“உங்களுடைய எல்லா திட்டங்களும் வெற்றியடைய [அவர்] உதவட்டும்”
“யெகோவாவை வணங்குவதில் அளவில்லாமல் சந்தோஷப்படு. அப்போது, உன் இதயத்திலுள்ள ஆசைகளை அவர் நிறைவேற்றி வைப்பார்.”—சங். 37:4.
1. தங்கள் எதிர்காலத்தைப் பற்றி இளம் பிள்ளைகள் என்ன முடிவு எடுக்க வேண்டும், அளவுக்கு அதிகமாகக் கவலைப்படாமல் இருக்க அவர்களுக்கு எது உதவும்? (ஆரம்பப் படம்)
இளம் பிள்ளைகளே! ஒரு பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு, நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று திட்டம் போடுவது ஞானமானது என்பதை ஒத்துக்கொள்வீர்கள், இல்லையா? நம் வாழ்க்கையை ஒரு பயணத்துக்கு ஒப்பிடலாம். அந்தப் பயணத்தில் நீங்கள் எங்கே போகிறீர்கள் என்று திட்டம் போடுவதற்கான சரியான சமயம் உங்கள் இளம் வயதுதான். இப்படித் திட்டங்கள் போடுவது அவ்வளவு சுலபம் அல்ல! ஹீத்தர் என்ற இளம் பெண் சொல்வதைக் கவனியுங்கள். ‘அதை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு. ஏன்னா, வாழ்க்கை முழுதும் என்ன செய்ய போறோம்னு நாம முடிவு எடுக்கணும்.’ நீங்களும் இப்படித்தான் உணருகிறீர்களா? அப்படியென்றால், “கவலைப்படாதே, நான் உன் கடவுள். நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன்” என்று யெகோவா சொல்வதை எப்போதும் மனதில் வையுங்கள்.—ஏசா. 41:10.
2. சந்தோஷமான எதிர்காலத்துக்காக நீங்கள் திட்டம் போட வேண்டுமென யெகோவா விரும்புகிறார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?
2 எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் ஞானமாகத் திட்டம் போட வேண்டும் என்று யெகோவா சொல்கிறார். (பிர. 12:1; மத். 6:20) நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். அவர் படைத்திருப்பவற்றைப் பார்க்கும்போதும், கேட்கும்போதும், சுவைக்கும்போதும் இதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளலாம். யெகோவா நம்மை எப்படிப் பார்த்துக்கொள்கிறார் என்றும், மிகச் சிறந்த வாழ்க்கை வாழ எப்படிக் கற்றுத்தருகிறார் என்றும் யோசித்துப் பாருங்கள். அவருடைய ஆலோசனையை ஒதுக்கித்தள்ளுகிறவர்களிடம், “‘[நீங்கள்] எனக்குப் பிடிக்காத வழியில் போனீர்கள்’ . . . என் ஊழியர்கள் சந்தோஷமாக இருப்பார்கள், ஆனால் நீங்கள் அவமானத்தில் கூனிக்குறுகுவீர்கள். என் ஊழியர்கள் சந்தோஷம் பொங்கும் இதயத்தோடு ஆரவாரம் செய்வார்கள்” என்று யெகோவா சொல்கிறார். (ஏசா. 65:12-14) வாழ்க்கையில் நாம் ஞானமான தீர்மானங்கள் எடுக்கும்போது நம்மால் யெகோவாவை மகிமைப்படுத்த முடியும்.—நீதி. 27:11.
உங்களைச் சந்தோஷப்படுத்துகிற திட்டங்கள்
3. நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா உற்சாகப்படுத்துகிறார்?
