‘மரித்தோர் எழுந்திருப்பார்கள்’
“எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.”—1 கொரிந்தியர் 15:52.
1, 2. (அ) தீர்க்கதரிசியாகிய ஓசியா மூலம் ஆறுதலளிக்கும் என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டது? (ஆ) மரித்தவர்களை மறுபடியும் உயிருக்கு கொண்டுவர கடவுள் விரும்புகிறார் என்று நமக்கு எப்படி தெரியும்?
உங்களுக்கு அன்பான ஒருவரை எப்போதாவது மரணத்தில் இழந்திருக்கிறீர்களா? அப்படியென்றால் மரணம் விளைவிக்கும் துன்பத்தை நீங்கள் அறிவீர்கள். என்றாலும், தீர்க்கதரிசியாகிய ஓசியா மூலம் கடவுள் கொடுத்திருக்கும் வாக்குறுதியினால் கிறிஸ்தவர்கள் ஆறுதல் பெறுகின்றனர்: “அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே?”—ஓசியா 13:14.
2 மரித்தவர்கள் உயிர் பெறுவது சந்தேகவாதிகளுக்கு நியாயமற்றதாக தோன்றுகிறது. ஆனால், அப்படிப்பட்ட ஓர் அற்புதத்தைச் செய்வதற்கான வல்லமை சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நிச்சயமாகவே இருக்கிறது! மரித்தவர்கள் மறுபடியும் உயிர்பெறும்படி செய்ய யெகோவாவுக்கு விருப்பம் இருக்கிறதா என்பதே இப்போது கேள்வி. “மனுஷன் செத்தபின் பிழைப்பானோ?” என்று நீதியுள்ள மனிதனாகிய யோபு கேட்டார். பிறகு நம்பிக்கையூட்டும் இந்தப் பதிலைக் கொடுத்தார்: “என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின் மேல் விருப்பம் வைப்பீராக.” (யோபு 14:14, 15) “விருப்பம்” என்ற வார்த்தை ஊக்கமான ஆர்வத்தை அல்லது வாஞ்சையைக் குறிக்கிறது. (சங்கீதம் 84:2-ஐ ஒப்பிடுக.) ஆம், உயிர்த்தெழுதலை யெகோவா ஆவலோடு எதிர்பார்க்கிறார். அவருடைய நினைவில் உயிருடன் இருக்கும் மரித்த உண்மையுள்ளவர்களை மறுபடியும் பார்க்க அவர் வாஞ்சையுள்ளவராக இருக்கிறார்.—மத்தேயு 22:31, 32.
உயிர்த்தெழுதல் பற்றி கூடுதலான தகவலை இயேசு அளிக்கிறார்
3, 4. (அ) உயிர்த்தெழுதல் நம்பிக்கை பற்றிய என்ன கூடுதலான விளக்கத்தை இயேசு கொடுத்தார்? (ஆ) இயேசு மனிதனாக இல்லாமல் ஏன் பரலோக சிருஷ்டியாக உயிர்ப்பிக்கப்பட்டார்?
3 பூர்வகாலத்தில் வாழ்ந்த யோபுவைப் போன்ற விசுவாசமுள்ள மனிதர்களுக்கு உயிர்த்தெழுதலைப் பற்றிய குறைவான புரிந்துகொள்ளுதலே இருந்தது. இந்த அற்புதகரமான நம்பிக்கை பற்றிய முழுமையான விளக்கத்தைத் தந்தது இயேசு கிறிஸ்துவே. “குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவனாயிருக்கிறான்” என்று சொல்வதன் மூலம் அவர்தாமே வகிக்கும் முக்கியமான பங்கைச் சுட்டிக்காண்பித்தார். (யோவான் 3:36) அந்த வாழ்க்கை எங்கே அனுபவிக்கப்படும்? விசுவாசம் காண்பிக்கும் பெரும்பான்மையானோருக்கு அது பூமியில் இருக்கும். (சங்கீதம் 37:11) என்றபோதிலும், இயேசு தம் சீஷர்களிடம் கூறினார்: “பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.” (லூக்கா 12:32) கடவுளுடைய ராஜ்யம் பரலோகத்திற்குரியது. ஆகவே, ஒரு “சிறுமந்தை” பரலோகத்தில் இயேசுவோடு மகிமையுள்ள சிருஷ்டிகளாக இருக்கவேண்டும் என்பதை இந்த வாக்குறுதி அர்த்தப்படுத்துகிறது. (யோவான் 14:2, 3; 1 பேதுரு 1:3, 4) என்னே மகத்தான ஓர் எதிர்பார்ப்பு! இந்தச் “சிறுமந்தை” வெறுமனே 1,44,000 பேராக மட்டுமே இருக்கும் என்று இயேசு, அப்போஸ்தலன் யோவானிடம் வெளிப்படுத்தினார்.—வெளிப்படுத்துதல் 14:1.
