யெகோவாவே என் பங்கு
“இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.”—எண். 18:20.
1, 2. (அ) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் லேவியருக்கு ஒரு பங்கு கிடைத்ததா? (ஆ) லேவியருக்கு யெகோவா என்ன வாக்குறுதியை அளித்தார்?
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தின் பெரும்பான்மையான பகுதியை இஸ்ரவேலர் கைப்பற்றிய பிறகு, யோசுவா அதைச் சீட்டுப் போட்டுப் பங்கிட்டுக் கொடுத்தார். இதை அவர் தலைமைக் குரு எலெயாசாருடனும் கோத்திரத் தலைவர்களுடனும் சேர்ந்து செய்தார். (எண். 34:13-29) ஆனால், லேவியருக்கு மற்ற கோத்திரத்தாரைப் போல ஒரு நிலம் பங்கிட்டுக் கொடுக்கப்படவில்லை. (யோசு. 14:1-5) வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் ஏன் லேவியருக்கு எந்தப் பங்குமில்லை? அவர்கள் கைவிடப்பட்டுவிட்டார்களா?
2 லேவியரிடம் யெகோவா சொன்ன விஷயத்திலிருந்து இதற்குரிய பதிலைத் தெரிந்துகொள்ளலாம். அவர்கள் கைவிடப்படவில்லை என்பதை வலியுறுத்திக் காட்டி, யெகோவா இவ்வாறு கூறினார்: “இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன்.” (எண். 18:20) “நானே உன் பங்கு” என்பது எப்பேர்ப்பட்ட அருமையான வாக்குறுதி! இதை யெகோவா உங்களிடம் சொல்லியிருந்தால் நீங்கள் எப்படி உணருவீர்கள்? ‘சர்வ வல்லவரிடமிருந்து இப்பேர்ப்பட்ட வாக்குறுதியைப் பெற எனக்கு என்ன தகுதியிருக்கிறது?’ என முதலில் நீங்கள் நினைக்கலாம். ‘அபூரணராய் இருக்கும் கிறிஸ்தவருக்கு இன்று யெகோவா உண்மையிலேயே பங்காக இருக்க முடியுமா?’ என்றும்கூட நீங்கள் யோசிக்கலாம். இதில் நீங்களும் உங்களுடைய அன்புக்குரியவர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள். ஆகவே, யெகோவா சொன்ன அந்த வாக்குறுதியின் அர்த்தமென்ன என்பதை இப்போது நாம் பார்க்கலாம். இன்று கிறிஸ்தவர்களுக்கு யெகோவா எப்படிப் பங்காக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள இது நமக்கு உதவும். மிக முக்கியமாக, அவர் உங்களுக்கு எப்படிப் பங்காக இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்—நீங்கள் பரலோக நம்பிக்கை உள்ளவர்களாய் இருந்தாலும்சரி, பூஞ்சோலை பூமியில் வாழும் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தாலும்சரி.
லேவியரை யெகோவா கவனித்துக் கொள்கிறார்
3. கடவுள் தம்முடைய சேவைக்காக லேவியரை எவ்விதமாகத் தேர்ந்தெடுத்தார் என்பதை விளக்குங்கள்.
3 இஸ்ரவேலருக்கு யெகோவா திருச்சட்டத்தைக் கொடுப்பதற்கு முன்பு, குடும்பத் தலைவர்களே தங்களுடைய குடும்பங்களுக்குக் குருமாராக இருந்தார்கள். அவர் திருச்சட்டத்தைத் தந்தபோது, முழுநேரமாகச் சேவை செய்யும் குருமாரையும் உதவியாளர்களையும் லேவி கோத்திரத்திலிருந்து தேர்ந்தெடுத்தார். எவ்விதமாக? எகிப்தின் தலைமகன்களை அவர் அழித்தபோது, இஸ்ரவேலின் தலைமகன்களைத் தமக்குரியவர்களாய்ப் பரிசுத்தப்படுத்தியிருந்தார்; அதாவது, தம்முடைய சேவைக்கெனத் தேர்ந்தெடுத்திருந்தார். பிறகு, ஒரு முக்கியமான மாற்றத்தைச் செய்வதாகச் சொன்னார்; ஆம், “இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்” என்று சொன்னார். ஆனால், இஸ்ரவேலின் தலைமகன்களுடைய எண்ணிக்கை லேவியருடைய எண்ணிக்கையைவிட அதிகமாய் இருப்பதைக் கணக்கெடுப்பு காட்டியது; இந்த வித்தியாசத்தை ஈடுகட்ட, லேவியரல்லாத மற்ற இஸ்ரவேலர் ஒரு தொகையைச் செலுத்த வேண்டுமெனக் கடவுள் சொன்னார். (எண். 3:11-13, 41, 46, 47) அதன்பின், லேவியர் கடவுளுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்கள்.