3 நீங்கள் என்ன திட்டங்கள் போட வேண்டும் என்று யெகோவா உற்சாகப்படுத்துகிறார்? தன்னைத் தெரிந்துகொள்வதன் மூலமும் தனக்கு உண்மையாகச் சேவை செய்வதன் மூலமும் மனிதர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே யெகோவா மனிதர்களைப் படைத்திருக்கிறார். (சங். 128:1; மத். 5:3) மிருகங்கள் வெறுமனே சாப்பிடுகின்றன, குடிக்கின்றன, குட்டி போடுகின்றன. ஆனால், உங்கள் வாழ்க்கை அப்படியல்ல! உங்கள் வாழ்க்கை சந்தோஷமாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்கும் விதத்தில் நீங்கள் திட்டம் போட வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். உங்கள் படைப்பாளர் ‘அன்புக்கு ஊற்றாக இருக்கிற கடவுள்,’ அவர் “சந்தோஷமுள்ள கடவுள்,” மனிதர்களை அவர் ‘தன்னுடைய சாயலில் படைத்திருக்கிறார்.’ (2 கொ. 13:11; 1 தீ. 1:11; ஆதி. 1:27) நம் அன்பான கடவுளைப் போலவே நடந்துகொள்ளும்போது நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (அப். 20:35) வாழ்க்கையைப் பற்றிய அடிப்படை உண்மையும் இதுதான்! இதை நீங்களே அனுபவித்திருப்பீர்கள், இல்லையா? அதனால், மற்றவர்கள்மேலும் தன்மேலும் இருக்கிற அன்பால் நீங்கள் எதிர்காலத் திட்டங்களைப் போட வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்.—மத்தேயு 22:36-39-ஐ வாசியுங்கள்.
4, 5. எது இயேசுவுக்குச் சந்தோஷத்தைத் தந்தது?
4 இளம் பிள்ளைகளுக்கு இயேசு கிறிஸ்து ஒரு பரிபூரண முன்மாதிரி! அவருடைய சிறு வயதில் அவர் விளையாடியிருப்பார், ஜாலியாக இருந்திருப்பார். பைபிள் சொல்வது போல, “சிரிப்பதற்கு ஒரு நேரம் இருக்கிறது. நடனம் ஆடுவதற்கு ஒரு நேரம் இருக்கிறது.” (பிர. 3:4) அதுமட்டுமல்ல, வேதவசனங்களைப் படிப்பதன் மூலம் இயேசு யெகோவாவோடு நெருங்கிய பந்தத்தை வைத்திருந்தார். அவருக்கு 12 வயது இருந்தபோது, “அவருடைய புத்திக்கூர்மையைப் பார்த்தும், அவர் சொன்ன பதில்களைக் கேட்டும்” ஆலயத்தில் இருந்த போதகர்கள் பிரமித்துப்போனார்கள்.—லூக். 2:42, 46, 47.
5 இயேசு வளர்ந்து ஆளானபோது சந்தோஷமாக இருந்தார். அவர் ‘ஏழைகளுக்கு நல்ல செய்தியைச் சொல்ல வேண்டும்’ என்றும், ‘பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வை கிடைக்குமென்று அறிவிக்க வேண்டும்’ என்றும் கடவுள் விரும்பினார். (லூக். 4:18) கடவுள் எதிர்பார்த்ததைச் செய்ததால், இயேசு சந்தோஷமாக இருந்தார். இயேசுவின் உணர்ச்சிகளை சங்கீதம் 40:8 இப்படி வெளிப்படுத்துகிறது: “என் கடவுளே, உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதுதான் எனக்குச் சந்தோஷம்.” தன் அப்பாவைப் பற்றி மக்களுக்குச் சொல்லித்தந்தது இயேசுவுக்குச் சந்தோஷமாக இருந்தது. (லூக்கா 10:21-ஐ வாசியுங்கள்.) ஒரு தடவை உண்மை வணக்கத்தைப் பற்றி ஒரு பெண்ணிடம் பேசிய பிறகு, “என்னை அனுப்பியவருடைய விருப்பத்தின்படி செய்து அவருடைய வேலையை முடிப்பதே என்னுடைய உணவாக இருக்கிறது” என்று இயேசு தன் சீஷர்களிடம் சொன்னார். (யோவா. 4:31-34) கடவுள்மேலும் மற்றவர்கள்மேலும் அன்பு காட்டியதால் இயேசு சந்தோஷமாக இருந்தார். நீங்களும் அப்படிச் செய்தால், அவரைப் போலவே சந்தோஷமாக இருப்பீர்கள்.
