அதிகாரம் 13
நல்ல செய்தியை அறிவிப்பவர்கள் வழக்குத் தொடுக்கிறார்கள்
1, 2. (அ) மதத் தலைவர்கள் என்ன செய்தார்கள், அப்போது அப்போஸ்தலர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? (ஆ) பிரசங்கிக்கக் கூடாது என்ற கட்டளைக்கு அப்போஸ்தலர்கள் ஏன் கீழ்ப்படியவில்லை?
கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமில் கிறிஸ்தவச் சபை ஆரம்பிக்கப்பட்டு சில வாரங்களே ஆகியிருக்கின்றன. கிறிஸ்தவச் சபையைத் தாக்குவதற்கு அதுதான் சரியான சமயம் என்று சாத்தான் நினைக்கிறான். சபை வளர்ந்து பலப்படுவதற்கு முன்பே அதை அழித்துவிட வேண்டும் என்றும் நினைக்கிறான். அதற்கு அவன் மதத் தலைவர்களைத் தூண்டிவிடுகிறான். அதனால், மதத் தலைவர்கள் பிரசங்க வேலையைத் தடை செய்கிறார்கள். ஆனாலும், அப்போஸ்தலர்கள் தைரியமாகப் பிரசங்கிக்கிறார்கள். நிறைய ஆண்களும் பெண்களும் “எஜமானின் மேல் விசுவாசம் வைத்து அவருடைய சீஷர்களாக” ஆகிறார்கள்.—அப். 4:18, 33; 5:14.
2 இது எதிரிகளின் கோபத்தைக் கிளறுகிறது. அதனால், இந்தத் தடவை அப்போஸ்தலர்கள் எல்லாரையும் அவர்கள் சிறையில் தள்ளுகிறார்கள். ஆனால், ராத்திரியில் யெகோவாவின் தூதர் சிறையின் கதவுகளைத் திறக்கிறார். பொழுது விடிந்ததும் அப்போஸ்தலர்கள் திரும்பவும் பிரசங்கிக்கிறார்கள்! ஆனால், அவர்கள் மறுபடியும் கைதுசெய்யப்பட்டு மதத் தலைவர்கள்முன் கொண்டுவரப்படுகிறார்கள். பிரசங்கிக்கக் கூடாது என்ற கட்டளையை அவர்கள் மீறியதாகக் குற்றம்சாட்டப்படுகிறார்கள். அதற்கு அப்போஸ்தலர்கள், “நாங்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” என்று தைரியமாகச் சொல்கிறார்கள். அதனால், அவர்கள் கோபத்தில் கொதித்துப்போய், அப்போஸ்தலர்களை ‘கொன்றுபோடத் துடிக்கிறார்கள்.’ அந்த நெருக்கடியான சமயத்தில், எல்லாராலும் உயர்வாக மதிக்கப்பட்ட திருச்சட்டப் போதகரான கமாலியேல் அந்த மதத் தலைவர்களிடம், “எச்சரிக்கையாக இருங்கள். . . . இந்த மனுஷர்களுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள், இவர்களை விட்டுவிடுங்கள்” என்று சொல்கிறார். அவர் சொன்னதைக் கேட்டு மதத் தலைவர்கள் அப்போஸ்தலர்களைப் போகவிடுகிறார்கள். பிறகு, அந்த விசுவாசமுள்ள மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? கொஞ்சமும் பயம் இல்லாமல் அவர்கள், ‘இடைவிடாமல் கற்பித்து, கிறிஸ்துவாகிய இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை அறிவிக்கிறார்கள்.’—அப். 5:17-21, 27-42; நீதி. 21:1, 30.
3, 4. (அ) கடவுளுடைய மக்களைத் தாக்குவதற்கு சாத்தான் என்ன முறையைப் பல காலமாகப் பயன்படுத்தியிருக்கிறான்? (ஆ) இந்த அதிகாரத்திலும் அடுத்த இரண்டு அதிகாரங்களிலும் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
3 கி.பி. 33-ல் தொடுக்கப்பட்ட இந்த வழக்குதான் கிறிஸ்தவச் சபைக்கு எதிராக அதிகாரிகள் தொடுத்த முதல் வழக்கு. ஆனால், இதுவே கடைசி கிடையாது. (அப். 4:5-8; 16:20; 17:6, 7) இன்றும்கூட, அதிகாரத்தில் இருப்பவர்களைப் பயன்படுத்தி பிரசங்க வேலையைத் தடை செய்ய மதத் தலைவர்களை சாத்தான் தூண்டிவிடுகிறான். அவர்கள் கடவுளுடைய மக்கள்மேல் பலவிதமான குற்றங்களைச் சுமத்தியிருக்கிறார்கள். (1) சமுதாய ஒழுங்கைக் குலைப்பவர்கள், அதாவது பிரச்சினை செய்பவர்கள், (2) தேசத் துரோகிகள், (3) வீடுவீடாகப் போய் வியாபாரம் செய்பவர்கள் என்றெல்லாம் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பொய் என்று நிரூபிப்பதற்கு நம் சகோதரர்கள் ஏற்ற சமயங்களில் வழக்குத் தொடுத்திருக்கிறார்கள். அதனால் கிடைத்த பலன்? பல வருஷங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட தீர்ப்புகள் இன்று நம் ஒவ்வொருவருக்கும் எப்படி உதவியிருக்கின்றன? “நல்ல செய்திக்காக வழக்காடி, அதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பெற” சில வழக்குகள் எப்படி உதவியாக இருந்தன என்று இப்போது பார்க்கலாம்.—பிலி. 1:7.
4 சுதந்திரமாகப் பிரசங்கிப்பதற்கு நமக்கிருக்கும் உரிமைக்காக நாம் எப்படி வழக்காடியிருக்கிறோம் என்பதை இந்த அதிகாரத்தில் பார்ப்போம். நாம் இந்த உலகத்தின் பாகமாக இல்லாததாலும், எப்போதும் கடவுளுடைய அரசாங்கத்தின் நெறிமுறைகளின்படி வாழ்வதாலும் பிரச்சினைகள் வருகின்றன. அந்தப் பிரச்சினைகளைச் சமாளிக்க நாம் தொடுத்த சில வழக்குகளைப் பற்றி அடுத்த இரண்டு அதிகாரங்களில் பார்க்கலாம்.
பிரச்சினை செய்கிறவர்களா, அல்லது கடவுளுடைய அரசாங்கத்தை அறிவிப்பவர்களா?
