உண்மையான கல்வியைக் கற்க என் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவ முடியும்?
பி ள்ளையின் கல்வி விறுவிறுப்பான, சவால் நிறைந்த பயணம் போன்றது. அதில் நீங்களும் உங்களுடைய பிள்ளைகளோடு சேர்ந்து பயணிக்கிறீர்கள். வாழ்க்கைப் பாதையில் உங்களுடைய பிள்ளைகள் தொடர்ந்து முன்னேற அவர்களுக்கு உற்சாகத்தையும் அன்பான வழிநடத்துதலையும் அளிக்கிறீர்கள். அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் ஏராளம்!
வாழ்க்கையில் உண்மையான வெற்றிபெற்று சந்தோஷமாக இருப்பதற்குப் பிள்ளைகள் ஒழுக்கத்தைப்பற்றி அதிகமதிகமாகக் கற்றுக்கொள்ளவும் ஆன்மீக விஷயங்களில் அதிகமதிகமாக வளரவும் நன்மை தீமையைப் பகுத்தறிய கற்றுக்கொள்ளவும் வேண்டும். அவர்கள் யெகோவாவைப்பற்றி அறிந்துகொண்டு அவர்மீது அன்பு செலுத்தும்போது அவர்களுடைய கல்வி உண்மையில் பலனளிப்பதாக இருக்கும்; அதோடு, அவர்கள் பெறுகிற அறிவுரைகள் நித்திய காலத்திற்கும் நன்மை தரும். உங்களுடைய பிள்ளைகள் என்ன கற்றுக்கொள்கிறார்கள், கற்றுக்கொண்டதை எப்படிக் கருதுகிறார்கள், எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பதில் பெற்றோரான உங்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது.
இந்தப் பயணத்தில் பெற்றோர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் உள்ளன. பிள்ளைகள் எதையும் எளிதில் கற்றுக்கொள்வார்கள்; ஆகவே, குடும்ப வட்டத்திற்கு வெளியிலிருந்து அநேக மோசமான காரியங்களை அவர்கள் கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. பிசாசாகிய சாத்தானால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம். (1 யோவான் 5:19) அவன் உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க ஆவலாக இருக்கிறான்; ஆனால், முற்றிலும் வேறுபட்ட காரணங்களுக்காக. சாத்தான் திறமையான, அனுபவசாலியான, ஆனால் பொல்லாத ஆசிரியன். அவன் ‘ஒளியின் தூதனைப்போல’ பாசாங்கு செய்வதால் அவன் கற்றுக் கொடுப்பவை வஞ்சனையுள்ளவையாகவும் யெகோவாவின் வார்த்தைக்கும் சித்தத்துக்கும் முரண்பட்டவையாகவும் இருக்கின்றன. (2 கொரிந்தியர் 4:4; 11:14; எரேமியா 8:9) சூழ்ச்சி செய்வதிலும், சுயநல நெருப்பிற்கு எண்ணெய் வார்ப்பதிலும், அநியாயத்தைக் கட்டவிழ்த்துவிடுவதிலும், ஒழுக்கத்தைச் சீர்குலைப்பதிலும் பிசாசும் அவனுடைய பேய்களும் கைதேர்ந்த கில்லாடிகள்.—1 தீமோத்தேயு 4:1.
தவறாக வழிநடத்தப்படாதபடி உங்கள் பிள்ளைகளை எப்படிப் பாதுகாக்கலாம்? அவர்கள் உண்மையானவற்றையும் பயனுள்ளவற்றையும் ஏற்றுக்கொள்ளும்படி நீங்கள் எவ்வாறு கற்பிக்கலாம்? இதைச் செய்வதற்கு, முதலாவது உங்களையே உன்னிப்பாக ஆராய்ந்து பார்ப்பது முக்கியம். நீங்கள் ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்க வேண்டியது அவசியம். அதோடு, பிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்கான உங்களுடைய பொறுப்பை ஏற்றுக்கொள்வதும் அப்படிச் செய்வதற்கு நேரம் செலவிடுவதும் அவசியம். எனினும், இந்தக் குறிப்புகளை நாம் கலந்தாலோசிப்பதற்கு முன்னால் உண்மையான கல்வியின் அஸ்திவாரத்தைக் கண்டுபிடிக்கலாம் வாருங்கள்.