4, 5. (அ) என்ன அர்த்தத்தில் கடவுளே லேவியருடைய பங்காக இருந்தார்? (ஆ) லேவியருடைய தேவைகளைக் கடவுள் எப்படிப் பூர்த்தி செய்தார்?
4 யெகோவா தம்முடைய சேவைக்காக லேவியரைத் தேர்ந்தெடுத்தபோது, எப்படி அவர்களுடைய பங்காக ஆனார்? அவர்களுக்கு ஒரு நிலத்தைச் சுதந்தரமாகக் கொடுப்பதற்குப் பதிலாக, தமக்குச் சேவை செய்யும் அருமையான பாக்கியத்தை அளித்தார். “ஆசாரியபட்டமே,” அதாவது குருத்துவப் பணியே, யெகோவா அவர்களுக்கு அளித்த சுதந்தரம். (யோசு. 18:7) இதனால் அவர்கள் வறுமையில் தள்ளப்படவில்லை என்பதை எண்ணாகமம் 18:20-ன் சூழமைவு காட்டுகிறது. (எண்ணாகமம் 18:19,a 21, 24-ஐ வாசியுங்கள்.) ‘லேவியருடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகம் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது.’ இஸ்ரவேலின் விளைச்சலிலும் ஆடுமாடுகளிலும் 10 சதவீதத்தை அவர்கள் பெற்றார்கள். அதேபோல், லேவியரும் தாங்கள் பெற்றதிலிருந்து பத்தில் ஒரு பாகத்தைக் குருத்துவப் பணிக்காகக் கொடுக்க வேண்டியிருந்தது; அதுவும் ‘உச்சிதமானதை,’ அதாவது மிகச் சிறந்ததை, கொடுக்க வேண்டியிருந்தது.b (எண். 18:25-29) கடவுளுடைய வழிபாட்டுத் தலத்திற்கு இஸ்ரவேலர் கொண்டுவந்த ‘பரிசுத்தமான அன்பளிப்புகளும்’ குருமாருக்குக் கொடுக்கப்பட்டன. ஆகவே, யெகோவா தங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வார் எனக் குருமார் நம்புவதற்கு நல்ல காரணம் இருந்தது.
5 திருச்சட்டத்தின்படி இன்னொரு தசமபாகத்தையும் இஸ்ரவேலர் செலுத்தியதாகத் தெரிகிறது. இது, வருடாவருடம் பரிசுத்த பண்டிகைகளைக் கொண்டாடப் போகும்போது இஸ்ரவேலர் தங்களுடைய குடும்பத்திற்குத் தேவையானவற்றை வாங்கி அனுபவிப்பதற்காக ஒதுக்கி வைக்கப்பட்டது. (உபா. 14:22-27) ஆனால், இந்தத் தசமபாகம் வேறொரு காரியத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டது. ஏழு வருடங்களுக்கு ஒருமுறை ஓய்வு ஆண்டு அனுசரிக்கப்பட்டது; அந்த ஏழு வருடங்களில் வரும் மூன்றாம், ஆறாம் ஆண்டுகளின் இறுதியில், ஏழைகள் மற்றும் லேவியருடைய நன்மைக்காக இஸ்ரவேலர் இந்தத் தசமபாகத்தைக் கொடுத்தார்கள். ஏன் லேவியருக்கும் இதைக் கொடுத்தார்கள்? ஏனென்றால், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் அவர்களுக்கு எந்தவித “பங்கும் சுதந்தரமும்” கொடுக்கப்படவில்லை.—உபா. 14:28, 29.
6. லேவியருக்கு நிலத்தில் எந்தப் பங்கும் கிடைக்காதபோதிலும், அவர்கள் எங்கே குடியிருந்தார்கள்?
