படிப்புக் கட்டுரை 5
“ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்”
“ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்.”—1 கொ. 11:3.
பாட்டு 112 யெகோவாவே தேவாதி தேவன்
இந்தக் கட்டுரையில்...a
1. எதன் அடிப்படையில் சில ஆண்கள் தங்களுடைய மனைவியையும் பிள்ளைகளையும் நடத்துகிறார்கள்?
தலைமை ஸ்தானத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? சில ஆண்கள், தங்களுடைய கலாச்சாரத்திலிருந்தும் குடும்பத்திலிருந்தும் கற்றுக்கொண்ட விஷயங்களின் அடிப்படையில் தங்கள் மனைவியையும் பிள்ளைகளையும் நடத்துகிறார்கள். ஐரோப்பாவில் வாழ்கிற யானிட்டா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நான் வாழ்ற இடத்துல, ஆண்களவிட பெண்கள் தாழ்வானவங்கனு மக்கள் நினைக்குறாங்க. பெண்கள வெறுமனே வேலைக்காரங்க மாதிரிதான் பார்க்குறாங்க. இந்த எண்ணம் அவங்களோட மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு.” அமெரிக்காவில் வாழ்கிற லூக் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “பெண்களோட கருத்தெல்லாம் அவ்வளவு முக்கியம் இல்லனும், அவங்க சொல்றதையெல்லாம் காதுல போட்டுக்க வேண்டியதில்லனும் சில அப்பாமார்கள் பசங்களுக்கு சொல்லிக்கொடுக்குறாங்க.” ஆனால், குடும்பத் தலைவர்கள் தங்களுடைய மனைவிகளை இப்படி நடத்த வேண்டுமென்று யெகோவா நினைக்கவில்லை. (மாற்கு 7:13-ஐ ஒப்பிடுங்கள்.) அப்படியென்றால், ஆண்கள் எப்படி நல்ல குடும்பத் தலைவர்களாக நடந்துகொள்ளலாம்?
2. குடும்பத் தலைவர்கள் எதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், ஏன்?
2 நல்ல குடும்பத் தலைவர்களாக இருப்பதற்கு, தங்களிடமிருந்து யெகோவா எதை எதிர்பார்க்கிறார் என்று முதலில் ஆண்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தலைமை ஸ்தானத்தை அவர் ஏன் ஏற்படுத்தினார் என்றும், இந்த விஷயத்தில் அவரையும் இயேசுவையும் போல் எப்படி நடந்துகொள்ளலாம் என்றும் தெரிந்துகொள்ள வேண்டும். இதைத் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்? ஏனென்றால், குடும்பத் தலைவர்களுக்கு ஓரளவு அதிகாரத்தை யெகோவா கொடுத்திருக்கிறார். அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்.—லூக். 12:48ஆ.
தலைமை ஸ்தானம் என்றால் என்ன?
3. தலைமை ஸ்தானத்தைப் பற்றி 1 கொரிந்தியர் 11:3-லிருந்து என்ன தெரிந்துகொள்கிறோம்?
3 ஒன்று கொரிந்தியர் 11:3-ஐ வாசியுங்கள். பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற தன்னுடைய குடும்பத்தை யெகோவா எப்படி ஒழுங்குபடுத்தியிருக்கிறார் என்பதை இந்த வசனம் காட்டுகிறது. இந்தப் பிரபஞ்சத்துக்கே யெகோவா தலைவராக இருப்பதால், அவருக்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது. தலைமை ஸ்தானம் என்ற ஏற்பாட்டின் மூலம் யெகோவா சிலருக்கு ஓரளவு அதிகாரத்தைக் கொடுக்கிறார். அந்த அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்கள், அதை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கு அவருக்குக் கணக்கு கொடுக்க வேண்டும். (ரோ. 14:10; எபே. 3:14, 15) சபையின் மீது இயேசுவுக்கு அவர் அதிகாரம் கொடுத்திருக்கிறார். நம் ஒவ்வொருவரையும் இயேசு எப்படி நடத்துகிறார் என்பதற்கு அவர் யெகோவாவுக்குக் கணக்கு கொடுக்க வேண்டும். (1 கொ. 15:27) மனைவி மக்களின் மீது கணவர்களுக்கு யெகோவா அதிகாரம் கொடுத்திருக்கிறார். குடும்பத்தை எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் அவர்கள் கணக்கு கொடுக்க வேண்டும்.—1 பே. 3:7.
4. யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் என்ன அதிகாரம் இருக்கிறது?
4 பரலோகத்திலும் பூமியிலும் இருக்கிற குடும்பங்களுக்கு யெகோவா தலைவராக இருப்பதால், தன்னுடைய பிள்ளைகளுக்குச் சட்டங்களைப் போடுவதற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அவருக்கு அதிகாரம் இருக்கிறது. (ஏசா. 33:22) சபைக்கு இயேசு கிறிஸ்து தலைவராக இருப்பதால், சட்டங்களைப் போடுவதற்கும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் அவருக்கு உரிமை இருக்கிறது.—கலா. 6:2; கொலோ. 1:18-20.
5. குடும்பத் தலைவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது, என்ன வரம்புகள் இருக்கின்றன?
5 யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் இருப்பதைப் போலவே, குடும்பத் தலைவர்களுக்கும் தங்கள் குடும்பத்துக்காக சில முடிவுகளை எடுக்கிற அதிகாரம் இருக்கிறது. (ரோ. 7:2; எபே. 6:4) ஆனால், அந்த அதிகாரத்துக்கு வரம்புகளும் இருக்கின்றன. உதாரணத்துக்கு, பைபிளின் அடிப்படையில்தான் அவர்கள் முடிவுகளை எடுக்க வேண்டும், சட்டங்களைப் போட வேண்டும். (நீதி. 3:5, 6) தங்களுடைய குடும்பத்தாராக இல்லாதவர்களுக்குச் சட்டம் போடுகிற அதிகாரம் அவர்களுக்கு இல்லை. (ரோ. 14:4) அதோடு, பிள்ளைகள் வளர்ந்து வீட்டைவிட்டு போய் தனியாக வாழ்ந்துவந்தால், தங்கள் அப்பாவுக்குத் தொடர்ந்து மரியாதை கொடுத்தாலும் அவருடைய தலைமை ஸ்தானத்தின் கீழ் வர மாட்டார்கள்.—மத். 19:5.
தலைமை ஸ்தானத்தை யெகோவா ஏன் ஏற்படுத்தினார்?
6. தலைமை ஸ்தானத்தை ஏற்பாடு செய்ததற்கு என்ன காரணம்?
6 தன்னுடைய குடும்பத்தின் மேல் அன்பு இருப்பதால்தான் தலைமை ஸ்தானம் என்ற ஏற்பாட்டை யெகோவா செய்திருக்கிறார். இது அவரிடமிருந்து கிடைத்த பரிசு! இந்தத் தெளிவான ஏற்பாடு மட்டும் இல்லையென்றால் யெகோவாவின் குடும்பத்தில் குழப்பம்தான் மிஞ்சும். சந்தோஷமும் இருக்காது. (1 கொ. 14:33, 40) உதாரணத்துக்கு, யார் முடிவுகளை எடுப்பார்கள்... யார் அவற்றை செயல்படுத்துவார்கள்... என்பதில் ஒரு தெளிவு இல்லாமல் போய்விடும்.
7. எபேசியர் 5:25, 28-ன்படி கணவர்கள் தங்கள் மனைவிகளை எப்படி நடத்த வேண்டுமென்று யெகோவா சொல்கிறார்?
7 தலைமை ஸ்தானம் என்பது இவ்வளவு அருமையான ஓர் ஏற்பாடாக இருந்தும், இன்று நிறைய பெண்கள் தங்கள் கணவர்களால் அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள். ஏன்? ஏனென்றால், அப்படிப்பட்ட கணவர்கள் யெகோவா சொல்வதுபோல் தங்கள் குடும்பத்தை நடத்தாமல் உள்ளூர் கலாச்சாரமும் பாரம்பரியமும் சொல்வது போல் நடத்துகிறார்கள். அதோடு, தங்களுடைய சுயநலத்துக்காக மனைவிகளைத் தவறாக நடத்துகிறார்கள். உதாரணத்துக்கு, தங்களைப் பெரிய ஆளாக காட்டிக்கொள்வதற்கு அல்லது ‘தான் ஒரு ஆம்பள’ என்பதை நிரூபிப்பதற்கு மனைவிகளை அடக்கி ஒடுக்குகிறார்கள். தன்னுடைய மனைவியை வற்புறுத்தி அன்பை சம்பாதிக்க முடியாது என்பதால், அவளைப் பயமுறுத்தி தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைக்க வேண்டும் என்று ஒரு கணவர் நினைக்கலாம்.b இப்படி யோசிக்கும்போதும் நடந்துகொள்ளும்போதும் பெண்களுக்குக் கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதையை ஓர் ஆண் கொடுக்காமல் போய்விடலாம். பெண்களை இப்படி நடத்த வேண்டுமென்று யெகோவா நினைக்கவே இல்லை.—எபேசியர் 5:25, 28-ஐ வாசியுங்கள்.
