கடவுளை மகிழ்விக்க உங்களால் முடியும்
கடவுளை உண்மையிலேயே நம்மால் மகிழ்விக்க முடியுமா அல்லது துக்கப்படுத்த முடியுமா? கடவுள் மகிழ்ச்சியடைய முடியுமா? “கடவுள்” என்ற வார்த்தைக்கு “பரம்பொருள்” என ஓர் அகராதி அர்த்தம் கொடுக்கிறது. அற்புதமான இந்தப் பரம்பொருள் வெறும் ஒரு சக்தியா? ஆள்தன்மையற்ற ஒரு சக்தி மகிழ்ச்சியடையும் என எதிர்பார்க்க முடியுமா? நிச்சயமாகவே முடியாது. ஆனால், கடவுளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை கவனியுங்கள்.
“தேவன் ஆவியாயிருக்கிறார்” என இயேசு கிறிஸ்து கூறினார். (யோவான் 4:24) ஆவி என்பது மனிதரிலிருந்து வேறுபடும் ஒரு வகை உயிர். மானிட கண்களுக்குப் புலப்படாதபோதிலும், ஆவி உயிர்களுக்கு உடல் இருக்கிறது, அதாவது “ஆவிக்குரிய சரீரம்” இருக்கிறது. (1 கொரிந்தியர் 15:44; யோவான் 1:18) அணி நடைகளைப் பயன்படுத்தி, கடவுளுக்கு கண்கள், காதுகள், கைகள் ஆகியவை இருப்பது போலவும்கூட பைபிள் பேசுகிறது.a கடவுளுக்கு ஒரு பெயரும் உண்டு, யெகோவா என்பதே அவருடைய பெயர். (சங்கீதம் 83:17) அப்படியானால், பைபிளின் கடவுள் ஓர் ஆவி ஆள். (எபிரெயர் 9:24) “அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா.”—எரேமியா 10:10.
யெகோவா நிஜமான ஒரு நபராக இருப்பதால், அவருக்கு சிந்திக்கும் திறமையும் செயல்படும் திறமையும் இருக்கிறது. பண்புகளையும் உணர்ச்சிகளையும், விருப்புவெறுப்புகளையும் அவர் வெளிப்படையாக காட்டுகிறார். சொல்லப்போனால், கடவுளுக்குப் பிரியமானவை எவை அல்லது பிரியமில்லாதவை எவை என்பதை வெளிப்படுத்தும் வார்த்தைகள் பைபிளில் ஏராளமாக உள்ளன. மனிதரால் உண்டுபண்ணப்பட்ட தெய்வங்களும் விக்கிரகங்களும் அம்மனிதரின் சுபாவங்களையும் குணங்களையுமே பிரதிபலிக்கின்றன, ஆனால் சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவோ, மனிதருக்கு உணர்ச்சிகளை வழங்கியவர்.—ஆதியாகமம் 1:27; ஏசாயா 44:7-11.
யெகோவா ‘நித்தியானந்த தேவன்’ என்பதில் சந்தேகமில்லை. (1 தீமோத்தேயு 1:11) தமது படைப்பு வேலைகளில் மகிழ்ச்சியடைவது மட்டுமல்லாமல், தமது நோக்கத்தை நிறைவேற்றுவதிலும் இன்பம் கொள்கிறார். “எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் [“பிரியமானவைகளையெல்லாம்,” NW] செய்வேன் . . . அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம் பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்” என தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் யெகோவா அறிவிக்கிறார். (ஏசாயா 46:9-11) “கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்” என சங்கீதக்காரனாகிய தாவீது பாடினார். (சங்கீதம் 104:31) கடவுளுக்கு மகிழ்ச்சி தரும் மற்றொரு காரணமும் இருக்கிறது. “என் மகனே, . . . என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து” என அவர் சொல்கிறார். (நீதிமொழிகள் 27:11) இதன் அர்த்தத்தை சற்று நினைத்துப் பாருங்கள்—நம்மால் கடவுளை மகிழ்விக்க முடியும்!
