யெகோவா ‘விடுவிக்கிறவர்’ —நம் காலத்தில்
“கர்த்தர் [“யெகோவா,” NW] அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்.”—சங். 37:40.
1, 2. யெகோவாவைப் பற்றிய என்ன மறுக்க முடியாத உண்மை, ஆறுதல் தந்து நம்மைப் பலப்படுத்துகிறது?
சூரியனால் ஏற்படும் நிழல்கள் நிலையாக இருப்பதில்லை. பூமி சுற்றச் சுற்ற, அவை மாறிக்கொண்டே இருக்கின்றன. ஆனால், பூமியையும் சூரியனையும் படைத்தவர் மாறாதவர். (மல். 3:6) ‘அவர் நிழலைப் போல் மாறிக்கொண்டே இருப்பவர் அல்ல’ என பைபிள் சொல்கிறது. (யாக். 1:17, NW) யெகோவாவைப் பற்றிய இந்த மறுக்க முடியாத உண்மை, ஆறுதல் தந்து நம்மைப் பலப்படுத்துகிறது; முக்கியமாக, கஷ்டமான சோதனைகளையும் சவால்களையும் நாம் எதிர்ப்படும்போது நமக்கு அவ்வாறு இருக்கிறது. ஏன் அப்படிச் சொல்கிறோம்?
2 முந்தின கட்டுரையில் நாம் பார்த்த விதமாகவே, பைபிள் காலங்களில் யெகோவா ‘விடுவிக்கிறவராய்’ இருந்தார். (சங். 70:5) அவர் மாறாதவர், கொடுத்த வாக்குத் தவறாதவர். ஆகவே, நம் நாளிலும் அவர் ‘தங்களுக்கு உதவிசெய்து, தங்களை விடுவிப்பார்’ என்று அவரை வணங்குவோர் முழுமையாக நம்புவதற்குத் தகுந்த காரணங்கள் இருக்கின்றன. (சங். 37:40) நம் காலத்தில் தம் ஊழியர்களை யெகோவா எப்படி விடுவித்திருக்கிறார்? தனிப்பட்ட வகையில் நம்மை எப்படி விடுவிக்கிறார்?
எதிரிகளிடமிருந்து விடுவிக்கிறார்
3. நற்செய்தியைப் பிரசங்கிக்க விடாமல் யெகோவாவின் சாட்சிகளைத் தடுக்க எதிரிகளால் முடியாது என நாம் ஏன் உறுதியாய் இருக்கலாம்?
3 எதிரிகள் எவ்வளவுதான் முயன்றாலும், யெகோவாவுக்கு மட்டுமே உரிய வணக்கத்தை அவருக்குச் செலுத்த விடாமல் யெகோவாவின் சாட்சிகளைத் தடுக்க முடியாது. “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்” என்று கடவுளுடைய வார்த்தை உறுதியளிக்கிறது. (ஏசா. 54:17) யெகோவாவின் சாட்சிகள் செய்து வருகிற பிரசங்க வேலையைத் தடுக்க விரோதிகள் எவ்வளவோ முயன்றும் தோல்வியையே கண்டிருக்கிறார்கள். இதற்கு இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள்.
4, 5. யெகோவாவின் சாட்சிகளுக்கு 1918-ல் எப்படிப்பட்ட எதிர்ப்பு வந்தது, அதன் விளைவு என்ன?
4 யெகோவாவின் சாட்சிகள் செய்துவந்த பிரசங்க வேலையை முற்றிலுமாய்த் தடுத்து நிறுத்த முயன்ற மத குருமார் 1918-ல் அரசாங்கத்தைத் தூண்டிவிட்டனர். அதன் விளைவாக, யெகோவாவின் சாட்சிகள் கடும் துன்புறுத்தலைச் சந்தித்தனர். அப்போது உலகளாவிய பிரசங்க வேலையை மேற்பார்வை செய்துவந்த ஜே. எஃப். ரதர்ஃபர்டையும், தலைமை அலுவலகத்திலிருந்த இன்னும் சிலரையும் கைதுசெய்யும்படி அமெரிக்கக் கூட்டரசு மே 7-ல் ஆணை பிறப்பித்தது. இரண்டு மாதங்களுக்குள், அவர்கள் சதிகாரர்களென்று அநியாயமாகக் குற்றஞ்சாட்டப்பட்டுப் பல வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டனர். நீதித்துறையைத் தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு பிரசங்க வேலையை முற்றிலுமாய் முடக்கிவிட எதிரிகளால் முடிந்ததா? இல்லவே இல்லை!