5. 1930-களின் பிற்பகுதியில், யெகோவாவின் சாட்சிகள் ஏன் கைதுசெய்யப்பட்டார்கள்? அமைப்பை முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் என்ன செய்ய நினைத்தார்கள்?
5 1930-களின் பிற்பகுதியில் அமெரிக்கா முழுவதிலும் இருந்த யெகோவாவின் சாட்சிகளுக்கு ஒரு பிரச்சினை வந்தது. ஊழியம் செய்வதற்குச் சட்டப்பூர்வ அனுமதி அல்லது லைசன்ஸ் பெற வேண்டும் என்று அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். அரசாங்கம் அந்த லைசன்ஸைக் கொடுத்துவிட்டு, பிறகு அதை ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று நம் சகோதரர்கள் நினைத்தார்கள். அதுமட்டுமல்ல, நல்ல செய்தியைப் பிரசங்கிக்கும்படி இயேசு கொடுத்த கட்டளையை நிறைவேற்றுவதில் தலையிட எந்த அரசாங்கத்துக்கும் அதிகாரம் இல்லை என்றும் நினைத்தார்கள். (மாற். 13:10) அதனால், நம் சகோதரர்கள் அந்த லைசன்ஸைப் பெறவில்லை. அதன் விளைவாக, நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் கைதுசெய்யப்பட்டார்கள். அப்போது, நம் அமைப்பை முன்நின்று வழிநடத்திய சகோதரர்கள் வழக்குத் தொடுக்க நினைத்தார்கள். சுதந்திரமாகப் பிரசங்கிப்பதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு இருக்கும் உரிமை பறிக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்பதை நிரூபிக்க நினைத்தார்கள். 1938-ல் நடந்த ஒரு சம்பவம் அதற்கு வழி செய்தது. அப்போது தொடுக்கப்பட்ட ஒரு வழக்கு பிற்காலத்தில் ரொம்ப உதவியாக இருந்தது. அது என்ன சம்பவம்?
6, 7. கேன்ட்வெல் குடும்பத்தாருக்கு என்ன நடந்தது?
6 ஏப்ரல் 26, 1938, செவ்வாய்க்கிழமை காலையில் 60 வயதுள்ள நியூட்டன் கேன்ட்வெல் என்ற சகோதரர், அவருடைய மனைவி எஸ்டரோடும் மகன்கள் ஹென்றி, ரஸல், ஜெசியோடும் கனெடிகட்டிலுள்ள நியூ ஹேவன் என்ற நகரத்தில் நாள்முழுக்க ஊழியம் செய்யப் புறப்பட்டார்கள். விசேஷ பயனியர்களான அந்த ஐந்து பேரும், ஒருநாளுக்குத் தேவையானதை மட்டுமல்ல, சில நாட்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கொண்டுப் போனார்கள். ஏனென்றால், அவர்கள் ஏற்கெனவே பலமுறை கைதுசெய்யப்பட்டிருந்தார்கள். அதனால், மறுபடியும் கைதுசெய்யப்பட வாய்ப்பு இருக்கிறது என்று நினைத்தார்கள். ஆனாலும், நல்ல செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஆர்வத்தை இது குறைத்துவிடவில்லை. இரண்டு கார்களில் அவர்கள் நியூ ஹேவன் என்ற இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். நிறைய பைபிள் பிரசுரங்களும் ஃபோனோகிராஃப் பெட்டிகளும் இருந்த காரை சகோதரர் நியூட்டன் ஓட்டினார். சவுண்ட் காரை, அவருடைய 22 வயது மகன் ஹென்றி ஓட்டினார். அவர்கள் நினைத்த மாதிரியே, ஊழியம் செய்ய ஆரம்பித்து சில மணிநேரங்களுக்குள் போலீஸ் வந்தது.
7 முதலில், 18 வயது ரஸல் கைதுசெய்யப்பட்டார். பிறகு, கேன்ட்வெலும் அவரது மனைவி எஸ்டரும் கைதுசெய்யப்பட்டார்கள். தூரத்திலிருந்து 16 வயது ஜெசி, தன்னுடைய அப்பா-அம்மாவும் அண்ணனும் கைதுசெய்யப்பட்டதைப் பார்த்தார். ஹென்றி வேறொரு இடத்தில் ஊழியம் செய்துகொண்டிருந்ததால், ஜெசி தன்னந்தனியாக இருந்தார். ஆனாலும், அவர் தன்னுடைய ஃபோனோகிராஃப் பெட்டியை எடுத்துக்கொண்டு தொடர்ந்து ஊழியம் செய்தார். கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த இரண்டு பேர் ஃபோனோகிராஃபில் பேச்சைப் போட்டுக்காட்ட ஜெசியை அனுமதித்தார்கள். “எதிரிகள்” என்ற தலைப்பில் சகோதரர் ரதர்ஃபர்ட் கொடுத்த பேச்சை அவர்களுக்குப் போட்டுக்காட்டினார். அந்தப் பேச்சைக் கேட்க கேட்க அவர்களுக்குக் கோபம் தலைக்கேறியதால், ஜெசியை அடிக்குமளவுக்குப் போய்விட்டார்கள். அப்போது, ஜெசி அமைதியாக அந்த இடத்தைவிட்டு போய்விட்டார். கொஞ்ச நேரத்திலேயே போலீசார் அவரையும் கைதுசெய்து சிறையில் போட்டார்கள். சகோதரி கேன்ட்வெல்மீது எந்தக் குற்றப்பதிவும் செய்யப்படவில்லை. ஆனால், சகோதரர் கேன்ட்வெல்மீதும் அவருடைய மகன்கள்மீதும் குற்றப்பதிவு செய்யப்பட்டது. ஆனாலும், அதே நாளில் அவர்கள் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்கள்.
8. ஜெசி கேன்ட்வெல், சமுதாய ஒழுங்கைக் குலைப்பவர் என்று நீதிமன்றம் ஏன் தீர்ப்பு வழங்கியது?
8 சில மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 1938-ல் கேன்ட்வெல் குடும்பத்தார் நியூ ஹேவனில் இருந்த நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக வந்தார்கள். கேன்ட்வெல், ரஸல் மற்றும் ஜெசி லைசன்ஸ் இல்லாமல் நன்கொடை வசூலித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார்கள். கனெடிகட்டிலுள்ள உச்ச நீதிமன்றத்தில் பலமுறை மேல்முறையீடு செய்தும் குற்றவாளி என்று ஜெசி தீர்ப்பளிக்கப்பட்டார். அவர் சமுதாய ஒழுங்கைக் குலைப்பவர், அதாவது பிரச்சினை செய்கிறவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டார். ஏன்? ஏனென்றால், அந்த இரண்டு கத்தோலிக்க ஆட்களும் ஃபோனோகிராஃபில் கேட்ட பேச்சு தங்களுடைய மதத்தை அவமானப்படுத்தியதாகவும் தங்கள் கோபத்தைக் கிளறிவிட்டதாகவும் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லியிருந்தார்கள். நம் அமைப்பில் பொறுப்பிலிருந்த சகோதரர்கள் நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்.
