பிள்ளை வளர்ப்புக்கு நம்பகமான ஆலோசனை
தன்னுடைய முதல் குழந்தையை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த சமயத்தைப் பற்றி ரூத் இவ்வாறு சொல்கிறாள்: “எனக்கு அப்போது 19 வயது. சொந்தபந்தங்களைவிட்டு வெகு தொலைவில் வாழ்ந்தேன். என் பிள்ளையை எப்படி வளர்க்கப் போகிறேனோ எனக் கவலைப்பட்டேன்.” தன்னுடைய வீட்டில் ஒரே பிள்ளையாக வளர்ந்த இவர் தாய்க்குரிய பொறுப்புகளைப் பற்றி யோசித்துப் பார்க்கவே இல்லை. நம்பகமான ஆலோசனைகளை எங்கிருந்து இவர் பெற்றுக்கொள்வார்?
ஜேன் என்பவரை எடுத்துக்கொள்ளுங்கள். இவருக்கு இப்போது இரண்டு வளர்ந்த பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் ஆரம்பத்தில் எப்படி இருந்தார் என்பதைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “முதலில் நான் ரொம்ப தன்னம்பிக்கையோடு இருந்தேன். ஆனால், எனக்குத் தெரிந்ததெல்லாம் கொஞ்சம்தான் என்பதைச் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டேன்.” பிள்ளைகளை எப்படி வளர்ப்பதென்று தெரியாதவர்களும், தாங்கள் வளர்க்கிற முறை சரியானதா என தெரியாமல் குழம்பிப்போனவர்களும், எப்படி உதவியைப் பெறலாம்?
இன்று, அதிகமதிகமான பெற்றோர்கள், ஆலோசனைக்காக இன்டர்நெட்டில் அலசுகிறார்கள். எனினும், அதில் கிடைக்கும் ஆலோசனைகள் எந்தளவு நம்பகமானவை என நீங்கள் யோசிக்கலாம். படு ஜாக்கிரதையாய் இருப்பதற்கு நியாயமான காரணம் இருக்கிறது. அதில் ஆலோசனைகள் கொடுப்பவர் யாரென்று உங்களுக்கு உண்மையிலேயே தெரியுமா? அவர்களுடைய பிள்ளைகளை வளர்க்க அந்த ஆலோசனைகள் அவர்களுக்கு எந்தளவு உதவியிருக்கும்? உங்களுடைய குடும்பத்தைப் பாதிக்கும் விஷயங்களில் சர்வ ஜாக்கிரதையாய் இருக்க நீங்கள் விரும்புவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. சில சமயங்களில், முந்தின கட்டுரையில் பார்த்ததுபோல் வல்லுநர்களின் ஆலோசனைகளும்கூட ஏமாற்றம் அளிப்பதாய் ஆகிவிடுகின்றன. அப்படியானால் எங்கிருந்து உதவியைப் பெற்றுக்கொள்வது?
குடும்பத்தை ஆரம்பித்து வைத்தவரான யெகோவா தேவனே பிள்ளை வளர்ப்புக்குரிய ஆலோசனைகளின் பிறப்பிடம். (எபேசியர் 3:14) அவர் ஒருவரே உண்மையான மாமேதை. அவர் தம்முடைய வார்த்தையாகிய பைபிள் மூலம் நம்பகமான, நடைமுறையான புத்திமதிகளைத் தருகிறார். அவை உண்மையிலேயே பலன் தருபவை. (சங்கீதம் 32:8; ஏசாயா 48:17, 18) ஆனால், அவற்றை நாம் பின்பற்றினால்தான் பலனைப் பெற முடியும்.
தங்களுடைய பிள்ளைகளை நன்கு ஒத்துப்போகிறவர்களாகவும் கடவுள் பயமுள்ளவர்களாகவும் வளர்த்து ஆளாக்குகையில் தாங்கள் எதைப் புரிந்துகொண்டார்கள் என்பதைப் பற்றி பெற்றோர் பலரிடம் கேட்கப்பட்டது. தங்களுடைய வெற்றிக்கு முக்கிய காரணம் பைபிள் நியமங்களைப் பின்பற்றியதே என அவர்கள் பதில் அளித்தார்கள். பைபிள் எழுதப்பட்ட சமயத்தில் அதன் ஆலோசனைகள் எந்தளவு நம்பகமானவையாய் இருந்தனவோ அந்தளவு இன்றும் அவை நம்பகமானவையாய் இருப்பதை அவர்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள்.
