கடவுளுடைய மக்கள் மத்தியில் பிள்ளைப்பேறு
“உங்கள் கடவுளாகிய யெகோவா . . . ஆயிரம் மடங்கு அதிகமாகச் செய்வாராக.”—உபாகமம் 1:11.
“இதோ, பிள்ளைகள் யெகோவாவால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். வாலவயது குமாரர்கள் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். அவைகளால் தன் அம்பறாத் தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்.” இப்படியாக சங்கீதம் 127:3–5-ல் [NW] வாசிக்கிறோம். ஆம், பிள்ளைப்பேறு முதல் மானிட தம்பதிகளுக்கும் அவர்களுடைய சந்ததிகளுக்கும் சிருஷ்டிகராகிய யெகோவா அருளிய ஓர் அற்புதமான சிலாக்கியம்.—ஆதியாகமம் 1:28.
இஸ்ரவேலில் பிள்ளைப்பேறு
2 பெரிய குடும்பங்களைக் கொண்டிருப்பது ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்கள் வழியில் ஆபிரகாமின் சந்ததியினர் மத்தியில் அதிகமாக விரும்பப்பட்டது. உப மனைவிகளுக்கும் மறுமனையாட்டிகளுக்கும் பிறந்த பிள்ளைகளுங்கூட முறையாகப் பிறந்தவர்களாகக் கருதப்பட்டார்கள். இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தின் பிதாக்களாயிருந்த யாக்கோபுடைய சில குமாரர்களின் விஷயத்தில் இப்படித்தான் இருந்தது. (ஆதியாகமம் 30:3–12; 49:16–21; 2 நாளாகமம் 11:21-ஐ ஒப்பிடவும்.) விவாகத்தைக் குறித்ததில் கடவுளுடைய ஆதி நோக்கம் ஒரே விவாக துணையைக் கொண்டிருப்பதாக இருந்தபோதிலும், ஆபிரகாமின் சந்ததியார் மத்தியில் பல மனைவிகளை விவாகம் செய்துகொள்வதும் மறுமனையாட்டிகளைக் கொண்டிருப்பதும் கடவுளால் பொறுத்துக்கொள்ளப்பட்டது, இது அம்மக்கள் தொகை அதிக வேகமாக வளருவதற்கு ஏதுவாயிருந்தது. இஸ்ரவேலர் “பூமியின் தூளத்தனையாக ஏராளமான ஜனமாக” பெருக வேண்டியதாயிருந்தது. (2 நாளாகமம் 1:9; ஆதியாகமம் 13:14–16) அந்த ஜனத்தாரில்தான் “பூமியிலுள்ள சகல ஜாதியாரும்” ஆசீர்வதிக்கப்படும் வாக்குப்பண்ணப்பட்ட “வித்து” வரவேண்டும்.—ஆதியாகமம் 22:17, 18; 28:14; உபாகமம் 1:10, 11.
3 தெளிவாகவே, இஸ்ரவேலில் பிள்ளைப்பேறு யெகோவாவின் ஆசீர்வாதத்துக்கு ஓர் அடையாளமாகக் கருதப்பட்டது. (சங்கீதம் 128:3, 4) என்றபோதிலும், சங்கீதம் 127-லிருந்து மேற்கோளாக எடுக்கப்பட்ட இந்தக் கட்டுரையின் ஆரம்ப வசனங்கள் குறிப்பாக இஸ்ரவேலின் சரித்திரத்தில் சாதகமாயிருந்த ஒரு காலப்பகுதியில் சாலொமோன் அரசனால் எழுதப்பட்டன என்பது கவனிக்கப்பட வேண்டும். அந்தக் காலப்பகுதியைக் குறித்து பைபிள் குறிப்பிடுவதாவது: “யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். . . . சாலொமோனுடைய நாளெல்லாம் [வடக்கில்] தாண் துவக்கி [தெற்கில்] பெயர்செபா மட்டும் யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.”—1 இராஜாக்கள் 4:20, 25.
