1 ராஜாக்கள்
2 வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் தாவீது தன்னுடைய மகன் சாலொமோனுக்கு இந்த அறிவுரைகளைச் சொன்னார்: 2 “நான் சீக்கிரத்தில் கண்மூடிவிடுவேன்.* அதனால், நீ தைரியத்தோடும்+ உறுதியோடும் இருக்க வேண்டும்.+ 3 உன்னுடைய கடவுளான யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்; மோசேயின் திருச்சட்டத்திலுள்ள சட்டதிட்டங்களையும் கட்டளைகளையும் நீதித்தீர்ப்புகளையும் நினைப்பூட்டுதல்களையும் அப்படியே கடைப்பிடிக்க வேண்டும்.+ அப்போது, நீ எதைச் செய்தாலும், எங்கே போனாலும் உனக்கு வெற்றி கிடைக்கும்.* 4 யெகோவா என்னிடம், ‘உன் வாரிசுகள் எனக்கு உண்மையாக இருந்தால், முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் கீழ்ப்படிந்து என் வழியில் நடந்தால்,+ இஸ்ரவேலின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்ய உனக்கு வாரிசு இல்லாமல் போவதில்லை’+ என்று வாக்குக் கொடுத்திருந்தார், இந்த வாக்கை அவர் நிறைவேற்றுவார்.
5 செருயாவின் மகன் யோவாப் எனக்கு எதிராக என்ன செய்தான் என்பது உனக்கே நன்றாகத் தெரியும். இஸ்ரவேலின் படைத் தளபதிகளான நேரின் மகன் அப்னேரையும்+ யெத்தேரின் மகன் அமாசாவையும்+ அவன் கொன்றுபோட்டது உனக்குத் தெரியும். போர் இல்லாத அமைதியான காலத்தில் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தியதால்+ அவனுடைய இடுப்புவாரிலும் செருப்பிலும் இரத்தக்கறை படிந்திருக்கிறது. 6 அந்த வயதான ஆள் நிம்மதியாகச் சாகக் கூடாது. நீயே ஞானமாக யோசித்து ஏதாவது செய்.+
7 ஆனால், கீலேயாத்தியரான பர்சிலாவின்+ வாரிசுகளுக்கு* நீ மாறாத அன்பு காட்ட வேண்டும். அவர்கள் உன்னுடைய மேஜையில் சாப்பிட வேண்டும். உன்னுடைய சகோதரன் அப்சலோமிடமிருந்து நான் தப்பி ஓடியபோது+ அவர்கள்தான் எனக்குப் பக்கபலமாக இருந்தார்கள்.+
8 பகூரிமைச் சேர்ந்த பென்யமீனியனான கேராவின் மகன் சீமேயி பக்கத்து ஊரில்தான் குடியிருக்கிறான். நான் மக்னாயீமுக்குப்+ போய்க்கொண்டிருந்தபோது அவன் என்னைக் கேவலமாகப் பேசி, சபித்தான்.+ ஆனால், என்னைப் பார்ப்பதற்காகப் பிற்பாடு அவன் யோர்தானுக்கு வந்தபோது, ‘நான் உன்னைக் கொல்ல மாட்டேன்’ என்று யெகோவாவின் பெயரில் அவனுக்குச் சத்தியம் செய்து கொடுத்தேன்.+ 9 நீ அவனைச் சும்மா விடக்கூடாது.+ நீ புத்திசாலி, அவனை என்ன செய்ய வேண்டுமென்பது உனக்கே தெரியும். வயதான காலத்தில் இயற்கையாகச் சாவதற்கு அவனை விட்டுவிடாதே”*+ என்று சொன்னார்.