பிள்ளைகளோடு நேரம் செலவிடுங்கள்
இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான கேத்ரன் என்பவரிடம் எந்த ஆலோசனை அவருக்குப் பெரிதும் பயனுள்ளதாய் இருந்ததென கேட்டபோது, அவர் உடனடியாக உபாகமம் 6:7-ஐக் குறிப்பிட்டார். அந்த வசனம் இவ்வாறு சொல்கிறது: ‘நீ அவைகளை [பைபிள் நியமங்களை] உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு.’ இந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு தன்னுடைய பிள்ளைகளோடு நேரம் செலவிட வேண்டும் என்பதை கேத்ரன் உணர்ந்தார்.
‘இதைச் சொல்வது எளிது, செய்வது கடினம்’ என ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். பெற்றோர்கள் இருவருமே சம்பாதித்தால்தான் குடும்பத்தைக் கவனிக்க முடியும் என்ற நிலையில், சதா வேலையாக இருக்கும் இவர்களால் தங்கள் பிள்ளைகளோடு எவ்வாறு அதிக நேரம் செலவிட முடியும்? உபாகமத்திலுள்ள ஆலோசனையைப் பின்பற்றுவதே அதற்கு முக்கிய தீர்வு என டார்லிஃப் கூறுகிறார். உண்மைதான், எங்கு போனாலும் பிள்ளையையும் கூட்டிக்கொண்டு போகும்போது, பேசுவதற்கான வாய்ப்புகள் தானாகவே வரும். டார்லிஃப் இவ்வாறு கூறுகிறார்: “நானும் என்னுடைய மகனும் வீட்டு வேலைகளை சேர்ந்தே செய்தோம். குடும்பமாகப் பயணித்தோம். ஒன்றாகச் சாப்பிட்டோம்.” அதன் விளைவாக, “எங்களுடைய பையன் எப்போதுமே தயக்கமில்லாமல் எங்களிடம் பேசினான்” என அவர் சொல்கிறார். இவருடைய மகனுக்கு இப்போது திருமணமாகி அவருக்கென ஒரு குடும்பமும் இருக்கிறது.
ஆனால், மனம்விட்டு பேசமுடியாமற்போனாலும் பேசுவதே கடினமாய் இருந்தாலும் என்ன செய்வது? பிள்ளைகள் பெரியவர்களான பிறகு சில சமயங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலை உருவாகலாம். இதைச் சரிசெய்வதற்கும்கூட பிள்ளைகளோடு அதிக நேரம் செலவிடுவதுதான் வழி. தங்களுடைய மகள் டீனேஜரானபோது தான் பேசுவதை அப்பா கவனிக்கவே இல்லை என அவள் குறைகூறியதாக கேத்ரனுடைய கணவர் கென் சொல்கிறார். டீனேஜர்கள் இவ்வாறு குறைகூறுவது சகஜம்தான். கென் என்ன செய்தார்? அவர் இவ்வாறு கூறுகிறார்: “நான் அவளோடு உட்கார்ந்து அதிக நேரம் செலவிட்டு, அவளுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் குறைகளையும் பேசித் தெரிந்துகொண்டேன். அது உண்மையிலேயே பலன் தந்தது.” (நீதிமொழிகள் 20:5) என்றாலும், அவருடைய வீட்டில் எப்போதுமே ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசிக்கொண்டதால்தான் இத்தகைய பலன் கிடைத்ததாக அவர் நம்புகிறார். “எனக்கும் என் மகளுக்கும் இடையே எப்போதும் நல்ல பந்தம் இருந்தது, அதனால் என்னிடம் அவளால் தயங்காமல் பேச முடிந்தது.”
