மற்ற தேசத்தாரின் பிள்ளைகளுக்கு உதவுங்கள்!
“என் பிள்ளைகள் தொடர்ந்து சத்தியத்தில் நடக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது ஏற்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இல்லை.”—3 யோ. 4.
1, 2. (அ) குடிமாறி வந்திருக்கும் நிறைய பேருடைய பிள்ளைகள் என்ன கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்கான பதில்களைப் பார்க்கப் போகிறோம்?
“நான் குழந்தையா இருந்ததிலிருந்தே, குடிமாறி வந்திருந்த என் அப்பா அம்மாவோட மொழியத்தான் வீட்டுலயும் சபையிலயும் பேசுனேன் . . . ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சதும், உள்ளூர் மொழியில பேச ஆசைப்பட்டேன். கொஞ்ச வருஷத்துக்குள்ள உள்ளூர் மொழியில மட்டும்தான் பேசுனேன். கூட்டங்கள்ல நடக்கிறத என்னால புரிஞ்சுக்கவே முடியல. என் அப்பா அம்மாவோட கலாச்சாரத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி இருந்துச்சு” என்கிறார் ஜோஷ்வா. இது போன்ற அனுபவம் இன்று நிறைய பேருக்கு இருக்கிறது.
2 இன்று 24 கோடிக்கும் அதிகமான பேர், தாங்கள் பிறந்த நாட்டில் வாழ்வதில்லை. நீங்கள் வேறொரு நாட்டிலிருந்து குடிமாறி வந்திருக்கும் பெற்றோரா? அப்படியென்றால், உங்கள் பிள்ளைகள் யெகோவாவை நேசிக்கவும், ‘தொடர்ந்து சத்தியத்தில் நடக்கவும்’ அவர்களுக்கு நீங்கள் எப்படி மிகச் சிறந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கலாம்? (3 யோ. 4) அவர்களுக்கு மற்றவர்கள் எப்படி உதவலாம்?
பெற்றோரே, நல்ல முன்மாதிரிகளாக இருங்கள்!
3, 4. (அ) பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கலாம்? (ஆ) பிள்ளைகளிடமிருந்து பெற்றோர் எதை எதிர்பார்க்கக் கூடாது?
3 பெற்றோரே, உங்கள் பிள்ளைகள் யெகோவாவோடு நல்ல பந்தத்தில் இருக்க வேண்டும் என்றும், முடிவில்லாத வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்றும் நீங்கள் ஆசைப்பட்டால், முதலில் நீங்கள் நல்ல முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். நீங்கள் ‘கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுப்பதை’ உங்கள் பிள்ளைகள் பார்க்கும்போது, தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக யெகோவாவை நம்பியிருக்க அவர்கள் கற்றுக்கொள்வார்கள். (மத். 6:33, 34) பொருள் வசதிகளைத் தேடுவதற்குப் பதிலாக, யெகோவாவின் சேவைக்கு முதலிடம் கொடுங்கள். எளிமையாக வாழுங்கள், கடன் வாங்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். பணத்தையோ ‘மனிதர்களிடமிருந்து வரும் மகிமையையோ’ தேடாமல், ‘பரலோகத்தில் இருக்கும் பொக்கிஷத்தை’ தேடுங்கள். அதாவது, யெகோவாவின் அங்கீகாரத்தைத் தேடுங்கள்.—மாற்கு 10:21, 22-ஐ வாசியுங்கள்; யோவா. 12:43.
4 உங்கள் பிள்ளைகளோடு நேரம் செலவு செய்ய முடியாதளவுக்கு வேலையிலேயே மூழ்கி விடாதீர்கள். உங்கள் பிள்ளைகள், தங்களுக்காகவோ உங்களுக்காகவோ புகழ் சேர்ப்பதற்கு அல்லது பணம் சேர்ப்பதற்குப் பதிலாக, யெகோவாவுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கலாம். அதை நினைத்து நீங்கள் பெருமைப்படுவதாக அவர்களிடம் சொல்லுங்கள். பிள்ளைகள் உங்களைச் சௌகரியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தவறான எண்ணத்தை விட்டுவிடுங்கள். “பெற்றோருக்குப் பிள்ளைகள் சேர்த்து வைக்க வேண்டியதில்லை, பெற்றோர்தான் பிள்ளைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டும்” என்பதை ஞாபகத்தில் வையுங்கள்.—2 கொ. 12:14.
