இளைஞர்களே, யெகோவாவுக்கு உகந்தவர்களாய் நடப்பீர்களாக!
கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர் கொஞ்ச காலம் தங்கள் வீட்டையும் சபையையும் விட்டு வேறு இடத்திற்கு போய் வாழ வேண்டியிருக்கிறது. ஊழியத்தை விஸ்தரிக்க அவ்வாறு சிலர் வீட்டை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார்கள். இன்னும் சிலரோ உலக விவகாரங்களில் ஈடுபடாமல் நடுநிலை வகித்ததால் தங்கள் வீட்டை விட்டுச் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. (ஏசாயா 2:4; யோவான் 17:16) சில நாடுகளில், உத்தமத்தைக் காத்த இளைஞர்களுக்கு ‘இராயன்’ சிறை தண்டனை விதித்திருக்கிறான் அல்லது சமூக வேலையை தண்டனையாக அளித்திருக்கிறான்.a—மாற்கு 12:17; தீத்து 3:1, 2.
நடுநிலைமை காரணமாக சிறை தண்டனை விதிக்கப்படுகையில், இவர்கள் நீண்ட காலத்திற்கு இளம் குற்றவாளிகளோடு அடைத்து வைக்கப்படக்கூடும். வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு தொலைவில் வசிக்கும் இளைஞர்கள்கூட ஒழுக்கங்கெட்ட சூழலில் வேலை செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலைக்குள் தள்ளப்பட்ட இளம் கிறிஸ்தவர்களானாலும் சரி மற்றவர்களானாலும் சரி, ‘தேவனுக்கு உகந்தவர்களாய் நடக்க’ முயலுகையில் அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் எதிர்ப்படும்போது அவற்றை எப்படி அவர்கள் வெற்றிகரமாய் சமாளிக்கலாம்? (1 தெசலோனிக்கேயர் 2:12, NW) எந்தவொரு மோசமான சூழலையும் சமாளிக்கும் பக்குவத்தை அடைய பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்படி உதவலாம்?—நீதிமொழிகள் 22:3.
இளைஞருக்கே உரிய பிரச்சினைகள்
“என்னைப் பற்றி நன்றாக தெரிந்த மூப்பர்களின் அன்பான கவனிப்பும் பெற்றோரின் அரவணைப்பும் இல்லாமல் தொலைவில் வசித்தது கஷ்டமாகவும் பயமாகவும் இருந்தது” என கூறுகிறார் 21 வயது டாக்கஸ்.b அவர் 37 மாதங்கள் வீட்டை விட்டு தூர இடத்தில் வாழ வேண்டியிருந்தது. “சில சமயங்களில், யாருடைய உதவியுமில்லாமல் தன்னந்தனியாக விடப்பட்டவனைப் போல உணர்ந்தேன்” என்றும் சொல்கிறார். இருபது வயது பெட்ராஸ், இரண்டு வருடங்களுக்கு மேலாக வீட்டை விட்டு தனியாக வாழ வேண்டியிருந்தது. “பொழுதுபோக்கு விஷயத்திலும், மற்றவர்களுடன் பழகும் விஷயத்திலும் என் வாழ்க்கையில் முதன்முறையாக நானே தீர்மானங்கள் எடுக்க வேண்டியிருந்தது; ஆனால் எப்போதுமே என்னால் ஞானமான தீர்மானங்களை எடுக்க முடியவில்லை” என அவர் ஒத்துக்கொள்கிறார். அவர் மேலும் சொல்வதாவது: “எனக்கு கிடைத்த அதிக சுதந்திரம் என்னுடைய பொறுப்புகளை அதிகமாக்கியது, அதனால் சில சமயங்களில் ரொம்ப பயமாக இருந்தது.” இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் கிறிஸ்தவ இளைஞர்களை அடிக்கடி சந்தித்த டாஸோஸ் என்ற மூப்பர் இவ்வாறு குறிப்பிட்டார்: “விசுவாசத்தில் இல்லாத சகாக்களின் அசிங்கமான பேச்சு, கலகத்தனமான மனப்பான்மை, முரட்டுத்தனமான நடத்தை இவையெல்லாம் அஜாக்கிரதையாக இருக்கிற அப்பாவி இளைஞர்களை தொற்றிக்கொள்ளலாம்.”