6 ‘லேவியருக்கு எந்த நிலமும் கிடைக்கவில்லையென்றால் அவர்கள் எங்கே குடியிருந்திருப்பார்கள்?’ என ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். கடவுள் அதற்கு ஏற்பாடு செய்தார். 48 பட்டணங்களையும் அவற்றைச் சுற்றியிருந்த மேய்ச்சல் நிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார். அவற்றில் ஆறு அடைக்கலப் பட்டணங்களும் அடங்கும். (எண். 35:6-8) இவ்வாறு, பரிசுத்த ஸ்தலத்தில் சேவை செய்யாத சமயங்களில் லேவியர் குடியிருப்பதற்கு இடம் கிடைத்தது. தம்முடைய சேவைக்காகத் தங்களையே அர்ப்பணித்தவர்களுக்குத் தேவையானவற்றை யெகோவா தாராளமாகக் கொடுத்தார். யெகோவாவே தங்கள் பங்கு என்பதை லேவியர் எப்படிக் காட்டினார்கள்? தங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுக்க யெகோவாவுக்கு மனமும் வல்லமையும் இருக்கிறது என்பதை நம்புவதன் மூலம் காட்டினார்கள்.
7. யெகோவாவைத் தங்களுடைய பங்காகப் பெற்றிருக்க லேவியர் என்ன செய்ய வேண்டியிருந்தது?
7 தசமபாகம் செலுத்தாத இஸ்ரவேலருக்கு எந்தத் தண்டனையும் திருச்சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவர்கள் தசமபாகம் செலுத்த தவறியபோது குருமாரும் லேவியரும் பாதிக்கப்பட்டார்கள். அதுதான் நெகேமியாவின் காலத்தில் நடந்தது. அதன் விளைவாக, லேவியர் தங்களுடைய சேவையை விட்டுவிட்டு வயல்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது. (நெகேமியா 13:10-ஐ வாசியுங்கள்.) லேவி கோத்திரத்தாருக்குத் தேவையானவை கிடைக்க வேண்டுமென்றால், இஸ்ரவேலர் யெகோவாவின் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. அதோடு, குருமாரும் லேவியரும் தங்களுக்குத் தேவையானவற்றை யெகோவா நிச்சயம் அளிப்பார் என்பதில் விசுவாசம் வைக்க வேண்டியிருந்தது.
யெகோவாவைத் தங்களுடைய பங்காகப் பெற்றிருந்த நபர்கள்
8. லேவியரான ஆசாப்புக்கு ஏற்பட்ட மனசஞ்சலத்தை விவரியுங்கள்.
8 லேவியர் ஒரு கோத்திரமாக யெகோவாவைத் தங்களுடைய பங்காகக் கொண்டிருக்க வேண்டியிருந்தது. அதேசமயத்தில், லேவியரில் தனிநபர்கள்கூட, ‘யெகோவா என் பங்கு’ என்று பக்தியுடனும் நம்பிக்கையுடனும் சொன்னது குறிப்பிடத்தக்கது. (புல. 3:24) அவர்களில் ஒருவர் பாடகராகவும் பாடல் இயற்றுபவராகவும் இருந்தார். அவரை நாம் ஆசாப் என்றழைக்கலாம்; ஒருவேளை அவர் ஆசாப் குடும்பத்தைச் சேர்ந்தவராக... தாவீது ராஜாவின் காலத்தில் பாடகர் குழுவை வழிநடத்திய லேவியராக... இருந்திருக்கலாம். (1 நா. 6:31-43) செல்வச்செழிப்பில் மிதந்துகொண்டிருந்த பொல்லாத மக்களைப் பார்த்து ஆசாப் குழம்பிப்போனதாகவும் பொறாமைப்பட்டதாகவும் சங்கீதம் 73-ல் நாம் வாசிக்கிறோம். “நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்” என்று சொல்லுமளவு அவர் சென்றுவிட்டார். கடவுள் தனக்குத் தந்த விசேஷ வேலை எப்பேர்ப்பட்ட பாக்கியம் என்பதை மறந்துவிட்டார்; யெகோவாவே தன்னுடைய பங்கு என்பதையும் மறந்துவிட்டார். அவர் ‘தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்வரை’ மனசஞ்சலத்துடன் இருந்தார்.—சங். 73:2, 3, 12, 13, 16, 17.
9, 10. ‘என்றென்றைக்கும் கடவுளே என் பங்கு’ என்று ஏன் ஆசாப்பால் சொல்ல முடிந்தது?