இஸ்ரவேலில் பிள்ளைகளுக்குக் கடினமான காலங்கள்
4 ஆனால் இஸ்ரவேல் சரித்திரத்தில் பிள்ளைப்பேறு மகிழ்ச்சிக்குரியதாய் இல்லாதிருந்த காலப்பகுதிகளும் இருந்திருக்கின்றன. எருசலேமின் முதல் அழிவின் போது, எரேமியா தீர்க்கதரிசி பின்வருமாறு எழுதினான்: “கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது. . . . குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளில் மூர்ச்சித்துக் கிடக்கிறார்கள். . . . ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்ன வேண்டுமோ? இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் தங்கள் சொந்த பிள்ளைகளைச் சமைத்தன.”—புலம்பல் 2:11, 20; 4:10.
5 தெளிவாகவே, இதுபோன்ற இருதயத்தைப் பிளக்கும் வேதனைமிகுந்த காட்சிகள் ஏழு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் சம்பவித்தன. பொ.ச. 70-ல் எருசலேம் முற்றுகையிடப்பட்ட சமயத்தில் பிள்ளைகள் தங்கள் தகப்பனாரின் வாயிலிருந்து உணவைப் பிடுங்கித் தின்றார்கள் என்றும் தாய்மார்கள் பாலகரின் வாயிலிருந்த உணவை எடுத்துக்கொண்டார்கள் என்றும் யூத சரித்திராசிரியனான ஜோசிஃபஸ் விவரிக்கிறான். யூத பெண் ஒருத்தி, பால் குடிக்கும் தன் குழந்தையைக் கொன்று, அதன் உடலை சுட்டு சாப்பிட்ட சம்பவத்தை நினைவுபடுத்துகிறான். யூதாவுக்கும் எருசலேமுக்கும் எதிராக பொ.ச.மு. 607-லும் பொ.ச. 70-லும் ஏற்பட்ட யெகோவாவின் நியாயத்தீர்ப்பின்போது, யூத உலகத்திற்குள் பிள்ளைகளைக் கொண்டுவருவதைப் பொறுப்பறிந்த பிள்ளைப்பேறு என்று சொல்ல முடியாது.
ஆரம்ப கிறிஸ்தவர்கள் மத்தியில் பிள்ளைப்பேறு
6 ஆரம்ப கிறிஸ்தவர்கள் மத்தியில் பிள்ளைப்பேறு எவ்விதம் நோக்கப்பட்டது? முதலாவதாகக் கவனிக்க வேண்டிய ஒரு காரியம், இயேசு, தம்முடைய சீஷர்களிடையே பல மனைவிகளைக் கொண்டிருப்பதையும் மறுமனையாட்டி வாழ்க்கையையும் முடிவுக்குக் கொண்டுவந்தார். அவர் யெகோவாவின் முதல் தராதரத்தை உறுதிப்படுத்தினார், அதாவது ஒரு மனைவியைக் கொண்டிருத்தலை, அல்லது ஒரு ஆண் ஒரு பெண்ணை விவாகஞ்செய்வதையே உறுதிசெய்தார். (மத்தேயு 19:4–9) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் பிள்ளைப்பேற்றால் பெருகவேண்டியிருந்தது, ஆனால் ஆவிக்குரிய இஸ்ரவேலரோ சீஷராக்குதல் மூலம் பெருகவேண்டியதாயிருந்தது.—மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8.
7 கிறிஸ்தவ மதம் முக்கியமாய்ப் பிள்ளைப்பேற்றின் மூலம் பெருகவேண்டியதாக இருந்திருந்தால், “பரலோக ராஜ்யத்தினிமித்தம்” விவாகமில்லாமல் இருப்பதற்கு “இடமளிக்கும்படி” இயேசு தம்முடைய சீஷர்களை ஊக்குவித்திருக்க மாட்டார். (மத்தேயு 19:10–12) பவுல் அப்போஸ்தலனுங்கூட பின்வருமாறு எழுதியிருக்க மாட்டான்: “அவளை விவாகம்பண்ணிக் கொடுக்கிறவனும் நன்மை செய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மை செய்கிறான்.”—1 கொரிந்தியர் 7:38.
