வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜனவரி 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 18-19
“ஒழுக்க விஷயத்தில் சுத்தமாக இருங்கள்”
சாத்தானுடைய ஒரு கண்ணியிலிருந்து நம்மை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?
இஸ்ரவேலுக்குப் பக்கத்திலிருந்த தேசங்கள் செய்த அசுத்தமான செயல்களைப் பட்டியலிட்டபோது, யெகோவா இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொன்னார்: “நான் உங்களைக் கூட்டிக்கொண்டு போகிற கானான் தேசத்தில் இருக்கிறவர்களைப் போல நடந்துகொள்ளக் கூடாது. . . . அவர்களுடைய தேசம் அசுத்தமாக இருக்கிறது. அந்தத் தேசத்தின் குற்றத்துக்காக நான் அதைத் தண்டிப்பேன்.” கானானியர்களின் வாழ்க்கை முறை ரொம்பவே கீழ்த்தரமானதாக இருந்ததால், இஸ்ரவேலர்களின் பரிசுத்தமான கடவுளுடைய பார்வையில், அவர்களுடைய தேசம் அசுத்தமானதாகவும் கறைபட்டதாகவும் இருந்தது.—லேவி. 18:3, 25.
யெகோவா தன்னுடைய மக்களை வழிநடத்துகிறார்
13 மக்களை வழிநடத்துவதற்குத் தங்களுடைய ஞானத்தையே மற்ற தேசத்து தலைவர்கள் நம்பியிருந்தார்கள். உதாரணத்துக்கு, கானானிய தலைவர்களும் அவர்களுடைய மக்களும் மோசமான விஷயங்களைச் செய்தார்கள். இரத்த சொந்தங்களோடு உடலுறவுகொண்டார்கள், ஓரினப்புணர்ச்சியில் ஈடுபட்டார்கள், மிருகங்களோடு உறவுகொண்டார்கள், பிள்ளைகளைப் பலி செலுத்தினார்கள், சிலைகளை வணங்கினார்கள். (லேவி. 18:6, 21-25) பாபிலோனிய தலைவர்களும் எகிப்திய தலைவர்களும், கடவுளுடைய மக்களுக்கு இருந்த சுத்தம் சம்பந்தமான சட்டங்களைப் பின்பற்றவில்லை. (எண். 19:13) ஆனால் ஆன்மீக சுத்தத்தையும், உடல் சுத்தத்தையும், ஒழுக்க சுத்தத்தையும் கடைப்பிடிக்கும்படி, கடவுள் நியமித்த தலைவர்கள் தங்கள் மக்களை உற்சாகப்படுத்தினார்கள். யெகோவாதான் தன்னுடைய மக்களை வழிநடத்தி வந்தார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.
கடவுள் எப்படி கஷ்டங்களுக்கு முடிவுகட்டுவார்?
ஆனால், ‘திருந்தவே மாட்டோம்’ என்று விடாப்பிடியாக இருக்கும் கெட்ட ஜனங்களுக்கு என்ன நடக்கும்? “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்” என்று பைபிள் நேரடியாகச் சொல்கிறது. (நீதிமொழிகள் 2:21, 22) பொல்லாத மனிதர்கள் இனி அங்கே இருக்க மாட்டார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படியும் மக்கள் மட்டும்தான் சமாதானமான அந்த உலகில் வாழ்வார்கள். அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்று எந்தக் குறையுமில்லாமல் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிப்பார்கள்.—ரோமர் 6:17, 18; 8:21.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
‘உமது சட்டத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்!’
11 கதிரைப் பொறுக்கிக் கொள்ள ஏழை எளியோருக்கு உரிமை இருக்கிறதென நியாயப்பிரமாணத்தில் யெகோவா ஒரு சட்டத்தைக் கொடுத்திருந்தார். இந்தச் சட்டம், தம் மக்கள்மேல் அவருக்கு இருக்கும் அக்கறையைப் படம்பிடித்து காட்டியது. ஓர் இஸ்ரவேல விவசாயி அறுவடை செய்யும்போது, தன் வேலையாட்கள் விட்டுவருவதை எடுத்துக்கொள்வதற்கு ஏழைகளை அனுமதிக்க வேண்டும் என்று யெகோவா கட்டளையிட்டிருந்தார். விவசாயிகள் தங்கள் வயலின் ஓரம் வரை முழுமையாக அறுக்கக்கூடாது. அதோடு மீந்திருக்கும் திராட்சைப் பழங்களையோ, ஒலிவப் பழங்களையோ சேகரிக்கக்கூடாது. அரிக்கட்டுகளை மறந்துபோய் வயலிலேயே விட்டுவிட்டால் அதை எடுக்க திரும்பிப் போகக்கூடாது. ஏழைகள், அந்நியர், அநாதைகள், விதவைகள் ஆகியோருக்கு உதவுவதற்காக இந்த அன்பான ஏற்பாட்டை கடவுள் செய்திருந்தார். அப்படி மீதியிருப்பவற்றைச் சேகரிப்பதற்குக்கூட இவர்கள் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது என்னவோ உண்மைதான். எனினும் இத்தகைய ஏற்பாடு இருந்ததால், பிச்சை எடுக்க வேண்டிய நிலை இவர்களுக்கு ஏற்படவில்லை.—லேவியராகமம் 19:9, 10; உபாகமம் 24:19-22; சங்கீதம் 37:25.
ஜனவரி 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 20-21
“யெகோவா தன்னுடைய மக்களை மற்றவர்களிடமிருந்து பிரித்து வைக்கிறார்”
பரதீஸ்—நம்புவதற்கு ஆதாரம் உள்ளதா?
12 அதோடு நாம் வேறொன்றையும் மறந்துவிடக் கூடாது. “நீங்கள் பலப்படும்படிக்கும், நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும் . . . இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக” என இஸ்ரவேலரிடம் கடவுள் சொன்னார். (உபாகமம் 11:8, 9) அதே தேசத்தைப் பற்றி லேவியராகமம் 20:22, 24 இவ்வாறு குறிப்பிட்டது: “நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிப்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள். நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்.” ஆகவே, யெகோவா தேவனுடன் நல்லுறவைக் காத்துக்கொள்ளும் பட்சத்திலேயே வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை சுதந்தரிக்க முடியுமென்று இஸ்ரவேலரிடம் சொல்லப்பட்டது. அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால்தான் பாபிலோனியரால் சிறைபிடித்துச் செல்ல அவர் அனுமதித்தார், தங்கள் தேசத்திலிருந்து அவர்களை வெளியேற்றினார்.
