அதிகாரம் 29
குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்குதல்
யெகோவா தேவன் முதல் மனிதனையும் மனுஷியையும் படைத்தபோது, அவர்கள் குடும்பத்தைப் பிறப்பிக்கும்படி அவர்களை ஒன்றாக இணைத்தார். (ஆதியாகமம் 2:21-24; மத்தேயு 19:4-6) திருமணத்தில் இணைக்கப்பட்ட இந்தத் தம்பதிகள் பிள்ளைகளைப் பிறப்பிப்பதன் மூலம் பெருகவேண்டுமென்பது கடவுளுடைய நோக்கமாயிருந்தது. பின்பு, அந்தப் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகையில், அவர்கள் மணம் செய்து தங்களுடைய சொந்தக் குடும்பங்களை உண்டுபண்ணவேண்டும். காலப்போக்கில், பூமியின் எல்லா பாகத்திலும் மகிழ்ச்சியுள்ள குடும்பங்கள் வாழவேண்டுமென்பது கடவுளுடைய நோக்கமாயிருந்தது. அவர்கள் இந்தப் பூமி முழுவதையும் அழகிய பரதீஸாக்குவார்கள்.—ஆதியாகமம் 1:28.
2 என்றபோதிலும், இன்று, குடும்பங்கள் பிளவுபட்டுக் கொண்டிருக்கின்றன, பிளவுபடாமல் இன்னும் ஒன்றாய் வாழ்ந்துகொண்டிருக்கிற குடும்பங்களில் பல மகிழ்ச்சியற்றவையாய் இருக்கின்றன. ஆகவே ஒருவன் பின்வருமாறு கேட்கக்கூடும்: ‘இந்தக் குடும்பம் உண்மையில் கடவுளால் படைக்கப்பட்டதென்றால், மேம்பட்ட விளைவுகளை நாம் எதிர்பார்க்க வேண்டுமல்லவா? என்றபோதிலும், குடும்பத் தோல்விகளுக்காகக் கடவுளைக் குற்றப்படுத்த முடியாது. ஓர் உற்பத்தியாளன் ஒரு பொருளை உற்பத்தி செய்து, அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதன் பேரில் கட்டளைகளையும் அதோடு கொடுப்பான். அதை வாங்குகிறவன் அந்தக் கட்டளைகளைப் பின்பற்றாததன் காரணமாக அந்த உற்பத்திப் பொருள் சரியாய் இயங்கத் தவறுகிறதென்றால், அது அந்த உற்பத்தியாளனின் தவறாகுமா? இல்லவே இல்லை. அந்த உற்பத்திப் பொருள், பரிபூரண இயல்புடையதாக இருக்கிறதென்றாலுங்கூட, அது சரியானபடி பயன்படுத்தப்படாததனால் தளர்ந்து இயங்காமற் போகும். குடும்பத்தைக் குறித்ததிலும் அவ்வாறே இருக்கிறது.
3 குடும்ப வாழ்க்கையின் பேரில் தேவையான புத்திமதிகளை யெகோவா தேவன் பைபிளில் கொடுத்திருக்கிறார். இந்தக் கட்டளைகள் பொருட்படுத்தப்படாமல் விடப்பட்டால், அப்பொழுது என்ன நடக்கும்? இந்தக் குடும்ப ஏற்பாடு பரிபூரணமாயிருக்கிறபோதிலும், அது பிளந்து பிரிவுறக்கூடும். அந்தக் குடும்ப அங்கத்தினர் சந்தோஷமாய் இருக்கமாட்டார்கள். மறுபட்சத்தில் பைபிளிலுள்ள இந்த வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டால், இது வெற்றிகரமான மகிழ்ச்சியுள்ள குடும்பத்தை உண்டாக்கும். ஆகவே, குடும்பத்தின் வெவ்வேறுபட்ட அங்கத்தினரைக் கடவுள் எப்படி உண்டாக்கினார் என்பதையும், அவர்கள் என்ன பாகங்களை நிரப்பும்படி அவர் நோக்கங் கொண்டார் என்பதையும் நாம் விளங்கிக் கொள்வது இன்றியமையாதது.
மனிதனையும் மனுஷியையும் கடவுள் எப்படிப் படைத்தார்
4 யெகோவா, ஆண்களையும் பெண்களையும் ஒரே விதமாய் உண்டாக்கவில்லை என்பதை எவரும் காணக்கூடும். பல வழி வகைகளில் அவர்கள் ஒன்றுபோல் இருக்கின்றனர் என்பது மெய்யே. என்றாலும் அவர்களுடைய உடல் தோற்றத்திலும் பால் சம்பந்தப்பட்ட அமைப்பிலும் தெளிவான வேறுபாடுகள் இருக்கின்றன. மேலும், அவர்களுக்கு வெவ்வேறுபட்ட உணர்ச்சி வேகப் பண்புகள் இருக்கின்றன. ஏன் இந்த வேறுபாடுகள்? வெவ்வேறு பாகத்தை நிறைவேற்றுவதற்கு அவர்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும்படிக்கே கடவுள் அவர்களை அந்த முறையில் உண்டாக்கினார். கடவுள் மனிதனைப் படைத்த பின்பு, அவர் பின்வருமாறு கூறினார்: “மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்.”—ஆதியாகமம் 2:18.
5 ஏற்ற என்பது மற்றொன்றோடு ஒத்திணைந்து அல்லது சரியாய்ப் பொருத்தி அதை முழுமையாக்குகிற ஒன்றாகும். பூமியைக் குடியேற்றுவித்து அதைக் கவனித்துக் காக்கும்படி கடவுள் கொடுத்த இந்தக் கட்டளைகளை நிறைவேற்றுவதில் மனிதனுக்கு உதவி செய்யும்படி, கடவுள் மனுஷியை மனிதனுக்குத் திருப்தி செய்யும் இணையாக உண்டாக்கினார். ஆகவே மனிதனின் ஒரு பாகத்திலிருந்து மனுஷியைப் படைத்த பின்பு, ‘அவனை மனுஷனிடத்தில் கொண்டு வருவதன்’ மூலம், அங்கே ஏதேன் தோட்டத்தில், கடவுள் அந்த முதல் திருமணத்தை நடப்பித்தார். (ஆதியாகமம் 2:22; 1 கொரிந்தியர் 11:8, 9) திருமணம் ஒரு சந்தோஷமான ஏற்பாடாக இருக்கக்கூடும், ஏனென்றால் மனிதனும் மனுஷியுமாகிய அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவர் மற்றவருடையதை நிறைவு செய்யக் கூடிய ஒரு தேவையுடன் உண்டாக்கப்பட்டனர். அவர்களுடைய வேறுபட்ட பண்புகள் ஒன்றுக்கொன்று சரியீடு செய்துகொள்கின்றன. ஒரு கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் விளங்கிக் கொண்டு, மதித்துணர்ந்து, தங்களுடைய நியமிக்கப்பட்ட பாகங்களுக்குக்கிசைய ஒத்துழைக்கையில், ஒரு சந்தோஷமான வீட்டைக் கட்டுவதில் அவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கைச் செய்கிறார்கள்.
