எண்ணாகமம்
18 பின்பு யெகோவா ஆரோனிடம், “வழிபாட்டுக் கூடாரம்+ சம்பந்தப்பட்ட சட்டங்களை யாராவது மீறினால், நீயும் உன் மகன்களும் உன் தந்தைவழிக் குடும்பத்தாரும் அதற்குப் பதில் சொல்ல வேண்டும். குருமார்களுக்கான சட்டங்களை யாராவது மீறினால், நீயும் உன் மகன்களும் அதற்குப் பதில் சொல்ல வேண்டும்.+ 2 உன் தகப்பனின் கோத்திரமான லேவி கோத்திரத்தைச் சேர்ந்த உன் சகோதரர்களை உனக்கும் உன் மகன்களுக்கும் ஒத்தாசையாக வைத்துக்கொள்.+ சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் முன்னால் சேவை செய்வதில் அவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.+ 3 நீ கொடுக்கும் பொறுப்புகளையும் வழிபாட்டுக் கூடாரத்தின் மற்ற பொறுப்புகளையும் அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்.+ ஆனால், பரிசுத்த இடத்தின் பாத்திரங்களுக்கும் பலிபீடத்துக்கும் பக்கத்தில் அவர்கள் வரக் கூடாது. அப்படி வந்தால் அவர்களும் செத்துவிடுவார்கள், நீங்களும் செத்துவிடுவீர்கள்.+ 4 அவர்கள் உன்னோடு சேர்ந்து, சந்திப்புக் கூடாரம் சம்பந்தப்பட்ட பொறுப்புகளையும் மற்ற எல்லா வேலைகளையும் செய்வார்கள். தகுதி இல்லாத* யாரும் உங்களுக்குப் பக்கத்தில் வரக் கூடாது.+ 5 இஸ்ரவேல் ஜனங்களை இனிமேலும் கடவுள் தண்டிக்காமல் இருப்பதற்காக,+ பரிசுத்த இடத்திலும் பலிபீடத்திலும் செய்ய வேண்டிய கடமைகளை+ நீங்கள் செய்ய வேண்டும். 6 இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து உங்கள் சகோதரர்களாகிய லேவியர்களை நான் பிரித்தெடுத்து உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன்.+ சந்திப்புக் கூடாரச் சேவையைச் செய்ய அவர்கள் யெகோவாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.+ 7 பலிபீடத்திலும் திரைச்சீலையின் உள்ளேயும் குருமார்கள் செய்ய வேண்டிய வேலைகளை நீயும் உன் மகன்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்.+ குருத்துவச் சேவைக்கு நீங்கள்தான் பொறுப்பு.+ அதை நான் உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன். தகுதி இல்லாத* யாராவது வழிபாட்டுக் கூடாரத்தின் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்”+ என்றார்.
8 பின்பு யெகோவா ஆரோனிடம், “எனக்கு வருகிற காணிக்கைகளை உன் பொறுப்பில் விடுகிறேன்.+ இஸ்ரவேலர்கள் எனக்குக் காணிக்கையாகக் கொடுக்கிற பரிசுத்த பொருள்கள் எல்லாவற்றிலும் ஒரு பங்கை உனக்கும் உன் மகன்களுக்கும் தந்திருக்கிறேன். அது உங்களுடைய நிரந்தரப் பங்காக இருக்கும்.