9, 10. (அ) கேன்ட்வெல் குடும்பத்தார் வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது? (ஆ) அந்தத் தீர்ப்பினால் இன்றும் நாம் எப்படி நன்மை அடைகிறோம்?
9 மார்ச் 29, 1940-லிருந்து, தலைமை நீதிபதி சார்ல்ஸ் ஈ. ஹ்யூஸ் மற்றும் அவரோடு சேர்ந்த எட்டு நீதிபதிகள் அந்த வழக்கை விசாரித்தார்கள். யெகோவாவின் சாட்சிகள் சார்பாக சகோதரர் ஹேடன் கவிங்ட்டன் வாதாடினார். a யெகோவாவின் சாட்சிகள் பிரச்சினை செய்பவர்கள் என்று கனெடிகட் அரசுத் தரப்பு வக்கீல் வாதாடியபோது ஒரு நீதிபதி அவரிடம், “கிறிஸ்து இயேசு அன்று அறிவித்த செய்தியை மக்கள் அந்தளவுக்கு விரும்பவில்லைதானே?” என்று கேட்டார். அதற்கு அந்த வக்கீல், “ஆமாம், பைபிளில் அப்படிப் படித்ததாகத்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது. இயேசு அப்படி அறிவித்ததால் அவருக்கு வந்த முடிவைப் பற்றியும் பைபிள் சொல்கிறது” என்று சொன்னார். அந்த வக்கீல் சொன்னது எவ்வளவு உண்மை! தனக்கே தெரியாமல் அவர், யெகோவாவின் சாட்சிகளை இயேசுவுக்கும், கனெடிகட் அரசாங்கத்தை இயேசுவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியவர்களுக்கும் ஒப்பிட்டுச் சொன்னார். மே 20, 1940-ல் நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாக ஒருமனதாகத் தீர்ப்பு வழங்கியது.
10 நீதிமன்றத்தின் தீர்ப்பினால் கிடைத்த நன்மைகள் என்ன? எந்தவொரு குடியரசாலோ மாநில அரசாலோ தடுக்க முடியாதளவுக்கு, மக்கள் தங்களுடைய மதக்கொள்கைகளைச் சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கான உரிமையை அந்தத் தீர்ப்பு அளித்தது. அதோடு ஜெசியின் நடத்தை, “சமுதாயத்தின் சமாதானத்துக்கும் ஒழுங்குக்கும் எந்த ஆபத்தும் . . . ஏற்படுத்தவில்லை” என்று நீதிமன்றம் அறிவித்தது. அந்தத் தீர்ப்பின் மூலமாக யெகோவாவின் சாட்சிகள் சமுதாய ஒழுங்கைக் குலைப்பவர்கள் அல்ல என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டது. இது கடவுளுடைய ஊழியர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி! இதனால் இன்றும் நாம் எப்படி நன்மையடைகிறோம்? யெகோவாவின் சாட்சியாக இருக்கும் ஒரு வக்கீல் இப்படிச் சொல்கிறார்: “எந்தப் பயமோ கட்டுப்பாடோ இல்லாமல் சுதந்திரமாக நம் மதக்கொள்கைகளைப் பின்பற்றும் உரிமை நமக்கு இருக்கிறது. அதனால், நம் சமுதாயத்தில் வாழும் மக்களுக்கு நம்பிக்கையின் செய்தியைச் சொல்ல முடிகிறது.”
தேசத் துரோகிகளா, அல்லது சத்தியத்தை அறிவிப்பவர்களா?
11. கனடாவிலுள்ள நம் சகோதரர்கள் என்ன விசேஷ முயற்சி எடுத்தார்கள், ஏன்?
11 கனடாவில் 1940-களில் யெகோவாவின் சாட்சிகளுக்குக் கடும் எதிர்ப்பு வந்தது. அதனால் 1946-ல், மதச் சுதந்திரத்துக்கான உரிமையை அரசாங்கம் பறித்துவிட்டதைப் பற்றி எல்லாருக்கும் தெரியப்படுத்துவதற்கு சகோதரர்கள் ஒரு விசேஷ முயற்சி எடுத்தார்கள். அதற்காக, கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் சுதந்திரத்துக்கும் எதிராக க்யுபெக்கின் கடும் வெறுப்பு, கனடாவுக்கே பெருத்த அவமானம் என்ற துண்டுப்பிரதியை 16 நாட்களுக்கு நாடு முழுவதும் வினியோகித்தார்கள். நான்கு பக்கங்கள்கொண்ட இந்தத் துண்டுப்பிரதி, க்யுபெக் மாகாணம் முழுவதும் இருக்கும் நம் சகோதரர்களைத் தாக்கும்படி போலீசையும் ரவுடி கும்பல்களையும் கிறிஸ்தவக் குருமார்கள் தூண்டிவிட்டதையும் சகோதரர்களுக்கு எதிராக கலவரங்கள் வெடிக்கும்படி செய்ததையும் வெட்டவெளிச்சமாக்கியது. “யெகோவாவின் சாட்சிகள் சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்படுவது தொடர்கிறது” என்று அந்தத் துண்டுப்பிரதி குறிப்பிட்டது. “கிரேட்டர் மான்ட்ரீல் என்ற பகுதியில் யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக 800 குற்றப்பதிவுகள் இருக்கின்றன” என்றும் சொன்னது.
12. (அ) துண்டுப்பிரதியை வினியோகித்ததால் கடவுளுடைய எதிரிகள் என்ன செய்தார்கள்? (ஆ) நம் சகோதரர்கள்மீது என்ன குற்றச்சாட்டு போடப்பட்டது? (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)
12 ரோமன் கத்தோலிக்க கார்டினல் வில்லன்யூவ் மற்றும் க்யுபெக் மாகாணத்தின் தலைவர் மாரிஸ் டூப்லேசீ, கூட்டுச்சேர்ந்து யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராகச் செயல்பட்டார்கள். அவர்கள் அந்தத் துண்டுப்பிரதியைப் பார்த்த பிறகு, யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக “ஈவிரக்கம் காட்டாமல் போர் செய்வோம்” என்று அறிவித்தார்கள். அதனால், யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிரான வழக்குகள் 800-லிருந்து 1,600-ஆக உயர்ந்தது. “போலீஸ் எங்களை நிறைய தடவை கைதுசெய்தார்கள். எத்தனை தடவை கைதுசெய்தார்கள் என்றுகூட ஞாபகம் இல்லை” என்று ஒரு பயனியர் சகோதரி சொன்னார். இந்தத் துண்டுப்பிரதியை வினியோகித்த யெகோவாவின் சாட்சிகள் “தேசத் துரோகப் பிரசுரங்களை” வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்கள்.b
13. தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் முதன்முதலாக விசாரணை செய்யப்பட்டவர்கள் யார், நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?
