வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஆகஸ்ட் 3-9
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 13-14
“தைரியமாக நின்று, இன்று யெகோவா உங்களுக்குத் தரும் மீட்பைப் பாருங்கள்”
மோசே விசுவாசத்துக்குப் பேர்போனவர்!
கடவுள் செங்கடலைப் பிளப்பார் என்றும், தப்பிச்செல்ல இஸ்ரவேலருக்கு வழி உண்டாக்குவார் என்றும் அப்போது மோசேக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். என்றாலும், தம்முடைய மக்களைக் காப்பாற்ற கடவுள் எதையாவது செய்வார் என உறுதியாய் நம்பினார். மற்ற இஸ்ரவேலருடைய மனதிலும் இந்த நம்பிக்கையை விதைக்க விரும்பினார். அதனால் அந்த ஜனங்களைப் பார்த்து: “பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்கு [யெகோவா] உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்” என்று சொன்னார். (யாத்திராகமம் 14:13) மற்ற இஸ்ரவேலருடைய விசுவாசத்தை அவரால் பலப்படுத்த முடிந்ததா? நிச்சயமாக! “விசுவாசத்தினால்தான் அவர்கள், வறண்ட தரையில் நடப்பதுபோல் செங்கடலில் நடந்து போனார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (எபிரெயர் 11:29) ஆம், மோசேயின் விசுவாசம் அவருக்கு மட்டுமல்ல இஸ்ரவேலர் எல்லோருக்குமே பயனளித்தது.
சர்வ வல்லவர், இருந்தாலும் கரிசனையுள்ளவர்!
13 யாத்திராகமம் 14:19-22-ஐ வாசியுங்கள். இஸ்ரவேலர்களோடு நீங்களும் இருப்பதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது, எகிப்தியர்களின் படை உங்களைத் துரத்திக்கொண்டு வருகிறது; உங்கள் முன்னால் இருப்பதோ செங்கடல்! வசமாக மாட்டிக்கொண்டதுபோல் உணருகிறீர்கள். இப்போது யெகோவா தலையிடுகிறார்! உங்கள் முன்னால் போய்க்கொண்டிருந்த மேகத் தூண் இப்போது உங்கள் முகாமுக்கு பின்னால் போய், உங்களுக்கும் எகிப்தியர்களுக்கும் இடையில் வந்து நிற்கிறது. எகிப்தியர்கள் இருட்டில் தவிக்கிறார்கள்; ஆனால் உங்கள் முகாமோ அற்புதமான வெளிச்சத்தில் பிரகாசிக்கிறது. இப்போது, மோசே தன்னுடைய கையைக் கடலுக்கு நேராக நீட்டுகிறார். கிழக்கிலிருந்து பலத்த காற்று வீசுகிறது. கடல் இரண்டாகப் பிளக்கிறது! கடல்படுகை உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது! அது சேரும் சகதியுமாக இருக்குமோ என்று நினைத்துக்கொண்டே அதில் கால் வைக்கிறீர்கள். ஆனால் அது நன்றாகக் காய்ந்திருக்கிறது! கொஞ்சம்கூட வழுக்கவே இல்லை! உங்களால் சுலபமாக நடந்துபோக முடிகிறது! நீங்களும், உங்கள் குடும்பமும், உங்களுடைய மிருகங்களும், அந்தக் கடல்படுகையில் மற்ற இஸ்ரவேலர்களோடு சேர்ந்து சீராக நடந்துபோகிறீர்கள். வேகமாக நடக்க முடியாதவர்கள்கூட பத்திரமாக அக்கரைக்குப் போய்ச் சேருகிறார்கள்!
w09 3/15 பக். 7 பாரா. 2-3
யெகோவாவை நினைவில் வைப்பதற்குக் காரணங்கள்
சக்கரங்கள் கழன்ற இரதங்களோடு எகிப்தியர் திண்டாடுகையில், இஸ்ரவேலர் எல்லாரும் கிழக்குக் கரையை அடைந்துவிட்டார்கள். மோசே தன்னுடைய கையை சிவந்த சமுத்திரத்தின்மேல் நீட்டினார். உடனே, மதில்போல் நின்றுகொண்டிருந்த தண்ணீர் கடல்படுகையை மூடிவிட்டது. லட்சக்கணக்கான டன் எடையுள்ள தண்ணீர் பாய்ந்துவந்து பார்வோனையும் அவனுடைய சேனைகளையும் மூழ்கடித்துவிட்டது. அவர்களில் ஒருவர்கூட தப்பவில்லை. இஸ்ரவேலருக்கு எப்பேர்ப்பட்ட விடுதலை!—யாத். 14:26-28; சங். 136:13-15.
