யெகோவாவின் தயவை பெற்ற பணிவான யோசியா
இளவரசன் யோசியாவுக்கு அப்போது ஐந்து வயது. யோசியாவை பயம் கவ்வியிருக்கிறது. அவனுடைய அம்மா எதிதாள் ஒரு பக்கம் அழுது புலம்பிக்கொண்டிருக்கிறார். ஏனெனில் யோசியாவின் தாத்தா, அதாவது மனாசே ராஜா இறந்துவிட்டார்.—2 இராஜாக்கள் 21:18.
இப்போது யோசியாவின் அப்பா ஆமோன் யூதாவின் ராஜாவாக அரியணை ஏறுகிறார். (2 நாளாகமம் 33:20) இவருடைய ஆட்சியின்போது யூதாவில் பொய் வணக்கம் தலைவிரித்தாடுகிறது. அங்கு அநேகர் பொய்க் கடவுட்களை வணங்கி, அவற்றுக்கு பலி செலுத்துகின்றனர். அந்த பலிகளிலிருந்து கிளம்பிய புகை எருசலேம் காற்றையே மாசுபடுத்துகிறது. எந்தப் பக்கம் பார்த்தாலும் பொய் மத ஆசாரியர்கள். பொய் மத பக்தர்கள், மால்காம் என்ற கடவுளின் பேரில் சத்தியம் செய்கின்றனர். இவர்களில் சிலர் யெகோவாவை வணங்குவதாகவும் சொல்லிக்கொண்டனர். ஆனால் இரண்டே வருடங்களில் (பொ.ச.மு. 659-ல்) அம்மோன் ராஜாவின் ஊழியர்களே அவரை கொன்றுவிடுகின்றனர். இதைக் கண்டு மக்கள் கொதித்தெழுகின்றனர். ராஜாவை கொன்ற ஊழியக்காரர்களை வெட்டி வீழ்த்திவிட்டு, இளம் இளவரசன் யோசியாவை ராஜாவாக்குகின்றனர்.—2 இராஜாக்கள் 21:24; 2 நாளாகமம் 33:25; செப்பனியா 1:1, 5.
பொய் தெய்வங்களை வணங்கும் பாவத்தை தன் தந்தை ஆமோன் செய்திருக்கிறார் என்பதை யோசியா நன்கு அறிந்திருந்தார். ஆனால் தன் தகப்பனைப்போல் இல்லாமல் யூதாவின் இளம் ராஜாவான யோசியா, தீர்க்கதரிசியாகிய செப்பனியா அறிவித்த யெகோவாவின் வார்த்தைகளை நன்கு புரிந்துகொள்கிறார். இப்போது யோசியா 15 வயதாயிருக்கையில் (பொ.ச.மு. 652), அதாவது அவருடைய ஆட்சியின் எட்டாவது வருடத்தில் ஓர் முக்கியமான முடிவை எடுக்கிறார். செப்பனியாவின் வார்த்தைகளை அப்படியே பின்பற்ற தீர்மானிக்கிறார். அவர் இன்னும் இளம் பிள்ளையாக இருக்கும்போதே யெகோவாவை தேட அல்லது அறிந்துகொள்ள துவங்குகிறார்.—2 நாளாகமம் 33:21, 22; 34:3.
களத்தில் இறங்குகிறார் யோசியா
நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்கிறார். அதாவது, யூதாவையும் எருசலேமையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த பொய் மதத்தை அடியோடு அழிக்கும் பணியில் இறங்குகிறார். (பொ.ச.மு. 648) பாகால் வணக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட சிலைகளையும், பரிசுத்த தூண்களையும், தூபவர்க்க பலிபீடங்களையும் அடித்து நொறுக்குகிறார். பொய் கடவுட்களின் சொரூபங்களை நொறுக்கி தூள் தூளாக்கி, அவற்றையே சிலைகளுக்கு பலி செலுத்தியவர்களின் கல்லறையின்மேல் தூவிவிடுகிறார். அசுத்தமான அந்தப் பொய் வணக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட பலிபீடங்களை அருவருக்கத்தக்கவையாக கருதி யோசியா அவற்றை தரைமட்டமாக்குகிறார்.—2 இராஜாக்கள் 23:8-14.