9 ஆசாப் பரிசுத்த ஸ்தலத்திற்குப் போனதும், காரியங்களைக் கடவுளுடைய கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தார். உங்களுக்கும் இதுபோன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கலாம். ஒரு கட்டத்தில் நீங்களும் கடவுளுடைய சேவையில் கிடைத்த பாக்கியங்களை மறந்து பொருளாதார காரியங்கள்மீது நாட்டம்கொள்ள ஆரம்பித்திருக்கலாம். ஆனால், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலமும் கிறிஸ்தவக் கூட்டங்களுக்குச் செல்வதன் மூலமும் எல்லாவற்றையும் யெகோவாவின் கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்திருக்கலாம். பொல்லாதவர்களுக்குக் கடைசியில் என்ன நடக்கும் என்பதை ஆசாப் புரிந்துகொண்டார். தனக்குக் கிடைத்த பாக்கியங்களைச் சிந்தித்துப் பார்த்தார்; யெகோவா தனது வலதுகரத்தைப் பிடித்து வழிநடத்துவார் என்பதை உணர்ந்துகொண்டார். அதனால்தான், “பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை” என்று யெகோவாவிடம் ஆசாப் சொன்னார். (சங் 73:23, 25) பின்பு, அவரே தன்னுடைய பங்கு எனக் குறிப்பிட்டார். (சங்கீதம் 73:26-ஐ வாசியுங்கள்.) சொல்லப்போனால், தன்னுடைய ‘மாம்சமும் இருதயமும் மாண்டுபோனாலும்,’ கடவுளே ‘என்றென்றைக்கும் தன் பங்கு’ என்று குறிப்பிட்டார். யெகோவா தன்னை ஒரு நண்பராக நினைவுகூருவார்... தான் உண்மையுடன் செய்த சேவையை மறக்க மாட்டார்... என்பதை அவர் அறிந்திருந்தார். (பிர. 7:1) அது ஆசாப்புக்கு எப்பேர்ப்பட்ட ஆறுதலை அளித்திருக்க வேண்டும்! ஆகவே, “எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; . . . கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்” என்று சொல்லி பாடினார்.—சங். 73:28.
10 கடவுளே தன் பங்கு என்று ஆசாப் சொன்னபோது, ஒரு லேவியராகப் பொருளாதார ரீதியில் தனக்குக் கிடைத்த உதவிகளைப் பற்றி மட்டுமே அவர் குறிப்பிடவில்லை. யெகோவாவுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தையும் அவருடன் வைத்திருந்த நட்பையும்தான் அவர் முக்கியமாய்க் குறிப்பிட்டார். (யாக். 2:21-23) அத்தகைய நட்பை ஆசாப் காத்துக்கொள்வதற்கு, தொடர்ந்து யெகோவாமீது நம்பிக்கை வைத்து விசுவாசத்தில் உறுதியுடன் இருக்க வேண்டியிருந்தது. கடவுளுடைய நீதிநெறிகளின்படி நடந்தால் கடைசியில் சந்தோஷமான வாழ்வு கிடைக்கும் என்பதில் ஆசாப் நம்பிக்கையுடன் இருக்க வேண்டியிருந்தது. சர்வ வல்லவர்மீது நீங்களும் இப்படிப்பட்ட நம்பிக்கையை வைக்க வேண்டும்.
11. எரேமியா கேட்ட கேள்வி என்ன, அதற்கு எப்படிப் பதில் கிடைத்தது?