5 “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்” என்று யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதியை நினைவுபடுத்திப் பாருங்கள். திடீரென்று சூழ்நிலை தலைகீழாக மாறியது; சிறைக்குள் தள்ளப்பட்டிருந்த சகோதரர் ரதர்ஃபர்டும் அவரோடிருந்தவர்களும் ஒன்பது மாதங்களுக்குப் பின், அதாவது 1919, மார்ச் 26 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். அதற்கடுத்த வருடம் மே 5-ஆம் தேதி அவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தை அந்தச் சகோதரர்கள் எப்படிப் பயன்படுத்தினர்? ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலையில் மும்முரமாக முன்னேற்றம் செய்வதற்குப் பயன்படுத்தினர். அதன் பலனாக, ராஜ்ய பிரசங்க வேலையில் கிடுகிடுவென அதிகரிப்பு ஏற்பட்டது! இதற்கான புகழ் யாவும் ‘விடுவிக்கிறவரான’ யெகோவா தேவனையே சேரும்.—1 கொ. 3:7.
6, 7. (அ) ஜெர்மனியில் நாசி ஆட்சியின்போது யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக என்ன திட்டம் போடப்பட்டது, ஆனால் என்ன நடந்தது? (ஆ) யெகோவாவின் சாட்சிகளுடைய இன்றைய சரித்திரம் காட்டுவது என்ன?
6 இரண்டாவது உதாரணத்தை இப்போது கவனியுங்கள். 1934-ல், ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைப் பூண்டோடு அழிக்கப்போவதாக ஹிட்லர் சபதம் செய்தார். அது வெறும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. அதைத் தொடர்ந்து, எங்கு பார்த்தாலும் கைதுசெய்வதும் சிறைக்குள் தள்ளுவதுமாகவே இருந்தது. ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் இதற்கு ஆளாயினர்; அவர்களில் நூற்றுக்கணக்கானோர் சித்திரவதை முகாம்களில் பலியாயினர். யெகோவாவின் சாட்சிகளை ஒழித்துக்கட்ட ஹிட்லர் போட்ட திட்டம் வெற்றிகண்டதா? ஜெர்மனியில் பிரசங்க வேலையை முற்றிலும் தடுத்து நிறுத்த அவரால் முடிந்ததா? இல்லவே இல்லை! துன்புறுத்தல் சமயத்தில் நம் சகோதரர்கள் பிரசங்க வேலையை இரகசியமாகச் செய்துவந்தனர். நாசி ஆட்சி கவிழ்ந்த பின்னர், தங்களுக்குக் கிடைத்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவர்கள் பிரசங்க வேலையைத் தொடர்ந்தனர். இன்று ஜெர்மனியில் 1,65,000-க்கும் மேற்பட்ட பிரஸ்தாபிகள் இருக்கின்றனர். இந்தச் சந்தர்ப்பத்திலும், ‘விடுவிக்கிறவரான’ யெகோவா, “உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்” என்று ஏற்கெனவே கொடுத்திருந்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார்.
7 யெகோவாவின் சாட்சிகளுடைய இன்றைய சரித்திரத்தைப் புரட்டிப்பார்க்கையில், ஒரு தொகுதியாகத் தம் மக்களை எதிரிகள் அழித்துவிட யெகோவா அனுமதிக்க மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. (சங். 116:15) என்றாலும், தனிப்பட்டவர்களைப் பற்றியென்ன? தனிப்பட்ட விதத்தில் நம் ஒவ்வொருவரையும் யெகோவா எப்படி விடுவிக்கிறார்?
உடல் ரீதியில் பாதுகாப்பு அளிப்பாரா?
8, 9. (அ) உடல் ரீதியில் ஆபத்து வராமல் யெகோவா நம்மைப் பாதுகாப்பாரென்று நாம் ஏன் எதிர்பார்க்க முடியாது? (ஆ) நியாயமாகவே நாம் எதை ஒப்புக்கொள்ள வேண்டும்?
