‘கடவுளுடைய சக்தியினால் உந்துவிக்கப்பட்டார்கள்’
“மனிதர்கள் ஒருகாலத்திலும் தங்களுடைய விருப்பத்தினால் தீர்க்கதரிசனம் சொல்லவில்லை; கடவுள் அருளிய வார்த்தைகளை அவருடைய சக்தியினால் உந்துவிக்கப்பட்டே சொன்னார்கள்.” —2 பே. 1:21.
சிந்திக்க சில கேள்விகள்
பைபிள் எழுத்தாளர்களுக்குக் கடவுளுடைய செய்தி எப்படி அவருடைய சக்தியின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது?
பைபிள் கடவுளிடமிருந்து வந்த புத்தகம் என்பதற்கு என்ன அத்தாட்சிகள் உள்ளன?
கடவுளுடைய வார்த்தைமீது உங்கள் அன்பை வளர்த்துக்கொள்ள தினமும் நீங்கள் என்ன செய்யலாம்?
1. நமக்கு ஏன் பைபிள் தேவை?
நா ம் எங்கிருந்து வந்தோம்? ஏன் இங்கு இருக்கிறோம்? எங்கே போகப் போகிறோம்? இந்த உலகம் ஏன் தறிகெட்டு போயிருக்கிறது? நாம் இறந்த பின்பு என்ன நடக்கிறது? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள மக்கள் துடியாய்த் துடிக்கிறார்கள். பைபிள் மட்டும் நம் கையில் இல்லையென்றால்... இந்தக் கேள்விகளுக்கும் இதுபோன்ற மற்ற முக்கியக் கேள்விகளுக்கும் நம்மால் எப்படிப் பதில் தெரிந்துகொள்ள முடியும்? பைபிள் இல்லாமல் போயிருந்தால் நம் அனுபவமே நமக்கு ஆசானாய் இருந்திருக்கும். அதுமட்டுமல்ல, ‘யெகோவாவுடைய வேதத்தை’ சங்கீதக்காரன் வாயாரப் பாராட்டினதைப் போல் நம்மால் பாராட்ட முடியாமல் போயிருந்திருக்கும்.—சங்கீதம் 19:7-ஐ வாசியுங்கள்.
2. பைபிளைக் கொடுத்த கடவுளுக்கு வாழ்நாளெல்லாம் நன்றியுடன் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
2 சோகமான விஷயம் என்னவென்றால்... பைபிள் சத்தியத்தின் மீது சிலருக்கு ஆரம்பத்தில் இருந்த அன்பு தணிந்து போயிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 2:4-ஐ ஒப்பிடுங்கள்.) யெகோவாவுக்குப் பிரியமான வழியில் நடக்க முயற்சி எடுப்பதையே அவர்கள் நிறுத்திவிட்டிருக்கிறார்கள். (ஏசா. 30:21) அவர்களைப் பார்த்து நாமும் வழிதவறிப் போக வேண்டிய அவசியமில்லை. பைபிளையும் அதன் போதனைகளையும் எப்போதும் மதித்து நம்மால் வாழ முடியும், அப்படி வாழவும் வேண்டும். ஏனென்றால், பைபிள் நம் படைப்பாளர் நமக்குக் கொடுத்திருக்கும் அரும்பெரும் பரிசு. (யாக். 1:17) ‘கடவுளுடைய வார்த்தைக்காக’ வாழ்நாளெல்லாம் அவருக்கு நன்றியுடன் இருக்க எது நமக்கு உதவும்? கடவுள் எப்படி மனிதர்களைப் பயன்படுத்தி பைபிளை எழுதினார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது அதற்கு ஒரு வழி. பைபிள் கடவுளிடமிருந்து வந்த புத்தகம்தான் என்பதைச் சுட்டிக்காட்டுகிற ஏராளமான அத்தாட்சிகளில் சிலவற்றைச் சிந்தித்துப் பார்ப்பதும் அதில் அடங்கும். அப்படிச் செய்தால், தினமும் பைபிளைப் படிக்கவும் அதிலுள்ள அறிவுரைகளைக் கடைப்பிடிக்கவும் நமக்குள் உத்வேகம் பிறக்கும்.—எபி. 4:12.