8 என்றபோதிலும், ராஜ்ய அக்கறைகளை சேவிப்பதற்காக விவாகமின்றி இருப்பதை உற்சாகப்படுத்தும் காரியத்தில் இயேசுவும் சரி, பவுலும் சரி, அவர்கள் அதை வற்புறுத்தவில்லை. சில கிறிஸ்தவர்கள் விவாகஞ்செய்துக் கொள்வார்கள் என்பதை இருவருமே முன்கண்டார்கள். இயல்பாகவே, இவர்களில் சிலருக்குப் பிள்ளைகள் இருக்கக்கூடும். பிள்ளைகளை வளர்க்கும் காரியத்தில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் நேரடியான பல புத்திமதிகளைக் கொண்டிருக்கிறது. (எபேசியர் 6:1–4; கொலோசெயர் 3:20, 21) மூப்பர்களோ, அல்லது உதவி ஊழியர்களோ விவாகமானவர்களாயிருந்தால், அவர்கள் நல்ல முன்மாதிரியான பெற்றோராக இருக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 3:4, 12.
9 பிள்ளைகளைக் கொண்டிருப்பது, சில கிறிஸ்தவ பெண்களுக்குப் பாதுகாப்பாக அமையும் என்றுங்கூட அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்டான். தேவையிலிருக்கும் விதவைகளுக்கு பொருள் சம்பந்தமான நிவாரணம் குறித்து அவன் பின்வருமாறு எழுதினான்: “இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக் கொள்ளாதே . . . அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரிய பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீண் அலுவற்காரர்களாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள். ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன். ஏனெனில் இதற்கு முன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.” அப்படிப்பட்ட பெண்கள் “தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.”—1 தீமோத்தேயு 5:11–15; 2:15.
‘சரீரத்திலே உபத்திரவம்’
10 என்றபோதிலும், இதே அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய தன்னுடைய முதல் கடிதத்தில் விதவைகளுக்கு வித்தியாசமான ஒரு பரிகாரத்தைக் குறிப்பிடுகிறான். விவாகம் செய்துக்கொள்ளுதலின் பேரில் தன்னுடைய ஆலோசனைக்கு உறமூட்டுபவனாய் அதை “யோசனையாய்க்” கூறினதாகக் குறிப்பிட்டான். அவன் எழுதினான்: “விவாகமில்லாதவர்களையும் கைம்பெண்களையும் குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப் போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம் பண்ணுகிறது நல்லது. ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.”—1 கொரிந்தியர் 7:6, 8, 9, 40.
11 பவுல் விளக்கினான்: “கன்னிகை விவாகம் பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரப்படுவார்கள். அதற்கு நீங்கள் தப்ப வேண்டுமென்றிருக்கிறேன்.” (1 கொரிந்தியர் 7:28) “சரீரத்திலே உபத்திரவம்” குறித்து, புதிய உலக மொழிபெயர்ப்பின் ஓரக் குறிப்பு ஆதியாகமம் 3:16-ஐக் குறிப்பிடுகிறது. அதில் நாம் வாசிக்கிறோம்: “அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும் போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய், உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும். அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான்,” என்று சொன்னார். சாதாரணமாக எழக்கூடிய விவாகப் பிரச்னைகள் தவிர, விவாகம் செய்துகொள்கிறவர்கள் எதிர்ப்படும் “சரீரத்திலே உபத்திரவம்,” பிள்ளைப்பேறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் உட்படுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை. பவுல் விவாகத்தையோ அல்லது பிள்ளைப்பேற்றையோ தடை செய்யவில்லை, என்ற போதிலும் அவை யெகோவாவுக்கு சேவை செய்வதைத் தடை செய்யக்கூடும். அவை யெகோவாவுக்கு சேவை செய்வதைத் தடை செய்யும் பிரச்னைகளைக் கொண்டுவரக்கூடும், கவனத்தைச் சிதறச்செய்யக்கூடும் என்று தன்னுடைய உடன் கிறிஸ்தவர்களை எச்சரிப்பது தன்னுடைய தலையாயக் கடமை என்று உணர்ந்தான்.
“காலம் குறுகினதானபடியால்”
12 நம்முடைய பொது சகாப்தத்தின் முதல் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் உலகப்பிரகாரமான மக்களைப் போன்று வாழ சுதந்திரமற்றிருந்தனர். அவர்களுடைய நிலைமை அவர்களுடைய விவாக வாழ்க்கையைக்கூட பாதிப்பதாயிருந்தது. பவுல் பின்வருமாறு சொன்னான்: “மேலும் சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில் இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள் போலவும், . . . இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள் போலவும் இருக்க வேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்து போகிறதே. நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். . . . இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்த வேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்க வேண்டுமென்றும், உங்கள் சுய பிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன்.”—1 கொரிந்தியர் 7:29–35.
