யெகோவா பற்றுமாறா அன்புமிக்கவர்
“யெகோவா . . . மிகுந்த அன்புள்ள தயவுடையவர்.”—சங்கீதம் 145:8, NW.
1. கடவுள் எந்தளவுக்கு அன்பு காட்டுகிறார்?
“தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) மனதை நெகிழ வைக்கும் இந்தச் சொற்றொடர், யெகோவா அன்பான முறையில் ஆட்சி செய்கிறார் என்பதை நிரூபிக்கிறது. ஏன், அவருக்கு கீழ்ப்படியாத மனிதரும்கூட அவர் அன்போடு அருளும் சூரிய ஒளியிலிருந்தும் மழையிலிருந்தும் நன்மையடைகிறார்களே! (மத்தேயு 5:44, 45) மனித உலகை கடவுள் நேசிப்பதால் அவருடைய விரோதிகளும்கூட மனந்திரும்பி, அவரிடம் சேரவும் நித்திய ஜீவனை அடையவும் முடியும். (யோவான் 3:16) ஆனால், திருந்தவே திருந்தாத துஷ்டர்களை யெகோவா வெகு சீக்கிரத்தில் தடயமே இல்லாமல் அழித்துவிடுவார்; அவரை நேசிப்போரோ நீதியுள்ள புதிய உலகில் நித்திய வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வர்.—சங்கீதம் 37:9-11, 29; 2 பேதுரு 3:13.
2. தமக்கு ஒப்புக்கொடுத்திருப்பவர்களிடம் யெகோவா எத்தகைய விசேஷித்த அன்பைக் காட்டுகிறார்?
2 யெகோவா தம்முடைய உண்மை வணக்கத்தார் மீது காட்டும் அன்பு ஒப்பற்றது, நீடித்தது. “அன்புள்ள தயவு,” அதாவது “பற்றுமாறா அன்பு” என மொழிபெயர்க்கப்படும் எபிரெயு வார்த்தை இத்தகைய அன்பை சுட்டிக்காட்டுகிறது. பூர்வ இஸ்ரவேலில் அரசனாயிருந்த தாவீது கடவுளுடைய அன்புள்ள தயவை உள்ளப்பூர்வமாக போற்றினார். தன்னுடைய சொந்த அனுபவத்தாலும் மற்றவர்களிடம் கடவுள் நடந்துகொண்ட விதங்களை தியானித்ததாலும் “யெகோவா . . . மிகுந்த அன்புள்ள தயவுடையவர் [அல்லது, “பற்றுமாறா அன்பு உடையவர்”]” என முழு நம்பிக்கையோடு அவரால் பாட முடிந்தது.—சங்கீதம் 145:8, NW.
கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதி காட்டுவோரை அடையாளம் காணுதல்
3, 4. (அ) யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளவர்களை அடையாளம் காண 145-ம் சங்கீதம் எப்படி உதவுகிறது? (ஆ) கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளோர் அவரை எப்படி ‘ஸ்தோத்திரிக்கிறார்கள்’?
3 யெகோவா தேவனைப் பற்றி சாமுவேல் தீர்க்கதரிசியின் தாய் அன்னாள் இவ்வாறு சொன்னார்: “உண்மைப் பற்றுறுதியுள்ள தமது மக்களின் பாதங்களை அவர் காக்கிறார்.” (1 சாமுவேல் 2:9, NW) இந்த ‘உண்மைப் பற்றுறுதியுள்ளோர்’ யார்? இக்கேள்விக்கு தாவீது ராஜா பதிலளிக்கிறார். யெகோவாவின் அற்புதமான குணங்களைப் புகழ்ந்து கூறிய பின்பு, அவர் குறிப்பிடுவதாவது: “உம்முடைய பரிசுத்தவான்கள் [“உண்மைப் பற்றுறுதியுள்ளவர்கள்,” NW] உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.”—சங்கீதம் 145:10.