கடவுளுடைய இதயத்தை நாம் மகிழ்விப்பது எப்படி
முற்பிதாவாகிய நோவா எவ்வாறு யெகோவாவின் இதயத்தை மகிழ்வித்தார் என்பதை கவனியுங்கள். ‘நோவாவுக்கு யெகோவாவின் கண்களில் கிருபை கிடைத்தது,’ ஏனென்றால் ‘தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தார்.’ அக்காலத்தில் வாழ்ந்த பொல்லாத ஜனங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவராக விளங்கினார், நோவாவின் விசுவாசமும் கீழ்ப்படிதலும் கடவுளை மிகவும் பிரியப்படுத்தியதால், ‘நோவா தேவனோடே நடந்தார்’ என்றே சொல்லலாம். (ஆதியாகமம் 6:6, 8, 9, NW, 22) ‘விசுவாசத்தினாலே நோவா . . . பயபக்தியுள்ளவராகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினார்.’ (எபிரெயர் 11:7) நோவா யெகோவாவை மகிழ்வித்தார்; அதனால் மனித சரித்திரத்திலேயே மிகவும் கொந்தளிப்புமிக்க அந்தக் காலப்பகுதியை அவரும் அவருடைய குடும்பத்தினரும் தப்பிப்பிழைக்கும் பாக்கியத்தை அளித்து யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார்.
முற்பிதாவாகிய ஆபிரகாமும் யெகோவாவின் உணர்ச்சிகளை நன்கு அறிந்திருந்தார். சோதோம் கொமோரா பட்டணங்கள் சீர்கெட்டிருந்ததால் அவற்றை அழிக்கப் போவதாக யெகோவா சொன்னபோது, கடவுளுடைய சிந்தையை அவர் நுணுக்கமாக அறிந்திருந்தது தெளிவானது. பொல்லாத மனிதனோடு நீதிமானையும் கடவுள் அழிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது என்ற முடிவுக்கு வருமளவுக்கு யெகோவாவை ஆபிரகாம் நன்கு அறிந்திருந்தார். (ஆதியாகமம் 18:17-33) பல வருடங்களுக்குப் பின், கடவுளுடைய வழிநடத்துதலுக்கு ஆபிரகாம் கீழ்ப்படிந்து, ‘ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்.’ ஏனென்றால் ‘மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறார் என எண்ணினார்.’ (எபிரெயர் 11:17-19; ஆதியாகமம் 22:1-18) கடவுளுடைய உணர்ச்சிகளை ஆபிரகாம் நன்கு புரிந்து கொண்டதால், இத்தகைய பலமான விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காண்பித்தார்; அதனால், ‘யெகோவாவின் சிநேகிதன்’ என அழைக்கப்பட்டார்.—யாக்கோபு 2:23.
கடவுளுடைய இருதயத்தை மகிழ்விக்க முயன்ற மற்றொரு மனிதர் பூர்வ இஸ்ரவேலின் அரசனாகிய தாவீது. அவரைக் குறித்து யெகோவா இவ்வாறு சொன்னார்: “ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான்.” (அப்போஸ்தலர் 13:22) இராட்சத கோலியாத்தை நேருக்கு நேர் எதிர்ப்படுவதற்கு முன்பு, கடவுள் மீது தாவீது முழு நம்பிக்கை வைத்து, இஸ்ரவேலின் அரசனாகிய சவுலிடம் இவ்வாறு கூறினார்: “என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார்.” தம்மீது தாவீது வைத்திருந்த நம்பிக்கையை யெகோவா ஆசீர்வதித்து, கோலியாத்தை வெட்டி வீழ்த்த அவருக்கு உதவினார். (1 சாமுவேல் 17:37, 45-54) தனது செயல்கள் மட்டுமல்ல, ‘தன் வாயின் வார்த்தைகளும், தன் இருதயத்தின் தியானமும், யெகோவாவின் சமுகத்தில் பிரீதியாயிருப்பதற்கு’ தாவீது விரும்பினார்.—சங்கீதம் 19:14.