4 என்றாலும், 1,44,000 பேர் எவ்வாறு பரலோக மகிமையை அடைவார்கள்? இயேசு “ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.” தம்முடைய இரத்தத்தின் மூலம் பரலோகத்திற்குச் செல்லும் “புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை” அவர் திறந்துவைத்தார். (2 தீமோத்தேயு 1:10; எபிரெயர் 10:19, 20) பைபிள் முன்னறிவித்த விதமாகவே முதலாவதாக அவர் மரித்தார். (ஏசாயா 53:12) பிறகு அப்போஸ்தலன் பேதுரு அறிவித்த விதமாகவே “இந்த இயேசுவை தேவன் எழுப்பினார்.” (அப்போஸ்தலர் 2:32) என்றாலும் இயேசு ஒரு மனிதனாக உயிர்த்தெழுப்பப்படவில்லை. “நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே” என்று அவர் கூறியிருந்தார். (யோவான் 6:51) தம்முடைய மாம்சத்தை மறுபடியும் எடுத்துக்கொள்வது அந்தப் பலியைச் செல்லாததாக்கி விடும். ஆகவே இயேசு “மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்.” (1 பேதுரு 3:18) இவ்வாறு இயேசு, ‘சிறுமந்தைக்கு,’ “நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.” (எபிரெயர் 9:12) பாவமுள்ள மனிதவர்க்கத்தை மீட்கும் பொருளாக அவர் தம்முடைய பரிபூரண மனித உயிரின் மதிப்பைக் கடவுளிடம் செலுத்தினார். அதிலிருந்து முதலாவதாக பயனடைந்தவர்கள் 1,44,000 பேரே.
5. முதல் நூற்றாண்டில் இயேசுவைப் பின்பற்றினோருக்கு என்ன நம்பிக்கை முன்வைக்கப்பட்டது?
5 இயேசு மட்டுமே பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவதில்லை. ரோமிலிருந்த உடன் கிறிஸ்தவர்கள், கடவுளுடைய குமாரராகவும் கிறிஸ்துவின் உடன் சுதந்தரராகவும் இருப்பதற்காக பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டனர் என பவுல் அவர்களிடம் கூறினார். முடிவுவரை நிலைத்திருப்பதன் மூலம் தாங்கள் அபிஷேகம் செய்யப்பட்டதை நிரூபித்தால் அவர்கள் அவ்வாறே தொடர்ந்திருப்பர் என்றும் கூறினார். (ரோமர் 8:16, 17) பவுல் மேலுமாக விளக்கினார்: “ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.”—ரோமர் 6:5.
உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கு ஆதரவாக
6. கொரிந்துவில் உயிர்த்தெழுதல் நம்பிக்கை ஏன் தாக்குதலுக்குள்ளானது, அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு பிரதிபலித்தார்?
6 கிறிஸ்தவத்தின் ‘மூல உபதேசங்களில்’ உயிர்த்தெழுதல் ஒரு பாகமாகும். (எபிரெயர் 6:1, 2) என்றாலும், கொரிந்துவில் இந்தப் போதகம் தாக்குதலுக்குள்ளானது. கிரேக்க தத்துவத்தால் பாதிக்கப்பட்ட, சபையிலிருந்த சிலர் “மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தனர். (1 கொரிந்தியர் 15:12) இதைப் பற்றிய அறிக்கைகளை அப்போஸ்தலன் பவுல் கேள்விப்பட்டபோது, முக்கியமாக அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை ஆதரித்துப் பேசினார். 1 கொரிந்தியர் 15-ம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளை நாம் ஆராய்ந்து பார்க்கலாம். முந்தைய கட்டுரையில் சிபாரிசு செய்யப்பட்டதுபோல அந்த முழு அதிகாரத்தையும் வாசித்திருந்தீர்கள் என்றால் அது பலனுள்ளதாக இருக்கும்.