8 உடல் ரீதியில் நமக்கு வரும் ஆபத்திலிருந்து நம்மைத் தனிப்பட்ட விதத்தில் யெகோவா பாதுகாப்பாரென்று நாம் எதிர்பார்க்க முடியாது. இவ்விஷயத்தில், நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின பொற்சிலையை வணங்க மறுத்த மூன்று உத்தம எபிரெய வாலிபர்களின் மனோபாவமே நமக்கும் இருக்கிறது. கடவுள் பயமுள்ள அந்த மூன்று பேரும், உடல் ரீதியில் தங்களுக்கு ஆபத்து ஏற்படாமல் யெகோவா அற்புதமாய்க் காப்பாற்றுவார் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. (தானியேல் 3:17, 18-ஐ வாசியுங்கள்.) ஆனாலும், எரிகிற அக்கினிச்சூளையிலிருந்து யெகோவா அவர்களைக் காப்பாற்றினார். (தானி. 3:21–27) என்றாலும், பைபிள் காலங்களில்கூட அப்படிப்பட்ட அற்புத சம்பவங்கள் அரிதாகவே நிகழ்ந்தன. சொல்லப்போனால், யெகோவாவின் உண்மை ஊழியர்களில் அநேகர் எதிரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.—எபி. 11:35–37.
9 நம் காலத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? ‘விடுவிக்கிறவரான’ யெகோவா தேவனால் ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து நிச்சயமாய் நம்மைக் காப்பாற்ற முடியும். குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் யெகோவா தலையிட்டதாகவோ தலையிடாததாகவோ நம்மால் திட்டவட்டமாகச் சொல்ல முடியுமா? சொல்ல முடியாது. என்றாலும், ஓர் ஆபத்தான சூழ்நிலையிலிருந்து தப்பியவர், யெகோவா தன் விஷயத்தில் தலையிட்டுத் தன்னைக் காப்பாற்றியதாக நினைக்கலாம். அப்படியெல்லாம் இருக்காது எனச் சொல்ல மற்றவர்களுக்கு எந்த அதிகாரமுமில்லை. அதே சமயத்தில், துன்புறுத்தலின்போது உண்மைக் கிறிஸ்தவர்கள் அநேகர் செத்து மடிந்திருக்கின்றனர் என்பதையும் நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்; உதாரணத்திற்கு நாசி ஆட்சியில் அநேகர் அவ்வாறு மடிந்திருக்கின்றனர். இன்னும் சிலர் அவலமான சூழ்நிலைகளில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனர். (பிர. 9:11) அப்படியானால், “அகால மரணம் அடைந்த உண்மை ஊழியர்களை யெகோவா ‘விடுவிக்காமல்’ போய்விட்டாரா?” என்ற கேள்வி எழலாம். அப்படி இருக்கவே முடியாது.
10, 11. மனிதனால் மரணத்தை ஏன் வெல்ல முடியாது, ஆனால், யெகோவா என்ன செய்வார்?
10 இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்: மனிதனால் மரணத்தை வெல்ல முடியாது. ஏனென்றால், எந்த மனிதனாலும் ‘தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு, [அதாவது, மனிதனின் பொதுக் கல்லறைக்கு] விலக்கிவிட’ முடியாது. (சங். 89:48) என்றாலும், யெகோவா தேவனால் அதை வெல்ல முடியுமா? நாசிக் கொடுமை தலைவிரித்தாடிய காலத்தைத் தப்பிப்பிழைத்த ஒரு சகோதரி, சித்திரவதை முகாமில் உயிரிழந்த அன்பர்களை நினைத்து மனம் வருந்தினார்; அவரை ஆறுதல்படுத்த அவருடைய அம்மா இப்படித்தான் சொன்னாராம்: “மனிதனை மரணம் சதா தன் பிடியில் வைத்துக்கொள்ளுகிறது என்றால், அது கடவுளைவிட சக்தியுள்ளது என்று ஆகிவிடுமே!” ஆம், உயிரின் ஊற்றாகத் திகழும் சர்வ சக்தி படைத்தவருக்கு முன் இந்த மரணம் ஒன்றுமே இல்லை! (சங். 36:9) பொதுக் கல்லறையிலுள்ள அனைவரையும் யெகோவா நினைவில் வைத்திருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரையும் அவர் விடுவிப்பார்.—லூக். 20:37, 38; வெளி. 20:11–14.