it-1-E பக். 1199
பரம்பரை உடமை
பரம்பரை உடமை என்பது ஒருவருடைய மரணத்துக்குப் பிறகு அவருடைய வாரிசுக்கோ வாரிசாக இருக்கும் உரிமை பெற்றவர்களுக்கோ போய்ச் சேரும் சொத்து; முன்னோர்களிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறைகளுக்குப் போய்ச் சேரும் உடமை. இதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள எபிரெய வினைச்சொல் நச்சால் (பெயர்ச்சொல், நச்சாலா). பரம்பரை சொத்தாக ஒன்றைக் கொடுப்பதை அல்லது பெற்றுக்கொள்வதை அது குறிக்கிறது. பொதுவாக, அடுத்த வாரிசாக இருப்பவருக்கு அந்த சொத்து கொடுக்கப்படுகிறது அல்லது கிடைக்கிறது. (எண் 26:55; எசே 46:18) யாராஷ் என்ற வினைச்சொல், ‘வாரிசு ஆவது’ என்ற அர்த்தத்தில் சிலசமயங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், வாரிசின் அடிப்படையில் இல்லாமல் ‘சொந்தமாக்கிக்கொள்வது’ என்ற அர்த்தத்தில்தான் பல தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. (ஆதி 15:3; லேவி 20:24) படையெடுத்துப் போய் ‘ஒழித்துக்கட்டுவதை’ அல்லது ‘விரட்டியடிப்பதைக்கூட’ இது குறிக்கிறது. (உபா 2:12; 31:3) பரம்பரை உடமை என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் கிரேக்க வார்த்தைகள் க்ளீராஸ் என்ற வார்த்தையோடு சம்பந்தப்பட்டுள்ளன. இந்த வார்த்தை முதலில் “குலுக்கல்” என்ற அர்த்தத்திலும், பிற்பாடு “சேர்ந்து” அதாவது பங்குபெறுவது என்ற அர்த்தத்திலும், கடைசியாக ‘சொத்து’ என்ற அர்த்தத்திலும் பயன்படுத்தப்பட்டது.—மத் 27:35; அப் 1:17; 26:18.
it-1-E பக். 317 பாரா 2
பறவைகள்
பெருவெள்ளத்துக்குப் பிறகு, நோவா சில மிருகங்களை மட்டுமல்லாமல், “சுத்தமான பறவைகள்” சிலவற்றையும் பலியாக செலுத்தினார். (ஆதி 8:18-20) அந்த சமயத்திலிருந்து, பறவைகளையும் சாப்பிடுவதற்குக் கடவுள் மனிதர்களுக்கு அனுமதி தந்தார். அவற்றின் இரத்தத்தை மட்டும் சாப்பிடக் கூடாது என்று சொன்னார். (ஆதி 9:1-4; ஒப்பிட்டுப் பாருங்கள்: லேவி 7:26; 17:13) அதனால் அந்த சமயத்தில், கடவுளுக்குப் பலி கொடுப்பதற்குத் தகுந்ததாக இருந்த சில பறவைகள்தான் “சுத்தமான பறவைகள்” என்று சொல்லப்பட்டதாகத் தெரிகிறது. திருச்சட்டம் கொடுக்கப்படும்வரை எந்தப் பறவைகளுமே சாப்பிடுவதற்குத் தகாதவை என்ற அர்த்தத்தில் ‘அசுத்தமானவை’ என்று சொல்லப்படவில்லை. (லேவி 11:13-19, 46, 47; 20:25; உபா 14:11-20) எந்தக் காரணத்தினால் சில பறவைகள் பலி செலுத்துவதற்குத் தகாதவையாக, அதாவது ‘அசுத்தமானவையாக’ இருந்தன என்று பைபிள் திட்டவட்டமாகச் சொல்வதில்லை. பிணம் தின்னும் பறவைகளில் பெரும்பாலானவை அசுத்தமானவை என்று ஒதுக்கப்பட்டன, ஆனால் அவற்றில் சில அப்படி ஒதுக்கப்படவில்லை. புதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட பிறகு இந்தச் சட்டம் நீக்கப்பட்டது. இதை ஒரு தரிசனத்தின் மூலம் பேதுருவுக்குக் கடவுள் வெளிப்படுத்தினார்.—அப் 10:9-15.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 563
உடலைக் கீறிக் கிழித்துக்கொள்வது
இறந்தவர்களுக்காக உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளக் கூடாதென்று கடவுளுடைய சட்டம் திட்டவட்டமாகச் சொன்னது. (லேவி 19:28; 21:5; உபா 14:1) ஏனென்றால், இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குப் பரிசுத்தமான ஜனங்களாக, ஒரு விசேஷ சொத்தாக இருந்தார்கள். (உபா 14:2) சிலை வழிபாட்டோடு சம்பந்தப்பட்ட எல்லா பழக்கவழக்கங்களையும் இஸ்ரவேலர்கள் அடியோடு ஒதுக்க வேண்டியிருந்தது. அப்படியிருக்கும்போது, உடலைக் கீறிக் கிழித்துக்கொண்டு துக்கத்தை மிதமீறிய விதத்தில் வெளிக்காட்டுவது அவர்களுக்குக் கொஞ்சம்கூடப் பொருத்தமில்லாத ஒன்றாக இருந்திருக்கும். ஏனென்றால், இறந்தவர்கள் உண்மையில் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும், இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்பதும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (தானி 12:13; எபி 11:19) அதுமட்டுமல்ல, உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளக் கூடாதென்ற சட்டம், கடவுளுடைய படைப்பாகிய மனித உடலை எந்தளவு மதிக்க வேண்டும் என்பதை இஸ்ரவேலர்களுக்குப் புரிய வைத்திருக்கும்.
ஜனவரி 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 22-23
“பண்டிகை நாட்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம்”
it-1-E பக். 826-827
புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை
புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின் முதல் நாள் விசேஷ மாநாடு நடக்கும் நாளாக இருந்தது; அது ஓய்வுநாளாகவும் இருந்தது. இரண்டாவது நாளில், அதாவது நிசான் 16 அன்று, முதல் விளைச்சலில் கிடைக்கும் பார்லி கதிர்க்கட்டை குருவானவரிடம் இஸ்ரவேலர்கள் கொண்டுவர வேண்டியிருந்தது. பாலஸ்தீனாவில் பார்லிதான் முதலில் அறுவடை செய்யப்பட்டது. அந்த முதல் விளைச்சலில் கிடைத்த புது தானியத்தைப் பண்டிகைக்கு முன்பு ரொட்டி செய்தோ வறுத்தோ பச்சையாகவோ சாப்பிடக் கூடாது என்று இஸ்ரவேலர்களுக்கு சொல்லப்பட்டது. குருவானவர் அந்த முதல் விளைச்சலை யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டுவதன் மூலம் அடையாள அர்த்தத்தில் அதை அவருக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. அதேசமயத்தில், குறையில்லாத ஒருவயது செம்மறியாட்டுக் கடாக் குட்டியைத் தகன பலியாக செலுத்த வேண்டியிருந்தது. அதோடு, எண்ணெய் கலந்த உணவுக் காணிக்கையையும் திராட்சமது காணிக்கையையும் செலுத்த வேண்டியிருந்தது. (லேவி 23:6-14) தானியத்தையோ அதன் மாவையோ பலிபீடத்தில் எரிக்க வேண்டுமென்று எந்தக் கட்டளையும் கொடுக்கப்படவில்லை. பிற்பாடு குருமார்கள் தாங்களாகவே அந்தப் பழக்கத்தைப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். அந்தப் பண்டிகைக் காலத்தில் தேசத்தின் முதல் விளைச்சலைக் கொடுப்பதற்கு மட்டுமல்ல, இஸ்ரவேலில் ஒவ்வொரு குடும்பத்துக்கும், தனிநபர்களுக்கும் சொந்தமாக இருந்த நிலத்தின் முதல் விளைச்சலைக் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.—யாத் 23:19; உபா 26:1, 2.