யோசியாவின் இந்த சுத்தப்படுத்தும் வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில், லேவிய ஆசாரியனின் மகனான எரேமியா எருசலேமுக்கு வருகிறார் (பொ.ச.மு. 647). யெகோவா இப்போது எரேமியாவை யோசியாவுக்கு தீர்க்கதரிசியாக நியமிக்கிறார். எரேமியாவும் பொய் மதத்திற்கு எதிரான யெகோவாவின் கடுமையான செய்திகளை பயமின்றி தைரியமாக வெளிப்படுத்துகிறார். யோசியாவுக்கும் எரேமியாவுக்கும் ஏறக்குறைய ஒரே வயதுதான். ஆனால், யோசியா சுத்தப்படுத்தும் வேலையில் தைரியமாக செயல்பட்ட போதிலும், எரேமியா பயமின்றி கடவுளுடைய வார்த்தைகளை அறிவித்தபோதிலும், வருத்தகரமாக மக்கள் மீண்டும் பொய் வணக்கத்திற்கு திரும்பினர்.—எரேமியா 1:1-10.
விலைமதிப்பற்ற கண்டுபிடிப்பு
ஐந்து வருடங்கள் உருண்டோடுகின்றன. இப்போது இருபத்தைந்து வயதான யோசியா 18 வருடங்கள் வெற்றிகரமாக அரசாண்டிருக்கிறார். யெகோவாவின் ஆலயத்தின் செயலாளர் சாப்பானையும், நகரத்தலைவர் மாசெயாவையும், பதிவாளர் யோவாக்கையும் யோசியா அழைக்கிறார். அப்போது யோசியா: ‘பிரதான ஆசாரியரான இல்க்கியாவிடம் சென்று, வாயிற் காப்பாளர்கள் மக்களிடமிருந்து ஆலயத்திற்காக வாங்கிய பணத்தைப் பெற்று, யெகோவாவின் ஆலயத்தை பழுதுபார்ப்பதற்காக, வேலையாட்களிடம் கொடு’ என சாப்பானுக்கு கட்டளையிடுகிறார்.—2 இராஜாக்கள் 22:3-6; 2 நாளாகமம் 34:8.
இப்போது ஆலயத்தை பழுதுபார்க்கும் வேலை துவங்குகிறது. வேலையாட்கள் சுறுசுறுப்புடன் பழுது பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தன் பொல்லாத முன்னோர் பாழாக்கிய ஆலயத்தை இப்போது இந்த வேலையாட்கள் சரிசெய்வதற்காக யோசியா யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்கிறார். வேலை துரிதமாக நடந்துகொண்டிருக்கும் இந்தச் சமயத்தில், சாப்பான் அவரைப் பார்க்க வருகிறார். அவர் கையில் ஏதோ சுருள் இருப்பதுபோல தெரிகிறதே, அது என்ன? ‘மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகமே’ அது. அதை பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா ஆலயத்தில் கண்டெடுத்ததாக அவர் சொல்கிறார். (2 நாளாகமம் 34:12-18) இது உண்மையில் நியாயப்பிரமாண சட்டங்களின் மூலப்பிரதி. என்னே ஓர் அருமையான கண்டுபிடிப்பு!
