வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜூலை 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 6-7
“பார்வோனை நான் என்ன செய்யப்போகிறேன் என்று நீ இப்போது பார்ப்பாய்”
it-2-E பக். 436 பாரா 3
மோசே
இஸ்ரவேலர்களிடமும் ஒரு பெரிய மாற்றம் தெரிந்தது. ஆரம்பத்தில் அவர்கள் மோசேயை நம்பினார்கள். ஆனால் அதற்கு பிறகு பார்வோன் அவர்களுடைய வேலையைக் கடினமாக்கியபோது மோசேவுக்கு எதிராக குறை சொன்னார்கள். மோசே சோர்ந்துபோய் யெகோவாவிடம் கெஞ்சும் அளவுக்கு அவரை குறைசொன்னார்கள். (யாத் 4:29-31; 5:19-23) உன்னதமான கடவுள் அவரைப் பலப்படுத்தினார். ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்கள் எதிர்பார்த்த ஒரு விஷயத்தை நிறைவேற்றப்போவதாக சொன்னதன் மூலம் அவர் பலப்படுத்தினார். இஸ்ரவேலர்களை விடுதலை செய்வதன் மூலமாகவும் வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்தில் அவர்களை ஒரு பெரிய தேசமாக்குவதன் மூலமாகவும் யெகோவா என்ற தன்னுடைய பெயருக்கான முழு அர்த்தத்தைத் தெரியப்படுத்த போவதாக யெகோவா சொன்னார். (யாத் 6:1-8) மோசே இந்த விஷயங்களை இஸ்ரவேலர்களிடம் சொன்னபோதுகூட, மோசே சொன்னதை அவர்கள் காதில் வாங்கவே இல்லை. ஆனால், ஒன்பதாவது தண்டனைக்கு பிறகு அவர்கள் மோசேயை முழுமையாக நம்பினார்கள், அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அதனால்தான் பத்தாவது தண்டனைக்கு பிறகு மோசேயால் அவர்களை ஒழுங்கமைத்து எகிப்திலிருந்து கூட்டிட்டு போக முடிந்தது. அவர்கள் எகிப்திலிருந்து “ஒரு படையைப் போல அணிவகுத்துப் போனார்கள்.”—யாத் 13:18.
it-2-E பக். 436 பாரா. 1-2
மோசே
எகிப்திய பார்வோனுக்குமுன். ‘கடவுள்களுக்கு இடையில் நடந்த போரில்’ மோசேயும் ஆரோனும் முக்கிய புள்ளிகளாக இருந்தார்கள். பார்வோன் மந்திரவாதிகளைப் பயன்படுத்தி யெகோவாவுடைய சக்திக்கு எதிராக எகிப்திய தெய்வங்களுடைய சக்தியைக் காட்ட நினைத்தான். யந்நே, யம்பிரே என்பவர்கள் இந்த மந்திரவாதிகளுடைய தலைவர்களாக இருந்திருக்கவேண்டும். (2தீ 3:8) மோசே சொல்லி பார்வோனுக்குமுன் ஆரோன் முதல் அற்புதத்தை செய்தார். இது எகிப்திய தெய்வங்களைவிட யெகோவாவுக்கு எந்தளவு வல்லமை இருக்கிறது என்பதைக் காட்டியது. அப்படியிருந்தும் பார்வோனுடைய இதயம் இறுகிப்போனது. (யாத் 7:8-13) மூன்றாவது தண்டனை வந்தபோது இந்த மந்திரவாதிகள்கூட, “கடவுளுடைய சக்தியால் மட்டும்தான் இதைச் செய்ய முடியும்!” என்று ஒத்துக்கொண்டார்கள். எகிப்தியர்கள் எல்லாருக்கும் பயங்கரமான கொப்புளங்கள் வந்தபோது, மந்திரவாதிகளும் அதனால் பாதிக்கப்பட்டார்கள். எந்தளவுக்கு என்றால், அந்த தண்டனையின்போது அவர்களால் பார்வோனுக்குமுன் சென்று மோசேயை எதிர்க்ககூட முடியவில்லை.—யாத் 8:16-19; 9:10-12.