‘கடவுளுடைய சக்தியினால் உந்துவிக்கப்பட்டார்கள்’—எப்படி?
3. தீர்க்கதரிசிகளும் பைபிள் எழுத்தாளர்களும் எந்த விதத்தில் ‘கடவுளுடைய சக்தியால் உந்துவிக்கப்பட்டார்கள்’?
3 கி.மு. 1513 முதல் கி.பி. 98 வரை, பைபிளை எழுதி முடிக்க 1,610 வருடங்கள் பிடித்தன. சுமார் 40 பேர் பைபிளை எழுதினார்கள். இவர்களில் சிலர் ‘கடவுளுடைய சக்தியினால் உந்துவிக்கப்பட்ட’ தீர்க்கதரிசிகள். (2 பேதுரு 1:20, 21-ஐ வாசியுங்கள்.) ‘உந்துவிக்கப்பட்டு’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை “ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதை” குறிக்கிறது. அதோடு, “தள்ளப்பட்டு, துரத்தப்பட்டு, தூண்டப்பட்டு என்று வெவ்வேறு விதமாகவும் அந்தக் கிரேக்க வார்த்தை மொழிபெயர்க்கப்படலாம்.”a அப்போஸ்தலர் 27:15-ல், காற்று வீசிய திசையில் அடித்துச் செல்லப்பட்ட படகைக் குறிப்பிட அந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தீர்க்கதரிசிகளும் பைபிள் எழுத்தாளர்களும் கடவுளுடைய சக்தியால் உந்துவிக்கப்பட்டதாக வேதவசனங்கள் சொல்லும்போது... கடவுள் தமது சக்தியின் மூலம் அவர்களிடம் பேசியதை, அவர்களைத் தூண்டியதை, வழிநடத்தியதை அது குறிக்கிறது. எனவே, அவர்கள் தங்கள் கருத்துகளை எழுதவில்லை, கடவுளுடைய கருத்துகளைத்தான் எழுதினார்கள். சிலசமயங்களில், தாங்கள் சொன்ன தீர்க்கதரிசனங்களுக்கும் எழுதிய விஷயங்களுக்கும் என்ன அர்த்தம் என்றுகூட அந்தத் தீர்க்கதரிசிகளுக்கும் பைபிள் எழுத்தாளர்களுக்கும் தெரியாமல் இருந்தது. (தானி. 12:8, 9) ஆகவே, “வேதவசனங்கள் எல்லாம் கடவுளுடைய சக்தியினால் அருளப்பட்டிருக்கின்றன” என்று பைபிள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. ஏனென்றால், அதில் மனிதர்களின் சொந்த கருத்துகள் இல்லை.—2 தீ. 3:16.
4-6. பைபிள் எழுத்தாளர்கள் எழுத வேண்டிய விஷயங்களைக் கடவுள் என்னென்ன விதங்களில் தெரிவித்தார்? விளக்கவும்.
4 சரி, பைபிள் எழுத்தாளர்கள் எழுத வேண்டியவற்றைக் கடவுள் எப்படித் தமது சக்தியின் மூலம் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்? அவர்கள் என்ன எழுத வேண்டுமென்று கடவுள் வரிக்கு வரி சொன்னாரா அல்லது விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு அவர்கள் தங்கள் சொந்த நடையில் எழுதிக்கொள்ள விட்டுவிட்டாரா? இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: ஒரு முதலாளி கடிதம் எழுத வேண்டுமென்றால் என்ன செய்வார்? அது ஒரு முக்கியமான கடிதம்... அதில் ஒரு வார்த்தையும் தவறக்கூடாது... என்று அவர் நினைக்கும்போது அதை அவரே எழுதுவார் அல்லது அவர் சொல்லச் சொல்ல செக்ரெட்டரியை டைப் செய்யச் சொல்லுவார். அந்த செக்ரெட்டரி டைப் செய்த கடிதத்தில் அவருடைய கையெழுத்து இருக்கும். ஆனால், சில சமயங்களில், அவர் விஷயத்தை மட்டுமே சொல்லுவார். செக்ரெட்டரிதான் அந்த விஷயத்தை வைத்துக்கொண்டு தன் சொந்த வார்த்தைகளில், தன் சொந்த நடையில் கடிதத்தை எழுதுவார். முதலாளி அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்த்துவிட்டு ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் செக்ரெட்டரியிடம் சொல்லுவார். பின்பு, கையெழுத்துப் போட்டு கொடுத்துவிடுவார். கடைசியில், அந்தக் கடிதத்தைப் பிரித்துப் படிப்பவரும் அதை அந்த முதலாளி எழுதிய கடிதமாகத்தான் கருதுவார்.