அந்தப் புத்தகத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தையையும் கேட்க யோசியா ஆவலாக இருக்கிறார். சாப்பான் அதை வாசிக்க வாசிக்க, அதிலுள்ள ஒவ்வொரு சட்டமும் தனக்கும், நாட்டு மக்களுக்கும் எவ்வாறு பொருந்துகிறது என்பதை கூர்ந்து கவனிக்கிறார். அந்தப் புத்தகம் உண்மை வணக்கத்தை முக்கியமாக வலியுறுத்துகிறது, அவருடைய கவனத்தை மேலுமாக ஈர்க்கிறது. மக்கள் பொய் வணக்கத்தில் ஈடுபட்டால் அப்போது அவர்களுக்கு வரும் வாதைகளை அது முன்னறிவிக்கிறது. அவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்பதையும் சொல்கிறது. கடவுளுடைய எல்லா சட்டங்களும் சரியாக செய்யப்படவில்லை என உணர்ந்த யோசியா, தன் வஸ்திரத்தை கிழித்துக்கொண்டு, இல்க்கியா, சாப்பான் மற்றும் அநேகருக்கு இந்தக் கட்டளையை கொடுக்கிறார்: ‘கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளைக் குறித்து கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது.”—2 இராஜாக்கள் 22:11-13; 2 நாளாகமம் 34:19-21.
கடவுளுடைய வார்த்தை வெளிப்படுகிறது
இப்போது கடவுளுடைய வார்த்தையை விசாரிப்பதற்காக யோசியாவின் தூதுவர்கள் எருசலேமிலிருக்கும் உல்தாள் எனும் தீர்க்கதரிசினியை சந்திக்கச் செல்கின்றனர். உல்தாள் யெகோவாவின் வார்த்தையிலிருந்து வெளிப்படுத்திய செய்தியுடன் அவர்கள் திரும்புகின்றனர். கண்டெடுக்கப்பட்ட புதிய புத்தகத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த உபத்திரவங்கள் எல்லாம், பொய் மதத்தில் மூழ்கியிருந்த அந்தத் தேசத்திற்கு நிச்சயம் வரும் என்பதுதான் அந்த செய்தி. ஆனாலும், யோசியா தன்னை யெகோவாவிற்கு முன் தாழ்மை படுத்தியதால், அந்த உபத்திரவங்கள் அவருடைய வாழ்நாட் காலத்தில் வராது. உபத்திரவங்கள் வருமுன்னே அவர் சமாதானத்துடனே பிதாக்களண்டையில் சேர்க்கப்படுவார்.—2 இராஜாக்கள் 22:14-20; 2 நாளாகமம் 34:22-28.
ஆனால் யோசியா போரில் இறந்ததால், ‘சமாதானத்தோடே கல்லறையில் சேர்க்கப்படுவார்’ என்ற உல்தாளின் தீர்க்கதரிசனம் உண்மையானதா? (2 இராஜாக்கள் 23:28-30) யூதாவின் மேல் வரவிருந்த ‘பொல்லாப்போடு’ ஒப்பிடுகையில் அவருக்கு ஏற்பட்ட மரணம் ‘சமாதானமான’ ஒன்றுதான். (2 இராஜாக்கள் 22:20; 2 நாளாகமம் 34:28) உல்தாள் சொன்ன விதமாகவே, பொ.ச.மு. 609-607-ல் பாபிலோனியர்கள் எருசலேமை முற்றுகையிட்டு, அழித்தபோது ஏற்பட்ட அந்த பொல்லாப்பிற்கு முன்பே யோசியா மரித்துவிட்டார். ‘ஒருவர் தன் பிதாக்களுடன் சேர்க்கப்படுவது,’ அந்த நபர் போரில் அல்லது சண்டைபோடும்போது இறந்துவிடுவதையும் உட்படுத்தலாம். இதே வார்த்தைகள் மற்ற சந்தர்ப்பங்களிலும் காணப்படுகின்றன. அவற்றில் சில சண்டைபோடும்போது ஏற்பட்ட இறப்பையும், மற்றவை சண்டை போடாதபோது ஏற்பட்ட இறப்பையும் குறிக்கின்றன.—உபாகமம் 31:16; 1 இராஜாக்கள் 2:10; 22:34, 40.
உண்மை வணக்கம் தலையெடுக்கிறது
இப்போது யோசியா, எல்லா எருசலேம் வாசிகளையும் ஆலயத்தில் கூடிவரச் செய்கிறார். அங்கு “கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம்” எல்லோர் முன்னிலையிலும் வாசிக்கிறார். பிறகு அவர், “கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும்” உடன்படிக்கை பண்ணினார். அங்கு கூடியிருந்த எல்லாரும் அந்த உடன்படிக்கையை ஏற்றுக்கொள்கின்றனர்.—2 இராஜாக்கள் 23:1-3.