11 அதே சமயத்தில், இன்று தம் உண்மை வணக்கத்தாரின் வாழ்வில் யெகோவா நேரடியாகத் தலையிடுகிறார். அவர் நம்மை எந்த மூன்று வழிகளில் நிச்சயமாகவே ‘விடுவிப்பார்’ என்பதை இப்போது சிந்திக்கலாம்.
ஆன்மீகப் பாதுகாப்பு அளிக்கிறார்
12, 13. ஆன்மீகப் பாதுகாப்பு நமக்கு ஏன் மிகவும் அவசியம், அந்தப் பாதுகாப்பை யெகோவா எப்படி அளிக்கிறார்?
12 யெகோவா நமக்கு ஆன்மீகப் பாதுகாப்பை அளிக்கிறார்; அதாவது அவரோடு நாம் வைத்திருக்கும் உறவைப் பாதுகாக்கிறார். இந்தப் பாதுகாப்பு நமக்கு மிகவும் முக்கியமானது. தற்போதைய வாழ்வைவிட இந்தப் பந்தமே மதிப்பு வாய்ந்த ஒன்று என்பதை உண்மைக் கிறிஸ்தவர்களான நாம் அறிந்திருக்கிறோம்; அதை அரும்பெரும் சொத்தாகக் கருதுகிறோம். (சங். 25:14, NW; 63:3) இந்தப் பந்தம் மட்டும் இல்லையென்றால், நம் தற்போதைய வாழ்வு அர்த்தமற்றதாகவும் எதிர்கால வாழ்வு இருண்டதாகவும் இருக்கும்.
13 தம்மோடு நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்வதற்குத் தேவையான அனைத்தையும் யெகோவா நமக்கு அளித்திருப்பது சந்தோஷத்திற்குரிய விஷயம். அவருடைய வார்த்தை, அவருடைய சக்தி, உலகளாவிய சபை ஆகியவற்றை நமக்கு அளித்திருக்கிறார். இவற்றை நாம் எப்படி நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம்? அவருடைய வார்த்தையைத் தவறாமல் கருத்தூன்றிப் படிக்க வேண்டும்; அப்படிச் செய்தால் நம் விசுவாசம் பலப்படும், நம் நம்பிக்கையும் பிரகாசமாகும். (ரோ. 15:4) கடவுளுடைய சக்திக்காக உள்ளப்பூர்வமாய் ஜெபம் செய்ய வேண்டும்; அப்படிச் செய்தால், கடவுளோடுள்ள நம் உறவைக் கெடுக்கும் சபலங்களைத் தவிர்ப்பதற்குப் பலம் பெறுவோம். (லூக். 11:13) பைபிள் பிரசுரங்கள், கூட்டங்கள், மாநாடுகள் ஆகியவற்றின் வாயிலாக அடிமை வகுப்பார் அளிக்கும் அறிவுரைகளின்படி நடக்க வேண்டும்; அப்படிச் செய்தால், ‘ஏற்ற வேளையில்’ அவர்கள் அளிக்கும் ஆன்மீக ‘உணவை’ உட்கொண்டு அதிலிருந்து ஊட்டம் பெறுவோம். (மத். 24:45, NW) இவை யாவும் நமக்கு ஆன்மீகப் பாதுகாப்பு அளிப்பதோடு, கடவுளிடம் நமக்குள்ள உறவு விட்டுப்போகாமல் இருக்க உதவுகின்றன.—யாக். 4:8.