கணவனின் பங்கு
6 மணவாழ்க்கைக்கு அல்லது ஒரு குடும்பத்துக்குத் தலைமைவகிப்பு தேவைப்படுகிறது. இப்படிப்பட்ட தலைமைவகிப்பைக் கொடுப்பதற்குத் தேவைப்படும் அதிக அளவான பண்புகளுடனும் ஆற்றல்களுடனும் மனிதன் படைக்கப்பட்டான். இந்தக் காரணத்தினிமித்தமாக பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்.” (எபேசியர் 5:23) இது நடைமுறைக்குரியதாய் இருக்கிறது, ஏனெனில் தலைமை வகிப்பு இல்லாதபோது கலகமும் குழப்பமும் அங்கிருக்கிறது. ஒரு குடும்பம் தலைமை வகிப்பு இல்லாதிருப்பதானது ஒரு மோட்டார் வண்டியை, வழித் திருப்பும் இயக்கு பிடி இல்லாமல் ஓட்ட முயலுவதைப்போல் இருக்கும். அல்லது, மனைவி அப்படிப்பட்ட தலைமை வகிப்புடன் போட்டியிடுகிறாளென்றால், அந்த மோட்டார் வண்டியில் ஒரே நேரத்தில் இருவர் ஓட்டுபவராகவும் அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி வழிதிருப்பும் இயக்கு பிடியை உடையவர்களாய், அந்த இயக்கு பிடிகள் ஒவ்வொன்றும் வண்டியின் ஒவ்வொரு முன்சக்கரத்தைத் தனித் தனியே இயக்கிக் கொண்டும் இருப்பதைப் போலிருக்கும்.
7 என்றபோதிலும், ஓர் ஆண், அந்தக் குடும்பத்தின் தலையாக இருக்க வேண்டுமென்ற இந்த அபிப்பிராயத்தைப் பெண்கள் பலர் விரும்புகிறதில்லை. இதற்கு ஒரு முக்கிய காரணமானது, எப்படிச் சரியான தலைமை வகிப்பைச் செலுத்துவது என்பதன் பேரில் கொடுக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய கட்டளைகளைக் கணவர்கள் பலர் பின்பற்றாமல் இருந்திருப்பதேயாகும். இருந்தபோதிலும், எந்த அமைப்பாவது நன்றாய் இயங்க வேண்டுமானால் யாராவது ஒருவர் வழிநடத்துதலைக் கொடுக்கவும் முடிவான தீர்மானங்களைச் செய்யவும் வேண்டுமென்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையேயாகும். இவ்வாறாக பைபிள் ஞானமாய்ப் பின்வருமாறு கூறுகிறது: ‘ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறார், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறான், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறார்.’ (1 கொரிந்தியர் 11:3) கடவுளுடைய ஏற்பாட்டில், கடவுள் ஒருவருக்கே தலையாக எவருங் கிடையாது. மற்ற எல்லோரும், இயேசு கிறிஸ்துவும் உட்பட, புருஷரும் மனைவிகளும் வழிநடத்துதலை ஏற்கவும் மற்றவர்களுடைய தீர்மானங்களுக்குத் தங்களைக் கீழ்ப்படுத்தவும் வேண்டும்.
8 இது ஆண்கள், கணவர்களாக தங்கள் பாகத்தை நிறைவேற்றுவதற்கு, கிறிஸ்துவின் தலைமை வகிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அர்த்தங்கொள்ளுகிறது. மேலும், அவர்கள் கிறிஸ்து தம்மைப் பின்பற்றுகிறவர்களாகிய தம்முடைய சபையின் மேல் தலைமைத் தாங்கினபடியே, தங்கள் மனைவிகளின் மேல் தலைமைத் தாங்குவதன் மூலம் அவருடைய மாதிரியைப் பின்பற்ற வேண்டும். பூமியில் தம்மைப் பின்பற்றினவர்களைக் கிறிஸ்து எப்படி நடத்தினார்? எப்பொழுதும் கனிவான முறையில் அவர்கள் நலத்தை எண்ணிப் பார்க்கிறவராய் நடத்தினார். அவர் ஒருபோதும் கடுமையாகவோ எளிதில் கோபங் கொள்ளுபவராகவோ இருக்கவில்லை, தம்முடைய வழி நடத்துதலை ஏற்பதில் அவர்கள் மந்தமாக இருந்தபோதுங்கூட அவ்வாறு இருக்கவில்லை. (மாற்கு 9:33-37; 10:35-45; லூக்கா 22:24-27; யோவான் 13:4-15) உண்மையில், அவர்களுக்காகத் தம்முடைய உயிரை அவர் மனமுவந்து கொடுத்தார். (1 யோவான் 3:16) கிறிஸ்தவ கணவனானவன் கிறிஸ்துவின் முன்மாதிரியைக் கவனமாய்ப் படித்து, தன்னுடைய குடும்பத்தை நடத்துவதில் அதைப் பின்பற்றுவதற்குத் தன்னாலான முழு முயற்சியைச் செய்ய வேண்டும். இதன்பலனாக, அவன், அடக்கி அதிகாரம் செலுத்தும் தன்னலமுள்ள, அல்லது பிறருணர்ச்சியைக் கருதாத குடும்பத் தலைவனாக இரான்.
9 என்றபோதிலும், மறுபட்சத்தில், கணவர்கள் பின்வருவதைக் கவனிக்க வேண்டும்: நீங்கள் குடும்பத் தலைவனாக உண்மையில் நடந்து கொள்ளுகிறதில்லை என்று உங்கள் மனைவி குறை சொல்லுகிறாளா? குடும்ப நடவடிக்கைகளைத் திட்டமிட்டு முடிவான தீர்மானங்களைச் செய்யும் இந்த உத்தரவாதத்தை ஏற்று செயல்படுவதில் நீங்கள் தலைமை தாங்குவதில்லை என்று அவள் சொல்லுகிறாளா? என்றபோதிலும், ஒரு கணவனாக, இதைச் செய்யும்படியே கடவுள் உங்களிடம் எதிர்பார்க்கிறார். நிச்சயமாகவே, நீங்கள் தலைமை செலுத்துகையில் குடும்பத்தின் மற்ற அங்கத்தினரின் யோசனைகளையும் விருப்பங்களையும் கருதி, அவர்களுடைய ஆலோசனைகளைக் கவனத்துக்குள் ஏற்று எண்ணிப் பார்ப்பது உங்கள் பங்கில் ஞானமாயிருக்கும். கணவனாக, குடும்பத்தில் உங்களுக்கே அதிகக் கடினமான பங்கு இருக்கிறதென்பது தெளிவாயிருக்கிறது. ஆனால் அதை நிறைவேற்ற நீங்கள் உள்ளப் பூர்வமான முயற்சி எடுப்பீர்களானால், உங்களுக்கு உதவியையும் ஆதரவையும் கொடுக்க உங்கள் மனைவி பெரும்பாலும் மனம் சாய்பவளாக இருப்பாள்.—நீதிமொழிகள் 13:10; 15:22.