யோசியா ராஜா இப்போது மீண்டும் சுத்தப்படுத்தும் வேலையில் முழுமூச்சுடன் இறங்குகிறார். முக்கியமாக இப்போது உருவ வழிபாட்டை ஒழித்துக்கட்ட தன் வேலையை தீவிரப்படுத்துகிறார். பொய் மதம் முற்றிலும் துடைத்தழிக்கப்படுவதால், யூதாவிலிருந்த பொய்மத ஆசாரியர்களுக்கு வேலையில்லாமல் போகிறது. பொய் மதத்தில் ஈடுபட்டிருந்த ஆசாரிய லேவியர்கள் யெகோவாவின் பலிபீடத்தில் சேவைசெய்யும் சிலாக்கியத்தை இழக்கின்றனர். அதோடு, சாலொமோன் ராஜா தன் ஆட்சியின்போது கட்டிய பொய் மத மேடைகள் அழிக்கப்படுகின்றன. அசீரியர்களால் முறியடிக்கப்பட்ட (பொ.ச.மு. 740) இஸ்ரவேலின் பத்து கோத்திர ராஜ்யத்திலும் இந்த சுத்தம் செய்யும் வேலை நடக்கிறது.
சுமார் 300 வருடங்களுக்கு முன்பு “தேவனுடைய மனுஷன் ஒருவன்” சொன்ன தீர்க்கதரிசனத்தை யோசியா இப்போது நிறைவேற்றுகிறார். அவன் சொன்ன விதமாக, முதலாம் யெரொபெயாம் ராஜா பெத்தேலில் ஏற்படுத்திய பலிபீடத்தில் பாகால் தெய்வங்களுக்கு ஆசாரியர்களாக இருந்தவர்களின் எலும்புகளை யோசியா எரிக்கிறார். அங்கும் மற்ற இடங்களிலுமிருந்த மேடைகளெல்லாம் அகற்றப்படுகின்றன. உருவ வழிபாட்டில் ஈடுபட்டிருந்த ஆசாரியர்கள் எந்தப் பலிபீடங்களில் பலிசெலுத்தினார்களோ, அதே பலிபீடங்களில் அவர்களே பலியாக செலுத்தப்பட்டனர்.—1 இராஜாக்கள் 13:1-4; 2 இராஜாக்கள் 23:4-20.
பிரமாண்டமான பஸ்கா ஆசரிப்பு
உண்மை வணக்கத்தை நிலைநாட்ட யோசியா எடுத்த எல்லா நடவடிக்கைகளுக்கும் கடவுளுடைய ஆதரவு இருந்தது. அந்த ராஜாவும் தான் உயிரோடிருக்கும் நாளெல்லாம், தன் நாட்டு மக்கள் “தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்காமலிருப்பதற்காக” நன்றி செலுத்துவார். (2 நாளாகமம் 34:33) அவருடைய ஆட்சியின் 18-வது வருடத்தில் நடந்த அந்தப் பிரமாண்டமான நிகழ்ச்சியை எப்படி அவரால் மறக்க முடியும்?
“இந்த [அப்போது கண்டுபிடிக்கப்பட்ட] உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள்” என அந்த ராஜா மக்களுக்கு கட்டளையிடுகிறார். (2 இராஜாக்கள் 23:21) மக்களும் இதற்கு அமோக ஆதரவு கொடுப்பதை பார்த்து யோசியா மகிழ்கிறார். இந்த ஆசரிப்பிற்கு அவர்தாமே, பலிசெலுத்துவதற்கு 30,000 மிருக ஜீவன்களையும் 3,000 காளைகளையும் நன்கொடையாக கொடுக்கிறார். அது பிரமாண்டமான ஆசரிப்பு! பலிகளிலும் அருமையான ஏற்பாடுகளிலும் வணக்கத்திற்கு கூடிவந்தவர்களின் எண்ணிக்கையிலும், தீர்க்கதரிசியாகிய சாமுவேல் காலத்திலிருந்து இதுவரை வேறெந்த ஆசரிப்பும் இவ்வளவு சிறப்பாக நடக்கவில்லை.—2 இராஜாக்கள் 23:22, 23; 2 நாளாகமம் 35:1-19.