முக்கியத்துவம். இந்த சமயத்தில் புளிப்பில்லாத ரொட்டியை சாப்பிடுவது, மோசேயின் மூலம் யெகோவா கொடுத்த சட்டதிட்டங்களுக்கு இசைவாக இருந்தது. (யாத். 12:14-20) “ஏழு நாட்களுக்கு உங்கள் வீடுகளில் புளித்த மாவு இருக்கக் கூடாது” என்று 19-ஆவது வசனத்தில் கண்டிப்புடன் சொல்லப்பட்டது. புளிப்பில்லாத ரொட்டிகள், எகிப்தில் “பட்ட பாடுகளை” யூதர்களுக்கு ஞாபகப்படுத்தும் என்று உபாகமம் 16:3 சொன்னது. (மாவைப் புளிக்க வைப்பதற்குக்கூட நேரம் இல்லாமல் [யாத் 12:34]) எகிப்திலிருந்து அவசர அவசரமாகப் புறப்பட்டு வந்ததை வருஷாவருஷம் அந்த ரொட்டிகள் யூதர்களுக்கு ஞாபகப்படுத்தின. “எகிப்திலிருந்து புறப்பட்ட நாளைக் காலமெல்லாம் நினைத்துப் பார்ப்பதற்காக” அந்த ரொட்டிகளை சாப்பிட வேண்டும் என்று யெகோவா சொல்லியிருந்தார். அதுபோலவே, அடிமைகளாக எகிப்தில் பட்ட பாடுகளிலிருந்து யெகோவா தங்களை விடுவித்ததை இஸ்ரவேலர்கள் நினைத்துப் பார்த்தார்கள். இஸ்ரவேலர்கள் வருஷாவருஷம் கொண்டாடிய மூன்று பெரிய பண்டிகைகளில் முதல் பண்டிகையின்போது, ஒரு தேசமாகத் தங்களுக்குக் கிடைத்த விடுதலையையும், யெகோவாதான் தங்களை விடுவித்தார் என்பதையும் அவர்களால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது.—உபா 16:16.
it-2-E பக். 598 பாரா 2
பெந்தெகொஸ்தே
கோதுமையின் முதல் விளைச்சலை பார்லியின் முதல் விளைச்சலைப் போல இல்லாமல் வேறு விதமாகக் கடவுளுக்கு செலுத்த வேண்டியிருந்தது. ஒரு எப்பா அளவிலே பத்தில் இரண்டு பங்கு (4.4 லி) நைசான கோதுமை மாவைப் புளிக்க வைத்து, அதில் இரண்டு ரொட்டிகளைச் சுட வேண்டியிருந்தது. அவற்றை “உங்கள் வீடுகளிலிருந்து” கொண்டுவர வேண்டுமென்று சொல்லப்பட்டது. அப்படியென்றால், பரிசுத்த விஷயங்களுக்காக அல்லாமல் வீட்டில் தினமும் சாப்பிடுவதற்காகச் செய்யப்படும் ரொட்டிகளைப் போல அவற்றை செய்ய வேண்டியிருந்தது. (லேவி 23:17) அந்த ரொட்டிகளோடு சேர்த்து தகன பலிகளையும், பாவப் பரிகார பலியையும், சமாதான பலியாக இரண்டு செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளையும் செலுத்த வேண்டியிருந்தது. குருவானவர் அந்த ரொட்டிகளையும் செம்மறியாட்டுக் கடாக் குட்டிகளின் துண்டுகளையும் தன்னுடைய கைகளில் ஏந்திப் பிடித்து முன்னும் பின்னும் அசைவாட்ட வேண்டியிருந்தது. யெகோவாவுக்கு அவற்றை செலுத்துவதை அது குறித்தது. அதன்பின் அவை குருவானவருக்குப் போய்ச் சேர்ந்ததால், சமாதான பலியாக அவற்றை அவர் சாப்பிட்டார்.—லேவி 23:18-20.
யெகோவாவின் அமைப்போடு சேர்ந்து முன்னேறுகிறீர்களா?
11 அப்போஸ்தலன் பவுலுடைய வார்த்தையைப் பின்பற்றும்படி அமைப்பு நம்மை உற்சாகப்படுத்துகிறது: “அன்பு காட்டவும் நற்செயல்கள் செய்யவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காண்பிப்போமாக; சபைக் கூட்டங்களைச் சிலர் வழக்கமாகத் தவறவிடுவதுபோல் நாமும் தவறவிடாமல், ஒன்றுகூடிவந்து ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக; நாளானது நெருங்கி வருவதை நாம் எந்தளவுக்குப் பார்க்கிறோமோ அந்தளவுக்கு ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோமாக.” (எபி. 10:24, 25) இஸ்ரவேலர்கள் வருடாந்தரப் பண்டிகைகளின்போதும் வழிபாட்டிற்காகக் கூடி வரும்போதும் ஆன்மீக விதத்தில் பலமடைந்தார்கள். அதுமட்டுமில்லாமல், நெகேமியாவின் காலத்தில் கொண்டாடிய கூடாரப் பண்டிகைகள் நெஞ்சைவிட்டு நீங்காத நினைவுகளாக இருந்தன. (யாத். 23:15, 16; நெ. 8:9-18) நாமும் இன்று நம்முடைய கூட்டங்களிலிருந்தும் மாநாடுகளிலிருந்தும் அதிக பலனடைகிறோம். ஆன்மீக விதத்தில் பலமாகவும் சந்தோஷமாகவும் இருக்க இந்த ஏற்பாடுகளை முழுமையாகப் பயன்படுத்துவோமாக!—தீத். 2:2.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!
3 முழுமனதோடு யெகோவாமீது அன்பு காட்டுவதும், அவரோடு முறிக்கமுடியாத ஒரு பந்தத்தை வைத்துக்கொள்வதும், எப்போதும் அவருக்குப் பிரியமானதைச் செய்வதும்தான் உத்தமம்! இப்படிச் செய்வதன் மூலம் கடவுளுடைய ஊழியர்கள் உத்தமத்தைக் காட்டுகிறார்கள். இப்போது, உத்தமம் என்ற வார்த்தை பைபிளில் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம். “உத்தமம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை, நிறைவான, குறையில்லாத அல்லது முழுமையான ஒன்றைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு மிருக பலிகளைச் செலுத்தும்போது, அவை குறையில்லாதவையாக இருக்க வேண்டும் என்று திருச்சட்டம் சொன்னது. (லேவி. 22:21, 22) காலோ காதோ கண்ணோ இல்லாத ஒரு மிருகத்தை அல்லது நோய் பிடித்த ஒரு மிருகத்தை அவர்கள் பலி செலுத்த முடியாது. அந்த மிருகம் முழுமையானதாகவும் நோயில்லாததாகவும் இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார்; அதை அவர் ரொம்ப முக்கியமானதாக நினைத்தார். (மல். 1:6-9) யெகோவா ஏன் இப்படி எதிர்பார்த்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதை யோசித்துப்பாருங்கள். அழுகிப்போன பழத்தையோ, சில பக்கங்கள் இல்லாத புத்தகத்தையோ, சில பாகங்கள் இல்லாத கருவியையோ நாம் வாங்குவோமா? நிச்சயம் வாங்க மாட்டோம். நாம் வாங்குகிற பொருள்கள் நிறைவானவையாக, குறையில்லாதவையாக அல்லது முழுமையானவையாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். நம்முடைய அன்பையும் உண்மைத்தன்மையையும் பொறுத்தவரை யெகோவாவும் அதைத்தான் எதிர்பார்க்கிறார். அது நிறைவானதாக, குறையில்லாததாக அல்லது முழுமையானதாக இருக்க வேண்டும்!