பெற்றோர்களும் பிள்ளைகளும் சேர்ந்து போதுமான நேரம் செலவிடுவதில்லை என பெற்றோர்களைவிட அவர்களுடைய டீனேஜ் பிள்ளைகளே மூன்று மடங்கு அதிகமாக குறைப்பட்டுக்கொள்கிறார்கள் என்ற ஆர்வத்திற்குரிய விஷயம் சமீபத்திய ஆய்வில் தெரியவந்தது. அப்படியானால், பைபிளின் ஆலோசனையை பின்பற்றலாம், அல்லவா? பிள்ளைகளோடு நிறைய நேரம் செலவிடுங்கள்; ஓய்வெடுக்கையிலும், வேலை செய்கையிலும், வீட்டில் இருக்கையிலும், பயணிக்கையிலும், இரவு படுக்கைக்குப் போகுமுன்னும், காலையில் எழுந்த பின்னும் நேரம் செலவிடுங்கள். முடிந்தால், நீங்கள் போகுமிடங்களுக்கு அவர்களையும் கூட்டிக்கொண்டுப் போங்கள். உபாகமம் 6:7 குறிப்பிடுவதுபோல, உங்கள் பிள்ளைகளோடு நேரம் செலவிடுவதை வேறெதுவும் மாற்றீடு செய்ய முடியாது.
சிறந்த ஒழுக்க நெறிகளைக் கற்றுக்கொடுங்கள்
இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனான மாரியோ என்பவர் இதையே சிபாரிசு செய்கிறார்: “பிள்ளைகளிடம் அன்பைப் பொழியுங்கள், அவர்களுக்கு வாசித்துக் காட்டுங்கள்.” என்றாலும், உங்கள் பிள்ளைகளுடைய அறிவுத் திறனைத் தூண்டிவிட்டால் மட்டும் போதாது. சரி எது, தவறு எது என்பதைப் பகுத்துணர அவர்களுக்கு நீங்கள் கற்றுக்கொடுப்பதும் அவசியம். “அவர்களுக்கு பைபிள் படிப்பு நடத்துங்கள்” என்றும் மாரியோ கூறுகிறார்.
இந்த விஷயத்தில் பெற்றோர்களுக்கு பைபிள் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “உங்கள் பிள்ளைகளுக்கு எரிச்சல் மூட்டாதீர்கள், மாறாக, உண்மையான கிறிஸ்தவ பயிற்சியும் ஆலோசனையும் கொடுத்து அன்போடு வளர்ப்பீர்களாக.” (எபேசியர் 6:4, வேமௌத்) இன்று, அநேக வீடுகளில் ஒழுக்க விஷயங்களை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதே இல்லை. இன்னும் சிலரோ, எத்தகைய ஒழுக்க நெறிகளைப் பின்பற்றுவதென பிள்ளைகள் வளர்ந்த பிறகு தாங்களாகவே தீர்மானித்துக்கொள்வார்களென நினைத்து விட்டுவிடுகிறார்கள். இது உங்களுக்கு நியாயமாய் படுகிறதா? சிறு பிள்ளைகளின் உடல் கட்டுறுதியோடும் ஆரோக்கியத்தோடும் வளருவதற்கு நல்ல ஊட்டச்சத்து தேவைப்படுவதைப்போல அவர்களுடைய மனமும் இதயமும் ஆரோக்கியமாய் இருப்பதற்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுப்பது அவசியம். பிள்ளைகள் வீட்டிலேயே உங்களிடமிருந்து ஒழுக்க நெறிகளைக் கற்றுக்கொள்ளாவிட்டால், பள்ளிப் பிள்ளைகள், ஆசிரியர்கள் அல்லது மீடியாக்களில் வருவோர் ஆகியோருடைய கருத்துகளை அவர்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.
