உங்கள் அறிவுரையை மற்றவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?
நல்ல விதத்தில் கொடுக்கப்படுகிற சரியான அறிவுரைக்கு எப்போதுமே கைமேல் பலன் கிடைக்கும். என்ன சரிதானே? அதுதான் இல்லை! திறமையான அறிவுரையாளர்கள் கொடுக்கிற பிரமாதமான அறிவுரையும்கூட அசட்டை செய்யப்படுகிறது, அல்லது நிராகரிக்கப்படுகிறது.—நீதிமொழிகள் 29:19.
கடவுளாகிய யெகோவா, காயீனுக்கு அறிவுரை கொடுத்தபோது இதுதான் நடந்தது. அவனுக்கு தன் தம்பியாகிய ஆபேலிடம் கடும் வெறுப்பு. (ஆதியாகமம் 4:3-5) இதனால் காயீனுக்கு வரவிருந்த பேராபத்தை அறிந்த கடவுள் அவனிடம் பின்வருமாறு கூறினார்: “நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்? உன் முகம் வாடி இருப்பது ஏன்? நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா? நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும். நீ அதை அடக்கி ஆள வேண்டும்.”—ஆதியாகமம் [தொடக்க நூல்] 4:6, 7, பொ.மொ.
யெகோவா பாவத்தை கொடிய விலங்குக்கு ஒப்பிட்டார். அது காயீன்மீது பாய்ந்து தாக்குவதற்கு தயாராய் இருந்தது. தன் தம்பியின்மேல் இருந்த குரோதத்தை அவன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மாறாக, அதை மனதுக்குள் வைத்து வெதும்பிக் கொண்டிருந்தால் அதன் பிடிக்குள் அவன் சிக்கி விடுவான். (யாக்கோபு 1:14, 15-ஐ ஒப்பிடுக.) காயீன் தன் மனதை மாற்றிக்கொள்ளவும் அழிவுக்குரிய பாதையில் தொடர்வதற்கு மாறாக “நல்லது செய்[ய]” முயலவும் கால அவகாசம் இருந்தது. கடவுளாகிய யெகோவா கொடுத்த அறிவுரையை காயீன் ஏற்கவில்லை என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அதன் விளைவோ படுநாசகரமாக இருந்தது.
சிலர் என்ன ஆலோசனை கொடுத்தாலும் கோபப்படுவார்கள், அதை அசட்டை செய்வார்கள். (நீதிமொழிகள் 1:22-30) அறிவுரை நிராகரிக்கப்படுவதற்கு அதைக் கொடுப்பவரே ஏதேனும் ஒரு விதத்தில் காரணமாய் இருக்கக் கூடுமோ? (யோபு 38:2) நீங்கள் அறிவுரை கொடுக்கும் விதம், அதை ஒருவர் ஏற்றுக்கொள்வதை கடினமாக்குகிறதா? அறிவுரை கொடுக்கப் போனாலே ஆபத்தாகி விடுகிறது; இதற்கு காரணம் மனித அபூரணம். ஆனால் பைபிளின் நியமங்களை கவனமாக பின்பற்றுங்கள். அப்போது இந்த ஆபத்து ஏற்படுவதை நீங்கள் ஓரளவுக்கு தவிர்க்கலாம். அவற்றில் சிலவற்றை கவனிக்கலாமா?
‘கனிந்த உள்ளத்தோடு திருத்துங்கள்’
“சகோதரரே, ஒருவர் அறியாமல் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்டால், ஆவிக்குரிய தகுதிகளை உடைய நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள், நீயும் அவனைப்போல் சோதனைக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்.” (கலாத்தியர் 6:1, NW) “அறியாமல் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக் கொண்ட” ஒருவரை “ஆவிக்குரிய தகுதிகளை” உடையவர்கள் திருத்துவதற்கு முயல வேண்டும் என அப்போஸ்தலன் பவுல் சுட்டிக் காட்டினார். சில சமயங்களில் அறிவுரை கொடுப்பதற்கே லாயக்கில்லாத நபர்கள்தான் அறிவுரை கொடுக்க முந்திக் கொள்வதாக தெரிகிறது. எனவே, மற்றவர்களுக்கு அறிவுரை கொடுப்பதற்கு முந்திக் கொள்ளாதீர்கள். (நீதிமொழிகள் 10:19; யாக்கோபு 1:19; 3:1) அறிவுரை கொடுப்பதென்பது ஆவிக்குரிய தகுதிகளை உடைய சபை மூப்பர்களின் தலையாய கடமை. இருந்தாலும், ஒரு முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர் தன் சகோதரன் தவறான பாதையில் செல்வதைக் கண்டால் அவரை எச்சரிப்பதில் தவறேதும் இல்லை.
