காலங்கள் மாறிவிட்டன
1 “இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே,” என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (1 கொ. 7:31) அது இன்று எவ்வளவு உண்மையாக இருக்கிறது! நம் வாழ்நாள் காலத்தில்கூட, மனித சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் உள்ள மக்களின் சிந்தனையிலும் நடத்தையிலும் தீவிர மாற்றங்களை நாம் கண்டிருக்கிறோம். அவர்களை ராஜ்ய செய்தியுடன் அணுகுவதில் நாம் வெற்றியைக் காண வேண்டுமானால், மாறிவருகிற காலங்களுக்கு ஏற்ற வகையில் நம் அணுகுமுறை இருக்க வேண்டும். மக்களின் அக்கறைகளைத் தூண்டி, அவர்களுடைய இருதயங்களைச் சென்றெட்டும் விதத்தில் நாம் நற்செய்தியை அளிக்க வேண்டும்.
2 வருடங்களுக்கு முன்பு, அநேக நாடுகளில் சாட்சிபகரும் வேலை வித்தியாசமானதாக இருந்தது, ஏனென்றால், பெரும்பாலும் மக்கள் அதிக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து, பாதுகாப்பானவர்களாக உணர்ந்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் மதம் ஒரு பரிசுத்தமான இடத்தை வகித்தது. கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டாதவர்கள் மத்தியில்கூட பைபிள் உயர்வானதாக மதிக்கப்பட்டது. கோட்பாடு சார்ந்த விவாதங்களை மெய்ப்பித்துக் காட்டுவதே அந்தக் காலங்களில் சாட்சிகொடுத்தலில் பெரும்பாலும் உட்பட்டிருந்தது. இன்று மக்களின் வாழ்க்கை குழப்பத்தில் இருக்கிறது. மதம் பெரும்பாலும் கேலிக்குள்ளாக்கப்படுகிறது. ஒருசிலரே பைபிளில் விசுவாசம் வைத்திருக்கிறார்கள். அநேகர் நம் செய்தியை எதிர்க்கிறார்கள். சிலருக்கு, கடவுளிலிலிருந்த விசுவாசத்தை பரிணாமக் கொள்கை மொத்தமாக அழித்துவிட்டது.
3 பயணக் கண்காணி ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “தற்போது, மக்களின் வாழ்க்கையில் அத்தனை அநேக பிரச்சினைகளும் கஷ்டங்களும் இருப்பதால், எப்படி வாழ்வது என்று நாம் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று தோன்றுகிறது.” மக்களுடைய உடனடியான அக்கறைகள் இயல்பாகவே, தங்களையும், தங்கள் குடும்பங்களையும், தங்கள் கவலைகளையும் சுற்றியே அமைகின்றன. அவர்கள் ஒன்றுகூடி வருகையில், இந்தக் காரியங்களைப் பற்றியே பெரும்பாலும் பேசுகின்றனர். சாட்சிகொடுக்கும் வேலையில் நாம் அதை மனதில் வைத்திருக்க வேண்டும்.
4 எதிர்காலத்திற்கான ஒரே நிச்சயமான நம்பிக்கை கடவுளுடைய ராஜ்யமே: பெரும்பாலான மக்கள், மனித அரசாங்கத்தில் குறைந்தளவு நம்பிக்கையையே வைத்திருக்கின்றனர். தங்கள் வாழ்நாள் காலத்தில், ஒரு மேம்பட்ட உலகைக் காண்பதற்கு எவ்வித எதிர்நோக்கும் இல்லை என்றே அவர்கள் உணர்கின்றனர். நம்பிக்கை வைப்பதற்கான எவ்வித அடிப்படையை அளிப்பதற்கும் பொய் மதம் தவறியிருக்கிறது. அதன் காரணமாகவே, கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைக் கேட்பதே மனிதவர்க்கத்தின் மிகப் பெரிய தேவையாக இருக்கிறது. மனிதவர்க்கம் எதிர்ப்படுகிற எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவில் அது எவ்வாறு தீர்வுகளை அளிக்கும் என்று காண்பியுங்கள்.
5 நம்பகரமான ஒரே வழிகாட்டுமூலம் பைபிளே: மனித ஞானத்திலும் உலக தத்துவங்களிலும் சார்ந்திருக்கும் தலைவர்களால் இன்றைய மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கின்றனர். “தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்று” மக்கள் இன்னும் உணர வேண்டியுள்ளது. (எரே. 10:23) அவர்கள் கற்றுக்கொள்ளத்தக்க மிகவும் மதிப்புவாய்ந்த பாடம் என்னவென்றால், அவர்கள் ‘தங்கள் சுயபுத்தியின்மேல் சாராமல், தங்கள் முழு இருதயத்தோடும் யெகோவாவில் சார்ந்திருக்க வேண்டும்’ என்பதாகும். (நீதி. 3:5, NW) காலங்கள் மாறியிருக்கிறபோதிலும், பைபிள் மாறவில்லை. எனவே, நம் ஊழியத்தில், முடிந்தவரை கடவுளுடைய வார்த்தையை எடுத்துக் காண்பித்து, கடவுளால் ஏவப்பட்ட, அதன் தெய்வீக வழிநடத்துதலைப் போற்றுவதற்கு நாம் மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். (2 தீ. 3:16, 17) அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, சாதுரியமான முறையில் என்றாலும், பைபிளின் முக்கியத்துவத்தை மக்களின் முன்வைத்து, அதை நம் பிரசங்கங்களில் மேற்கோள் காட்டி, கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு அதைப் பயன்படுத்தி, அதைப் படித்து அதன் நடைமுறை ஞானத்தை பொருத்திப் பிரயோகிப்பதற்கான தேவையை நாம் எடுத்துக்கூற வேண்டும்.
6 மாறிவருகிற இன்றைய காலங்களில்கூட, நம் ஊழியத்தின் குறியிலக்குகள் மாறாதவையாகவே இருக்கின்றன. நாம் ராஜ்ய நற்செய்தியைப் பிரசங்கித்து, கடவுளுடைய வார்த்தையில் நம்பிக்கையை வளரச் செய்து, நம்முடன் பைபிளைப் படிப்பதற்கான தேவையை உணரும்படி மற்றவர்களுக்கு உதவ வேண்டியவர்களாக இருக்கிறோம். நாம் யாரிடம் சாட்சிகொடுக்கிறோமோ அவர்களிடம் என்ன சொல்லுகிறோம் என்பது அவர்களுடைய அப்போதைய தேவைகளுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன்மூலம், நாம் மற்றவர்களிடம் நற்செய்தியைப் பகிர்ந்து கொள்கிறவர்களாக இருந்து, இதனால் பெரும்பாலானவர்களை ஆதாயப்படுத்திக் கொள்வோம்.—1 கொ. 9:19, 23.