5 பைபிளைப் பொறுத்ததிலும் இதுதான் உண்மை. அதிலுள்ள சில பகுதிகள் “தேவனுடைய விரலினால்” எழுதப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. (யாத். 31:18) அது முக்கியமான விஷயம்... அதில் ஒரு வார்த்தையும் மாறிவிடக்கூடாது... என்று கடவுள் நினைத்த சமயங்களில் தாம் சொல்லச் சொல்ல பைபிள் எழுத்தாளர்கள் அவற்றை அப்படியே எழுதும்படி செய்திருக்கிறார். உதாரணத்திற்கு யாத்திராகமம் 34:27-ல், ‘யெகோவா மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன்’ என்றார். அதேபோல் எரேமியா தீர்க்கதரிசியிடம்... ‘நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள்’ என்றார்.—எரே. 30:2.
6 ஆனால், பெரும்பாலான சமயங்களில் வார்த்தைக்கு வார்த்தை சொல்லாமல்... எழுத வேண்டிய விஷயத்தை மட்டும் பைபிள் எழுத்தாளர்களின் மனதிலும் இருதயத்திலும் அற்புதமான விதத்தில் பதிய வைத்தார். அந்த விஷயத்தை தங்கள் சொந்த வார்த்தைகளில், சொந்த நடையில் எழுத அவர்களுக்குச் சுதந்திரம் கொடுத்தார். அதனால்தான்... “சரியான வார்த்தைகளைத் தேர்ந்தெடுக்க பிரசங்கி மிகக் கடுமையாக முயற்சி செய்தார். அவர் உண்மையானதும் செம்மையானதுமான போதனைகளை எழுதிவைத்தார்” என்று பிரசங்கி 12:10 (ஈஸி டு ரீட் வர்ஷன்) சொல்கிறது. சுவிசேஷ எழுத்தாளரான லூக்காவும்கூட ‘எல்லா விஷயங்களையும் தொடக்கத்திலிருந்தே துல்லியமாய் ஆராய்ந்து, அவற்றை வரிசைக் கிரமமாக எழுதிவைத்தார்.’ (லூக். 1:3) தவறு செய்யும் இயல்புள்ள மனிதர்களைப் பயன்படுத்தியே பைபிளைக் கடவுள் எழுதியிருந்தாலும் தமது சக்தியை அருளி அதிலுள்ள செய்தி மாறாமல் பார்த்துக்கொண்டார்.
7. கடவுள் மனிதர்களைப் பயன்படுத்தி பைபிளை எழுதியிருப்பது அவருடைய ஞானத்தைப் பற்றி என்ன சொல்கிறது?
7 கடவுள் மனிதர்களைப் பயன்படுத்தி பைபிளை எழுதியிருப்பது அவருக்கு அளவில்லா ஞானம் இருப்பதைக் காட்டுகிறது. வார்த்தைகள் வெறும் செய்தியை மட்டுமல்ல, உள்ளத்தின் உணர்ச்சிகளையும் உரித்துவைக்கின்றன. பைபிளை எழுத யெகோவா ஒருவேளை தூதர்களைப் பயன்படுத்தியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? மனிதருக்கே உரிய பயம், துக்கம், ஏமாற்றம் போன்ற உணர்ச்சிகளை அவர்களால் இந்தளவுக்கு உருக்கமாக விவரித்திருக்க முடியுமா? மனிதர்களே வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து தம்முடைய கருத்துகளை எழுத கடவுள் அனுமதித்ததால்தான் பைபிள் பல்சுவை படைப்பாக விளங்குகிறது... அதன் செய்தி நம் மனதுக்கு இதமளிக்கிறது... உள்ளத்தின் உணர்ச்சிகளைத் தொடுகிறது.