11 யெகோவா தன் பங்கு என்று சொன்ன மற்றொரு லேவியர்தான் எரேமியா தீர்க்கதரிசி. இந்த வார்த்தைகளைச் சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதை நாம் இப்போது சிந்தித்துப் பார்க்கலாம். எரேமியா ஆனதோத்தில் வாழ்ந்துவந்தார், இது எருசலேமுக்கு அருகே இருந்த ஒரு லேவி பட்டணம். (எரே. 1:1) ஒரு கட்டத்தில் எரேமியா குழம்பிப்போய் இருந்தார்; ‘நல்லவர்கள் கஷ்டப்படுகிறார்கள், ஆனால் கெட்டவர்கள் மட்டும் செழிப்பாக வாழ்கிறார்களே, ஏன்?’ எனக் கேட்டார். (எரே. 12:1, NW) எருசலேமிலும் யூதேயாவிலும் நடந்ததையெல்லாம் பார்த்தபோது யெகோவாவிடம் ‘முறையிட்டார்.’ என்றாலும், அவர் நீதியுள்ளவர் என்பதை எரேமியா அறிந்திருந்தார். எரேமியாவின் கேள்விக்கு யெகோவா எப்படிப் பதிலளித்தார்? அழிவைப் பற்றிய செய்தியை முன்னறிவிக்கச் சொல்வதன் மூலமும் அதை நிறைவேற்றுவதன் மூலமும் பதிலளித்தார். அவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்தவர்கள் தங்களுடைய உயிரை ‘கொள்ளைப்பொருளாக’ பெற்றார்கள்; செழிப்புடன் வாழ்ந்துவந்த கெட்டவர்களோ எச்சரிக்கையை அசட்டை செய்ததால் அழிந்துபோனார்கள்.—எரே. 21:9.
12, 13. (அ) ‘யெகோவா என் பங்கு’ என்று சொல்லும்படி எரேமியாவை எது தூண்டியது, அவர் எப்படிப்பட்ட மனநிலையைக் காட்டினார்? (ஆ) இஸ்ரவேல் கோத்திரத்தார் எல்லாரும் ஏன் அப்படிப்பட்ட மனநிலையை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது?
12 பிற்பாடு, பாழாக்கப்பட்ட தன் தாயகத்தை எரேமியா பார்த்தார், அப்போது இருளில் நடப்பதைப் போல் உணர்ந்தார். “பூர்வ காலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல” தன்னை யெகோவா ‘கிடக்கப்பண்ணியதாக’ அவர் நினைத்தார். (புல. 1:1, 16; 3:6) பரலோகத் தகப்பனிடம் திரும்பும்படி, தறிகெட்டுப்போன தன் தேசத்தாரிடம் எரேமியா சொல்லியிருந்தார்; ஆனால், அவர்களுடைய கெட்ட செயல்கள் அந்தளவுக்குப் பெருகியிருந்ததால் எருசலேமையும் யூதேயாவையும் கடவுள் அழித்தார். எரேமியாவோ தன் பங்கில் செய்ய வேண்டியதைச் செய்திருந்தார், என்றாலும் நடந்ததைப் பார்த்து வேதனைப்பட்டார். தன்னுடைய சோகத்தின் மத்தியிலும் கடவுளுடைய இரக்கங்களை எரேமியா எண்ணிப் பார்த்தார். அதனால்தான் ‘நாம் நிர்மூலமாகவில்லை’ என்று சொன்னார். அதோடு, ‘யெகோவா காட்டிய இரக்கங்கள் காலைதோறும் புதியவைகள்’ என்றார். அச்சந்தர்ப்பத்தில்தான் ‘யெகோவா என் பங்கு’ என்றும் குறிப்பிட்டார். ஒரு தீர்க்கதரிசியாகத் தொடர்ந்து சேவை செய்யும் பாக்கியத்தை அவர் பெற்றார்.—புலம்பல் 3:22-24-ஐ வாசியுங்கள்.
13 இஸ்ரவேலர் 70 வருடங்களாகத் தங்களுடைய தாயகத்தை இழக்கவிருந்தார்கள். அது பாழாய்க் கிடக்கவிருந்தது. (எரே. 25:11) ஆனால், ‘யெகோவா என் பங்கு’ என்று எரேமியா சொன்ன வார்த்தைகள் கடவுளுடைய இரக்கத்தின் மீது அவர் நம்பிக்கை வைத்திருந்தார் என்பதைக் காட்டின; ‘காத்திருக்கும் மனநிலையை’ வளர்க்க இவை அவருக்குத் தூண்டுகோலாகவும் இருந்தன. (புல. 3:24, NW) இஸ்ரவேல் கோத்திரத்தார் எல்லாரும் தங்களுடைய சுதந்தரத்தை இழந்திருந்தார்கள், ஆகவே எரேமியாவைப் போன்ற மனநிலையை அவர்களும் வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. யெகோவா மட்டுமே அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தார். 70 ஆண்டுகளுக்குப்பின், அவர்கள் தாயகத்திற்குத் திரும்பிவந்து அங்கு அவருக்குச் சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றார்கள்.—2 நா. 36:20-23.