ஜனவரி 25-31
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 24-25
“விடுதலை வருஷமும் எதிர்காலத்தில் கிடைக்கும் விடுதலையும்”
it-1-E பக். 871
விடுதலை
விடுதலை தரும் கடவுள். யெகோவா விடுதலை தரும் கடவுளாக இருக்கிறார். எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களை அவர் விடுதலை செய்தார். தன்னுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்வரை அவர்கள் ஏழ்மையிலிருந்து விடுபட்டிருப்பார்கள் என்று அவர் சொன்னார். (உபா 15:4, 5) எபிரெயர் ஒருவர் ஏழையாகிவிட்டால் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காக தன்னை அடிமையாக விற்கலாம் என்று திருச்சட்டம் சொன்னது. ஆனால், ஏழாவது வருஷம் அவர் விடுதலையாவார் என்றும் அது சொன்னது. (யாத் 21:2) (ஒவ்வொரு 50-ஆவது வருஷத்திலும் வந்த) விடுதலை வருஷத்தில், எல்லா மக்களுக்கும் விடுதலை அறிவிக்கப்பட்டது. எபிரெய அடிமைகள் எல்லாரும் விடுதலை செய்யப்பட்டு, அவரவருடைய பரம்பரை நிலத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.—லேவி 25:10-19.
it-1-E பக். 1200 பாரா 2
பரம்பரை உடமை
ஒரு குடும்பத்தின் நிலம் தலைமுறை தலைமுறைக்கும் அதே குடும்பத்துக்குச் சொந்தமானதாக இருந்தது. அதனால், அதை யாருக்குமே நிரந்தரமாக விற்க முடியாது. நிலத்தைக் குத்தகையின் அடிப்படையில் விற்பவர், அடுத்த விடுதலை வருஷம் வரும்வரை தன்னுடைய நிலம் எவ்வளவு விளைச்சல் தரும் என்பதைக் கணக்குப் போட்டு, அதற்குத் தகுந்தபடி அதை விற்க வேண்டியிருந்தது. விடுதலை வருஷத்துக்கு முன்புவரை அந்த நிலம் மீட்கப்படவில்லை என்றால், விடுதலை வருஷத்தில் அதன் சொந்தக்காரரிடமே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டியிருந்தது. (லேவி 25:13, 15, 23, 24) மதில் இல்லாத நகரங்களில் இருந்த வீடுகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தியது. ஏனென்றால், அவை கிராமப்புற வயல்நிலத்தைப் போலக் கருதப்பட்டன. மதில் சூழ்ந்த நகரத்தில் இருந்த வீட்டை, அது விற்கப்படும் சமயத்திலிருந்து ஒரு வருஷத்துக்குள் மீட்டுக்கொள்ள வேண்டியிருந்தது. அப்படி அதை மீட்காவிட்டால், வாங்கியவருடைய நிரந்தர சொத்தாக ஆகிவிடும். லேவியர்களின் நகரங்களில் இருந்த வீடுகளைப் பொறுத்தவரை, அவற்றை எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்கிற உரிமை லேவியர்களுக்கு இருந்தது. ஏனென்றால், லேவியர்களுக்குத் தேசத்தில் எந்த நிலமும் கொடுக்கப்படவில்லை.—லேவி 25:29-34.
it-2-E பக். 122-123
விடுதலை வருஷம்
இன்று நிறைய நாடுகளிலுள்ள மக்கள், ஒன்று கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள் அல்லது பரம ஏழைகளாக இருக்கிறார்கள். ஆனால், இஸ்ரவேலர்கள் விடுதலை வருஷம் சம்பந்தப்பட்ட சட்டத்துக்குக் கீழ்ப்படிந்தவரை இப்படிப்பட்ட பரிதாப நிலைக்குத் தள்ளப்படவில்லை. அந்த சட்டம் ஒவ்வொரு நபருக்கும் பயன் தந்ததால் முழு தேசமே பயனடைந்தது. யாருமே வறுமையில் சிக்கித் தவிக்கவில்லை. அதற்குப் பதிலாக, எல்லாருமே தேசத்தின் நலனுக்காகத் தங்களுடைய திறமையையும் பலத்தையும் பயன்படுத்த முடிந்தது. தேசத்தின் விளைச்சலை யெகோவா ஆசீர்வதித்தார். யெகோவாவின் சட்டதிட்டங்கள் மக்களுக்குப் போதிக்கப்பட்டன. இஸ்ரவேல் மக்கள் எல்லாரும் கீழ்ப்படிந்து நடந்தபோது, கடவுளுடைய பரிபூரண ஆட்சியால் மட்டுமே கிடைக்கும் ஆசீர்வாதங்களை அனுபவித்தார்கள்.—ஏசா 33:22.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உங்கள் மனம் புண்படுகையில்
ஓர் இஸ்ரவேலன் மற்றொரு இஸ்ரவேலனை தாக்கி அவனுடைய கண்ணைக் குருடாக்கினால் அவனுக்கு நியாயமான தண்டனை வழங்கலாமென திருச்சட்டம் சொன்னது. என்றாலும், பாதிக்கப்பட்ட இஸ்ரவேலன் பிரச்சினையைத் தன் கையில் எடுத்துக்கொண்டு அவனையோ அவனுடைய குடும்பத்தினரையோ பழிதீர்க்க அச்சட்டம் அனுமதிக்கவில்லை. மாறாக, நியமிக்கப்பட்ட அதிகாரிகளிடம், அதாவது நியாயாதிபதிகளிடம், அந்தப் பிரச்சினையை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது; அவர்கள் தீர்ப்பு வழங்க வேண்டியிருந்தது. இவ்வாறு, தாக்கியவன் தக்க தண்டனை பெறலாம் என்பதைத் தெரிந்திருந்தது, பழிவாங்குதலை முற்றிலும் தடுத்தது. அதேசமயத்தில், இன்னொரு முக்கியமான விஷயமும் உள்ளது.
பிப்ரவரி 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள் | லேவியராகமம் 26-27
“யெகோவா தரும் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வது எப்படி?”