7. (அ) பவுல், என்ன முக்கியமான பிரச்சினையில் கவனத்தை ஒருமுகப்படுத்தினார்? (ஆ) உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை யார் பார்த்தார்கள்?
7 1 கொரிந்தியர் 15-ம் அதிகாரத்தின் முதல் இரண்டு வசனங்களில் பவுல் தன் கலந்தாலோசிப்பிற்கான பொருளைக் கூறுகிறார்: “அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள் . . . அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள், மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.” கொரிந்தியர்கள் நற்செய்தியில் உறுதியாக நிலைநிற்கவில்லை என்றால் அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டது விருதாவாய் இருக்கும். பவுல் தொடர்ந்து கூறினார்: “நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவி போன்ற எனக்கும் தரிசனமானார்.”—1 கொரிந்தியர் 15:3-8.
8, 9. (அ) உயிர்த்தெழுதலில் நம்பிக்கை எவ்வளவு முக்கியமானது? (ஆ) “ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கு” எந்தச் சந்தர்ப்பத்தில் இயேசு தரிசனமாகி இருக்கலாம்?
8 நற்செய்தியை ஏற்றுக்கொண்டிருந்தவர்களுக்கு இயேசுவின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வைப்பது தெரிவு செய்வதற்குரிய ஒன்றாக இருக்கவில்லை. “கிறிஸ்துவானவர் . . . நமது பாவங்களுக்காக மரித்[து]” உயிர்ப்பிக்கப்பட்டார் என்பதை நிரூபிக்க கண்கண்ட சாட்சிகள் அநேகர் இருந்தனர். ஒருவர் கேபா, அல்லது பிரபலமாக அறியப்பட்டிருக்கிறபடி பேதுரு ஆவார். இயேசு காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட அன்றிரவில் பேதுரு அவரை மறுதலித்ததற்கு பின்னர், இயேசு அவருக்கு காட்சியளித்தது பேதுருவுக்கு மிகவும் ஆறுதலளிப்பதாக இருந்திருக்கும். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு ‘பன்னிருவரையும்,’ ஒரு தொகுதியாக அப்போஸ்தலரையும் சந்தித்தார். தங்கள் பயத்தை மேற்கொள்வதற்கும் இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய தைரியமான சாட்சிகளாக இருப்பதற்கும் இந்த அனுபவம் நிச்சயமாகவே அவர்களுக்கு உதவியிருக்கும்.—யோவான் 20:19-23; அப்போஸ்தலர் 2:32.
9 இன்னும் பெரிய ஒரு தொகுதிக்கும்கூட, “ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும்” இயேசு தரிசனமானார். கலிலேயாவில்தான் அவரைப் பின்பற்றுபவர்கள் அவ்வளவு அதிகமான பேர் இருந்ததால் மத்தேயு 28:16-20-ல் விவரிக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சியாக இது இருக்கலாம். இயேசு அப்போதுதான் சீஷராக்கும்படி கட்டளைக் கொடுத்தார். இந்தத் தனிநபர்கள் என்னே வல்லமையான சாட்சி கொடுக்க முடிந்தது! பொ.ச. 55-ல் கொரிந்தியருக்கு இந்த முதல் கடிதத்தைப் பவுல் எழுதியபோது சிலர் இன்னமும் உயிருடன் இருந்தனர். என்றாலும், மரித்தவர்களைப் பற்றி பேசுகையில் “சிலர் மாத்திரம் [“மரணத்தில்,” NW] நித்திரையடைந்தார்கள்” என்று சொல்லப்படுவதைக் கவனியுங்கள். தங்கள் பரலோக வெகுமதியைப் பெறுவதற்காக அவர்கள் இன்னமும் உயிர்த்தெழுப்பப்படவில்லை.
10. (அ) இயேசு தம்முடைய சீஷர்களைக் கடைசியாக சந்தித்ததன் விளைவு என்ன? (ஆ) “அகாலப்பிறவி போன்ற” பவுலுக்கு இயேசு எவ்வாறு தரிசனமானார்?