பெற்றோரே, மொழி பிரச்சினையைச் சமாளிக்க முயற்சி செய்யுங்கள்
5. பெற்றோர் ஏன் பிள்ளைகளிடம் யெகோவாவைப் பற்றி பேச வேண்டும்?
5 முன்கூட்டியே சொன்னதுபோல, ‘மற்ற தேசத்தைச் சேர்ந்த எல்லா பாஷைக்காரர்களும்’ யெகோவாவின் அமைப்புக்குள் வருகிறார்கள். (சக. 8:23) ஆனால், பிள்ளைகளுக்கு உங்கள் மொழி நன்றாகப் புரியவில்லை என்றால், சத்தியத்தைப் பற்றி சொல்லித்தருவது உங்களுக்குக் கஷ்டமாகிவிடலாம். உங்கள் பிள்ளைகள்தான் உங்கள் பைபிள் மாணவர்களிலேயே மிக முக்கியமான மாணவர்கள்! யெகோவாவைப் பற்றி “தெரிந்துகொண்டே” இருந்தால்தான் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும். (யோவா. 17:3) யெகோவாவின் போதனைகளைப் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் அடிக்கடி அவற்றைப் பற்றி “பேச வேண்டும்.”—உபாகமம் 6:6, 7-ஐ வாசியுங்கள்.
6. உங்கள் மொழியைக் கற்றுக்கொள்வதால் உங்கள் பிள்ளைகள் எப்படி நன்மையடைவார்கள்? (ஆரம்பப் படம்)
6 பள்ளியிலோ மற்றவர்களிடமிருந்தோ உங்கள் பிள்ளைகள் உள்ளூர் மொழியைக் கற்றுக்கொள்ளலாம். ஆனால், உங்கள் மொழியில் நீங்கள் தவறாமல் அவர்களிடம் பேசும்போதுதான், அவர்களால் உங்கள் மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். பிள்ளைகளுக்கு உங்கள் மொழி தெரிந்தால், உங்களோடு பேசுவதும் தங்கள் உணர்ச்சிகளை உங்களிடம் சொல்வதும் அவர்களுக்குச் சுலபமாக இருக்கும். அதோடு, வேறு சில நன்மைகளும் இருக்கின்றன. பிள்ளைகளுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மொழி தெரிந்தால், அவர்களுடைய சிந்திக்கும் திறன் வளரும், மற்றவர்களுடைய கருத்துகளைப் புரிந்துகொள்வதும் அவர்களுக்குச் சுலபமாக இருக்கும். ஊழியத்தில் இன்னும் நிறைய செய்யவும் அவர்களுக்கு உதவியாக இருக்கும். குடிமாறி வந்திருக்கும் ஒரு பெற்றோரின் பிள்ளையான கரோலினா இப்படிச் சொல்கிறார்: “வேற மொழி பேசுற சபையில இருக்கிறது ரொம்ப நல்லா இருக்கு . . . தேவை அதிகம் இருக்கிற இடத்துல சேவை செய்றது சுவாரஸ்யமான ஒரு அனுபவம்.”
7. உங்கள் குடும்பத்தில் மொழி ஒரு பிரச்சினையாக இருந்தால், நீங்கள் என்ன செய்யலாம்?
7 உள்ளூர் கலாச்சாரத்தையும் மொழியையும் கற்றுக்கொள்ளும்போது, குடிமாறி வந்திருக்கும் பெற்றோரின் பிள்ளைகள் சிலருக்கு, தங்கள் பெற்றோரின் மொழியில் பேசுவதற்கான ஆர்வமும் திறனும் இல்லாமல் போய் விடலாம். பெற்றோரே, உங்கள் பிள்ளையின் விஷயத்திலும் இதுதான் உண்மையா? அப்படியென்றால் உள்ளூர் மொழியை ஓரளவுக்காவது, உங்களால் கற்றுக்கொள்ள முடியுமா? உங்கள் பிள்ளையின் பேச்சு, பள்ளி நடவடிக்கைகள், பொழுதுபோக்கு ஆகியவற்றைப் பற்றி தெரிந்துகொள்ளும்போதும், அவர்களுடைய ஆசிரியர்களிடம் பேசும்போதும் உங்கள் பிள்ளைகளைக் கிறிஸ்தவர்களாக வளர்ப்பது உங்களுக்குச் சுலபமாக இருக்கும். ஒரு புது மொழியைக் கற்றுக்கொள்ள, நேரமும் முயற்சியும் மனத்தாழ்மையும் அவசியம். இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: உங்கள் பிள்ளைக்கு ஒருவேளை காது கேட்காமல் போய்விட்டால், உங்கள் பிள்ளையோடு பேசுவதற்கு நீங்கள் சைகை மொழியைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்வீர்கள். அப்படியென்றால், உங்கள் பிள்ளையால் நன்றாகப் பேச முடிந்த மொழியைக் கற்றுக்கொள்ள நீங்கள் முயற்சி செய்ய வேண்டும், இல்லையா?a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
8. உள்ளூர் மொழியில் உங்களுக்கு நன்றாகப் பேசத் தெரியவில்லை என்றாலும் உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?