13 பைபிள் மேதை ஃப்ரெட்ரிக் கோடெட் எழுதினார்: “இந்த உலகம் காலாகாலத்திற்கு நிலைநிற்கும் என்று அவிசுவாசிகள் கருதிட, கிறிஸ்தவன் உண்மையான அந்த மகா எதிர்பார்ப்பை, பரோசியாவை [வந்திருத்தலை] எல்லா சமயத்திலும் தன் கண்முன் கொண்டிருக்கிறான்.” கிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குத் தம்முடைய “வந்திருத்தலின்” அடையாளத்தைக் கொடுத்து, பின்வருமாறு எச்சரித்தார்: “உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.” (மத்தேயு 24:3, 42) காலம் “குறுகினதாய்” இருந்தது, அதாவது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் வருகையை எப்பொழுதும் எதிர்பார்த்தவர்களாய் இருக்க வேண்டியதாயிருந்தது. மேலும், ‘அவர்களுடைய அழைப்பை உறுதியாக்கக்’கூடிய விதத்தில் அவர்களுடைய சகல காரியத்துக்கும் முடிவை ஏற்படுத்தும் “சமயமும் எதிர்பாராத சம்பவமும்” தங்களுடைய வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்னால் தனிப்பட்டவர்களாய்த் தங்களுக்கு எவ்வளவு காலம் இருந்தது என்பதை அவர்கள் அறியாதிருந்தார்கள்.—பிரசங்கி 9:11; 2 பேதுரு 1:10.
14 யூதேயாவிலும் எருசலேமிலும் இருந்த கிறிஸ்தவர்கள் “விழித்திருக்க” வேண்டிய காரியம் தவிர்க்க முடியாததாயிருந்தது. எருசலேமின் இரண்டாவது அழிவைக் குறித்து இயேசு எச்சரித்தபோது, அவர் சொன்னதாவது: “அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால் கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ!” (மத்தேயு 24:19) உண்மைதான், அவர்கள் பிள்ளைகளைப் பெறுவதிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்று அந்த முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு சொல்லவில்லை. அவர் ஒரு உண்மையைத்தான் தீர்க்கதரிசனமாக சொன்னார். எருசலேமின் அழிவுக்கான அடையாளம் காணப்படும்போது, வேகமாக தப்பியோடும் காரியம் கர்ப்பவதிகளுக்கு அல்லது சிறு பிள்ளைகளையுடையவர்களுக்கு அதிகக் கடினமாயிருக்கும் என்பதைத்தான் அவருடைய வார்த்தைகள் சுட்டிக்காட்டுகின்றன. (லூக்கா 19:41–44; 21:20–23) சரியாகவே, பொ.ச. 66-க்கு முற்பட்ட ஆண்டுகளில், யூதேயாவிலுள்ள யூதர்கள் மத்தியில் அமைதியின்மை அதிகரிக்க ஆரம்பித்தபோது, இயேசு கொடுத்த எச்சரிப்பு அந்தப் பூர்வ கிறிஸ்தவர்களின் நினைவுக்கு வந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. அது அந்தக் கடினமான காலங்களில் உலகத்திற்குள் பிள்ளைகளைக் கொண்டுவருவதன் பேரில் அவர்களுடைய மனப்பான்மையையும் பாதித்தது.
இன்று பிள்ளைப்பேறு
15 இன்று, இந்த “முடிவின் காலத்தில்” கிறிஸ்தவர்கள் விவாகத்தையும், பிள்ளைகளைப் பெற்றெடுப்பதையும் எவ்விதம் நோக்க வேண்டும்? (தானியேல் 12:4) “இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறது,” அல்லது மற்றொரு மொழிபெயர்ப்பு குறிப்பிடுவதுபோல், “தற்போதைய காரியங்களின் திட்டம் வேகமாகக் கடந்துபோகிறது,” என்ற வார்த்தைகள் இன்று அதிக உண்மையாக இருக்கின்றன.—1 கொரிந்தியர் 7:31, பிலிப்ஸ் (Phillips).