10 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு மற்றொரு விசேஷித்த சாட்சியாக இருந்தது, யோசேப்புக்கும் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கும் பிறந்த யாக்கோபு. உயிர்த்தெழுதலுக்கு முன்பு, யாக்கோபு விசுவாசியாக இல்லை என்பதாக தோன்றுகிறது. (யோவான் 7:5) ஆனால் இயேசு அவருக்கு தரிசனமான பின்பு யாக்கோபு விசுவாசியானார். ஒருவேளை தன்னுடைய மற்ற சகோதரர்களை மதம் மாற்றுவதில் அவர் உட்பட்டிருந்திருக்கலாம். (அப்போஸ்தலர் 1:13, 14) இயேசு பரலோகத்திற்கு சென்ற சமயத்தில் தம்முடைய சீஷர்களை கடைசியாக சந்தித்தபோது, ‘பூமியின் கடைசிபரியந்தமும் சாட்சிகளாயிருக்கும்படி’ அவர்களுக்கு கட்டளையிட்டார். (அப்போஸ்தலர் 1:6-11) பிறகு அவர், கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய தர்சு பட்டணத்தானாகிய சவுலுக்கு காட்சியளித்தார். (அப்போஸ்தலர் 22:6-8) “அகாலப்பிறவி போன்ற” பவுலுக்கும் இயேசு தரிசனமானார். அந்த உயிர்த்தெழுதல் நடக்கவிருந்த பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சவுல் ஏற்கெனவே பரலோக வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டது போலவும் மகிமைப்படுத்தப்பட்ட கர்த்தரைப் பார்ப்பது போலவும் இருந்தது. இந்த அனுபவம், கிறிஸ்தவ சபையை கொலை வெறியோடு எதிர்த்த போக்கிலிருந்து சவுலை சடுதியில் தடுத்து நிறுத்தி, அவரில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. (அப்போஸ்தலர் 9:3-9, 17-19) சவுல், கிறிஸ்தவ விசுவாசத்தை ஆதரித்த முதன்மையானவர்களுள் ஒருவரான அப்போஸ்தலன் பவுலாக மாறினார்.—1 கொரிந்தியர் 15:9, 10.
உயிர்த்தெழுதலில் விசுவாசம் அவசியம்
11. ‘உயிர்த்தெழுதல் இல்லை’ என்ற கூற்று தவறானதென பவுல் எவ்வாறு வெளிப்படுத்தினார்?
11 ஆகவே இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு போதுமான அத்தாட்சிகள் இருந்தன. பவுல் இவ்வாறு விவாதிக்கிறார்: “கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?” (1 கொரிந்தியர் 15:12) அப்படிப்பட்டவர்களுக்கு உயிர்த்தெழுதலைப் பற்றி தனிப்பட்ட விதமான சந்தேகங்களும் கேள்விகளும் இருந்தது மட்டுமல்லாமல் தங்கள் அவநம்பிக்கையை வெளிப்படையாகவும் கூறிக்கொண்டிருந்தனர். ஆகவே, அவர்களுடைய நியாயவிவாதம் எவ்வளவு தவறானது என பவுல் வெளிப்படுத்துகிறார். கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்படவில்லை என்றால் கிறிஸ்தவ செய்தியும் பொய், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சி கொடுத்தவர்களும் “தேவனுக்காகப் பொய்ச்சாட்சி” சொல்கிறவர்கள் என கூறுகிறார். கிறிஸ்து எழுப்பப்படவில்லை என்றால் கடவுளுக்கு எந்த மீட்கும் பொருளும் செலுத்தப்படவில்லை; கிறிஸ்தவர்கள் ‘இன்னும் தங்கள் பாவங்களில் இருப்பார்கள்.’ (1 கொரிந்தியர் 15:13-19; ரோமர் 3:23, 24; எபிரெயர் 9:11-14) மேலும், சில சமயங்களில் உயிர்த்தியாகிகளாக மரணத்தில் “நித்திரையடைந்தவர்க[ள்]” எந்த உண்மையான நம்பிக்கையும் இல்லாமல் மரித்திருக்கின்றனர். கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்க கூடியதெல்லாம் இந்த வாழ்க்கைதான் என்றால் அவர்கள் எப்பேர்ப்பட்ட பரிதாபகரமான நிலையில் இருப்பார்கள்! அவர்கள் பட்ட துன்பங்கள் எல்லாம் அர்த்தமற்றவையாகிவிடும்.
