சூழ்நிலைமைகள் உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றனவா?
வேதனைமிக்க சூழ்நிலைமைகளும் கஷ்டங்களும் இந்தக் ‘கொடிய காலங்களில்’ சகஜமாக காணப்படுகின்றன. (2 தீமோத்தேயு 3:1) சில பிரச்சினைகள் தற்காலிகமானவை, அதனால் நாளடைவில் அவை மறைந்துவிடும். வேறுசிலவோ மாதக்கணக்காக, ஏன் வருஷக்கணக்காகவும்கூட விடாமல் தொடருகின்றன. அதனால், “என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்” என்று யெகோவாவை நோக்கி புலம்பிய சங்கீதக்காரனாகிய தாவீதைப் போல அநேகர் உணருகின்றனர்.—சங்கீதம் 25:17.
திணறடிக்கும் பிரச்சினைகளோடு நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், உதவியையும் உற்சாகத்தையும் நீங்கள் பைபிளிலிருந்து பெறலாம். கஷ்டங்களை வெற்றிகரமாக சமாளித்து யெகோவாவுக்கு உண்மையுடனிருந்த இரு ஊழியர்களின் வாழ்க்கையைப் பற்றி நாம் இப்பொழுது சிந்திக்கலாம். யோசேப்பு, தாவீது என்பவர்களே அந்த ஊழியர்கள். துன்பங்கள் வந்த சமயத்தில் அவர்கள் எப்படி பிரதிபலித்தார்கள் என்பதை ஆராய்வதன் மூலம், இதுபோன்ற சவால்களை இன்று நம் வாழ்க்கையில் சந்தித்தால் அவற்றை சமாளிக்க உதவும் நடைமுறையான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம்.
மாபெரும் சவால்களை சந்தித்தல்
யோசேப்புக்கு 17 வயதானபோது, தனது சொந்த குடும்பத்திற்குள்ளேயே பெரும் பிரச்சினையை சந்தித்தார். தங்கள் தகப்பன் யாக்கோபு ‘அவனுடைய சகோதரர் எல்லாரிலும் யோசேப்பை அதிகமாய் நேசிப்பதை’ அவருடைய அண்ணன்மார் கண்டார்கள். அதனால், ‘அவரை வெறுத்தனர், அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை.’ (ஆதியாகமம் [தொடக்க நூல்] 37:4, பொது மொழிபெயர்ப்பு) இந்தச் சூழ்நிலைமை யோசேப்புக்கு எப்பேர்ப்பட்ட கவலையையும் துன்பத்தையும் தந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். கடைசியில், யோசேப்பின் சகோதரர்கள் அவரை அந்தளவுக்கு பகைத்ததால் அவரை ஓர் அடிமையாக விற்றுவிட்டார்கள்.—ஆதியாகமம் 37:26-33.
எகிப்தில் ஓர் அடிமையாக இருந்தபோது, யோசேப்பு தன் எஜமானருடைய மனைவியின் பாலியல் தூண்டுதல்களை எதிர்த்து நிற்க வேண்டியிருந்தது. அவளை கண்டுகொள்ளாததால், அவள் கோபமடைந்து, யோசேப்பு தன்னை கற்பழிக்க முயன்றதாக அவன் மீது பொய்க் குற்றம் சாட்டினாள். இதனால் அவனுடைய எஜமான், ‘காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான்.’ அங்கே “அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.” (ஆதியாகமம் 39:7-20; சங்கீதம் 105:17, 18) இது எப்பேர்ப்பட்ட சோதனையாக இருந்திருக்க வேண்டும்! மற்றவர்களால் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியினால் யோசேப்பு ஓர் அடிமையாகவோ சிறைக்கைதியாகவோ கிட்டத்தட்ட 13 வருடங்களைக் கழித்தார்.—ஆதியாகமம் 37:2; 41:46.