6. உங்கள் எதிர்காலத் திட்டங்களைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவது ஏன் நல்லது?
6 தங்கள் இளம் வயதிலேயே, நிறைய கிறிஸ்தவர்கள் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். அது அவர்களுக்குச் சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. அவர்களில் சிலரிடம் உங்கள் திட்டங்களைப் பற்றி பேசுங்கள். “கலந்துபேசாமல் இருந்தால் திட்டங்கள் தோல்வியடையும். ஆலோசகர்கள் நிறைய பேர் இருந்தால் வெற்றி நிச்சயம்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 15:22) பயனியர் ஊழியம் என்பது வாழ்க்கை முழுவதும் உங்களுக்கு உதவி செய்யக்கூடிய ஒரு கல்வித் திட்டம் என்பதாக அவர்கள் சொல்லலாம். இயேசு பரலோகத்திலிருந்தபோது, தன் அப்பாவிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டார். பூமியில் ஊழியம் செய்தபோதும் தொடர்ந்து கற்றுக்கொண்டார். உதாரணத்துக்கு, நல்ல செய்தியை மற்றவர்களிடம் சொல்வதன் மூலமும், கஷ்டமான சூழ்நிலைகளில் உத்தமமாக இருப்பதன் மூலமும் தன்னால் சந்தோஷமாக இருக்க முடியும் என்பதைக் கற்றுக்கொண்டார். (ஏசாயா 50:4-ஐ வாசியுங்கள்; எபி. 5:8; 12:2) உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும் சில முழுநேர ஊழியத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
சீஷராக்கும் வேலை ஒரு சிறந்த வேலை
7. இளம் வயதில் இருக்கும் நிறைய பேர் சீஷராக்கும் வேலையை ஏன் சந்தோஷமாகச் செய்கிறார்கள்?
7 “நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி . . . அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 28:19, 20) சீஷராக்கும் வேலையைச் செய்ய நீங்கள் திட்டம் போட்டால், கடவுளை மகிமைப்படுத்துகிற திருப்தியான வாழ்க்கை உங்களுக்குக் கிடைக்கும். எந்த வேலையாக இருந்தாலும், அதில் திறமையை வளர்த்துக்கொள்ள காலம் எடுக்கும். 19 வயதில் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்த டிமோத்தி என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவுக்கு முழுநேரமா சேவை செய்யணும்னு ஆசைப்படுறேன். ஏன்னா, அவர்மேல எனக்கு இருக்குற அன்பை இதன் மூலமா காட்ட முடியும். ஆரம்பத்துல, என்னால பைபிள் படிப்புகள ஆரம்பிக்க முடியல. ஆனா, இன்னொரு இடத்துக்கு குடிமாறி போனதுக்கு அப்புறம், ஒரு மாசத்துலயே நிறைய பைபிள் படிப்புகள ஆரம்பிச்சேன். அதுல ஒருத்தரு ராஜ்ய மன்றத்துக்கு வர ஆரம்பிச்சாரு. ரெண்டு மாசத்துக்கு நடந்த மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளியில கலந்துகிட்டதுக்கு அப்புறம் எனக்கு ஒரு புது நியமிப்பு கிடைச்சது. அப்போ, என்னால 4 பைபிள் படிப்புகள ஆரம்பிக்க முடிஞ்சது. மக்களுக்கு கத்துக்கொடுக்குறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, ஏன்னா, கடவுளோட சக்தி அவங்கள மாத்துறத என்னால பார்க்க முடியுது.”a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)—1 தெ. 2:19.
8. சில இளம் கிறிஸ்தவர்கள் இன்னும் நிறைய பேருக்கு பிரசங்கிக்க என்ன செய்திருக்கிறார்கள்?