நல்ல குடும்பத் தலைவராக இருப்பது எப்படி?
8. நல்ல குடும்பத் தலைவர்களாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
8 அதிகாரத்தைப் பயன்படுத்துகிற விஷயத்தில் யெகோவாவைப் போலவும் இயேசுவைப் போலவும் நடந்துகொள்ளும்போது ஆண்கள் நல்ல குடும்பத் தலைவர்களாக இருக்க முடியும். யெகோவாவும் இயேசுவும் காட்டுகிற இரண்டு குணங்களை இப்போது பார்க்கலாம். அந்தக் குணங்களை குடும்பத் தலைவர்கள் எப்படிக் காட்டலாம் என்றும் பார்க்கலாம்.
9. யெகோவா எப்படி மனத்தாழ்மையைக் காட்டுகிறார்?
9 மனத்தாழ்மை. யெகோவாதான் எல்லாரையும்விட ஞானமுள்ளவர்! இருந்தாலும் தன்னுடைய ஊழியர்கள் சொல்வதை அவர் காதுகொடுத்து கேட்கிறார். (ஆதி. 18:23, 24, 32) தன்னுடைய அதிகாரத்தின் கீழ் இருப்பவர்கள் கருத்து சொல்வதற்கும் இடம்கொடுக்கிறார். (1 ரா. 22:19-22) யெகோவா பரிபூரணமானவராக இருந்தாலும், நம்மிடமிருந்து பரிபூரணத்தை எதிர்பார்ப்பதில்லை. நாம் நல்லபடியாக வாழ்வதற்கு அவர் உதவுகிறார். (சங். 113:6, 7) சொல்லப்போனால், அவர் நமக்குத் ‘துணையாக’ இருப்பதாக, அதாவது நம்முடைய உதவியாளராக இருப்பதாக, பைபிள் சொல்கிறது. (சங். 27:9; எபி. 13:6) யெகோவாவின் மனத்தாழ்மையால்தான் தன்னால் பெரிய பெரிய வேலைகளைச் செய்ய முடிந்தது என்று தாவீதும் ஒத்துக்கொண்டார்.—2 சா. 22:36.
10. இயேசு எப்படி மனத்தாழ்மையைக் காட்டினார்?
10 இப்போது இயேசுவைப் பற்றிப் பார்க்கலாம். தன்னுடைய சீஷர்களுக்கு அவர் எஜமானராக இருந்தபோதும் அவர்களுடைய பாதங்களைக் கழுவினார். இந்தச் சம்பவத்தை யெகோவா பதிவு செய்து வைத்ததற்கு ஒரு காரணம் என்ன? குடும்பத் தலைவர்கள் உட்பட, நாம் எல்லாரும் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்! “நான் உங்களுக்குச் செய்தது போலவே நீங்களும் செய்ய வேண்டும் என்பதற்காக உங்களுக்கு முன்மாதிரி வைத்தேன்” என்று இயேசு சொன்னார். (யோவா. 13:12-17) அவருக்கு நிறைய அதிகாரம் இருந்தபோதும் மற்றவர்கள் தனக்குச் சேவை செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்தான் மற்றவர்களுக்குச் சேவை செய்தார்.—மத். 20:28.