மனைவியின் பாகத்தை நிறைவேற்றுதல்
10 பைபிள் சொல்லுகிற பிரகாரம், பெண் தன் கணவனுக்குத் துணையாக உண்டாக்கப்பட்டாள். (ஆதியாகமம் 2:18) இந்தப் பாகத்துக்கு ஒத்திசைய, பைபிள்: “மனைவிகளே, . . . உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்,” என்று ஊக்குவிக்கிறது. (எபேசியர் 5:22) இன்று பெண்கள் ஆண்களைப் பகைமையுடன் தாக்குவதும், அவர்களோடு போட்டியிடுவதும் சாதாரண காரியங்களாய் விட்டன. ஆனால் மனைவிகள், தலைமை வகிப்பைத் தாங்கள் கைப்பற்றிக் கொள்ள முயன்று முட்டி முன் செல்கையில், அவர்களுடைய செயல் பெரும்பாலும் நிச்சயமாய்த் தொந்தரவை விளைவிக்கும். பல கணவர்கள், செயல் முறையளவில் பின்வருமாறு சொல்லுகின்றனர்: ‘குடும்பத்தை நடத்த அவள் விரும்புகிறாளென்றால் அவள் அவ்வாறே முன்சென்று நடத்தட்டும்.’
11 என்றபோதிலும், உங்கள் கணவர் தலைமை வகிப்பை ஏற்காததால், நீங்கள் அதை ஏற்கும்படியான வலுக்கட்டாய நிலையில் இருப்பதாக நீங்கள் ஒருவேளை உணரலாம். ஆனால் குடும்பத்தின் தலையாகத் தன் பொறுப்புகளை அவர் ஏற்று நிறைவேற்றுவதற்கு அவருக்கு உதவி செய்ய அதிகப்படியானதை நீங்கள் செய்யக் கூடுமா? தலைமை ஏற்று வழிநடத்துதலைத் தரும்படியாக நீங்கள் அவரை நோக்கியிருக்கிறீர்கள் என்று காட்டுகிறீர்களா? அவருடைய ஆலோசனைகளுக்காகவும் வழி நடத்துதலுக்காகவும் நீங்கள் அவரைக் கேட்கிறீர்களா? அவர் செய்வதை எந்த முறையிலாவது சிறுமைப்படுத்துவதை நீங்கள் தவிர்க்கிறீர்களா? குடும்பத்தில் உங்களுக்குக் கடவுள் நியமித்திருக்கிற பங்கை நிறைவேற்றுவதற்கு நீங்கள் உண்மையில் உழைத்து வருகிறீர்களென்றால், அநேகமாய் உங்கள் கணவரும் தன் பங்கை வகிக்கத் தொடங்குவார்.—கொலோசெயர் 3:18, 19.
12 இது, மனைவி தன்னுடைய எண்ணங்கள் தன் கணவரின் எண்ணங்களிலிருந்து வேறுபடுகிறதென்றால் அவற்றை வெளிப்படுத்திக் கூறக்கூடாதென்று சொல்வதில்லை. அவளுக்கு ஒருவேளை சரியான நோக்குநிலை இருக்கக்கூடும், அவளுடைய கணவன் அவளுக்குச் செவிகொடுப்பானானால் அந்தக் குடும்பம் அதனால் நன்மையடையலாம். ஆபிரகாமின் மனைவியாகிய சாராள், தன் கணவனுக்குக் கீழ்ப்பட்டிருந்ததன் காரணமாக கிறிஸ்தவ மனைவிகளுக்கு ஒரு முன்மாதிரியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறாள். (1 பேதுரு 3:1, 5, 6) என்றபோதிலும், குடும்பப் பிரச்னை ஒன்றைத் தீர்ப்பதற்கான வழியை அவள் யோசனைக் கூறினாள், அவள் சான்னதை ஆபிரகாம் சம்மதிக்காதபோது கடவுள் அவனிடம்: “சாராள் உனக்குச் சொல்வதையெல்லாம் கேள்,” என்று சொன்னார். (ஆதியாகமம் 21:9-12, தி.மொ.) நிச்சயமாகவே, ஒரு காரியத்தின்பேரில் முடிவான தீர்மானத்தைக் கணவன் செய்கையில், அது மனைவி கடவுளுடைய சட்டத்தை மீறும்படி செய்கிறதில்லையென்றால், அவள் அதை ஆதரிக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 5:29.
13 தன் பாகத்தைச் சரியானபடி நிறைவேற்றுவதில், ஒரு மனைவி குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பில் தான் செய்யக்கூடிய அதிகம் இருக்கிறது. உதாரணமாக, அவள் சத்துள்ள உணவுகளைத் தயாரிக்கலாம், தன் வீட்டைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைக்கலாம், பிள்ளைகளுக்குப் போதனை கொடுப்பதில் பங்குகொள்ளலாம். மணமாகிய பெண்கள், ‘கடவுளின் வசனம் தூஷிக்கப்படாதபடி, தங்கள் புருஷரிடத்திலும் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும் நிதான புத்தியுள்ளவர்களும் கற்புள்ளவர்களும் வீட்டுவேலை செய்கிறவர்களும் நல்லவர்களும் தங்கள் புருஷருக்கு அடங்கி நடக்கிறவர்களுமாயிருக்கும்படி’ பைபிள் ஊக்குவிக்கிறது. (தீத்து 2:4, 5, தி.மொ.) இந்தக் கடமைகளை நிறைவேற்றுகிற மனைவியும் தாயுமானவள் தன்னுடைய குடும்பத்தின் நிலைவரமான அன்பையும் மரியாதையையும் பெறுபவளாவாள்.—நீதிமொழிகள் 31:10, 11, 26-28.