கதை முடிகிறது, புலம்பல் துவங்குகிறது
அதன் பிறகு 31 வருடங்களுக்கு (பொ.ச.மு. 659-629) யோசியா நல்ல ராஜாவாக சிறப்பாக ஆட்சி செய்கிறார். இப்போது, அசீரிய ராஜாவிற்கு உதவிசெய்யும் விதத்தில், ஐபிராத்து நதியோரத்தில் இருக்கும் கர்கேமிஸ் என்ற இடத்தில் பாபிலோனிய படைக்கு எதிராக போர் தொடுக்க பார்வோன் நெகோ யூதா வழியாக பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதை யோசியா அறிந்துகொள்கிறார். என்ன காரணத்திற்காகவோ, யோசியா இந்த விஷயத்தில் தலையிட்டு, அந்த எகிப்திய ராஜாவுடன் போரிட செல்கிறார். அதனால் நெகோ தன் தூதுவர்கள் மூலம் யோசியாவிற்கு இந்தச் செய்தியை அனுப்புகிறார்: “தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும்.” ஆனால் யோசியாவோ, அந்த எச்சரிப்புக்கு செவிகொடுக்காமல், எகிப்தியர்களை மெகிதோவில் வீழ்த்திவிட மாறுவேடத்தில் செல்கிறார்.—2 நாளாகமம் 35:20-22.
அந்தோ பரிதாபம்! அந்தப் போரில் எதிரிகள் அம்பு எய்ய, அது குறி தப்பாமல் யோசியாமேல் பாய்கிறது. அப்போது யோசியா தன் ஊழியக்காரர்களிடம்: “என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது” என்கிறார். அப்போது அவர்கள் யோசியாவை அந்த ரதத்திலிருந்து வேறொன்றிற்கு மாற்றி, உடனடியாக எருசலேமிற்கு தூக்கிச் செல்கின்றனர். ஆனால் வழியிலேயே யோசியா மரிக்கிறார். இவ்வாறு யோசியா “மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங் கொண்டாடினார்கள்,” என்கிறது வேதாகமம். இப்போது ராஜா இறந்த துக்கத்தை எரேமியா பாடலாக வடிக்கிறார். பின்பு வந்த விசேஷ நிகழ்ச்சிகளில் பாடப்பட்ட புலம்பல்கள் எல்லாம் யோசியாவை பொருளாகக் கொண்டே பாடப்பட்டன.—2 நாளாகமம் 35:23-25.
எகிப்தியர்களோடு போர் செய்து, யோசியா ராஜா வருந்தத்தக்க தவறை செய்தார். (சங்கீதம் 130:3) இருப்பினும், உண்மை வணக்கத்திற்காக அவர் கொண்டிருந்த உறுதியும், மனத்தாழ்மையும் அவருக்கு கடவுளின் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தன. மனத்தாழ்மையுள்ள தம் ஒப்புக்கொடுத்த ஊழியர்களுக்கு யெகோவா தயவு காண்பிக்கிறார் அல்லது ஆதரவு கொடுக்கிறார் என்ற விஷயத்தை யோசியாவின் வாழ்க்கை அழகாக சித்தரிக்கிறது அல்லவா!—நீதிமொழிகள் 3:34; யாக்கோபு 4:6.
[பக்கம் 29-ன் படம்]
யோசியா ராஜா இளமையிலேயே யெகோவாவை ஊக்கமாக தேடினார்
[பக்கம் 31-ன் படம்]
பொய் வணக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட மேடைகளையெல்லாம் யோசியா அழித்து, உண்மை வணக்கத்தை நிலைநாட்டினார்