தாராளகுணம் ததும்புகையில்
ராஜாவுக்கு பரிசளிக்கும் வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் என்ன கொடுப்பீர்கள்? அவர் உலகிலேயே அதிக செல்வந்தராகவும் ஞானமுள்ளவராகவும் இருந்தால்? அவரை பிரியப்படுத்தும் எந்த பரிசையாவது உங்களால் சிந்திக்க முடிகிறதா? சுமார் மூவாயிரம் வருஷங்களுக்குமுன் சேபாவின் ராஜஸ்திரீ இதே போன்ற ஒரு ராஜாவை—இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோனை—சந்திப்பதற்கு தன் பரிவாரங்களுடன் புறப்படுகையில் இந்தக் கேள்விகளை சிந்திக்க வேண்டியிருந்தது.
120 தாலந்து பொன், ‘மிகுதியான கந்தவர்க்கங்கள், இரத்தினங்கள்’ ஆகியவை அவள் வழங்கிய பரிசு என பைபிள் நமக்கு சொல்கிறது. இன்றைய மதிப்பின்படி பொன் மட்டுமே 160 கோடி ரூபாய் மதிப்புடையது. நறுமண பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தும் இந்த கந்தவர்க்க தைலம் பொன்னை போன்றே விலைமதிப்புடைய பொருள். எவ்வளவு தைலத்தை அந்த ராஜஸ்திரீ சாலொமோனுக்கு கொடுத்தாள் என பைபிள் சொல்லாதபோதிலும், அவளுடைய பரிசு எதற்கும் ஈடாகாது என அது நமக்கு சொல்கிறது.—1 இராஜாக்கள் 10:10.
சேபாவின் ராஜஸ்திரீ செல்வச்செழிப்பும் தாராள குணமும் நிறைந்த ஒரு பெண் என்பதில் சந்தேகமில்லை. மேலும், அவள் காண்பித்த தாராள குணம் திருப்பி அவளுக்கே காண்பிக்கப்பட்டது. பைபிள் சொல்கிறது: ‘சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவுக்குக் கொண்டு வந்தவைகளைப் பார்க்கிலும் அதிகமாய் அவள் ஆசைப்பட்டுக் கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்குக் கொடுத்தான்.’ (2 நாளாகமம் 9:12) பரிசுகளை பரிமாறிக்கொள்வது அரச பரம்பரையின் பழக்கமாக இருக்கலாம் என்பது உண்மையே. இருந்தபோதிலும், சாலொமோன் ‘தாராளமாய் கொடுத்ததை’ பைபிள் குறிப்பாக தெரிவிக்கிறது. (1 இராஜாக்கள் 10:13) சாலொமோன் தாமே எழுதினார்: “உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.”—நீதிமொழிகள் 11:25.
நிச்சயமாகவே, சாலொமோனை சந்திக்க சேபாவின் ராஜஸ்திரீ நேரத்தையும் முயற்சியையும் தியாகம் செய்தாள். தற்போது ஏமன் குடியரசு என அழைக்கப்படும் பகுதியில் சேபா நாடு இருந்தது. ஆகவே, அந்த ராஜஸ்திரீ எருசலேமுக்கு வருவதற்கு சுமார் 1,600 கிலோமீட்டர் ஒட்டகத்தில் பயணம் செய்திருக்கலாம். “பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்” என இயேசு சொன்னார். ஏன் சேபாவின் ராஜஸ்திரீ இவ்வளவு முயற்சியெடுத்து வந்தாள்? மிக முக்கியமாக ‘சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கவே’ அவள் வந்தாள்.—லூக்கா 11:31.
சேபா ராஜஸ்திரீ “சிக்கலான கேள்விகள் மூலம் அவரைச் [சாலொமோனை] சோதிக்க வந்தாள். . . . [அவள்] தன் மனதில் இருந்த எல்லாவற்றையும் பற்றி அவனிடத்தில் பேசினாள்” என 1 இராஜாக்கள் 10:1, 2 (NW) சொல்கிறது. சாலொமோன் எவ்வாறு பதிலளித்தார்? “அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான், அவளுக்கு விடுவிக்கக் கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாக இருக்கவில்லை.”—1 இராஜாக்கள் 10:3.