குடும்பத்தில் பிள்ளைகளுக்குரிய இடம்
14 ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்’ என்று யெகோவா அந்த முதல் மனிதத் தம்பதிகளுக்குக் கட்டளையிட்டார். (ஆதியாகமம் 1:28) ஆம், பிள்ளைகளைப் பிறப்பிக்கும்படி கடவுள் அவர்களுக்குச் சொன்னார். இந்தப் பிள்ளைகள் குடும்பத்துக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படியே கருதப்பட்டனர். (சங்கீதம் 127:3-5) அவர்கள் தங்கள் பெற்றோரின் சட்டங்களின் கீழும் கட்டளைகளின் கீழும் வருவதனால், பைபிள் ஒரு பிள்ளையின் நிலையை ஓர் அடிமையின் நிலைக்கு ஒப்பிடுகிறது. (நீதிமொழிகள் 1:8; 6:20-23; கலாத்தியர் 4:1) இயேசுவுங்கூட தாம் சிறு பிள்ளையாயிருக்கையில் தம்முடைய பெற்றோருக்குக் கீழ்ப்பட்டிருந்தார். (லூக்கா 2:51) இது, அவர்கள் கட்டளையிட்டவற்றைச் செய்துகொண்டு அவருக்குக் கீழ்ப்படிந்து வந்தார் என்று அர்த்தங் கொள்ளுகிறது. எல்லா பிள்ளைகளும் அவ்வாறே செய்து வருவார்களேயானால், அது மெய்யாகவே குடும்ப சந்தோஷத்திற்கு உதவி செய்யும்.
15 குடும்பத்துக்கு ஆசீர்வாதமாக இருப்பதற்கு மாறாக இன்று பிள்ளைகள் பெற்றோருக்கு இருதய வேதனையை உண்டாக்குவதற்கு மூலகாரணமாக அடிக்கடி இருக்கின்றனர். ஏன்? பிள்ளைகளும், பெற்றோருங்கூட, குடும்ப வாழ்க்கையின் பேரில் கொடுக்கப்பட்டிருக்கும் பைபிளின் போதனைகளைத் தங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிக்கத் தவறுவதே இதற்குக் காரணமாயிருக்கிறது. கடவுளுடைய இந்தச் சட்டங்களும் நியமங்களுமானவற்றில் சில யாவை? பின்வரும் பக்கங்களில் இவற்றில் சிலவற்றை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். அவ்வாறு செய்கையில் அவற்றைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம், உங்கள் குடும்பத்தில் சந்தோஷம் இருப்பதற்கும் நீங்கள் உங்கள் பங்காக உதவி செய்யக்கூடும் என்பதை ஒப்புக்கொள்ளுகிறீர்களா இல்லையா என்று பாருங்கள்.
உங்கள் மனைவியை நேசித்துக் கனப்படுத்துங்கள்
16 தெய்வீக ஞானத்துடன் பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூர வேண்டும்.” (எபேசியர் 5:28-30) மனைவிகள் சந்தோஷமாயிருப்பதற்கு, தாங்கள் நேசிக்கப்படுகிறார்கள் என்று அவர்கள் உணருவது அவசியமாயிருக்கிறதென்று அடிக்கடி, அனுபவத்தால் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது, கணவன் தன்னுடைய மனைவிக்குக் கனிவு, புரிந்துகொள்ளுதல், நம்பிக்கையூட்டுதல் ஆகியவை உட்பட, தனிப்பட்ட கவனத்தைக் கொடுக்க வேண்டுமென்று பொருள் கொள்ளுகிறது. பைபிள் சொல்லுகிற பிரகாரம் அவன் அவளுக்குக் “கனத்தைச் செலுத்த” வேண்டும். இதை அவன், தான் செய்கிற எல்லாவற்றிலும் அவளைக் கவனத்தில் வைவ்து செய்வதன் மூலம் செலுத்துகிறான். இந்த முறையில் அவன் அவளுடைய மரியாதையைச் சம்பாதித்துக் கொள்ளுகிறான்.—1 பேதுரு 3:7.
உங்கள் கணவருக்கு மரியாதை கொடுங்கள்
17 மனைவிகளைப் பற்றியதென்ன? “மனைவி தன் புருஷனிடத்தில் ஆழ்ந்த மரியாதை உடையவளாக இருக்க வேண்டும்,” என்று பைபிள் சொல்லுகிறது. (எபேசியர் 5:33, NW) இந்த அறிவுரைக்குச் செவிகொடுக்கத் தவறுவதே, சில கணவர்கள் தங்கள் மனைவிகளிடம் மனக்கசப்பு கொள்வதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மனைவியானவள் தன் கணவனின் தீர்மானங்களை ஆதரிப்பதன் மூலமும், குடும்பக் குறிக்கோள்களை முயன்று அடைவதற்கு அவனோடு முழு ஆத்துமாவுடன் ஒத்துழைப்பதன் மூலமும் மரியாதை காட்டுகிறாள். தன் கணவனுக்கு ‘ஏற்ற துணையாக’ இருக்கிற, பைபிள்-நியமித்த அவளுடைய பாகத்தை நிறைவேற்றுவதில், அவள், தனது கணவன் தன்னை நேசிப்பதை எளிதாக்குகிறாள்.—ஆதியாகமம் 2:18.
ஒருவருக்கொருவர் உண்மையாயிருங்கள்
18 “கணவர்களும் மனைவிகளும் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்,” என்று பைபிள் சொல்லுகிறது. கணவனுக்கு அது பின்வருமாறு சொல்லுகிறது: “உன் மனைவியோடு சந்தோஷமாயிரு; நீ மணம் செய்த அந்தப் பெண்ணில் உன் மகிழ்ச்சியைக் கண்டடைவாயாக . . . உன் அன்பை மற்றொரு பெண்ணுக்கு நீ ஏன் கொடுக்க வேண்டும்? மற்றொரு மனிதனுடைய மனைவியின் கவர்ச்சிகரங்களை நீ ஏன் விரும்பி தெரிந்து கொள்ள வேண்டும்?” (எபிரெயர் 13:4; நீதிமொழிகள் 5:18-20, டுடேஸ் இங்லிஷ் வெர்ஷன்) ஆம், விபசாரம் கடவுளுடைய சட்டத்துக்கு விரோதமானது; அது மணவாழ்க்கையில் தொந்தரவுக்கு வழிநடத்துகிறது. ஒரு “விபச்சார விவகாரம் மணவாழ்க்கைக்கு உயிர்ச்சுவை ஊட்டக்கூடுமென்று பலர் எண்ணுகின்றனர்,” என்றாலும் ஒரு விவகாரம் “உண்மையான பிரச்னைகளுக்கு” எப்பொழுதும் வழி நடத்துகிறதென்று திருமண ஆய்வாளர் கூறினாள்.—நீதிமொழிகள் 6:27-29, 32.
உங்கள் துணையின் இன்பத்தைத் தேடுங்கள்
19 ஒருவர் பாலுறவு இன்பத்தை முக்கியமாய்த் தனக்காகவே தேடுகையில் சந்தோஷம் உண்டாகிறதில்லை. அதற்கு மாறாக, தன் துணையையும் பிரியப்படுத்த தேடுவதன் மூலமே சந்தோஷம் கிடைக்கிறது. பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “புருஷன் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.” (1 கொரிந்தியர் 7:3) அழுத்தமானது செய்வதில் (செலுத்துவதில், NW) கொடுப்பதில் இருக்கிறது. கொடுப்பதன்மூலம் கொடுப்பவரும் உண்மையான இன்பம் பெறுகிறார். இது இயேசு பின்வருமாறு சொன்னபடியே இருக்கிறது: “வாங்குவதில் இருக்கிறதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக மகிழ்ச்சி இருக்கிறது.”—அப்போஸ்தலர் 20:35, NW.