பூர்வ இஸ்ரவேலில் வாழ்ந்த தாவீதும் ஓர் இளைஞனாக சோதனைகளை எதிர்ப்பட்டார். பல வருடங்களாக, ஒரு நாடோடியாக வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார், சவுல் அரசனால் ஒரு மிருகத்தைப் போல வேட்டையாடப்பட்டார். தாவீதின் உயிர் எப்பொழுதும் ஆபத்தில் இருந்தது. ஒரு சந்தர்ப்பத்தில், உணவுக்காக ஆசாரியனாகிய அகிமெலேக்கிடம் சென்றார். (1 சாமுவேல் 21:1-7) அவருக்கு அகிமெலேக் உதவி செய்ததைக் கேள்விப்பட்டு, அகிமெலேக்கை மட்டுமல்ல, எல்லா ஆசாரியர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் கொலை செய்யும்படி சவுல் ஆணை பிறப்பித்தான். (1 சாமுவேல் 22:12-19) இந்த துயர சம்பவத்திற்குத் தானே மறைமுக காரணமாக இருந்ததால் தாவீது எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார் என்று உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
யோசேப்பும் தாவீதும் துன்பத்தையும் அநியாயத்தையும் வருஷக்கணக்காக சகித்திருந்ததை சற்று கற்பனை செய்து பாருங்கள். தங்களுக்கு நேரிட்ட கஷ்டமான சூழ்நிலைமைகளை அவர்கள் எப்படி சமாளித்தார்கள் என்பதை ஆராய்வதன் மூலம் நாம் மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொள்ளலாம். இவர்களை நாம் பின்பற்றுவதற்குரிய மூன்று வழிகளை இப்பொழுது சிந்திக்கலாம்.
கோபத்தையும் மனக்கசப்பையும் விட்டுவிடுங்கள்
முதலாவதாக, உண்மையுள்ள இந்த மனிதர்கள் கோபம், மனக்கசப்பு எனும் வலையில் தங்களை சிக்கவைத்துக் கொள்ளவில்லை. யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தபோது, தன்னுடைய சகோதரர்கள் இழைத்த துரோகத்தை எண்ணி எண்ணி எளிதில் அவர் மனக்கசப்பு அடைந்திருக்கலாம். அவர்களை என்றைக்காவது கண்டால் எப்படி பழிவாங்குவதென ஒருவேளை திட்டம் போட்டிருக்கலாம். அழிவுக்கேதுவான இப்படிப்பட்ட எண்ணம் தன்னை அண்டாதவாறு யோசேப்பு பார்த்துக் கொண்டார் என நமக்கு எப்படி தெரியும்? எகிப்தில் தானியம் வாங்குவதற்கு வந்திருந்த தனது சகோதரர்களைப் பழிவாங்கும் வாய்ப்பிருந்தபோது அவர் நடந்துகொண்ட விதத்தை சிந்தித்துப் பாருங்கள். அந்த விவரப்பதிவு சொல்கிறது: ‘[யோசேப்பு] அவர்களை விட்டு அப்புறம் போய் அழுதார்; . . . [தனது சகோதரர்களின்] சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு [தனது வேலைக்காரருக்கு] கட்டளையிட்டார்.’ பிற்பாடு, தன் தகப்பனை எகிப்துக்கு அழைத்து வரும்படி தன் சகோதரர்களை அவர் அனுப்பியபோது, யோசேப்பு அவர்களிடம் “நீங்கள் போகும் வழியிலே சண்டை பண்ணிக் கொள்ளாதிருங்கள்” என்று சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தினார். மனக்கசப்போ கோபமோ தனது வாழ்க்கையை அழிப்பதற்கு அவர் இடமளிக்கவில்லை என்பதை யோசேப்பு சொல்லிலும் செயலிலும் நிரூபித்தார்.—ஆதியாகமம் 42:24, 25; 45:24.
இது போலவே, தாவீதும் சவுல் அரசன் மீது மனக்கசப்பை வளர்க்கவில்லை. இரண்டு சந்தர்ப்பங்களில் சவுலை கொலை செய்யும் வாய்ப்பு தாவீதுக்குக் கிடைத்தது. இருந்தாலும், கொலை செய்யும்படி அவருடைய ஆட்கள் அவரைத் தூண்டியபோது, அவர் இவ்வாறு சொன்னார்: “கர்த்தர் அபிஷேகம் பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்.” ஆகவே தாவீது தனது ஆட்களிடம் இவ்வாறு சொல்லி, இந்த விஷயத்தை யெகோவாவிடம் விட்டுவிட்டார்: “கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப் போய் மாண்டாலொழிய, நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன்.” பிறகு, சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்தபோது அவர்களுக்காக தாவீது துக்கம் கொண்டாடினார், ஒரு புலம்பல் பாடலையும் இயற்றினார். யோசேப்பைப் போலவே, தாவீதும் மனக்கசப்பு தன்னை ஆட்டிப்படைக்க அனுமதிக்கவில்லை.—1 சாமுவேல் 24:3-6; 26:7-13; 2 சாமுவேல் 1:17-27.
