படைப்புச் சொல்கிறது, “அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை”
“காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.”—ரோமர் 1:20.
1, 2. (அ) யோபு யெகோவாவிடம் அதிக வெறுப்போடு முறையிட்டது என்ன? (ஆ) பின்னர் என்ன மனமாற்றத்தை யோபு காண்பித்தார்?
யோபு, பூர்வ காலத்து மனிதர், யெகோவா தேவனுக்குப் பற்றுமாறாத உத்தமத்தன்மையைக் காண்பித்தவர், சாத்தானால் ஒரு பயங்கரமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பிசாசு, யோபு அவருடைய எல்லாச் சம்பத்துக்களையும் இழக்கும்படிச்செய்து, அவருடைய மகன்களையும் மகள்களையும் சாகடித்து, அவரைக் கொடிய நோயால் வாதித்தான். யோபுவோ தம்மேல் வந்த இந்த இடர்களைக் கடவுள் கொண்டுவருவதாக நினைத்தார். அவர் அதிக வெறுப்போடு, யெகோவாவிடம் முறையிட்டார்: “நீர் தவறு செய்வது உமக்கு நன்றாயிருக்குமோ, . . . நீர் ஏன் என் அக்கிரமத்தை ஆராய்ந்து, என் பாவங்களைக் கிண்டிக் கிளறிப் பார்க்கிறீர்? நான் குற்றமற்றவன் என்பது உமக்குத் தெரிந்திருந்துமா இப்படி?”—யோபு 1:12-19; 2:5-8; 10:3, 6, 7, NW.
2 இதற்குப் பின்பு சில காலம் கழித்து, கடவுளிடம் யோபுவின் வார்த்தைகள் முற்றிலும் முரணான ஒன்றைப் பிரதிபலித்தன: “நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்.” (யோபு 42:3, 5, 6) யோபுவின் மனப்போக்கை மாற்றும்படி என்ன நடந்தது?
3. படைப்பைப்பற்றிய என்ன புதிய நோக்குநிலையை யோபு பெற்றார்?
3 இடைப்பட்ட சமயத்தில், பெருங்காற்றிலிருந்து யெகோவா யோபுவிடம் நேருக்குநேர் பேசியிருந்தார். (யோபு 38:1) அவர் யோபுவிடம் சரமாரியாகக் கேள்விகள் கேட்டிருந்தார். ‘நான் பூமியை அஸ்திபாரப்படுத்தியபோது நீ எங்கிருந்தாய்? சமுத்திரம் அலை புரண்டு வரும்போது அதற்கு எல்லையிட்டு, கதவுகளால் அதை அடைத்தவர் யார்? ஆகாயத் துருத்திகளிலுள்ள தண்ணீரை நீ பூமியின்மேல் மழையாகப் பொழியப்பண்ணுவாயோ? புல்லை முளைப்பிக்கும்படிச் செய்வாயோ? விண்மீன்களை இணைத்து, அவற்றை அதனதன் பாதைகளில் வழிநடத்துவாயோ?’ யோபு புத்தகத்தின் அதிகாரங்கள் 38 முதல் 41 வரை, யெகோவா சரமாரியாக இப்படிப்பட்ட கேள்விகளையும் படைப்பைப்பற்றிய அதிக கேள்விகளையும் யோபுவின்மேல் பொழிந்தார். யோபுவினால் செய்யப்பட முடியாத அல்லது ஏன் புரிந்துகொள்ளவும் முடியாத, தம்முடைய படைப்பில் பிரதிபலிக்கப்படும் ஞானம், வல்லமை ஆகியவற்றை யோபுவுக்கு வலுக்கட்டாயமாக ஞாபகப்படுத்தி, தமக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை யோபு காணும்படி கடவுள் செய்தார். அவருடைய படைப்பினால் வெளிப்படுத்தப்படும் சர்வ வல்லமையுள்ள கடவுளின் மலைக்கவைக்கும் ஞானத்தினாலும், வியப்பூட்டும் வல்லமையினாலும் திணறடிக்கப்பட்டவராக யோபு, யெகோவாவிடமா தர்க்கம் செய்ய எனக்குத் துணிச்சல் இருக்கிறது என்று திகைத்துப்போனார். எனவே அவர் சொன்னார்: “என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது.”—யோபு 42:5.
4. யெகோவாவின் படைப்புகளிலிருந்து நாம் என்ன கண்டுணரவேண்டும், இதை உணர மறுப்பவர்களின் நிலை என்ன?
4 பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஓர் ஏவப்பட்ட பைபிள் எழுத்தாளர், யெகோவாவின் குணங்களை அவருடைய படைப்புகளின் மூலம் அறிய முடியும் என்று நிச்சயப்படுத்தினார். அப்போஸ்தலனாகிய பவுல், ரோமர் 1:19, 20-ல் எழுதினார்: “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.”