தண்டனைகள் மென்மையாக்குகின்றன இறுகிப்போக வைக்கின்றன. மோசேயும் ஆரோனும் பத்து தண்டனைகளையும் ஒவ்வொன்றாக அறிவித்தார்கள். அறிவித்தபடியே தண்டனைகள் நிறைவேறியபோது, யெகோவா தன் சார்பாக மோசேயைதான் நியமித்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. யெகோவாவுடைய பெயர் எல்லாருக்கும் தெரியவந்தது. எகிப்தில் இருந்த எல்லாரும் அதைப் பற்றி பரவலாக பேச ஆரம்பித்தார்கள். அதனால், இஸ்ரவேலர்களுடைய இதயமும் சில எகிப்தியர்களுடைய இதயமும் மென்மையானது; ஆனால் பார்வோன், அவனுடைய ஆலோசகர்கள், அவனுடைய ஆதரவாளர்கள் ஆகியவர்களுடைய இதயம் இறுகிப்போனது. (யாத் 9:16; 11:10; 12:29-39) தங்களுடைய தெய்வங்களின் கோபத்தினால் தங்களுக்கு இந்த தண்டனைகள் வந்ததாக அவர்கள் நினைக்கவில்லை. ஏனென்றால், யெகோவாதான் தங்களுடைய தெய்வங்களை நியாயந்தீர்க்கிறார் என்பது எகிப்தியர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஒன்பது தண்டனைகளுக்கு பிறகு மோசேவுக்கும்கூட எகிப்தில் மதிப்பு கூடியிருந்தது. “பார்வோனின் ஊழியர்களும் ஜனங்களும் அவரை மிக உயர்வாக நினைத்தார்கள்”—யாத் 11:3.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 78 பாரா. 3-4
சர்வவல்லமையுள்ளவர்
ஈசாக்குடைய பிறப்பைப் பற்றி ஆபிரகாமிடம் வாக்குறுதி கொடுத்தபோது “சர்வவல்லமையுள்ள கடவுள்” (எல் ஷடாய்) என்ற தன்னுடைய பட்டப்பெயரை யெகோவா பயன்படுத்தினார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு கடவுளுக்கு வல்லமை இருக்கிறது என்ற விஷயத்தில் ஆபிரகாம் விசுவாசம் வைக்க வேண்டியிருந்தது. ஆபிரகாமிடம் செய்த ஒப்பந்தத்தின் வாரிசுகளாக ஈசாக்கையும் யாக்கோபையும் கடவுள் ஆசீர்வதிப்பார் என்று சொல்லப்பட்டபோதும் இந்த பட்டப்பெயர் பயன்படுத்தப்பட்டது.—ஆதி 17:1; 28:3; 35:11; 48:3.
அதனால்தான் யெகோவாவினால் மோசேயிடம் இப்படிச் சொல்லமுடிந்தது, “நான் சர்வவல்லமையுள்ள கடவுள் [பீ-எல் ஷடாய்] என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தெரியப்படுத்தினேன். ஆனால் யெகோவா என்ற என்னுடைய பெயரைப் பற்றி அவர்களுக்கு முழுமையாக வெளிப்படுத்தவில்லை.” (யாத் 6:3) அப்படியென்றால் ஆபிரகாமுக்கு, ஈசாக்குக்கு, யாக்கோபுக்கு கடவுளுடைய பெயர் தெரியாது என்று அர்த்தமா? அப்படியல்ல. அவர்களும் சரி அவர்களுக்கு முன் வாழ்ந்தவர்களும் சரி யெகோவா என்ற பெயரை அடிக்கடி பயன்படுத்தியிருக்கிறார்கள். (ஆதி 4:1, 26; 14:22; 27:27; 28:16) இவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி இருக்கிற ஆதியாகமம் புத்தகத்தின் பூர்வ எபிரெய கையெழுத்துப் பிரதியில் “சர்வவல்லமையுள்ளவர்” என்ற பட்டப்பெயர் 6 தடவை மட்டுமே காணப்படுகிறது. ஆனால், யெகோவா என்ற பெயர் 172 தடவை வந்திருக்கிறது. அவர்கள் எல்லாரும் தங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து யெகோவா “சர்வவல்லமையுள்ளவர்” என்று அழைக்கப்படுவதற்கு தகுதியும் உரிமையும் பெற்றவர் என்று தெரிந்திருந்தார்கள். ஆனால், யெகோவா என்ற பெயரின் முழு அர்த்தத்தையும் புரிந்துகொள்ள அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