நம்மைப் பற்றியென்ன? நாம் எவ்வாறு யெகோவாவைப் பிரியப்படுத்தலாம்? கடவுளுடைய உணர்ச்சிகளை நாம் எந்தளவுக்கு அறிந்திருக்கிறோமோ அந்தளவுக்கு அவரது இருதயத்தை மகிழ்விக்க நாம் என்ன செய்யலாம் என்றும் அறிந்திருப்போம். அப்படியானால், பைபிள் வாசிக்கும்போது, கடவுளுடைய உணர்ச்சிகளைப் பற்றி கற்றுக்கொள்வதற்கு நாம் முயற்சி எடுப்பது முக்கியம்; அப்போதுதான் “எல்லா ஞானத்தோடும் ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவினாலே நிரப்பப்படவும், . . . கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்” முடியும். (கொலோசெயர் 1:9, 10) அப்படிப் பெற்றுக்கொள்ளும் அறிவு விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும். இது இன்றியமையாதது, ஏனென்றால் “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.” (எபிரெயர் 11:6) ஆம், பலமான விசுவாசத்தைக் கட்டுவதற்கு கடினமாக முயலுவதன் மூலமும் யெகோவாவின் சித்தத்திற்கு இசைவாக நம் வாழ்க்கையை அமைப்பதன் மூலமும் அவருடைய இதயத்தை மகிழ்விக்க முடியும். அதேசமயத்தில், யெகோவாவின் உணர்ச்சிகளைப் புண்படுத்தாதவாறு கவனமாகவும் இருக்க வேண்டும்.
கடவுளைப் புண்படுத்திவிடாதீர்கள்
யெகோவாவின் உணர்ச்சிகளை எப்படி புண்படுத்த முடியும் என்பதற்கு ஓர் உதாரணத்தை நோவாவின் நாட்களைப் பற்றிய விவரப்பதிவில் காணலாம். அந்தக் காலத்தில், “பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள்.” ஒழுக்கச் சீர்குலைவையும் வன்முறையையும் கண்டபோது கடவுள் எப்படி உணர்ந்தார்? “தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது” என பைபிள் கூறுகிறது. (ஆதியாகமம் 6:5, 6, 11, 12) மனிதனுடைய நடத்தை அந்தளவு மோசமாக இருந்ததால் கடவுள் மனம் வருந்தினார், ஜலப்பிரளயத்திற்கு முன்பு வாழ்ந்த சந்ததியாரைப் பற்றிய அவருடைய மனநிலை மாறியது. அவர்களுடைய பொல்லாத செயலை அவர் வெறுத்ததால், மனிதர்களின் படைப்பாளர் என்ற அவரது மனநிலை மாறி அவர்களை அழிப்பவர் என்ற மனநிலையைப் பெற்றார்.
யெகோவாவின் ஜனங்களே, அதாவது பூர்வ இஸ்ரவேல் தேசத்தாரே அவரது உணர்ச்சிகளையும் அன்பான வழிநடத்துதலையும் தொடர்ந்து அலட்சியம் செய்தபோது அவர் மனவேதனைப்பட்டார். சங்கீதக்காரன் இவ்வாறு புலம்பினார்: “எத்தனை தரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தர வெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள். அவர்கள் திரும்பி [“திரும்பத் திரும்ப,” NW] தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள் [“வேதனைப்படுத்தினார்கள்,” NW].” இருந்தாலும், “அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.” (சங்கீதம் 78:38-41) கலகத்தனமான இஸ்ரவேலர் தங்களுடைய பாவத்திற்கு தக்க விளைவுகளை அனுபவித்தபோதும்கூட, ‘அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் [கடவுள்] நெருக்கப்பட்டார்’ என பைபிள் கூறுகிறது.—ஏசாயா 63:9.
இஸ்ரவேலர் மீது கனிவான உணர்ச்சிகளை கடவுள் வெளிக்காட்டினார்; இதற்குப் போதுமான அத்தாட்சியை பார்த்திருந்தபோதிலும், இஸ்ரவேலர் தொடர்ந்து “தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டை செய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.” (2 நாளாகமம் 36:16) கடைசியில், யெகோவாவின் தயவையே இழந்துபோகும் அளவுக்கு வணங்கா கழுத்துடன் அவர்கள் செய்த கலகத்தனம் ‘அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தியது.’ (ஏசாயா 63:10) விளைவு? நியாயமாகவே யெகோவாவின் பாதுகாப்பை அவர்கள் இழந்தார்கள்; பாபிலோனியர் யூதாவை வென்று எருசலேமை அழித்தபோது அவர்களுக்கு பெருந்துன்பம் நேரிட்டது. (2 நாளாகமம் 36:17-21) ஜனங்கள் தங்களுடைய படைப்பாளருக்கு வெறுப்பூட்டுகிற, மனவருத்தம் உண்டாக்குகிற வாழ்க்கைப் போக்கை தேர்ந்தெடுப்பது எவ்வளவு வருந்தத்தக்கது!