நீங்கள் அறிவுரை கொடுக்கப் போகிறீர்களா, அப்படியானால், ஒரு விஷயத்தில் மிகுந்த ஜாக்கிரதையாய் இருங்கள். நீங்கள் சொல்வது கடவுளுடைய ஞானத்தின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். மனித தத்துவங்களிலும் கருத்துக்களிலும் அல்ல. (கொலோசெயர் 2:8) ஒரு பெரிய விருந்துக்கு சமைக்கும் சமையல்காரரை எடுத்துக் கொள்ளுங்கள். சமையல் பொருட்கள் கலப்படமில்லாமல் சுத்தமாகவும், உடலுக்கு கேடு உண்டாக்காதவையாகவும் இருக்கிறதா என்பதை அவர் கவனிக்க வேண்டும். உங்கள் ஆலோசனைகளும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கொடுக்கப்பட வேண்டும். சொந்த அபிப்பிராயத்திலிருந்து அல்ல. இதில் மிகுந்த கவனத்துடன் இருப்பது அவசியம். (2 தீமோத்தேயு 3:16, 17) இவ்வாறு செய்தால் நீங்கள் கொடுக்கும் அறிவுரையால் எவருக்கும் எத்தீங்கும் நேரிடாது.
அறிவுரை கொடுப்பதன் நோக்கம் தவறு செய்பவரை ‘திருத்துவதே,’ தன்னை மாற்றிக் கொள்ள மனமில்லாதவரை வற்புறுத்தி மாற்றுவதல்ல. “திருத்துவது” என்பதன் கிரேக்க பதத்தைக் கவனியுங்கள். அதிக சேதம் ஏற்படுவதைத் தவிர்க்க இடம்பிறழ்ந்த எலும்பை திரும்ப அதன் இடத்திற்கு சரியாக பொருத்துவதோடு சம்பந்தப்பட்ட ஒரு வார்த்தையே அது. சொற்களஞ்சிய ஆசிரியர் டபிள்யூ. ஈ. வைன் சொல்வதன்படி, “அச்செயலில் பொறுமை, விடாமுயற்சி ஆகியவை தேவைப்படுவதையும்” அது குறிப்பிடுகிறது. அதை சரி செய்யும்போது அதிக வலி ஏற்படாதிருக்க மென்மையாகவும் திறமையாகவும் கையாளுவது எவ்வளவு அவசியம் என்பதை சற்று யோசித்துப் பாருங்கள். அதைப் போலவே, அறிவுரை பெறுகிறவரை எவ்விதத்திலும் புண்படுத்திவிடாதபடிக்கு அறிவுரை வழங்குபவர் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். எனக்கு அறிவுரை கொடுங்கள் என யாராவது கேட்கிற சமயத்திலேயே இவ்வாறு கொடுப்பது மிகவும் கடினமாயிருக்கிறது. அப்படியென்றால், நீங்களாகவே தலையிட்டு அறிவுரை கொடுக்கையில் பெருமளவு திறமையும் சாதுரியமும் தேவைப்படுகிறது.
ஒருவரிடம் வெறுப்பைக் காட்டினால், ஒருகாலும் அவரை உங்களால் ‘திருத்த’ முடியாது. இதைத் தவிர்க்க, “பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும்” காட்ட வேண்டியதன் அவசியத்தை மனதில் கொள்ளுங்கள். (கொலோசெயர் 3:12) ஒருவர் டாக்டரிடம் செல்கிறார். அந்த டாக்டரோ பொறுமையில்லாதவராய், கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு வைத்தியம் பார்த்தால், டாக்டரின் அறிவுரையை நோயாளி எப்படி ஏற்றுக் கொள்வார், அல்லது சிகிச்சைக்காக திரும்பவும் அவரிடம்தான் வருவாரா என்ன?