13 1947-ல், முதன்முதலாக தேசத் துரோகக் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டவர்கள், சகோதரர் எமே புஷேயும் அவருடைய மகள்களான ஜிஷேல் (18 வயது) மற்றும் லுசீலும்தான் (11 வயது). அவர்கள் க்யுபெக்கின் கடும் வெறுப்பு என்ற துண்டுப்பிரதியை தங்களுடைய வயலுக்குப் பக்கத்தில் இருந்த பகுதியில் கொடுத்திருந்தார்கள். அந்தப் பகுதி க்யுபெக் சிட்டியின் தெற்கிலுள்ள மலையை ஒட்டியிருந்தது. அவர்களைச் சட்டவிரோதச் செயல்கள் செய்பவர்களாக யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஏனென்றால், சகோதரர் புஷே ரொம்பத் தாழ்மையான, சாந்தமான நபர். ‘தான் உண்டு தன் வேலை உண்டு’ என்று அமைதியாக தன் வயலைக் கவனித்துவந்தார். எப்போதாவது ஊருக்குள் தன்னுடைய குதிரை வண்டியில் போய்வருவார். ஆனாலும், அந்தத் துண்டுப்பிரதியில் சொல்லப்பட்டிருந்த எதிர்ப்புகள் சிலவற்றை அவருடைய குடும்பத்தார் எதிர்ப்பட்டார்கள். வழக்கை விசாரித்த நீதிபதிக்கு யெகோவாவின் சாட்சிகளைச் சுத்தமாகப் பிடிக்காததால் புஷே நிரபராதி என்பதற்கான ஆதாரத்தை அவர் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அதற்குப் பதிலாக, அந்தத் துண்டுப்பிரதி பகையைத் தூண்டிவிட்டது என்றும் புஷேயின் குடும்பத்தார் குற்றவாளிகளாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் எதிர் தரப்பு வக்கீல் சொன்னதை அவர் ஏற்றுக்கொண்டார். சொல்லப்போனால், நீதிபதியின் பார்வையில் உண்மையைச் சொல்வதே குற்றமாக இருந்தது. எமே புஷேயும் ஜிஷேலும் தேசத் துரோகப் பிரசுரங்களை வினியோகித்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்கள். லுசீல்கூட இரண்டு நாட்களுக்குச் சிறையில் அடைக்கப்பட்டாள். கனடா உச்ச நீதிமன்றத்தில் சகோதரர்கள் மேல்முறையீடு செய்தார்கள். அந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் ஒத்துக்கொண்டது.
14. துன்புறுத்துதல் இருந்த வருஷங்களில் க்யுபெக்கிலுள்ள சகோதரர்கள் என்ன செய்தார்கள்?
14 ஒருபக்கம் பயங்கரமான தாக்குதல்கள் நடந்துகொண்டிருந்தாலும், க்யுபெக்கிலுள்ள நம் சகோதர சகோதரிகள் தொடர்ந்து தைரியமாகப் பிரசங்கித்துவந்தார்கள். அதனால், நிறைய பலன்கள் கிடைத்தன. 1946-ல், அந்தத் துண்டுப்பிரதியை வினியோகித்த சமயத்தில் 300 யெகோவாவின் சாட்சிகள்தான் க்யுபெக்கில் இருந்தார்கள். ஆனால், நான்கு வருஷங்களில் அவர்களுடைய எண்ணிக்கை 1,000-ஆக உயர்ந்தது.c
15, 16. (அ) புஷே குடும்பத்தார் வழக்கில், கனடா உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது? (ஆ) அதனால், நம் சகோதரர்களுக்கும் மற்றவர்களுக்கும் என்ன நன்மை கிடைத்தது?
15 ஜூன் 1950-ல், ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட கனடா உச்ச நீதிமன்றம் எமே புஷேயின் வழக்கை விசாரித்தது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 18, 1950-ல் நீதிமன்றம் நமக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. ஏன்? அரசாங்கத்துக்கு எதிராக வன்முறையையோ கலவரத்தையோ தூண்டிவிடுவதுதான் “தேசத் துரோகச் செயல்” என்று யெகோவாவின் சாட்சிகள் சார்பாக சகோதரர் க்ளென் ஹவ் வாதாடியதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அந்தத் துண்டுப்பிரதியில் “வன்முறையைத் தூண்டும் எந்த விஷயங்களும் இல்லை. அது பேச்சு சுதந்திரத்தின் ஒரு அம்சமாகத்தான் இருந்தது” என்று சகோதரர் ஹவ் சொன்னார். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, “யெகோவா கொடுத்த வெற்றியைக் கண்கூடாகப் பார்த்தேன்” என்று அவர் சொன்னார்.d
16 உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு கடவுளுடைய அரசாங்கத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக இருந்தது. அதனால், தேசத் துரோகப் பிரசுரங்களை வினியோகித்ததாக க்யுபெக்கிலுள்ள யெகோவாவின் சாட்சிகளின்மேல் ஏற்கெனவே இருந்த 122 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. நீதிமன்றம் கொடுத்த அந்தத் தீர்ப்பினால், கனடா மக்களுக்கும் பிரிட்டிஷ் குடியரசின் மக்களுக்கும் என்ன நன்மை கிடைத்தது? அரசாங்கம் நடந்துகொள்ளும் விதத்தைப் பற்றி தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க அந்த மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்தது. அதுமட்டுமல்ல அந்தத் தீர்ப்பு, யெகோவாவின் சாட்சிகளுடைய உரிமைகளுக்கு எதிராக க்யுபெக் மாகாணத்தின் சர்ச்சும் அரசாங்கமும் கூட்டுச்சேர்ந்து நடத்திய தாக்குதல்களுக்கு முடிவு கட்டியது.e
வியாபாரிகளா, அல்லது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி மும்முரமாக அறிவிப்பவர்களா?