இச்சம்பவம் நடந்து பல காலத்திற்குப் பிறகும்கூட சுற்றுப்புற தேசத்தார் அதை நினைத்து கதிகலங்கிப் போயிருந்தார்கள். (யாத். 15:14-16) நாற்பது வருடங்களுக்குப் பிறகு எரிகோ பட்டணத்தைச் சேர்ந்த ராகாப் இரண்டு இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: ‘உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறது, . . . நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதை . . . கேள்விப்பட்டோம்.’ (யோசு. 2:9, 10) யெகோவா தம் மக்களை எப்படி மீட்டார் என்பதை அந்தப் புறதேசத்தார்கூட மறக்கவில்லை. அப்படியிருக்க இஸ்ரவேலர் யெகோவாவை மறக்காதிருப்பதற்கு இன்னுமதிக காரணங்கள் இருக்கின்றன, அல்லவா?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 1117
நெடுஞ்சாலை, சாலை
பழங்காலத்தில் இருந்தே, சாலைகளும் நெடுஞ்சாலைகளும் வியாபாரிகள் பயன்படுத்தும் முக்கியமான சாலைகளும் பாலஸ்தீனாவில் இருந்தன. இந்த சாலைகள் பாலஸ்தீனா பகுதிகளில் இருந்த நகரங்களையும் ராஜ்யங்களையும் இணைத்தன. (எண் 20:17-19; 21:21, 22; 22:5, 21-23; யோசு 2:22; நியா 21:19; 1சா 6:9, 12; 13:17, 18) எகிப்திலிருந்து பெலிஸ்திய நகரங்களான காசா மற்றும் அஸ்கலோனுக்கு போகும் முக்கிய சாலை வடகிழக்கில் இருந்த மெகிதோவின் பக்கமாக வளைந்தது. அது அப்படியே கலிலேயா கடலின் வடக்கு பக்கமாக இருந்த ஆத்சோர் வழியாக சென்று தமஸ்குவை எட்டியது. எகிப்திலிருந்து பெலிஸ்தியா வழியாக செல்லும் இந்த பாதையில் சென்றால் வாக்கு கொடுக்கப்பட்ட தேசத்துக்கு சீக்கிரமாக போய்விடலாம். ஆனால், பெலிஸ்தியர்கள் இஸ்ரவேலர்களைத் தாக்கிவிடக்கூடாது என்பதற்காக யெகோவா அவர்களை வேறு பாதையில் கூட்டிக்கொண்டு போனார். இப்படி, அவர்களுக்குக் கருணை காட்டினார்.—யாத் 13:17.
it-1-E பக். 782 பாரா. 2-3
பயணம்
செங்கடலின் எந்தப் பகுதியில் இஸ்ரவேலர்கள் கடந்து சென்றார்கள்?
இஸ்ரவேலர்கள், “வனாந்தரத்தின் எல்லையில் இருந்த” ஈத்தாமை வந்து சேர்ந்தார்கள். அப்போது கடவுள் மோசேயிடம், “திரும்பிப் போய், . . . பிககிரோத் என்ற இடத்துக்கு முன்னால் . . . கடற்கரையிலே நீங்கள் முகாம்போட வேண்டும்” என்று கட்டளையிட்டார். இஸ்ரவேலர்கள் இப்படிச் செய்தால், அவர்கள் “வழி தெரியாமல் அலைந்து திரிகிறார்கள்” என்று பார்வோன் நினைத்துக்கொள்வான். (யாத் 13:20; 14:1-3) “திரும்பிப் போய்” என்பதற்கான எபிரெய வினைச்சொல் வெறுமனே “பாதை மாறி போவதை” அர்த்தப்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக, “வந்தத் திசையில் திரும்பிப் போவதைக்” குறிக்கிறது என்று எல் ஹஜ் பாதையைப் பற்றிச் சொல்லும் அறிஞர்கள் சொல்கிறார்கள். இஸ்ரவேலர்கள் சூயஸ் வளைகுடாவின் வடமுனையில் இருந்த ஒரு இடத்துக்கு வந்து சேர்ந்ததும் அங்கிருந்து அப்படியே திரும்பி ஜெபல் அட்டாக்கவின் (அதாவது, கடலின் மேற்கு கரையில் இருந்த மலைத் தொடர்களின்) கிழக்கு பக்கத்துக்கு அணிவகுத்து சென்றதாக அவர்கள் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட இடத்தில் இஸ்ரவேலர்களைப் போல ஒரு பெரிய கூட்டமான மக்கள் இருக்கும்போது, வடக்கிலிருந்து யாராவது துரத்திக்கொண்டு வந்தால் வசமாக மாட்டிக்கொண்டதுபோல் இருக்கும் என்றும் அந்த அறிஞர்கள் சொல்கிறார்கள்.
முதல் நூற்றாண்டு யூத பாரம்பரியமும் இதைத்தான் சொல்கிறது. அதைவிட முக்கியமாக, பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்களோடும் இது ஒத்துப்போகிறது. ஆனால், பிரபலமான நிறைய அறிஞர்கள் அதை ஏற்றுக்கொள்வது இல்லை. (யாத் 14:9-16) செங்கடலின் வடக்கு முனையிலிருந்து கொஞ்சம் தூரம் சென்றுதான் இஸ்ரவேலர்கள் கடலை கடந்திருப்பார்கள். இல்லையென்றால், பார்வோனின் படை கடலின் மறுபக்கத்துக்குப் போய் அவர்களைச் சுலபமாகப் பிடித்திருக்கும்.—யாத் 14:22, 23.
ஆகஸ்ட் 10-16
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 15-16
“யெகோவாவைப் பாடி புகழுங்கள்”
w95 10/15 பக். 11 பாரா 11
மெய்க் கடவுளுக்கு ஏன் இப்போது பயப்பட வேண்டும்?