5. (அ) மனிதர்களுக்கு என்ன இயல்பான தேவை இருக்கிறது, இது சிலரால் எப்படித் தவறாகப் பூர்த்திசெய்யப்படுகிறது? (ஆ) அத்தேனேயிலுள்ள கிரேக்கருக்குப் பவுல் என்ன சிபாரிசுசெய்தார்?
5 மனிதன் ஓர் உன்னத வல்லமையை வணங்கவேண்டும் என்கிற ஓர் உடன்பிறந்த தேவையோடு படைக்கப்பட்டிருந்தான். டாக்டர் C. G. யுங்க், கண்டுபிடிக்கப்பட்டிராத தான் (The Undiscovered Self) என்ற தன்னுடைய புத்தகத்தில் இதன் தேவையைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்: “மனிதனுக்கே உரித்தான ஓர் இயல்புணர்ச்சியான உணர்வு மற்றும் அதன் வெளிப்பாடுகள் மனித வரலாற்றின் எல்லா நிலைகளிலும் காணப்பட முடிகிறது.” வணக்கம் செலுத்தவேண்டும் என்கிற இயல்பாய் அமைந்த உள்ளத்தூண்டுதலைப்பற்றி அப்போஸ்தலன் பவுல் பேசினார்; இது அத்தேனேயில் இருந்த கிரேக்கர், அறிந்த மேலும் அறியாத அநேகக் கடவுட்களுக்கு உருவங்களையும் பலிபீடங்களையும் ஏன் செய்திருந்தனர் என்பதை விளக்கியது. மேலும் பவுல், “தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே,” என்று உண்மையான கடவுளை அவர்களுக்கு அடையாளப்படுத்தியும் காண்பித்து, உண்மையான கடவுளாகிய யெகோவாவைத் தேடுவதன்மூலம் இந்த உள்ளார்ந்த உணர்ச்சியைச் சரியாக அவர்கள் திருப்திப்படுத்தவேண்டும் என்பதை எடுத்துரைத்தார். (அப்போஸ்தலர் 17:22-30) அவருடைய படைப்புகளை எவ்வளவு அதிகமாகத் தெரிந்துகொள்கிறோமோ அவ்வளவிற்கு அவருடைய குணங்களையும் தன்மைகளையும் கண்டுணர்கிறவர்களாக நாம் இருப்போம்.
வியப்பூட்டும் தண்ணீர் சுழற்சி
6. தண்ணீர் சுழற்சியில், யெகோவாவின் என்ன குணங்களை நாம் காண்கிறோம்?
6 யெகோவாவின் என்ன குணங்களை நாம் கண்டுணர்கிறோம், உதாரணமாக, டன் கணக்காகத் தண்ணீரை வசப்படுத்தி வைத்திருக்கும் திரண்டிருக்கும் மேகங்களின் திறமையில்? அவருடைய அன்பையும் ஞானத்தையும் நாம் காண்கிறோம், ஏனென்றால் இதன்மூலம் அவர் பூமிக்கு ஆசீர்வாதமாக, மழைகளைப் பெய்யும்படிச் செய்கிறார். பிரசங்கி 1:7-ல் சொல்லப்பட்டிருக்கிறபடி, தண்ணீர் சுழற்சியில் உட்பட்டிருக்கும் ஆச்சரியமூட்டும் திட்டமைப்பின்மூலம் இதை அவர் செய்கிறார்: “எல்லா நதிகளும் சமுத்திரத்தில் ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும்.” பைபிள் புத்தகமாகிய யோபு, இது எப்படி நடக்கிறது என்பதைத் தெள்ளத்தெளிவாக்குகிறது.
7. கடலிலிருந்து மேகத்திற்கு தண்ணீர் எப்படிச் செல்கிறது, திரண்டிருக்கும் மேகங்கள் எப்படி டன்கள் கணக்காகத் தண்ணீரை வசப்படுத்தி வைத்திருக்கின்றன?
7 குளிர்கால நீரோட்டங்கள் கடலில் சேர்கின்றன, அவை அங்கேயே இருந்துவிடுவதில்லை. யெகோவா, “நீர்த்துளிகளைக் கடலிலிருந்து ஏறப்பண்ணுகிறார்; அவர் உண்டாக்கின கார்மேகத்திலிருந்து மழையைத் திரட்டியெடுக்கிறார்.” தண்ணீர் நீராவி வடிவத்தில் இருப்பதால், இறுதியில் ஒரு தூய்மையான கார்மேகங்கள், “சமநிலையில் மேகங்களாக ஆகாயத்தில் தொங்குகின்றன, பூரணத் திறமையுடைவரின் ஓர் ஆச்சரியமூட்டும் செயல்.” (யோபு 36:27; 37:16; தி நியூ இங்கிலிஷ் பைபிள்) மேகங்கள் கார்மேகங்களாக இருக்கும்வரை மிதக்கின்றன: “தண்ணீர்களை அவர் தம்முடைய மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் கார்மேகங்கள் கிழிவதில்லை.” அல்லது மற்றொரு மொழிபெயர்ப்பு சொல்கிறப்பிரகாரம்: “அவரே, தண்ணீரை அடர்ந்த கார்மேகங்களில் கட்டிவைக்கிறார், அவற்றின் பழுவால் கார்மேகம் கிழிவதில்லை.”—யோபு 26:8, தி ஜெருசலம் பைபிள்; NE.