8 சில இளம் கிறிஸ்தவர்கள் வேறொரு மொழியைக் கற்றிருக்கிறார்கள். அமெரிக்காவைச் சேர்ந்த ஜேக்கப் இப்படி எழுதினார்: “எனக்கு 7 வயது இருந்தபோது, கூடப்படித்த மாணவர்களில் நிறைய பேர் வியட்னாமீஸ் மொழியைப் பேசினார்கள். அவர்களுக்கு யெகோவாவைப் பற்றி சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டதால், கொஞ்சம் நாட்களுக்குப் பிறகு, அந்த மொழியைக் கற்றுக்கொள்ள திட்டம் போட்டேன். பெரும்பாலும், ஆங்கில காவற்கோபுரத்தையும் வியட்னாமீஸ் காவற்கோபுரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்ததன் மூலம் அந்த மொழியை இன்னும் நன்றாகக் கற்றுக்கொண்டேன். அதோடு, பக்கத்திலிருந்த வியட்னாமீஸ் மொழி சபையைச் சேர்ந்த சிலரை நண்பர்களாக்கிக்கொண்டேன். 18 வயதில் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன். பிறகு, மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளியில் கலந்துகொண்டேன். இப்போது வியட்னாமீஸ் மொழி பேசுகிற தொகுதியில் ஒரு பயனியராக இருக்கிறேன். அந்தப் பள்ளியில் கலந்துகொண்டது இந்த நியமிப்பைச் செய்ய எனக்கு உதவியது. அந்தத் தொகுதியில் நான் மட்டுமே ஒரு மூப்பராக சேவை செய்கிறேன். வியட்னாமீஸ் மொழி பேசுகிற நிறைய பேர், அவர்களுடைய மொழியை நான் கற்றுக்கொண்டதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார்கள். அவர்கள் என்னை வீட்டுக்குள் அழைப்பார்கள்; அதனால், நிறைய சமயங்களில் என்னால் அவர்களுக்கு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முடிகிறது. சிலர், ஞானஸ்நானம் எடுக்கும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள்.”—அப்போஸ்தலர் 2:7, 8-ஐ ஒப்பிடுங்கள்.
9. சீஷராக்கும் வேலை நமக்கு எதையெல்லாம் சொல்லித்தருகிறது?
9 வேலை சம்பந்தமான நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ள... மற்றவர்களோடு நல்ல பேச்சுத் தொடர்பு வைத்துக்கொள்ள... நம்பிக்கையான மனநிலையோடு இருக்க... சாதுரியமாக நடந்துகொள்ள... சீஷராக்கும் வேலை உங்களுக்குச் சொல்லித்தருகிறது. (நீதி. 21:5; 2 தீ. 2:24) இந்த வேலை அதிக சந்தோஷத்தைத் தருவதற்கு என்ன காரணம்? இந்த வேலையின் மூலம் உங்கள் பைபிள் நம்பிக்கைகளை மற்றவர்களுக்கு நிரூபித்து காட்ட நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள். அதோடு, யெகோவாவோடு வேலை செய்வது எப்படி என்பதையும் கற்றுக்கொள்கிறீர்கள்.—1 கொ. 3:9.
10. உங்கள் பகுதியில் நல்ல செய்தியைக் கொஞ்சம் பேர் மட்டுமே காதுகொடுத்து கேட்டாலும் சீஷராக்கும் வேலையை நீங்கள் எப்படிச் சந்தோஷமாகச் செய்யலாம்?