11 எகிப்திய இராணுவ படைகளை யெகோவா அழித்ததானது அவருடைய வணக்கத்தாரின் பார்வையில் அவரை உயர்த்தியது, அவருடைய பெயர் எல்லா இடங்களிலும் மிகவும் விரிவாகப் பரவும்படி செய்தது. (யோசுவா 2:9, 10; 4:23, 24) ஆம், எகிப்தின் வல்லமையற்ற பொய்க் கடவுட்களுக்கு மேலாக அவருடைய பெயர் உயர்த்தப்பட்டது, அக்கடவுட்கள் தங்கள் வணக்கத்தாரை விடுவிக்க முடியாதவர்களாய் நிரூபித்தனர். அவர்களுடைய தெய்வங்கள், சாகக்கூடிய மனிதர்கள், இராணுவ பலம் ஆகியவற்றின் மீது கொண்டிருந்த நம்பிக்கை அதிக கசப்பான ஏமாற்றத்தில் முடிவடைந்தது. (சங்கீதம் 146:3) தம் ஜனங்களை வல்லமைவாய்ந்த விதத்தில் விடுவிக்கும் உயிருள்ள கடவுளின் பேரில் கொண்டிருந்த ஆரோக்கியமான பயத்தை பிரதிபலிக்கும் துதிகளைப் பாடும்படி இஸ்ரவேலர்கள் தூண்டப்பட்டனர் என்பது ஆச்சரியமாயில்லை!
w95 10/15 பக். 11-12 பாரா. 15-16
மெய்க் கடவுளுக்கு ஏன் இப்போது பயப்பட வேண்டும்?
15 மோசேயோடே நாம் பாதுகாப்பாக நின்றுகொண்டிருந்தோம் என்றால், நிச்சயமாகவே இவ்வாறு பாடுவதற்கு தூண்டப்படுவோம்: “யெகோவாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்?” (யாத்திராகமம் 15:11, NW) இப்படிப்பட்ட உணர்ச்சிமிக்க கருத்துக்கள் அந்த சமயத்திலிருந்து நூற்றாண்டுகளாக எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. பைபிளின் கடைசி புத்தகத்தில் அப்போஸ்தலனாகிய யோவான் உண்மைத்தன்மையுள்ள கடவுளுடைய அபிஷேகம்செய்யப்பட்ட ஊழியர்களின் ஒரு தொகுதியை விவரிக்கிறார்: ‘அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடுகிறார்கள்.’ இந்த மகத்தான பாடல் என்ன? “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்?”—வெளிப்படுத்துதல் 15:2-4.
16 அதேபோல் இன்றும்கூட கடவுளுடைய சிருஷ்டிப்பின் வேலைப்பாடுகளை மட்டுமல்லாமல் அவருடைய தீர்ப்புகளைக் குறித்தும் விடுவிக்கப்பட்ட வணக்கத்தார் போற்றுதல் தெரிவிக்கின்றனர். எல்லா தேசங்களிலிருந்து வரும் ஜனங்களும் ஆவிக்குரியபிரகாரமாய் விடுதலையாக்கப்பட்டு, இந்த அசுத்தமான உலகிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் கடவுளுடைய நீதியான தீர்ப்புகளை அறிந்து அவற்றை நடைமுறையில் அப்பியாசிக்கின்றனர். யெகோவாவின் வணக்கத்தார் அடங்கிய சுத்தமான, நேர்மையான அமைப்போடு வசிப்பதற்கு ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கானோர் இந்தக் கறைபடிந்த உலகிலிருந்து வெளியேறுகின்றனர். விரைவில், பொய் மதத்திற்கு எதிராகவும் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் மீதமாயுள்ள பாகத்திற்கு எதிராகவும் கடவுளின் கடுங்கோபமான நியாயத்தீர்ப்புகள் நிறைவேற்றப்பட்ட பிறகு, அவர்கள் ஒரு நீதியான புதிய உலகில் என்றென்றுமாக வாழ்வர்.
it-2-E பக். 454 பாரா 1
இசை
இஸ்ரவேலில் குழுவாக சேர்ந்து பாடல்கள் பாடும்போது பெரும்பாலும் அவர்கள் எசப்பாட்டைப் பாடியிருக்கலாம். ஒருவேளை இரண்டு குழுக்களாக அடுத்தடுத்த வரிகளை பாடியிருக்கலாம் அல்லது ஒருவர் மட்டும் பாடும்போது மற்றவர்கள் சேர்ந்து அதற்கு பதில்பாட்டு பாடியிருக்கலாம். பைபிளில் இதைத்தான் “பதில்பாட்டு” என்று குறிப்பிட்டிருக்கலாம். (யாத் 15:21; 1சா 18:6, 7) 136-வது சங்கீதம் போன்ற சில சங்கீதங்கள் இதுபோன்ற பாடல் நடையில்தான் எழுதப்பட்டிருக்கின்றன. நெகேமியா காலத்தில் நன்றி பாடல்களைப் பாட இரண்டு மிகப் பெரிய குழுவினர் இருந்தார்கள். அவர்களைப் பற்றியும் எருசலேம் மதில்களின் அர்ப்பண விழாவில் அவர்கள் பாடிய விதத்தைப் பற்றியும் பார்க்கும்போது அவர்களும் இந்த முறையில்தான் பாடியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.—நெ 12:31, 38, 40-42.