மறுக்கமுடியாத அத்தாட்சிகள்
8. மற்ற மத புத்தகங்களைப் போல் பைபிள் இல்லை என்று ஏன் சொல்லலாம்?
8 கடவுள் அருளிய புத்தகம்தான் பைபிள் என்பதற்கு ஒன்றல்ல, இரண்டல்ல, ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. பைபிளைத் தவிர வேறெந்த மத புத்தகமும் கடவுளைப் பற்றி நமக்குச் சொல்லித் தருவதில்லை. உதாரணத்திற்கு, இந்து மத புத்தகங்களை எடுத்துக்கொள்ளுங்கள். வேதங்களின் துதிப் பாடல்கள், அவற்றுக்கான விளக்கவுரைகள், உபநிஷதங்கள் (தத்துவங்கள் அடங்கிய ஆய்வுக்கட்டுரைகள்), பெருங்காப்பியங்களான இராமாயணம், மகாபாரதம் என்று நீளும் பட்டியலில் நீதிநெறிகள் அடங்கிய மகாபாரதத்தின் ஒரு பாகமான பகவத் கீதையும் அடங்கும். புத்த மதத்தவருடைய திரிபிடகத்தில் (மூன்று தொகுதிகள்) ஒரு தொகுதி... புத்த பிக்குகளும் பிக்குணிகளும் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை நெறிகளைப்பற்றி விலாவாரியாகக் குறிப்பிடுகிறது. இன்னொரு தொகுதி... புத்த மத கோட்பாடுகளைப் பற்றிச் சொல்கிறது. மற்றொரு தொகுதி... புத்தரின் வாய்மொழி போதனைகளைக் குறிப்பிடுகிறது. புத்தர் தன்னை ஒரு கடவுள் என்று சொல்லிக்கொள்ளவுமில்லை, கடவுளைப் பற்றிப் பெரிதாக எதுவும் சொல்லவுமில்லை. கன்பூசிய மதத்தின் புத்தகங்கள்... சரித்திரப் பதிவுகள், ஒழுக்கநெறிகள், மந்திர வாய்ப்பாடுகள், பாடல்கள் ஆகியவற்றின் ஒரு கதம்பம். இஸ்லாமியர்களின் புனித புத்தகம்... ஒரேவொரு கடவுள்தான் இருக்கிறார் என்றும், எல்லாம் அறிந்த அந்தக் கடவுள் எதிர்காலத்தை முன்னறிகிறார் என்றும் போதிக்கிறது. ஆனால், பைபிளில் ஆயிரக்கணக்கான முறை காணப்படும் கடவுளுடைய பெயரை, யெகோவா என்ற பெயரைப் பற்றி அது சொல்வதே இல்லை.
9, 10. கடவுளைப் பற்றி பைபிளிலிருந்து நாம் என்னவெல்லாம் தெரிந்துகொள்ளலாம்?
