்.b (1 பேதுரு 2:3) ஆன்மீக ரீதியில் முதிர்ச்சியடைய திட உணவிலிருந்து ஊட்டச்சத்தைப் பெறுவது அவசியம், அதாவது கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆழமான சத்தியங்களைக் கற்றுக்கொள்வது அவசியம். இல்லாவிட்டால், நம்முடைய பகுத்தறியும் ஆற்றல்கள் குறைவாகவே இருக்கும். என்றாலும் நம் முதிர்ச்சியைக் காட்டுவதற்கு, பகுத்தறியும் ஆற்றல்கள் இருந்தால் மட்டுமே போதாது. தனிப்பட்ட விதத்தில் ஊக்கமாகப் படித்து கற்றுக்கொண்டவற்றை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தவும் வேண்டும்.
16, 17. ‘திருவசனத்தின்படி செய்கிறவர்களாய்’ இருப்பதற்கு சீஷனாகிய யாக்கோபு என்ன அறிவுரை கூறுகிறார்?
16 நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கான அத்தாட்சி, சத்தியத்திடம் நாம் வெளிப்படையாகக் காட்டும் போற்றுதலிலும்கூட, அதாவது விசுவாசத்தோடு நாம் செய்கிற காரியங்களிலும்கூட காணப்படுகிறது. இந்த விஷயத்தில் நம்மை நாமே மதிப்பிடுவது எப்படியென்பதை சீஷனாகிய யாக்கோபு மனதில் பதிய வைக்கும் ஓர் உதாரணத்தின் மூலம் விவரிக்கிறார்: “நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். சுயாதீனப் பிரமாணமாகிய பூரணப் பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.”—யாக்கோபு 1:22-25.
17 ‘கடவுளுடைய வார்த்தை எனும் கண்ணாடியில் உற்றுப் பார்த்து உங்களை மதிப்பிடுங்கள். இப்படித் தவறாமல் செய்வதோடு, கடவுளுடைய வார்த்தையில் பார்த்தவற்றின் அடிப்படையில் உங்களையே ஆராயுங்கள். அடுத்து, பார்த்தவற்றை உடனடியாக மறந்துவிடாதீர்கள். தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்’ என்றே யாக்கோபு கூறுகிறார். இந்த அறிவுரையைப் பின்பற்றுவது சில சமயங்களில் கடினமாகத் தோன்றலாம்.
18. யாக்கோபு கூறிய அறிவுரையைப் பின்பற்றுவது ஏன் கடினமாகத் தோன்றலாம்?
18 உதாரணத்திற்கு, ராஜ்ய பிரசங்க வேலையில் ஈடுபடுவதன் அவசியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். “நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்” என பவுல் எழுதினார். (ரோமர் 10:10) இரட்சிப்புண்டாக நம்முடைய வாயினாலே அறிக்கை பண்ணுவதற்கு அநேக சரிப்படுத்துதல்களைச் செய்ய வேண்டியுள்ளது. பிரசங்க வேலை செய்வதற்கான ஆசை எல்லாருக்கும் இயல்பாகவே வந்துவிடுவதில்லை. பிரசங்க வேலையை வைராக்கியமாய் செய்வதற்கும் வாழ்க்கையில் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும் ரொம்பவே மாற்றங்களையும் தியாகங்களையும் செய்ய வேண்டியுள்ளது. (மத்தேயு 6:33) ஆனால், கடவுள் தந்துள்ள இந்த வேலையை நாம் செய்ய ஆரம்பித்துவிட்ட பிறகு நாம் சந்தோஷமுள்ளவர்களாக ஆகிறோம்; அதற்குக் காரணம், இந்த வேலை யெகோவாவுக்குத் துதி சேர்க்கிறது. அப்படியானால், நாம் வைராக்கியத்தோடு ராஜ்யத்தை அறிவிக்கிறோமா?
19. நம் விசுவாசத்தை வெளிக்காட்டும் செயல்களில் என்னவெல்லாம் உட்பட்டிருக்க வேண்டும்?