சரி, தவறை கண்டறிவது எப்படியென பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க பெற்றோர்களுக்கு பைபிள் உதவுகிறது. (2 தீமோத்தேயு 3:16, 17) பைபிளைப் பயன்படுத்தி சிறந்த ஒழுக்க நெறிகளைப் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கும்படி ஜெஃப் என்ற அனுபவமிக்க கிறிஸ்தவ மூப்பர் சிபாரிசு செய்கிறார். அவர் இரண்டு பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியவர். அவர் இவ்வாறு சொல்கிறார்: “பைபிளைப் பயன்படுத்துவது, ஒரு விஷயத்தைப் பற்றி அம்மா அப்பா மட்டுமல்ல, நம் படைப்பாளரே எப்படி உணருகிறார் என்பதை அறிந்துகொள்ள பிள்ளைகளுக்கு உதவுகிறது. விசேஷ விதத்தில் மனதையும் உள்ளத்தையும் தொடும் தன்மை பைபிளுக்கு இருப்பதை நாங்கள் கவனித்திருக்கிறோம். பிள்ளைகளின் தவறான நடத்தையையோ எண்ணத்தையோ சரிசெய்வதற்கு, பொருத்தமான வசனத்தைக் கண்டுபிடிக்க நாங்கள் நேரம் செலவழித்தோம். பிறகு, பிள்ளையைத் தனியாகக் கூப்பிட்டு அந்த வசனத்தை வாசிக்கச் சொன்னோம். பொதுவாக, அப்படி வாசித்து முடித்த பிறகு, சில சமயங்களில் பிள்ளையின் கண்கள் கலங்கிவிடும் அல்லது தேம்பித்தேம்பி அழுதுவிடும். அதைப் பார்க்கும்போது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். இப்படிச் சொல்லலாம் அல்லது இப்படிச் செய்யலாம் என நாங்கள் நினைத்ததைவிட பைபிள் ஆலோசனை இன்னும் அதிகத்தைச் சாதித்தது.”
“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், . . . இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என எபிரெயர் 4:12 விவரிக்கிறது. அப்படியானால், பைபிளில் உள்ள செய்தி, அதை எழுதுவதற்குக் கடவுள் பயன்படுத்திய மனிதர்களின் சொந்த கருத்துகளோ அனுபவங்களோ அல்ல. மாறாக, ஒழுக்க விஷயங்களைப் பற்றிய கடவுளுடைய எண்ணங்களையே அது விவரிக்கிறது. இவ்வாறு, கடவுளுடைய எண்ணங்களை விவரிப்பதால் அது மற்ற எல்லா ஆலோசனைகளிலிருந்தும் வித்தியாசமானதாய் இருக்கிறது. பைபிளைப் பயன்படுத்தி உங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதன் மூலம், காரியங்களை கடவுள் கருதும்விதமாக அவர்களும் கருதுவதற்கு நீங்கள் உதவுகிறீர்கள். இவ்வாறு, நீங்கள் கொடுக்கும் பயிற்சி அதிக மதிப்பு வாய்ந்தது, அதோடு பிள்ளையின் இருதயத்தை எட்டுவதற்கு அது உங்களுக்கு நல்ல வாய்ப்பையும் அளிக்கிறது.
மேற்குறிப்பிட்ட கேத்ரன் இதை ஒத்துக்கொள்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “சூழ்நிலை எந்தளவுக்கு மிக மோசமாகிறதோ அந்தளவுக்கு அதிகமதிகமாக கடவுளுடைய வார்த்தையின் வழிநடத்துதலை நாங்கள் நாடினோம். அது பலனளித்தது!” நல்லது கெட்டதைப் பகுத்துணருவது எப்படி என்பதை பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க பைபிளை இன்னும் அதிகமாகப் பயன்படுத்தலாம், அல்லவா?
நியாயத்தன்மை உள்ளவர்களாய் இருங்கள்
பிள்ளை வளர்ப்புக்கு உதவும் மற்றொரு முக்கிய நியமத்தை அப்போஸ்தலன் பவுல் குறிப்பிடுகிறார். அவர் சக கிறிஸ்தவர்களை இவ்வாறு ஊக்குவித்தார்: “உங்கள் நியாயத்தன்மை எல்லா மனிதருக்கும் தெரிந்திருப்பதாக.” (பிலிப்பியர் 4:5, NW) ஆம், நம்முடைய நியாயத்தன்மை நம் பிள்ளைகளுக்கும் தெரிந்திருக்க வேண்டும். அதோடு, இந்த நியாயத்தன்மை ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தை’ பிரதிபலிக்கிறது என்பதையும் நாம் நினைவில் வைக்க வேண்டும்.—யாக்கோபு 3:17.