9 உலகின் முக்கிய மத புத்தகங்கள் பல... கடவுளைப் பற்றி ஏதோ கொஞ்சம் கற்பித்தாலும், யெகோவா தேவனையும் அவருடைய செயல்களையும் பற்றி பைபிள் மட்டுமே நமக்குச் சொல்கிறது. அவருடைய பண்புகளின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துகொள்ள அது நமக்கு உதவுகிறது. கடவுளை... சர்வ வல்லமை படைத்தவராக, ஞானத்தின் பிறப்பிடமாக, நீதி தவறாதவராக மட்டுமல்ல, அன்பின் உருவாகவும் அது அடையாளம் காட்டுகிறது. (யோவான் 3:16-ஐயும் 1 யோவான் 4:19-ஐயும் வாசியுங்கள்.) அதுமட்டுமா, “கடவுள் பாரபட்சம் காட்டாதவர், அவருக்குப் பயந்து நீதியின்படி நடக்கிறவன் எவனோ அவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார்” என்றும் அது சொல்கிறது. (அப். 10:34, 35) இன்றைக்குப் பல மொழிகளில் பைபிள் கிடைப்பதே அதற்கு ஓர் அத்தாட்சி. இன்று உலகில் சுமார் 6,700 மொழிகள் பேசப்படுவதாகவும்... அவற்றில் சுமார் 100 மொழிகளைக் கிட்டத்தட்ட 90 சதவீத மக்கள் பேசுவதாகவும்... மொழி வல்லுநர்கள் சொல்கிறார்கள். இருந்தாலும், 2,400-க்கும் அதிகமான மொழிகளில் முழுமையாகவோ பகுதியாகவோ பைபிள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. அதனால், கிட்டத்தட்ட உலகில் உள்ள ஒவ்வொருவரும் தங்கள் சொந்த மொழியில் முழு பைபிளை அல்லது பைபிளின் சில புத்தகங்களையாவது வாசிக்க முடிகிறது.
10 “என் தகப்பன் இதுவரை வேலை செய்து வந்திருக்கிறார், நானும் வேலை செய்து வருகிறேன்” என்று இயேசு சொன்னார். (யோவா. 5:17) யெகோவாவே ‘என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறார்.’ அப்படியானால், அவர் எவ்வளவு காரியம் செய்திருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்! (சங். 90:2) கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் கடவுள் செய்ததை, செய்வதை, செய்யப்போவதைப் பற்றி பைபிள் மட்டுமே நமக்குச் சொல்கிறது. கடவுளுடைய மனதிற்கு எது சந்தோஷத்தைத் தரும், எது தராது என்பதையும்... அவரிடம் நெருங்கி வருவது எப்படி என்பதையும்... அது மட்டுமே நமக்குக் கற்பிக்கிறது. (யாக். 4:8) நம்முடைய சொந்த லட்சியங்களும் கவலைகளும் யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிக்க நாம் ஒருபோதும் அனுமதிக்காதிருப்போமாக!
11. ஞானமான என்ன ஆலோசனைகள் பைபிளில் பொதிந்துள்ளன?
11 பைபிளில் பொதிந்துள்ள ஞானமான... நம்பகமான... ஆலோசனைகள் சர்வ ஞானம் படைத்த கடவுள்தான் அதன் ஆசிரியர் என்பதற்குச் சான்றளிக்கின்றன. “யெகோவாவின் ஆவிக்கு [“சக்திக்கு,” NW] பிரமாணம் விதித்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து அவருக்குப் போதித்தவன் யார்?” என்று ஏசாயா தீர்க்கதரிசி தன் காலத்தில் வாழ்ந்தவர்களிடம் கேட்டார். (ஏசா. 40:13, திருத்திய மொழிபெயர்ப்பு) பல வருடங்களுக்குப் பிறகு அப்போஸ்தலன் பவுலும் அதே போன்ற ஒரு கேள்வியைக் கேட்டார்: “யெகோவாவுக்கு அறிவுரை கொடுக்கும்படி அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்?” (1 கொ. 2:16) சொல்லப்போனால் யாருமே இல்லை. ஏனென்றால், ஞானத்தில் யெகோவாவுக்கு மிஞ்சியவர் இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவரும் இல்லை. அதனால்தான்... திருமணம், பிள்ளைகள், பொழுதுபோக்கு, நண்பர்கள், வேலை, நேர்மை, ஒழுக்கம் போன்ற விஷயங்களில் பைபிள் தரும் ஆலோசனைகளைப் பின்பற்றும்போது மிகச் சிறந்த பலன் கிடைக்கிறது! பைபிள் ஒருபோதும் தவறான வழியைக் காட்டாது. ஆனால், மனிதர்கள் கொடுக்கும் ஆலோசனை எல்லா சமயங்களிலும் சரியாக இருக்காது. ஏனென்றால் அவர்களுக்கு ஞானம் போதாது. (எரே. 10:23) மனிதர்களுடைய ஆலோசனைகளும் அறிவுரைகளும் நடைமுறைக்கு ஒத்துவராதபோது, அவை மாறிக்கொண்டே இருக்கும். அதனால்தான், ‘மனுஷனுடைய யோசனைகள் வீணானவை’ என்று பைபிள் சொல்கிறது.—சங். 94:11.