10 பின்பு, தாவீது இறந்துபோனார்.* ‘தாவீதின் நகரத்தில்’+ அவர் அடக்கம் செய்யப்பட்டார். 11 அவர் 40 வருஷங்கள் இஸ்ரவேலை ஆட்சி செய்தார். எப்ரோனில்+ 7 வருஷங்களும், எருசலேமில் 33 வருஷங்களும் ஆட்சி செய்தார்.+
12 சாலொமோன் தன்னுடைய அப்பாவாகிய தாவீதின் சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்தார்; படிப்படியாகத் தன்னுடைய ஆட்சியைப் பலப்படுத்தினார்.+
13 ஒருநாள், சாலொமோனின் அம்மாவான பத்சேபாளைப் பார்க்க ஆகீத்தின் மகன் அதோனியா வந்தான். “நல்ல விஷயமாகத்தானே வந்திருக்கிறாய்?” என்று பத்சேபாள் கேட்டாள். அதற்கு அவன், “ஆமாம், நல்ல விஷயம்தான்” என்று சொன்னான். 14 பின்பு, “நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்” என்றான். அதற்கு அவள், “சொல்” என்றாள். 15 அவன், “நான்தான் ராஜாவாகியிருக்க வேண்டும், அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். அதைத்தான் இஸ்ரவேலர்கள் எல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்.+ ஆனால், என் சகோதரன் ராஜாவாக வேண்டுமென்பதுதான் யெகோவாவின் விருப்பம். அதனால், அரச பதவி எனக்குக் கிடைக்காமல் அவனுக்குக் கிடைத்துவிட்டது;+ 16 பரவாயில்லை, இப்போது நான் உங்களிடம் ஒரேவொரு உதவி கேட்கிறேன். முடியாது என்று சொல்லிவிடாதீர்கள்” என்றான். அதற்கு அவள், “என்ன வேண்டும், சொல்” என்றாள். 17 அப்போது அவன், “சூனேமைச் சேர்ந்த அபிஷாக்கை+ எனக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கச் சொல்லி தயவுசெய்து சாலொமோன் ராஜாவிடம் கேளுங்கள். நீங்கள் கேட்டால் அவர் மறுக்க மாட்டார்” என்றான். 18 அதற்கு பத்சேபாள், “நல்ல விஷயம்தான்! ராஜாவிடம் உனக்காக நான் பேசுகிறேன்” என்று சொன்னாள்.
19 அதோனியாவுக்காகப் பேசுவதற்கு சாலொமோன் ராஜாவிடம் பத்சேபாள் போனாள். உடனே ராஜா எழுந்து போய் அவள் முன்னால் தலைவணங்கினார். பின்பு, தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்தார். தன்னுடைய அம்மாவுக்காக ஒரு சிம்மாசனத்தைக் கொண்டுவரச் சொன்னார்; அவருடைய வலது பக்கத்தில் அவள் உட்கார்ந்தாள். 20 அப்போது, “உன்னிடம் ஒரு சின்ன உதவி கேட்பதற்காக வந்தேன். முடியாது என்று சொல்லிவிடாதே” என்றாள். அதற்கு அவர், “சொல்லுங்கள், அம்மா. நீங்கள் கேட்டு நான் இல்லையென்று சொல்வேனா?” என்றார். 21 அப்போது அவள், “சூனேமைச் சேர்ந்த அபிஷாக்கை உன்னுடைய சகோதரன் அதோனியாவுக்குக் கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும்” என்றாள். 22 அதற்கு சாலொமோன் ராஜா, “அவனுக்காக சூனேமைச் சேர்ந்த அபிஷாக்கை மட்டும் ஏன் கேட்கிறீர்கள், அரச பதவியையும் சேர்த்து கேட்க வேண்டியதுதானே?+ அவன் எனக்குச் சகோதரன்தானே,+ குருவாகிய அபியத்தாரும் செருயாவின் மகன் யோவாபும்+ அவன் பக்கம்தானே இருக்கிறார்கள்”+ என்று சொன்னார்.
23 பின்பு சாலொமோன் ராஜா யெகோவாமேல் ஆணையிட்டு, “இப்படிக் கேட்டதற்காக அதோனியாவை நான் கொல்லாவிட்டால் கடவுள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும். 24 என் அப்பா தாவீதின் சிம்மாசனத்தில் என்னை உட்கார வைத்து, என் ஆட்சியைப் பலப்படுத்தி,+ வாக்குக் கொடுத்தபடியே என் வம்சத்தை ராஜ வம்சமாக்கிய+ உயிருள்ள கடவுளான யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* இன்று அதோனியா கொல்லப்படுவான்”+ என்று சொன்னார். 25 உடனே, யோய்தாவின் மகன் பெனாயாவை+ சாலொமோன் ராஜா அனுப்பினார். அவர் போய் அதோனியாவை வெட்டிக் கொன்றார்.