பைபிள் நியமங்களை மதிக்காத ஆட்களுடன் தங்கியிருக்கும்போதும் வேலை செய்யும்போதும் இந்தக் கிறிஸ்தவ இளைஞர்கள் தங்களை காத்துக்கொள்வது அவசியம். அதாவது, தங்கள் சகாக்களின் ஒழுக்கங்கெட்ட, வேதப்பூர்வமற்ற வழிகளைப் பார்த்து தங்களுக்கும் ஆசை வந்துவிடாதபடி காத்துக்கொள்வது அவசியம். (சங்கீதம் 1:1; 26:4; 119:9) தனிப்பட்ட படிப்பு, கூட்டங்களுக்கு செல்லுதல், வெளி ஊழியம் ஆகியவற்றை பழக்கமாக செய்து வருவது கடினமாக தோன்றலாம். (பிலிப்பியர் 3:16) ஆவிக்குரிய இலக்குகளை வைத்து, அதற்காக உழைப்பதும்கூட எளிதாக இருக்காது.
உண்மையுள்ள கிறிஸ்தவ இளைஞர்கள் பேச்சிலும் நடத்தையிலும் யெகோவாவுக்கு பிரியமாய் நடக்க விரும்புகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என்ற தங்களுடைய பரலோக தகப்பனின் கனிவான வேண்டுகோளுக்கு இசைவாக நடக்க அவர்கள் உள்ளப்பூர்வமாய் முயலுகிறார்கள். (நீதிமொழிகள் 27:11) தங்களுடைய தோற்றத்தையும் நடத்தையையும் வைத்துத்தான் மற்றவர்கள் யெகோவாவையும் அவரது ஜனங்களையும் மதிப்பிடுவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—1 பேதுரு 2:12.
இந்த இளைஞர்களில் பெரும்பாலோர் முதல் நூற்றாண்டு சகோதரர்களைப் போலவே நடந்துகொள்ள தங்களால் இயன்றதை செய்கிறார்கள்; இது பாராட்ட வேண்டிய ஒரு விஷயம். அந்தப் பூர்வகால சகோதரர்களுக்காக அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு ஜெபம் செய்தார்: ‘சந்தோஷத்தோடே முற்றிலும் சகித்திருப்பதற்கும் நீடிய பொறுமையோடிருப்பதற்கும் சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, . . . யெகோவாவுக்குப் பிரியமுண்டாக அவருக்கு உகந்தவர்களாய் நடந்துகொள்ளுங்கள்.’ (கொலோசெயர் 1:9-11, NW) தேவ பயத்தோடிருந்த இளைஞர்களைப் பற்றிய பல உதாரணங்கள் பைபிளில் உள்ளன; அவர்கள் முன்பின் அறிமுகமில்லாத இடத்தில், சிநேகபான்மையற்றவர்களின் மத்தியில், விக்கிரக மயமான சூழலில் கடவுளுக்கு உகந்தவர்களாய் நடந்திருக்கிறார்கள்.—பிலிப்பியர் 2:14ஆ, 15.
“யெகோவா யோசேப்போடே இருந்தார்”
யாக்கோபுக்கும் ராகேலுக்கும் செல்ல மகனாக இருந்த யோசேப்பு, தேவ பயமுள்ள தன் அப்பாவின் பாதுகாப்பின்றி இளம் வயதிலேயே வீட்டைவிட்டு வெகுதொலைவில் வசிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். எகிப்தில் அவர் அடிமையாக விற்கப்பட்டார். ஓர் உழைப்பாளியாக, நம்பகமானவராக, ஒழுக்க சீலராக யோசேப்பு மிகச் சிறந்த முன்மாதிரியை வைத்தார். யெகோவாவை வழிபடாத போத்திபாருக்கு வேலைக்காரனாக இருந்தார். என்றாலும் தன் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து கடினமாக உழைத்ததால், பிற்பாடு அவருடைய எஜமான் தன் வீட்டு காரியங்கள் எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தார். (ஆதியாகமம் 39:2-6) யெகோவாவுக்கு உத்தமமாய் நடந்ததற்கு கைமாறாக சிறையில் தள்ளப்பட்டபோது, “நான் உத்தமமாய் நடந்து என்ன பயன்?” என்ற முடிவுக்கு அவர் வரவில்லை. சிறையிலும் சிறந்த பண்புகளை வெளிக்காட்டினார்; ஆகவே, சீக்கிரத்தில் சிறைச்சாலை சம்பந்தப்பட்ட பல காரியங்களை கவனிக்கும் பொறுப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. (ஆதியாகமம் 39:17-22) ஆம், யெகோவா அவரை ஆசீர்வதித்தார்; அதுமட்டுமல்ல, ஆதியாகமம் 39:23 (NW) குறிப்பிடுகிறபடி, “யெகோவா யோசேப்போடே இருந்தார்.”