4 ஆகவே, யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளவர்கள் அவரைப் புகழ்ந்து பேச தங்கள் உதடுகளை பயன்படுத்துவதால் அவர்களை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம். சமூக நடவடிக்கைகளில், கிறிஸ்தவ கூட்டங்களில் அவர்கள் எந்த விஷயத்தைப் பற்றி பொதுவாக பேசுகிறார்கள்? அதில் என்ன சந்தேகம், யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றியே அவர்கள் பேசுகிறார்கள்! “அவர்கள் உம்முடைய [யெகோவாவுடைய] ராஜரீக மகிமையைப் பற்றி உரையாடுவார்கள், உம்முடைய வல்லமையைப் பற்றி பேசுவார்கள்” என்று பாடிய தாவீதின் மனோபாவத்தையே உண்மைப் பற்றுறுதியுள்ள கடவுளுடைய ஊழியர்களும் பிரதிபலிக்கிறார்கள்.—சங்கீதம் 145:11, NW.
5. உண்மைப் பற்றுறுதியுள்ளோர் தம்மை புகழ்ந்து பேசுவதை யெகோவா கவனிக்கிறார் என்று நமக்கு எப்படி தெரியும்?
5 உண்மைப் பற்றுறுதியுள்ளோர் தம்மை புகழ்ந்து பேசுகையில் யெகோவா கவனிக்கிறாரா? ஆம், அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை அவர் கவனித்துக் கேட்கிறார். நம்முடைய காலத்தில் இருந்துவரும் மெய் வணக்கத்தைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனத்தில் மல்கியா இவ்வாறு எழுதினார்: “அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர் கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.” (மல்கியா 3:16) உண்மைப் பற்றுறுதியுள்ளவர்கள் தம்மை புகழ்ந்து பேசுவது யெகோவாவின் மனதை மிகவும் குளிர்விக்கிறது; அவர்களை தம் நினைவில் வைக்கிறார்.
6. என்ன வேலையை வைத்து கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளோரை அடையாளம் காண முடியும்?
6 யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ள ஊழியர்களை இன்னொரு விதத்திலும் அடையாளம் கண்டுகொள்ளலாம், அதாவது அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்தி, மெய்க் கடவுளை வணங்காத ஜனங்களிடம் தைரியமாக பேசுவதை வைத்து கண்டுகொள்ளலாம். சொல்லப்போனால், அப்படிப்பட்ட உண்மைப் பற்றுறுதியுள்ளோர், “மனுபுத்திரருக்கு அவரது வல்லமையான செயல்களையும் அவரது ராஜரீகத்தின் மகிமைப் பிரதாபத்தையும் தெரியப்படுத்துகிறார்கள்.” (சங்கீதம் 145:12, NW) முன்பின் தெரியாதவர்களிடம் யெகோவாவின் ராஜரீகத்தைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புகளைத் தேடி கண்டுபிடித்து அவற்றை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்கிறீர்களா? யெகோவாவின் ராஜரீகம் நித்தியமானது, மனித அரசாங்கங்களைப் போன்று விரைவில் கவிழ்ந்துவிடும் ஒன்றல்ல. (1 தீமோத்தேயு 1:17) யெகோவாவின் நித்திய ராஜரீகத்தைப் பற்றி மக்கள் கற்றுக்கொண்டு அதன் ஆதரவாளர்களாக நிலைநிற்கை எடுப்பது மிக மிக அவசரம். “உம்முடைய ராஜரீகம் சதாகாலங்களிலுமுள்ள ராஜரீகம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது” என தாவீது பாடினார்.—சங்கீதம் 145:13, NW.
7, 8. 1914-ல் என்ன நடந்தது, தம் குமாரனுடைய ராஜ்யத்தின் மூலம் கடவுள் இப்போது அரசாளுகிறார் என்பதற்கு என்ன அத்தாட்சி உள்ளது?
7 1914-ம் ஆண்டு முதற்கொண்டு யெகோவாவின் ராஜரீகத்தைப் பற்றி பேசுவதற்கு கூடுதலான காரணம் இருந்திருக்கிறது. அந்த வருடத்தில், தாவீதின் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ராஜாவாகக் கொண்ட மேசியானிய ராஜ்யத்தை கடவுள் பரலோகத்தில் ஸ்தாபித்தார். தாவீதின் ராஜரீகம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்ற தமது வாக்குறுதியை யெகோவா இப்படியாக நிறைவேற்றினார்.—2 சாமுவேல் 7:12, 13; லூக்கா 1:32, 33.