ஏதாவது அநீதி இழைக்கப்படுகையில் நாம் படும் வேதனை காரணமாக மனக்கசப்பையோ கோபத்தையோ நம் மனதில் வைக்கிறோமா? இது எளிதில் நேரிடலாம். நம்முடைய உணர்ச்சிகள் நம்மை ஆட்டிப்படைக்க அனுமதித்தால், இழைக்கப்பட்ட அநீதியைவிட அதிக பாதிப்பை நாம் வரவழைத்துக் கொள்ளக்கூடும். (எபேசியர் 4:26-27) மற்றவர்களின் செயல்களை நாம் ஒருவேளை கட்டுப்படுத்த முடியாதபோதிலும், நம்முடைய பிரதிபலிப்பை நாம் நிச்சயம் கட்டுப்படுத்த முடியும். யெகோவா தமது உரிய நேரத்தில் காரியங்களை சரிசெய்வார் என விசுவாசம் நமக்கு இருக்கும்போது கோபத்தையும் மனக்கசப்பையும் விட்டுவிடுவது எளிதாக இருக்கும்.—ரோமர் 12:17-19.
உங்கள் சூழ்நிலைமையை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்
நாம் கற்றுக்கொள்ளும் இரண்டாவது பாடம் என்னவென்றால், நம்முடைய சூழ்நிலைமைகள் நம் வாழ்க்கையை அப்படியே முடக்கிப்போட நாம் அனுமதிக்கக் கூடாது. நம்மால் செய்ய முடிந்த விஷயத்தின் மீது கவனம் செலுத்தாமல் நம்மால் செய்ய முடியாத விஷயத்தின் மீதே கவனம் செலுத்தி அதிலேயே நாம் மூழ்கிவிடக்கூடும். கடைசியில், நம்முடைய சூழ்நிலைமைகள் நம்மை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துவிடும். இதுவே யோசேப்புக்கு நேரிட்டிருக்கலாம். ஆனால் அதற்கு மாறாக, அவர் தனது சூழ்நிலைமையை நன்றாக பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தார். ஓர் அடிமையாக வேலை செய்து கொண்டிருந்தபோது, ‘யோசேப்பின் எஜமான் அவனிடத்தில் தயவு வைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கினான்.’ சிறைச்சாலையில் இருந்தபோதும் யோசேப்பு இதே அணுகுமுறையைக் கையாண்டார். யெகோவாவின் ஆசீர்வாதத்தாலும் யோசேப்பின் ஊக்கமான முயற்சியாலும், “சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான்.”—ஆதியாகமம் 39:4, 21-23.
தாவீது ஒரு நாடோடியாக வாழ்ந்த காலத்தில், அவரும் தனது சூழ்நிலைமைகளை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். பாரான் வனாந்தரத்தில் வாசம் செய்த சமயத்தில், அவரும் அவருடைய ஆட்களும் நாபாலுடைய மந்தைகளை கொள்ளைக் கூட்டத்தாரிடமிருந்து பாதுகாத்தனர். “அவர்கள் இரவும் பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள்” என நாபாலின் மேய்ப்பர்களில் ஒருவன் சொன்னான். (1 சாமுவேல் 25:16) பிறகு, சிக்லாக்கில் தங்கியிருந்தபோது, தெற்கே இஸ்ரவேலின் விரோதிகள் வசமிருந்த பட்டணங்கள் மீது தாவீது திடீர் தாக்குதல் நடத்தி, யூதாவின் எல்லைகளைக் கைப்பற்றினார்.—1 சாமுவேல் 27:8; 1 நாளாகமம் 12:20-22.