உங்களைத்தானே உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுங்கள்
20 சுமார் எட்டு வயது பிள்ளை கூறினான்: “என் அப்பா எல்லா நேரமும் வேலை செய்து கொண்டிருக்கிறார். வீட்டில் இருப்பதேயில்லை. அவர் எனக்குப் பணமும் ஏராளமான விளையாட்டுப் பொருட்களும் தருகிறார், ஆனால் நான் அவரைப் பார்ப்பதே அரிது. நான் அவரை நேசிக்கிறேன், நான் அவரை அதிகமாய்ப் பார்க்கக்கூடும்படியாக அவர் எல்லா நேரமும் வேலை செய்யாதிருப்பதை விரும்புகிறேன்.” ‘அவர்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும்,’ தங்கள் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டுமென்ற பைபிள் கட்டளையைப் பெற்றோர் பின்பற்றுகையில் வீட்டு வாழ்க்கை ஆ, எவ்வளவு மேம்பட்டதாய் இருக்கிறது! உங்களைத்தானே உங்கள் பிள்ளைகளுக்குக் கொடுத்து, அவர்களோடு நல்ல நேரத்தைச் செலவிடுவது குடும்ப சந்தோஷத்திற்கு நிச்சயமாய் உதவி செய்யும்.—உபாகமம் 11:19; நீதிமொழிகள் 22:6.
தேவைப்படும் சிட்சையைக் கொடுங்கள்
21 நம்முடைய பரலோகத் தகப்பன் தம்முடைய ஜனங்களுக்குத் திருத்தும் படிப்பினையை, அல்லது சிட்சையை அளிப்பதன்மூலம், பெற்றோருக்குச் சரியான ஒரு முன்மாதிரியை வைக்கிறார். பிள்ளைகளுக்குச் சிட்சை தேவை. (எபிரெயர் 12:6; நீதிமொழிகள் 29:15) இதை உணர்ந்து, பைபிள் பின்வருமாறு அறிவுறுத்திக் கூறுகிறது: “தகப்பன்மாரே, நீங்கள் உங்கள் பிள்ளைகளை . . . யெகோவாவின் சிட்சையிலும் அதிகாரப்பூர்வமான ஆலோசனையிலும் . . . வளர்த்து வாருங்கள்.” சிட்சிப்பது—பிட்டத்தில் அடிகொடுப்பது அல்லது ஏதோ சிலாக்கியங்களை எடுத்துவிடுவது—பெற்றோர் தங்கள் பிள்ளைகளை நேசிக்கிறார்கள் என்பதற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கிறது. பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “[தன் மகனில்] அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கெனவே தண்டிக்கிறான்.”—எபேசியர் 6:4, NW; நீதிமொழிகள் 13:24, NW; 23:13, 14.
இளைஞரே, உலகப் போக்குகளைத் தவிர்த்திருங்கள்
22 இளைஞர் கடவுளுடைய சட்டங்களை மீறும்படி செய்விக்க இந்த உலகம் முயற்சி செய்கிறது. மேலும், பைபிள் சொல்லுகிற பிரகாரம், “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்.” (நீதிமொழிகள் 22:15) ஆகவே சரியானதைச் செய்வது ஒரு போராட்டமாக இருக்கிறது. என்றபோதிலும் பைபிள் பின்வருமாறு சொல்லுகிறது: “பிள்ளைகளே உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படிவது உங்களுடைய கிறிஸ்தவ கடமை, ஏனெனில் இதுவே செய்யவேண்டிய சரியான காரியம்.” இது நிறைவான பலன்களைக் கொண்டுவரும். ஆகவே, பிள்ளைகளே, ஞானமுள்ளவர்களாயிருங்கள். “நீ இன்னும் இளைஞனாக இருக்கையிலேயே உன் சிருஷ்டிகரை நினை,” என்ற இந்த அறிவுரைக்குச் செவிகொடுங்கள். போதை பொருட்களை உட்கொள்ளுவதற்கும், குடிவெறிக்குட்படுவதற்கும், வேசித்தனம் செய்வதற்கும், கடவுளுடைய சட்டங்களுக்கு விரோதமான மற்றக் காரியங்களைச் செய்வதற்கும் ஏற்படும் சோதனைகளுக்கு இடமளிக்காமல் அவற்றைத் தவிர்த்திருங்கள்.—எபேசியர் 6:1-4; பிரசங்கி 12:1; நீதிமொழிகள் 1:10-19, டுடேஸ் இங்லிஷ் வெர்ஷன்.
பைபிளை ஒன்றுசேர்ந்து படியுங்கள்
23 குடும்பத்தின் ஓர் அங்கத்தினர் பைபிளைப் படித்து அதன் போதகங்களைப் பொருத்திப் பிரயோகித்தால், அது குடும்ப சந்தோஷத்திற்கு உதவி செய்யும். ஆனால், கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகிய எல்லோரும் அப்படிச் செய்வார்களேயானால் அந்தக் குடும்பம் ஆ, எத்தகைய ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு குடும்பமாயிருக்கும்! யெகோவா தேவனைச் சேவிக்கும்படி குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு உதவி செய்ய முயலுகையில், அங்கே தடையற்ற பேச்சு தொடர்புடன், அனலான, நெருங்கிய உறவு இருக்கும். ஆகவே பைபிளை ஒன்றாகச் சேர்ந்து படிப்பதை ஓரு குடும்பப் பழக்கமாக்குங்கள்!—உபாகமம் 6:4-9; யோவான் 17:3.
குடும்பப் பிரச்னைகளை வெற்றிகரமாய்க் கையாளுதல்
24 பொதுவாய் சந்தோஷமாயிருக்கிற குடும்பங்களிலுங்கூட அவ்வப்போது பிரச்னைகள் இருக்கும். இது ஏனென்றால் நாம் எல்லோரும் அபூரணராய் இருக்கிறோம். தவறான காரியங்களைச் செய்கிறோம். “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்,” என்று பைபிள் சொல்லுகிறது. (யாக்கோபு 3:2) ஆகவே திருமணத் துணைவர்கள் ஒருவருக்கொருவர் பரிபூரணமாய் இருக்கும்படி வற்புறுத்திக் கேட்கக் கூடாது. அதற்குப் பதிலாக, ஒருவர் மற்றொருவருடைய தவறுகளை மன்னித்துப் பொறுத்துப் போக வேண்டும். ஆகவே, மணத் துணைவர்கள் இருவரும் பரிபூரண சந்தோஷமுள்ள மண வாழ்க்கையை எதிர்பார்க்கக்கூடாது, ஏனென்றால் இதை அடைவது அபூரண மக்களுக்குக் கூடாத காரியமாகும்.