it-2-E பக். 435 பாரா 5
மோசே
கூச்ச சுபாவத்தினால் மோசே தகுதியற்றவராக ஆகவில்லை. மோசே கூச்ச சுபாவம் உள்ளவராக இருந்தார். தனக்கு சரளமாகப் பேச வராது என்று திரும்பதிரும்ப சொன்னார். 40 வருஷங்களுக்கு முன்பு தானாகவே தீர்மானம் எடுத்து இஸ்ரவேலர்களை விடுவிப்பதற்காக முன்வந்த மோசேக்கும் இப்போது இருக்கிற மோசேக்கும் எவ்வளவு வித்தியாசம்! யெகோவா எவ்வளவு சொல்லியும் மோசே மறுத்து பேசிக்கொண்டே இருந்தார். தனக்கு பதில் வேறு யாரையாவது அனுப்பும்படி கேட்டுக்கொண்டார். அதனால் கடவுளுக்கு பயங்கரக் கோபம் வந்தாலும் அவர் மோசேயை ஒதுக்கிவிடவில்லை. மோசே சார்பில் பேசுவதற்கு அவருடைய அண்ணன் ஆரோனை நியமித்தார். கடவுளுடைய பிரதிநிதியாக மோசே இருந்தார். மோசேயுடைய சார்பில் ஆரோன் பேசியதால் ஒரு விதத்தில் ஆரோனுக்கு மோசே “கடவுளாக” ஆனார். இஸ்ரவேலர்களுடைய பெரியவர்களிடம் பேசுவதற்காகவும் பார்வோனிடம் பேசுவதற்காகவும் கடவுள் மோசேயிடம் ஆலோசனைகளையும் கட்டளைகளையும் கொடுக்கிறார். மோசே அதை ஆரோனிடம் சொன்னதாகவும் ஆரோன்தான் பார்வோன் (40 வருஷத்துக்கு முன்பு மோசே ஓடிப் போனபோது இருந்த பார்வோனுக்கு அடுத்த பார்வோன்தான் இவர்) முன்பாக அதைப் பேசியதாகவும் தெரிகிறது. (யாத் 2:23; 4:10-17) அதற்கு பிறகு ஆரோன் மோசேயுடைய சார்பில் “தீர்க்கதரிசனம்” சொல்வார் என்று யெகோவா சொன்னார். எந்த அர்த்தத்தில்? கடவுளுடைய தீர்க்கதரிசியாகமோசே இருந்தார், அதாவது, கடவுள் அவரை வழிநடத்தினார். அதேபோல் மோசேயால் ஆரோன் வழிநடத்தப்படுவார் என்பதால் மோசேயுடைய சார்பில் ஆரோன் தீர்க்கதரிசனம் சொல்வார் என்று சொல்லப்பட்டது. அதோடு, யெகோவா மோசேயிடம், “நான் உன்னை பார்வோனுக்குக் கடவுளாக்கினேன்” என்று சொன்னார். அதாவது, பார்வோன்மேல் வல்லமையையும் அதிகாரத்தையும் கடவுள் மோசேக்கு கொடுத்தார். அதனால், எகிப்திய ராஜாவைப் பார்த்து அவர் பயப்படவேண்டிய அவசியமில்லை.—யாத் 7:1, 2.
ஜூலை 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 8-9
“பெருமைபிடித்த பார்வோன் தனக்கே தெரியாமல் கடவுளுடைய நோக்கம் நிறைவேற உதவுகிறான்”
it-2-E பக். 1040-1041
பிடிவாதம்
அழிக்கப்பட தகுதியாக இருக்கிற மனிதர்களையும் தேசங்களையும் யெகோவா பொறுமையோடு விட்டுவைத்திருக்கிறார். (ஆதி 15:16; 2பே 3:9) சிலர் இந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக்கொண்டு யெகோவாவின் இரக்கத்தைப் பெற தகுதியானவர்களாக தங்களை ஆக்கியிருக்கிறார்கள். (யோசு 2:8-14; 6:22, 23; 9:3-15) ஆனால், மற்றவர்கள் யெகோவாவுக்கும் அவருடைய மக்களுக்கும் எதிராக தங்களுடைய இதயத்தை இன்னும் இறுகிப்போக வைத்திருக்கிறார்கள். (உபா 2:30-33; யோசு 11:19, 20) ஒரு நபர் பிடிவாதக்காரராக ஆவதை யெகோவா தடுப்பதில்லை. அதனால், ‘அவர் இதயத்தை இறுகிப்போக விட்டுவிடுகிறார்’ என்று அவரைப் பற்றி பைபிள் இப்படி சொல்கிறது. பிடிவாதக்காரர்களை யெகோவா அழிக்கும்போது அவருடைய மகா வல்லமையும் அவருடைய பெயரும் எல்லாருக்கும் தெரியவரும்.—யாத் 4:21-ஐ ஒப்பிடுங்கள்; யோவா 12:40; ரோ 9:14-18.