16 இப்பொழுது, இதுவரை இருந்திராதவகையில், “இனிவரும் காலம் குறுகினது.” “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும்.” ஆம், யெகோவா கொடுத்திருக்கும் இந்த முக்கியமான வேலையை அவருடைய மக்கள் செய்து முடிப்பதற்கு எஞ்சியிருக்கும் காலம் மிகக் குறுகியது. முடிவு வருவதற்கு முன்பாக இந்த வேலை முடிக்கப்படவேண்டும். (மத்தேயு 24:14) எனவே, விவாகம் செய்துகொள்வது அல்லது விவாகமானவர்களாயிருந்தால் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்வது, இந்த முக்கிமான வேலையில் தங்களுடைய பங்கை எவ்விதத்தில் பாதிக்கும் என்று கிறிஸ்தவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.
ஒரு பூர்வீக மாதிரி
17 இயேசு, “மனுஷகுமாரன் வரும் காலத்தை” “நோவாவின் நாட்களுக்கு” ஒப்பிட்டுப் பேசினார். (மத்தேயு 24:37) நோவாவும் அவனுடைய குமாரர்களும் ஜலப்பிரளயத்திற்கு முன்பு செய்து முடிக்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட வேலையைக் கொண்டிருந்தார்கள். அது பிரசங்கித்தலையும் ஒரு பிரமாண்டமான பேழையைக் கட்டுவதையும் உட்படுத்தியது. (ஆதியாகமம் 6:13–16; 2 பேதுரு 2:5) பேழையைக் கட்டுவதற்கான காரியங்களை யெகோவா சொன்ன சமயத்தில் நோவாவின் குமாரர்கள் அநேகமாய் விவாகமானவர்களாயிருந்தார்கள். (ஆதியாகமம் 6:18) பேழையைக் கட்டி முடிப்பதற்கு சரியாக எவ்வளவு காலம் எடுத்தது என்பது நமக்குத் தெரியாது. ஆனால், பல பத்தாண்டுகள் எடுத்திருக்க வேண்டும். இங்கு அக்கறைக்குரிய காரியம் என்னவென்றால், ஜலப்பிரளயத்திற்கு முன்னான இந்தக் காலப்பகுதி முழுவதுமாக, நோவாவின் குமாரர்களுக்கும் அவர்களுடைய மனைவிகளுக்கும் பிள்ளைகள் இருக்கவில்லை. (1 பேதுரு 3:20) அவர்கள் பிள்ளைகளில்லாமல் இருந்ததற்கு அநேகமாய் இரண்டு காரணங்கள் இருந்திருக்கும். முதல் காரணம், ஜலப்பிரளய அழிவு நெருங்கிக் கொண்டிருக்க, அவர்களுடைய முழு கவனத்தையும் தேவைப்படுத்திய தெய்வீக நியமனம் பெற்ற ஒரு வேலை இருந்தது. இரண்டாவது, “மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகி, அவன் இருதயத்தின் நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததாயிருந்த” ஒரு உலகத்திற்குள் “கொடுமையினால் நிறைந்த” ஓர் உலகத்திற்குள் பிள்ளைகளைக் கொண்டுவருவதற்கு அவர்கள் மனமற்றவர்களாயிருந்தனர் என்பதில் சந்தேகமில்லை.—ஆதியாகமம் 6:5, 13.
18 ஜலப்பிரளயத்திற்கு முன்பாக நோவாவின் குமாரர்களும் அவர்களுடைய மனைவிகளும் எடுத்த இந்த நடவடிக்கை, இன்று வாழும் “வேறே ஆடுகளின்” விவாகமான தம்பதிகளுக்கு ஒரு விதிமுறையாக அமைகிறது என்று அர்த்தமாகாது. என்றபோதிலும், இயேசு, நோவாவின் நாட்களை, நாம் இப்பொழுது வாழ்ந்துவரும் காலத்திற்கு ஒப்பிட்டு பேசினார். எனவே அவர்களுடைய முன்மாதிரி நம்முடைய சிந்தனைக்கு உணவாக அமைகிறது.