19 நம் விசுவாசத்தை வெளிக்காட்டும் செயல்களில் என்னவெல்லாம் உட்பட்டிருக்க வேண்டும்? பவுல் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகள் எவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.’ (பிலிப்பியர் 4:9) நாம் கற்றதும், அடைந்ததும், கேட்டதும், கண்டதுமான காரியங்களைச் செய்வதன் மூலம், அதாவது முழுக்காட்டப்பட்ட கிறிஸ்தவராக இருப்பதில் உட்பட்டுள்ள அனைத்தையும் செய்வதன் மூலம், நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு அத்தாட்சி அளிக்கிறோம். “வழி இதுவே, இதிலே நடவுங்கள்” என ஏசாயா தீர்க்கதரிசி வாயிலாக யெகோவா போதிக்கிறார்.—ஏசாயா 30:21.
20. எப்படிப்பட்டவர்கள் சபைக்குப் பெரும் ஆசீர்வாதமாகத் திகழ்கிறார்கள்?
20 கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாய்ப் படிக்கிறவர்களும், நற்செய்தியை வைராக்கியமாய் பிரசங்கிக்கிறவர்களும், மாசுமருவின்றி உத்தமமாய் நடக்கிறவர்களும், கடவுளுடைய ராஜ்யத்திற்கு உண்மையாய் ஆதரவு அளிக்கிறவர்களுமான ஆண்களும் பெண்களும் சபைக்குப் பெரும் ஆசீர்வாதமாகத் திகழ்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சபையின் உறுதிக்கு உறுதி கூட்டுகிறார்கள். முக்கியமாக, சபைக்கு வரும் அநேக புதியவர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பிருப்பதால், அவர்கள் பெரிதும் உதவி புரிபவர்களாய் திகழ்கிறார்கள். “நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்று உங்களை நீங்களே சோதித்தறியுங்கள். எப்படிப்பட்டவர்களென நிரூபித்துக் கொள்ளுங்கள்” என்ற பவுலின் அறிவுரையை மனதில் வைக்கும்போது நீங்களும் மற்றவர்கள்மீது நல்ல செல்வாக்கு செலுத்த முடியும்.
கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் சந்தோஷம் காணுங்கள்
21, 22. கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் நாம் எப்படிச் சந்தோஷம் காணலாம்?
21 “என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது” என பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீது பாடினார். (சங்கீதம் 40:8) கடவுளுடைய சித்தத்தைச் செய்வது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது. ஏன்? ஏனென்றால், யெகோவாவின் பிரமாணம் தாவீதின் இருதயத்தில் இருந்தது. அதனால், எந்த வழியில் செல்ல வேண்டும் என்ற சந்தேகம் அவருக்கு இருக்கவில்லை.
22 கடவுளுடைய பிரமாணம் நம் உள்ளத்திற்குள் இருந்தால், எந்த வழியில் செல்வதென்று தெரியாமல் நாம் குழம்பிவிட மாட்டோம். மாறாக, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் சந்தோஷம் காண்போம். அப்படியானால், இருதயப்பூர்வமாக யெகோவாவுக்குச் சேவை செய்ய ‘கடினமாய் முயற்சி செய்வோமாக.’—லூக்கா 13:24, NW.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b எப்படிப் படிப்பது என்பதன் பேரில் பயனுள்ள ஆலோசனைகளுக்காக, யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்துள்ள தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 27-32-ஐக் காண்க.
நினைவிருக்கிறதா?
• நாம் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறோமா என்பதை எப்படிச் சோதித்தறியலாம்?
• நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை நிரூபித்துக் கொள்வதில் என்னவெல்லாம் உட்பட்டுள்ளன?
• கிறிஸ்தவ முதிர்ச்சிக்கு நாம் என்ன அத்தாட்சி அளிக்கலாம்?
• நம்முடைய விசுவாசத்தை வெளிக்காட்டும் செயல்கள், நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை மதிப்பிட எவ்வாறு உதவுகின்றன?
[பக்கம் 23-ன் படம்]
நீங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்களா என்பதைச் சோதித்தறிவதற்கான மிக முக்கிய வழி எது தெரியுமா?
[பக்கம்ம்] -ன் பட24
பகுத்தறியும் ஆற்றல்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் நம் கிறிஸ்தவ முதிர்ச்சிக்கு அத்தாட்சி அளிக்கிறோம்
[பக்கம் 25-ன் படங்கள்]
‘கேட்கிறதை மறக்கிறவர்களாயிராமல், திருவசனத்தின்படி செய்கிறவர்களாய்’ இருப்பதன் மூலம் நாம் எப்படிப்பட்டவர்களென நிரூபித்துக் கொள்கிறோம்