தேவ பயமுள்ள தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த யோசேப்புக்கு, தன்னைச் சுற்றியிருந்த புறமதத்தவரைப் போல் நடந்துகொள்வதும், எகிப்தியரின் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கையை பின்பற்றுவதும் எவ்வளவு எளிதாக இருந்திருக்கும்! அதற்கு மாறாக, சோதனைகளிலேயே பயங்கரமான சோதனை அவரை தாக்கியபோதிலும் தெய்வீக நியமங்களை கடைப்பிடித்து சுத்தமான நிலைநிற்கையை காத்துக்கொண்டார். பாலுறவில் ஈடுபடும்படி போத்திபாரின் மனைவி அவருக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்தபோது, உறுதியுடன் இவ்வாறு பதிலளித்தார்: “நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி?”—ஆதியாகமம் 39:7-9.
தகாத சகவாசங்கள், ஒழுக்கங்கெட்ட பொழுதுபோக்கு, ஆபாசம், கீழ்த்தரமான இசை ஆகியவற்றிற்கு எதிராக பைபிள் அடிப்படையில் கொடுக்கப்படும் எச்சரிப்புகளுக்கு யெகோவாவின் சாட்சிகளான இளைஞர்கள் இன்று கவனம் செலுத்துவது அவசியம். “கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கிறது” என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—நீதிமொழிகள் 15:3.
மோசே “பாவ சந்தோஷங்களை” புறக்கணித்தார்
பார்வோனின் அரண்மனையில், விக்கிரகாராதனையும் சுகபோக நாட்டமும் நிறைந்த சூழலில் மோசே வளர்ந்தார். அவரைப் பற்றி பைபிள் இவ்வாறு கூறுகிறது: ‘விசுவாசத்தினாலே மோசே . . . பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, அநித்தியமான பாவ சந்தோஷங்களை அநுபவிப்பதைப் பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டார்.’—எபிரெயர் 11:24, 25.
உலகத்தோடு நட்பு வைத்தால் சில அனுகூலங்கள் கிடைக்கலாம், ஆனால் அவை தற்காலிகமானவை. மிஞ்சி மிஞ்சிப் போனால் இந்த உலகத்தின் முடிவு வரைக்கும்தான் அவை நிலைக்கும். (1 யோவான் 2:15-17) அப்படியானால், மோசேயின் முன்மாதிரியைப் பின்பற்றுவது எவ்வளவோ சிறந்ததல்லவா? ‘அதரிசனமானவரைத் தரிசிக்கிறது போல அவர் உறுதியாயிருந்தார்’ என பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:27) தேவ பயமுள்ள தன் முன்னோர்கள் விட்டுச்சென்ற ஆன்மீக ஆஸ்தியின் மீதே அவர் தன் மனதை ஒருமுகப்படுத்தினார். யெகோவாவின் நோக்கத்தை தன் நோக்கமாகக் கொண்டு, அவருடைய சித்தத்தை செய்வதையே தன் இலக்காக வைத்தார்.—யாத்திராகமம் 2:11; அப்போஸ்தலர் 7:23, 25.
