உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்.
நிசான் 14 அன்று பஸ்கா ஆட்டுக்குட்டி எந்தச் சமயத்தில் அடிக்கப்பட வேண்டும்?
“இரண்டு சாயங்காலங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில்” ஆட்டுக்குட்டியை அடிக்க வேண்டும் என சில பைபிள் மொழிபெயர்ப்புகள் சொல்கின்றன. அதாவது, “மாலை மங்கும் வேளையில்” அல்லது “மாலைப் பொழுதில்” அடிக்க வேண்டும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, நன்றாக இருட்டுவதற்குள் அடித்துவிட வேண்டும். (யாத். 12:6)—12/15, பக்கங்கள் 18-19..
ஞானமான தீர்மானங்கள் எடுக்க எந்த பைபிள் நியமங்கள் இளைஞர்களுக்கு உதவும்?
(1) முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தையும் அவருடைய நீதிநெறிகளையும் நாடுங்கள். (மத். 6:19-34) (2) மற்றவர்களுக்கு உதவுவதில் சந்தோஷம் காணுங்கள். (அப். 20:35) (3) இளமையில் யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள். (பிர. 12:1)—1/15, பக்கங்கள் 19-20.
“ஆட்டுக்குட்டியானவரின் திருமணம்” எப்போது நடக்கும்? (வெளி. 19:7)
மகா பாபிலோன் அழிந்த பிறகு, ராஜாவான இயேசு கிறிஸ்து அர்மகெதோன் போரில் வெற்றிவாகை சூடுவார். அதற்குப் பிறகே, “ஆட்டுக்குட்டியானவரின் திருமணம்” நடக்கும்.—2/15, பக்கம் 10.
எதன் அடிப்படையில் முதல் நூற்றாண்டு யூதர்கள் மேசியாவின் வருகையை ‘எதிர்பார்த்தார்கள்’? (லூக். 3:15)
மேசியாவைப் பற்றிய தானியேல் தீர்க்கதரிசனத்தை முதல் நூற்றாண்டு யூதர்கள் புரிந்துகொண்டார்களா என்பது நமக்குத் தெரியாது. (தானி. 9:24-27) இருந்தாலும், தேவதூதர்கள் மேய்ப்பர்களிடம் சொன்னதையும் ஆலயத்தில் அன்னாள் தீர்க்கதரிசி இயேசுவைப் பார்த்துச் சொன்னதையும் அவர்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ‘யூதர்களுடைய ராஜாவை’ பார்க்க சோதிடர்கள் வந்ததையும் கேள்விப்பட்டிருக்கலாம். (மத். 2:1, 2) யோவான் ஸ்நானகர் கிறிஸ்துவின் வருகையைப் பற்றிச் சொன்னதையும் கேட்டிருக்கலாம்.—2/15, பக்கங்கள் 26-27.
“ஆம்” என்பது ‘ஆமாகவே’ இருக்க நாம் என்ன செய்யலாம்? (2 கொ. 1:18)
சில சமயங்களில் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போவதற்கு நியாயமான காரணம் இருக்கலாம். ஆனால், வாக்குக் கொடுத்தால் அதை எப்படியாவது நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.—3/15, பக்கம் 32.
ஒரு கிறிஸ்தவர் பணம் சம்பாதிப்பதற்காகக் குடும்பத்தைவிட்டுப் பிரிந்து வேறு நாட்டிற்குச் செல்வதால் என்ன ஆபத்து வரலாம்?
பெற்றோர் ஒருபக்கம் பிள்ளைகள் ஒருபக்கம் என்றிருந்தால், அவர்கள் உணர்ச்சி ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் பாதிக்கப்படுவார்கள். பெற்றோரை அவர்கள் வெறுக்க ஆரம்பித்துவிடலாம். துணையைவிட்டுப் பிரிந்து போகும் ஒருவர் தன் மணத்துணைக்கு துரோகம் செய்ய வாய்ப்பிருக்கிறது.—4/15, பக்கங்கள் 19-20.
ஊழியத்திற்குப் போகும்போது என்ன நான்கு கேள்விகளை மனதில் வைக்க வேண்டும்?
நான் யாரிடம் பேசுகிறேன்? எங்கு பேசுகிறேன்? எப்போது பேசுகிறேன்? எப்படிப் பேசுகிறேன்?—5/15, பக்கங்கள் 12-15.
நான்கு குதிரைகளின் நிறங்கள் எதைக் குறிக்கின்றன?
முதலில் வரும் தூய்மையான வெள்ளை குதிரை, இயேசு கிறிஸ்து செய்ய போகும் நீதியான போரை அடையாளப்படுத்துகிறது. இரண்டாவதாக வரும் சிவப்பு குதிரை, தேசங்களுக்கிடையே நடக்கும் போரையும் மூன்றாவதாக வரும் கறுப்பு குதிரை, பஞ்சத்தையும் கடைசியாக வரும் ‘மங்கிய நிறமுள்ள குதிரை, மரணத்தையும்’ அடையாளப்படுத்துகின்றன. (வெளி. 6:1-8)—1/1, பக்கங்கள் 14-15.