“கொடிய காலங்கள்”
19 நோவாவின் குடும்பத்தைப் போல, நாமும் “அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த ஓர் உலகில்” வாழ்ந்துவருகிறோம். (2 பேதுரு 2:5) அவர்களைப் போலவே நாமும், அழிக்கப்படவிருக்கும் ஒரு பொல்லாத ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” இருக்கிறோம். சாத்தானுடைய ஒழுங்குமுறையின் “கடைசி நாட்கள்” “கொடிய காலமாக” [கையாளுவதற்குக் கடினமான காலமாக, NW] இருக்கும் என்று அப்போஸ்தலனாகிய பவுல் முன்னறிவித்தான். இந்தக் கொடிய காலத்தில் கையாளுவதற்குக் கடினமான காரியங்களில் ஒன்று, பிள்ளைகளை வளர்ப்பது. இதைக் காண்பிப்பவனாக, அவர்கள் “தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாய்” இருப்பார்கள் என்று கூறினான். பிள்ளைகளும் வளரிளம் பருவத்தினரும் உட்பட மக்கள் பொதுவாக “நன்றியறியாதவர்களாயும் பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும்” இருப்பார்கள் என்று கூறினான். (2 தீமோத்தேயு 3:1–3) பவுல் இவ்விடத்தில் உலகப் பிரகாரமான ஆட்கள் மத்தியிலிருக்கும் நிலைமை குறித்து முன்னறிவிப்பதால், அப்படிப்பட்ட மனநிலைகள் பிள்ளை வளர்ப்பைக் கிறிஸ்தவர்களுக்குக் கடினமாக்கும், இது அநேகரின் அனுபவமாகவும் இருந்திருக்கிறது.
20 நாம் இதுவரை சிந்தித்த காரியங்கள் அனைத்துமே காண்பிப்பது, பிள்ளைகளைப் பெற்றெடுத்தல் குறித்து ஒரு சமநிலையான நோக்கநிலையைக் கொண்டிருப்பது அவசியம். அது மகிழ்ச்சியைக் கூட்டலாம், அதே சமயத்தில் மனவேதனைகளையும் கூட்டலாம். நன்மைகளும் உண்டு, தீமைகளும் உண்டு. இவற்றில் சில அடுத்த பிரதியில் சிந்திக்கப்படும். (w88 3⁄1)
விமர்சனத்துக்குக் குறிப்புகள்
◻ இஸ்ரவேலில் பெரிய குடும்பங்களைக் கொண்டிருப்பது ஏன் விரும்பப்பட்டது?
◻ யூதர்களுக்குப் பிள்ளைபேறு மனவேதனைகள் ஏற்படுத்திய சமயங்கள் இருந்தன என்பதை எது காண்பிக்கிறது?
◻ ஆவிக்குரிய இஸ்ரவேலர் எண்ணிக்கையில் எப்படி பெருக வேண்டும்?
◻ ஆரம்ப கிறிஸ்தவர்களுக்கு “இனிமேல் வரும் காலம் குறுகிய”தாக இருந்தது எப்படி?
◻ ஜலப்பிரளயத்துக்கு முன்னால் நோவாவின் குமாரர்களும், அவர்களுடைய மனைவிகளும் பிள்ளைகளின்றி இருந்தார்கள் என்பதற்கு என்ன காரணங்கள் இருந்திருக்கக்கூடும்? இன்றைய நிலை என்ன?
[கேள்விகள்]
1. பிள்ளைப்பேறு குறித்து பைபிள் எவ்விதம் பேசுகிறது?
2. பெரிய குடும்பங்களைக் கொண்டிருப்பது ஈசாக்கு, யாக்கோபு வழியில் ஆபிரகாமின் சந்ததியினர் மத்தியில் ஏன் அதிகமாக விரும்பப்பட்டது?
3. சாலொமோனின் நாட்களில் இஸ்ரவேலில் நிலைமை என்னவாக இருந்தது?
4, 5. (எ) இஸ்ரவேல் சரித்திரத்தில் பிள்ளைப்பேறு ஏன் எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரியதாய் இருக்கவில்லை? (பி) எருசலேமில் குறைந்தபட்சம் இரண்டு சமயங்களில் இருதயத்தைப் பிளக்கும் வேதனைமிகுந்த என்ன காட்சிகள் காணப்பட்டன?