நேர்மையற்ற நடத்தையால் கடவுள் மிகவும் வேதனைப்படுகிறார் என்பதற்கு பைபிள் நமக்கு ஆதாரம் அளிக்கிறது. (சங்கீதம் 78:41) பெருமை, பொய், கொலை, மாயவித்தை, குறி சொல்லுதல், முன்னோர் வழிபாடு, ஒழுக்கங்கெட்ட செயல்கள், ஓரினப்புணர்ச்சி, விபச்சாரம், முறைதகாப்புணர்ச்சி, ஏழைகளை ஒடுக்குதல் ஆகியவையும் கடவுளைப் புண்படுத்துகிற காரியங்கள், அவருக்கு அருவருப்பான காரியங்கள்.—லேவியராகமம் 18:9-29; 19:29; உபாகமம் 18:9-12; நீதிமொழிகள் 6:16-19; எரேமியா 7:5-7; மல்கியா 2:14-16.
விக்கிரக வழிபாட்டைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார்? யாத்திராகமம் 20:4, 5 இவ்வாறு கூறுகிறது: “மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின் கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.” ஏன்? ஏனென்றால் விக்கிரகம் ‘யெகோவாவுக்கு அருவருப்பானது.’ (உபாகமம் 7:25, 26) அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு எச்சரித்தார்: “பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக.” (1 யோவான் 5:21) அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.”—1 கொரிந்தியர் 10:14.
கடவுளுடைய அங்கீகாரத்தை நாடுங்கள்
‘நேர்மையாளரோடு கடவுள் உறவுகொள்கிறார்.’ “மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவர்.” (நீதிமொழிகள் 3:32, பொது மொழிபெயர்ப்பு; 11:20, பொ.மொ.) மறுபட்சத்தில், கடவுளுடைய நீதியான உணர்வுகளை வேண்டுமென்றே அசட்டை செய்வதன் மூலம் அல்லது எதிர்த்து நிற்பதன் மூலம் அவரைப் புண்படுத்திக் கொண்டே இருப்பவர்கள் சீக்கிரத்தில் அவருடைய வெறுப்புக்கு ஆளாவார்கள். (2 தெசலோனிக்கேயர் 1:6-10) சொல்லப்போனால், இன்றைக்கு எங்கு பார்த்தாலும் காணப்படும் பொல்லாத செயல்கள் அனைத்திற்கும் அவர் விரைவில் முடிவுகட்டுவார்.—சங்கீதம் 37:9-11; செப்பனியா 2:2, 3.
என்றாலும், “ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்று விரும்பி, [யெகோவா] நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” என பைபிள் தெளிவாக கூறுகிறது. (2 பேதுரு 3:9) திருந்தாமல் வாழ்கிறவர்களிடம் தமது வெறுப்பை காண்பிப்பதைவிட தம்மை நேசிக்கிற நேர்மையான ஆட்கள் மீது தமது பாசத்தை வெளிப்படுத்தவே அவர் விரும்புகிறார். ‘துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதிலேயே’ யெகோவா இன்பம் கொள்கிறார்.—எசேக்கியேல் 33:11.
ஆகவே யாரும் யெகோவாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டியதில்லை. “கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.” (யாக்கோபு 5:11) கடவுளுடைய உணர்ச்சிகளில் முழு நம்பிக்கை வைத்து, ‘உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடலாம், ஏனெனில் அவர் உங்களை அக்கறையோடு கவனிப்பவர்.’ (1 பேதுரு 5:7, NW) கடவுளுடைய இதயத்தை மகிழ்விப்போருக்கு அவருடைய அங்கீகாரத்தையும் நட்பையும் அனுபவித்து மகிழும் அற்புதமான நம்பிக்கை இருக்கிறது என்பதில் உறுதியுடனிருங்கள். ஆகவே, ‘கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று சோதித்துப் பார்ப்பது’ முன்பைவிட இப்பொழுது மிகவும் அவசரமானதாக இருக்கிறது.—எபேசியர் 5:10.