25 நிச்சயமாகவே, கணவனும் மனைவியும் ஒருவர் மற்றவருக்கு எரிச்சலூட்டுகிற காரியத்தைத் தவிர்க்க முயலும்படி விரும்புவர். என்றபோதிலும் அவர்கள் எவ்வளவு கடினமாக முயன்றாலும் சரிதான், சில சமயங்களில் மற்றவரை நிலைகுலைவிக்கும் ஏதோ காரியங்களைச் செய்துவிடுகின்றனர். அப்படியானால், தொந்தரவுகள் எப்படிக் கையாளப்பட வேண்டும்? பைபிளின் அறிவுரையானது: “அன்பு திரளான பாவங்களை மூடும்,” என்பதே. (1 பேதுரு 4:8) இது, அன்பைக் காட்டுகிற துணைவர்கள் ஒருவர் மற்றவருடைய தவறுகளைத் தொடர்ந்து நினைப்பூட்டிக்கொண்டு இரார் என்று பொருள் கொள்ளுகிறது. செயல்முறையளவில், அன்பு இவ்வாறு சொல்லுகிறது. ‘ஆம், நீ ஒரு தவறைச் செய்தாய், ஆனால் நானுங்கூட சில சமயங்களில் அவ்வாறு செய்கிறேன். ஆகவே உன்னுடைய தவறை நான் பொருட்படுத்தாமல் விடுகிறேன். நீயும் எனக்கு அவ்வாறே செய்யலாம்.’—நீதிமொழிகள் 10:12; 19:11.
26 தம்பதிகள் தவறுகளை ஒப்புக் கொண்டு அவற்றைத் திருத்திக்கொள்ள மனமுள்ளவர்களாய் இருக்கையில், பல விவாதங்களும் இருதய வேதனைகளும் தவிர்க்கப்படக்கூடும். விவாதங்களில் வெற்றிபெற வேண்டுமென்பதல்ல, பிரச்னைகளைத் தீர்க்க வேண்டுமென்பதே அவர்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். உங்கள் துணையே தவறில் இருந்தாலும் சரி கனிவாக இருப்பதன் மூலம் அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதை எளிதாக்குங்கள். நீங்கள் தவறில் இருக்கிறீர்களென்றால், மன்னிப்புக் கேட்டுக் கொள்ளுங்கள். இதைத் தள்ளி வைக்காதேயுங்கள்; தாமதமில்லாமல் அந்தப் பிரச்னையை உடனே கையாளுங்கள். “சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது.”—எபேசியர் 4:26.
27 முக்கியமாய் நீங்கள் மணம் செய்தவர்களாக இருப்பீர்களானால், “அவனவன் தனக்கானவைகளையல்ல பிறருக்கானவைகளையும் நோக்க வேண்டும்.” என்ற இந்த விதியை நீங்கள் பின்பற்ற வேண்டும். (பிலிப்பியர் 2:4, தி.மொ.) பின்வரும் பைபிள் கட்டளைக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்: “நீங்கள் இரக்கமுள்ள மனது [கனிவான பாசம், NW] தயாளம், தாழ்மை, சாந்தம், நீடிய பொறுமை இவற்றைத் தரித்துக் கொண்டு ஒருவரையொருவர் பொறுத்து ஒருவன் மேல் ஒருவனுக்குக் குறையுண்டானால் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்; ஆண்டவர் [யெகோவா, NW] உங்களுக்கு மன்னித்ததுபோலவே நீங்களும் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின் மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக் கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:12-14, தி.மொ.
28 இன்று தம்பதிகள் பலர், கடவுளுடைய வார்த்தையிலுள்ள அறிவுரை தங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உதவிசெய்ய அனுமதிக்கிறதில்லை, அவர்கள் விவாகரத்துவையே தேடுகின்றனர். பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான வழியாக விவாகரத்து செய்வதைக் கடவுள் அங்கீகரிக்கிறாரா? இல்லை, அவர் அங்கீகரிக்கிறதில்லை. (மல்கியா 2:15, 16) திருமணம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் ஓர் ஏற்பாடாக இருக்கும்படியே அவர் கருதினார். (ரோமர் 7:2) ஒருவன் மறுபடியும் மணம் செய்து கொள்ளும்படி அவனை விடுதலையாக்குகிற ஒரு விவாகரத்து செய்வதற்கு ஒரே ஒரு காரணத்தை மாத்திரமே பைபிள் அனுமதிக்கிறது. அந்தக் காரணம் வேசித்தனமாகும் (கிரேக்கில் போர்னியா, பால் சம்பந்த படுமோசமான ஒழுக்கக்கேடு). வேசித்தனக் குற்றம் செய்யப்பட்டிருந்தால், அப்பொழுது குற்றமற்ற துணை விவாகரத்து செய்துகொள்வதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கலாம்.—மத்தேயு 5:32.
29 உங்கள் மணத்துணை உங்களுடன் கடவுளுடைய வார்த்தையைப் படிக்க மறுத்து விடுகிறார் என்றால், அல்லது உங்கள் கிறிஸ்தவ நடவடிக்கையை எதிர்க்கவுங்கூட செய்கிறாரென்றால் என்ன செய்வது? அப்பொழுது உங்கள் பிரச்னைகளிலிருந்து வெறியேறுவதற்கு எளிதான வழி பிரிந்து போவதே என்று நீங்கள் கருதாமல், உங்கள் துணையுடன் நிலைத்திருக்கும்படியே பைபிள் உங்களை ஊக்குவிக்கிறது. உங்கள் சொந்த நடத்தையைக் குறித்ததில் பைபிள் சொல்வதைப் பொருத்திப் பிரயோகிப்பதன் மூலம் உங்கள் வீட்டிலுள்ள அந்நிலைமையைச் சரிசெய்ய தனிப்பட்ட வண்ணமாய் உங்களால் கூடியதைச் செய்யுங்கள். காலப் போக்கில், உங்கள் கிறிஸ்தவ நடத்தையின் காரணமாக, உங்கள் துணையை நீங்கள் மனம் மாறச் செய்யக்கூடும். (1 கொரிந்தியர் 7:10-16; 1 பேதுரு 3:1, 2) உங்கள் அன்புள்ள பொறுமை இவ்வகையில் பலன்தருமானால் எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம் உங்களுடையதாயிருக்கும்!