it-2-E பக். 1181 பாரா. 3-5
அக்கிரமம்
பொல்லாதவர்கள் தங்களுக்கே தெரியாமல் தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு யெகோவா சில சூழ்நிலைகளைப் பயன்படுத்துகிறார். இவர்கள் தன்னை எதிர்த்தாலும் தன்னுடைய மக்களுடைய உத்தமத்தை குலைப்பதற்கான அதிகாரத்தை கடவுள் அவர்களுக்கு கொடுக்கவில்லை. பொல்லாதவர்களுடைய செயல்களைப் பயன்படுத்திகூட யெகோவா தான் நீதியுள்ளவர் என்று நிரூபிக்கிறார். (ரோ 3:3-5, 23-26; 8:35-39; சங் 76:10) இதைதான் நீதிமொழிகள் 16:4-கும் சொல்கிறது: “யெகோவா எல்லாவற்றையும் தன்னுடைய நோக்கத்தின்படி நடக்க வைத்திருக்கிறார், பொல்லாதவனையும் அழிவு நாளுக்கென்று விட்டு வைத்திருக்கிறார்.”
இதுதான் பார்வோனுடைய விஷயத்திலும் நடந்தது. இஸ்ரவேலர்களை விடுவிக்கச் சொல்லி மோசே மற்றும் ஆரோன் மூலமாக யெகோவா பார்வோனிடம் சொல்கிறார். இந்த எகிப்திய அரசனைக் கடவுள் பொல்லாதவனாக ஆக்கவில்லை, ஆனால் அவன் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கு அனுமதித்தார். பார்வோன் தான் கெட்டவன் என்றும் தான் அழிவுக்குத் தகுதியானவன் என்றும் தானே காட்டிக்கொள்கிற விதத்தில் யெகோவா சில சூழ்நிலைகளை உருவாக்கினார். யெகோவா ஏன் இப்படிச் செய்தார் என்று யாத்திராகமம் 9:16-ல் சொல்கிறார்: “என் வல்லமையைக் காட்டுவதற்கும் பூமியெங்கும் என் பெயர் அறிவிக்கப்படுவதற்குமே நான் உன்னை விட்டுவைத்திருக்கிறேன்.”
எகிப்தில் வந்த பத்து தண்டனைகளும் கடைசியாக பார்வோனும் அவனுடைய படைகளும் செங்கடலில் அழிக்கப்பட்டதும் யெகோவாவுடைய மகா வல்லமையின் வெளிக்காட்டாக இருந்தது. (யாத் 7:14–12:30; சங் 78:43-51; 136:15) பல வருஷங்களுக்கு பிறகும்கூட சுற்றி இருந்த தேசங்கள் எல்லாம் இந்த சம்பவங்களைப் பற்றி பேசினார்கள். இந்த விதத்தில் கடவுளுடைய பெயர் உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. (யோசு 2:10, 11; 1சா 4:8) ஒருவேளை யெகோவா பார்வோனை உடனே அழித்திருந்தால் தன்னுடைய பெயரை மகிமைப்படுத்துவதற்கும் தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவதற்கும் தன்னுடைய வல்லமையை அவர் பயன்படுத்தியது இந்தளவு யாருக்கும் தெரிந்திருக்காது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 878
கொடிய ஈக்கள்
எகிப்தில் வந்த நான்காவது தண்டனையைப் பற்றி சொல்கிற வசனங்களில் இருக்கிற மூல எபிரெய வார்த்தை எந்த பூச்சியைப் பற்றி சொல்கிறது என்று தெளிவாக தெரியவில்லை. கோசேனில் இருந்த இஸ்ரவேலர்களைப் பாதிக்காத முதல் தண்டனை இதுதான். (யாத் 8:21, 22, 24, 29, 31; சங் 78:45; 105:31) ‘ஆ-ரொவ்’ என்ற எபிரெய வார்த்தையை சில பைபிள் மொழிபெயர்ப்புகள் “கொடிய ஈக்கள்”, “பொன்வண்டு”, “ஈக்கள்”, “பூச்சிகள்”, “உண்ணி” என்று மொழிபெயர்த்திருக்கின்றன.
ஆங்கிலத்தில் “கொடிய ஈக்கள்” என்று சொல்லும்போது அது வித்தியாசப்பட்ட குதிரை ஈக்களையும் பாட் ஈக்களையும் குறிக்கிறது. பெண் குதிரை ஈக்கள் மனிதர்களின் தோலிலும் மிருகங்களின் தோலிலும் ஓட்டைப் போட்டு இரத்தத்தை உறிஞ்சுகின்றன. பாட் ஈக்கள் புழுவாக இருக்கும்போது மனிதர்கள்மீதும் மிருகங்கள்மீதும் ஒட்டுண்ணியாக உயிர்வாழ்கின்றன. மனிதர்களைத் தாக்குகின்ற ஈக்கள் வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படுகின்றன. இதிலிருந்து கொடிய ஈக்களால் வந்த தண்டனை எகிப்தியர்களுக்கும் அவர்களுடைய கால்நடைகளுக்கும் ரொம்ப வேதனையையும் ஏன் உயிர் சேதத்தையும்கூட ஏற்படுத்தியிருக்கும் என்று தெரிகிறது.