உண்மையான கல்வியின் அஸ்திவாரம்
எக்காலத்திலும் வாழ்ந்த ஞானமுள்ளவர்களில் ஒருவரான இஸ்ரவேலின் ராஜா சாலொமோனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள முடியும். பைபிள் நமக்கு இவ்வாறு சொல்கிறது: “தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது.” சாலொமோன், “மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து.” தாவரங்கள், விலங்குகளைப் பற்றியும் அவர் நன்றாக அறிந்திருந்தார். (1 இராஜாக்கள் 4:29-34) மேலும், எருசலேமிலிருந்த யெகோவாவின் மகிமையான ஆலயத்தின் கட்டுமானம் உட்பட, இஸ்ரவேலில் அநேக கட்டுமானத் திட்டங்களை அவர் மேற்பார்வை செய்தார்.
பிரசங்கி புத்தகத்தில் காணப்படுவதுபோன்ற சாலொமோனின் வார்த்தைகள், மனிதர்களின் இயல்பை அவர் ஆழமாகப் புரிந்துகொண்டிருந்ததை வெளிப்படுத்துகின்றன. உண்மையான கல்வியின் அஸ்திவாரத்தைச் சுட்டிக்காட்ட கடவுளின் பரிசுத்த ஆவியால் அவர் தூண்டப்பட்டார். “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்” என்று சாலொமோன் சொன்னார். மேலும், அந்த ஞானமுள்ள ராஜா இவ்வாறு சொன்னார்: “கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.”—நீதிமொழிகள் 1:7; 9:10.
நாம் கடவுளுக்குப் பயப்படுவோமானால், அவருக்குப் பயபக்தியைக் காட்டுவோம், அவருக்குப் பிடிக்காததைச் செய்யாமலிருக்க எச்சரிக்கையாய் இருப்போம். அவரே உன்னதமானவர், அவருக்கே நாம் கணக்கு கொடுக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்வோம். நம்முடைய வாழ்க்கை அவரையே சார்ந்திருக்கிறது. அவரை ஏற்காதவர்களை ஞானவான்களாக மனிதர்கள் கருதலாம்; ஆனால், அப்படிப்பட்ட ஞானம் “தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது.” (1 கொரிந்தியர் 3:19) உங்களுடைய பிள்ளைகளுக்குப் ‘பரத்திலிருந்து வருகிற ஞானத்தின்’ அடிப்படையிலான கல்வி தேவைப்படுகிறது.—யாக்கோபு 3:15, 17.
யெகோவாவுக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவோமோ என்ற பயம், அவரிடம் காட்டும் அன்போடு நெருங்கிய தொடர்புடையது. யெகோவா, தம்முடைய ஊழியர்கள் தமக்குப் பயப்படவும் தம்மீது அன்பு காட்டவும் வேண்டுமென விரும்புகிறார். மோசே இவ்வாறு சொன்னார்: “இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ள வேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்.”—உபாகமம் 10:12, 13.
யெகோவாவுக்கான பயபக்தியை நம்முடைய பிள்ளைகளின் இருதயங்களில் வளர்க்க வேண்டும்; இதுவே, அவர்களை உண்மையான ஞானிகளாக்கும் கல்விக்கு அஸ்திவாரம். அந்தப் பயபக்தியைத் தொடர்ந்து வளர்க்கும்போது, உண்மையான எல்லா ஞானத்திற்கும் ஊற்றுமூலரான தங்களுடைய படைப்பாளர்மீது அவர்களுக்குப் போற்றுதல் அதிகரிக்கும். இது, கற்றுக்கொண்டவற்றைச் சரியாகப் புரிந்துகொள்ளவும், தவறான முடிவுகளை எடுக்காதிருக்கவும் நம்முடைய பிள்ளைகளுக்கு உதவும். அதோடு, அவர்கள் ‘நன்மை தீமையின்னதென்று பகுத்தறியும்’ திறமையையும் வளர்த்துக்கொள்வார்கள். (எபிரெயர் 5:14) பயபக்தி எனும் அஸ்திவாரம், தொடர்ந்து மனத்தாழ்மையாக இருப்பதற்கும், மோசமானதைச் செய்யாமல் இருப்பதற்கும் அவர்களுக்கு உதவும்.—நீதிமொழிகள் 8:13; 16:6.