8 தங்கள் பிள்ளைகளுடைய புது மொழியை நன்றாகக் கற்றுக்கொள்வது, குடிமாறி வந்திருக்கும் சில பெற்றோருக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கலாம். அதனால், “பரிசுத்த எழுத்துக்களை” நன்றாகப் புரிந்துகொள்ள தங்கள் பிள்ளைகளுக்கு உதவுவது அவர்களுக்குக் கஷ்டமாகி விடலாம். (2 தீமோ. 3:15) நீங்களும் இதே சூழ்நிலையில் இருக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ளவும், அவரை நேசிக்கவும் உங்கள் பிள்ளைகளுக்கு உங்களால் உதவ முடியும். “தனி ஆளா இருக்கிற எங்க அம்மாவுக்கு, எங்களுக்கு நல்லா தெரிஞ்ச மொழிய புரிஞ்சுக்கிறது கஷ்டமா இருந்துச்சு. எனக்கும் என் சகோதரிகளுக்கும் எங்க அம்மாவோட மொழியில பேசுறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு . . . ஆனா, அவங்க படிக்கிறதையும், ஜெபம் செய்றதையும், வாரம் தவறாம குடும்ப வழிபாட்ட நடத்துறதுக்கு அவங்களால முடிஞ்ச எல்லாத்தையும் செய்றத பார்த்தப்போ, யெகோவாவ பத்தி தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியங்கிறத நாங்க புரிஞ்சுக்கிட்டோம்” என்கிறார் ஷான் என்ற மூப்பர்.
9. இரண்டு மொழிகளில் படிக்க வேண்டிய தேவை இருக்கிற பிள்ளைகளுக்கு பெற்றோர் எப்படி உதவலாம்?
9 சில பிள்ளைகள், 2 மொழிகளில் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியிருக்கலாம். ஏனென்றால், அவர்கள் பள்ளியில் ஒரு மொழியும் வீட்டில் ஒரு மொழியும் பேசுகிறார்கள். அதனால்தான், சில பெற்றோர் பிரசுரங்களையும், ஆடியோ பதிவுகளையும், வீடியோக்களையும் 2 மொழிகளிலும் பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து என்ன தெரிந்துகொள்ளலாம்? தங்கள் பிள்ளைகள் யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு, குடிமாறி வந்திருக்கும் பெற்றோர் கடினமாக உழைக்க வேண்டும்.
எந்த மொழி பேசுகிற சபைக்கு நீங்கள் போக வேண்டும்?
10. (அ) எந்தச் சபைக்குப் போவது என்று யார் முடிவு எடுக்க வேண்டும்? (ஆ) முடிவு எடுப்பதற்கு முன்பு அவர் என்ன செய்ய வேண்டும்?
10 குடிமாறி வந்திருப்பவர்கள், தங்கள் மொழி பேசுகிற சகோதர சகோதரிகளிடமிருந்து தூரமாக இருந்தால், உள்ளூர் மொழி பேசுகிற ஒரு சபைக்கு அவர்கள் போக வேண்டும். (சங். 146:9) ஒருவேளை, அவர்களுடைய மொழி பேசுகிற சபை பக்கத்தில் இருந்தால், எந்தச் சபைக்குப் போவது குடும்பத்துக்கு நல்லது என்று குடும்பத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும். அப்படி முடிவு எடுப்பதற்கு முன்பு அவர் நன்றாக யோசிக்க வேண்டும், அதைப் பற்றி ஜெபம் செய்ய வேண்டும். அதோடு, தன் மனைவியிடமும் பிள்ளைகளிடமும் அதைப் பற்றி பேச வேண்டும். (1 கொ. 11:3) முடிவு எடுப்பதற்கு முன்பு அவர் எதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொள்வார்? எந்த பைபிள் நியமங்கள் அவருக்கு உதவியாக இருக்கும்?