அப்படியானால், நம் பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிப்பதில் இந்த நியாயத்தன்மையை எப்படிக் காட்டலாம்? நம்மால் முடிந்த அனைத்து உதவியையும் அவர்களுக்குச் செய்கிற அதேசமயத்தில், அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் நாம் கட்டுப்படுத்தக் கூடாது. உதாரணமாக, முன்னர் குறிப்பிடப்பட்ட மாரியோ என்ற யெகோவாவின் சாட்சி இவ்வாறு சொல்கிறார்: “முழுக்காட்டுதல், முழுநேர ஊழியம் ஆகியவற்றையும், பிற ஆன்மீக இலக்குகளையும் பற்றியே நாங்கள் எப்போதும் பிள்ளைகளிடம் பேசினோம். அதே சமயத்தில், அதற்குரிய நேரம் வருகையில் அவர்கள்தான் அந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என்பதையும் அவர்களுக்குத் தெளிவுபடுத்தினோம்.” பலன்? அவர்களுடைய பிள்ளைகள் இருவரும் இப்போது முழுநேர ஊழியர்களாக இருக்கிறார்கள்.
கொலோசெயர் 3:21-ல் தகப்பன்மாரை பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள்.” இந்த வசனத்தை கேத்ரன் முக்கியமானதாய் கருதுகிறார். ஒரு தாயோ தகப்பனோ பொறுமை இழந்துவிடுகையில், எளிதில் கோபப்படுகிறவராக அல்லது வற்புறுத்துகிறவராக ஆகிவிடுகிறார். ஆனால், கேத்ரன் இவ்வாறு சொல்கிறார்: “உங்களிடம் நீங்கள் எதிர்பார்க்கிற அளவுக்கு பிள்ளையிடம் எதிர்பார்க்காதீர்கள்.” இவரும்கூட ஒரு யெகோவாவின் சாட்சிதான். அதனால், “யெகோவாவுக்குச் சேவை செய்வதைச் சந்தோஷம் தரும் காரியமாக்குங்கள்” என அவர் கூறுகிறார்.
மேற்குறிப்பிடப்பட்ட ஜெஃப் என்பவரும் நடைமுறையான இந்த ஆலோசனையை அளிக்கிறார்: “எங்களுடைய பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானபோது, உற்ற நண்பர் ஒருவர், தன்னுடைய பிள்ளைகளைப் பற்றி எங்களிடம் சொன்னார்; பிள்ளைகள் என்ன கேட்டாலும் தான் மறுப்பு தெரிவிக்க வேண்டியிருந்ததை உணர்ந்ததாகச் சொன்னார். அது அவருடைய பிள்ளைகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது. அடக்கி ஒடுக்குவதைப் போலவும் அவர்களை உணர வைத்தது. இதை நாங்கள் தவிர்ப்பதற்கு, அவர்கள் கேட்பவற்றிற்கு அனுமதி அளிக்க வாய்ப்புகளைத் தேடும்படி அவர் எங்களிடம் சொன்னார்.”
ஜெஃப் இவ்வாறு சொல்கிறார்: “இதை ஒரு நல்ல ஆலோசனையாக நாங்கள் கருதினோம். அதன் பிறகு, எந்தச் சமயத்தில் மற்றவர்களோடு சேர்ந்து காரியங்களைச் செய்வது பிள்ளைகளுக்கு நல்லதாக இருக்கும் என்பதை அறிந்து அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்களை அனுமதித்தோம். அதனால், அவர்களிடம் இவ்வாறு கேட்போம், ‘இன்னார் இதைச் செய்கிறார்களாமே, உனக்குத் தெரியுமா? நீயும் அவர்களோடு சேர்ந்து செய்யலாமே?’ அல்லது, எங்கேயாவது கூட்டிக்கொண்டு செல்லும்படி பிள்ளைகள் கேட்கும்போது, நாங்கள் களைப்பாக இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் அவர்களுடன் செல்வோம். ‘முடியாது’ என்று சொல்வதைத் தவிர்ப்பதற்காகவே அவ்வாறு செய்தோம்.” இதுதான் நியாயத்தன்மை ஆகும்; அதாவது, பாரபட்சமற்றவர்களாக, கரிசனையுள்ளவர்களாக, வளைந்துகொடுப்பவர்களாக, அதே சமயத்தில் பைபிள் நியமங்களை விட்டுக்கொடுக்காதவர்களாக இருப்பதாகும்.