யாத்திராகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
8:26, 27—இஸ்ரவேலரின் பலிகள் ‘எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்’ என மோசே ஏன் சொன்னார்? எகிப்தியர் பல்வேறு மிருகங்களை தெய்வங்களாக வழிபட்டனர். ஆகவே மிருகங்களை பலியிடுவதைப் பற்றி மோசே குறிப்பிட்டதானது, யெகோவாவுக்கு பலி செலுத்த இஸ்ரவேலரை அங்கிருந்து போக அனுமதிக்கும்படி அவர் இன்னுமதிக வலிமையோடும் இணங்க வைக்கும் விதத்திலும் கேட்க உதவியது.
ஜூலை 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 10-11
“மோசேயும் ஆரோனும் அசாதாரண தைரியத்தைக் காட்டுகிறார்கள்”
w09 7/15 பக். 20 பாரா 6
இயேசுவைப் போலவே தைரியமாகப் பிரசங்கியுங்கள்
6 மோசேயின் தைரியத்தையும் சற்று யோசித்துப் பாருங்கள்; பார்வோனிடம் நேருக்கு நேர் பேச வேண்டுமென்றால் அவருக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்கும்! அதுவும், மக்கள் பார்வோனைக் கடவுளுடைய பிரதிநிதியாக மட்டுமே கருதாமல், ரா என்ற சூரியக் கடவுளின் மகனாக, ஒரு கடவுளாகவே கருதினார்கள். மற்ற பார்வோன்களைப் போல, அவனும் தன் உருவத்தையே ஆராதனை செய்திருப்பான். அவன் அதிகாரம் படைத்தவனாக, ஆணவம் பிடித்தவனாக, பிடிவாதக்காரனாக இருந்தான்; அதனால், அவன் வைத்ததுதான் சட்டம் என்ற சூழ்நிலை அன்று நிலவியது. இப்படிப்பட்ட ஒரு ராஜா எங்கே, ஒரு சாதாரண மேய்ப்பனான மோசே எங்கே! பார்வோனின் அழைப்பு இல்லாமலேயே மோசே திரும்பத் திரும்ப அவனுடைய முகத்திற்குமுன் போய் நிற்க வேண்டியிருந்தது. அதுவும், அதிர்ச்சியூட்டும் வாதைகள் பற்றிய செய்தியை அறிவிக்க வேண்டியிருந்தது. இந்நிலையில், பார்வோனிடம் என்ன கோரிக்கையை அவர் முன்வைத்தார்? பார்வோனின் அடிமைகளாய் இருந்த பல லட்சக்கணக்கானோரை நாட்டிலிருந்து அழைத்துக்கொண்டுபோக அனுமதி கேட்டார்! இப்படிக் கேட்க மோசேக்குத் தைரியம் தேவைப்பட்டிருக்குமா? நிச்சயம் தேவைப்பட்டிருக்கும்!—எண். 12:3; எபி. 11:27.