30 இன்று குடும்பப் பிரச்னைகள் பல, பெரும்பாலும் பிள்ளைகள் உட்பட்டவையாயிருக்கின்றன. உங்கள் குடும்பத்தில் இவ்வாறு இருக்கிறதென்றால் என்ன செய்யலாம்? முதலாவது, பெற்றோராக நீங்கள் நல்ல முன்மாதிரியை வைக்க வேண்டும். இது ஏனென்றால், பிள்ளைகள் நீங்கள் சொல்பவற்றைப் பார்க்கிலும் நீங்கள் செய்பவற்றையே பின்பற்றுவதற்கு அதிகமாய் மனஞ்சாய்பவர்களாக இருப்பார்கள். உங்கள் செயல்கள் உங்கள் வார்த்தைகளிலிருந்து வேறுபடுகையில், சிறுவர்கள் அதை விரைவில் காண்பார்கள். ஆகவே, உங்கள் பிள்ளைகள் நல்ல கிறிஸ்தவ வாழ்கையை வாழவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களென்றால், நீங்கள் தாமே அந்த முன்மாதிரியை வைக்க வேண்டும்.—ரோமர் 2:21, 22.
31 மேலும், நீங்கள் உங்கள் பிள்ளைகளுடன், காரணங்கூறி விளக்குகிறவர்களாய்க் கலந்து பேசவேண்டும். ‘நீ வேசித்தனம் செய்யக்கூடாது, ஏனென்றால் அது தவறு,’ என்று வெறுமென இளைஞருக்குச் சொல்வது போதாது. வேசித்தனம் போன்ற இப்படிப்பட்ட காரியங்கள் தவறு என்று சொல்பவர் அவர்களுடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவன் தாமே என்பது அவர்களுக்குக் காண்பிக்கப்பட வேண்டும். (எபேசியர் 5:3-5; 1 தெசலோனிக்கேயர் 4:3-7) என்றாலும் இதுவுங்கூட போதுமானதல்ல, கடவுளுடைய சட்டங்களுக்கு அவர்கள் ஏன் கீழ்ப்படிய வேண்டும், இது எப்படி அவர்களுக்கு நன்மை பயக்கும் என்பதையும் காணும்படி பிள்ளைகள் உதவி செய்யப்பட வேண்டும். உதாரணமாக, ஓர் ஆணின் விந்துவும் ஒரு பெண்ணின் கருவும் ஒன்றிணைவதால் ஒரு மனிதக் குழந்தை உருவாகும். இந்த அதிசயமான முறைக்கு உங்கள் இளைஞனின் கவனத்தை நீங்கள் இழுத்துப் பின்வருமாறு கேட்கலாம்: ‘பிறப்பின் இந்த அற்புதத்தைக் கூடியதாக்கினவர், கடவுளால் கொடுக்கப்பட்ட தங்கள் இனப்பெருக்க வல்லமைகளை மனிதர் எப்படிப் பயன்படுத்த வேண்டுமென்பதை மிக நன்றாய் அறிந்திருப்பார் அல்லவா, நீ என்ன நினைக்கிறாய்?’ (சங்கீதம் 139:13-17) அல்லது இவ்வாறு நீங்கள் கேட்கலாம்: ‘வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியை அனுபவியாதபடி செய்யும் ஒரு சட்டத்தை நம்முடைய உன்னத சிருஷ்டிகர் இயற்றுவார் என்று நீ நினைக்கிறாயா? அதற்கு மாறாக, அவருடைய சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிவோமானால் நாம் மேலுமதிக சந்தோஷமாய் இருப்போமல்லவா?’
32 இப்படிப்பட்ட கேள்விகள், இனப் பெருக்க உறுப்புகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துகிற கடவுளுடைய சட்டங்களின்பேரில் காரணத்தோடு யோசனை செய்ய உங்கள் பிள்ளையைத் தொடங்கி வைக்கக்கூடும். அவனுடைய கருத்துக்களை வரவேற்பவர்களாயிருங்கள். அவை நீங்கள் விரும்பும் வண்ணம் இல்லையென்றால், கோபமடையாதேயுங்கள். உங்கள் பிள்ளையின் சந்ததி, பைபிளின் நீதியுள்ள போதகங்களிலிருந்து வெகு தூரம் விலகிப்போயிருக்கிறதென்பதை விளங்கிக்கொள்ளுங்கள், பின்பு அவனுடைய சந்ததியின் ஒழுக்கக்கேடான பழக்கச் செயல்கள் ஏன் ஞானமற்றவை என்பதை அவனுக்குக் காட்ட முயலுங்கள். ஒருவேளை, பாலுறவு ஒழுக்கக்கேடு, முறைகேடான பிறப்புகளுக்கு, மேக நோய்களுக்கு, அல்லது மற்றத் தொந்தரவுகளுக்கு வழி நடத்தியிருக்கிற தனிப்பட்ட உதாரணங்களைக் கவனிக்கும்படி, பிள்ளையின் கவனத்தை நீங்கள் இழுக்கலாம். இவ்வகையில், பைபிள் சொல்வது எவ்வளவு நியாயமானதும் சரியானதுமாய் இருக்கிறதென்பதைக் காணும்படி அவன் உதவி செய்யப்படுகிறான்.
33 முக்கியமாய், பூமியில் பரதீஸில் என்றும் வாழ்வதென்ற பைபிளில் ஆதாரங்கொண்ட இந்த நம்பிக்கை குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்க நமக்கு உதவி செய்யக்கூடும். ஏன் அப்படி? ஏனென்றால் கடவுளுடைய புதிய ஒழுங்குமுறையில் வாழ்வதற்கு நாம் உண்மையில் விரும்புகிறோமென்றால், அப்பொழுது எப்படி வாழும்படி நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோமோ அப்படியே இப்பொழுதும் வாழும்படி கடினமாக முயற்சி செய்வோம். இது, நாம் யெகோவா தேவனின் கட்டளைகளையும் வழிநடத்துதலையும் கவனமாய்ப் பின்பற்றுவோமென்று பொருள்கொள்ளுகிறது. இதன் பலனாகக், கடவுள் நம்முடைய தற்போதைய சந்தோஷத்தை நித்திய ஜீவனின் மகிழ்ச்சியனுபவத்தாலும் நமக்கு முன்னால் இருக்கிற நித்திய காலமெல்லாம் நிறைவான சந்தோஷத்துடனும் நிரப்பி மேன்மைப்படுத்துவார்.—நீதிமொழிகள் 3:11-18.
[கேள்விகள்]
1. (எ) குடும்பம் எப்படித் தொடங்கி வைக்கப்பட்டது? (பி) குடும்பத்தைக் குறித்த கடவுளுடைய நோக்கம் என்னவாக இருந்தது?
2, 3. (எ) குடும்பத் தோல்விகளுக்குக் கடவுளை ஏன் குற்றப்படுத்த முடியாது? (பி) வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை அனுபவித்து மகிழ எது அவசியமாய் இருக்கிறது?
4. (எ) ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடுகள் யாவை? (பி) கடவுள் ஏன் இப்படிப்பட்ட வேறுபாடுகளை உண்டாக்கினார்?
5. (எ) பெண் எப்படி ஆணுக்கு “ஏற்ற துணை”யாக உண்டாக்கப்பட்டாள்? (பி) இந்த முதல் திருமணம் எங்கே நடந்தது? (சி) திருமணம் ஏன் உண்மையில் சந்தோஷமான ஏற்பாடாக இருக்கக்கூடும்?