it-2-E பக். 698
பெண் தீர்க்கதரிசி
பைபிளில் முதலில் சொல்லப்பட்டிருக்கும் பெண் தீர்க்கதரிசி மிரியாம். கடவுளின் தூண்டுதலால், அவருடைய சில செய்திகளை அல்லது செய்தியை அவள் சொன்னாள். ஒருவேளை, மிரியாம் அதைப் பாடல்கள் மூலமாகச் சொல்லியிருக்கலாம். (யாத் 15:20, 21) அதனால்தான் அவளும் ஆரோனும் மோசேயிடம், “எங்கள் மூலம் [யெகோவா] பேசவில்லையா?” என்று கேட்டார்கள். (எண் 12:2) இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டி வந்ததைப் பற்றிச் சொன்னபோது “மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும்” அவர்கள்முன் அனுப்பியதாக யெகோவாவே மீகா தீர்க்கதரிசி மூலமாகச் சொன்னார். (மீகா 6:4) தன்னுடைய செய்தியைச் சொல்வதற்கு மிரியாமை கடவுள் பயன்படுத்தியிருந்தாலும், மோசேயைப் போல அவள் கடவுளிடம் நெருக்கமாக இல்லை. தன்னுடைய தகுதிக்கு மீறி நடந்ததால் யெகோவாவிடம் இருந்து கடும் தண்டனையைப் பெற்றாள்.—எண் 12:1-15.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w11-E 9/1 பக். 14
உங்களுக்குத் தெரியுமா?
வனாந்தரத்தில் இஸ்ரவேலர்களுக்கு கடவுள் ஏன் காடைகளை உணவாகக் கொடுத்தார்?
இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டி வந்தபோது, கடவுள் இரண்டு முறை அவர்களுக்கு நிறைய அசைவ உணவை, அதாவது காடைகளை, கொடுத்தார்.—யாத்திராகமம் 16:13; எண்ணாகமம் 11:31.
காடை, 7 அங்குல (18 செ.மீ) நீளமும் 100 கிராம் எடையும் உள்ள ஒரு சிறிய பறவை. மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளில் அவை வாழும். அவை இடம்பெயர்ந்து செல்லும் பறவைகள் என்பதால், குளிர் காலத்தில் வட ஆப்பிரிக்கா மற்றும் அரேபியாவுக்கு செல்லும். அப்படி அவை இடம்பெயர்ந்து செல்லும்போது மத்தியதரைக் கடலின் கிழக்கு கடற்கரையை கடந்து சீனாய் தீபகற்பத்தின்மேல் பெருங்கூட்டமாகப் பறந்து செல்லும்.
“காடைகள் மிக வேகமாகப் பறக்கும், காற்றை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும். காற்று சாதகமாக இல்லையென்றால் அல்லது நீண்ட தூரம் பறந்து களைத்துப்போனால் முழு கூட்டமும் அப்படியே அசையாமல் தரையில் விழுந்து கிடக்கும்.” என்று த வெஸ்ட்மின்ஸ்டர் டிக்ஷ்னரி ஆஃப் த பைபிள் சொல்கிறது. மறுபடியும் பறப்பதற்கு முன்பு காடைகள் தரையில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஓய்வெடுக்கும். அந்தச் சமயத்தில் வேடர்கள் அதைச் சுலபமாகப் பிடித்துவிடுவார்கள். 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒவ்வொரு வருஷமும் எகிப்திலிருந்து கிட்டத்தட்ட முப்பது லட்ச காடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
இஸ்ரவேலர்களுக்கு யெகோவா காடைகளை உணவாக கொடுத்த இரண்டு சந்தர்ப்பமும் வசந்த காலத்தில்தான். அந்தச் சமயத்தில் சீனாயில் காடைகள் பறப்பது சகஜமாக இருந்தாலும், ‘பெருங்காற்றை வீச வைத்து’ அந்தக் காடைகளை இஸ்ரவேலர்கள் முகாம் போட்டிருந்த இடத்துக்குக் கொண்டுவந்தது யெகோவாதான்.—எண்ணாகமம் 11:31.
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்ட கொஞ்ச காலத்திலேயே, இஸ்ரவேலர் உணவுக்காக முறுமுறுக்கத் தொடங்கினர். அதனால், அவர்களுக்கு யெகோவா மன்னாவைக் கொடுத்தார். (யாத்திராகமம் 12:17, 18; 16:1-5) அச்சமயத்தில், ஆரோனிடம் மோசே இவ்வாறு அறிவுறுத்தினார்: “நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை.” அந்தப் பதிவு தொடர்ந்து இவ்வாறு சொல்கிறது: “கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் [முக்கியமான ஆவணங்களைப் பத்திரப்படுத்தி வைக்கும் பெட்டியில்] வைத்தான்.” (யாத்திராகமம் 16:33, 34) சந்தேகமின்றி அந்தச் சமயத்தில் மன்னாவை ஆரோன் ஒரு பாத்திரத்தில் சேகரித்தார், ஆனால் மோசே உடன்படிக்கைப் பெட்டியைச் செய்து முடித்து, அதில் கற்பலகைகளை வைக்கும்வரை அதை அவர் சாட்சி சந்நிதியில் வைக்க வேண்டியிருந்தது.
ஆகஸ்ட் 17-23
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 17-18
“அடக்கமுள்ள ஆண்கள் பயிற்சி கொடுத்து பொறுப்புகளைக் கொடுப்பார்கள்”
மோசே அன்புக்குப் பேர்போனவர்!
சக இஸ்ரவேலர்மீது மோசே அன்பு காட்டினார். மோசே மூலமாகத்தான் யெகோவா தங்களை வழிநடத்துகிறார் என்பதை அந்த மக்கள் புரிந்துகொண்டார்கள்; அதனால், மோசேயிடம் வந்து தங்களுடைய மனக்குறைகளைக் கொட்டினார்கள். “ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலம்மட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (யாத்திராகமம் 18:13-16) இப்படி, நாள் முழுக்க ஒருவர் மாற்றி ஒருவராக வந்து தங்கள் மனபாரத்தையெல்லாம் இறக்கிவைக்க, அதைக் கேட்டுக் கேட்டு மோசே எவ்வளவாய்ச் சோர்வடைந்திருப்பார்! என்றாலும், தன் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய அந்த ஜனங்களுக்கு அவர் சந்தோஷமாக உதவினார்.