8 இயேசு கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தின் அடையாளம் தொடர்ந்து நிறைவேறி வருவதைப் பார்க்கும் போது யெகோவா தமது குமாரனுடைய ராஜ்யத்தின் மூலம் இப்போது அரசாளுவது நிரூபணமாகிறது. கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளோர் அனைவராலும் செய்யப்படும் ஒரு வேலை அந்த அடையாளத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாக இருக்கும் என இயேசு முன்னறிவித்து, இவ்வாறு கூறினார்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:3-14) கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளோர் அந்தத் தீர்க்கதரிசனத்தை வைராக்கியத்துடன் நிறைவேற்றி வருவதால், ஒருபோதும் திரும்பச் செய்யப்படாத இந்த மகத்தான வேலையில் இன்று அறுபது லட்சத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் பங்குகொள்கிறார்கள். யெகோவாவுடைய ராஜ்யத்தின் விரோதிகள் அனைவருக்கும் முடிவு சீக்கிரத்தில் வரும்.—வெளிப்படுத்துதல் 11:15, 18.
யெகோவாவின் பேரரசுரிமையிலிருந்து நன்மையடைதல்
9, 10. யெகோவாவுக்கும் மனித ஆட்சியாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
9 நாம் ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களாக இருக்கிறோமென்றால், பேரரசராகிய யெகோவாவுடன் நாம் வைத்திருக்கும் உறவினால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. (சங்கீதம் 71:5; 116:12) எடுத்துக்காட்டாக, நாம் கடவுளுக்கு பயந்து நீதியை கடைப்பிடிப்பதால் அவருடைய அங்கீகாரத்தைப் பெற்று, ஆவிக்குரிய ரீதியில் அவருடன் நெருக்கமாகிறோம். (அப்போஸ்தலர் 10:34, 35; யாக்கோபு 4:8) ஆனால் மனித ஆட்சியாளர்களோ இராணுவத் தலைவர்கள், பணக்கார தொழிலதிபர்கள், அல்லது விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நட்சத்திரங்கள் போன்ற பெரும் புள்ளிகளுடனேயே பெரும்பாலும் நட்பு கொள்வதைக் காண்கிறோம். ஒரு பிரபல அரசியல்வாதி தன் நாட்டில் வறுமையால் பீடிக்கப்பட்ட இடங்களைப் பற்றி இவ்வாறு சொன்னதாக ஆப்பிரிக்க செய்தித்தாள் ஸோவெட்டன் குறிப்பிடுகிறது: “நிறைய பேர் ஏன் அந்த இடங்களுக்கு செல்ல விரும்புவதில்லை என்பது எனக்கு தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலைமைகள் இருப்பதையே மறந்துவிட நினைப்பதால்தான் செல்வதில்லை. அது எங்கள் மனசாட்சியை உறுத்துகிறது; அதுமட்டுமல்ல ஆடம்பரமான [கார்களில்] அங்கு செல்வதும் தர்மசங்கடமாக இருக்கிறது.”
10 மனித ஆட்சியாளர்கள் சிலர் தங்களது குடிமக்களுடைய நலனில் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறார்கள் என்பது சரியே. ஆனால் அரசியல் தலைவர்களிலேயே மிகச் சிறந்தவருக்கும்கூட தன்னுடைய குடிமக்களைப் பற்றி தனிப்பட்ட விதமாக நன்றாக தெரியாது. ஆகவே, நாம் ஒருவேளை இவ்வாறு கேட்கலாம்: குடிமக்கள் ஒவ்வொருவருடைய கஷ்ட காலங்களிலும் ஓடோடி வந்து உதவிக்கரம் நீட்டுமளவுக்கு எல்லோர் மீதும் மிகுந்த அக்கறை காட்டுகிற ஆட்சியாளர் யாராவது இருக்கிறாரா? ஆம், இருக்கிறார். தாவீது இவ்வாறு எழுதினார்: “யெகோவா விழுகிற யாவரையும் தாங்குகிறார்; தொய்ந்துபோன யாவரையும் தூக்கி விடுகிறார்.”—சங்கீதம் 145:14, திருத்திய மொழிபெயர்ப்பு.