நம்பகமான ஆலோசனையிலிருந்து பயனடைதல்
இக்கட்டுரையில் நாம் பார்த்த தம்பதியரில் பெரும்பாலோர் இப்போது தாத்தா பாட்டியாக இருக்கிறார்கள். தங்களுடைய பிள்ளைகளும் பொறுப்புள்ள பெற்றோராக ஆவதற்கு இதே பைபிள் நியமங்கள் உதவுவதை அறிந்து அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். பைபிளின் ஆலோசனைகளிலிருந்து நீங்கள் பயனடைய முடியுமா?
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ரூத் தாயானபோது, அவரும் அவருடைய கணவரும் சில சமயங்களில் உதவி அளிக்க யாருமே இல்லாததுபோல் உணர்ந்தார்கள். ஆனால், அவர்களுக்கு உதவி கிடைக்காமல் இல்லை. கடவுளுடைய வார்த்தையான பைபிளின் ஈடிணையற்ற ஆலோசனைகள் அவர்களுக்கு இருந்தன. பெற்றோர்களுக்கு உதவும் அருமையான பைபிள் படிப்பு வெளியீடுகளை யெகோவாவின் சாட்சிகள் தயாரித்திருக்கிறார்கள். பெரிய போதகரிடம் கற்றுக்கொள், என்னுடைய பைபிள் கதை புத்தகம், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் போன்றவை அவற்றில் சில. ரூத்தின் கணவரான டார்லிஃப் இவ்வாறு கூறுகிறார்: “பெற்றோர்களுக்கு உதவும் பைபிள் அடிப்படையிலான ஆலோசனைகளுக்கு இன்று பஞ்சமே இல்லை. அவற்றை அவர்கள் பயன்படுத்தினாலே போதும், பிள்ளைகளை வளர்ப்பதற்கு எல்லா விதத்திலும் அவை அவர்களுக்கு உதவும்.”
[பக்கம் 5-ன் பெட்டி/படம்]
வல்லுநர்கள் சொல்வதென்ன? பைபிள் சொல்வதென்ன?
பாசத்தைப் பொழிவதைப் பற்றி:
கைக்குழந்தைகள் மற்றும் பிள்ளைகளின் மனநல பராமரிப்பு (1928) என்ற ஆங்கில புத்தகத்தில் பெற்றோர்களை டாக்டர் ஜான் ப்ராடஸ் வாட்சன் இவ்வாறு ஊக்குவித்தார்: உங்களுடைய பிள்ளைகளை “கட்டியணைக்காதீர்கள், முத்தமிடாதீர்கள். அவர்களை உங்களுடைய மடியிலும் உட்கார வைக்காதீர்கள்.” என்றாலும், நம் பிள்ளைகள் என்ற ஆங்கில பத்திரிகையின் சமீப வெளியீட்டில் (மார்ச் 1999) டாக்டர்களான விரா லேன், டாரதி மாலினோ என்பவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்: “சிறு பிள்ளைகளைத் தொடாமலோ அவர்கள்மேல் பாசத்தைப் பொழியாமலோ இருந்தால் அவர்கள் நல்ல விதத்தில் வளர மாட்டார்கள் என ஆய்வு காட்டுகிறது.”
ஆனால், கடவுள் தம் மக்களிடத்தில் பெற்றோரைப் போல அன்பு காட்டுகிறார் என ஏசாயா 66:12 குறிப்பிடுகிறது. அவ்வாறே, இயேசுவிடம் சிறுபிள்ளைகள் வருவதை அவருடைய சீஷர்கள் தடுத்தபோது, அவர்களைக் கண்டித்து அவர் இவ்வாறு சொன்னார்: “சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்.” அதன் பிறகு, “அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார்.”—மாற்கு 10:14, 16.