+ 9 தகன பலியாகச் செலுத்தப்படுகிற மிகவும் பரிசுத்தமான பலிகளில் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். உணவுக் காணிக்கை,+ பாவப் பரிகார பலி,+ குற்ற நிவாரண பலி+ என ஜனங்கள் எனக்குக் கொண்டுவருகிற எல்லா பலிகளிலும் உங்களுக்கு ஒரு பங்கு கிடைக்கும். அது உனக்கும் உன் மகன்களுக்கும் மிகப் பரிசுத்தமானது. 10 மிகவும் பரிசுத்தமான இடத்தில் நீ அதைச் சாப்பிட வேண்டும்.+ எல்லா ஆண்களும் அதைச் சாப்பிடலாம், அது பரிசுத்தமானது.+ 11 இஸ்ரவேலர்கள் செலுத்துகிற அசைவாட்டும் காணிக்கைகளும்,+ அவற்றோடு கொடுக்கிற மற்ற எல்லா காணிக்கைகளும்+ உன்னுடையது. அவற்றை உனக்கும் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் நிரந்தரப் பங்காகத் தந்திருக்கிறேன்.+ உன் வீட்டில் தீட்டில்லாமல் இருக்கிற எல்லாரும் அதைச் சாப்பிடலாம்.+
12 யெகோவாவாகிய எனக்கு முதல் விளைச்சலிலிருந்து+ அவர்கள் கொடுக்கிற உயர்தரமான எண்ணெய், உயர்தரமான புதிய திராட்சமது, உயர்தரமான தானியம் ஆகியவற்றை நான் உனக்குத் தருகிறேன்.+ 13 அவர்களுடைய நிலத்தின் முதல் விளைச்சலிலிருந்து யெகோவாவுக்குக் கொண்டுவருகிற எல்லாமே உன்னுடையது.+ உன் வீட்டில் தீட்டில்லாமல் இருக்கிற எல்லாரும் அதைச் சாப்பிடலாம்.
14 இஸ்ரவேலில் கடவுளுக்காக அர்ப்பணிக்கப்படுகிற எல்லாமே உனக்குத்தான் சொந்தமாக வேண்டும்.+
15 யெகோவாவுக்காக ஜனங்கள் அர்ப்பணிக்கிற முதல் ஆண்குழந்தைகளும் அவர்களுடைய மிருகங்களின் முதல் குட்டிகளும்+ உனக்குத்தான் சொந்தமாக வேண்டும். ஆனாலும், முதல் ஆண்குழந்தைகள் கண்டிப்பாக மீட்கப்பட வேண்டும்.+ தீட்டான மிருகங்களின் முதல் குட்டிகளும் மீட்கப்பட வேண்டும்.+ 16 அவை பிறந்து ஒரு மாதமோ அதற்கும் அதிகமாகவோ ஆகியிருந்தால், பரிசுத்த* சேக்கலின்* கணக்குப்படி ஐந்து வெள்ளி சேக்கல்+ கொடுத்து அவற்றை மீட்க வேண்டும். ஒரு சேக்கல் என்பது 20 கேரா.* 17 முதலில் பிறக்கிற காளைக் கன்றையோ செம்மறியாட்டுக் கடாக் குட்டியையோ வெள்ளாட்டுக் கடாக் குட்டியையோ மட்டும் மீட்கக் கூடாது.+ அவை பரிசுத்தமானவை. அவற்றின் இரத்தத்தைப் பலிபீடத்தின் மேல் நீ தெளிக்க வேண்டும்.+ அவற்றின் கொழுப்பைத் தகன பலியாகச் செலுத்த வேண்டும். அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ 18 அவற்றின் சதைப்பகுதி உன்னுடையது. அசைவாட்டும் காணிக்கையாகிய மார்க்கண்டத்தையும்* வலது காலையும் போல அது உன்னுடையது.+ 19 இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குச் செலுத்துகிற பரிசுத்த காணிக்கைகள் எல்லாவற்றையும்+ நான் உனக்கும் உன் மகன்களுக்கும் மகள்களுக்கும் நிரந்தரப் பங்காகக் கொடுத்திருக்கிறேன்.+ இது உன்னோடும் உன் வம்சத்தாரோடும் யெகோவா செய்கிற நிரந்தர ஒப்பந்தம்”* என்றார்.