யெகோவாவைத் தங்கள் பங்காகப் பெற்ற மற்றவர்கள்
14, 15. லேவியரைத் தவிர யார் யெகோவாவைத் தன் பங்காகக் கொண்டிருந்தார், ஏன்?
14 ஆசாப்பும் எரேமியாவும் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், அப்படியென்றால் லேவியர் மட்டும்தான் யெகோவாவுக்குச் சேவை செய்யும் பாக்கியத்தைப் பெற்றிருக்க முடிந்ததா? இல்லவே இல்லை! ‘ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்காயிருக்கிறீர்’ என்று இஸ்ரவேலின் வருங்கால அரசன் தாவீதும்கூட கடவுளிடம் சொன்னார். (சங்கீதம் 142:1, 5-ஐ வாசியுங்கள்.) இந்தச் சங்கீதத்தை தாவீது இயற்றியபோது, அவர் மாளிகையிலோ சாதாரண வீட்டிலோகூட இருக்கவில்லை. விரோதிகளிடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு குகையில் ஒளிந்திருந்தார். குறைந்தபட்சம் இரண்டு சந்தர்ப்பங்களில், தாவீது குகைகளில் தஞ்சம் புகுந்திருந்தார்; அதில் ஒன்று அதுல்லாமுக்கு அருகில் இருந்தது, மற்றொன்று என்கேதி வனாந்தரத்தில் இருந்தது. இந்தக் குகைகள் ஒன்றில் இருந்தபோது 142-ஆம் சங்கீதத்தை அவர் இயற்றியிருக்கலாம்.
15 அப்படியென்றால், சவுல் அரசனுக்குப் பயந்து தாவீது ஒளிந்திருந்தபோது அவர் அதை இயற்றியிருக்கலாம். தாவீதைக் கொல்ல சவுல் வகைதேடியதால் யாரும் எளிதில் வரமுடியாத ஒரு குகைக்கு தாவீது தப்பிச்சென்றார். (1 சா. 22:1, 4) கண்காணாத அந்த இடத்தில் இருந்தபோது, துணைக்கு எந்த நண்பனும் இல்லாததுபோல் அவருக்குத் தோன்றியிருக்கலாம். (சங். 142:4) அப்போதுதான் உதவிக்காகக் கடவுளை நோக்கிக் கூப்பிட்டார்.
16, 17. (அ) தாவீது நிர்க்கதியாய் உணர்ந்ததற்கான காரணங்கள் யாவை? (ஆ) தாவீது உதவிக்காக யாரை அண்டினார்?
16 சங்கீதம் 142-ஐ தாவீது இயற்றுவதற்கு முன்பு, தலைமைக் குரு அகிமெலேக்குக்கு நடந்ததைப் பற்றி அவர் கேள்விப்பட்டிருக்கலாம்; சவுலிடமிருந்து தாவீது தப்பி ஓடுவதை அறியாமல் அவருக்கு அகிமெலேக்கு உதவி செய்திருந்தார். அதனால் பொறாமை கொண்ட சவுல், அகிமெலேக்கையும் அவருடைய வீட்டாரையும் கொலை செய்தார். (1 சா. 22:11, 18, 19) அவர்களுடைய சாவுக்குத் தான்தான் காரணமென தாவீது எண்ணினார். தனக்கு உதவிய தலைமைக் குருவைத் தானே கொலை செய்ததுபோல் உணர்ந்தார். நீங்கள் தாவீதின் இடத்தில் இருந்திருந்தால், இதேபோல் உணர்ந்திருப்பீர்களா? சவுலுக்குப் பயந்து ஓய்வொழிச்சல் இல்லாமல் ஓடிக்கொண்டே இருந்ததாலும் தாவீது தவியாய்த் தவித்தார்.