கடவுள் தமது தகுதியற்ற தயவினால் தமது மகிமையான பண்புகளையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தியிருப்பது எவ்வளவு அற்புதமான விஷயம்! அவருடைய இதயத்தை உங்களால் மகிழ்விக்க முடியும். அப்படி செய்ய நீங்கள் விரும்பினால், நீங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புகொள்ளும்படி உங்களை உற்சாகப்படுத்துகிறோம். கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு தாங்கள் கண்டுபிடித்திருக்கும் நடைமுறையான, அடையத்தக்க வழிகளை உங்களுக்குக் காட்டுவதில் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
[அடிக்குறிப்பு]
a “கடவுளுக்கு ஏன் மானிட இயல்புகளை பைபிள் சாட்டுகிறது?” என்று தலைப்பிடப்பட்ட பெட்டியைக் காண்க.
[பக்கம் 7-ன் பெட்டி]
கடவுளுக்கு ஏன் மானிட இயல்புகளை பைபிள் சாட்டுகிறது?
‘தேவன் ஆவியாக’ இருப்பதால் நம் கண்களால் அவரை காண முடியாது. (யோவான் 4:24) எனவே, கடவுளுடைய வல்லமை, மாட்சிமை, செயல்கள் ஆகியவற்றை நாம் புரிந்துகொள்வதற்கு உவமைகள், உருவகங்கள், மனித பண்புகளை சாட்டுதல் போன்ற அணி நடைகளை பைபிள் பயன்படுத்துகிறது. ஆகவே, கடவுளுடைய ஆவி சரீரம் எப்படியிருக்கும் என்பதை நாம் அறியாவிட்டாலும், அவருக்கு கண், காது, கை, புயம், விரல், பாதம் மற்றும் இருதயம் இருப்பதாக பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 8:21; யாத்திராகமம் 3:20; 31:18; யோபு 40:9; சங்கீதம் 18:9; 34:15.
இப்படிப்பட்ட விவரிப்புகள், மனித உடலுக்கு இருக்கும் அதேவிதமான உறுப்புக்கள் கடவுளுடைய ஆவி உடலுக்கும் இருக்கிறது என அர்த்தப்படுத்துவதில்லை. கடவுளை மானிட பண்புகளில் விவரிப்பதை சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கடவுளைப் பற்றி சிறந்த விதத்தில் புரிந்துகொள்ள அவை உதவுகின்றன, அவ்வளவுதான். இத்தகைய அணி நடைகள் பயன்படுத்தப்படவில்லை என்றால் கடவுளைப் பற்றிய எந்த விவரிப்பையும் புரிந்துகொள்வது அற்ப மானிடருக்கு சற்று கடினமாகவே இருக்கும். ஆனால், யெகோவா தேவனின் ஆள்தன்மை மனித கற்பனையால் வடிக்கப்பட்டது என இது அர்த்தப்படுத்துவதில்லை. மனிதனை தேவசாயலாக சிருஷ்டித்ததாக பைபிள் தெளிவாக சொல்கிறது; மனித சாயலில் கடவுள் சிருஷ்டிக்கப்பட்டதாக சொல்லவில்லை. (ஆதியாகமம் 1:27) பைபிள் எழுத்தாளர்கள் ‘தேவ ஆவியினால்’ ஏவப்பட்டதால், கடவுளுடைய ஆள்தன்மையைப் பற்றி அவர்கள் தரும் விவரிப்பு, உண்மையில் கடவுளே தமது சொந்த பண்புகளைப் பற்றி கொடுத்திருக்கும் விவரிப்பே. இந்தப் பண்புகளையே வித்தியாசமான அளவுகளில் மனிதருக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். (2 தீமோத்தேயு 3:16, 17) மனித பண்புகளை கடவுள் பெற்றிருக்கவில்லை, மாறாக மனிதரே கடவுளுடைய பண்புகளை பெற்றிருக்கிறார்கள்.
[பக்கம் 4-ன் படம்]
நோவாவுக்கு கடவுளுடைய கிருபை கிடைத்தது
[பக்கம் 5-ன் படம்]
கடவுளுடைய உணர்ச்சிகளை ஆபிரகாம் நன்கு அறிந்திருந்தார்
[பக்கம் 6-ன் படம்]
யெகோவாவின் மீது தாவீது முழு நம்பிக்கை வைத்தார்
[பக்கம் 7-ன் படம்]
பைபிளை வாசிக்கையில், கடவுளை எப்படி மகிழ்விப்பது என்பதை கற்றுக்கொள்வீர்கள்
[பக்கம் 4-ன் படத்திற்கான நன்றி]
Courtesy of Anglo-Australian Observatory, photograph by David Malin