அதற்காக அறிவுரையை பட்டும் படாமலும்தான் கொடுக்க வேண்டும் என இது குறிக்கிறதில்லை. ஆசியா மாகாணத்திலுள்ள ஏழு சபைகளுக்கு அறிவுரை கொடுத்தபோது இயேசு கிறிஸ்து மழுப்பாமல் உறுதியுடன் பேசினார். (வெளிப்படுத்துதல் 1:4; 3:1-22) அவர்கள் கேட்டு செயல்படுவதற்கு ஏதுவாக நேரடியான அறிவுரைகளைக் கொடுத்தார். அறிவுரைகளை உறுதியுடன் கொடுத்த அதே சமயத்தில் பரிவு, இரக்கம் போன்ற குணங்களையும் காட்டினார். இவ்விதமாக தம் பரலோகத் தகப்பனின் அன்பான மனநிலையை பின்பற்றினார்.—சங்கீதம் 23:1-6; யோவான் 10:7-15.
கிருபைபொருந்திய அறிவுரை
“அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக.” (கொலோசெயர் 4:6) உப்பு உணவிற்கு சுவையூட்டுகிறது. அந்த உணவை ஒருகை பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை எழுப்புகிறது. உங்கள் அறிவுரையும் மனதுக்கு உகந்ததாக இருக்க வேண்டுமென்றால், அது “கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிரு[க்க]” வேண்டும். தரமான உணவுப் பொருட்களைக்கூட வாயில் வைக்க முடியாதளவுக்கு சமைக்க நேரிடலாம், அல்லது பரிமாறும்போது அலங்கோலமாக தட்டில் குவித்து வைக்க நேரிடலாம். அதை பார்த்தவுடனேயே அரக்கப்பரக்க பசியுடன் வருபவரின் பசியுங்கூட பறந்துபோகும். சொல்லப்போனால், ஒரு வாய் சாப்பிடுவதும்கூட கஷ்டம்தான்.
அறிவுரை கொடுக்கும்போது, சரியான வார்த்தைகளை தெரிந்தெடுத்து உபயோகிப்பது மிக முக்கியம். ஞானியாகிய சாலொமோன் கூறினார்: “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித் தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்.” (நீதிமொழிகள் 25:11) இந்த வார்த்தைகளை எழுதும்போது அழகிய வேலைப்பாடு மிக்க வெள்ளிப் பாத்திரத்தில் கலை நுணுக்கத்துடன் செதுக்கப்பட்ட தங்கப் பழங்கள் கம்பீரமாக வீற்றிருப்பதை அவர் கற்பனை செய்திருப்பார். அதைப் பார்ப்பதற்கே எத்தனை இன்பம், இன்னும் அதை பரிசாக பெற்றோமென்றால் சொல்லவே வேண்டாம்! அதைப் போலவே, நன்றாக தெரிந்தெடுக்கப்பட்ட கிருபைபொருந்தின வார்த்தைகள் நீங்கள் உதவ விரும்புபவரின்மீது பலமான செல்வாக்கை செலுத்த முடியும்.—பிரசங்கி 12:9, 10.
மாறாக, “கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.” (நீதிமொழிகள் 15:1) சூழ்நிலைக்கு பொருத்தமில்லாத வார்த்தைகளால் வேதனையும் கோபமும்தான் மிஞ்சும். அதை பெறுபவர் நன்றி சொல்லமாட்டார். சில சமயங்களில், பொருத்தமில்லாத வார்த்தைகள் மட்டுமல்ல, பேச்சுத் தொனியும்கூட நல்ல அறிவுரையையும் நிராகரிக்கச் செய்துவிடும். சாதுரியமற்ற, உணர்ச்சியற்ற விதத்தில் கொடுக்கப்படுகிற அறிவுரை, ஒருவரை ஆயுதத்தால் தாக்கினால் உண்டாகிற அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும். “சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்” என நீதிமொழிகள் 12:18 (பொ.மொ.) சொல்கிறது. எனவே, ஏன் யோசனையில்லாமல் பேச வேண்டும், அறிவுரைக்கு செவிகொடுப்பதை கடினமாக்க வேண்டும்?—நீதிமொழிகள் 12:15.