14. ஆன்மீகப் பாதுகாப்பை யெகோவா அளிக்கிறார் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
14 ஆன்மீகப் பாதுகாப்பை யெகோவா எப்படி அளிக்கிறார் என்பதற்கு உதாரணமாக முந்தின கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட பெற்றோரை எடுத்துக்கொள்ளலாம். அவர்களுடைய மகள் தெரசா காணாமல்போன சில நாட்களுக்குப் பிறகு, அவளை யாரோ கொலை செய்திருந்ததை அவர்கள் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தார்கள்.a அந்தத் தகப்பன் சொன்னதாவது: ‘அவளுக்கு எந்த விபரீதமும் ஏற்பட்டுவிடாமல் அவளைக் காப்பாற்றும்படி நான் ஏற்கெனவே ஜெபம் செய்திருந்தேன். அவள் கொலை செய்யப்பட்ட விஷயம் தெரிந்ததும், யெகோவா என் ஜெபத்தை ஏன் கேட்கவில்லை என்றுதான் முதலில் யோசித்தேன். ஆனால், யெகோவா தம் மக்கள் ஒவ்வொருவரையும் அற்புதமாகக் காப்பாற்றும்படி எதிர்பார்க்க முடியாதென்றும் எனக்குத் தெரியும். அதனால், எனக்கு ஒன்றும் புரியவில்லையே என்று சொல்லித் தொடர்ந்து ஜெபித்தேன். யெகோவா தம் மக்களை ஆன்மீக ரீதியில் பாதுகாக்கிறார் என்பது எனக்கு ஆறுதல் தருகிறது; அதாவது, அவரோடு நாம் வைத்திருக்கும் உறவைப் பாதுகாப்பதற்கு உதவுகிறார் என்பது எனக்கு ஆறுதல் தருகிறது. அப்படிப்பட்ட பாதுகாப்புதான் மிகவும் முக்கியமானது; அதன் மூலமே நாம் நித்திய வாழ்க்கையைப் பெற முடியும். அப்படிப் பார்த்தால், தெரசாவை யெகோவா பாதுகாக்கவே செய்திருக்கிறார்; அவள் சாகும் சமயத்தில்கூட யெகோவாவுக்கு உண்மையுள்ளவளாய் இருந்தாளே! அவளுடைய எதிர்காலம் அவருடைய அன்புக் கரங்களில் இருப்பதை நினைக்கும்போது எனக்கு நிம்மதியாக இருக்கிறது.’
வியாதியின்போது பக்கபலமாய் இருக்கிறார்
15. வியாதியாய்க் கிடக்கும்போது என்னென்ன வழிகளில் யெகோவா நமக்கு உதவலாம்?
15 ‘படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கையில்,’ தாவீதுக்கு யெகோவா பக்கபலமாய் இருந்ததுபோல நமக்கும் பக்கபலமாய் இருப்பார். (சங். 41:3) நம் காலத்தில் யெகோவா அற்புதமாய் குணமளிக்காவிட்டாலும், அவர் நமக்கு உதவுகிறார். எப்படி? சிகிச்சை மற்றும் பிற விஷயங்கள் சம்பந்தமாக ஞானமாய்த் தீர்மானம் எடுக்க பைபிள் நியமங்கள் நமக்கு உதவலாம். (நீதி. 2:6) நமக்கு வந்துள்ள நோய் பற்றி காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் வெளிவந்துள்ள கட்டுரைகளிலிருந்து நடைமுறையான ஆலோசனைகளையும் பயனுள்ள தகவல்களையும் பெறலாம். என்ன ஆனாலும் சரி, நம் சூழ்நிலையைச் சமாளிக்கவும், உத்தமத்தில் நிலைத்திருக்கவும் யெகோவா தம்முடைய சக்தியின் மூலம் ‘இயல்புக்கு மிஞ்சிய பலத்தை’ நமக்குத் தரலாம். (2 கொ. 4:7, NW) அந்தப் பலத்தைப் பெறுகையில், ஆன்மீகக் காரியங்களை ஒதுக்கிவிடுமளவுக்கு அந்த வியாதியை நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டே இருக்க மாட்டோம்.
16. ஒரு சகோதரரால் தன் வியாதியை எப்படிச் சமாளிக்க முடிந்திருக்கிறது?