அவள் கேட்டவையும் பார்த்தவையும் அவளை வியக்க வைத்தது! அந்த ராஜஸ்திரீ மனத்தாழ்மையுடன் பதிலளித்தாள்: “எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் சந்தோஷமுள்ளவர்கள்.” (1 இராஜாக்கள் 10:4-8, NW) சாலொமோனின் ஊழியர்கள் செல்வ செழிப்பில் திளைத்திருந்தனர். ஆனால், இதனால்தான் அவர்கள் சந்தோஷமுள்ளவர்கள் என அவள் சொல்லவில்லை. மாறாக, கடவுளால் அருளப்பட்ட சாலொமோனின் ஞானத்தை எப்போதும் கேட்கும் பாக்கியத்திற்காகவே அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். படைப்பாளருடைய ஞானத்திலும் அவருடைய குமாரனுடைய ஞானத்திலும் திளைத்து அதனால் சந்தோஷமடையும் இன்றைய யெகோவாவின் ஜனங்களுக்கு சேபாவின் ராஜஸ்திரீ என்னே ஒரு சிறந்த மாதிரி!
அந்த ராஜஸ்திரீயின் அடுத்த விமர்சனமும் குறிப்பிடத்தக்கது: “உம்முடைய கடவுளாகிய யெகோவா துதிக்கப்படுவாராக.” (1 இராஜாக்கள் 10:9, NW) சாலொமோனின் ஞானத்திலும் ஐசுவரியத்திலும் யெகோவாவின் கரம் இருந்ததற்கான அத்தாட்சியை அவள் தெளிவாக கண்டாள். இது, ஆரம்பத்தில் இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த வாக்குறுதிக்கு இசைவாக இருக்கிறது. அவர் சொன்னார்: ‘என்னுடைய கட்டளைகளை கைக்கொண்டு நடப்பது,’ “ஜனங்களின் கண்களுக்கு முன்பாக . . . உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.”—உபாகமம் 4:5-7.
ஞானத்தை அருளுபவரிடம் அண்டிவருதல்
நவீன காலங்களிலும் லட்சோப லட்சம் பேர் யெகோவாவின் அமைப்பினிடம் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறார்கள். எதன் காரணமாக? ‘தேவனுடைய இஸ்ரவேலர்’—இயல்பாகவே அல்ல, ஆனால் தங்களை வழிநடத்துவதற்கு கடவுளுடைய பரிபூரண சட்டங்களையும் நியமங்களையும் வைத்திருப்பதால்—‘ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள்’ என்பதை உணர்ந்த காரணத்தால் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறார்கள். (கலாத்தியர் 6:16) ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான புதிய சீஷர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னதை முழுக்காட்டுதல் எண்ணிக்கை காட்டுகிறது: “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம்.” (சகரியா 8:23) யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு பரிமாறியிருக்கும் ஆவிக்குரிய விருந்தை காண்கையில் இந்தப் புதியவர்கள் எவ்வளவாய் வியப்படைகிறார்கள்! இதற்கு நிகரான ஆவிக்குரிய செழுமையை அவர்களுடைய முன்னாள் மதங்களில் ஒருபோதும் பார்த்ததில்லை.—ஏசாயா 25:6.
மிகப் பெரிய கொடையாளருக்கு கொடுத்தல்
ஏக சக்கரவர்த்தியும் வாரி வழங்குவதில் ஒப்பற்ற கொடையாளருமாகிய யெகோவா தேவனுக்கு என்ன கைமாறு செய்வது என நன்றியுள்ளம் கொண்டவர்கள் நினைப்பது இயல்பு. “ஸ்தோத்திர பலி”யே யெகோவாவுக்கு அளிக்கும் மிகச் சிறந்த பரிசு என பைபிள் காட்டுகிறது. (எபிரெயர் 13:15) ஏன்? ஏனென்றால் இந்த முடிவு காலத்தில் யெகோவாவுக்கு அதிக அக்கறைக்குரிய விஷயமான உயிரை காப்பதோடு இந்தப் பலி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது. (எசேக்கியேல் 18:23) அதோடு, வியாதிப்பட்டவர்களுக்கும் மனச்சோர்வடைந்தோருக்கும் மற்றவர்களுக்கும் ஒருவர் தன்னுடைய சக்தியையும் நேரத்தையும் செலவழிப்பதே ஏற்கத்தகுந்த பலி.—1 தெசலோனிக்கேயர் 5:14; எபிரெயர் 13:16; யாக்கோபு 1:27.