it-2-E பக். 436 பாரா 4
மோசே
பார்வோனை சந்திக்க தைரியமும் விசுவாசமும் தேவைப்பட்டது. யெகோவா கொடுத்த நியமிப்பை மோசேயாலும் ஆரோனாலும் எப்படி செய்ய முடிந்தது? யெகோவாவின் பலமும் சக்தியும் இருந்ததால்தான் அவர்களால் அதை செய்ய முடிந்தது. பார்வோனின் அரசவையை கற்பனை செய்துபாருங்கள். அன்றிருந்த உலக வல்லரசின் அரசன் அவன்தான். தன்னையே கடவுளாக நினைத்துக்கொண்டிருந்த பெருமைப் பிடித்த பார்வோன் தன்னுடைய ஆலோசகர்கள், படைத் தளபதிகள், காவலாளர்கள், அடிமைகள் என எல்லாரும் சூழ்ந்திருக்க கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான். மோசேயை முக்கியமாக எதிர்த்த மதத்தலைவர்களும் மந்திரவாதிகளும்கூட அங்கு இருந்தார்கள். அந்த ராஜ்யத்தில் பார்வோனுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் நிறைய அதிகாரம் இருந்தது. இவர்கள் எல்லாருமே எகிப்திய தெய்வங்களுக்கு ஆதரவாக பார்வோனோடு இருந்தார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மோசேயும் ஆரோனும் ஒரு தடவை அல்ல பல தடவை பார்வோன் முன் வந்து நிற்கிறார்கள். இப்படி அவர்கள் வந்த ஒவ்வொரு முறையும் பார்வோனுடைய இதயம் இன்னும் அதிகமாக இறுகியது. ஏனென்றால், எபிரெய அடிமைகளை விடுதலை செய்யக்கூடாது என்பதில் அவன் ரொம்ப உறுதியாக இருந்தான். சொல்லப்போனால் எட்டாவது தண்டனையைப் பற்றி அறிவித்தபோது, மோசேயும் ஆரோனும் பார்வோன் முன்னிருந்து துரத்தப்பட்டார்கள். ஒன்பதாவது தண்டனைக்குப் பிறகு, தன்னுடைய முகத்தில் முழிக்க கூடாது என்றும் மீறினால் உயிரோடு இருக்கமாட்டார்கள் என்றும் பார்வோன் கட்டளைக் கொடுத்தான்.—யாத் 10:11, 28.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w95 9/1 பக். 11 பாரா 11
பொய்க் கடவுட்களுக்கு எதிராக சாட்சிகள்
11 இஸ்ரவேலர்கள் எகிப்தில் இருந்தபோது, யெகோவா மோசேயை பார்வோனிடம் அனுப்பி பின்வருமாறு சொன்னார்: “நீ பார்வோனிடத்தில் போ, நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் [“கடினமாகும்படி விட்டுவிட்டேன்,” NW]; அவர்கள் நடுவே நான் என் அடையாளங்களாகிய இவைகளைக் காண்பிக்கும் படிக்கும் நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குச் செய்த என் அடையாளங்களையும் நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே யெகோவா என்பதை நீங்கள் அறியும்படிக்கும் இப்படிச் செய்தேன்.” (யாத்திராகமம் 10:1, 2, தி.மொ.) கீழ்ப்படிதலுள்ள இஸ்ரவேலர்கள் யெகோவாவின் பலத்த செய்கைகளைப் பற்றி தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுவார்கள். அந்தப் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கு, இவ்வாறு ஒரு தலைமுறையினர் அடுத்த தலைமுறையினருக்கு சொல்லுவது தொடர்ந்து நடைபெறும். இவ்வாறாக, யெகோவாவின் வல்லமைமிக்க செயல்கள் நினைவில் வைக்கப்படும். அதேவிதமாக இன்று, தங்கள் பிள்ளைகளிடம் சாட்சி கொடுக்க வேண்டிய கடமை பெற்றோருக்கு இருக்கிறது.—உபாகமம் 6:4-7; நீதிமொழிகள் 22:6.
it-1-E பக். 783 பாரா 5
பயணம்
யெகோவா பிரமிக்க வைக்கிற விதத்தில் தன்னுடைய வல்லமையைப் பயன்படுத்தி தன்னுடைய பெயரை மகிமைப்படுத்தினார், இஸ்ரவேலர்களை விடுவித்தார். செங்கடலின் கிழக்கு பகுதிக்கு இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக போனதற்கு பிறகு மோசேயும் மற்ற ஆண்களும் பாட்டு பாடினார்கள். மோசேயுடைய சகோதரியும் தீர்க்கதரிசனம் சொல்கிறவருமான மிரியாம் கஞ்சிராவை கையில் எடுத்துக்கொண்டு ஆண்கள் பாட பாட பதில் பாட்டு பாடிக்கொண்டு நடனம் ஆடினார். அவரோடு சேர்ந்து மற்ற பெண்களும் கஞ்சிராவை எடுத்துக்கொண்டு நடனம் ஆடினார்கள். (யாத் 15:1, 20, 21) இஸ்ரவேலர்கள் தங்களுடைய எதிரிகளிடம் இருந்து முழுமையாகப் பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தார்கள். எகிப்தில் இருந்து கிளம்பிய பிறகு மனிதர்களாலோ மிருகங்களாலோ அவர்களுக்கு எந்த ஆபத்தும் கஷ்டமும் வரவில்லை. அவர்களைப் பார்த்து ஒரு நாய்கூட குரைக்கவில்லை. (யாத் 11:7) யாத்திராகமம் புத்தகத்தில் தன்னுடைய படையோடு சேர்த்து பார்வோனும் அழிக்கப்பட்டதாக நேரடியாக எந்தப் பதிவும் இல்லை. ஆனால், சங்கீதம் 136:15-ல் யெகோவா, “பார்வோனையும் அவனுடைய படையையும் செங்கடலில் மூழ்கடித்தார்” என்று சொல்லியிருக்கிறது.