17. நம் ஊழிய வேலைகளைத் தடுக்க சில அரசாங்கங்கள் எப்படி முயற்சி செய்கின்றன?
17 ஆரம்பக் கால கிறிஸ்தவர்களைப் போல இன்றுள்ள யெகோவாவின் ஊழியர்களும் “கடவுளுடைய வார்த்தையை வைத்துப் பணம் சம்பாதிப்பதில்லை,” அதாவது வியாபாரம் செய்வதில்லை. (2 கொரிந்தியர் 2:17-ஐ வாசியுங்கள்.) ஆனாலும் சில அரசாங்கங்கள், வியாபாரம் சம்பந்தமான சட்டங்களை அடிப்படையாக வைத்து நம் ஊழிய வேலைகளைத் தடுக்க முயற்சி செய்கின்றன. யெகோவாவின் சாட்சிகள் வியாபாரிகளா அல்லது ஊழியர்களா என்பதைத் தெளிவுபடுத்திய இரண்டு வழக்குகளை இப்போது பார்க்கலாம்.
18, 19. பிரசங்க வேலையைத் தடை செய்ய டென்மார்க்கிலுள்ள அதிகாரிகள் என்ன செய்தார்கள்?
18 டென்மார்க். அக்டோபர் 1, 1932-ல் ஒரு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, அச்சடிக்கப்பட்ட எந்தப் பிரசுரத்தையும் ஒருவர் லைசன்ஸ் இல்லாமல் விற்பது சட்ட விரோதமான செயல். ஆனாலும், நம் சகோதரர்கள் எந்த லைசன்ஸையும் வாங்கவில்லை. அடுத்த நாள், டென்மார்க்கின் தலைநகரமான கோபன்ஹாகனுக்கு மேற்கே சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ரெஸ்கலா என்ற ஊரில் ஐந்து பிரஸ்தாபிகள் ஊழியம் செய்துகொண்டிருந்தார்கள். அன்று சாயங்காலத்தில், அகஸ்ட் லேமன் என்ற சகோதரரைக் காணவில்லை. லைசன்ஸ் இல்லாமல் பொருள்களை விற்றதாகக் குற்றம்சாட்டப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
19 டிசம்பர் 19, 1932-ல் அகஸ்ட் லேமன் நீதிமன்றத்தில் ஆஜரானார். பைபிள் பிரசுரங்களைக் கொடுப்பதற்காகவே வீடுவீடாக மக்களைச் சந்தித்ததாகவும் வியாபார நோக்கத்தோடு அப்படிச் செய்யவில்லை என்பதாகவும் அவர் தெள்ளத்தெளிவாகச் சொன்னார். அவர் சொன்னதை நீதிமன்றம் ஒத்துக்கொண்டது. “குற்றம்சாட்டப்பட்டவருக்கு . . . தன்னைக் கவனித்துக்கொள்ளும் அளவுக்குப் போதுமான வசதி இருக்கிறது. அவர் எந்தப் பண ஆதாயத்துக்காகவும் இதைச் செய்யவில்லை, அப்படிப்பட்ட ஆதாயத்தை அவர் இதுவரை பெற்றதும் இல்லை. அதற்குப் பதிலாக, தன்னுடைய சொந்த செலவில்தான் இந்த வேலையைச் செய்கிறார்” என்று நீதிமன்றம் அறிவித்தது. லேமன் செய்த வேலை, ‘வியாபாரத்தோடு சம்பந்தப்பட்டது’ எனச் சொல்ல முடியாது என்று யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாக நீதிமன்றம் சொன்னது. ஆனால் கடவுளுடைய மக்களின் எதிரிகள், பிரசங்க வேலையை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். (சங். 94:20) அரசுத் தரப்பு வக்கீல் நாட்டின் உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்தார். அப்போது சகோதரர்கள் என்ன செய்தார்கள்?
20. டென்மார்க் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது, அதற்கு நன்றி காட்டும் விதமாக சகோதரர்கள் என்ன செய்தார்கள்?
20 அந்த விசாரணை நடக்கவிருந்த வாரத்தில் டென்மார்க்கிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் பிரசங்க வேலையை ரொம்ப மும்முரமாகச் செய்தார்கள். அக்டோபர் 3, 1933, செவ்வாய்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் அதன் தீர்ப்பை அளித்தது. அகஸ்ட் லேமன், சட்டத்தை மீறவில்லை என்று கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்துக்கொண்டது. அந்தத் தீர்ப்பு, யெகோவாவின் சாட்சிகள் தொடர்ந்து சுதந்திரமாகப் பிரசங்கிப்பதற்கு உதவியாக இருந்தது. யெகோவா கொடுத்த இந்த வெற்றிக்கு நன்றி காட்டும் விதமாக, சகோதர சகோதரிகள் ஊழிய வேலையை இன்னும் மும்முரமாகச் செய்தார்கள். அந்தத் தீர்ப்பு கிடைத்த சமயத்திலிருந்து, டென்மார்க்கில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளால் அரசாங்கத்திடமிருந்து எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தொடர்ந்து ஊழியம் செய்ய முடிந்திருக்கிறது.
21, 22. சகோதரர் மர்டாக்கின் வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது?
21 அமெரிக்கா. பிப்ரவரி 25, 1940, ஞாயிற்றுக்கிழமை, பென்ஸில்வேனியாவிலுள்ள பிட்ஸ்பர்க்கில் ஜெனட் என்ற நகரத்தில் ராபர்ட் மர்டாக் என்ற பயனியர் சகோதரரும் ஏழு பிரஸ்தாபிகளும் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டார்கள். லைசன்ஸ் வாங்காமல் பிரசுரங்களைக் கொடுத்த குற்றத்துக்காக, அவர்களுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அவர்கள் செய்த மேல்முறையீட்டை அமெரிக்க உச்ச நீதிமன்றம் விசாரிக்க ஒத்துக்கொண்டது.
22 மே 3, 1943-ல் உச்ச நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. மதப் பிரசுரங்களை வினியோகிப்பதற்கு லைசன்ஸ் பெற வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது அரசாங்கச் சட்டத்துக்கு எதிரானது என அறிவித்தது. “பிரசுரங்களை அச்சிடுவதற்கான சுதந்தரத்துக்கும் மதச் சுதந்திரத்துக்கும்” எதிரான தடையுத்தரவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. விசாரணையில் ஈடுபட்ட பெரும்பாலான நீதிபதிகளின் கருத்தை நீதிபதி வில்லியம் ஓ. டக்லஸ் தெரிவித்தார். யெகோவாவின் சாட்சிகள், “பிரசங்க வேலை செய்வதோடு மதப் பிரசுரங்களையும் வினியோகிக்கிறார்கள்” என்று அவர் குறிப்பிட்டார். அதோடு, “சர்ச்சுகளில் கொடுக்கப்படும் பிரசங்கத்துக்கும் அங்கே நடக்கும் வழிபாட்டுக்கும் . . . எந்தளவு மதிப்பு இருக்கிறதோ அந்தளவு இந்த வேலைக்கும் மதிப்பு இருக்கிறது” என்றும் குறிப்பிட்டார்.