“வீணானவற்றை” வெறுத்து ஒதுக்குங்கள்
8 ‘செல்வம்’ எவ்வாறு கடவுளாக ஆகிவிடலாம்? உதாரணமாக, பண்டைய இஸ்ரவேலரின் நிலத்தில் கிடந்த ஒரு கல்லைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். வீடு கட்டுவதற்கோ சுவர் எழுப்புவதற்கோ அது உபயோகமாக இருந்திருக்கும். ஆனால், அதை ஒரு ‘கல்தூணாக’ அல்லது ‘கற்சிலையாக’ நாட்டியபோது யெகோவாவின் மக்கள் இடறிப்போவதற்கு அது காரணமாகிவிட்டது. (லேவி. 26:1, பொ.மொ.) பணத்தைக் குறித்ததிலும் அதுவே உண்மை. வாழ்க்கையை ஓட்ட பணம் நமக்கு அவசியம்தான்; அதோடு, யெகோவாவின் சேவையிலும் அதை நம்மால் பயனுள்ள விதத்தில் உபயோகிக்க முடியும். (பிர. 7:12; லூக். 16:9) ஆனால், நம்முடைய கிறிஸ்தவ சேவையைப் பின்னுக்குத் தள்ளி, பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்தால், அது நமக்கு கடவுளைப்போல் ஆகிவிடும். (1 தீமோத்தேயு 6:9, 10-ஐ வாசியுங்கள்.) இன்றைய உலகில், செல்வத்திற்கே மக்கள் அதிக முக்கியத்துவம் தருவதால், இந்த விஷயத்தில் நாம் சமநிலையாக இருக்கிறோமா என்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டும்.—1 தீ. 6:17-19.
it-1-E பக். 223 பாரா 3
பயபக்தி
யெகோவா மோசேயைப் பயன்படுத்திய விதத்தினாலும், அவரிடம் நடந்துகொண்ட விதத்தினாலும், மோசே இஸ்ரவேலர்களின் கண்களுக்கு முன்பாக பிரமிக்க வைக்கிற வல்லமையை (எபிரெயுவில் மோரா) காட்டினார். (உபா 34:10, 12; யாத் 19:9) கடவுள்மேல் விசுவாசம் வைத்தவர்கள், மோசேயின் அதிகாரத்துக்குப் பயபக்தியைக் காட்டினார்கள். ஏனென்றால், அவர் மூலமாகத்தான் கடவுள் பேசினார் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்துக்கும் இஸ்ரவேலர்கள் பயபக்தி காட்ட வேண்டியிருந்தது. (லேவி 19:30; 26:2) அப்படியென்றால், வழிபாட்டுக் கூடாரத்தின்மேல் மதிப்புமரியாதை காட்டி, யெகோவா சொன்ன விதத்தில் அவரை வழிபடவும், அவருடைய எல்லா கட்டளைகளின்படி நடக்கவும் வேண்டியிருந்தது.
w91-E 3/1 பக். 17 பாரா 10
“தேவசமாதானம்” உங்கள் இதயத்தைப் பாதுகாக்கட்டும்
10 யெகோவா இஸ்ரவேலர்களிடம், “நீங்கள் என்னுடைய சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்து என்னுடைய கட்டளைகளின்படி நடந்துவந்தால், அந்தந்த பருவங்களில் மழை பெய்யும்படி செய்வேன். நிலம் விளைச்சல் தரும், மரம் கனி கொடுக்கும். தேசத்தில் நான் சமாதானத்தைத் தருவேன். நீங்கள் யாரைக் கண்டும் பயப்படாமல் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவீர்கள். தேசத்திலிருந்து கொடிய மிருகங்களைத் துரத்தியடிப்பேன். யாரும் வாளை எடுத்துக்கொண்டு உங்களோடு போர் செய்ய வர மாட்டார்கள். நான் உங்கள் நடுவே நடந்து, உங்கள் கடவுளாக இருப்பேன். நீங்கள் என் ஜனங்களாக இருப்பீர்கள்” என்று சொன்னார். (லேவி 26:3, 4, 6, 12) எந்த அர்த்தத்தில் சமாதானத்தை அனுபவிக்கும் வாய்ப்பு இஸ்ரவேலர்களுக்கு இருந்தது? எதிரிகளின் தொல்லை இல்லாமல் நிம்மதியையும், செல்வச்செழிப்பையும், யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. ஆனால், யெகோவாவின் சட்டதிட்டங்களைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில் மட்டும்தான் அவர்களுக்கு அந்த வாய்ப்பு இருந்தது.—சங் 119:165.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 617
கொள்ளைநோய்
கடவுளுடைய சட்டத்தைக் கடைப்பிடிக்காததன் விளைவு. தன்னோடு செய்த ஒப்பந்தத்தின்படி நடக்க வேண்டுமென்று கடவுள் இஸ்ரவேலர்களிடம் சொன்னார். இல்லாவிட்டால், “உங்கள் நடுவில் நோயைப் பரப்புவேன்” என்று எச்சரித்தார். (லேவி 26:14-16, 23-25; உபா 28:15, 21, 22) பைபிளில், உடல் ஆரோக்கியமும் சரி, உள்ளத்தின் ஆரோக்கியமும் சரி, கடவுளுடைய ஆசீர்வாதத்தினால் கிடைப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (உபா 7:12, 15; சங் 103:1-3; நீதி 3:1, 2, 7, 8; 4:21, 22; வெளி 21:1-4) ஆனால் நோய்நொடிகள், பாவத்தினாலும் பாவ இயல்பினாலும் ஏற்படுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. (யாத் 15:26; உபா 28:58-61; ஏசா 53:4, 5; மத் 9:2-6, 12; யோவா 5:14) சிலசமயங்களில், யெகோவா கண்ணிமைக்கும் நேரத்தில் நேரடியாக நோயை வரவைத்தது உண்மைதான். உதாரணத்துக்கு, மிரியாமுக்கும் உசியாவுக்கும் கேயாசிக்கும் அவர் தொழுநோயை வரவைத்தார். (எண் 12:10; 2நா 26:16-21; 2ரா 5:25-27) ஆனால் நிறைய சந்தர்ப்பங்களில், சில நபர்களின் அல்லது தேசங்களின் பாவச் செயல்களால், இயற்கையாகவே நோய்கள் அல்லது கொள்ளைநோய்கள் வந்ததாகத் தெரிகிறது. அவர்கள் எதை விதைத்தார்களோ அதைத்தான் அறுவடை செய்தார்கள். அவர்கள் கெட்ட வழியில் போனதால் அவர்களுடைய உடல் ஆரோக்கியம் கெட்டுப்போனது. (கலா 6:7, 8) ஆபாசமாக நடந்துகொண்டவர்களையும் பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டவர்களையும் பற்றி அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொல்கிறார்: “தங்களுடைய உடல்களை அவமானப்படுத்துவதற்குக் கடவுள் அவர்களை விட்டுவிட்டார். . . . தங்களுடைய தவறுக்குத் தகுந்த தண்டனையை [அவர்கள்] முழுமையாகப் பெற்றார்கள்.”—ரோ 1:24-27.