12. பைபிள் கடந்து வந்த அக்கினிப் பரிட்சையை விவரியுங்கள்?
12 பைபிளை அழிப்பதற்கு நிறையப் பேர் காலங்காலமாக முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய முயற்சியெல்லாம் முடங்கிப்போனதாகச் சரித்திரம் சொல்கிறது. பைபிள் கடவுள் தந்த புத்தகம் என்பதற்கு இது இன்னொரு அத்தாட்சி, அதுவும் பலமான அத்தாட்சி. கி.மு. 168-ல் சிரியா நாட்டு அரசன் நான்காம் ஆண்டியோகஸ்... திருச்சட்ட புத்தகங்களையெல்லாம் தேடியெடுத்து எரிக்கும்படி மக்களுக்குக் கட்டளையிட்டான். கி.பி. 303-ல், ரோமப் பேரரசன் டையோகிளிஷன்... கிறிஸ்தவக் கூட்டங்கள் நடைபெற்ற கட்டிடங்களை இடித்துப்போடவும் வேதாகமங்களைச் சுட்டெரிக்கவும் ஆணையிட்டான். சுமார் பத்து வருடங்களுக்கு அவனுடைய அராஜகம் தொடர்ந்தது. 11-ஆம் நூற்றாண்டுக்குப் பின், போப்புகள்... பொதுமக்கள் பேசும் மொழிகளில் பைபிளை மொழிபெயர்ப்பதற்குத் தடைவிதித்தார்கள். காரணம், பைபிளைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்வதை அவர்கள் விரும்பவில்லை. சாத்தானும் அவனுடைய கூட்டாளிகளும் தலைகீழாய் நின்றும் அவர்களால் பைபிளை அழிக்க முடியவில்லை. மனிதர்களுக்காகத் தாம் கொடுத்த பரிசை யாரும், எவரும் அழிக்க கடவுள் விடவே இல்லை.
பலரைக் கவர்ந்த அத்தாட்சிகள்
13. பைபிள் கடவுளிடமிருந்து வந்த புத்தகம்தான் என்பதற்கு வேறென்ன அத்தாட்சிகள் இருக்கின்றன?
13 பைபிள் கடவுளிடமிருந்து வந்த புத்தகம் என்று அடித்துச் சொல்வதற்கு இதோ இன்னும் சில அத்தாட்சிகள்: பைபிள் புத்தகங்களுக்கு இடையே காணப்படும் இணக்கம், அறிவியல்பூர்வ துல்லியம், நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள், எழுத்தாளர்களின் நேர்மை, புது வாழ்வளிக்கும் போதனைகள், சரித்திரப்பூர்வ துல்லியம், முதல் பாராவில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு அது தரும் திருப்தியான பதில்கள். பைபிள் கடவுளிடமிருந்து வந்த புத்தகம்தான் என்று சிலர் ஒத்துக்கொண்டதற்கான காரணத்தை இப்போது பார்ப்போம்.
14-16. (அ) அன்வர், ஆஷா, பௌலா மூவரும் பைபிள் கடவுளிடமிருந்து வந்த புத்தகம்தான் என ஏன் ஒத்துக்கொண்டார்கள்? (ஆ) பைபிள் கடவுளிடமிருந்து வந்த புத்தகம்தான் என்பதை மக்களுக்குப் புரியவைக்க நீங்கள் எந்த அத்தாட்சியைப் பயன்படுத்த விரும்புகிறீர்கள்?