10 உங்கள் பகுதியில், நல்ல செய்தியைக் கொஞ்சம் பேர் மட்டுமே கேட்டாலும், சீஷராக்கும் வேலையை உங்களால் சந்தோஷமாகச் செய்ய முடியும். ஏனென்றால், இந்த வேலையை முழு சபையும் ஒன்றுசேர்ந்து செய்கிறது. சீஷராக ஆன ஒருவரை ஒரே ஒரு சகோதரரோ சகோதரியோ பார்த்திருந்தாலும், அவரைத் தேடும் வேலையில் முழு சபையுமே ஈடுபடுகிறது; அதனால், முழு சபையுமே சந்தோஷப்படுகிறது. ப்ரேண்டன் என்ற சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். நல்ல செய்தியை அவ்வளவாகக் கேட்காத ஆட்கள் இருந்த ஒரு பகுதியில் அவர் 9 வருஷங்களாக பயனியர் ஊழியம் செய்தார். “நல்ல செய்திய பிரசங்கிக்க சொல்லி யெகோவா நம்மகிட்ட சொல்லியிருக்காரு. அதனால, பிரசங்கிக்கிறதுனா எனக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளி படிப்ப முடிச்ச உடனே நான் பயனியர் ஊழியத்தை ஆரம்பிச்சேன். எங்க சபையில இருந்த இளம் சகோதரர்கள உற்சாகப்படுத்துறதும், அவங்க ஆன்மீக ரீதியில முன்னேற்றம் செய்றத பார்க்குறதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளியில கலந்துகிட்டதுக்கு அப்புறம், வேறொரு இடத்துல பயனியர் ஊழியம் செய்றதுக்கு என்னை நியமிச்சாங்க. இங்க ஒருத்தர்கூட ஞானஸ்நானம் எடுக்குற அளவுக்கு முன்னேறல. ஆனா, மத்தவங்க முன்னேற்றம் செஞ்சிருக்காங்க. சீஷராக்கும் வேலைய முழுமையா செய்றதுக்கு திட்டம் போட்டத நினைச்சு நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்” என்று அவர் சொல்கிறார்.—பிர. 11:6.
உங்கள் திட்டங்கள் உங்களை எங்கே வழிநடத்தும்?
11. இளம் கிறிஸ்தவர்கள் நிறைய பேர் வேறெந்த வேலையையும் சந்தோஷமாகச் செய்கிறார்கள்?
11 யெகோவாவுக்குச் சேவை செய்ய நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, இளம் கிறிஸ்தவர்கள் நிறைய பேர், கட்டுமான வேலையில் ஈடுபடுகிறார்கள். நூற்றுக்கணக்கான ராஜ்ய மன்றங்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. இவை யெகோவாவை மகிமைப்படுத்துவதால், இந்த வேலையைச் செய்வது உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும். சகோதர சகோதரிகளோடு வேலை செய்வதும் உங்களுக்குச் சந்தோஷத்தைத் தரும். அதோடு, கடுமையாக உழைப்பது எப்படி... பாதுகாப்பாக ஒரு வேலையைச் செய்வது எப்படி... கண்காணிகளோடு ஒத்துழைப்பது எப்படி... போன்ற விஷயங்களையும் கற்றுக்கொள்ளலாம்.
12. பயனியர் ஊழியம் எப்படி மற்ற வாய்ப்புகளுக்கு வழி திறக்கலாம்?
12 கெவின் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “என்னைக்காவது ஒரு நாள் யெகோவாவுக்கு முழுநேர சேவை செய்யணுங்கிற ஆசை சின்ன வயசுல இருந்தே எனக்கு இருந்துச்சு. கடைசியா 19 வயசுல பயனியர் ஊழியத்தை ஆரம்பிச்சேன். கட்டிடம் சம்பந்தப்பட்ட வேலை செஞ்சுக்கிட்டு இருந்த ஒரு சகோதரர்கிட்ட பகுதிநேர வேலை செஞ்சேன். அதனால என் தேவைகள என்னால பார்த்துக்க முடிஞ்சது. கூரைகளையும், ஜன்னல்களையும், கதவுகளையும் பொருத்துறதுக்கு கத்துக்கிட்டேன். அப்புறம், ரெண்டு வருஷம் வரைக்கும் சூறாவளி நிவாரண குழுவுல சேவை செஞ்சேன். அப்போ, ராஜ்ய மன்றங்களையும் சகோதரர்களோட வீடுகளையும் புதுப்பிச்சோம். தென் ஆப்பிரிக்காவுல கட்டுமான வேலைக்கான தேவை இருக்குறத பத்தி கேள்விப்பட்டேன். அதுக்காக விண்ணப்பிச்சப்போ, அங்க சேவை செய்றதுக்கான அழைப்பு எனக்கு வந்துச்சு. இப்போ ஆப்பிரிக்காவுல, ராஜ்ய மன்றங்கள கட்டுறதுக்காக சில வாரங்களுக்கு ஒரு தடவ வேற வேற இடத்துக்கு போறேன். நான் இருக்குற கட்டுமான குழு ஒரு குடும்பம் மாதிரி! நாங்க எல்லாரும் ஒண்ணா இருக்கோம், ஒண்ணா பைபிள் படிக்குறோம், ஒண்ணா வேலை செய்றோம். அதோட, உள்ளூர் சகோதரர்களோட சேர்ந்து ஒவ்வொரு வாரமும் சந்தோஷமா ஊழியம் செய்றேன். சின்ன வயசுல போட்ட திட்டங்களால இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நான் இவ்வளவு சந்தோஷமா இருப்பேன்னு நினைச்சுகூட பார்க்கல.”