பிப்ரவரி 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 1-2
“யெகோவா தன் மக்களை ஒழுங்கமைக்கிறார்”
நம்முடைய வாழ்க்கையில் யெகோவாவின் வணக்கத்திற்கு சரியான இடம்
4 வனாந்தரத்தில் கூடாரமடித்து தங்கியிருந்த இஸ்ரவேலரை நீங்கள் உயிரோடிருந்து பார்க்க முடிந்திருந்தால், நீங்கள் எதைப் பார்த்திருப்பீர்கள்? ஒருவேளை 30 லட்சம் அல்லது அதற்கும் அதிகமான ஆட்களுக்கு இடவசதி அளிக்கும் மிகப் பிரமாண்டமான, ஆனால் ஒழுங்காக அமைக்கப்பட்ட கூடாரங்கள் வடக்கேயும் தெற்கேயும் கிழக்கேயும் மேற்கேயும் திசைக்கு மூன்று கோத்திர வாரியாக பிரிக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இன்னும் சற்று அருகாமையில் நோக்கும் போது, கூடாரத்தின் நடுப் பகுதிக்கு அருகே மற்றொரு தொகுதிப் பிரிவையும் கவனித்திருப்பீர்கள். இந்த நான்கு சிறிய கூடார கொத்துக்கள் லேவி கோத்திரத்தாரின் குடும்பங்கள் தங்கும் இடமாக இருந்தன. கூடாரத்தின் நடுப்பகுதியில், துணியால் ஆன ஒரு மதிலால் பிரிக்கப்பட்டிருந்த ஓர் இடத்தில் தனிச்சிறப்பான கட்டமைப்பு இருந்தது. இது “ஞான இருதயமுள்ள” இஸ்ரவேலர் யெகோவாவின் திட்டப்படி கட்டி அமைத்திருந்த “ஆசரிப்புக் கூடாரமாக” அல்லது வாசஸ்தலமாக இருந்தது.—எண்ணாகமம் 1:52, 53; 2:3, 10, 17, 18, 25; யாத்திராகமம் 35:10.
it-1-E பக். 397 பாரா 4
முகாம்
இஸ்ரவேலர்களுடைய இந்த முகாம் மிகப் பெரியதாக இருந்தது. இந்த முகாமில் பெண்கள், பிள்ளைகள், வயதானவர்கள், மற்றும் மாற்றுத் திறனாளிகள் தவிர 6,03,550 போர்வீரர்களும், 22,000 லேவியர்களும், மற்ற தேசத்தாரில் ‘பலதரப்பட்ட ஜனங்களும்’ இருந்தார்கள். மொத்தம் 30,00,000 பேரோ அதற்கும் அதிகமானவர்களோ இருந்திருக்கலாம். (யாத் 12:38, 44; எண் 3:21-34, 39) அவர்கள் எவ்வளவு பெரிய நிலப்பரப்பில் முகாம் போட்டிருப்பார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை; பலர் பல விதமான அளவுகளைச் சொல்லியிருக்கிறார்கள். எரிகோவுக்கு எதிரே மோவாப் சமவெளிகளில் முகாம் போடப்பட்டபோது, “பெத்-யெசிமோத் பகுதியிலிருந்து ஆபேல்-சித்தீம்வரை” அது பரந்துவிரிந்திருந்ததாக பைபிள் சொல்கிறது.—எண் 33:49.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 764
பெயர்ப்பதிவு
ஒவ்வொருவருடைய பெயரும் வம்சமும், அவரவருடைய கோத்திரத்தின்படியும் குடும்பத்தின்படியும் பதிவு செய்யப்பட்டன. தேசத்தில் எத்தனை பேர் இருந்தார்கள் என்று தெரிந்துகொள்வதற்காக மட்டுமே பெயர்ப்பதிவு செய்யப்படவில்லை. வரி வசூலிப்பது... படை சேவைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பது... (லேவியர்களைப் பொறுத்தவரை) வழிபாட்டுக் கூடார வேலைகளுக்கு நியமிப்பது... போன்ற பல காரணங்களுக்காகவும் பெயர்ப்பதிவு செய்யப்பட்டதாக பைபிள் காட்டுகிறது.
w08-E 7/1 பக். 21
இஸ்ரவேலில் 13 கோத்திரங்கள் இருந்தாலும், பைபிள் ஏன் 12 கோத்திரங்களைப் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது?
இஸ்ரவேல் என்று பெயர் மாற்றப்பட்ட யாக்கோபின் மகன்களிலிருந்துதான் இஸ்ரவேலின் கோத்திரங்கள் உருவாயின. ரூபன், சிமியோன், லேவி, யூதா, தாண், நப்தலி, காத், ஆசேர், இசக்கார், செபுலோன், யோசேப்பு, பென்யமீன் என்ற 12 மகன்கள் யாக்கோபுக்கு இருந்தார்கள். (ஆதியாகமம் 29:32–30:24; 35:16-18) இவர்களில் பதினோரு பேரின் பெயர்களில் கோத்திரங்கள் இருந்தன. யோசேப்பின் பெயரில் கோத்திரம் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவருடைய இரண்டு மகன்களான எப்பிராயீம் மற்றும் மனாசேயின் பெயர்களில் கோத்திரங்கள் இருந்தன. அவர்கள் இரண்டு பேரும் கோத்திரத் தலைவர்களாக ஆவதற்கான முழு தகுதியையும் பெற்றார்கள். அதனால்தான் இஸ்ரவேலில் மொத்தம் 13 கோத்திரங்கள் இருந்தன. அப்படியானால், பொதுவாக கோத்திரங்களைப் பற்றி சொல்லும்போது ஏன் 12 கோத்திரங்களை மட்டுமே பைபிள் குறிப்பிடுகிறது?
இஸ்ரவேலர்களில் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆண்கள், வழிபாட்டுக் கூடாரத்திலும், பிற்பாடு ஆலயத்திலும் சேவை செய்வதற்காக பிரித்து வைக்கப்பட்டார்கள். அதனால், படை சேவைக்கு அவர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. யெகோவா மோசேயிடம், “லேவி கோத்திரத்தாரை மட்டும் நீ பெயர்ப்பதிவு செய்யக் கூடாது. மற்ற இஸ்ரவேலர்களுடன் சேர்த்து அவர்களை எண்ணக் கூடாது. சாட்சிப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிற கூடாரத்தையும் அதன் எல்லா பாத்திரங்களையும் பொருள்களையும் கவனித்துக்கொள்கிற பொறுப்பை லேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும்.”—எண்ணாகமம் 1:49, 50.
வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்தில் லேவியர்களுக்கு சொந்தமாக நிலம் கொடுக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, இஸ்ரவேலர்களின் பகுதியில் ஆங்காங்கே 48 நகரங்களில் அவர்கள் குடியிருந்தார்கள்.—எண்ணாகமம் 18:20-24; யோசுவா 21:41.
இந்த இரண்டு காரணங்களினால், லேவி கோத்திரத்தின் பெயர் மற்ற கோத்திரங்களின் பெயரோடு சேர்க்கப்படவில்லை அதனால்தான், இஸ்ரவேலின் 12 கோத்திரங்களைப் பற்றி மட்டுமே பைபிள் பொதுவாக குறிப்பிடுகிறது.