11, 12. (அ) பிள்ளைகள் கூட்டங்களிலிருந்து பிரயோஜனமடைய மொழி எந்தளவு உதவியாக இருக்கிறது? (ஆ) தங்கள் பெற்றோரின் மொழியைக் கற்றுக்கொள்ள சில பிள்ளைகளுக்கு ஏன் ஆர்வம் இருப்பதில்லை?
11 தங்கள் பிள்ளைகளுக்கு உண்மையிலேயே என்ன தேவை என்பதைப் பெற்றோர் யோசித்துப் பார்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு பைபிள் சத்தியங்கள் நன்றாகப் புரிய வேண்டும் என்றால், வாராவாரம் கூட்டங்களில் கொஞ்ச நேரத்துக்கு மட்டுமே கிடைக்கிற பைபிள் போதனைகள் அவர்களுக்குப் போதாது. தங்களுக்கு நன்றாகப் புரிந்த மொழியில் நடக்கிற கூட்டங்களில் பிள்ளைகள் இருந்தாலே போதும், அவர்கள் நன்மையடைவார்கள். சொல்லப்போனால், பெற்றோர் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே நன்மையடைவார்கள். ஆனால், ஒரு மொழி நன்றாகப் புரியவில்லை என்றால், அவர்களால் அந்தளவு நன்மையடைய முடியாது. (1 கொரிந்தியர் 14:9, 11-ஐ வாசியுங்கள்.) அதோடு, பிள்ளைகளின் யோசனைகளிலும் உணர்ச்சிகளிலும் உள்ளூர் மொழி எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அந்தளவு அவர்களுடைய தாய்மொழி இப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது. சில பிள்ளைகள், தங்கள் தாய்மொழியில் கூட்டங்களில் பதில் சொல்லவும், ஊழியத்தில் எப்படிப் பேசுவது என்று நடித்துக் காட்டவும், பேச்சுகள் கொடுக்கவும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், அவை எதுவும் உண்மையிலேயே அவர்களுடைய இதயத்திலிருந்து வராது.
12 மொழி மட்டுமே ஒரு பிள்ளையின் இதயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது இல்லை. ஆரம்பத்தில் பார்த்த ஜோஷ்வாவின் விஷயத்திலும் இதுதான் உண்மை. “அப்பா அம்மாவோட மொழி, கலாச்சாரம், மதம்னு எல்லாமே இளம் பிள்ளைங்களுக்கு வந்துடுது” என்கிறார் அவருடைய அக்கா எஸ்தர். ஆனால், தங்களுக்கும் தங்கள் பெற்றோரின் கலாச்சாரத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று பிள்ளைகள் நினைத்தால், பெற்றோரின் கலாச்சாரம் மற்றும் மதத்தைப் பற்றி தெரிந்துகொள்ள அவர்களுக்கு ஆர்வம் இருக்காது. அப்போது, வேறொரு நாட்டிலிருந்து குடிமாறி வந்திருக்கும் பெற்றோர் என்ன செய்யலாம்?
13, 14. (அ) வேறொரு நாட்டிலிருந்து குடிமாறி வந்த ஒரு பெற்றோர் குடும்பமாக ஏன் உள்ளூர் மொழி சபைக்கு மாறிப்போனார்கள்? (ஆ) யெகோவாவோடு இருந்த பலமான பந்தத்தைக் காத்துக்கொள்ள பெற்றோர் என்ன செய்தார்கள்?