6, 7. (எ) கிறிஸ்தவர்களுக்கு முன்னிருந்த எந்தப் பழக்கத்தை இயேசு முடிவுக்குக் கொண்டு வந்தார்? (பி) ஆவிக்குரிய இஸ்ரவேல் எவ்வாறு வளரவேண்டியிருந்தது? இதை எது நிரூபிக்கிறது?
8. ஆரம்பக்கால கிறிஸ்தவர்களில் பலர் விவாகஞ்செய்து பிள்ளைகளைக் கொண்டிருந்தார்கள் என்பதை எது காண்பிக்கிறது?
9. பவுல் அப்போஸ்தலனின்படி, சில பெண்கள் பிள்ளைப்பேற்றால் எவ்விதம் பாதுகாக்கப்படுவார்கள்? ஆனால் கூடுதலாக அவர்களுக்கு என்ன காரியமும் தேவைப்படும்?
10. கொரிந்தியருக்கு எழுதிய தன்னுடைய முதல் கடிதத்தில் பவுல் விதவைகளுக்கு என்ன வித்தியாசமான ஆலோசனையைக் கொடுத்தான்?
11. (எ) விவாகம் செய்கிறவர்கள் எதை அனுபவிப்பார்கள்? 1 கொரிந்தியர் 7:28-ன் பேரில் ஓரக்குறிப்பு இந்தக் காரியத்தில் எவ்விதம் கூடுதல் தெளிவு தருகிறது? (பி) “நீங்கள் தப்ப வேண்டுமென்று இருக்கிறேன்,” என்று குறிப்பிட்டதில் பவுல் அர்த்தப்படுத்தினது என்ன?
12. விவாகமான கிறிஸ்தவர்களுக்குப் பவுல் அப்போஸ்தலன் என்ன ஆலோசனை கொடுத்தான்? காரணம் என்ன?
13. எந்த அர்த்தத்தில் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு “இனிவரும் காலம் குறுகினதாய்” இருந்தது?
14. (எ) மத்தேயு 24:19 எவ்விதம் விளங்கிக்கொள்ளப்பட வேண்டும்? (பி) பொ.ச. 66 நெருங்கிவர, இயேசுவின் எச்சரிப்பு எவ்விதம் கூடுதல் அவசரத்தன்மையுடையதாய் இருந்தது?
15, 16. (எ) இன்று வாழும் கிறிஸ்தவர்களுக்கு எப்படி “இனிவரும் காலம் குறுகினதாய்” இருக்கிறது? (பி) கிறிஸ்தவர்கள் தங்களைத் தாங்களே என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?
17. (எ) நோவாவும் அவனுடைய குமாரர்களும் ஜலப்பிரளயத்திற்கு முன்பு செய்து முடிக்க வேண்டிய என்ன வேலையைக் கொண்டிருந்தார்கள்? (பி) ஜலப்பிரளயத்திற்கு முன்னான காலத்தில் நோவாவின் குமாரர்களும் அவர்களுடைய மனைவிகளும் அநேகமாய் என்ன காரணங்களுக்காகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளாமல் இருந்திருக்கக்கூடும்?
18. நோவாவின் குமாரர்களும் அவர்களுடைய மனைவிகளும் எடுத்த இந்த நடவடிக்கை ஒரு விதிமுறையாக அமையாவிட்டாலும் எவ்விதம் நம்முடைய சிந்தனைக்கு உணவாக அமைகிறது?
19. (எ) நம்முடைய காலங்கள் எப்படி நோவாவின் நாட்களுக்கு ஒப்பாக இருக்கிறது? (பி) பவுல் “கடைசி நாட்களுக்கு” முன்னறிவித்தது என்ன? அவனுடைய தீர்க்கதரிசனம் பிள்ளைப்பேற்றுக்கு எவ்விதம் சம்பந்தப்படுகிறது?
20. அடுத்த பிரதியில் வரும் கட்டுரையில் என்ன சிந்திக்கப்படும்?
[பக்கம் 25-ன் படம்]
எருசலேமிலிருந்து வேகமாக தப்பியோடுவது சிறு பிள்ளைகளையுடையவர்களுக்கு அதிக கடினமாக இருக்கும்