மகிழ்ச்சியாக வாழ நம்பிக்கை அவசியம்
இவர்கள் நம்பிக்கைக்குரிய ஸ்தானங்களில் நியமிக்கப்படுமுன், தேவபக்திக்கேற்ற பண்புகளையுடைய ஆட்களாக இருந்தார்கள். கடவுளுக்கு பயந்து நடப்பவர்கள் என்பதற்கான அத்தாட்சியை ஏற்கெனவே காண்பித்தார்கள்; படைப்பாளர் மீது பயபக்தியை காட்டினார்கள், அவருக்குப் பிரியமில்லாததை செய்ய பயந்தார்கள். கடவுளுடைய தராதரங்களை நிலைநாட்டுவதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்தார்கள். அநியாயமான இலாபத்தை வெறுத்தார்கள்—அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊழல் செய்வதை எதிர்த்து நிற்கும் தார்மீக பலம் அவர்களுக்கு இருந்ததை இது சுட்டிக்காட்டியது. சுய நலனுக்காகவோ உறவினர்களுடைய அல்லது நண்பர்களுடைய நலனுக்காகவோ அவர்கள் எவ்விதத்திலும் மற்றவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்கவில்லை.
உத்தமம் செம்மையானவர்களை நடத்தும்
மோசேயும் அடக்கத்தோடும் மனத்தாழ்மையோடும் வாழ்ந்தார். மற்றவர்களின் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் அவர் களைத்துப்போயிருந்தபோது, அவரது மாமனார் எத்திரோ நடைமுறையான பரிகாரத்தை அளித்தார்; தகுதியுள்ள மற்ற ஆண்களுக்கு பொறுப்பை பகிர்ந்து கொடுக்குமாறு ஆலோசனை அளித்தார். மோசே தனது வரம்புகளை உணர்ந்து அந்த ஆலோசனையை ஏற்று ஞானமாக நடந்துகொண்டார். (யாத்திராகமம் 18:17-26; எண்ணாகமம் 12:3) அடக்கமுள்ள நபர் தன் அதிகாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள தயங்க மாட்டார்; தகுதியுள்ள மற்ற ஆண்களுடன் பொறுப்புகளை பகிர்ந்து கொண்டால் எங்கே தன் அதிகாரம் பறிபோய்விடுமோ என பயப்படவும் மாட்டார். (எண்ணாகமம் 11:16, 17, 26-29) மாறாக, ஆவிக்குரிய விதத்தில் முன்னேற அவர்களுக்கு ஆவலோடு உதவுவார். (1 தீமோத்தேயு 4:15) நாமும் அப்படித்தானே இருக்க வேண்டும்?
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
‘உங்கள் கைகளைத் தளரவிடாதீர்கள்’
14 அமலேக்கியர்களுக்கு எதிரான போரில், மோசேயின் கைகளைத் தாங்கிப் பிடித்ததன் மூலம் ஆரோனும் ஊரும் அவருடைய கைகளைத் திடப்படுத்தினார்கள். அதே போல், மற்றவர்களைப் பலப்படுத்தவும் அவர்களுக்கு உதவவும் என்ன செய்யலாம் என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். நம் சகோதர சகோதரிகள் சிலர், வயதாவதாலும் உடல்நலப் பிரச்சினைகளாலும் கஷ்டப்படுகிறார்கள். இன்னும் சிலர், குடும்பத்தாரிடமிருந்து வரும் எதிர்ப்புகளாலும், தனிமையாலும், அன்பானவரை மரணத்தில் இழந்ததாலும் அவதிப்படுகிறார்கள். இளம் பிள்ளைகள் சிலர், தவறு செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அல்லது இந்த உலகத்தில் பெரிய ஆளாக ஆக வேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இப்படிப்பட்ட சகோதர சகோதரிகளை நாம் பலப்படுத்தலாம். (1 தெ. 3:1-3; 5:11, 14) சபையிலோ, ஊழியம் செய்யும்போதோ, ஒன்றுசேர்ந்து சாப்பிடும்போதோ, ஃபோனில் பேசும்போதோ சகோதர சகோதரிகளிடம் எப்படி அக்கறை காட்டலாம் என்று யோசித்துப் பாருங்கள்.