23. 1943-ல் நமக்குச் சாதகமாகக் கிடைத்த தீர்ப்புகள் இன்று நமக்கு எப்படி உதவுகின்றன?
23 உச்ச நீதிமன்றம் கொடுத்த அந்தத் தீர்ப்பு கடவுளுடைய மக்களுக்கு ஒரு பெரிய வெற்றியாக இருந்தது. நாம் வியாபாரிகள் அல்ல, கிறிஸ்தவ ஊழியர்கள் என்பதை அது உறுதிப்படுத்தியது. 1943-ஆம் வருஷம் அதே நாளில், உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய 13 வழக்குகளில் 12 வழக்குகளுக்கு வெற்றி கிடைத்தது. அவற்றில், மர்டாக்கின் வழக்கும் ஒன்று. சமீப காலத்தில்கூட, நல்ல செய்தியைப் பொது இடங்களிலும் வீடுவீடாகவும் பிரசங்கிப்பதற்கான நம் உரிமைக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றை முறியடிக்க நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள்தான் அடிப்படையாக இருந்திருக்கின்றன.
“நாங்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்”
24. பிரசங்க வேலையை அரசாங்கம் தடை செய்யும்போது நாம் என்ன செய்கிறோம்?
24 யெகோவாவின் ஊழியர்களான நமக்கு, நல்ல செய்தியை அறிவிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமையை அரசாங்கம் கொடுக்கும்போது நாம் ரொம்ப நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஆனால், பிரசங்க வேலையை அரசாங்கம் தடை செய்யும்போது, நம் ஊழிய முறைகளைக் கொஞ்சம் மாற்றிக்கொண்டு, தொடர்ந்து ஊழியம் செய்கிறோம். அப்போஸ்தலர்களைப் போல நாம் “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்.” (அப். 5:29; மத். 28:19, 20) அதேசமயத்தில், அந்தத் தடை உத்தரவுகளை நீக்கும்படி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கிறோம். அதற்கு இரண்டு உதாரணங்களைப் பார்க்கலாம்.
25, 26. உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்குமளவுக்கு நிகாராகுவாவில் என்ன சம்பவங்கள் நடந்தன, அதன் விளைவு என்ன?
25 நிகாராகுவா. நவம்பர் 19, 1952-ல் மிஷனரியாகவும் கிளை அலுவலக ஊழியராகவும் சேவை செய்த டானவன் மன்ச்டர்மன், நிகாராகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இருக்கும் குடியேற்ற அலுவலகத்துக்கு (Immigration Office) போனார். ஏனென்றால், அந்த அலுவலகத்தின் அதிகாரியான அர்னால்டோ கார்சியாவிடம் போகும்படி அவருக்கு உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது. நிகாராகுவாவில் இருக்கும் எல்லா யெகோவாவின் சாட்சிகளும் “தங்களுடைய மத நம்பிக்கைகளைப் பிரசங்கிப்பதும் தங்கள் மத நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தடை செய்யப்பட்டிருக்கிறது” என்று அந்த அதிகாரி டானவனிடம் சொன்னார். அதற்கான காரணத்தைக் கேட்டபோது கார்சியா இரண்டு விஷயங்களைச் சொன்னார். ஊழியம் செய்ய யெகோவாவின் சாட்சிகளுக்கு அரசாங்கத்தின் அனுமதி இல்லை என்றும் அவர்கள் கம்யூனிஸ்டுகள் என குற்றம்சாட்டப்பட்டிருக்கிறார்கள் என்றும் சொன்னார். நம்மீது இந்தக் குற்றச்சாட்டைக் கொண்டுவந்தது யார்? ரோமன் கத்தோலிக்க குருமார்கள்தான்.
26 சகோதரர் டானவன் உடனடியாக அரசாங்கத்திடமும், மத அமைச்சகத்திடமும், ஜனாதிபதி அனாஸ்த்தாசியோ சோமோஸா கார்சியாவிடமும் முறையிட்டார். ஆனால், எந்த உதவியும் கிடைக்கவில்லை. அதனால், சகோதரர்கள் கூட்டங்கள் நடத்துவதிலும் ஊழியம் செய்வதிலும் சில மாற்றங்களைச் செய்தார்கள். ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களை நடத்தாமல் சின்ன சின்ன தொகுதிகளாக கூட்டங்களை நடத்தினார்கள். தெரு ஊழியம் செய்வதை நிறுத்தினாலும், நல்ல செய்தியைத் தொடர்ந்து அறிவித்துவந்தார்கள். அதேசமயத்தில், தடை உத்தரவை நீக்கும்படி நிகாராகுவா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்கள். அந்தத் தடை உத்தரவைப் பற்றியும், அவர்கள் கொடுத்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயங்களைப் பற்றியும் செய்தித்தாள்கள் வெளியிட்டன. உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை விசாரிக்க ஒத்துக்கொண்டது. அதன் விளைவு? ஜூன் 19, 1953-ல் உச்ச நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமான தீர்ப்பை ஒருமனதாக வழங்கியது. அந்தத் தடை உத்தரவால், பேச்சு சுதந்திரத்துக்கும், மனசாட்சியின்படி நடப்பதற்கும், மத நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்வதற்குமுள்ள சட்டப்பூர்வ உரிமை மீறப்பட்டிருப்பதை நீதிமன்றம் கண்டறிந்தது. அதோடு, நிகாராகுவா அரசாங்கத்துக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் இடையே மீண்டும் சுமூகமான உறவு இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
27. நிகாராகுவா மக்கள், நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கேட்டபோது ஏன் ஆச்சரியப்பட்டார்கள், அந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று சகோதரர்கள் நினைத்தார்கள்?