11. யெகோவா தேவனிடம் உண்மைப் பற்றுறுதியுடன் நடந்து கொள்வோருக்கு என்ன துன்பங்கள் நேரிடுகின்றன, அவர்களுக்கு யாருடைய உதவி இருக்கிறது?
11 யெகோவா தேவனிடம் உண்மைப் பற்றுறுதியுடன் நடந்து கொள்வோருக்கு அநேக துன்பங்களும் துயரங்களும் நேரிடுகின்றன; அவர்களுடைய சொந்த அபூரணமும், ‘பொல்லாங்கனாகிய’ சாத்தானின் ஆதிக்கத்தில் கிடக்கும் உலகில் அவர்கள் வாழ்வதுமே அதற்கு காரணம். (1 யோவான் 5:19; சங்கீதம் 34:19) கிறிஸ்தவர்கள் துன்புறுத்துதலை சந்திக்கிறார்கள். சிலர் தீராத வியாதியால் அல்லது அன்பானவரின் இழப்பினால் கஷ்டப்படுகிறார்கள். சில சமயங்களில், தங்கள் சொந்த தவறுகளாலேயே மனம் நொந்து ‘தொய்ந்து போகிறார்கள்.’ ஆனால் எப்படிப்பட்ட துன்பங்கள் வந்தாலும், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறுதலையும் ஆவிக்குரிய பலத்தையும் அளிக்க யெகோவா எப்போதும் தயாராக இருக்கிறார். ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவுக்கும், உண்மைப் பற்றுறுதியுள்ள தம் குடிமக்கள் மீது இதே போன்ற கனிவான அக்கறை உள்ளது.—சங்கீதம் 72:12-14.
ஏற்ற வேளையில் திருப்தியான உணவு
12, 13. ‘உயிருள்ள ஒவ்வொன்றின்’ தேவைகளையும் யெகோவா எந்தளவுக்கு திருப்திப்படுத்துகிறார்?
12 யெகோவா அன்புள்ள தயவு மிக்கவர் என்பதால் தம் ஊழியர்களின் அனைத்து தேவைகளையும் திருப்திப்படுத்துகிறார். அவற்றில் ஒன்றுதான் போஷாக்குள்ள உணவை அளிப்பது. “எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை [யெகோவாவை] நோக்கிக் கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் [“உயிருள்ள ஒவ்வொன்றின்,” NW] வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்” என தாவீது ராஜா எழுதினார். (சங்கீதம் 145:15, 16) துயர்மிகுந்த காலங்களிலும்கூட தம்மிடம் உண்மைப் பற்றுறுதி காட்டுவோருக்கு ‘அன்றன்றைக்குரிய ஆகாரம்’ கிடைக்க யெகோவாவால் வழி செய்ய முடியும்.—லூக்கா 11:3; 12:29, 30.
13 ‘உயிருள்ள ஒவ்வொன்றும்’ திருப்தியடைவதாக தாவீது குறிப்பிட்டார். அவற்றில் மிருகங்களும் அடங்கும். ஒருவேளை பூமியின் நிலப்பரப்பிலும் கடலிலும் ஏராளமான தாவரங்கள் இருந்திராவிட்டால், நீர்வாழ் பிராணிகளுக்கும் ஆகாயத்துப் பறவைகளுக்கும், நிலத்தில் நடமாடும் மிருகங்களுக்கும் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனோ சாப்பிடுவதற்கு உணவோ இருந்திருக்காது. (சங்கீதம் 104:14) ஆனால், படைப்புகள் அனைத்தின் தேவைகளும் திருப்தியாகும்படி யெகோவா பார்த்துக்கொள்கிறார்.
14, 15. இன்று ஆவிக்குரிய உணவு எப்படி அளிக்கப்படுகிறது?
