பாடம் 26
ராஜ்ய மன்றத்தை எப்படி நன்றாக பராமரிக்கலாம்?
யெகோவாவை வணங்குவதற்காக ஒன்றுகூடி வருகிற இடம்தான் ராஜ்ய மன்றம். அதனால், அந்த இடத்தை சுத்தமாக, நல்லபடியாக வைத்துக்கொள்வதை பாக்கியமாக நினைக்கிறோம். கடவுளை வணங்குகிற எல்லாரும் செய்ய வேண்டிய முக்கியமான வேலை இது. சபையில் இருக்கிற எல்லாருமே இந்த வேலையை செய்யலாம்.
கூட்டம் முடிந்த பிறகு சுத்தம் செய்கிறோம். கூட்டம் முடிந்த பிறகு, நாங்கள் எல்லாரும் ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்கிறோம். வாரத்திற்கு ஒரு தடவை, நன்றாக சுத்தம் செய்கிறோம். என்னென்ன வேலைகளை செய்ய வேண்டும் என்ற பட்டியல் இருக்கிறது. அந்த பட்டியலின்படி எல்லா வேலைகளும் சரியாக நடக்கிறதா என்று ஒரு மூப்பரோ உதவி ஊழியரோ கவனித்துக்கொள்வார். தூசி தட்டுவது, பெருக்கி துடைப்பது, நாற்காலிகளை ஒழுங்காக போடுவது, கழிவறையை கழுவுவது, ஜன்னல் கண்ணாடியை துடைப்பது, குப்பை கொட்டுவது, மன்றத்துக்கு வெளியே சுத்தம் செய்வது, செடிக்கு தண்ணீர் ஊற்றுவது என நிறைய வேலைகளைச் செய்கிறோம். வருடத்துக்கு ஒரு முறையாவது ராஜ்ய மன்றத்தை முழுவதும் இன்னும் நன்றாக சுத்தம் செய்வோம். எங்கள் பிள்ளைகளுக்கும் சின்னச் சின்ன வேலைகளைக் கொடுப்போம். அப்படி செய்வதன்மூலம் ராஜ்ய மன்றத்துக்கு மதிப்பு காட்ட அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம்.—பிரசங்கி 5:1.
ரிப்பேர் வேலைகளைச் செய்கிறோம். ராஜ்ய மன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒவ்வொரு வருடமும் பார்க்கிறோம். ஏதாவது உடைந்து போயிருந்தால் அதை சரி செய்கிறோம். இதனால் அநாவசியமான செலவு வருவதில்லை. (2 நாளாகமம் 24:13; 34:10) சுத்தமாக, நல்லபடியாக இருக்கிற ராஜ்ய மன்றம்தான் கடவுளை வணங்குவதற்கு சரியான இடம். நாங்கள் யெகோவாமீது அன்பு வைத்திருக்கிறோம், ராஜ்ய மன்றத்தை மதிக்கிறோம். அதனால்தான், ராஜ்ய மன்றத்தை சுத்தம் செய்கிற வேலையை நாங்கள் எல்லாருமே செய்கிறோம். (சங்கீதம் 122:1) ராஜ்ய மன்றத்தை நாங்கள் சுத்தம் செய்வதை பார்த்து மற்றவர்களும் பாராட்டுகிறார்கள்.—2 கொரிந்தியர் 6:3.
ராஜ்ய மன்றத்தை ஏன் நன்றாக பராமரிக்க வேண்டும்?
ராஜ்ய மன்றத்தை சுத்தமாக வைக்க என்னென்ன செய்கிறோம்?