13. பெத்தேல் சேவை ஏன் இளம் கிறிஸ்தவர்களுக்கு சந்தோஷத்தைத் தருகிறது?
13 பயனியர்களாக இருந்த சிலர், இப்போது பெத்தேலில் சேவை செய்கிறார்கள். அங்கே, எல்லாவற்றையும் யெகோவாவுக்காகச் செய்வதால், அந்த வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும். மக்கள் சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்காக பைபிள் மற்றும் பைபிள் சார்ந்த பிரசுரங்களைத் தயாரிக்க பெத்தேல் குடும்பம் உதவுகிறது. பெத்தேலில் சேவை செய்யும் டஸ்டின் இப்படிச் சொல்கிறார்: “என்னோட 9 வயசுல, முழுநேர ஊழியம் செய்யணும்னு இலக்கு வைச்சேன். பள்ளிப் படிப்ப முடிச்சவுடனே பயனியர் ஊழியத்தை ஆரம்பிச்சேன். ஒன்றரை வருஷத்துக்கு அப்புறம், பெத்தேல்ல சேவை செய்றதுக்கான அழைப்பு வந்துச்சு. அங்க, அச்சடிக்கும் இயந்திரத்தை இயக்கவும், அப்புறம், கம்ப்யூட்டர்ல ப்ரோகிராம் பண்ணவும் கத்துக்கிட்டேன். சீஷராக்கும் வேலை உலகம் முழுதும் எந்தளவு வளர்ந்துக்கிட்டு இருக்குங்குறத, பெத்தேல்ல நேரடியா பார்க்க முடியுது. மத்தவங்க யெகோவாகிட்ட நெருங்கி வர்றதுக்கு பெத்தேல் சேவை உதவுறதுனால, இங்க சேவை செய்ய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.”
உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?
14. முழுநேர சேவை செய்ய இப்போதே நீங்கள் எப்படித் தயாராகலாம்?
14 முழுநேர சேவை செய்ய நீங்கள் எப்படித் தயாராகலாம்? கிறிஸ்தவ குணங்களை வளர்த்துக்கொள்வது, மிகச் சிறந்த விதத்தில் யெகோவாவுக்குச் சேவை செய்ய உங்களுக்கு உதவும். அதற்கு, பைபிளைத் தவறாமல் படியுங்கள், படித்தவற்றை ஆழமாக யோசித்துப் பாருங்கள், சபைக் கூட்டங்களில் உங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்துங்கள். நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்கான அனுபவத்தையும் திறமையையும், உங்கள் பள்ளி நாட்களில் வளர்த்துக்கொள்ளுங்கள். மக்களுடைய கருத்தை சாதுரியமாகக் கேட்பதன் மூலமும், அவர்கள் சொல்லும் பதிலை கவனித்துக் கேட்பதன் மூலமும் அவர்கள்மேல் அக்கறை காட்ட கற்றுக்கொள்ளுங்கள். சபை வேலைகளைச் செய்யவும் நீங்கள் முன்வரலாம். உதாரணத்துக்கு, சுத்தம் செய்வது, பழுதுபார்ப்பது போன்ற வேலைகளை நீங்கள் செய்யலாம். தாழ்மையானவர்களையும், மனப்பூர்வமாக வேலை செய்ய விரும்புகிறவர்களையும் பயன்படுத்துவதில் யெகோவா மிகவும் சந்தோஷப்படுகிறார். (சங்கீதம் 110:3-ஐ வாசியுங்கள்; அப். 6:1-3) அப்போஸ்தலன் பவுலும் தீமோத்தேயுவை மிஷனரி ஊழியத்துக்கு அழைத்தார். ஏனென்றால், “சகோதரர்கள் தீமோத்தேயுவைப் பற்றி உயர்வாகப் பேசினார்கள்.”—அப். 16:1-5.