பொருள் சம்பந்தமான நன்கொடைகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. பைபிள்களையும், பைபிள் சார்ந்த பிரசுரங்களையும், கிறிஸ்தவர்கள் கூடிவருவதற்கான இடங்களையும் வாங்குவதை இவை சாத்தியமாக்குகின்றன. (எபிரெயர் 10:24, 25) போர்களாலும் இயற்கை சேதங்களாலும் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி வழங்கவும் இந்த நன்கொடைகள் உதவுகின்றன.
கொடுக்கும் இந்த விஷயத்தில் நம்மை வழிநடத்துவதற்கு கடவுளுடைய வார்த்தை சிறந்த நியமங்கள் சிலவற்றை தருகிறது. உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட தொகையை அல்ல, ஆனால் நியாயமாக எதைக் கொடுக்க முடியுமோ அதை மனப்பூர்வமாக உற்சாக இருதயத்தோடு கொடுக்கும்படியே அது கிறிஸ்தவர்களுக்கு போதிக்கிறது. (2 கொரிந்தியர் 9:7) சிலர் அதிகம் கொடுக்கலாம்; மற்றவர்கள் இயேசுவின் காலத்தில் ஏழ்மையிலிருந்த விதவையைப் போன்று கொஞ்சமாக கொடுக்கலாம். (லூக்கா 21:2-4) இந்த முழு பிரபஞ்சத்தின் எஜமானராகிய யெகோவா, அவருடைய நாமத்திற்காக நல்ல உள்நோக்கத்துடன் கொடுக்கப்படும் எந்தப் பரிசையும் தியாகத்தையும் உயர்வாக மதிப்பது தனிச்சிறப்பிற்குரிய ஒன்றல்லவா?—எபிரெயர் 6:10.
யெகோவாவின் ஜனங்கள் உற்சாகமாய் கொடுப்பதற்காக, எவற்றிற்கெல்லாம் நன்கொடைகள் தேவை, அப்படிப்பட்ட நன்கொடைகளை எவ்வாறு சிறந்த வழிகளில் வழங்கலாம் என்பதைப் பற்றி அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. அதற்கு பிரதிபலிக்கும்படி, மனமுள்ளோரை பரிசுத்த ஆவி தூண்டுகிறது. பூர்வ இஸ்ரவேலில் ஆசரிப்புக் கூடாரத்தையும், பின்னால் ஆலயத்தையும் கட்டுகையில் இதே முறை பின்பற்றப்பட்டது. (யாத்திராகமம் 25:2; 35:5, 21, 29; 36:5-7; 39:32; 1 நாளாகமம் 29:1-19) பொ.ச. முதல் நூற்றாண்டில் மற்ற தேசத்தினருக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கும், இஸ்ரவேலில் வறுமையில் வாடிய சகோதரர்களுக்கு உதவுவதற்கும் தேவையான எல்லா உதவிகளையும் பெற்றது இதே முறையில்தான்.—1 கொரிந்தியர் 16:2-4; 2 கொரிந்தியர் 8:4, 15; கொலோசெயர் 1:23.
அதே விதமாக இன்றும் யெகோவா தம்முடைய ஜனங்களை ஆசீர்வதித்திருக்கிறார். இதுவரை உலகம் கண்டிராத மாபெரும் பிரசங்க மற்றும் போதிக்கும் வேலையை செய்துமுடிக்க தேவைப்படுகிறவற்றை கொடுப்பதன்மூலம் தொடர்ந்து அவர்களை ஆசீர்வதிப்பார்.—மத்தேயு 24:14; 28:19, 20.
தற்போதைய தேவைகள் என்ன?
முன்பு பிரசங்க வேலை தடைசெய்யப்பட்டிருந்த அநேக நாடுகளில் சமீப வருடங்களில் தடை நீக்கப்பட்டு யெகோவாவின் சாட்சிகள் சட்டப்படி பதிவுசெய்யப்பட்ட மத அமைப்பாக ஆகியிருக்கின்றனர். அதன் விளைவாக இந்நாடுகள் பலவற்றில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகவே, பைபிள்களுக்கும் பைபிள் சார்ந்த பிரசுரங்களுக்கும் அதிக தேவை இருக்கிறது என்பது புரிந்துகொள்ளத்தக்கதே.