8. என்ன வித்தியாசமான படிகள்மூலம் ‘ஆகாயத் துருத்திகளிலுள்ள தண்ணீர்’ பொழியச்செய்யப்பட்டு, தண்ணீர் சுழற்சி முழுமைப்பெறுகிறது?
8 பூமிக்கு மழையாய்ப் பெய்யும்படி இந்த “ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்?” (யோபு 38:38) யாருடைய “பூரணத் திறமை” அவற்றை அங்கு முதலில் போட்டதோ, யார் ‘அவர் உண்டாக்கின கார்மேகத்திலிருந்து மழையைத் திரட்டியெடுக்கிறாரோ’ அவர்தான். மேலும் கார்மேகங்களிலிருந்து மழைத்துளிகளைத் திரட்டியெடுக்க என்ன தேவையாயிருக்கிறது? அங்கு, தூசி அல்லது உப்புத்துகள்கள் போன்ற மிக நுண்ணிய திடப்பொருள்கள்—ஒவ்வொரு கனசதுர சென்டிமீட்டர் காற்றுக்கும் அவை ஆயிரக்கணக்கானவற்றிலிருந்து இலட்சக்கணக்கான எண்ணிக்கைவரை—தேவை; இவை சிறுதுளிகள் ஒன்றுசேர்வதற்கு உந்துவிக்கும் பொருள்களாகச் செயல்படுகின்றன. ஒரு சராசரி மழைச்சொட்டு உருவாவதற்கு, பத்து லட்சம் மிகச்சிறு மேகத்துளிகள் ஒன்றுசேரவேண்டும் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இந்த ஒன்றுசேர்தல் அனைத்தும் நடந்தப்பின்புதான் மேகங்கள், தண்ணீரைக் கடலில் கொண்டுபோய்ச் சேர்க்கும் நீரோட்டங்களை உண்டாக்குவதற்கு, தங்களுடைய மழையைப் பூமிக்குப் பொழியச்செய்கின்றன. எனவே, நீர்ச்சுழற்சி தனக்குள் தானே முழுமையடைகிறது. இவையெல்லாம் குருட்டுத்தனமாகத் திடீரென்றா? நிச்சயமாகவே, ‘போக்குச்சொல்ல இடமில்லையே’!
சாலொமோனின் ஞானத்தின் ஓர் ஊற்றுமூலம்
9. எறும்பு இனங்களில் ஒன்றைப்பற்றி சாலொமோன் என்ன தனிச்சிறப்பைக் கண்டார்?
9 பூர்வ உலகில், சாலொமோனின் ஞானம் ஈடிணையற்றதாக இருந்தது. அந்த ஞானத்தின் பெரும்பாகம், யெகோவாவின் படைப்பைப்பற்றியது: “லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும்பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் [சாலொமோன்] வாக்கியங்களைச் சொன்னான்.” (1 இராஜாக்கள் 4:33) இதே சாலொமோன் ராஜாதான் இவ்வாறு எழுதினார்: “சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.”—நீதிமொழிகள் 6:6-8.
10. சேகரிக்கும் எறும்புகளைப்பற்றிய சாலொமோனின் உதாரணம் எவ்வாறு வெற்றியோடு மெய்ப்பித்துக்காட்டப்பட்டது?