14 அன்வர்b முதலில் ஒரு முஸ்லிமாக இருந்தார். மத்திய கிழக்கு நாடு ஒன்றில் அவர் வளர்ந்து வந்தார். கொஞ்ச நாட்கள் அவர் வட அமெரிக்காவில் இருந்தபோது அவருடைய வீட்டிற்கு யெகோவாவின் சாட்சிகள் வந்தார்கள். “அந்தச் சமயத்தில் கிறிஸ்தவ மதம் என்றாலே எனக்குப் பிடிக்காது. அவர்களுடைய புனிதப் போர்களையும் ஈவிரக்கமற்ற விசாரணைகளையும் அடியோடு வெறுத்தேன். ஆனால், எல்லா விஷயத்தையும் தெரிந்துகொள்ள வேண்டுமென்று ஆசை எனக்கு இருந்ததால் அவர்களோடு பைபிளைப் படிக்க ஒத்துக்கொண்டேன்” என்கிறார் அன்வர். என்றாலும், கொஞ்ச நாட்களுக்குள் அவர் தன் சொந்த நாட்டுக்கே திரும்பிப் போய்விட்டதால் சாட்சிகளுடன் தொடர்புகொள்ள முடியாமல் போனது. எத்தனையோ வருடங்களுக்குப் பின்பு ஐரோப்பாவுக்கு அவர் குடிமாறிச் சென்றபோது மீண்டும் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்திருக்கிறார். படித்த விஷயங்கள் அவர் மனதைக் கவர்ந்திருக்கின்றன. “நிறைவேறிய தீர்க்கதரிசனங்களையும், தொடக்கம்முதல் முடிவுவரை உள்ள இணக்கத்தையும், யெகோவாவை வணங்கும் மக்கள் மத்தியில் உள்ள அன்பையும் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு பைபிள் உண்மையிலேயே கடவுளிடமிருந்து வந்த புத்தகம்தான் என்பது எனக்குப் புரிந்தது” என்று சொல்லும் அன்வர் 1998-ல் ஞானஸ்நானமும் பெற்றார்.
15 ஆஷாவுக்குப் பதினாறு வயது. அவளுடைய வீட்டில் எல்லாருமே இந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுள்ளவர்கள். ஆஷா சொல்கிறாள்... “கோயிலுக்கு போனா மட்டும்தான் கடவுள்கிட்ட வேண்டிப்பேன், ஏதாவது பிரச்சினை வந்தாலும் வேண்டிப்பேன். சந்தோஷமா இருந்தப்பெல்லாம் அவர நெனச்சதே இல்ல.” தொடர்கிறாள் ஆஷா... “ஒருநாள் யெகோவாவின் சாட்சிங்க வந்து எங்க வீட்டுக் கதவ தட்டினாங்க, அதுக்கப்புறம் என் வாழ்க்கை அடியோடு மாறிடுச்சு.” அவள் பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். பின்பு கடவுளைத் தன் நண்பராக ஏற்றுக்கொண்டாள். பைபிள் கடவுளிடமிருந்து வந்த புத்தகம்தான் என்று அவள் ஒத்துக்கொண்டதற்குக் காரணம் என்ன? “எனக்கிருந்த எல்லா கேள்விகளுக்கும் பைபிள்ல பதில் கிடைச்சது. கோயிலுக்குப் போய் சாமி தரிசனம் செய்யாமலேயே கடவுள்மீது என்னால நம்பிக்கை வைக்க முடிஞ்சது” என்று அவளே சொல்கிறாள்.