17 சீக்கிரத்திலேயே, தாவீதை வருங்கால அரசனாக அபிஷேகம் செய்த சாமுவேல் தீர்க்கதரிசி இறந்துபோனார். (1 சா. 25:1) ஏற்கெனவே நிர்க்கதியாய் உணர்ந்த தாவீதுக்கு இது பேரிடியாய் இருந்திருக்கலாம். என்றாலும், உதவிக்காக யாரை அண்டுவது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆம், அவர் யெகோவாவை அண்டினார். லேவியரைப் போல் பரிசுத்த ஸ்தலத்தில் சேவை செய்யும் பாக்கியம் தாவீதுக்கு இருக்கவில்லை, ஆனாலும் மற்றொரு விதமான சேவை செய்ய அவர் ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்தார்; அதாவது, வருங்காலத்தில் கடவுளுடைய மக்களுக்கு அரசனாகச் சேவை செய்ய நியமிக்கப்பட்டிருந்தார். (1 சா. 16:1, 13) ஆகவே, யெகோவாவிடம் தாவீது தன் மனதில் உள்ளதையெல்லாம் கொட்டினார், வழிநடத்துதலுக்காகத் தொடர்ந்து அவரையே சார்ந்திருந்தார். நீங்களும் யெகோவாவுக்கு ஊக்கமாய்ச் சேவை செய்கையில் அவரையே உங்கள் பங்காகவும் அடைக்கலமாகவும் கொண்டிருக்க முடியும், அப்படிக் கொண்டிருக்கவும் வேண்டும்.
18. இதுவரை நாம் சிந்தித்த நபர்கள் என்ன அர்த்தத்தில் யெகோவாவைத் தங்களுடைய பங்காகக் கொண்டிருந்தார்கள்?
18 இதுவரை நாம் சிந்தித்த நபர்கள் என்ன அர்த்தத்தில் யெகோவாவைத் தங்களுடைய பங்காகக் கொண்டிருந்தார்கள்? அவருடைய சேவையில் அவர்கள் அனைவரும் ஒரு நியமிப்பைப் பெற்றிருந்தார்கள். தங்களுக்குத் தேவையானதையெல்லாம் கடவுள் தருவார் என்றும் அவர்கள் நம்பினார்கள். லேவியரும் தாவீதைப் போன்ற மற்ற கோத்திரத்தாரும் கடவுளைத் தங்களுடைய பங்காகக் கொண்டிருக்க முடிந்தது. அவர்களைப் போல நீங்களும் எப்படி யெகோவாவை உங்களுடைய பங்காகக் கொண்டிருக்கலாம்? இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் நாம் சிந்திப்போம்.
[அடிக்குறிப்புகள்]
a 19-ஆம் வசனம், ஈஸி டு ரீட் வர்ஷனிலிருந்து: ‘“ஜனங்களால் கொடுக்கப்படும் பரிசுத்தமான அன்பளிப்புகளையும் கர்த்தராகிய நான் உனக்குத் தருவேன். இது உங்கள் பங்காகும். நான் இவற்றை உனக்கும், உன் மகன்களுக்கும், உன் மகள்களுக்கும் தருவேன். இந்த சட்டம் எல்லாக் காலத்திற்கும் உரியதாகும். இது கர்த்தரோடு செய்யப்பட்ட உடன்படிக்கையாகும். இதனை உடைக்க முடியாது. நான் இந்த வாக்குறுதியை உனக்கும், உன் சந்ததிகளுக்கும் தந்துள்ளேன், இது மாறாததாகும்” என்று கூறினார்.’
b குருத்துவப் பணியாளர்கள் எப்படிப் பராமரிக்கப்பட்டார்கள் என்பதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, வேதாகமத்தின் பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), தொகுதி 2, பக்கம் 684-ஐக் காண்க.
உங்கள் பதில்?
• எந்த அர்த்தத்தில் யெகோவா லேவியருடைய பங்காக இருந்தார்?
• ஆசாப், எரேமியா, தாவீது போன்றவர்கள் யெகோவாவே தங்கள் பங்கு என்பதை எப்படிக் காட்டினார்கள்?
• கடவுள் உங்களுடைய பங்காக இருக்க வேண்டுமென்றால் எப்படிப்பட்ட குணம் உங்களுக்குத் தேவை?
[பக்கம் 8-ன் சிறுகுறிப்பு]
லேவியருக்கு நிலத்தில் ஒரு பங்கு கிடைக்கவில்லை. யெகோவாவே அவர்களுடைய பங்காக இருந்தார், அதாவது அவருக்குச் சேவை செய்யும் பெரும் பாக்கியத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள்
[பக்கம் 7-ன் படம்]
குருமாருக்கும் லேவியருக்கும் யெகோவா எப்படிப் பங்காக இருந்தார்?
[பக்கம் 9-ன் படம்]
யெகோவாவைத் தொடர்ந்து தன்னுடைய பங்காகக் கொண்டிருக்க ஆசாப்புக்கு எது உதவியது?