27 உச்ச நீதிமன்றம் யெகோவாவின் சாட்சிகளுக்குச் சாதகமாக வழங்கிய தீர்ப்பு, நிகாராகுவா மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனென்றால், கிறிஸ்தவ மத குருமார்களின் செல்வாக்கு ரொம்பவே அதிகமாக இருந்ததால் நீதிமன்றம் அவர்களுக்கு விரோதமாக எதுவும் செய்ததில்லை. அதோடு, அரசாங்க அதிகாரிகளின் செல்வாக்கும் ரொம்ப அதிகமாக இருந்ததால் அவர்களுடைய விருப்பத்திற்கு எதிராக நீதிமன்றம் பொதுவாக தீர்ப்பு வழங்காது. தங்களுக்கு ராஜாவின் பாதுகாப்பு இருந்ததாலும் தாங்கள் தொடர்ந்து ஊழியத்தில் ஈடுபட்டதாலும்தான் அந்த வெற்றி கிடைத்தது என்று சகோதரர்கள் முழுமையாக நம்பினார்கள்.—அப். 1:8.
28, 29. 1980-களின் மத்திபத்தின்போது ஜயரில் யெகோவாவின் ஊழியர்களுடைய நிலைமை எப்படி மாறியது?
28 ஜயர். இப்போது காங்கோ மக்களாட்சி குடியரசு என்று அழைக்கப்படுகிற ஜயரில், 1980-களின் மத்திபத்தின்போது சுமார் 35,000 யெகோவாவின் சாட்சிகள் இருந்தார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகளில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டதால் கிளை அலுவலகம் ஒரு புதிய கிளை அலுவலகத்தைக் கட்டியது. டிசம்பர் 1985-ல் தலைநகரமான கின்ஷாசாவிலுள்ள ஒரு ஸ்டேடியத்தில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கு 32,000 பேர் வந்திருந்தார்கள். உலகின் பல பகுதிகளில் இருந்தும் சகோதர சகோதரிகள் வந்திருந்தார்கள். அதற்கு பின், யெகோவாவின் ஊழியர்களுடைய நிலைமை மாற ஆரம்பித்தது. அவர்களுக்கு என்ன நடந்தது?
29 கனடாவிலுள்ள க்யூபெக்கைச் சேர்ந்த மார்சேல் ஃபில்ட்டோ என்ற மிஷனரி சகோதரர் அப்போது ஜயரில் சேவை செய்துவந்தார். அவர், டூப்லேசியின் ஆட்சிக் காலத்தில் துன்புறுத்தலை எதிர்ப்பட்டவர். அவர் சொல்கிறார்: “மார்ச் 12, 1986 அன்று பொறுப்பில் இருந்த சகோதரர்களிடம் ஒரு கடிதம் கொடுக்கப்பட்டது. ஜயரிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய அமைப்பு சட்டவிரோதமானது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.” அந்தத் தடை உத்தரவில் ஜனாதிபதியான மபூட்டோ சேசே சேகோ கையெழுத்திட்டிருந்தார்.
30. கிளை அலுவலகம் என்ன முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது, கடைசியில் என்ன செய்யத் தீர்மானித்தது?
30 அடுத்த நாள் தேசிய வானொலியில், “இனி [ஜயரில்] யெகோவாவின் சாட்சிகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடுவார்கள்” என்ற அறிவிப்பு செய்யப்பட்டது. உடனடியாக துன்புறுத்தல் ஆரம்பித்தது. ராஜ்ய மன்றங்கள் அழிக்கப்பட்டன. சகோதரர்களின் பொருள்கள் திருடப்பட்டன. அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் போடப்பட்டார்கள், அடிக்கப்பட்டார்கள். பிள்ளைகள்கூட சிறையில் போடப்பட்டார்கள். அக்டோபர் 12, 1988-ல் நம் அமைப்பின் உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ராணுவப் பிரிவு ஒன்று நம் கிளை அலுவலகத்தைக் கைப்பற்றியது. பொறுப்பில் இருந்த சகோதரர்கள், ஜனாதிபதி மபூட்டோவிடம் ஒரு மனு கொடுத்தார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அப்போது, “உச்ச நீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்வதா, அல்லது கொஞ்சக் காலம் காத்திருப்பதா?” என்ற முக்கியமான தீர்மானத்தை கிளை அலுவலகக் குழு எடுக்க வேண்டியிருந்தது. மிஷனரியாகவும் கிளை அலுவலகக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான திமோத்தி ஹோம்ஸ் சொல்கிறார்: “ஞானத்துக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் நாங்கள் யெகோவாவையே நம்பியிருந்தோம்.” அந்தக் குழு ஜெபம் செய்து, கலந்து பேசிய பிறகு, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பதற்கு அது சரியான சமயம் கிடையாது என்று முடிவு செய்தது. அதேநேரத்தில், சகோதரர்களை எப்படிப் பலப்படுத்தலாம்... பிரசங்க வேலையை எப்படித் தொடர்ந்து செய்யலாம்... போன்ற விஷயங்களுக்குக் கவனம் செலுத்தியது.
“எந்தவொரு சூழ்நிலையையும் யெகோவாவினால் மாற்ற முடியும் என்பதை அந்த வழக்கின்போது நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம்”
31, 32. ஜயர் உச்ச நீதிமன்றம் வியக்கவைக்கும் என்ன தீர்ப்பை வழங்கியது, இதனால் சகோதரர்கள் எப்படி உணர்ந்தார்கள்?
31 பல வருஷங்களுக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகளுக்கு இருந்த எதிர்ப்பு குறைந்தது, நாட்டில் மனித உரிமைகளுக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பு அதிகமானது. தடை உத்தரவுக்கு எதிராக ஜயர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு இதுதான் சரியான சமயம் என்று கிளை அலுவலகக் குழு முடிவுசெய்தது. அந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒத்துக்கொண்டது. ஜனாதிபதி தடை உத்தரவு போட்டு கிட்டத்தட்ட ஏழு வருஷங்களுக்குப் பிறகு, அதாவது ஜனவரி 8, 1993-ல் உச்ச நீதிமன்றம் நமக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது. யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராக அரசாங்கம் செய்தது சட்ட விரோதமான செயல் என்று தீர்ப்பளித்து தடை உத்தரவை நீக்கியது. தங்களுடைய உயிருக்கு ஆபத்து வரும் சூழ்நிலை இருந்தாலும், ஜனாதிபதியின் முடிவை அந்த நீதிபதிகள் செல்லாததாக ஆக்கிவிட்டார்கள். “எந்தவொரு சூழ்நிலையையும் யெகோவாவினால் மாற்ற முடியும் என்பதை அந்த வழக்கின்போது நாங்கள் கண்கூடாகப் பார்த்தோம்” என்று சகோதரர் ஹோம்ஸ் சொல்கிறார். (தானி. 2:21) இந்த வெற்றி சகோதரர்களின் விசுவாசத்தைப் பலப்படுத்தியது. எந்தச் சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான வழிநடத்துதலை, ராஜாவான இயேசுதான் தன்னுடைய மக்களுக்குக் கொடுத்தார் என்பதை அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
32 தடை உத்தரவு நீக்கப்பட்ட பிறகு, மிஷனரிகளை மீண்டும் வரவழைப்பதற்கும், புதிய கிளை அலுவலகத்தைக் கட்டுவதற்கும், பைபிள் பிரசுரங்களை இறக்குமதி செய்வதற்கும் கிளை அலுவலகத்துக்கு அனுமதி கிடைத்தது.f ஆன்மீக விஷயங்களில், தன் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராதபடி யெகோவா எப்போதும் பார்த்துக்கொள்கிறார். உலகம் முழுவதுமுள்ள கடவுளுடைய ஊழியர்களுக்கு இது எவ்வளவு சந்தோஷத்தைத் தருகிறது!—ஏசா. 52:10.