ஜூலை 27–ஆகஸ்ட் 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் | யாத்திராகமம் 12
“பஸ்கா—கிறிஸ்தவர்கள் முக்கியமாக நினைக்கும் ஒன்று”
“சந்தோஷமாகவே இருக்க வேண்டும்”
4 பொ.ச. 33, நிசான் 14 அன்று இயேசு மரித்தார். நிசான் 14 அன்று இஸ்ரவேலில் பஸ்கா பண்டிகை சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் அந்நாளில், குடும்பத்தார் எல்லாரும் ஒன்றுசேர்ந்து விருந்துண்டார்கள்; அதில் அவர்கள் பழுதற்ற ஓர் ஆட்டுக்குட்டியை சாப்பிட்டார்கள். இவ்விதத்தில், பொ.ச.மு. 1513, நிசான் 14 அன்று எகிப்தியரின் தலைப்பிள்ளைகளைத் தேவதூதன் கொன்றபோது, இஸ்ரவேலரின் தலைப்பிள்ளைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆட்டுக்குட்டியின் இரத்தம் முக்கிய பங்கு வகித்ததை அவர்கள் நினைவுகூர்ந்தார்கள். (யாத்திராகமம் 12:1-14) அந்தப் பஸ்கா ஆட்டுக்குட்டி இயேசுவுக்கு முன்நிழலாக இருந்தது; அவரைக் குறித்து அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.” (1 கொரிந்தியர் 5:7) பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தைப்போல, இயேசு சிந்திய இரத்தமும் அநேகருக்கு இரட்சிப்பை அளிக்கிறது.—யோவான் 3:16, 36.
mwb18.04 பெட்டி பக். 2
உங்களுக்குத் தெரியுமா?
பஸ்கா, நினைவுநாள் நிகழ்ச்சிக்கு முன்நிழலாக இல்லையென்றாலும் அதிலிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, இயேசுவை, “நம்முடைய பஸ்கா ஆட்டுக்குட்டி” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1கொ 5:7) வீட்டு வாசலின் நிலைக்கால்களில் தெளிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் இரத்தம் மக்களின் உயிரைக் காப்பாற்றியதைப் போல, இயேசுவின் இரத்தமும் நம்முடைய உயிரைக் காப்பாற்றுகிறது. (யாத் 12:12, 13) அதோடு, பஸ்கா ஆட்டுக்குட்டியின் எலும்புகள் முறிக்கப்படாததுபோல இயேசுவின் எலும்புகளும் முறிக்கப்படவில்லை. மரக் கம்பங்களில் ஏற்றப்படுகிற குற்றவாளிகளின் எலும்புகளை முறிப்பது வழக்கமாக இருந்தபோதிலும் இயேசுவின் எலும்புகள் முறிக்கப்படவில்லை.—யாத் 12:46; யோவா 19:31-33, 36.
இது ‘உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது’
13 ஆம், புதிய தலைமுறைகள் வளர்ந்துவந்தபோது, தகப்பன்மார்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு சில முக்கியமான விஷயங்களை வலியுறுத்தினார்கள். யெகோவா தம்முடைய மக்களைக் காப்பாற்ற வல்லவர், அவர் புரிந்துகொள்ள முடியாத உணர்ச்சியற்ற வெறும் சக்தியல்ல, தம்முடைய மக்கள்மீது மிகுந்த அக்கறையுள்ளவர், உதவிக்கரம் நீட்ட எப்போதும் தயாராக இருக்கும் நிஜமான ஒரு நபர் போன்ற விஷயங்களைப் பிள்ளைகள் கற்றுக்கொண்டார்கள். “அவர் எகிப்தியரை அதம்பண்ணி”, இஸ்ரவேலர்களின் தலைப்பிள்ளைகளைக் காப்பாற்றியதன் மூலம் இதையெல்லாம் நிரூபித்தார்.