15. பயனியர் சேவை செய்வதற்கு உதவியாக இருக்கும் ஒரு வேலை கிடைக்க நீங்கள் என்ன செய்யலாம்?
15 முழுநேர சேவை செய்கிற நிறைய பேருக்கு ஒரு வேலை தேவைப்படுகிறது. (அப். 18:2, 3) உங்கள் இடத்திலேயே பகுதிநேர வேலைக்கான வாய்ப்புகள் இருக்கலாம். அதனால், அதற்குத் தேவையான ஒரு பயிற்சியை எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் திட்டங்களைப் பற்றி உங்கள் வட்டாரக் கண்காணியிடமும் மற்ற பயனியர்களிடமும் பேசுங்கள்; அவர்களுடைய ஆலோசனைகளைக் கேளுங்கள். பிறகு, பைபிள் சொல்வது போல், ‘நீங்கள் எதைச் செய்தாலும் அதை யெகோவாவின் கையில் ஒப்படைத்துவிடுங்கள். அப்போது, உங்கள் திட்டங்கள் வெற்றி பெறும்.’—நீதி. 16:3; 20:18.
16. எதிர்காலத்தில் உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற முழுநேர சேவை உங்களுக்கு எப்படி உதவியாக இருக்கும்?
16 சந்தோஷமான எதிர்காலத்தை நீங்கள் ‘உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்’ என்று யெகோவா விரும்புகிறார். (1 தீமோத்தேயு 6:18, 19-ஐ வாசியுங்கள்.) முழுநேர ஊழியம் செய்யும்போது, மற்ற முழுநேர ஊழியர்களோடு சேர்ந்து சேவை செய்வதற்கான வாய்ப்பு கிடைப்பதால், உங்களால் கிறிஸ்தவ முதிர்ச்சியை வளர்த்துக்கொள்ள முடியும். அதோடு, இளம் வயதிலேயே பயனியர் ஊழியம் செய்தது, தங்கள் கல்யாண வாழ்க்கைக்கு உதவியாக இருந்ததாக நிறைய பேர் உணர்ந்திருக்கிறார்கள். பெரும்பாலும், கல்யாணத்துக்கு முன்பு பயனியர் ஊழியம் செய்தவர்கள், அதற்குப் பிறகும் தங்கள் துணையோடு சேர்ந்து அதைத் தொடருகிறார்கள்.—ரோ. 16:3, 4.
17, 18. நீங்கள் போடும் திட்டங்கள் உங்கள் இதயத்தோடு எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன?
17 யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற திட்டம் நம் இதயத்திலிருந்து வரவேண்டும். “உங்கள் இதயத்திலுள்ள ஆசைகளை [யெகோவா] நிறைவேற்றி வைக்கட்டும். உங்களுடைய எல்லா திட்டங்களும் வெற்றியடைய உதவட்டும்” என்று யெகோவாவைப் பற்றி சங்கீதம் 20:4 சொல்கிறது. அதனால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று யோசியுங்கள். நம் காலத்தில் யெகோவா என்ன செய்கிறார் என்றும், அவருடைய சேவையில் உங்களால் என்ன செய்ய முடியும் என்றும் யோசியுங்கள். பிறகு, அவருக்குப் பிரியமானதைச் செய்ய திட்டம் போடுங்கள்.
18 யெகோவாவுக்கு முழுநேர சேவை செய்யவும், அவரை மகிமைப்படுத்தவும் உங்கள் வாழ்க்கையைப் பயன்படுத்தும்போது நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள். ‘யெகோவாவை வணங்குவதில் அளவில்லாமல் சந்தோஷப்படுங்கள். அப்போது, உங்கள் இதயத்திலுள்ள ஆசைகளை அவர் நிறைவேற்றி வைப்பார்.’—சங். 37:4.
a இந்தப் பள்ளி, இப்போது ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி என்று மாற்றப்பட்டிருக்கிறது.