12. (அ) “நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்” என கிறிஸ்துவை அழைப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது? (ஆ) கிறிஸ்து எவ்வாறு உயிர்த்தெழுதலைச் சாத்தியமாக்கினார்?
12 என்றபோதிலும் அது உண்மையில்லை. பவுல் தொடர்கிறார்: ‘கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்திருக்கிறார்.’ அதுமட்டுமல்ல, அவரே “நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.” (1 கொரிந்தியர் 15:20) இஸ்ரவேலர் தங்கள் விளைச்சலின் முதற்பலன்களை கீழ்ப்படிதலோடு யெகோவாவுக்கு கொடுக்கையில் அபரிமிதமான விளைச்சலால் யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார். (யாத்திராகமம் 22:29, 30; 23:19; நீதிமொழிகள் 3:9, 10) கிறிஸ்துவை “முதற்பல[ன்]” என்று கூறுவதன் மூலம் மரணத்திலிருந்து பரலோக வாழ்க்கைக்கு எழுப்பப்படும் தனிநபர்களின் கூடுதலான ஓர் அறுவடை இருக்குமென பவுல் சுட்டிக்காண்பித்தார். “மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” என்று பவுல் கூறுகிறார். (1 கொரிந்தியர் 15:21, 22) இயேசு தம்முடைய பரிபூரண மனித உயிரை மீட்கும் பொருளாக கொடுப்பதன் மூலம் உயிர்த்தெழுதலை சாத்தியமாக்கினார். இதன் மூலம், பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தனத்திலிருந்து மனிதவர்க்கத்தை விடுவிப்பதற்கான வழியைத் திறந்துவைத்தார்.—கலாத்தியர் 1:4; 1 பேதுரு 1:18, 19.a
13. (அ) பரலோக உயிர்த்தெழுதல் எப்பொழுது நடைபெறுகிறது? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்ட சிலர் எவ்வாறு மரணத்தில் “நித்திரையடைவதில்லை”?
13 பவுல் தொடர்கிறார்: “அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” (1 கொரிந்தியர் 15:23) பொ.ச. 33-ல் கிறிஸ்து உயிர்த்தெழுப்பப்பட்டார். என்றாலும், இயேசுவைப் பின்பற்றும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களான “அவருடையவர்கள்,” அவருடைய ராஜரீக வந்திருத்தலுக்கு பிறகு கொஞ்சகாலம் வரைக்கும் காத்திருக்க வேண்டியிருந்தது. இது 1914-ல் நடந்ததாக பைபிள் தீர்க்கதரிசனம் காண்பிக்கிறது. (1 தெசலோனிக்கேயர் 4:14-16; வெளிப்படுத்துதல் 11:18) அந்த வந்திருத்தலின்போது உயிரோடிருப்பவர்களைப் பற்றியென்ன? பவுல் கூறுகிறார்: “இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்.” (1 கொரிந்தியர் 15:51, 52) அபிஷேகம் செய்யப்பட்ட எல்லாருமே ஓர் உயிர்த்தெழுதலை எதிர்பார்த்து கல்லறையில் நித்திரை செய்வதில்லை என்பது தெளிவாக இருக்கிறது. கிறிஸ்துவின் வந்திருத்தலின்போது மரிப்பவர்கள் ஒரு நொடிப்பொழுதில் மறுரூபமாக்கப்படுவர்.—வெளிப்படுத்துதல் 14:13.
14. அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் எவ்வாறு “மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறார்கள்”?