it-1-E பக். 406
அதிகாரப்பூர்வ பட்டியல்
மோசே எழுதிய வார்த்தைகள் எல்லாம் கடவுள் சொன்னவை, கடவுளுடைய தூண்டுதலால் எழுதப்பட்டவை, அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டவை, உண்மை வணக்கத்துக்கு சிறந்த வழிகாட்டி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதற்கான ஆதாரங்கள் அந்தப் புத்தகங்களிலேயே இருக்கின்றன. மோசே தானாகவே முன்வந்து இஸ்ரவேலருக்கு தலைவராக ஆகவில்லை. சொல்லப்போனால், அந்தப் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டபோது தன்னால் அதை செய்யவே முடியாது என்றுதான் சொன்னார். (யாத் 3:10, 11; 4:10-14) ஆனால், பெரிய பெரிய அற்புதங்களைச் செய்யும் வல்லமையை கடவுள் மோசேக்கு கொடுத்தார். கடவுளுடைய சக்தி மோசேயிடம் இருப்பதால்தான் அதையெல்லாம் அவர் செய்கிறார் என்பதை பார்வோனின் மந்திரவாதிகளால் மறுக்க முடியவில்லை. (யாத் 4:1-9; 8:16-19) ஒரு பேச்சாளராக எழுத்தாளராக ஆகவேண்டும் என்பது மோசேயின் லட்சியம் அல்ல. ஆனால், கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்ததாலும் கடவுளுடைய சக்தியின் உதவியாலும்தான் மோசே, முதலில் கடவுளுடைய வார்த்தையைப் பேசுவதற்கும், பின்பு அவற்றை எழுதுவதற்கும் தூண்டப்பட்டார். அவர் எழுதிய புத்தகங்கள் பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றன.—யாத் 17:14.
ஆகஸ்ட் 24-30
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 19-20
“பத்துக் கட்டளைகளும் அதன் பயனும்”
w89-E 11/15 பக். 6 பாரா 1
பத்துக் கட்டளைகளால் உங்களுக்கு என்ன பயன்?
முதல் நான்கு கட்டளைகள் யெகோவாவுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றிச் சொல்கின்றன. (ஒன்று) முழு பக்தியையும் அவருக்கு மட்டும்தான் தரவேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். (மத்தேயு 4:10) (இரண்டு) அவரை வணங்குபவர்கள் சிலைகளை பயன்படுத்தக்கூடாது. (1 யோவான் 5:21) (மூன்று) கடவுளுடைய பெயரை சரியாக, மரியாதையான விதத்தில் பயன்படுத்த வேண்டும். (யோவான் 17:26; ரோமர் 10:13) (நான்கு) நம் வாழ்க்கையை ஆன்மீக விஷயங்களைச் சுற்றியே வைத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால், கடவுளுடைய பிரியத்தைச் சம்பாதிக்க நாமாகவே ஏதாவது செய்ய மாட்டோம். அப்படிச் செய்வதிலிருந்து ‘ஓய்வெடுப்போம்’.—எபிரெயர் 4:9, 10.
w89-E 11/15 பக். 6 பாரா. 2-3
பத்துக் கட்டளைகளால் உங்களுக்கு என்ன பயன்?
(ஐந்து) பிள்ளைகள் பெற்றோருக்குக் கீழ்ப்படிய வேண்டும். அப்போதுதான் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். அதோடு, யெகோவாவின் ஆசீர்வாதமும் கிடைக்கும். இந்தக் கட்டளையோடு ஒரு வாக்குறுதியும் கொடுக்கப்பட்டது. இப்போது “நீ சீரும் சிறப்புமாக இருப்பாய்” என்பதும், “பூமியில் நீண்ட காலம் வாழ்வாய்” என்பதும்தான் அந்த வாக்குறுதி. (எபேசியர் 6:1-3) நாம் “கடைசி நாட்களில்” வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தச் சமயத்தில், இளம் பிள்ளைகள் கடவுளுக்கு பயந்து கீழ்ப்படிதலை காட்டும்போது முடிவே இல்லாத வாழ்க்கையை அவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.—2 தீமோத்தேயு 3:1; யோவான் 11:26.
மற்றவர்கள்மேல் அன்பு இருக்கும்போது, அவர்களைக் காயப்படுத்துகிற பின்வரும் செயல்களை நாம் செய்ய மாட்டோம். (ஆறு) கொலை, (ஏழு) மணத்துணைக்கு துரோகம், (எட்டு) திருட்டு, (ஒன்பது) பொய் சொல்வது. (1 யோவான் 3:10-12; எபிரெயர் 13:4; எபேசியர் 4:28; மத்தேயு 5:37; நீதிமொழிகள் 6:16-19) நம்முடைய உள்ளெண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும்? (பத்து) பேராசையைப் பற்றிய கட்டளை, நம்முடைய உள்ளெண்ணங்கள் யெகோவாவின் பார்வையில் சரியானதாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.—நீதிமொழிகள் 21:2.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 687 பாரா. 1-2
குருமார்
கிறிஸ்தவ குருத்துவ சேவை. யெகோவாவுடைய ஒப்பந்தத்தை மீறாமல் இருந்தால் இஸ்ரவேலர்கள் “ராஜாக்களாக ஆட்சி செய்கிற குருமார்களாகவும் [அவருடைய] பரிசுத்த ஜனமாகவும்” இருப்பார்கள் என்று அவர்களுக்கு யெகோவா வாக்கு கொடுத்திருந்தார். (யாத் 19:6) ஆரோனின் வழியில் வந்த குருத்துவ சேவை மாபெரும் தலைமைக் குருவுக்கு முன்நிழலாக இருந்தது. அவர் வரும்வரைதான் இந்தக் குருத்துவ சேவை தொடரும். (எபி 8:4, 5) திருச்சட்ட ஒப்பந்தம் முடிவுக்கு வந்து புதிய ஒப்பந்தம் ஆரம்பிக்கும்வரை அது தொடரும். (எபி 7:11-14; 8:6, 7, 13) யெகோவா வாக்குக் கொடுத்திருக்கும் அரசாங்கத்தில் அவருடைய குருமார்களாக சேவை செய்யும் வாய்ப்பு, முதலில் இஸ்ரவேலர்களுக்கு கொடுக்கப்பட்டது. பிறகு மற்ற தேசத்தாருக்கும் கொடுக்கப்பட்டது.—அப் 10:34, 35; 15:14; ரோ 10:21.