26 குருவாகிய அபியத்தாரை+ ராஜா கூப்பிட்டு, “உங்களுக்கும் மரண தண்டனைதான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், நீங்கள் என் அப்பா தாவீதுடன் இருந்தபோது உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் பெட்டியைச் சுமந்தீர்கள்.+ என் அப்பா கஷ்டப்பட்ட எல்லா சமயத்திலும் அவர் கூடவே இருந்தீர்கள்.+ அதனால், உங்களை உயிரோடு விடுகிறேன். உங்களுடைய நிலங்கள் இருக்கிற ஆனதோத்துக்குப்+ போய்விடுங்கள்!” என்று சொன்னார். 27 குருவாக யெகோவாவுக்குச் சேவை செய்யும் பொறுப்பிலிருந்து அபியத்தாரை சாலொமோன் நீக்கிவிட்டார். இப்படி, ஏலியின் வம்சத்துக்கு+ எதிராக சீலோவில்+ யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறியது.
28 யோவாப் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டார். அவர் அப்சலோம் பக்கம் சேராவிட்டாலும்+ அதோனியாவோடு கூட்டுச் சேர்ந்திருந்தார்.+ அதனால், அவர் யெகோவாவின் கூடாரத்துக்கு+ ஓடிப்போய் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டார். 29 “யோவாப் யெகோவாவின் கூடாரத்துக்கு ஓடிப்போய்விட்டார், அங்கே பலிபீடத்துக்குப் பக்கத்தில் இருக்கிறார்” என்று சாலொமோன் ராஜாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்டதும், யோய்தாவின் மகனான பெனாயாவை அனுப்பி, “போய், அவரைக் கொன்றுபோடுங்கள்!” என்று சாலொமோன் கட்டளையிட்டார். 30 அதனால் யெகோவாவின் கூடாரத்துக்கு பெனாயா போய், “வெளியே வாருங்கள்! இது ராஜாவின் கட்டளை” என்று சொன்னார். ஆனால் யோவாப், “மாட்டேன், நான் இங்கேயே சாகிறேன்” என்று சொன்னார். அதை அப்படியே ராஜாவிடம் போய் பெனாயா சொன்னார். 31 அதற்கு ராஜா, “அவர் சொன்னபடியே செய்யுங்கள். அவரைக் கொன்று அடக்கம் செய்யுங்கள். அப்போதுதான், என்மீதும் என் அப்பா குடும்பத்தின் மீதும் விழுந்த கொலைப்பழி நீங்கும். ஏனென்றால், யோவாப் அநியாயமாக இரத்தம் சிந்தியிருக்கிறார்.+ 32 இஸ்ரவேலின் படைத் தளபதியும்+ நேரின் மகனுமான அப்னேரையும்,+ யூதாவின் படைத் தளபதியும்+ யெத்தேரின் மகனுமான அமாசாவையும்+ அவர் கொன்றுபோட்டார். அவரைவிட நீதிமான்களாக, சிறந்தவர்களாக இருந்த இந்த இரண்டு பேரையும் என் அப்பா தாவீதுக்குத் தெரியாமல் தீர்த்துக்கட்டினார். அவர் சிந்திய இரத்தத்துக்காக யெகோவா அவருக்குச் சரியான கூலி கொடுப்பார். 33 அவர்கள் இரண்டு பேருடைய இரத்தமும் யோவாபுடைய தலைமீதும் அவருடைய சந்ததியின் தலைமீதும் காலாகாலத்துக்கும் இருக்கட்டும்.+ ஆனால், தாவீதுக்கும் அவருடைய சந்ததிக்கும் ராஜ வம்சத்துக்கும் ராஜ்யத்துக்கும்* யெகோவா என்றென்றும் சமாதானம் தரட்டும்” என்று சொன்னார். 34 அப்போது, யோய்தாவின் மகன் பெனாயா போய் யோவாபை வெட்டிக் கொன்றார். யோவாப் இறந்ததும், வனாந்தரத்தில் இருந்த அவருடைய வீட்டுக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார். 35 யோவாபுக்குப் பதிலாக யோய்தாவின்+ மகன் பெனாயாவைப் படைத் தளபதியாக ராஜா நியமித்தார். அபியத்தாருக்குப் பதிலாக சாதோக்கைக்+ குருவாக நியமித்தார்.