14 பவுல் இவ்வாறு கேட்கிறார்: “மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக [“மரித்தவர்களாய் இருப்பதற்காக,” NW] ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்? நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்?” (1 கொரிந்தியர் 15:29, 30) சில பைபிள் மொழிபெயர்ப்புகள் தோன்றச் செய்வதுபோல, மரித்தவர்களுக்காக உயிரோடிருப்பவர்கள் ஞானஸ்நானம் பெறுவதை பவுல் அர்த்தப்படுத்தவில்லை. ஞானஸ்நானம் என்பது கிறிஸ்தவ சீஷராவதோடு சம்பந்தப்பட்டது, ஆனால் மரித்த மனிதர்கள் சீஷர்களாக இருக்கமுடியாதே. (யோவான் 4:1) மாறாக, பவுலைப் போலவே அவர்களில் அநேகர் “எந்நேரமும் நாசமோசத்திற்கு” உட்பட்டிருந்த உயிருள்ள கிறிஸ்தவர்களைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார். அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ‘கிறிஸ்துவுடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்கள்.’ (ரோமர் 6:3) அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட சமயத்திலிருந்து கிறிஸ்துவைப் போன்ற மரணத்திற்கு வழிநடத்தும் ஒரு பாதைக்குள் “ஞானஸ்நானம்” பெற்றதைப்போல இருக்கிறது. (மாற்கு 10:35-40) மகிமையான பரலோக உயிர்த்தெழுதல் நம்பிக்கையுடன் அவர்கள் மரிப்பார்கள்.—1 கொரிந்தியர் 6:14; பிலிப்பியர் 3:10, 11.
15. பவுல் என்ன துயரங்களை எதிர்ப்பட்டிருக்கலாம், அவற்றைச் சகித்திருக்க உயிர்த்தெழுதலில் நம்பிக்கை எவ்வாறு உதவியது?
15 “நான் அநுதினமும் சாகிறேன்” என்று சொல்லுமளவுக்கு பவுல்தானே அவ்வளவு அதிகமான துயரத்தை எதிர்ப்பட்டிருந்தபடியால் அவரால் இவ்வாறு சொல்லமுடிந்தது என விளக்குகிறார். அவர் மிகைப்படுத்திக் கூறுகிறார் என யாரும் குறைகூற முடியாதபடி பவுல் கூடுதலாக சொல்கிறார்: “அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக் குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக் கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன்.” பவுல் எதிர்ப்பட்ட ஆபத்துக்களுக்கு உதாரணமாக வசனம் 32-ல், ‘எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினதைப்’ பற்றி அவர் பேசுகிறார். அரங்குகளில் காட்டு மிருகங்களுக்கு மத்தியில் குற்றவாளிகளைப் போடுவதன்மூலம் அவர்களை ரோமர்கள் தண்டித்தனர். சொல்லர்த்தமான காட்டு மிருகங்களுடன் ஒரு போராட்டத்தைப் பவுல் சகித்தார் என்றால், யெகோவாவின் உதவியால் மட்டுமே அவர் தப்பித்திருக்க முடியும். உயிர்த்தெழுதல் நம்பிக்கை இல்லையென்றால் அப்படிப்பட்ட ஆபத்துகளுக்கு அவரை உட்படுத்திய ஒரு வாழ்க்கை முறையை தெரிவுசெய்வது உண்மையில் முட்டாள்தனமாக இருந்திருக்கும். ஓர் எதிர்கால வாழ்க்கையின் நம்பிக்கை இல்லையென்றால், கடவுளைச் சேவிப்பதனால் வரும் கஷ்டங்களுக்கும் தியாகங்களுக்கும் எந்த அர்த்தமும் இருக்காது. பவுல் கூறுகிறார்: “மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே?”—1 கொரிந்தியர் 15:31, 32; 2 கொரிந்தியர் 1:8, 9; 11:23-27-ஐக் காண்க.
16. (அ) “புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம்” என்ற சொற்றொடர் எங்கிருந்து தோன்றியிருக்கலாம்? (ஆ) இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்வதில் என்ன அபாயங்கள் இருந்தன?