நம்முடைய சூழ்நிலைமைகளை நன்றாக பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் அதிக முயற்சி எடுக்க வேண்டியுள்ளதா? அப்படி செய்வது சவால்மிக்கதாக இருந்தபோதிலும், நாம் வெற்றிபெற முடியும். அப்போஸ்தலன் பவுல் தனது வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பார்த்து இவ்வாறு எழுதினார்: ‘நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். . . . எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் கற்றுக்கொண்டேன்.’ வாழ்க்கையைக் குறித்ததில் எப்படி இத்தகைய அணுகுமுறையை பவுல் வளர்த்துக்கொண்டார்? தொடர்ந்து யெகோவாவை சார்ந்திருந்ததன் மூலமே. ‘என்னைப் பெலப்படுத்துகிறவராலே எல்லாவற்றையுஞ் செய்ய எனக்குப் பெலனுண்டு’ என சொன்னார்.—பிலிப்பியர் 4:11-13; NW.
யெகோவாவுக்காக காத்திருங்கள்
மூன்றாவது பாடம் என்னவென்றால், நம்முடைய சூழ்நிலைமைகளை மாற்றுவதற்கு வேதப்பூர்வமற்ற வழிமுறைகளை கையாளுவதற்குப் பதிலாக, நாம் யெகோவாவுக்காக காத்திருக்க வேண்டும். சீஷனாகிய யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது [“சகிப்புத்தன்மை,” NW] பூரண கிரியை செய்யக்கடவது.” (யாக்கோபு 1:4) நாம் அனுபவிக்கும் சோதனையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவருவதற்காக வேதப்பூர்வமற்ற எந்த வழிவகைகளையும் தேடாமல் அந்தச் சோதனையை முழுவதும் அதன் போக்கிலேயே செல்ல அனுமதிப்பதன் மூலம் சகிப்புத்தன்மை அதன் ‘கிரியையை பூரணமாக’ செய்ய விட்டுவிட வேண்டும். அப்பொழுது நம்முடைய விசுவாசம் சோதிக்கப்பட்டு புடமிடப்படும், அதன்பின்பு அது எந்தளவு தாங்கும் சக்தியுடையது என்பது வெளிப்படும். யோசேப்புக்கும் தாவீதுக்கும் இந்த மாதிரியான சகிப்புத்தன்மை இருந்தது. யெகோவாவின் வெறுப்பை சம்பாதிக்கும் எந்தவொரு தீர்வையும் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சி செய்யவில்லை. மாறாக, தங்களுடைய சூழ்நிலைமைகளுக்கேற்ப தங்களை நன்றாக மாற்றியமைத்துக் கொள்ள உழைத்தார்கள். அவர்கள் யெகோவாவுக்காக காத்திருந்தார்கள், அப்படி இருந்ததற்காக அவர்கள் எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள்! தமது ஜனங்களை விடுவிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் யெகோவா அவர்கள் இருவரையும் பயன்படுத்தினார்.—ஆதியாகமம் 41:39-41; 45:5; 2 சாமுவேல் 5:4, 5.
வேதப்பூர்வமற்ற தீர்வுகளைத் தேடும் சோதனைகளை நாமும் எதிர்ப்படலாம். உதாரணமாக, உங்களுக்கு இதுவரை தகுந்த மாப்பிள்ளையோ பெண்ணோ கிடைக்காததால் சோர்ந்திருக்கிறீர்களா? அப்படியானால், ‘கர்த்தருக்குட்பட்டவராயிருக்கிற ஒருவரையே’ மணமுடிக்க வேண்டுமென்ற யெகோவாவின் கட்டளையை மீறுவதற்கு உண்டாகும் எந்த ஆசையையும் தவிருங்கள். (1 கொரிந்தியர் 7:39) உங்களுடைய மண வாழ்க்கையில் பிரச்சினைகளா? பிரிந்துபோவதையும் மணவிலக்கையும் தூண்டுவிக்கிற இந்த உலகத்தின் மனப்பான்மைக்கு அடிபணிந்து விடாதீர்கள். மாறாக, பிரச்சினைகளை சேர்ந்தே சமாளிக்க முயலுங்கள். (மல்கியா 2:16; எபேசியர் 5:21-33) உங்களுடைய பொருளாதார சூழ்நிலைமையின் காரணமாக குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் அல்லாடுகிறீர்களா? யெகோவாவுக்காக காத்திருப்பது என்பது பணம் சம்பாதிப்பதற்காக கேள்விக்குரிய அல்லது சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதை உட்படுத்துகிறது. (சங்கீதம் 37:25; எபிரெயர் 13:18) ஆம், நாம் அனைவருமே நம்முடைய சூழ்நிலைமைகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ள கடினமாக உழைத்து, யெகோவா நமக்கு பலன்தரத்தக்க வகையில் நடந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். நாம் அப்படி செய்கையில், பூரண தீர்வு கிடைக்க யெகோவாவுக்காக காத்திருப்பதில் உறுதியுடன் இருப்போமாக.—மீகா 7:7.