14 மிருகங்களைப் போல் அல்லாமல் மனிதருக்கு ஆவிக்குரிய தேவை உள்ளது. (மத்தேயு 5:3, NW) தமக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளோரின் ஆவிக்குரிய தேவையை யெகோவா எவ்வளவு அற்புதமாய் திருப்திப்படுத்துகிறார்! “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார்,” தம்மைப் பின்பற்றுவோருக்கு ‘ஏற்ற வேளையிலே ஆவிக்குரிய போஜனங்கொடுப்பார்கள்’ என தம்முடைய மரணத்திற்கு முன்பு இயேசு உறுதியளித்தார். (மத்தேயு 24:45, NW) அபிஷேகம் பண்ணப்பட்ட 1,44,000 பேரில் மீதிபேரே இன்று இந்த அடிமை வகுப்பாராக சேவிக்கிறார்கள். அவர்கள் மூலம் உண்மையில் ஏராளமான ஆவிக்குரிய உணவை யெகோவா அளித்திருக்கிறார்.
15 உதாரணமாக, யெகோவாவின் ஜனங்களில் பெரும்பாலோர் தங்களுடைய சொந்த மொழியிலேயே கிடைக்கும் திருத்தமான, புதிய பைபிள் மொழிபெயர்ப்பினால் நன்மையடைகிறார்கள். அந்த பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு எத்தகைய அருமையான பொக்கிஷம்! அதுமட்டுமல்ல, பைபிள் படிப்புக்கு உதவும் கோடிக்கணக்கான பிரசுரங்கள் 300-க்கும் அதிகமான மொழிகளில் தொடர்ந்து பிரசுரிக்கப்படுகின்றன. உலகம் முழுவதிலுமுள்ள மெய் வணக்கத்தாருக்கு இந்த ஆவிக்குரிய ஆகாரம் எல்லாமே ஆசீர்வாதமாக இருந்திருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் புகழ் யாருக்கு சேர வேண்டும்? யெகோவா தேவனுக்கே சேர வேண்டும். அவர் அன்புள்ள தயவு மிக்கவராதலால் ‘ஏற்ற வேளையிலே ஆகாரம் கொடுக்கும்படி’ இந்த அடிமை வகுப்பாருக்கு வாய்ப்பளித்திருக்கிறார். இந்த ஏற்பாடுகள் வாயிலாக இன்று ஆவிக்குரிய பரதீஸில் உள்ள ‘உயிருள்ள ஒவ்வொன்றின் வாஞ்சையும்’ திருப்தி செய்யப்படுகிறது. இந்தப் பூமி விரைவில் ஒரு நிஜ பரதீஸாகவே மாறப்போவதைப் பற்றிய நம்பிக்கையில் யெகோவாவின் ஊழியர்கள் எவ்வளவாய் களிகூருகிறார்கள்!—லூக்கா 23:42, 43.
16, 17. (அ) ஏற்ற காலத்தில் கிடைத்த ஆவிக்குரிய உணவுக்கு என்ன உதாரணங்கள் இருக்கின்றன? (ஆ) சாத்தானால் எழுப்பப்பட்ட முக்கிய விவாதம் சம்பந்தமாக கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளவர்களின் உணர்ச்சிகளை 145-ம் சங்கீதம் எப்படி குறிப்பிடுகிறது?