“யெகோவா எனக்குத் துணையாக இருக்கிறார்”
33. இதுவரை பார்த்த வழக்குகளிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?
33 “உங்கள் எதிரிகள் எல்லாரும் திரண்டு வந்தாலும் உங்களை எதிர்த்து நிற்கவோ எதிர்த்துப் பேசவோ முடியாதபடி நான் உங்களுக்கு வார்த்தைகளையும் ஞானத்தையும் அருளுவேன்” என்று இயேசு வாக்குக் கொடுத்தார். (லூக்கா 21:12-15-ஐ வாசியுங்கள்.) இந்த வாக்குறுதியை இயேசு நிறைவேற்றியிருக்கிறார் என்பதை இதுவரை பார்த்த வழக்குகள் காட்டுகின்றன. சில சமயங்களில், தன்னுடைய மக்களைப் பாதுகாக்க கமாலியேலைப் போன்ற ஆட்களை யெகோவா இன்றும் பயன்படுத்தியிருக்கிறார். நீதி வழங்கும்படி தைரியமான நீதிபதிகளையும் வக்கீல்களையும் அவர் தூண்டியிருக்கிறார். நம்முடைய எதிரிகளின் ஆயுதங்களை மழுங்க செய்திருக்கிறார். (ஏசாயா 54:17-ஐ வாசியுங்கள்.) எப்படிப்பட்ட எதிர்ப்புகள் வந்தாலும் யெகோவாவின் வேலை தடைபடாது.
34. நமக்குக் கிடைத்த வெற்றிகள் ஏன் ஒரு சாதாரண விஷயம் என்று சொல்ல முடியாது, இவை எதைக் காட்டுகின்றன? (“பிரசங்க வேலையைத் தொடர்ந்து செய்ய உதவிய குறிப்பிடத்தக்க தீர்ப்புகள்” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
34 நமக்குக் கிடைத்த வெற்றிகள் ஏன் ஒரு சாதாரண விஷயம் அல்ல? இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: யெகோவாவின் சாட்சிகள் பிரபலமானவர்களோ செல்வாக்குள்ளவர்களோ கிடையாது. நாம் ஓட்டுப் போடுவதோ அரசியல் கட்சிகளை ஆதரிப்பதோ கிடையாது. அதோடு, நமக்குச் சாதகமாக எதையும் செய்யும்படி அரசியல்வாதிகளைத் தூண்டுவதும் கிடையாது. பெரிய பெரிய வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகும் நாம் “கல்வியறிவு இல்லாத சாதாரண ஆட்கள்” என்று கருதப்படுகிறோம். (அப். 4:13) மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், பலம் படைத்த அரசியல் மற்றும் மதத் தலைவர்களை எதிர்த்து நீதிமன்றங்கள் நமக்குச் சாதகமாகத் தீர்ப்பு கொடுக்க வாய்ப்பே இல்லை. ஆனாலும், பலமுறை நீதிமன்றங்கள் நமக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியிருக்கின்றன. “[கடவுளுடைய] முன்னிலையில், கிறிஸ்துவோடு ஒன்றுபட்டு” நாம் நடக்கிறோம் என்பதை இந்த வெற்றிகள் காட்டுகின்றன. (2 கொ. 2:17) அதனால், பவுலைப் போல் நாமும், “யெகோவா எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன்” என்று சொல்கிறோம்.—எபி. 13:6.
a சகோதரர் ஹேடன் கவிங்டன் நம் சகோதரர்களின் சார்பாக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்காடிய 43 வழக்குகளில், முதல் வழக்குத்தான் கேன்ட்வெல் மற்றும் கனெடிகட் அரசாங்கத்துக்கு இடையே நடந்த வழக்கு. அவர் 1978-ல் மரணமடைந்தார். அவருடைய மனைவி டாரத்தி 2015-ல், அவருடைய 92-ஆம் வயதில் மரணமடைந்தார்.
b 1606-ல் ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு போடப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி ஒருவர் அரசாங்கத்துக்கு எதிராக பகையைத் தூண்டிவிட்டால் அவரைக் குற்றவாளி என்று அறிவிக்க ஜூரிக்கு (jury) அனுமதி இருந்தது. அந்த நபர் சொல்வது உண்மையாக இருந்தால்கூட குற்றவாளி என்றுதான் தீர்க்கப்பட்டார்.
c 1950-ல் 164 முழுநேர ஊழியர்கள் க்யுபெக்கில் சேவை செய்தார்கள். அவர்களில் 63 பேர் கிலியட் பட்டதாரிகள். க்யுபெக்கில் தங்களுக்குக் கடும் எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் இந்தப் பட்டதாரிகள் நியமிப்பை ஏற்றுக்கொண்டார்கள்.
d சகோதரர் டபிள்யு. க்ளென் ஹவ் ஒரு தைரியமான வக்கீல். 1943 முதல் 2003 வரை கனடாவிலும் மற்ற நாடுகளிலும் யெகோவாவின் சாட்சிகள் சார்பாக நூற்றுக்கணக்கான வழக்குகளில் திறமையாக வாதாடினார்.
e இந்த வழக்கைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு ஏப்ரல் 22, 2000 விழித்தெழு! பக்கங்கள் 18-24-லுள்ள “இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
f பிற்பாடு, அந்த ராணுவப் பிரிவு கிளை அலுவலகத்திலிருந்து வெளியேறிவிட்டது. ஆனால், வேறொரு இடத்தில் புதிய கிளை அலுவலகம் கட்டப்பட்டது.