11. மனத்தாழ்மை காட்டுவதில் குடும்பத் தலைவர்கள் யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 பாடங்கள்: குடும்பத் தலைவர்கள் நிறைய வழிகளில் மனத்தாழ்மையைக் காட்டலாம். உதாரணத்துக்கு, தன்னுடைய மனைவியும் பிள்ளைகளும் தவறே செய்ய மாட்டார்கள் என்று அவர் எதிர்பார்க்கக் கூடாது. அவர்கள் சொல்கிற கருத்து தன்னுடைய கருத்தோடு ஒத்துப்போகவில்லை என்றாலும் அவர்கள் சொல்வதை அவர் கேட்பார். அமெரிக்காவில் இருக்கிற மார்லி இப்படிச் சொல்கிறார்: “சில சமயங்கள்ல எனக்கும் என் கணவருக்கும் சில விஷயங்கள் ஒத்துப் போகாது. ஆனா, ஒரு முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி அவர் என்னோட கருத்த கேட்பாரு. அத பத்தி நல்லா யோசிச்சுப் பார்ப்பாரு. இப்படி செய்றதுனால அவர் என்னை மதிக்கிறாருங்குறத என்னால புரிஞ்சிக்க முடியுது.” மனத்தாழ்மையுள்ள ஒரு கணவர் வீட்டு வேலைகளைச் சந்தோஷமாக செய்து கொடுப்பார். அப்படிச் செய்வது பெண்களின் வேலை என்ற கருத்து அவர் வாழ்கிற பகுதியில் இருந்தாலும் அவர் அப்படிச் செய்வார். ஆனால், இது எல்லா சமயத்திலும் சுலபம் கிடையாது. ஏன்? இதைப் பற்றி ரேச்சல் என்ன சொல்கிறார் என்று பாருங்கள். “எங்க ஊர்ல, ஆம்பிளைங்க பாத்திரத்த கழுவி கொடுத்தாவோ வீட்ட சுத்தம் செஞ்சாவோ அக்கம்பக்கத்துல இருக்கிறவங்களும் சொந்தக்காரங்களும் ‘இவர் ஒரு ஆம்பளயா?’னு கேட்பாங்க. மனைவிய அடக்கிவைக்க தெரியாதவன்னு சொல்லுவாங்க.” உங்கள் ஊரிலும் இதே நிலைமைதான் இருக்கிறதா? அப்படியென்றால், ஓர் அடிமை செய்ய வேண்டிய வேலையை இயேசு செய்தார் என்பதை, அதாவது சீஷர்களின் பாதங்களை அவர் கழுவினார் என்பதை, மறந்துவிடாதீர்கள். ஒரு நல்ல குடும்பத் தலைவர் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசிப்பதற்குப் பதிலாக, தன்னுடைய மனைவியையும் பிள்ளைகளையும் எப்படிச் சந்தோஷமாக வைத்துக்கொள்ளலாம் என்றுதான் யோசிப்பார். மனத்தாழ்மை மட்டுமல்ல இன்னொரு குணமும் குடும்பத் தலைவர்களுக்கு தேவை. அது என்ன?
12. அன்பு இருப்பதால் யெகோவாவும் இயேசுவும் என்ன செய்கிறார்கள்?
12 அன்பு. யெகோவா என்ன செய்தாலும் அதற்குப் பின்னால் இருப்பது அன்புதான்! (1 யோ. 4:7, 8) பைபிளையும் அமைப்பையும் கொடுத்து, அவரிடம் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு நமக்கு உதவுவதன் மூலம் அந்த அன்பை அவர் காட்டுகிறார். அவர் நம்மேல் வைத்திருக்கிற அன்பைப் புரிந்துகொள்வதற்கு உதவுவதன் மூலம் நம் மனதுக்குச் சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருகிறார். இப்படி, நம்முடைய உணர்ச்சிகளைக் கருத்தில் எடுத்துக்கொள்கிறார். நம்முடைய பொருளாதாரத் தேவைகளையும் கவனித்துக்கொள்கிறார். ‘நம்முடைய சந்தோஷத்துக்காக எல்லாவற்றையும் வாரி வழங்குகிறார்.’ (1 தீ. 6:17) நாம் தவறுகள் செய்யும்போது நம்மைத் திருத்துகிறார். அதற்காக, அன்பு காட்டுவதை அவர் நிறுத்திவிடுவதில்லை. அன்பு இருப்பதால்தான் நமக்காக மீட்புவிலையை ஏற்பாடு செய்தார். இயேசுவும் நம்மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார். அதனால்தான் நமக்காகத் தன்னுடைய உயிரையே கொடுத்தார். (யோவா. 3:16; 15:13) தங்களுக்கு உண்மையாக இருப்பவர்கள்மீது யெகோவாவும் இயேசுவும் காட்டுகிற அன்புக்கு வேறு யாராலும் வேறு எவற்றாலும் அணைபோட முடியாது.—யோவா. 13:1; ரோ. 8:35, 38, 39.