16 ஏற்ற காலத்தில் கிடைத்த ஆவிக்குரிய உணவுக்கு தலைசிறந்த ஓர் எடுத்துக்காட்டை கவனியுங்கள். 1939-ஆம் ஆண்டில் ஐரோப்பா நாட்டில் இரண்டாம் உலகப் போர் ஆரம்பமானது. அதே ஆண்டு நவம்பர் 1 காவற்கோபுரத்தில் வெளிவந்த ஒரு கட்டுரையின் தலைப்பு “நடுநிலைமை” என்பதாகும். தெள்ளத் தெளிவான தகவல்கள் அதில் கொடுக்கப்பட்டிருந்ததால், போரிடும் நாடுகளின் நடவடிக்கைகளில் நடுநிலைமையை உறுதியாக காத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உலகம் முழுவதிலுமிருந்த யெகோவாவின் சாட்சிகள் அறிந்து கொண்டார்கள். இதனால், அந்த ஆறாண்டு போர் காலத்தில் இருதரப்பு அரசாங்கங்களின் சீற்றத்திற்கும் அவர்கள் ஆளானார்கள். ஆனால் தடையுத்தரவுகளையும் துன்புறுத்தல்களையும் அனுபவித்தபோதிலும், கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளவர்கள் ராஜ்ய நற்செய்தியை தொடர்ந்து பிரசங்கித்தார்கள். அதன் விளைவாக, 1939 முதல் 1946 வரையான ஆண்டுகளில் ஆச்சரியமூட்டும் வண்ணம் 157 சதவீத அதிகரிப்பினால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அதுமட்டுமல்ல, அந்தப் போர்க் காலங்களில் அவர்கள் காட்டிய சிறந்த உத்தமத்தன்மை மெய் மதத்தை அடையாளம் காண மக்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறது.—ஏசாயா 2:2-4.
17 யெகோவா அளிக்கும் ஆவிக்குரிய உணவு காலத்திற்கு ஏற்றது மட்டுமல்ல, அது மிகுந்த திருப்தியையும் அளிக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது நாடுகள் சண்டையிடுவதில் மூழ்கியிருந்த வேளையில் யெகோவாவின் ஜனங்களோ தங்களுடைய சொந்த இரட்சிப்பைவிட மிக முக்கியமான ஒன்றின்மீது கவனம் செலுத்த உதவியளிக்கப்பட்டார்கள். பிரபஞ்சம் முழுவதையும் உட்படுத்திய முக்கிய விவாதம் தம்முடைய நியாயமான பேரரசுரிமையோடு சம்பந்தப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள யெகோவா அவர்களுக்கு உதவினார். தங்களுடைய உண்மைப் பற்றுறுதியின் மூலமாக யெகோவாவின் பேரரசுரிமையே நியாயமானது எனவும் பிசாசை பொய்யன் எனவும் நிரூபிப்பதில் யெகோவாவின் சாட்சிகள் ஒவ்வொருவருக்கும் சிறிய பங்கு இருந்ததை அறிவது எவ்வளவாய் திருப்தியளிக்கிறது! (நீதிமொழிகள் 27:11) யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதி காட்டுபவர்கள், யெகோவாவையும் அவர் ஆட்சி புரியும் விதத்தையும் பற்றி பழித்துப் பேசும் சாத்தானைப் போல் அல்லாமல், ‘யெகோவா தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவர்’ என வெளிப்படையாக தொடர்ந்து அறிவித்து வருகிறார்கள்.—சங்கீதம் 145:17.
18. காலத்திற்கேற்றதும் மிகவும் திருப்தியளிப்பதுமான ஆவிக்குரிய உணவுக்கு சமீப எடுத்துக்காட்டு எது?
18 காலத்திற்கேற்ற திருப்தியான ஆவிக்குரிய உணவுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகமாகும்; “வைராக்கியமாக ராஜ்யத்தை பிரசங்கிப்போர்” என்ற தலைப்பில் 2002/03-ல் உலகெங்கிலும் நூற்றுக்கணக்கான இடங்களில் நடத்தப்பட்ட மாவட்ட மாநாடுகளில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாரால்’ தயாரிக்கப்பட்டு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட இப்புத்தகம் யெகோவா தேவனுடைய அருமையான குணங்களை சிறப்பித்து காட்டுகிறது; 145-ஆம் சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குணங்களும் அதில் அடங்கும். கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியைக் காட்டுபவர்கள் அவரிடம் இன்னும் நெருங்கிச் செல்வதில் இந்த ஒப்பற்ற புத்தகம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
யெகோவாவிடம் நெருங்கிச் செல்வதற்கான காலம்
19. என்ன மிக முக்கிய காலக் கட்டம் நெருங்கியிருக்கிறது, அந்தக் காலத்தை நாம் எப்படி சமாளிக்கலாம்?