13 கிறிஸ்தவப் பெற்றோர், தங்கள் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் தருவதைவிட பிள்ளைகளுடைய தேவைகளுக்கே அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். (1 கொ. 10:24) ஜோஷ்வா மற்றும் எஸ்தரின் அப்பா சாம்யேல் இப்படிச் சொல்கிறார்: “சத்தியம் எங்க பிள்ளைங்களோட இதயத்துக்குள்ள போறதுக்கு எந்த மொழி உதவியா இருக்கும்னு தெரிஞ்சுக்க நானும் என் மனைவியும் எங்க பிள்ளைங்கள கவனிக்க ஆரம்பிச்சோம், ஞானத்துக்காக ஜெபம் செஞ்சோம். ஜெபத்துக்கு கிடைச்ச பதில்ல இருந்து, எங்களுக்கு வசதியா இருந்த மொழி, பிள்ளைங்களுக்கு வசதியா இல்லங்கிறத புரிஞ்சுக்கிட்டோம். எங்க சொந்த மொழியில நடக்கிற கூட்டங்கள் அவங்களுக்கு அவ்வளவு பிரயோஜனமா இருக்கல. அதனால, உள்ளூர் மொழி பேசுற சபைக்கு மாறிப்போகலாம்னு முடிவு செஞ்சோம். நாங்க ஒண்ணா கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போனோம். சாப்பாட்டுக்கும் சுற்றுலா போறதுக்கும் உள்ளூர் சகோதர சகோதரிகளை கூப்பிட்டோம். அதனால, பிள்ளைங்களால சகோதர சகோதரிகளை பத்தி நல்லா தெரிஞ்சுக்க முடிஞ்சது. அதோட, யெகோவாவ, கடவுளா மட்டுமில்ல, தங்களோட அப்பாவாவும் ஃப்ரெண்டாவும் பார்க்க அவங்களால முடிஞ்சது. எங்க மொழிய அவங்க நல்லா தெரிஞ்சுக்கணுங்கிறதவிட இதுதான் எங்களுக்கு ரொம்ப முக்கியமா இருந்துச்சு.”
14 சகோதரர் சாம்யேல் தொடர்ந்து இப்படிச் சொல்கிறார்: “எங்கள ஆன்மீக ரீதியில பலமா வைச்சுக்க என் மனைவியும் நானும் எங்க சொந்த மொழியில நடந்த கூட்டங்களுக்கும் போனோம். எங்க வாழ்க்கை ரொம்ப பிஸியா இருந்துச்சு, நாங்க களைப்பாவும் இருந்தோம். ஆனா, எங்க முயற்சியையும் தியாகத்தையும் ஆசீர்வதிச்சதுக்காக யெகோவாவுக்கு நன்றி சொல்றோம். எங்க மூணு பிள்ளைங்களும் இப்போ யெகோவாவுக்கு முழுநேரமா சேவை செய்றாங்க.”
இளம் பிள்ளைகள் என்ன செய்யலாம்?
15. உள்ளூர் மொழி பேசுகிற சபைக்குப் போனால் தன்னால் இன்னும் நிறைய செய்ய முடியும் என்று கிறிஸ்டினா ஏன் நினைத்தார்?
15 தாங்கள் வளர்ந்த பிறகு, தங்களுக்கு நன்றாகப் புரிகிற மொழியில் நடக்கிற கூட்டத்துக்குப் போனால்தான் யெகோவாவுக்கு இன்னும் நன்றாகச் சேவை செய்ய முடியும் என்பதை பிள்ளைகள் உணரலாம். அப்படிப்பட்ட சமயங்களில், பிள்ளைகளுக்குத் தங்கள்மேல் அன்பு இல்லை என்று பெற்றோர் நினைக்கக் கூடாது. “என் அப்பா அம்மாவோட மொழியில இருக்குற சில அடிப்படையான விஷயங்கள் எனக்குத் தெரியும். ஆனா அதே மொழியில கூட்டங்கள் நடந்தப்போ, அந்த மொழிய புரிஞ்சுக்கிறது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு . . . எனக்கு 12 வயசு இருந்தப்போ, ஸ்கூல்ல படிக்கிற மொழியில நடந்த ஒரு மாநாட்டுக்கு போனேன். அங்க கேட்ட விஷயமெல்லாம் சத்தியங்கிறத அப்போதான் முதல் தடவையா புரிஞ்சுக்கிட்டேன். என் ஸ்கூல்ல பேசுற மொழியில ஜெபம் செய்ய ஆரம்பிச்சது இன்னொரு நல்ல மாற்றம்னு சொல்லலாம். ஏன்னா, என்னால மனசுல இருந்து யெகோவாகிட்ட பேச முடிஞ்சது” என்கிறார் கிறிஸ்டினா. (அப். 2:11, 41) அவருக்கு 18 வயதானபோது, அவருடைய பெற்றோரிடம் இதைப் பற்றி பேசினார்; பிறகு, உள்ளூர் மொழியில் நடந்த சபைக் கூட்டத்துக்கு போவதென்று முடிவு எடுத்தார். “ஸ்கூல்ல படிக்கிற மொழியில யெகோவாவ பத்தி தெரிஞ்சுக்கிறது, என்னை செயல்பட தூண்டுச்சு” என்று அவர் சொல்கிறார். சீக்கிரத்திலேயே அவர் ஒழுங்கான பயனியராக ஆனார். இப்போது அவர் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்.