13. குடும்பத் தலைவர்கள் குடும்பத்தின் மீது அன்பு காட்டுவது ஏன் முக்கியம்? (“புதிதாகக் கல்யாணம் ஆனவர்கள் மனைவியின் மரியாதையை சம்பாதிப்பது எப்படி?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
13 பாடங்கள்: குடும்பத் தலைவர்கள் என்ன செய்தாலும் அதற்குப் பின்னால் இருப்பது அன்பாகத்தான் இருக்க வேண்டும்! இது ஏன் முக்கியம்? “தான் பார்க்கிற சகோதரன்மேல் [அல்லது, குடும்பத்தின் மேல்] அன்பு காட்டாதவன் தான் பார்க்காத கடவுள் மேல் அன்பு காட்ட முடியாது” என்று அப்போஸ்தலன் யோவான் சொன்னார். (1 யோ. 4:11, 20) ஒரு குடும்பத் தலைவர் தன்னுடைய குடும்பத்தை நேசித்தால், யெகோவாவையும் இயேசுவையும் போலவே நடந்துகொள்ள விரும்பினால், இதையெல்லாம் செய்வார்: (1) குடும்பத்தில் இருப்பவர்கள் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவுவார். (2) அவர்களுடைய உணர்ச்சிகளை கருத்தில் எடுத்துக்கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்வார். (3) அவர்களுடைய பொருளாதாரத் தேவைகளைக் கவனித்துக்கொள்வார். (1 தீ. 5:8) (4) தன்னுடைய பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுப்பார், அவர்களைக் கண்டித்துத் திருத்துவார். (5) யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கும் விதத்திலும் குடும்பத்துக்குப் பிரயோஜனமான விதத்திலும் முடிவுகளை எடுப்பதற்குத் தொடர்ந்து கற்றுக்கொள்வார். குடும்பத் தலைவர்கள் இந்த விஷயங்களை எப்படிச் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
குடும்பத் தலைவர்கள் என்ன செய்ய வேண்டும்?
14. குடும்பத்தில் இருப்பவர்கள் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள ஒரு குடும்பத் தலைவர் என்ன செய்யலாம்?
14 (1) குடும்பத்தில் இருப்பவர்கள் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவ வேண்டும். தன்னிடம் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள யெகோவா மற்றவர்களுக்கு உதவுகிறார். யெகோவாவைப் போலவே, இயேசுவும் தன்னுடைய சீஷர்கள் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள உதவினார். (மத். 5:3, 6; மாற். 6:34) அதேபோல், தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள குடும்பத் தலைவர்கள் உதவ வேண்டும். (உபா. 6:6-9) இதுதான் அவர்களுடைய முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்! இதற்காக என்ன செய்ய வேண்டும்? பைபிள் படிப்பது... கூட்டங்களில் கலந்துகொள்வது... ஊழியம் செய்வது... யெகோவாவோடு நெருங்கிய நட்பை வைத்துக்கொள்வது... என இவற்றையெல்லாம் குடும்பத் தலைவர்கள் செய்ய வேண்டும். குடும்பத்தில் இருக்கிறவர்களும் செய்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
15. குடும்பத்தில் இருப்பவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்து நடந்துகொள்வதை ஒரு குடும்பத் தலைவர் எப்படிக் காட்டலாம்?
15 (2) குடும்பத்தில் இருப்பவர்களின் உணர்ச்சிகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டும். இயேசுமேல் வைத்திருந்த அன்பை யெகோவா வெளிப்படையாகச் சொன்னார். (மத். 3:17) இயேசு, தன்னுடைய சொல்லாலும் செயலாலும் தன் சீஷர்கள்மேல் வைத்திருந்த அன்பை வெளிப்படையாகக் காட்டினார். (யோவா. 15:9, 12, 13; 21:16) சீஷர்களும் இயேசுமேல் வைத்திருந்த அன்பை வெளிப்படையாகக் காட்டினார்கள். அதேபோல், குடும்பத் தலைவர்களும் தங்களுடைய மனைவியின் மீதும் பிள்ளைகளின் மீதும் வைத்திருக்கிற அன்பை செயல்கள் மூலம் காட்டலாம். அதற்கு ஒரு வழி, அவர்களோடு சேர்ந்து தவறாமல் பைபிள் படிப்பது! ‘நான் உங்கமேல உயிரையே வெச்சிருக்குறேன். நீங்கதான் எனக்கு எல்லாமே’ என்று வாய்விட்டு சொல்வதன் மூலமும் தங்களுடைய அன்பைக் காட்டலாம். பொருத்தமான சமயங்களில், மற்றவர்களுக்கு முன்பாகவும் அவர்களைப் பாராட்டலாம்.—நீதி. 31:28, 29.