16 முதல் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட அந்த இளம் சகோதரரைப் பற்றிச் சற்று சிந்தித்துப் பாருங்கள். எமையோட்ராஃபிக் லேட்டரல் ஸ்க்லரோசிஸ், அல்லது ALS எனப்படும் நோய் அவருக்கு இருப்பதாக 1998-ல் கண்டறியப்பட்டது; அது படிப்படியாக அவரை முற்றிலுமாய் முடக்கிவிட்டது.b அந்த நோயை அவர் எப்படிச் சமாளித்து வருகிறார்? அவரே சொல்கிறார்: “சிலசமயம் அந்தளவு வேதனையும் விரக்தியும் அடைவதால் சாவுதான் எனக்கு விமோசனம் என நினைத்திருக்கிறேன். அப்படிக் கவலையில் ஆழ்ந்துவிடும்போது, மன அமைதியையும் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் தருமாறு யெகோவாவிடம் ஜெபிக்கிறேன். அந்த ஜெபங்களுக்கு யெகோவா பதிலளித்திருப்பதாகவே உணருகிறேன். அவ்வாறு மன அமைதி பெறும்போது, புதிய உலகைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்; அப்போது என்னால் நடக்க முடியும், சுவையான உணவை ருசிக்க முடியும், என் குடும்பத்தாரோடு பேசி மகிழ முடியும் என்பதையெல்லாம் நினைத்து ஆறுதல் அடைகிறேன். முடக்குவாதத்தினால் நான் அனுபவிக்கும் அசௌகரியங்களையும் சந்திக்கும் சவால்களையும் சமாளிக்கப் பொறுமை எனக்கு உதவுகிறது. என் விசுவாசத்தையும் யெகோவாவோடு உள்ள உறவையும் விட்டுவிடாமல் இருப்பதற்குச் சகிப்புத்தன்மை எனக்குக் கைகொடுக்கிறது. நான் படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கையில் யெகோவா எனக்குப் பக்கபலமாய் இருந்திருப்பதை நினைத்தால், தாவீதுக்கு யெகோவா எப்படி உதவியிருப்பார் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.”—ஏசா. 35:5, 6.
பொருள் தந்து பராமரிக்கிறார்
17. நமக்கு என்ன செய்வதாக யெகோவா வாக்குறுதி அளித்திருக்கிறார், அதன் அர்த்தம் என்ன?
17 பொருள் சம்பந்தமாய் நம்மைக் காப்பாற்றுவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார். (மத்தேயு 6:33, 34 மற்றும் எபிரெயர் 13:5, 6-ஐ வாசியுங்கள்.) இது, நமக்குத் தேவையான எல்லாம் அற்புதமாய்க் கிடைத்துவிடும் என்பதையோ வேலைசெய்யாமல் இருப்பதையோ அர்த்தப்படுத்துவதில்லை. (2 தெ. 3:10) மாறாக, நம் வாழ்க்கையில் கடவுளுடைய ராஜ்யத்தை முதலாவது தேடுவதோடு, வயிற்றுப்பாட்டுக்கு உழைக்க மனமுள்ளவர்களாய் இருந்தால், அத்தியாவசியமானவற்றைப் பெற யெகோவா உதவுவார் என்பதையே அர்த்தப்படுத்துகிறது. (1 தெ. 4:11, 12; 1 தீ. 5:8) நாம் நினைத்துக்கூடப் பார்க்காத விதங்களில் நமக்குத் தேவையானவற்றை அவரால் அளிக்க முடியும். ஒருவேளை சக வணக்கத்தார் மூலம் அவர் நமக்கு உதவலாம்; அது பொருளுதவியாக இருக்கலாம், அல்லது ஒரு வேலை வாய்ப்பாக இருக்கலாம்.
18. ஏற்ற சமயத்தில் நமக்குப் பொருளுதவி கிடைக்கும் என்பதற்கு ஓர் அனுபவத்தைக் கூறுங்கள்.