ராஜ்ய மன்றங்களுக்கான தேவையும் அதிகம் உள்ளது. உலகமுழுவதிலும் தற்சமயம் சுமார் 9,000 ராஜ்ய மன்றங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு ராஜ்ய மன்றம் கட்டப்படுமேயானால் தற்போதைய இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு 24 வருடங்களுக்கு மேல் ஆகலாம்! இதற்கிடையில், தினமும் சுமார் ஏழு புதிய சபைகள் உருவாகி வருகின்றன. அவற்றில் பல பொருளாதார வசதி குறைந்த நாடுகளிலேயே உருவாகி வருகின்றன. மறுபட்சத்தில், இந்த இடங்களில் பெருஞ்செலவு பிடிக்கும் கட்டிடங்கள் தேவையில்லை. சில இடங்களில், சமுதாயத்திற்கு சிறந்த சாட்சியாக விளங்குகிற அதேசமயத்தில் தேவையை பூர்த்தி செய்கிற ராஜ்ய மன்றத்தை மிகச் சிறிய தொகையான 2.4 லட்சம் ரூபாயைக் கொண்டே கட்டி முடிக்கலாம்.
முதல் நூற்றாண்டில், சில கிறிஸ்தவர்கள் மற்றவர்களைவிட அதிக பொருளாதார வசதி படைத்தவர்களாக இருந்தனர். ஆகவே, அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “இப்பொழுது உங்களிடம் மிகுதியாயிருக்கிறது; அவர்களுடைய குறையை நீக்குங்கள். அவ்வாறே அவர்களிடம் மிகுதியாக இருக்கும்போது உங்கள் குறையை நீக்குவார்கள். இவ்வாறு உங்களிடையே சமநிலை ஏற்படும்.” (2 கொரிந்தியர் 8:14, பொ.மொ.) அதேவிதமாக இன்றும் உலகின் பல பகுதிகளில் பைபிள்கள், பைபிள் பிரசுரங்கள், ராஜ்ய மன்றங்கள், இடர் நிவாரண உதவி மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் பணத்தை கொடுப்பதன் மூலம் ‘சமநிலைப்படுத்தப்படுகிறது.’ இப்படிப்பட்ட கொடுத்தல், கொடுப்போருக்கும் பெற்றுக்கொள்வோருக்கும் என்னே ஓர் ஆசீர்வாதம்!—அப்போஸ்தலர் 20:35.
தாராள மனம்படைத்த ஜனங்களிடமிருந்து சங்கம் பெறும் கடிதங்களில் குறிப்பிட்டபடி இந்தப் பத்திரிகையின் வாசகர்கள் அநேகர் நன்கொடை அளிக்க விருப்பம் உள்ளவர்களாய் இருக்கின்றனர். ஆனால், எந்தெந்த வழிகளில் இந்த நன்கொடையை அளிக்கலாம் என்பதைப் பற்றி சரியாக தெரியாதவர்களாக இருக்கின்றனர். சந்தேகமின்றி பின்வரும் பெட்டி அவர்களுடைய கேள்விகளுக்கு விடையளிக்க உதவும்.
சாலொமோனின் மகத்தான ஆட்சியின்போது அவரைப் பற்றி கேள்விப்பட்ட “பூமியின் ராஜாக்கள் எல்லாரும்” அவரை சந்திக்க வந்தார்கள். இருந்தாலும், சேபாவின் ராஜஸ்திரீயைப் பற்றி மட்டும்தான் பைபிள் குறிப்பிடுகிறது. (2 நாளாகமம் 9:23) எவ்வளவு பெரிய தியாகம்! ஆனால் அவள் முழுநிறைவாக பயனடைந்தாள்—அவளுடைய சந்திப்பின் முடிவில் “ஆச்சரியத்தால் மூச்சடைத்துப் போகும்” அளவுக்கு பயனடைந்தாள்.—2 நாளாகமம் 9:4, டுடேஸ் இங்கிலீஷ் வர்ஷன்.