19 யெகோவாவின் பேரரசுரிமையைப் பற்றிய விவாதத்தை தீர்க்கும் மிக முக்கிய காலக் கட்டம் நெருங்கியிருக்கிறது. எசேக்கியேல் 38-ஆம் அதிகாரத்தில் முன்னுரைத்தபடி, “மாகோகு தேசத்தானான கோகு” என்ற தன் பாகத்தை சாத்தான் விரைவில் நிறைவேற்றி முடிப்பான். யெகோவாவின் ஜனங்கள் உலகளாவிய விதத்தில் தாக்கப்படுவதை இது உட்படுத்தும். இது, கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளவர்களின் உத்தமத்தன்மையை முறிப்பதற்கு சாத்தான் தன் பங்கில் செய்யப்போகும் உச்சக்கட்ட முயற்சியாக இருக்கும். ஆகவே, யெகோவாவின் வணக்கத்தார் இதுவரை இல்லாதளவுக்கு அவரை நோக்கி ஊக்கமாகவும், ஏன் உரக்கவும் கூப்பிட வேண்டியிருக்கும். கடவுள் மீது அவர்களுக்கு இருக்கும் பயபக்தியும் அன்பும் வீணாகி விடுமா? நிச்சயமாகவே வீணாகாது, ஏனெனில் 145-ம் சங்கீதம் இவ்வாறு கூறுகிறது: “தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் [“உரத்த,” NW] கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்.”—சங்கீதம் 145:18-20.
20. சங்கீதம் 145:18-20-ல் உள்ள வார்த்தைகள் சீக்கிரத்தில் எப்படி நிறைவேறும்?
20 பொல்லாதவர்கள் அனைவரையும் யெகோவா அழிக்கும்போது அவர் நம் பக்கத்தில் இருந்து இரட்சிப்பதை ருசித்துப் பார்ப்பது எவ்வளவாய் சிலிர்ப்பூட்டும்! இப்போது மிக அருகில் இருக்கும் அந்த மிக முக்கியமான காலக் கட்டத்தில், ‘உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்கு’ மட்டுமே யெகோவா செவிசாய்ப்பார். மாய்மாலக்காரர்களுக்கு அவர் கண்டிப்பாக செவிசாய்க்க மாட்டார். துன்மார்க்கன் கடைசி நேரத்தில் அவருடைய பெயரை சொல்லி கூப்பிட்டால் அது வீணே என கடவுளுடைய வார்த்தை தெளிவாகக் காட்டுகிறது.—நீதிமொழிகள் 1:28, 29; மீகா 3:4; லூக்கா 13:24, 25.
21. யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ள ஜனங்கள் கடவுளுடைய பெயரை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி காண்பதை எப்படி காட்டுகிறார்கள்?
21 யெகோவாவுக்கு பயந்தவர்கள் ‘உண்மையாய் அவரை நோக்கிக் கூப்பிடுவது’ எப்போதையும்விட இப்போது மிக மிக அவசரம். உண்மைப் பற்றுறுதியுள்ளவர்கள் ஜெபிக்கையிலும் கூட்டங்களில் குறிப்புகள் சொல்கையிலும் அவருடைய பெயரை பயன்படுத்துவதில் அதிக மகிழ்ச்சி காண்கிறார்கள். தங்களுடைய அன்றாட சம்பாஷணைகளில் கடவுளுடைய பெயரை பயன்படுத்துகிறார்கள். வெளி ஊழியத்திலும் யெகோவாவின் பெயரை தைரியமாக அறிவிக்கிறார்கள்.—ரோமர் 10:10, 13-15.
22. உலகப்பிரகாரமான மனப்பான்மைகளையும் ஆசைகளையும் எதிர்த்து தொடர்ந்து போராடுவது ஏன் அத்தியாவசியம்?