16 எருசலேமின் கீழ்ப்படியாத குடிமக்கள் விதியில் நம்பிக்கை வைத்தனர்; அந்த மனப்பான்மையை விவரிக்கும் ஏசாயா 22:13-ஐ பவுல் மேற்கோள் காட்டியிருக்கலாம். அல்லது மரணத்திற்கு பிறகு வாழ்க்கை என்ற எந்த நம்பிக்கையையும் ஏளனம் செய்தவர்களும் சரீர இன்பமே வாழ்க்கையில் முக்கியமானது என்றும் நம்பிய எப்பிக்கூரரின் நம்பிக்கைகளை அவர் மனதில் வைத்திருந்திருக்கலாம். எப்படியிருந்தாலும், “புசிப்போம் குடிப்போம்” என்ற தத்துவம் அவபக்தியானது. ஆகவே பவுல் எச்சரிக்கிறார்: “மோசம்போகாதிருங்கள்; கெட்ட கூட்டுறவுகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.” (1 கொரிந்தியர் 15:33, NW) உயிர்த்தெழுதலை நிராகரித்தவர்களோடு கூட்டுறவுகொள்வது வினைமையானதாக இருக்கலாம். கொரிந்திய சபையில் பவுல் கையாள வேண்டியிருந்த பிரச்சினைகளுக்கு—பாலின ஒழுக்கக்கேடு, பிரிவினைகள், வழக்குகள், கர்த்தருடைய இராப்போஜனத்திற்கு அவமரியாதை போன்றவைகளுக்கு—அப்படிப்பட்ட கூட்டுறவே காரணமாக இருந்திருக்கலாம்.—1 கொரிந்தியர் 1:11; 5:1; 6:1; 11:20-22.
17. (அ) கொரிந்தியர்களுக்கு என்ன உற்சாகத்தைப் பவுல் கொடுத்தார்? (ஆ) என்ன கேள்விகள் பதிலளிக்கப்பட வேண்டும்?
17 ஆகவே, பவுல் இந்தச் சாதகமான ஊக்குவிப்பை கொரிந்தியர்களுக்கு தருகிறார்: “நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன்.” (1 கொரிந்தியர் 15:34) உயிர்த்தெழுதலைப் பற்றிய எதிர்மறையான கருத்து சிலரை, குடித்திருந்ததைப் போன்ற ஆவிக்குரிய மயக்க நிலைக்குள்ளாக்கி இருந்தது. அவர்கள் விழித்துக்கொண்டு தொடர்ந்து உணர்வுள்ள நிலையில் இருக்கவேண்டும். அதைப்போலவே இன்று, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த உலகத்தின் சந்தேக மனப்பான்மையால் பாதிக்கப்படாமல் ஆவிக்குரிய விழிப்புடன் இருக்கவேண்டிய தேவை இருக்கிறது. தங்களுடைய பரலோக உயிர்த்தெழுதல் நம்பிக்கையை அவர்கள் இறுக்கமாக பற்றிக்கொள்ள வேண்டும். ஆனால், கொரிந்தியர்களுக்கு இன்னும் சில கேள்விகள் இருந்தன, இன்று நமக்கும் இருக்கின்றன. உதாரணமாக: 1,44,000 பேர் எப்படிப்பட்ட உடலோடு பரலோகத்திற்கு எழுப்பப்படுகிறார்கள்? பரலோக நம்பிக்கையில்லாமல் இன்னும் பிரேதக்குழியில் இருக்கும் லட்சக்கணக்கானோரைப் பற்றி என்ன? அப்படிப்பட்டவர்களுக்கு உயிர்த்தெழுதல் எதை அர்த்தப்படுத்தும்? உயிர்த்தெழுதலைப் பற்றிய பவுலின் கலந்தாலோசிப்பில் மீதமானதை நாம் அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.
[அடிக்குறிப்புகள்]
a மீட்கும் பொருளைப் பற்றிய கலந்தாலோசிப்புக்கு பிப்ரவரி 15, 1991, தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரத்தைப் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ உயிர்த்தெழுதல் பற்றி என்ன கூடுதலான விளக்கத்தை இயேசு அளித்தார்?
◻ கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு சாட்சிகளாக இருந்தவர்களுள் சிலர் யார்?
◻ உயிர்த்தெழுதல் போதகம் ஏன் சவால்விடப்பட்டது, பவுலின் பிரதிபலிப்பு என்ன?
◻ அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை ஏன் அவசியம்?
[பக்கம் 15-ன் படம்]
யவீருவின் மகள் உயிர்த்தெழுதலுக்கான அத்தாட்சியானாள்
[பக்கம் 16, 17-ன் படம்]
உயிர்த்தெழுதல் நம்பிக்கை இல்லையென்றால் உண்மையுள்ள கிறிஸ்தவர்களின் உயிர்த்தியாகத்திற்கு எந்த அர்த்தமும் இருக்காது