36 பின்பு சீமேயியைக்+ கூப்பிட்டு, “எருசலேமில் வீடு கட்டி தங்கியிரு. இந்த இடத்தைவிட்டு வேறு எங்கேயும் போகக் கூடாது. 37 கீதரோன் பள்ளத்தாக்கை+ நீ தாண்டிப்போனால், கண்டிப்பாக அதே நாளில் கொல்லப்படுவாய். உன் சாவுக்கு நீயே பொறுப்பாளி ஆகிவிடுவாய்”* என்று சொன்னார். 38 அதற்கு சீமேயி, “ராஜாவே, என் எஜமானே, நீங்கள் சொன்னது சரிதான். உங்கள் வார்த்தையின்படியே அடியேன் செய்கிறேன்” என்றான். அதனால், சீமேயி கொஞ்சக் காலத்துக்கு எருசலேமைவிட்டு எங்கும் போகவில்லை.
39 ஆனால் மூன்று வருஷங்களுக்குப் பிறகு, சீமேயியின் அடிமைகள் இரண்டு பேர் அவனைவிட்டு ஓடிப்போனார்கள். அவர்கள் மாக்காவின் மகனும் காத்தின் ராஜாவுமான ஆகீசிடம்+ போய்விட்டார்கள். “உன்னுடைய அடிமைகள் காத் நகரத்தில் இருக்கிறார்கள்” என்று சீமேயியிடம் தெரிவிக்கப்பட்டது. 40 அதைக் கேட்டவுடனே சீமேயி தன் கழுதைமேல் சேணம்* வைத்து காத் நகரத்துக்குப் புறப்பட்டான். ஆகீசைப் பார்த்து தன் அடிமைகளைக் கூட்டிக்கொண்டு வருவதற்காகப் போனான். பின்பு, காத் நகரத்திலிருந்து தன் அடிமைகளுடன் சீமேயி திரும்பி வந்தான். 41 “சீமேயி எருசலேமிலிருந்து காத் நகரத்துக்குப் போய் வந்திருக்கிறான்” என்று சாலொமோனிடம் தெரிவிக்கப்பட்டது. 42 ராஜா உடனடியாக சீமேயியைக் கூப்பிட்டார். “இந்த இடத்தைவிட்டுப் போனால் கண்டிப்பாக அதே நாளில் கொல்லப்படுவாய் என்று நான் உன்னை எச்சரித்திருந்தேனே. யெகோவாமேல் ஆணையிட வைத்திருந்தேனே. ‘நீங்கள் சொன்னது சரிதான், உங்கள் வார்த்தையின்படியே செய்கிறேன்’ என்று நீயும் சொன்னாயே.+ 43 அப்படியிருக்கும்போது, யெகோவா முன்னால் செய்த ஆணையை ஏன் அலட்சியம் செய்தாய், என் கட்டளையை ஏன் மீறினாய்?” என்று கேட்டார். 44 அதோடு, “நீ என் அப்பாவுக்கு என்னென்ன கெடுதல் செய்தாய் என்பது உன் மனதுக்கே நன்றாகத் தெரியும்.+ அதையெல்லாம் யெகோவா உன் தலையிலேயே விழ வைப்பார்.+ 45 ஆனால், சாலொமோன் ராஜா ஆசீர்வதிக்கப்படுவார்.+ தாவீதின் சிம்மாசனம் யெகோவாவுக்கு முன்னால் என்றென்றும் உறுதியாக நிலைத்திருக்கும்” என்று சொன்னார். 46 பின்பு, சீமேயியைக் கொன்றுபோடும்படி யோய்தாவின் மகன் பெனாயாவுக்குக் கட்டளையிட்டார். அவர் போய் சீமேயியைக் கொன்றுபோட்டார்.+
இப்படி, சாலொமோனின் ஆட்சி அவருடைய முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.+