14 கிறிஸ்தவ பெற்றோர் வருடாவருடம் தங்களுடைய பிள்ளைகளிடம் பஸ்கா பண்டிகையின் முக்கியத்துவத்தைப் பற்றித் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருப்பதில்லை. இருந்தாலும், கடவுள் தம்முடைய மக்களைக் காப்பாற்ற வல்லவர் என்பதை உங்களுடைய பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கிறீர்களா? இன்றும் யெகோவா தம்முடைய மக்களைக் காப்பாற்ற வல்லவர் என்பதில் உங்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை அவர்களுக்குள் விதைக்கிறீர்களா? (சங். 27:11; ஏசா. 12:2) இந்த விஷயங்களையெல்லாம் சலிப்புத்தட்டும் விதத்தில் சொல்லாமல் அவர்கள் ரசித்துக் கேட்கும் விதத்தில் சொல்கிறீர்களா? குடும்பத்தினர் ஆன்மீக ரீதியில் நன்கு வளர இந்த விஷயங்களைக் கலந்துபேசுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 582 பாரா 2
பஸ்கா
எகிப்தின்மேல் வந்த பத்து தண்டனைகளும், எகிப்திய தெய்வங்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பாக இருந்தன. அதிலும் குறிப்பாகப் பத்தாவது தண்டனை, அதாவது மூத்த மகன்கள் இறந்துபோவது அதைத் தெளிவாக காட்டியது. (யாத் 12:12) ரா என்ற எகிப்திய தெய்வத்துக்கு ஆட்டுக்கடா புனிதமானதாக இருந்தது. அதனால், வீட்டு வாசலின் நிலைக்கால்களிலும் மேற்சட்டத்திலும் பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் தெளிக்கப்பட்டது எகிப்தியர்களைப் பொறுத்தவரை தெய்வ நிந்தனையாக இருந்தது. காளையும் புனிதமானதாக கருதப்பட்டது. அதனால், எல்லா காளைகளின் முதல் குட்டியும் இறந்துபோனது எகிப்தியர்களின் ஆஸிரிஸ் தெய்வத்துக்கு ஒரு பெரிய அடியாக இருந்தது. பார்வோன், ரா என்ற தெய்வத்தின் மகனாகவே கருதப்பட்டான். அதனால், பார்வோனின் மூத்த மகன் இறந்துபோனது, பார்வோன் மற்றும் ரா என்ற தெய்வத்தின் கையாலாகாத்தனத்தைக் காட்டியது.
it-1-E பக். 504 பாரா 1
மாநாடு
இந்த எல்லா ‘பரிசுத்த மாநாடுகளின்’ முக்கியமான அம்சம் என்னவென்றால், மக்கள் அந்தச் சமயத்தில் எந்த கடினமான வேலையையும் செய்ய மாட்டார்கள். புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகையின் முதல் நாளிலும் ஏழாவது நாளிலும் “பரிசுத்த மாநாட்டுக்காக” மக்கள் கூடிவர வேண்டியிருந்தது. அதைப் பற்றி யெகோவா இப்படிச் சொல்கிறார்: “அந்த நாட்களில் எந்த வேலையும் செய்யக் கூடாது. அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதை மட்டும் நீங்கள் செய்துகொள்ளலாம்.” (யாத் 12:15, 16) ஆனால், ‘பரிசுத்த மாநாடுகள்’ நடந்த சமயத்தில் குருமார்கள் யெகோவாவுக்கு பலி செலுத்துவதில் அதிக நேரம் செலவிட்டார்கள். (லேவி 23:37, 38) இப்படி இவர்கள் பலி செலுத்தியது அந்த நாளில் எந்த வேலையையும் செய்யக்கூடாது என்று யெகோவா கொடுத்த கட்டளையை மீறினதாக அர்த்தம் கிடையாது. அந்த நாட்கள் ஓய்வு எடுப்பதற்கான சமயமாக இல்லை, அதற்கு பதிலாக ஆன்மீக விதத்தில பலமுள்ளவர்களாக ஆவதற்கான சமயமாக இருந்தது. ஒவ்வொரு வாரமும், ஓய்வு நாளில் கடவுளை வழிபடுவதற்காக மக்கள் ஒன்றுகூடி வந்தார்கள். அப்போது கடவுளுடைய வார்த்தை சத்தமாக வாசிக்கப்பட்டு, அதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டதிலிருந்து மக்கள் பயனடைந்தார்கள். பிற்பாடு ஜெபக்கூடங்களிலும் இதுதான் கடைப்பிடிக்கப்பட்டது. (அப் 15:21) ஓய்வு நாட்களிலும் ‘பரிசுத்த மாநாடுகள்’ நடக்கும் சமயங்களிலும் மக்கள் எந்த கடினமான வேலையையும் செய்யவில்லை. என்றாலும், ஜெபம் செய்வதற்கும் படைப்பாளரைப் பற்றியும் அவருடைய நோக்கத்தைப் பற்றியும் ஆழமாக யோசித்து பார்ப்பதற்கும் தங்கள் நேரத்தைச் பயன்படுத்தினார்கள்.