பிப்ரவரி 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 3-4
“லேவியர்களின் சேவை”
it-2-E பக். 683 பாரா 3
குருவானவர்
திருச்சட்ட ஒப்பந்தத்தின்கீழ். இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்த சமயத்தில், பத்தாவது தண்டனையாக எகிப்தியர்களின் முதல் பிறப்புகளை யெகோவா கொன்றுபோட்ட நாளில், இஸ்ரவேலர்களின் மூத்த மகன்களைத் தனக்கென்று பிரித்து வைத்தார். (யாத் 12:29; எண் 3:13) இந்த மூத்த மகன்கள் யெகோவாவுக்கு சொந்தமானவர்களாக இருந்தார்கள். அவருக்கு விசேஷ சேவை செய்வதற்கென்றே பிரித்தெடுக்கப்பட்டார்கள். இஸ்ரவேலர்களின் இந்த எல்லா மூத்த மகன்களையுமே குருத்துவ சேவைக்காகவும் வழிபாட்டுக் கூடார சேவைக்காகவும் தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யாமல் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆண்களை மட்டுமே அதற்காகத் தேர்ந்தெடுத்தார். அதனால், மற்ற 12 கோத்திரங்களை (யோசேப்பின் மகன்களான எப்பிராயீம் மற்றும் மனாசேயின் வம்சத்தார் இரண்டு கோத்திரங்களாகக் கருதப்பட்டார்கள்) சேர்ந்த மூத்த மகன்களுக்குப் பதிலாக லேவி கோத்திரத்தைச் சேர்ந்த ஆண்களை அவர் ஏற்றுக்கொண்டார். ஒரு கணக்கெடுப்பில், லேவியர்களின் எண்ணிக்கையைவிட லேவியர்கள் அல்லாத இஸ்ரவேலர்களின் மூத்த மகன்கள் 273 பேர் அதிகமாக இருந்தது தெரியவந்தது. அப்படி அதிகமாக இருந்த ஒவ்வொருவருக்காகவும் ஐந்து சேக்கலை (11 அமெரிக்க டாலர்) மீட்புவிலையாக வாங்கி, ஆரோனிடமும் அவருடைய மகன்களிடமும் கொடுக்கும்படி யெகோவா சொன்னார். (எண் 3:11-16, 40-51) அதற்கு முன்பே, இஸ்ரவேலில் குருமார்களாக சேவை செய்வதற்கு ஆரோனின் வம்சத்தைச் சேர்ந்த லேவி கோத்திரத்து ஆண்களை யெகோவா தேர்ந்தெடுத்திருந்தார்.—எண் 1:1; 3:6-10.
it-2-E பக். 241
லேவியர்கள்
வேலைகள். லேவியின் மகன்களான கெர்சோன் (கெர்சோம்), கோகாத், மெராரி ஆகிய மூன்று பேரின் வம்சத்தார்தான் லேவியர்களாக இருந்தார்கள். (ஆதி 46:11; 1நா 6:1, 16) வனாந்தரத்திலே வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பக்கத்தில் இந்த ஒவ்வொரு வம்சத்தாருக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. கோகாத்தியர்களாகிய ஆரோனின் குடும்பத்தார் வழிபாட்டுக் கூடாரத்துக்கு முன்பாக கிழக்கே முகாம் போட்டார்கள். மற்ற கோகாத்தியர்கள் தெற்கிலும், கெர்சோனியர்கள் மேற்கிலும், மெராரியர்கள் வடக்கிலும் முகாம் போட்டார்கள். (எண் 3:23, 29, 35, 38) வழிபாட்டுக் கூடாரத்தை அமைப்பதும், பிரிப்பதும், தூக்கிச் செல்வதும் லேவியர்களின் வேலைகளாக இருந்தன. வேறொரு இடத்துக்குப் போக வேண்டிய சமயம் வந்தபோது, பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் இடையில் இருந்த திரையை ஆரோனும் அவருடைய மகன்களும் கழற்றினார்கள். பிறகு, சாட்சிப் பெட்டியையும் பீடங்களையும் மற்ற பரிசுத்த சாமான்களையும் பாத்திரங்களையும் அந்தத் திரையால் மூடினார்கள். அவற்றைக் கோகாத்தியர்கள் சுமந்து சென்றார்கள். வழிபாட்டுக் கூடாரத்தின் மேல்விரிப்புகள், திரைகள், பிரகாரத்தின் மறைப்புகள், கூடாரக் கயிறுகள் (அநேகமாக, வழிபாட்டுக் கூடாரத்தின் கயிறுகள்) ஆகியவற்றை கெர்சோனியர்கள் சுமந்து சென்றார்கள். சட்டங்கள், தூண்கள், அதன் பாதங்கள், கூடார ஆணிகள், கூடாரக் கயிறுகள் (வழிபாட்டுக் கூடாரத்தைச் சுற்றியிருந்த பிரகாரத்தின் கயிறுகள்) ஆகியவற்றை மெராரியர்கள் சுமந்து சென்றார்கள்.—எண் 1:50, 51; 3:25, 26, 30, 31, 36, 37; 4:4-33; 7:5-9.
it-2-E பக். 241
லேவியர்கள்
மோசேயின் காலத்தில், வழிபாட்டுக் கூடாரத்தையும் அதன் சாமான்களையும் சுமந்து செல்வது போன்ற எல்லா வேலைகளையும் 30 வயதில்தான் லேவியர்கள் செய்ய ஆரம்பித்தார்கள். (எண் 4:46-49) சில வேலைகளை 25 வயதிலிருந்து அவர்கள் செய்ய ஆரம்பித்தாலும், வழிபாட்டுக் கூடாரத்தை சுமந்து செல்வது போன்ற கடினமான வேலைகளை அப்போது செய்ய ஆரம்பித்ததாகத் தெரியவில்லை. (எண் 8:24) தாவீது ராஜாவின் காலத்தில் (ஆலயம் கட்டப்பட்டிருந்ததால்) வழிபாட்டுக் கூடாரத்தைச் சுமக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அதனால், 20 வயதிலிருந்தே வேலை செய்வதற்கு லேவியர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். 50 வயதைத் தாண்டியவர்களுக்குக் கட்டாய சேவையிலிருந்து ஓய்வு தரப்பட்டது. (எண் 8:25, 26; 1நா 23:24-26) லேவியர்கள் திருச்சட்டத்தை நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டியிருந்தது. மக்கள்முன் அதை அவர்கள் வாசித்துக் காட்ட வேண்டியிருந்தது, மக்களுக்கு அதைக் கற்றுக்கொடுக்கவும் வேண்டியிருந்தது.—1நா 15:27; 2நா 5:12; 17:7-9; நெ 8:7-9.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
கடவுளுக்குப் பயந்து—ஞானமுள்ளவர்களாய் இருங்கள்!
13 கஷ்டப்படுகையில் யெகோவாவின் உதவியை தாவீது பெற்றபோது, தேவபயம் இன்னும் அதிகமானது, அவர் மீதுள்ள நம்பிக்கையும் உறுதியானது. (சங்கீதம் 31:22-24) என்றாலும், மூன்று முக்கியமான சந்தர்ப்பங்களில், போதிய தேவபயம் அவருக்கு இல்லாமற்போனது; அதனால் சில விபரீதங்களை அவர் சந்திக்க நேர்ந்தது. முதல் சந்தர்ப்பம், யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டுவந்த சமயமாகும். அப்போது, கடவுளுடைய நியாயப்பிரமாணச் சட்டத்தின்படி பெட்டியை லேவியர்கள் தோளில் சுமந்து வருவதற்குப் பதிலாக, வண்டியில் ஏற்றி வர ஏற்பாடு செய்தார். ஊசா அந்த வண்டியை நடத்தி வருகையில் பெட்டி சாய்ந்துவிடாதபடி அதைப் பிடித்தபோது, அவனுடைய “துணிவினிமித்தம்,” அதாவது அவபக்தியான செயலின் நிமித்தம், அந்த இடத்திலேயே செத்தான். ஆம், ஊசா பெரும் தவறைச் செய்தான்; இருந்தாலும், அப்படிப்பட்ட விபரீதம் நடப்பதற்குக் காரணம் கடவுளுடைய நியாயப்பிரமாணச் சட்டத்திற்கு தாவீது தகுந்த மரியாதை காட்டத் தவறியதே. தேவபயம் என்பது அவருடைய ஏற்பாடுகளின்படி காரியங்களைச் செய்வதை அர்த்தப்படுத்துகிறது.—2 சாமுவேல் 6:2-9; எண்ணாகமம் 4:15; 7:9.