16. வேறு மொழி பேசுகிற சபையிலேயே இருந்ததற்காக நாடியா ஏன் சந்தோஷப்படுகிறார்?
16 இளம் பிள்ளைகளே, உள்ளூர் மொழி பேசுகிற சபைக்குப் போக நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், ஏன் அப்படி ஆசைப்படுகிறீர்கள் என்று உங்களைக் கேட்டுக்கொள்ளுங்கள். யெகோவாவிடம் நெருங்கிப் போக உதவியாக இருக்கும் என்பதால் அப்படி ஆசைப்படுகிறீர்களா? (யாக். 4:8) அல்லது உங்கள் நடவடிக்கைகளை உங்கள் பெற்றோர் கவனிப்பது பிடிக்காததாலோ, நீங்கள் அதிக முயற்சி செய்ய விரும்பாததாலோ அப்படி ஆசைப்படுகிறீர்களா? “டீனேஜ் வயசு வந்தவுடனே, நானும் என்கூட பிறந்தவங்களும் உள்ளூர் மொழி பேசுற சபைக்கு போகணும்னு ஆசைப்பட்டோம்” என்று இப்போது பெத்தேலில் சேவை செய்யும் நாடியா சொல்கிறார். ஆனால் அப்படி மாறிப்போவது, யெகோவாவோடு அவர்களுக்கு இருக்கும் பந்தத்தைப் பாதிக்கும் என்று அவருடைய பெற்றோருக்குத் தெரிந்திருந்தது. “எங்க அப்பா அம்மா, அவங்க மொழிய எங்களுக்கு கத்துக்கொடுக்க கடினமா முயற்சி செஞ்சாங்க. வேற மொழி பேசுற சபையிலேயே எங்களை இருக்க வைச்சாங்க. நாங்க அதுக்காக ரொம்ப நன்றியோடு இருக்கோம். ஏன்னா, அவங்க அப்படி செஞ்சதுனாலதான், எங்க வாழ்க்கை முன்னேறியிருக்கு. மத்தவங்களுக்கு யெகோவா பத்தி சொல்லித்தர நிறைய வாய்ப்புகளும் கிடைச்சிருக்கு” என்கிறார் நாடியா.
மற்றவர்கள் எப்படி உதவலாம்?
17. (அ) பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை யெகோவா யாருக்குக் கொடுத்திருக்கிறார்? (ஆ) பிள்ளைகளுக்குச் சத்தியத்தைச் சொல்லித்தருவதற்குத் தேவையான உதவியைப் பெற்றோர் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்?
17 பிள்ளைகளுக்குச் சத்தியத்தைச் சொல்லித்தரும் பொறுப்பை யெகோவா பெற்றோருக்குத்தான் தந்திருக்கிறார்; தாத்தா பாட்டிக்கோ மற்றவர்களுக்கோ அல்ல. (நீதிமொழிகள் 1:8; 31:10, 27, 28-ஐ வாசியுங்கள்.) இருந்தாலும், பெற்றோருக்கு உள்ளூர் மொழி தெரியாததால், சத்தியம் தங்கள் பிள்ளைகளின் மனதைத் தொட அவர்களுக்கு உதவி தேவைப்படலாம். பெற்றோர் அப்படி உதவி கேட்பதால், பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை அவர்கள் தட்டிக்கழிக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. “யெகோவா சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி” வளர்ப்பதற்காகத்தான் அவர்கள் உதவி கேட்கிறார்கள். (எபே. 6:4) உதாரணத்துக்கு, குடும்ப வழிபாடு நடத்துவதற்கு பெற்றோர் மூப்பர்களிடம் ஆலோசனை கேட்கலாம். பிள்ளைகள் நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்கவும் பெற்றோர் மூப்பர்களிடம் உதவி கேட்கலாம்.