18 முந்தின கட்டுரையின் ஆரம்பத்தில், தனிமரமான தாயைப் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்ததைச் சற்று நினைவுபடுத்திப் பாருங்கள். சிறுமியாய் இருந்த மகளோடு அவர் வேறொரு இடத்திற்குக் குடிமாறினபோது வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டார். அவர் சொல்கிறார்: “நான் தினமும் காலையில் ஊழியத்திற்குப் போவேன், மதியத்திற்குமேல் வேலை தேடி அலைவேன். ஒருநாள் நான் பால் வாங்கக் கடைக்குச் சென்றிருந்தபோது அந்தக் கடையிலிருந்த காய்கறிகளையே ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன், ஆனால் அதை வாங்குவதற்குக் கையில் சல்லிக்காசு இல்லை. அன்றைக்கு மாதிரி நான் ஒருநாளும் வேதனைப்பட்டதே இல்லை. வீட்டிற்குத் திரும்பி வந்தபோதோ, பின்பக்கத் திண்ணை முழுக்க பைகள்; அவற்றில் விதவிதமான காய்கறிகள்! அவற்றை வைத்து மாதக்கணக்கில் சமையல் செய்து சாப்பிட முடிந்தது. யெகோவாவுக்கு நன்றி சொல்லி ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்.” காய்கறித் தோட்டம் போட்டிருந்த ஒரு சகோதரர்தான் அந்தப் பைகளை அங்கு வைத்துவிட்டுச் சென்றிருந்தார் என்பது அந்தச் சகோதரிக்குச் சீக்கிரத்திலேயே தெரியவந்தது. பிற்பாடு அவருக்கு நன்றி தெரிவித்து அந்தச் சகோதரி இவ்வாறு எழுதியிருந்தார்: “அன்றைக்கு, நான் உங்களுக்கு நன்றி சொன்னதோடு யெகோவா தேவனுக்கும் நன்றி சொன்னேன். ஏனென்றால், ‘நான் உன்மேல் அன்பு வைத்திருக்கிறேன்’ என்பதை உங்களுடைய தயவான செயலின் மூலம் யெகோவா எனக்கு உணர்த்தினார்.”—நீதி. 19:17.
19. மிகுந்த உபத்திரவத்தின்போது, யெகோவாவின் ஊழியர்கள் எதைக் குறித்து நம்பிக்கையோடு இருக்க முடியும், நாம் இப்போது என்ன செய்யத் தீர்மானமாய் இருக்க வேண்டும்?
19 பூர்வ காலத்திலும் சரி நம் காலத்திலும் சரி, யெகோவா செய்திருக்கிற காரியங்கள், அவர் நமக்கு உதவி செய்பவர் என நம்புவதற்குக் காரணத்தை அளிக்கின்றன. சீக்கிரத்தில் மிகுந்த உபத்திரவம் சாத்தானுடைய உலகத்தின்மீது வரும்போது, யெகோவா தேவனின் உதவி நமக்கு எப்போதையும்விட மிக அதிகமாகத் தேவைப்படும். அப்போதும் முழு நம்பிக்கையோடு நாம் அவரைச் சார்ந்திருக்க முடியும். மீட்பு சமீபம் என்பதை அறிந்து, நம் தலைகளை உயர்த்திப் பெருமிதம்கொள்ள முடியும். (லூக். 21:28) அதுவரையில், எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும், கடவுள்மீது நம்பிக்கை வைக்கத் தீர்மானமாய் இருப்போமாக. மாறாத நம் கடவுளாகிய யெகோவா, நிச்சயமாகவே நம்மை ‘விடுவிக்கிறவர்’ என்ற உறுதியோடு அப்படிச் செய்வோமாக.
[அடிக்குறிப்புகள்]
a ஆகஸ்ட் 8, 2001 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில், பக்கங்கள் 25-29-ல் உள்ள “தாளாத துயரத்தை தாங்குதல்” என்ற கட்டுரையைக் காண்க.
b ஜனவரி 2006 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில், பக்கங்கள் 25-29-ல் உள்ள “விசுவாசம் என்னைக் காத்துவருகிறது—ALS நோயுடன் வாழ்க்கை” என்ற கட்டுரையைக் காண்க.
நினைவுபடுத்திப் பார்ப்போமா?
• அகால மரணம் அடைந்தவர்களை யெகோவா தேவனால் எப்படி விடுவிக்க முடியும்?
• ஆன்மீகப் பாதுகாப்பு ஏன் மிகவும் முக்கியமானது?
• பொருள் தந்து பராமரிப்பதாக யெகோவா அளித்துள்ள வாக்குறுதியின் அர்த்தம் என்ன?
[பக்கம் 8-ன் படம்]
1918-ல் கைதுசெய்யப்பட்ட சகோதரர் ரதர்ஃபர்டும் அவரோடிருந்தவர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டார்கள், அவர்கள்மீது விதிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன
[பக்கம் 10-ன் படம்]
‘படுக்கையின்மேல் வியாதியாய்க் கிடக்கையில்,’ யெகோவா நமக்குப் பக்கபலமாய் இருப்பார்