22 யெகோவா தேவனோடு நாம் வைத்திருக்கும் நெருக்கமான பந்தத்தால் தொடர்ந்து நன்மையடைய வேண்டுமென்றால் ஆவிக்குரியத் தன்மைக்கு பங்கம் விளைவிக்கிற காரியங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடுவதும் அத்தியாவசியம். உதாரணமாக, பொருளாசை, ஆரோக்கியமற்ற பொழுதுபோக்கு, ஒருவருக்கொருவர் குற்றங்களை மன்னியாதிருப்பது, அல்லது தேவையிலிருப்போருக்கு உதவாதிருப்பது ஆகியவற்றிற்கு எதிராக போராடுவது அவசியம். (1 யோவான் 2:15-17; 3:15-17) நம்மை திருத்திக்கொள்ளவில்லை என்றால், அத்தகைய ஆசைகளும், குணங்களும் வினைமையான பாவத்தை பழக்கமாக செய்வதில் விளைவடையலாம், இறுதியில் யெகோவாவின் அங்கீகாரத்தையும் இழந்துவிடலாம். (1 யோவான் 2:1, 2; 3:6) யெகோவாவுக்கு உண்மையுடன் நிலைத்திருந்தால் மட்டுமே அன்புள்ள தயவை, அதாவது பற்றுமாறா அன்பை அவர் நமக்கு தொடர்ந்து காட்டிக்கொண்டே இருப்பார் என்பதை நினைவில் வைப்பது ஞானமானது.—2 சாமுவேல் 22:26, NW.
23. கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளவர்கள் அனைவருக்கும் முன்னால் என்ன மகத்தான எதிர்காலம் இருக்கிறது?
23 ஆகவே, யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளோர் அனைவருக்கும் முன்னால் இருக்கும் மகத்தான எதிர்காலத்தின் மீது நம் எண்ணங்களை ஒருமுகப்படுத்துவோமாக. அவ்வாறு செய்வதன் மூலம், “நாடோறும்” “என்றென்றைக்கும்” யெகோவாவை ஸ்தோத்திரித்து புகழ்ந்து துதிப்போரில் ஒருவராக இருக்கும் அற்புதமான எதிர்பார்ப்பு நமக்கு இருக்கும். (சங்கீதம் 145:1, 2) ஆகவே, ‘நித்திய ஜீவனுக்கேதுவாக தேவனுடைய அன்பிலே நம்மை காத்துக்கொள்வோமாக.’ (யூதா 20, 21) நம் பரலோக தகப்பன் தம்மை நேசிப்போரிடம் காட்டும் மிகுந்த அன்புள்ள தயவு உட்பட அவருடைய அருமையான குணங்களிலிருந்து நாம் தொடர்ந்து நன்மையடைந்து வருகையில், நம்முடைய உணர்ச்சிகள் 145-ம் சங்கீதத்தின் கடைசி வசனங்களில் தாவீது வெளிக்காட்டிய உணர்ச்சிகளைப் போன்று இருப்பதாக. “என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்ச தேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.”
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளோரை அடையாளம் காண 145-ம் சங்கீதம் எப்படி உதவுகிறது?
• யெகோவா எப்படி ‘உயிருள்ள ஒவ்வொன்றின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறார்’?
• நாம் யெகோவாவிடம் நெருங்கி வருவது ஏன் அவசியம்?
[பக்கம் 16-ன் படம்]
கடவுளுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளோர் அவருடைய வல்லமையான செயல்களைப் பற்றி பேசுவதில் மகிழ்ச்சி காண்கிறார்கள்
[பக்கம் 17-ன் படம்]
முன்பின் தெரியாதவர்கள் யெகோவாவின் ராஜரீக மகிமையை கற்றுக்கொள்வதற்கு அவரது ஊழியர்கள் தைரியமாக உதவுகிறார்கள்
[படத்திற்கான நன்றி]
மிருகங்கள்: Parque de la Naturaleza de Cabárceno
[பக்கம் 18-ன் படங்கள்]
‘உயிருள்ள ஒவ்வொன்றிற்கும்’ யெகோவா உணவளிக்கிறார்
[பக்கம் 19-ன் படம்]
யெகோவாவுக்கு உண்மைப் பற்றுறுதியுள்ளோர் உதவிக்காக ஜெபிக்கையில் பலத்தையும் வழிநடத்துதலையும் அவர் அளிக்கிறார்