தேவ பயமுள்ள இளைஞர்கள், தேவபக்தியற்ற, அன்பற்ற சூழலில் இருக்க நேரிடும்போது தனிப்பட்ட படிப்பின் மூலமாக ‘அதரிசனமானவரான’ யெகோவாவை அதிகமாக அறிந்துகொண்டு அவருடன் தங்களுடைய உறவை பலப்படுத்திக்கொள்ள முடியும். கூட்டங்களுக்கும் வெளி ஊழியத்திற்கும் தவறாமல் செல்வது உட்பட எல்லா கிறிஸ்தவ நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது தங்கள் மனதை ஆன்மீக காரியங்களில் ஒருமுகப்படுத்த இந்த இளைஞர்களுக்கு உதவும். (சங்கீதம் 63:6; 77:12) மோசேயைப் போல உறுதியான விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள பாடுபட வேண்டும். அவ்வாறு சிந்தையிலும் செயலிலும் யெகோவாவை மையமாக வைக்கையில், அவருடைய நண்பர்களாக இருக்கும் சந்தோஷத்தைப் பெறுவார்கள்.
கடவுளை துதித்துப் பேச தன் நாவை பயன்படுத்தினாள்
வீட்டை விட்டு பிரிந்திருக்கையில் சிறந்த முன்மாதிரி வைத்த மற்றொரு இளைஞி, எலிசா தீர்க்கதரிசியின் காலத்தில் சீரியா தேசத்தாரால் சிறைபிடித்துக் கொண்டு செல்லப்பட்ட இஸ்ரவேல சிறுமி ஆவாள். குஷ்டரோகியாக இருந்த சீரிய படைத் தலைவன் நாகமானின் மனைவிக்கு அவள் பணிவிடைக்காரியாக ஆனாள். அவள் தன் தலைவியிடம், “என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார்” என்றாள். அவள் கொடுத்த சாட்சியால், இஸ்ரவேலில் இருந்த எலிசாவிடத்திற்கு நாகமான் சென்றார், குஷ்டரோகமும் நீங்கியது. அதுமட்டுமல்ல, நாகமான் யெகோவாவை வணங்குபவராக ஆனார்.—2 இராஜாக்கள் 5:1-3, 13-19.
பெற்றோரை விட்டு பிரிந்து தொலைவில் இருந்தாலும் இளைஞர்கள் தங்கள் நாவை யெகோவாவை துதிக்கும் விதத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தச் சிறுமியின் உதாரணம் வலியுறுத்திக் காட்டுகிறது. “மடத்தனமான பேச்சு” அல்லது “அசிங்கமான கேலி பேச்சு” பேசும் பழக்கம் இந்த சிறுமிக்கு இருந்திருக்குமேயானால், தக்க சந்தர்ப்பம் வந்தபோது தன் நாவை அவளால் திறமையாக உபயோகிக்க முடிந்திருக்குமா? (எபேசியர் 5:4, NW; நீதிமொழிகள் 15:2) நிக்காஸ் என்பவர் 20 வயதைத் தாண்டிய சமயத்தில் நடுநிலை வகித்ததன் காரணமாக சிறையிலடைக்கப்பட்டார்; அவர் இவ்வாறு கூறுகிறார்: “பெற்றோருடைய கண்காணிப்பும் சபையாரின் கண்காணிப்பும் இல்லாமல் தூர இடத்தில் வேறுசில இளம் சகோதரர்களுடன் கைதியாக வயல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது எங்களுடைய பேச்சு மட்ட ரகமானதை நான் உணர்ந்தேன். நிச்சயமாகவே அது யெகோவாவுக்கு துதி சேர்க்கவில்லை.” ஆனால், “பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது” என்ற பவுலின் ஆலோசனையை நிக்காஸும் மற்றவர்களும் பின்பற்றுவதற்கு உதவியளிக்கப்பட்டார்கள்.—எபேசியர் 5:3.