18, 19. (அ) இளம் பிள்ளைகளுக்கு மற்றவர்கள் எப்படி உதவலாம்? (ஆ) பெற்றோர் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?
18 பிள்ளைகளுக்கு உதவுவதற்காக, தங்கள் குடும்ப வழிபாட்டில் கலந்துகொள்ள பெற்றோர் மற்ற குடும்பங்களை அவ்வப்போது கூப்பிடலாம். மற்றவர்களோடு ஊழியத்துக்குப் போகும்போதும், அவர்களோடு சேர்ந்து பொழுதுபோக்கில் ஈடுபடும்போதும் இளம் பிள்ளைகள் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். (நீதி. 27:17) “என்னை கவனிச்சிக்கிட்ட சகோதரர்கள எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு . . . மாணாக்கர் பேச்சு கொடுக்க அவங்க எனக்கு சொல்லித்தந்தப்போ, நான் நிறைய கத்துக்கிட்டேன். ஓய்வு நேரத்துல, ஒரு தொகுதியா நாங்க எல்லாரும் ஒண்ணா நேரம் செலவு செஞ்சது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு” என்கிறார் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஷான்.
19 தங்கள் பிள்ளைகளுக்கு உதவும்படி பெற்றோர் சிலரைக் கேட்டுக்கொள்ளலாம். அப்படி உதவி செய்பவர்கள், பெற்றோரை மதிப்பதற்குப் பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டும். அதை அவர்கள் எப்படிச் செய்யலாம்? பெற்றோரைப் பற்றி நல்ல விதமாகப் பேச வேண்டும், பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை தாங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. சபையில் இருப்பவர்களோ வெளியாட்களோ தங்கள் நடத்தையைச் சந்தேகப்படும் விதத்தில் எதையும் செய்துவிடக் கூடாது. (1 பே. 2:12) ஆன்மீக விஷயங்களில் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுக்கும் பொறுப்பை, பெற்றோர் ஒரேயடியாக மற்றவர்களிடம் விட்டுவிடக் கூடாது. மற்றவர்கள் எப்படிப் பிள்ளைகளுக்கு உதவுகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும், தங்கள் பிள்ளைகளுக்குத் தொடர்ந்து சொல்லித்தர வேண்டும்.
20. யெகோவாவின் சிறந்த ஊழியர்களாக ஆவதற்கு பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்கு உதவலாம்?
20 பெற்றோரே, உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அதோடு, உங்களால் முடிந்த மிகச் சிறந்ததையும் செய்யுங்கள். (2 நாளாகமம் 15:7-ஐ வாசியுங்கள்.) உங்கள் சொந்த விருப்பங்களைவிட யெகோவாவுக்கும் உங்கள் பிள்ளைக்கும் இருக்கிற பந்தத்துக்கு முதலிடம் கொடுங்கள். கடவுளுடைய வார்த்தை உங்கள் பிள்ளையின் இதயத்தைத் தொட உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். உங்கள் பிள்ளை நிச்சயம் யெகோவாவின் சிறந்த ஊழியனாக ஆவான் (ஆவாள்) என்ற நம்பிக்கையை விட்டுவிடாதீர்கள். கடவுளுடைய வார்த்தையையும், உங்கள் நல்ல முன்மாதிரியையும் உங்கள் பிள்ளை பின்பற்றும்போது, தன் ஆன்மீகப் பிள்ளைகளைப் பற்றி உணர்ந்த அப்போஸ்தலன் யோவானைப் போலவே நீங்களும் உணர்வீர்கள். “என் பிள்ளைகள் தொடர்ந்து சத்தியத்தில் நடக்கிறார்கள் என்பதைக் கேள்விப்படும்போது ஏற்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இல்லை” என்று யோவான் சொன்னார்.—3 யோ. 4.
a மார்ச் 2007 விழித்தெழு! பக். 10-12-ல் இருக்கிற “மற்றொரு மொழியைக் கற்க உங்களால் முடியும்!” என்ற கட்டுரையைப் பாருங்கள்.