16. குடும்பத் தலைவர்கள் வேறு என்ன செய்ய வேண்டும், ஏன் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும்?
16 (3) குடும்பத்தில் இருப்பவர்களின் பொருளாதாரத் தேவைகளைக் குடும்பத் தலைவர்கள் கவனித்துக்கொள்ள வேண்டும். இஸ்ரவேலர்களின் தேவைகளை யெகோவா பார்த்துக்கொண்டார். அவர்களைத் தண்டித்த சமயத்தில்கூட அவர்களுடைய அடிப்படைத் தேவைகளைச் செய்து கொடுத்தார். (உபா. 2:7; 29:5) இன்று, நம்முடைய தேவைகளையும் அவர் பார்த்துக்கொள்கிறார். (மத். 6:31-33; 7:11) இயேசுவும் தன்னுடைய சீஷர்களுக்கு உணவு கொடுத்தார். (மத். 14:17-20) அவர்களுடைய நோய்களைக் குணமாக்கினார். (மத். 4:24) யெகோவாவை சந்தோஷப்படுத்த வேண்டுமென்றால் குடும்பத் தலைவர்களும் தங்களுடைய குடும்பத்தாரின் தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அதேசமயத்தில் ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டும். குடும்பத்தில் இருப்பவர்கள் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள உதவ முடியாதளவுக்கு... அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியாதளவுக்கு... வேலையிலேயே மூழ்கிவிடக் கூடாது.
17. யெகோவாவும் இயேசுவும் நமக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கிறார்கள்?
17 (4) பயிற்சி தர வேண்டும். நம்முடைய நன்மைக்காக யெகோவா பயிற்சி தருகிறார், நம்மைத் திருத்துகிறார். (எபி. 12:7-9) தன்னுடைய அப்பாவைப் போலவே, இயேசுவும் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் இருப்பவர்களுக்குப் பயிற்சி தருகிறார். (யோவா. 15:14, 15) நாம் பாவிகளாக இருப்பதால், தவறுகள் செய்துவிடுவோம் என்பது அவருக்குத் தெரியும். (மத். 26:41) அதனால், சில சமயங்களில் கடுமையான ஆலோசனைகளைக் கொடுக்கிறார். ஆனால், அதை அன்போடு கொடுக்கிறார்.—மத். 20:24-28.
18. ஒரு நல்ல குடும்பத் தலைவர் எதை மனதில் வைத்திருப்பார்?
18 யெகோவாவையும் இயேசுவையும் போல நடந்துகொள்கிற ஒரு குடும்பத் தலைவர், குடும்பத்தில் இருப்பவர்கள் தவறு செய்கிற இயல்புள்ளவர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்வார். தன்னுடைய மனைவியிடமும் பிள்ளைகளிடமும் “கடுகடுப்பாக” நடந்துகொள்ள மாட்டார். (கொலோ. 3:19) அவரும் தவறு செய்பவர்தான் என்பதை மனதில் வைத்து, கலாத்தியர் 6:1-ல் சொல்லப்பட்டிருக்கிறபடி அவர்களை “சாந்தமாகச் சரிப்படுத்த” முயற்சி செய்வார். தன்னுடைய நடத்தையின் மூலம் அவர்களுக்குப் பயிற்சி கொடுப்பதுதான் சிறந்தது என்பதை புரிந்துவைத்திருப்பார். இப்படி, இயேசுவைப் போலவே நடந்துகொள்வார்.—1 பே. 2:21.
19-20. முடிவுகள் எடுக்கும்போது ஒரு குடும்பத் தலைவர் யெகோவாவையும் இயேசுவையும் எப்படிப் பின்பற்றலாம்?