சாலொமோன் சொன்னபடி, அறிவுரை “ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை[யாக]” இருக்க வேண்டும். அறிவுரை நற்பயனை பெறவேண்டுமானால் அதை எந்த சமயத்தில் கொடுக்கிறீர்கள் என்பது மிக முக்கியம். பசி இல்லாத ஒருவரை சாப்பிடு சாப்பிடு என கட்டாயப்படுத்தினால் அவர் நிச்சயம் சாப்பிட மாட்டார். ஒருவேளை அப்போதுதான் ஒரு பிடி பிடித்துவிட்டு வந்திருப்பார், அல்லது வியாதியாக இருப்பார். அவரை கட்டாயப்படுத்தி சாப்பிட வைப்பது சரியானதும் அல்ல நல்லதும் அல்ல.
மனத்தாழ்மையோடு அறிவுரை கொடுத்தல்
“. . . என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் [“பிறரிடம் தனிப்பட்ட அக்கறை,” NW] நோக்குவானாக.” (பிலிப்பியர் 2:2-4) நீங்கள் நல்ல அறிவுரையாளராக இருந்தால், மற்றவர்களின் நலனில் உங்களுக்கு “தனிப்பட்ட அக்கறை” இருக்கும். அதுவே அறிவுரை கொடுக்க உங்களைத் தூண்டும். உங்களுடைய ஆவிக்குரிய சகோதர சகோதரிகளுடன் “மனத்தாழ்மையுடன்” நடந்துகொள்வீர்கள். உங்களைவிட உயர்ந்தவர்களாக அவர்களை கருதுவீர்கள். இது எப்படி என்று யோசிக்கிறீர்களா?
உங்களுக்கு மனத்தாழ்மை இருந்தால் பெரியதனமாக நடக்கவோ பேசவோ மாட்டீர்கள். உடன் விசுவாசிகளைவிட உயர்வாக கருதுவதற்கு யாருக்குமே அருகதை இல்லை. எல்லாருமே எப்போதாவது தவறு செய்து கொண்டுதான் இருக்கிறோம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாது. எனவே நீங்கள் அறிவுரை கொடுக்கப்போகிற அந்நபரின் எண்ணங்களை நீங்களே தீர்மானிக்காமல் இருப்பது மிகவும் முக்கியம். அவருக்கு தப்பான எண்ணங்கள் இல்லாதிருக்கலாம். தன்னுடைய மனதோ செயல்களோ தவறான பாதையில் செல்வது அவருக்கே தெரியாமல் இருக்கலாம். ஒருவேளை, கடவுள் எதிர்பார்க்கிறதற்கு இசைவாக தான் செய்யவில்லை என்பதை அவர் ஓரளவு அறிந்திருக்கலாம். இருந்தாலும், தாழ்மையோடும் அவருடைய ஆவிக்குரிய நலனை மனதில் வைத்தும் உண்மையான அக்கறையோடு அறிவுரை கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வது அவருக்கு எளிதாயிருக்கும்.
நீங்கள் ஒரு விருந்துக்கு போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். விருந்துக்கு அழைத்தவர் உங்களை வெறுமனே கடனுக்கு வரவேற்றுவிட்டு உங்களை அவமதிக்கிறமாதிரி நடந்துகொண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஏதோ பேருக்கு சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவீர்கள் அல்லவா? “பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது” என்பது எவ்வளவு உண்மை. (நீதிமொழிகள் 15:17) அதுவே அறிவுரை கூறுபவரின் விஷயத்திலும் பொருந்தும். அறிவுரை கொடுப்பவர் அதை பெறுபவர்மீது வெறுப்பைக் காட்டினாலோ, அவரை மட்டந்தட்டி சங்கடப்படும்படி செய்தாலோ, அவர் எவ்வளவுதான் சிறந்த அறிவுரையைக் கொடுத்தாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்கைப் போலத்தான் இருக்கும். அதே சமயத்தில் அன்பு, பரஸ்பர மரியாதை, நம்பிக்கை ஆகியவை அறிவுரை கொடுப்பதையும் ஏற்றுக் கொள்வதையும் எளிதாக்கும்.—கொலோசெயர் 3:14.
ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவுரை
அரசனாகிய தாவீதுக்கு அறிவுரை கூறியபோது நாத்தான் தீர்க்கதரிசி மனத்தாழ்மையைக் காட்டினார். நாத்தான் பேசியவற்றிலும் செய்தவற்றிலும் தாவீதின்மேல் அவருக்கிருந்த அன்பும் மரியாதையும் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. நாத்தான் ஒரு நீதிக்கதையைச் சொல்வதன்மூலம் ஆரம்பித்தார். ஒருவேளை ஆலோசனையை ஏற்றுக்கொள்வது தாவீதுக்கு சிரமமாக இருக்க வாய்ப்புண்டு என்பதை நாத்தான் புரிந்துகொண்டிருந்தார். (2 சாமுவேல் 12:1-4) நீதியிலும் நியாயத்திலும் தாவீதுக்கிருந்த அன்பின் பேரில் நாத்தான் கவனத்தை திருப்பினார். பத்சேபாளின் விவகாரத்தில் தாவீது அதைக் காட்ட தவறியபோதிலும்கூட அவ்வாறு செய்தார். (2 சாமுவேல் 11:2-27) நீதிக்கதையின் குறிப்பு வலியுறுத்தப்பட்டபோது, “நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன்” என தாவீது இருதயப்பூர்வமாக ஒத்துக்கொண்டார். (2 சாமுவேல் 12:7-13) யெகோவாவின் அறிவுரைக்கு செவிகொடுக்காத காயீனைப் போல் இல்லாமல், தாவீது பணிவுடன் அறிவுரையை ஏற்றுக் கொண்டார்.
தாவீதின் அபூரணத்தையும், அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்ளாமல் போகும் சாத்தியத்தையும் மனதில் வைத்து நாத்தானை யெகோவாவே வழிநடத்தினார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. யெகோவாவால் அரசராக அபிஷேகம் செய்யப்பட்டவர் தாவீது. எனவே நாத்தான் அவரை தன்னிலும் உயர்வாக கருதினார். இவ்வாறு அதிக ஜாக்கிரதையுடன் இந்த விஷயத்தைக் கையாண்டார். உங்களுக்கு ஓரளவு அதிகாரம் இருக்கலாம், நீங்கள் சரியான அறிவுரையையும்கூட கொடுக்கலாம். ஆனால் நீங்கள் மனத்தாழ்மையை காட்டத் தவறினால் அதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம்.
நாத்தான் கனிந்த உள்ளத்தோடு தாவீதை திருத்தினார். தீர்க்கதரிசியின் வார்த்தைகள் கிருபை பொருந்தினவையாயும் மிக ஜாக்கிரதையாக தெரிந்தெடுக்கப்பட்டவையாயும் இருந்தன. எனவே தாவீதுக்கும், அது தன்னுடைய நன்மைக்கே என ஏற்று செயல்பட முடிந்தது. தாவீதுக்கு நாத்தான் தன் சொந்த நலன் கருதி அறிவுரை கொடுக்கவில்லை. தாவீதைவிட தான் ஆவிக்குரிய விதத்திலும் ஒழுக்கத்திலும் உயர்ந்தவர் என அவர் நினைத்துக் கொள்ளவுமில்லை. சரியான வார்த்தைகளை பொருத்தமான விதத்தில் சொல்ல வேண்டும் என்பதற்கு என்னே ஓர் சிறந்த உதாரணம்! நீங்களும் அவ்வாறே செய்வீர்களென்றால், மற்றவர்கள் உங்களுடைய அறிவுரையை ஏற்றுக்கொள்வது உறுதி.
[பக்கம் 22-ன் படம்]
சத்தான உணவைப்போல், அறிவுரை பயனளிப்பதாய் இருக்க வேண்டும்
[பக்கம் 23-ன் படம்]
உங்கள் அறிவுரை வெள்ளிக் கூடையில் வைக்கப்பட்ட பொற்பழங்களைப் போல இருக்கிறதா?
[பக்கம் 24-ன் படம்]
நீதி நியாயத்தின்மீது தாவீதுக்கிருந்த அன்பின் பேரில் நாத்தான் தாழ்மையோடு கவனத்தை திருப்பினார்.