பிள்ளைகள் உங்களைக் கவனிக்கிறார்கள்!
யெகோவாமீது அன்புகூரவும் அவருக்குப் பயப்படவும் நம்முடைய பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம்? இந்தக் கேள்விக்கான பதில், மோசே தீர்க்கதரிசியின் மூலம் இஸ்ரவேல் மக்களுக்கு யெகோவா கொடுத்த சட்டத்தில் காணப்படுகிறது. ‘நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசு’ என்று இஸ்ரவேலில் இருந்த பெற்றோருக்குச் சொல்லப்பட்டது.—உபாகமம் 6:5-7.
இந்த வசனங்கள் பெற்றோருக்கு முக்கியமான பாடங்களைக் கற்பிக்கின்றன. அவற்றில் ஒன்று, ஒரு பெற்றோராக, நீங்கள் நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும் என்பதே. யெகோவாவை நேசிக்க பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு முதலில் நீங்கள் அவரை நேசிக்க வேண்டும்; அவருடைய வார்த்தைகள் உங்களுடைய இருதயத்தில் பதிந்திருக்க வேண்டும். இது ஏன் மிகவும் முக்கியமானது? ஏனென்றால், உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள்தான் முதல் ஆசிரியர். உங்களுடைய முன்மாதிரியிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ளும் காரியங்கள் அவர்கள்மீது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் பெற்றோரின் முன்மாதிரியைவிட வேறெதுவும் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தாது.
உங்களுடைய லட்சியங்கள், விருப்பங்கள், ஒழுக்கத் தராதரங்கள் போன்றவை உங்களுடைய சொல்லில் மட்டுமல்ல செயலிலும் தெளிவாகத் தெரியும். (ரோமர் 2:21, 22) சிசு பருவத்திலிருந்தே பிள்ளைகள் தங்களுடைய பெற்றோரை உன்னிப்பாகக் கவனிப்பதன்மூலம் கற்றுக்கொள்கிறார்கள். பெற்றோர் எவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதைக் கவனித்து, பெரும்பாலும் அவற்றிற்கே பிள்ளைகளும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். நீங்கள் உண்மையிலேயே யெகோவாவிடம் அன்பாயிருந்தால் உங்களுடைய பிள்ளைகள் அதைக் கவனிப்பார்கள். உதாரணமாக, பைபிளை வாசிப்பதற்கும் ஆழ்ந்து படிப்பதற்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை அவர்கள் காண்பார்கள். உங்களுடைய வாழ்க்கையில் ராஜ்யம் சம்பந்தமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கிறீர்களென அவர்கள் உணர்ந்துகொள்வார்கள். (மத்தேயு 6:33) நீங்கள் தவறாமல் கிறிஸ்தவக் கூட்டங்களில் கலந்துகொண்டு, ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் பங்குகொள்கையில், யெகோவாவுக்குச் செய்யும் பரிசுத்த சேவையை அதிமுக்கியமானதாகக் கருதுகிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.—மத்தேயு 28:19, 20; எபிரெயர் 10:24, 25.
உங்களுடைய பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்
உபாகமம் 6:5-7 வசனங்களிலிருந்து பெற்றோர் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு பாடம், உங்களுடைய பிள்ளைகளைப் பயிற்றுவிப்பது உங்களுடைய பொறுப்பு என்பதாகும். பூர்வ காலங்களில், யெகோவாவின் மக்கள் மத்தியில் இருந்த பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் கல்விக்குக் கவனம் செலுத்தினார்கள். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் மத்தியிலிருந்த பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டுவதில் முக்கிய பங்கு வகித்தார்கள். (2 தீமோத்தேயு 1:5; 3:14, 15) அப்போஸ்தலன் பவுல் சக கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், விசேஷமாக தந்தையர், ‘கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை [தங்களுடைய பிள்ளைகளை] வளர்க்க’ வேண்டுமென்று குறிப்பிட்டார்.—எபேசியர் 6:4.