19 (5) சுயநலமில்லாத முடிவுகளை எடுக்க வேண்டும். மற்றவர்களுடைய நன்மைக்காகத்தான் யெகோவா முடிவுகளை எடுக்கிறார். உதாரணத்துக்கு, மனிதர்களைப் படைப்பதற்கு அவர் ஏன் முடிவெடுத்தார்? அவருடைய நன்மைக்காகவா? இல்லை! நாம் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான்! மீட்புவிலையை எதற்காகக் கொடுத்தார்? யாராவது அவரைக் கட்டாயப்படுத்தினார்களா? இல்லை! நம்முடைய நன்மைக்காக அதைக் கொடுப்பதென்று அவராகவே முடிவெடுத்தார். இயேசுவும் மற்றவர்களை மனதில் வைத்து முடிவுகளை எடுத்தார். (ரோ. 15:3) உதாரணத்துக்கு, அவருக்கு ஓய்வு தேவைப்பட்டபோதும் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.—மாற். 6:31-34.
20 இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான விஷயம் குடும்பத்துக்காக நல்ல தீர்மானங்கள் எடுப்பதுதான் என்பது ஒரு நல்ல குடும்பத் தலைவருக்குத் தெரியும். அதனால், அந்தப் பொறுப்பை அவர் லேசாக எடுத்துக்கொள்ள மாட்டார். ஏனோதானோவென்று அல்லது உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவையும் எடுக்க மாட்டார். வழிநடத்துதலுக்காக யெகோவாவை நம்பியிருப்பார்.c (நீதி. 2:6, 7) தன்னைப் பற்றி யோசிக்காமல் மற்றவர்களை மனதில் வைத்து முடிவுகளை எடுப்பார்.—பிலி. 2:4.
21. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?
21 குடும்பத் தலைவர்களுக்கு யெகோவா கொடுத்திருக்கிற பொறுப்பு சவாலானதுதான்! அந்தப் பொறுப்பை அவர்கள் சரியாக செய்ய வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இல்லையென்றால், அவர்கள் அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும். யெகோவாவையும் இயேசுவையும் போலவே கணவர்கள் நடந்துகொள்ளும்போது நல்ல குடும்பத் தலைவர்களாக இருக்க முடியும். மனைவிகளும் தங்களுடைய பொறுப்பைச் சரியாக செய்யும்போது குடும்பம் சந்தோஷமாக இருக்கும். அப்படியென்றால், தலைமை ஸ்தானத்தை மனைவிகள் எப்படிப் பார்க்க வேண்டும்? அவர்களுக்கு என்னென்ன சவால்கள் இருக்கலாம்? இதைப் பற்றியெல்லாம் அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
பாட்டு 108 விண் அரசுக்காக யெகோவாவைப் போற்றுங்கள்
a ஓர் ஆணுக்கு கல்யாணம் ஆகும்போது புதிய குடும்பம் உருவாகிறது. அவர் அந்தக் குடும்பத்தின் தலைவராக ஆகிறார். தலைமை ஸ்தானம் என்றால் என்ன? அதை ஏன் யெகோவா ஏற்படுத்தினார்? யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் ஆண்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? இதைப் பற்றியெல்லாம் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அடுத்த கட்டுரையில், இயேசுவிடமிருந்தும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற சிலரிடமிருந்தும் கணவனும் மனைவியும் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம். அதற்கு அடுத்த கட்டுரையில், சபையில் யெகோவா ஏற்படுத்தியிருக்கிற தலைமை ஸ்தானத்தைப் பற்றிப் பார்ப்போம்.
b கணவர்கள் தங்கள் மனைவிகளை அடக்கி ஒடுக்குவதிலும் அடிப்பதிலும் தவறாக நடத்துவதிலும் எந்தத் தவறும் இல்லை என்பதாக சினிமாக்களிலும் நாடகங்களிலும் கதைப் புத்தகங்களிலும் சிலசமயங்களில் காட்டப்படுகிறது. கணவர்கள் மனைவிகளை அடக்கி ஒடுக்குவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
c அதிகமாகத் தெரிந்துகொள்ள, ஏப்ரல் 15, 2011 காவற்கோபுரம், பக்கங்கள் 13–17-ல் இருக்கிற “நம் தீர்மானங்கள் கடவுளுக்குப் புகழ் சேர்க்க...” என்ற கட்டுரையைப் பாருங்கள்.