6. (எ) யார் குடும்பத்தின் தலையாக உண்டாக்கப்பட்டான்? (பி) இது ஏன் சரியானதும் நடைமுறையானதுமாய் இருக்கிறது?
7. (எ) சில பெண்கள் ஏன், ஆண் தலைமை வகிக்கும் இந்த அபிப்பிராயத்தை விரும்புகிறதில்லை? (பி) எல்லோருமே தலைமைக்குக் கீழ்ப்பட்டவர்களாக இருக்கிறார்களா? தலைமை வகிப்புக்குரிய கடவுளுடைய ஏற்பாடு ஏன் ஞானமுள்ள ஒன்றாய் இருக்கிறது?
8. (எ) தலைமைத் தாங்குவதில் கணவர்கள் யாருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டியவர்களாக இருக்கிறார்கள்? (பி) அந்த முன்மாதிரியிலிருந்து என்ன பாடங்களைக் கணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்?
9. (எ) மனைவிகள் பலர் என்ன குறை கூறுகிறார்கள்? (பி) தலைமைத் தாங்குகையில் கணவர்கள் எதை ஞானமாய் மனதில் வைக்க வேண்டும்?
10. (எ) மனைவிகள் என்ன போக்கைப் பின்பற்றும்படி பைபிள் ஊக்குவிக்கிறது? (பி) இந்தப் பைபிள் அறிவுரைக்கு மனைவிகள் செவிகொடுக்க தவறுகையில் என்ன நடக்கிறது?
11. (எ) தன் கணவன் தலைமை வகிப்பை ஏற்பதற்கு மனைவி எப்படி உதவி செய்யக்கூடும்? (பி) தனக்குக் கடவுள் நியமித்திருக்கிற பங்கை, மனைவி நிறைவேற்றி வருகிறாளென்றால், இது, அவளுடைய கணவன் பேரில் எவ்வகை பாதிப்பை உண்டுபண்ணக்கூடும்?
12. மனைவிகள், தங்களுடைய எண்ணங்கள், தங்கள் கணவர்களுடைய எண்ணங்களிலிருந்து வேறுபடுகிறபோதிலுங்கூட, அவற்றைச் சரியாகவே வெளிப்படுத்திக் கூறலாமென்று எது காட்டுகிறது?
13. ஒரு நல்ல மனைவி என்ன செய்துகொண்டிருப்பாள், இது அவளுடைய குடும்பத்தின்பேரில் என்ன பாதிப்பை உண்டுபண்ணும்?
14. (எ) குடும்பத்தில் பிள்ளைகளுடைய சரியான நிலை என்ன? (பி) இயேசுவின் முன்மாதிரியிலிருந்து பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
15. பிள்ளைகள் ஏன் அடிக்கடி தங்கள் பெற்றோருக்கு இருதய வேதனையை உண்டாக்குகிறவர்களாக இருக்கிறார்கள்?
16. கணவர்கள் என்ன செய்யும்படி கட்டளையிடப்படுகிறார்கள், இந்தக் கட்டளைகள் எப்படிச் சரியானபடி நிறைவேற்றப்படுகின்றன?
17. என்ன செய்யும்படி மனைவிகள் கட்டளையிடப்படுகிறார்கள், இதை அவர்கள் எப்படிச் செய்கிறார்கள்?
18. மணத் துணைவர்கள் ஏன் ஒருவருக்கொருவர் உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும்?
19. பாலுறவுகளிலிருந்து மிக அதிக மகிழ்ச்சி அனுபவத்தை மணத்துணைவர்கள் எப்படி அடையக்கூடும்?
20. தங்கள் பிள்ளைகளுடன் சேர்ந்து காரியங்களைச் செய்வது ஏன் அவ்வளவு முக்கியமானது?
21. பிள்ளைகளுக்குச் சிட்சைக் கொடுப்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது?
22. இளைஞர்கள் என்ன செய்ய கடமைப்பட்டிருக்கிறார்கள்? அதை நிறைவேற்றுவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
23. பைபிளை ஒன்றுசேர்ந்து படிப்பதன் மூலம் என்ன நன்மைகளைக் குடும்பங்கள் அனுபவித்து மகிழும்?
24. மணத் துணைவர்கள் ஏன் ஒருவர் மற்றவருடைய தவறுகளை மன்னித்துப் பொறுத்துப் போக வேண்டும்?
25. மண வாழ்க்கையில் ஏற்படும் தொந்தரவுகள் எப்படி அன்பில் தீர்க்கப்பட வேண்டும்?
26. ஏதாவது தொந்தரவு எழும்புகையில், அந்தக் காரியத்தைச் சரிசெய்து கொள்வதற்கு எது உதவி செய்யும்?
27. பைபிளின் எந்த அறிவுரையைப் பின்பற்றுவது விவாகத் துணைவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள உதவி செய்யும்?
28. (எ) மண வாழ்க்கையில் உண்டாகும் பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வதற்கு விவாகரத்து வழியாகுமா? (பி) மறுபடியும் மணம் செய்து கொள்ளும்படி ஒருவரை விடுதலையாக்குகிற விவாகரத்து செய்வதற்கு ஒரே காரணம் என்னவென்று பைபிள் சொல்லுகிறது?
29. (எ) கிறிஸ்தவ வணக்கத்தில் உங்களோடு உங்கள் மணத் துணை சேர்ந்துகொள்வதில்லை என்றால், நீங்கள் என்ன செய்யவேண்டும்? (பி) அதன் பலன் ஒருவேளை என்னவாக இருக்கக்கூடும்?
30. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஒரு நல்ல முன்மாதிரியை வைப்பது ஏன் முக்கியமானது?
31. (எ) தங்கள் பெற்றோரின் அறிவுரைக்குப் பிள்ளைகள் கீழ்ப்படிய என்ன அதிக முக்கியமான காரணம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது? (பி) வேசித்தனம் செய்யக் கூடாதென்று கட்டளையிடுகிற கடவுளுடைய சட்டத்துக்கு கீழ்ப்படிவதன் ஞானத்தை உங்கள் இளைஞனுக்கு நீங்கள் எப்படிக் காட்டலாம்?
32. (எ) உங்கள் பிள்ளையின் கருத்துக்கள் கடவுளுடைய கருத்துக்களுடன் இசைந்தில்லை என்றால் உங்களுடைய மனநிலை என்னவாயிருக்க வேண்டும்? (பி) பைபிள் சொல்வதன் ஞானத்தைக் காண உங்கள் பிள்ளை எப்படி உதவி செய்யப்படலாம்?
33. பூமியில் பரதீஸில் என்றும் வாழ்வதென்ற, பைபிளில் அடிப்படை கொண்ட இந்த நம்பிக்கை ஏன் குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக்க நமக்கு உதவி செய்யக்கூடும்?