யெகோவா உங்களை ஆதரிப்பார்
ஏமாற்றங்களையும் கடினமான சூழ்நிலைமைகளையும் வெற்றிகரமாக சமாளித்த யோசேப்பு, தாவீது போன்ற பைபிள் கதாபாத்திரங்களை தியானிப்பது நமக்கு நன்மையளிக்கும். அவர்களுடைய கதைகள் பைபிளில் சில பக்கங்களில் மாத்திரமே விவரிக்கப்பட்டுள்ளபோதிலும், அவர்களுக்கு நேரிட்ட சோதனைகள் பல ஆண்டுகள் நீடித்தன. ‘கடவுளுடைய இத்தகைய ஊழியர்கள் எப்படி தங்களுடைய சூழ்நிலைமைகளை ஏற்றுக்கொள்வதற்கு கற்றுக்கொண்டார்கள்? எப்படி தங்களுடைய சந்தோஷத்தை காத்துக்கொண்டார்கள்? எப்படிப்பட்ட குணங்களை அவர்கள் வளர்க்க வேண்டியிருந்தது?’ என உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
யெகோவாவின் நவீன கால ஊழியர்களுடைய சகிப்புத்தன்மையையும் நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. (1 பேதுரு 5:9) ஒவ்வொரு வருடமும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளில் அநேக வாழ்க்கை சரிதைகள் வருகின்றன. உண்மையுள்ள இந்த கிறிஸ்தவர்களுடைய முன்மாதிரிகளை வாசித்து தியானிக்கிறீர்களா? அதோடு, கஷ்டமான சூழ்நிலைமைகளை உண்மையுடன் சகித்து வருகிறவர்கள் உங்கள் சபையிலேயே இருக்கிறார்கள். சபைக் கூட்டங்களில் அவர்களுடன் தவறாமல் கூட்டுறவு கொண்டு அவர்களிடமிருந்து கற்றுக்கொள்கிறீர்களா?—எபிரெயர் 10:24, 25.
சவால்மிகுந்த சூழ்நிலைமைகளை நீங்கள் எதிர்ப்படும்போது, யெகோவா உங்களை கவனித்துக்கொள்வார், உங்களைத் தாங்குவார் என்பதில் நம்பிக்கையோடு இருங்கள். (1 பேதுரு 5:6-10) உங்களுடைய சூழ்நிலைமைகள் உங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்காதிருக்க கடினமாக உழையுங்கள். மனக்கசப்பை விட்டுவிடுவதன் மூலமும், உங்களுடைய சூழ்நிலைமையை சிறந்த விதத்தில் பயன்படுத்திக் கொள்வதன் மூலமும் பூரண தீர்வு கிடைப்பதற்கு யெகோவாவுக்காக காத்திருப்பதன் மூலமும் யோசேப்பு, தாவீது, இன்னும் பிறருடைய உதாரணங்களைப் பின்பற்றுங்கள். ஜெபம் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளின் வாயிலாக அவரிடம் நெருங்கி வாருங்கள். இந்த விதத்தில், கஷ்ட காலங்களிலும்கூட நீங்கள் சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் அனுபவிப்பீர்கள்.—சங்கீதம் 34:8.
[பக்கம் 20, 21-ன் படம்]
தனது சூழ்நிலைமைகளை சிறந்த விதத்தில் பயன்படுத்திக்கொள்ள யோசேப்பு உழைத்தார்
[பக்கம் 23-ன் படம்]
தாவீது தனது பிரச்சினைகள் தீர யெகோவாவுக்கு காத்திருந்தார்