பெரிய ராஜாவும் கொடையாளருமாகிய யெகோவா, அவருக்காக அநேக தியாகங்கள் செய்தவர்களுக்கு சாலொமோன் செய்ததைக் காட்டிலும் அதிகத்தை எதிர்காலத்தில் செய்வார். அவருடைய நியாயத்தீர்ப்பின் நாளிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல, அதற்குப்பின் அவர் ‘தமது கையைத் திறந்து சகல பிராணிகளின் [“உயிருள்ள யாவற்றின்,” NW] வாஞ்சையையும் திருப்தியாக்குவதால்’ அவர்கள் ‘ஆச்சரியத்தால் மூச்சடைத்துப்’ போவார்கள்.—சங்கீதம் 145:16.
[பக்கம் 22-ன் பெட்டி]
இதோ! சிலர் கொடுக்க விரும்பும் வழிகள்
உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்
நன்கொடை பெட்டியில் ஒரு குறிப்பிட்ட தொகையை போடுவதற்காக அநேகர் திட்டமிட்டு அதற்காக பணம் ஒதுக்குகின்றனர். அதை “சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போடுகின்றனர். இத்தொகையை சபைகள் ஒவ்வொரு மாதமும் உள்ளூர் கிளை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கின்றன.
மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடை பணத்தை நேரடியாக பொருளாளர் அலுவலகம், Praharidurg Prakashan Society, Plot A/35, Near Industrial Estate, Nangargaon, Lonavla, 410 401 என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்கலாம். நகைகளையோ அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களையோ நன்கொடையாக வழங்கலாம். இவையனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி அளிக்கப்பட்ட அன்பளிப்பு என்பதைக் குறிப்பிடும் சுருக்கமான கடிதத்தோடு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
நிபந்தனையோடுகூடிய நன்கொடை ஏற்பாடு
உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு பணம் அனுப்பி கொடுக்க மற்றொரு ஏற்பாடும் உள்ளது. இந்த ஏற்பாட்டின்படி, நன்கொடை அளிப்பவருக்கு பணம் தேவைப்படும் சமயத்தில் திருப்பி கொடுக்கப்படும். மேலுமான தகவல்களுக்கு தயவுசெய்து மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருளாளர் அலுவலகத்தோடு தொடர்பு கொள்ளவும்.
திட்டமிட்ட நன்கொடை
நிபந்தனையற்ற பண நன்கொடைகள், நிபந்தனையோடுகூடிய பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற முறைகளும் இருக்கின்றன. அவை:
இன்ஷ்யூரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரம் அல்லது ஓய்வூதிய திட்டத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.
வங்கி பண இருப்பு: வங்கி பண இருப்புகள், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகள் உவாட்ச் டவர் சொஸைட்டி டிரஸ்டில் வைக்கலாம், அல்லது மரணத்திற்கு பிறகு அதற்கு கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதிவைக்கலாம்.
பங்குகளும் பாண்டுகளும்: பங்குகளையும் பாண்டுகளையும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கலாம். அல்லது அதிலிருந்து கிடைக்கும் வருவாயை நன்கொடை அளிப்பவருக்கே தொடர்ந்து செலுத்தும்படி ஓர் ஏற்பாட்டை செய்யலாம்.
நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அல்லது அதை அளிப்பவர் உயிரோடிருக்கும் வரையில் அவற்றை அனுபவித்து, அவருடைய மரணத்துக்குப்பின் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு உரியதாகும்படி செய்யலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரம் எழுதுவதற்குமுன் அவர் சங்கத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
உயில்களும் டிரஸ்டுகளும்: சொத்து அல்லது பணத்தை உயில்கள் மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு சேரும்படி எழுதிவைக்கலாம் அல்லது டிரஸ்டின்மூலம் சங்கத்தை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம். ஒரு மத அமைப்பு நன்மையடைய ஒரு டிரஸ்ட் வரி சம்பந்தப்பட்ட சில சலுகைகளைப் பெறலாம்.
திட்டமிட்ட நன்கொடை” என்ற பதம், இவ்விதமான நன்கொடைகளை அளிப்பவர் அதற்காக முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.
[பக்கம் 23-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கைகள் மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகின்றன