சிறந்த ஒழுக்கநெறிகளைக் கற்றுக்கொடுப்பது பற்றி:
ஒரு பிள்ளை தன் பெற்றோருடைய “வற்புறுத்தலினால் [உபதேசத்தினால்] அல்ல, ஆனால் தன்னுடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்தே தன் சொந்த கருத்துகளை உருவாக்க உரிமை பெற்றிருக்கிறது” என 1969-ல் நியூ யார்க் டைம்ஸ் மேகஸினில் வெளிவந்த ஒரு கட்டுரையில் டாக்டர் ப்ரூனோ பெட்டல்ஹீம் வலியுறுத்தினார். எனினும், கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பின் த மாரல் இன்டலிஜன்ஸ் ஆஃப் சில்ட்ரன் (1977) என்ற புத்தகத்தின் எழுத்தாளரான டாக்டர் ராபர்ட் கோல்ஸ் இவ்வாறு ஒத்துக்கொண்டார்: “பிள்ளைகளின் வாழ்க்கைக்கு நோக்கமும், வழிகாட்டுதலும், நெறி முறைகளும் ரொம்பவே அவசியம்”; இந்த நெறிமுறைகள் பெற்றோரும் பெரியவர்களும் அங்கீகரிப்பவையாய் இருக்க வேண்டும்.
நீதிமொழிகள் 22:6 பெற்றோர்களை இவ்வாறு ஊக்குவிக்கிறது: “பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.” “நடத்து” அதாவது, “பயிற்றுவி” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை “துவக்கிவை” என்ற அர்த்தத்தையும் தருகிறது; குழந்தைக்கு முதன்முதலாக அறிவுரை கொடுக்க ஆரம்பிப்பதை இது குறிக்கிறது. ஆகவே, பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு பிஞ்சு பருவத்திலிருந்தே சிறந்த ஒழுக்க நெறிகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். (2 தீமோத்தேயு 3:14, 15) பிஞ்சு வயதில் கற்றுக்கொள்ளும் விஷயங்கள் அவர்களுடைய மனதில் ஆழமாய் பதிந்துவிடும்.
கண்டிப்பது பற்றி:
ஸ்ட்ராங்-வில்ட் சைல்ட் (1978) என்ற புத்தகத்தில் டாக்டர் ஜேம்ஸ் டாப்ஸன் இவ்வாறு எழுதினார்: “அன்பான பெற்றோர்கள் பிள்ளைகளை அடிப்பதன் மூலம் அவர்கள் கெட்ட வழியில் செல்வதைத் தடுக்கலாம்.” மறுபட்சத்தில், பேபி அண்ட் சைல்ட் கேர் (1998) என்ற பிரபல புத்தகத்தின் ஏழாம் பதிப்பிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கட்டுரையில் டாக்டர் பென்ஜமின் ஸ்போக் இவ்வாறு கூறினார்: “அடிப்பது பிள்ளைகளுக்கு எதைக் கற்றுக்கொடுக்கிறது என்றால், வயதில் மூத்த, வலுவான ஒருவர் செய்வது சரியோ தவறோ, அவருக்கு எதை வேண்டுமானாலும் செய்ய அதிகாரம் இருக்கிறது என்பதையே.”
கண்டிப்பது பற்றி பைபிள் பின்வருமாறு குறிப்பிடுகிறது: “பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்.” (நீதிமொழிகள் 29:15) எனினும், எல்லா பிள்ளைகளுக்குமே அடி தேவைப்படுவதில்லை. நீதிமொழிகள் 17:10 நமக்கு இவ்வாறு சொல்கிறது: “மூடனை நூறடி அடிப்பதைப் பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.”
[படம்]
இருதயத்தில் பதிய வைக்க பைபிளைப் பயன்படுத்துங்கள்
[பக்கம் 7-ன் படம்]
ஞானமுள்ள பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்காக பொழுதுபோக்குகளை ஏற்பாடு செய்கிறார்கள்