யூதர்களில் கொஞ்சபேர்தான் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். இப்படி யூதர்கள் உண்மையான அரசாங்கத்தின் ராஜாக்களாக ஆட்சி செய்கிற குருமார்களாகவும் பரிசுத்த ஜனமாகவும் இருக்கும் வாய்ப்பை இழந்துவிட்டார்கள். (ரோ 11:7, 20) இஸ்ரவேலர்கள் உண்மையாக இருக்க தவறியதால் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஓசியா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா அவர்களை இப்படி எச்சரித்தார்: “நீங்கள் என்னைப் பற்றிய அறிவை ஒதுக்கித்தள்ளினீர்கள். அதனால், எனக்குக் குருமார்களாகச் சேவை செய்யாதபடி நானும் உங்களை ஒதுக்கித்தள்ளுவேன். என்னுடைய சட்டத்தை நீங்கள் மறந்தீர்கள். அதனால், நானும் உங்களுடைய மகன்களை மறந்துவிடுவேன்.” (ஓசி 4:6) யூதத் தலைவர்களிடம் இயேசுவும் இதைத்தான் சொன்னார். “கடவுளுடைய அரசாங்கத்தின் ஆசீர்வாதங்கள் உங்களிடமிருந்து பறிக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஒரு ஜனத்திடம் கொடுக்கப்படும்” என்று அவர் சொன்னார். (மத் 21:43) இருந்தாலும், இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, திருச்சட்டத்தின் கீழ்தான் இருந்தார். ஆரோன் வழிவந்த குருத்துவ சேவையை ஏற்றுக்கொண்டார். அதனால்தான், தான் குணப்படுத்திய தொழுநோயாளிகளிடம் ‘குருமாரிடம் போய் உங்களைக் காட்டிவிட்டு கொடுக்கவேண்டிய காணிக்கைகளை கொடுங்கள்’ என்று சொல்லி அனுப்பினார்.—மத் 8:4; மாற் 1:44; லூக் 17:14.
யாத்திராகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
20:5—‘பிதாக்களுடைய அக்கிரமங்களுக்காக’ பிற்கால சந்ததியாரை யெகோவா தண்டிப்பது எப்படி? வயதுவந்த தனிநபர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய நடத்தை மற்றும் மனப்பான்மையின் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படுகிறார்கள். ஆனால் இஸ்ரவேல் தேசமோ விக்கிரகாராதனையில் ஈடுபட்டபோது அதன் பின்விளைவுகளை தலைமுறை தலைமுறையாக அனுபவித்தது. மத அட்டூழியங்களின் காரணமாக உண்மையான இஸ்ரவேலருக்கும்கூட உத்தமத்தோடு நிலைத்திருப்பது கடினமாக இருந்தது, இவ்விதத்தில் அந்தப் பின்விளைவுகளின் பாதிப்புகளை உணர்ந்தார்கள்.
ஆகஸ்ட் 31–செப்டம்பர் 6
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 21-22
“உயிரை யெகோவா பார்க்கும் விதத்தில் பாருங்கள்”
it-1-E பக். 271
அடிப்பது
எபிரெய எஜமான் ஒருவரின் அடிமை கீழ்ப்படியாதவராக அல்லது கலகம் செய்கிறவராக இருந்தால், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களை தடியால் அடிக்க எஜமானுக்கு அனுமதி இருந்தது. அப்படி அடிக்கும்போது அந்த அடிமை இறந்துவிட்டால் அவருடைய எஜமான் தண்டிக்கப்படுவார். அடித்த பிறகு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு அந்த அடிமை உயிரோடு இருந்தால், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த எஜமான் அடிக்கவில்லை என்பது உறுதியாகும். அடிமையை சரிப்படுத்துவதற்கு தேவையான தண்டனையை கொடுக்கும் உரிமை எஜமானுக்கு இருந்தது. ஏனென்றால், அவர் அடிமையை “விலைகொடுத்து வாங்கியிருக்கிறார்.” தன்னுடைய மதிப்புள்ள சொத்தை முழுமையாக அழித்துவிட்டு நஷ்டத்தில் மூழ்க எந்த மனிதனும் ஆசைப்பட மாட்டான். ஒருவேளை அடித்து ஒரு நாளோ அல்லது சில நாட்களோ ஆனபிறகு அந்த அடிமை இறந்துபோனால், அடித்ததால் இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் இறந்தாரா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அதனால், அந்த அடிமை ஒரு நாளோ இரண்டு நாளோ உயிரோடு இருந்தால், எஜமான் தண்டிக்கப்பட மாட்டார்.—யாத் 21:20, 21.
கடவுளைப் போல உயிரை உயர்வாக மதிக்கிறீர்களா?