20 பின்பு யெகோவா ஆரோனிடம், “இஸ்ரவேல் தேசத்தில் உனக்கு எந்தச் சொத்தும் இருக்காது, அவர்களுடைய நிலத்தில் எதுவும் உனக்குச் சொந்தமாகாது.+ இஸ்ரவேலர்களின் நடுவில் நானே உன் சொத்து.+
21 சந்திப்புக் கூடாரத்தில் லேவியின் வம்சத்தார் செய்கிற சேவைக்காக, இஸ்ரவேலர்களுக்கு இருக்கிற எல்லாவற்றிலும் பத்திலொரு பாகத்தை அவர்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன்.+ 22 இனிமேல் இஸ்ரவேல் ஜனங்களில் யாரும் சந்திப்புக் கூடாரத்துக்குப் பக்கத்தில் வரக் கூடாது. அப்படி வந்தால், அவர்கள் குற்றத்துக்கு ஆளாகி செத்துப்போவார்கள். 23 சந்திப்புக் கூடாரச் சேவையை லேவியர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும். பரிசுத்த இடத்துக்கு விரோதமாக ஜனங்கள் செய்கிற குற்றத்துக்கு அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.+ இஸ்ரவேலர்களின் நடுவில் அவர்களுக்கு எந்தச் சொத்தும் இருக்கக் கூடாது. இது தலைமுறை தலைமுறைக்கும் அவர்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.+ 24 யெகோவாவாகிய எனக்கு பத்திலொரு பாகமாக இஸ்ரவேலர்கள் கொடுக்கிற காணிக்கைகள் எல்லாவற்றையுமே நான் லேவியர்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன். அதனால்தான், ‘இஸ்ரவேலர்களின் நடுவில் அவர்களுக்கு எந்தச் சொத்தும் இருக்கக் கூடாது’ என்று அவர்களிடம் சொன்னேன்”+ என்றார்.
25 பின்பு யெகோவா மோசேயிடம், 26 “நீ லேவியர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘இஸ்ரவேலர்கள் கொடுக்கும் பத்திலொரு பாகம் உங்களுக்குக் கிடைக்கும். அதை நான் அவர்களிடமிருந்து வாங்கி உங்களுக்குச் சொத்தாகக் கொடுத்திருக்கிறேன்.+ நீங்கள் அந்தப் பத்திலொரு பாகத்திலிருந்து பத்திலொரு பாகத்தை எடுத்து யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.+ 27 அதை உங்களுடைய காணிக்கையாக ஏற்றுக்கொள்வேன். அதை உங்களுடைய களத்துமேட்டின் தானியத்தைப் போலவும்,+ உங்களுடைய ஆலையின் திராட்சரசத்தை அல்லது எண்ணெயைப் போலவும் ஏற்றுக்கொள்வேன். 28 இப்படி, இஸ்ரவேலர்கள் உங்களுக்குத் தருகிற பத்திலொரு பாகத்தில் நீங்களும் யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்க வேண்டும். அவற்றை யெகோவாவுக்குக் காணிக்கையாக ஆரோனிடம் கொடுக்க வேண்டும். 29 உங்களுக்குக் கொடுக்கப்படுகிற பரிசுத்த காணிக்கைகளில் மிகச் சிறந்ததை நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும்.’+
30 நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘லேவியர்களாகிய உங்களுக்குக் கிடைக்கிற பொருள்களில் மிகச் சிறந்ததை நீங்கள் காணிக்கையாகக் கொடுக்கும்போது, அவை உங்களுடைய களத்துமேட்டிலிருந்து கிடைத்த தானியத்தைப் போலவும், உங்களுடைய ஆலையிலிருந்து கிடைத்த திராட்சரசத்தை அல்லது எண்ணெயைப் போலவும் ஏற்றுக்கொள்ளப்படும். 31 நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அதைச் சாப்பிடலாம். ஏனென்றால், அது சந்திப்புக் கூடாரத்தில் செய்த சேவைக்காக உங்களுக்குக் கொடுக்கப்படுகிற கூலி.+ 32 அவற்றில் மிகச் சிறந்ததைக் காணிக்கையாகக் கொடுக்கும்வரை, நீங்கள் குற்றத்துக்கு ஆளாக மாட்டீர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் தரும் பரிசுத்த பொருள்களை நீங்கள் அவமதிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் நிச்சயம் சாவீர்கள்’”+ என்றார்.