பெற்றோர் தங்களுடைய அன்றாடத் தேவைகள், வேலை, இன்னும் பிற காரியங்களின் அழுத்தத்தினால் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டும் பொறுப்பைப் பள்ளி ஆசிரியர்களிடம் விட்டுவிட விரும்பலாம். என்றாலும், அன்பான, அக்கறையுள்ள பெற்றோரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. உங்களுடைய பங்கையும் நீங்கள் ஏற்படுத்தும் நல்ல தாக்கத்தையும் ஒருபோதும் குறைவாக மதிப்பிடாதீர்கள். பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டுவதில் உங்களுக்குப் பிறருடைய உதவி தேவைப்பட்டால் ஞானமாக அவர்களைத் தேர்ந்தெடுங்கள்; ஆனால், உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பரிசுத்தக் கடமையை விட்டுவிடாதீர்கள்.
பிள்ளைகளைப் பயிற்றுவிக்க நேரம் செலவிடுங்கள்
உபாகமம் 6:5-7 வசனங்களிலிருந்து பெற்றோர் கற்றுக்கொள்ளும் இன்னொரு பாடம், பிள்ளைகளைப் பயிற்றுவிக்க நேரமும் முயற்சியும் தேவை என்பதாகும். இஸ்ரவேல பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளின் இருதயத்தில் கடவுளுடைய சத்தியத்தைக் ‘கருத்தாய்ப் போதிக்க’ வேண்டியிருந்தது. “கருத்தாய்ப் போதித்து” என்பதற்கான மூல எபிரெய வார்த்தை ‘திரும்பவும் சொல்வதை,’ ‘மீண்டும் மீண்டும் சொல்வதை’ அர்த்தப்படுத்துகிறது. ஆம், இதுதான் காலைமுதல் மாலைவரை ‘உங்கள் வீட்டில்,’ “வழியில்,” நாள் முழுவதும் செய்யப்பட வேண்டும். பிள்ளைகள் கடவுளைப் பிரியப்படுத்துகிறவர்களாய் இருக்க, அவர்களுக்குக் கற்பிப்பதற்கும் அவர்களுடைய குணங்களையும் பழக்கங்களையும் செதுக்குவதற்கும் நேரமும் முயற்சியும் தேவை.
ஆகவே, உங்களுடைய பிள்ளைகள் உண்மையான கல்வியைக் கற்க உதவுவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? உங்களால் அதிகத்தைச் செய்ய முடியும். யெகோவாவின்மீது அன்புகூரவும் அவருக்குப் பயப்படவும் அவர்களுக்குக் கற்பியுங்கள். நல்ல முன்மாதிரி வையுங்கள். உங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், அவர்களைப் பயிற்றுவிக்க நேரமும் முயற்சியும் செலவிடுங்கள். நீங்கள் பரிபூரணரல்ல, அதனால் உங்களுடைய முயற்சிகளில் நீங்கள் தவறுகள் செய்வீர்கள். ஆனால், கடவுளுடைய சித்தத்தைச் செய்ய நீங்கள் உள்ளப்பூர்வமாக முயற்சி செய்தால், பிள்ளைகள் அதற்காக நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள், அவற்றிலிருந்து பயனும் அடைவார்கள். “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” என்று நீதிமொழிகள் 22:6 சொல்கிறது. இதே நியமம் பெண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.
கல்வி என்பது வாழ்நாள் முழுதும் நீடித்திருக்கிற ஒரு பயணம். நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் கடவுள்மீது அன்புகூர்ந்தால், நீங்கள் நித்தியத்திற்கும் மகிழ்ந்து அனுபவிக்கும் ஒரு பயணமாக அது இருக்கும். அதேனென்றால், யெகோவாவைப் பற்றியும் அவருடைய நோக்கத்திற்கு இசைவாக சேவை செய்வதைப் பற்றியும் கற்றுக்கொள்வதற்கு முடிவேயிருக்காது.—பிரசங்கி 3:10, 11.
[பக்கம் 15-ன் படம்]
உங்களுடைய பிள்ளைகளுக்கு பைபிளை வாசித்துக் காட்டுகிறீர்களா?
[பக்கம் 16-ன் படம்]
படைப்பாளரைப்பற்றி உங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்க நேரமெடுங்கள்