யெகோவா அவர்களுக்கு நிஜமானவராக இருந்தார்
சிறிய விஷயங்களில் உண்மையாய் இருந்தால் பெரிய விஷயங்களிலும் உண்மையாய் இருக்க முடியும் என்று இயேசு குறிப்பிட்ட நியமம் எவ்வளவு உண்மை என்பதை பூர்வ பாபிலோனில் இருந்த தானியேலின் மூன்று நண்பர்களின் அனுபவம் காட்டுகிறது. (லூக்கா 16:10) மோசேயின் நியாயப்பிரமாணத்தில் தடை விதிக்கப்பட்டிருந்த உணவு வகைகளை சாப்பிடும்படியான பிரச்சினையை அவர்கள் எதிர்ப்பட்டபோது, அந்நிய நாட்டில் தாங்கள் அடிமைகளாக இருப்பதாகவும், இதை விட்டால் சாப்பிடுவதற்கு வேறொன்றுமில்லை என்பதாகவும் அவர்கள் நியாயப்படுத்தியிருக்கலாம். ஆனால், சிறியதாய் தோன்றிய விஷயத்தையும் முக்கியமானதாய் எடுத்துக்கொண்டதற்காக அவர்கள் எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள்! ராஜா உண்ட சுவையான போஜனத்தை சாப்பிட்ட மற்ற அடிமைகளைப் பார்க்கிலும் அவர்கள் ஆரோக்கியவான்களாகவும் ஞானவான்களாகவும் விளங்கினார்கள். இந்தச் சிறிய விஷயத்தில் உண்மையோடிருந்ததால்தான், பிற்பாடு ஒரு சிலையை வணங்கும்படியான பெரிய சோதனையின்போது அதற்கு இணங்கிவிடாதிருக்க அவர்களுக்கு பலம் கிடைத்தது என்பதில் சந்தேகமில்லை.—தானியேல் 1:3-21; 3:1-30.
இந்த மூன்று இளைஞர்களுக்கும் யெகோவா மிகவும் நிஜமானவராக இருந்தார். வீட்டையும் வழிபாட்டு தலத்தையும் விட்டு தொலைவில் இருந்தபோதிலும், இந்த உலகத்தால் கறைபடாமல் தங்களை காத்துக்கொள்வதில் உறுதியாக இருந்தார்கள். (2 பேதுரு 3:14) யெகோவாவுடன் வைத்திருந்த உறவை அவர்கள் பெரிய பொக்கிஷம் போல கருதியதால், அதற்காக தங்கள் ஜீவனையும் கொடுக்க தயாராக இருந்தார்கள்.
யெகோவா உங்களை கைவிட மாட்டார்
தங்கள் அன்பானவர்களையும் நம்பிக்கைக்குரியவர்களையும் விட்டுப் பிரிந்திருக்கும் இளைஞர்கள், பாதுகாப்பற்றவர்களாகவும், எதிலும் நிச்சயமற்றவர்களாகவும் கலக்கமுற்றவர்களாகவும் இருப்பது போல ஒருவேளை உணரலாம்; இது புரிந்துகொள்ளத்தக்க ஒரு விஷயமே. ஆனால், “யெகோவா கைவிட மாட்டார்” என்ற முழு நம்பிக்கையோடு சோதனைகளையும் பிரச்சினைகளையும் அவர்கள் சமாளிக்க முடியும். (சங்கீதம் 94:14, NW) இந்த இளைஞர்கள் ‘நீதியினிமித்தம் பாடுபடுகிறவர்களாக’ இருந்தால், ‘நீதியின் வழியில்’ தொடர்ந்து நடப்பதற்கு யெகோவா அவர்களுக்கு உதவுவார்.—1 பேதுரு 3:14; நீதிமொழிகள் 8:21.
யோசேப்பு, மோசே, அடிமையான இஸ்ரவேல சிறுமி, உண்மையுள்ள மூன்று எபிரெய இளைஞர்கள் ஆகியோரை யெகோவா தொடர்ந்து பலப்படுத்தி அபரிமிதமாக ஆசீர்வதித்தார். இன்றும், ‘விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடுவோரை’ ஆதரிப்பதற்கு அவர் தமது பரிசுத்த ஆவியையும் தமது வார்த்தையையும் தமது அமைப்பையும் பயன்படுத்துகிறார். ‘நித்திய ஜீவன்’ என்ற பரிசையும் அவர்களுக்கென வைத்திருக்கிறார். (1 தீமோத்தேயு 6:11, 12) ஆம், யெகோவாவுக்கு உகந்தவர்களாய் நடப்பது சாத்தியமே, அப்படி நடப்பதே ஞானமானது.—நீதிமொழிகள் 23:15, 19.
[அடிக்குறிப்புகள்]
b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 25-ன் பெட்டி]
பெற்றோரே—உங்கள் பிள்ளைகளை பக்குவப்படுத்துங்கள்!
“வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.” (சங்கீதம் 127:5) ஓர் அம்பை திறமையாக குறிவைத்து எய்ய வேண்டும்; குருட்டாம்போக்கில் எய்தால் அது சரியான இலக்கை அடையாது. அவ்வாறே, பெற்றோரின் சரியான வழிநடத்துதல் இல்லையென்றால், வீட்டை விட்டு வாழும் வாழ்க்கையின் நிஜங்களை பிள்ளைகள் சரியாக சமாளிக்க முடியாமல் போகும்.—நீதிமொழிகள் 22:6.
இளைஞர்கள் யோசிக்காமல் செயல்பட்டுவிடலாம் அல்லது ‘இளவயதின் இச்சைகளுக்கு’ இடங்கொடுத்துவிடலாம். (2 தீமோத்தேயு 2:22, பொது மொழிபெயர்ப்பு) பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.” (நீதிமொழிகள் 29:15) வாலிப பிள்ளைகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான வரையறைகளை வைக்க தவறினால், அவர்கள் தனியாக வாழும்போது எதிர்ப்படும் நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் சமாளிக்க பக்குவம் இல்லாமல் போய்விடும்.
இந்த உலகிலுள்ள கஷ்டங்களையும், அழுத்தங்களையும், வாழ்க்கையின் நிஜங்களையும் பற்றி கிறிஸ்தவ பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு தெள்ளத் தெளிவாகவும் பொறுப்புடனும் எடுத்துச் சொல்ல வேண்டும். வீட்டை விட்டு தொலைவில் வாழும்போது விரும்பத்தகாத என்னென்ன சூழ்நிலைகளை எதிர்ப்படக்கூடும் என்பதை பிள்ளையின் நம்பிக்கையை கெடுக்காத விதத்திலும், சோர்வடையச் செய்யாத விதத்திலும் அவர்கள் விளக்கி சொல்லலாம். இந்தப் பயிற்சியோடு, கடவுள் அருளும் ஞானமும் சேர்ந்து “பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும்.”—நீதிமொழிகள் 1:4.
கடவுள் வகுத்துக் கொடுத்துள்ள நெறிமுறைகளையும் நியமங்களையும் தங்கள் பிள்ளைகளின் இருதயத்தில் பெற்றோர் பதிய வைப்பது, வாழ்க்கையின் சவால்களை வெற்றிகரமாக சமாளிக்க அவர்களை பக்குவப்படுத்துகிறது. இவ்விஷயத்தில் வெற்றி கிடைக்குமா இல்லையா என்பதை தவறாமல் குடும்ப படிப்பை நடத்துவது, மனந்திறந்து பேசுவது, பிள்ளைகளின் நலனில் உண்மையான அக்கறை காட்டுவது ஆகியவை நிர்ணயிக்கலாம். பிற்காலத்தில் தங்கள் சொந்த காலில் நிற்பதற்கு பிள்ளைகளை பக்குவப்படுத்த பெற்றோர் தெய்வீக போதனை அளிக்க வேண்டும்; அதை சமநிலையுடனும் நன்மையளிக்கும் விதத்திலும் நியாயமான விதத்திலும் அளிக்க வேண்டும். இந்த உலகத்தின் பாகமாக இல்லாமலேயே இந்த உலகத்தில் வாழ்வது சாத்தியம் என்பதை தங்களையே முன்மாதிரிகளாக வைத்து, பிள்ளைகளுக்கு அவர்கள் கற்றுக்கொடுக்கலாம்.—யோவான் 17:15, 16.
[பக்கம் 23-ன் படம்]
கிறிஸ்தவ இளைஞர் சிலர் தங்கள் வீட்டை விட்டுப் பிரிந்திருக்க நேரிடுகிறது
[பக்கம் 24-ன் படங்கள்]
சோதனையை எதிர்த்து நிற்பதன் மூலம் இளைஞர்கள் யோசேப்பின் முன்மாதிரியை பின்பற்றி ஒழுக்க ரீதியில் சுத்தமாக இருக்க முடியும்
[பக்கம் 26-ன் படங்கள்]
யெகோவாவுக்கு மகிமை சேர்க்க தன் நாவை பயன்படுத்திய அடிமையான இஸ்ரவேல சிறுமியை பின்பற்றுங்கள்