16 பௌலா என்ற பெண்மணி வளர்ந்து வந்ததெல்லாம் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில். ஒருகட்டத்தில்... கடவுள் இருக்கிறாரா என்று அவர் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார். அந்தச் சமயத்தில் என்ன நடந்ததென்று அவரே சொல்கிறார்: “எத்தனையோ மாசங்களுக்கு அப்புறம் என் ஃபிரெண்ட் ஒருத்தரைப் பாத்தேன். நெறைய பேரு நீளமா முடி வளத்துக்கிட்டு, போதைப் பொருளுக்கு அடிமையா இருந்த காலம் அது. ஆனா, என் ஃபிரெண்டு தாடியைச் சவரம் செய்து... முடியெல்லாம் அழகா வெட்டி... பார்க்க பளிச்சுன்னு இருந்தார், சந்தோஷமாவும் இருந்தார். எனக்கு ஒரே ஆச்சரியம், ‘ஏன் இப்படி மாறிட்டே, இவ்ளோ நாள் எங்க போயிருந்தே?’ என்று கேட்டேன். யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படித்ததால் மாறிவிட்டதாகச் சொன்னார். என்கிட்டேயும் பைபிளைப் பத்தி பேச ஆரம்பிச்சிட்டார்.” ஆளையே மாற்றும் சக்தி பைபிளுக்கு இருப்பதைப் பார்த்து வியந்துபோன பௌலா பைபிளைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார். அது கடவுளிடமிருந்து வந்த புத்தகம்தான் என்று இப்போது அவரும் நம்புகிறார்.
‘உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபம்’
17. தினமும் பைபிளை வாசித்துத் தியானிப்பதன் மூலம் நீங்கள் எப்படிப் பிரயோஜனம் அடையலாம்?
17 பைபிள்... கடவுள் தம்முடைய சக்தியின் மூலம் நமக்குக் கொடுத்திருக்கும் அருமையான பரிசு என்றுதான் சொல்ல வேண்டும். அதைத் தினமும் வாசியுங்கள். பைபிள் மீதும் அதைக் கொடுத்த யெகோவா மீதும் உங்கள் அன்பு நாளுக்கு நாள் பெருகும். (சங். 1:1, 2) ஒவ்வொரு முறையும் அதைப் படிக்க உட்காரும்போது யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். படிக்கும் விஷயத்தைப் புரிந்துகொள்ள அவருடைய சக்தியைக் கேளுங்கள். (லூக். 11:13) பைபிளில் கடவுளுடைய சிந்தனைகள் அடங்கியிருக்கின்றன. எனவே, அதை நீங்கள் படித்துத் தியானிக்கும்போது, கடவுளைப் போல சிந்திக்கக் கற்றுக்கொள்வீர்கள்.
18. தொடர்ந்து பைபிளிலிருந்து கற்றுக்கொள்ள ஏன் விரும்புகிறீர்கள்?
18 பைபிளிலிருந்து தொடர்ந்து நீங்கள் கற்றுக்கொள்கிற விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடியுங்கள். (சங்கீதம் 119:105-ஐ வாசியுங்கள்.) பைபிளை வாசிப்பது என்பது கண்ணாடியைப் பார்ப்பதுபோல. உங்கள் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டியிருந்தால் உடனடியாகச் செய்யுங்கள். (யாக். 1:23-25) பைபிளை ஒரு வாள்போல பயன்படுத்தி... உங்கள் மத நம்பிக்கைகளைக் குறித்து கேள்வி கேட்பவர்களைத் தைரியமாக எதிர்த்து நில்லுங்கள், மக்களின் மனதில் ஊறிப்போயிருக்கும் பொய்மத போதனைகளை வேரோடு வெட்டியெறியுங்கள். (எபே. 6:17) அப்படிப் பயன்படுத்தும்போது... தீர்க்கதரிசிகளும் பைபிளை எழுதிய மற்றவர்களும் ‘கடவுளுடைய சக்தியினால் உந்துவிக்கப்பட்டதற்காக’ நன்றியுடன் இருங்கள்.
[அடிக்குறிப்புகள்]
a புதிய ஏற்பாடு மற்றும் பிற பூர்வகால கிறிஸ்தவ இலக்கியங்களுக்கான கிரேக்க-ஆங்கில அகராதி.
b சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 29-ன் சிறு குறிப்பு]
தினமும் பைபிளை வாசித்தால் அதன் மீதும் அதன் ஆசிரியர் மீதும் உங்கள் அன்பு பெருகும்
[பக்கம் 26-ன் படம்]
கடிதத்திலுள்ள கையொப்பம் அது யார் எழுதிய கடிதம் என்பதைச் சொல்லும்