பிப்ரவரி 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எண்ணாகமம் 5-6
“நசரேயர்களை நீங்களும் பின்பற்றலாம்”
it-2-E பக். 477
நசரேயர்கள்
நசரேயர்களாக இருப்பதாக நேர்ந்துகொண்டவர்கள் இந்த மூன்று முக்கியமான சட்டங்களுக்குக் கட்டுப்பட வேண்டியிருந்தது: (1) எந்த மதுவையும் குடிக்கக் கூடாது; திராட்சைக் காய்கள், திராட்சைப் பழங்கள், உலர்ந்த திராட்சைகள் என திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கும் எதையுமே சாப்பிடக் கூடாது. திராட்சரசம், திராட்சமது, காடி என திராட்சையில் தயாரிக்கப்படும் எந்தப் பானத்தையும் குடிக்கக் கூடாது. (2) தலைமுடியை வெட்டக் கூடாது. (3) எந்தப் பிணத்தையும் தொடக் கூடாது, அது அப்பா, அம்மா, சகோதரன், சகோதரி போன்ற நெருங்கிய சொந்தத்தின் பிணமாக இருந்தாலும்கூட!—எண் 6:1-7.
விசேஷ நேர்த்திக்கடன். நசரேயராய் இருப்பதாக விசேஷமாக நேர்ந்துகொண்டவர், ஏதோ துறவிபோல் வாழ்வதாகக் காட்டிக்கொண்டு மனிதர்களுடைய பாராட்டைப் பெற நினைக்காமல், “யெகோவாவுக்கு நசரேயராய் [அதாவது, அர்ப்பணிக்கப்பட்டவராய், பிரித்தெடுக்கப்பட்டவராய்]” வாழ வேண்டியிருந்தது. ‘நசரேயராக இருக்கும் நாளெல்லாம் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்க’ வேண்டியிருந்தது.—எண் 6:2, 8; ஆதி 49:26-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
நசரேயர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட விஷயங்கள், யெகோவாவின் வணக்கத்தில் விசேஷ முக்கியத்துவமும் அர்த்தமும் உள்ளவையாக இருந்தன. பரிசுத்தமான சேவையைச் செய்த தலைமைக் குருவைப் போலவே நசரேயர்களும் எந்தப் பிணத்தையும் தொடாமல் இருக்க வேண்டியிருந்தது, அது நெருங்கிய சொந்தத்தின் பிணமாக இருந்தாலும்கூட! தலைமைக் குருவும் மற்ற குருமார்களும் முக்கியமான பொறுப்பில் இருந்ததால், யெகோவாவின் சன்னிதியில் பரிசுத்த வேலைகளைச் செய்தபோது திராட்சமதுவையோ வேறெந்த மதுவையோ குடிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை.—லேவி 10:8-11; 21:10, 11.
அதோடு, ஒரு நசரேயர் (எபிரெயுவில், நாசீர்) யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பதன் விசேஷ அடையாளமாக ‘தன் தலைமுடியை நீளமாக வளர்த்து, பரிசுத்தமாக இருக்க வேண்டியிருந்தது.’ (எண் 6:5) நாசீர் என்ற அதே எபிரெய வார்த்தைதான், பரிசுத்தமான ஓய்வு வருஷத்திலும் விடுதலை வருஷத்திலும் “கிளை வெட்டப்படாத” திராட்சைக் கொடிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. (லேவி 25:5, 11) அதுமட்டுமல்ல, “யெகோவா பரிசுத்தமே உருவானவர்” என்று பொறிக்கப்பட்டு, தலைமைக் குருவுடைய தலைப்பாகையின் முன்பகுதியில் கட்டப்பட்ட தங்கத் தகடு, “அர்ப்பணிப்பின் பரிசுத்த அடையாளம்” [எபிரெயுவில், நேசர்; இதுவும் நாசீரும் ஒரே வார்த்தையிலிருந்து வந்தவை] என்று அழைக்கப்பட்டது. (யாத் 39:30, 31) அதேபோல், இஸ்ரவேலில் ராஜாக்களாக அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் கிரீடம் அல்லது மகுடம்கூட நேசர் என்று அழைக்கப்பட்டது. (2சா 1:10; 2ரா 11:12) கிறிஸ்தவ சபையில், முக்காடுக்குப் பதிலாக நீளமான தலைமுடி பெண்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதாக அப்போஸ்தலன் பவுல் சொல்கிறார். இயற்கையாக அமைந்திருக்கும் இந்தத் தலைமுடி, ஆண்களுடைய ஸ்தானம் வேறு, தங்களுடைய ஸ்தானம் வேறு என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறது. கடவுளுடைய ஏற்பாட்டின்படி, ஆண்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நசரேயர்களிடம் எதிர்பார்க்கப்பட்ட விஷயங்கள், அதாவது தலைமுடியை வெட்டக் கூடாது, திராட்சமதுவைக் குடிக்கக் கூடாது, தீட்டுப்படாமல் பரிசுத்தமாக இருக்க வேண்டும் போன்ற சட்டங்கள், ஒரு விஷயத்தை அவர்களுடைய மனதில் பதிய வைத்தன. அதாவது, தங்கள் விருப்பங்களை விட்டுக்கொடுத்து யெகோவாவின் விருப்பத்துக்கு முழுமையாக அடிபணிவது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தின.—1கொ 11:2-16.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
ஆனால், சிம்சோனோ வேறொரு கருத்தில் நசரேயனாக இருந்தார். அவர் பிறப்பதற்கு முன்பாகவே யெகோவாவின் தூதர் அவருடைய தாயிடம் இவ்வாறு சொல்லியிருந்தார்: “நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான்.” (நியாயாதிபதிகள் 13:5) நசரேயனாய் இருப்பதாக சிம்சோன் எந்தப் பொருத்தனையும் செய்யவில்லை. நசரேயனாக இருக்கும்படி அவரைக் கடவுள் நியமித்தார், வாழ்நாள் முழுவதும் அவர் அப்படி இருக்க வேண்டியிருந்தது. எனவே பிணத்தைத் தொடுவது பற்றிய கட்டுப்பாடு இவருடைய விஷயத்தில் பொருந்தாது. ஒருவேளை அப்படிப் பொருந்தும் என்றால், அவர் ஒரு பிணத்தை எதிர்பாராமல் தொட நேர்ந்தால், நசரேய விரதத்தைப் பிறப்பிலிருந்து மீண்டும் தொடர முடியுமா என்ன? எனவே, தாங்களாகவே பொருத்தனை செய்து நசரேய விரதம் மேற்கொண்டவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டவையும் வாழ்நாள் முழுவதும் நசரேயராக இருந்தவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டவையும் ஓரளவு வித்தியாசப்பட்டன.