16 தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் உயிரைக்கூட யெகோவா உயர்வாகக் கருதுகிறார். திருச்சட்டத்திலிருந்து இதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. இஸ்ரவேலர் ஒருவர் தெரியாத்தனமாக ஒரு கர்ப்பிணியைக் காயப்படுத்தியதன் விளைவாக அந்தப் பெண்ணோ அவளுடைய வயிற்றிலிருக்கும் குழந்தையோ இறந்துவிட்டால் அவர் கொலைக்குற்றம் செய்தவராகக் கருதப்படுவார். அந்த நபர் அதைத் தெரியாத்தனமாகச் செய்திருந்தாலும், உயிரிழப்பு ஏற்பட்டதால் உயிருக்கு ஈடாக உயிர் கொடுக்கப்பட வேண்டியிருந்தது. அதாவது அந்த நபர் கொல்லப்பட வேண்டியிருந்தது. (யாத்திராகமம் 21:22, 23-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய பார்வையில், பிறவாத குழந்தையும் உயிருள்ள ஒரு நபர்தான். அப்படியானால், கருக்கலைப்பைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான கருக்கலைப்புகள் செய்யப்படுவதைப் பார்ப்பது கடவுளுக்கு எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
வேலையில் ஜாக்கிரதை தருமே பாதுகாப்பை!
வீட்டு விலங்குகளால் ஆபத்து ஏற்படும்போது என்ன செய்ய வேண்டுமெனவும்கூட திருச்சட்டத்தில் விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு மாடு யாரையாவது முட்டிக் கொன்றுபோட்டால், அதன் சொந்தக்காரர் மற்றவர்களுடைய பாதுகாப்பைக் கருதி அதைக் கொன்றுவிட வேண்டும். அப்படிக் கொல்வது அவருக்குப் பெரும் இழப்பாக இருந்தது; ஏனென்றால், அதன் இறைச்சியைச் சாப்பிடவோ அதை மற்றவர்களுக்கு விற்கவோ முடியாமல்போனது. ஆனால், அந்த மாடு மற்றவர்களை முட்டிக் காயப்படுத்துகிறது என்பதை அறிந்திருந்தும் அவர் அதைக் கட்டி வைக்காவிட்டால்? அந்த மாடு பின்பு யாரையாவது முட்டிக் கொன்றால், அந்த மாடும் அதன் சொந்தக்காரரும் சேர்த்துக் கொல்லப்பட வேண்டும். இவ்விஷயத்தில் அசட்டையாக இருந்துவிடக் கூடாது என்பதை விலங்குகளின் சொந்தக்காரர்களுக்கு இந்தச் சட்டம் உணர்த்தியது.—யாத். 21:28, 29.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஏன் உங்களை யெகோவாவுக்கு அர்ப்பணிக்க வேண்டும்?
4 கிறிஸ்தவர்களாகிய நாம் கடவுளுக்கு நம்மை அர்ப்பணிப்பது மிக முக்கியம். அர்ப்பணிப்பது என்பதில் பல விஷயங்கள் உட்பட்டிருந்தாலும், குறிப்பாகக் கடமை உணர்வு உட்பட்டுள்ளது. அர்ப்பணிப்பதால் கிடைக்கும் பயன்கள் என்ன? இதைப் புரிந்துகொள்ள மனிதர்கள் ஒருவருக்கொருவர் கடமை உணர்வோடு செயல்படுவதால் கிடைக்கும் பயன்களை உதாரணங்களோடு சிந்திப்போம். ஓர் உதாரணம், நட்பு. மற்றவர்களுடைய நட்பைச் சம்பாதிக்க வேண்டுமென்றால் நண்பருக்குரிய பொறுப்புகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். அதில் கடமை உணர்வு, அதாவது இன்ப துன்பங்களில் இணைபிரியாமல் இருக்க வேண்டுமென்ற உணர்வு உட்பட்டுள்ளது. தாவீதும் யோனத்தானும் இப்படிப்பட்ட நட்புக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவர்கள். அவர்கள் இருவரும் நட்புக்காக ஒப்பந்தம்கூடச் செய்துகொண்டார்கள். (1 சாமுவேல் 17:57; 18:1, 3-ஐ வாசியுங்கள்.) இந்தளவு ஈடுபாட்டோடு பழகும் நண்பர்களைக் காண்பது அபூர்வமே. என்றாலும், நண்பர்கள் இன்ப துன்பங்களில் இணைபிரியாமல் இருக்க வேண்டுமென்ற கடமை உணர்வுடன் செயல்படும்போது பெரும்பாலும் அவர்களுடைய நட்பு பலப்படும்.—நீதி. 17:17; 18:24.
5 இன்னொரு உதாரணத்தைச் சிந்திப்போம். இஸ்ரவேலருக்குக் கடவுள் கொடுத்த திருச்சட்டம் அதை விளக்குகிறது. ஓர் அடிமை தன்னுடைய எஜமானரை விட்டுப் பிரியாமல் காலமெல்லாம் அவருடன் பாதுகாப்பாய் இருக்க விரும்பினால், நிரந்தரமான ஒப்பந்தத்தை அவரோடு செய்துகொள்ள வேண்டியிருந்தது. திருச்சட்டம் இப்படிச் சொல்கிறது: ‘“என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். விடுதலை பெற்றுப்போக எனக்கு மனதில்லை” என்று ஓர் அடிமை மனப்பூர்வமாய்ச் சொல்வானானால், அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன்.’—யாத். 21:5, 6.
it-1-E பக். 1143
கொம்பு
யாத்திராகமம் 21:14-ல் இருக்கும் வார்த்தைகள், கொலை செய்தது குருமாராக இருந்தாலும் அவர்களுக்கும் மரண தண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்று அர்த்தப்படுத்தலாம். பலிபீடத்தின் கொம்புகளை பிடித்துக்கொள்வதால் வேண்டுமென்றே கொலை செய்த ஒருவர் காப்பாற்றப்பட மாட்டார்.—1ரா 2:28-34-ஐ ஒப்பிடுங்கள்.