10 குளிர்கால குளிரில் உணவு இருக்கும்படி, கோடைகாலத்தில் உணவைச் சேகரித்து வைப்பதற்கு எறும்புக்குக் கற்றுக்கொடுத்தது யார்? தானியங்களைச் சேர்த்துவைத்து, குளிர்காலத்தில் பயன்படுத்தும்படிச் சேகரித்து வைக்கும் இந்த எறும்புகளைக்குறித்த சாலொமோனுடைய பதிவின் துல்லியத்தன்மை, பல நூற்றாண்டுகளாகச் சந்தேகிக்கப்பட்டது. அவை இருப்பதாக யாருமே எந்தவிதச் சான்றையும் கண்டுபிடிக்கவில்லை. எனினும், 1871-ல், பிரிட்டனைச் சேர்ந்த ஓர் இயற்கை வல்லுநர் அவை இருக்கும் நிலத்தடித் தானியக் களஞ்சியங்களைக் கண்டுபிடித்தார், மேலுமாக அவற்றைப்பற்றிப் பைபிளின் துல்லிய அறிக்கை வெற்றியோடு மெய்ப்பித்துக்காட்டப்பட்டது. ஆனால், கோடைகாலத்திலேயே, குளிர்காலத்தின் குளிர் சீக்கிரத்தில் வரப்போகிறது என்று அறியும் முன்னறியும் திறனையும், அதற்கு என்ன செய்வது என்ற ஞானத்தையும் இந்த எறும்புகள் எப்படிப் பெற்றன? பைபிளே விளக்குகிறது, யெகோவாவின் பல படைப்புகளில் அவற்றின் உயிர்ப்பிழைப்பிற்கு ஒரு ஞானம் அவற்றிற்குள் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருக்கிறது. சேகரிக்கும் எறும்புகளோ, தங்களுடைய படைத்தவரிடமிருந்து வரும் இப்படிப்பட்ட ஆசீர்வாதத்தைப் பெறுபவையாகும். நீதிமொழிகள் 30:24 (NW) இதைக்குறித்துச் சொல்கிறது: “அவை மகா ஞானமுள்ளவைகள்.” இப்படிப்பட்ட ஞானம் வெறுமனே தானாக நடந்தது என்று சொல்வது நியாயமற்றது; இதற்குப் பின்னால், ஒரு ஞானமுள்ள படைத்தவரைக் கண்டுணர தவறுவது, மன்னிக்கப்படமுடியாதது.
11 ஒரு மகா பெரிய செக்கோயா மரத்தின் அடிவாரத்தில் நிற்கிற ஒரு மனிதர், அதனுடைய பிரமாண்டமான உயரத்தைக் கண்டு வியப்படைந்து, புரிந்துகொள்ள முடிந்தபடியே ஒரு சிறிய எறும்பாகத் தன்னை உணர்வார். மரத்தின் அளவு மலைக்கவைக்கும்: உயரம் 90 மீட்டர், விட்டம் 11 மீட்டர், மரப்பட்டையின் பருமன் 0.6 மீட்டர், வேர்கள் மூன்று அல்லது நான்கு ஏக்கருக்குமேல் பரவியிருக்கும். ஆனாலும், மிகவும் ஆச்சரியத்தைத் தருவது, அதனுடைய வளர்ச்சியில் உள்ளடங்கியிருக்கும் வேதியியலும் இயற்பியலும். சர்க்கரையை உற்பத்தி செய்து, பிராணவாயுவை வெளியேற்றுவதற்கு இதனுடைய இலைகள் வேர்களிடமிருந்து தண்ணீரையும், காற்றிலிருந்து கரியமில வாயுவையும், சூரியனிடமிருந்து ஆற்றலையும் பெறுகின்றன—இந்த முறை ஒளிச்சேர்க்கை என்றழைக்கப்படுகிறது, இது ஏறக்குறைய 70 வேதியியல் வினைகளை உள்ளடக்குகிறது, இவையனைத்தும் புரிந்துகொள்ளப்பட்டில்லை. வியப்பூட்டும்வகையில், முதல் வேதிவினை, சூரியனிலிருந்து வரும் மிகச் சரியான நிறத்தை, சரியான அலைநீளத்தை உடைய ஒளியைச் சார்ந்திருக்கிறது; அப்படியில்லையென்றால், குளோரோஃபைல் மூலக்கூறுகளினால் அது உட்கிரகிக்கப்படாமல், ஒளிச்சேர்க்கை செயல் நடக்க ஆரம்பிக்காமலேயே போய்விடும்.
12. (அ) செக்கோயா மரம் தண்ணீர் பயன்படுத்துவதைப்பற்றியத் தனிச்சிறப்பு என்ன? (ஆ) தாவர வளர்ச்சிக்கு ஏன் நைட்ரஜன் தேவை, இதனுடைய சுழற்சி எவ்வாறு முழுமையடைகிறது?
12 மற்றொரு ஆச்சரியமூட்டும் உண்மை, இந்த மரம், வேரிலிருந்து இதன் பிரமாண்டமான 90 மீட்டர் உயரத்திற்கு பெருமளவில் தண்ணீரை மேலிழுக்க முடியும் என்பதுதான். ஒளிச்சேர்க்கைக்குத் தேவையான தண்ணீரைவிட அதிகமான அளவு மேலிழுத்துக்கொள்ளப்படுகிறது. மீதியான தண்ணீர், இலைகள் மூலமாக ஆவிவடிவில் வெளியேற்றப்பட்டு காற்றோடு கலந்துவிடுகிறது. இது மரம் தண்ணீர்-குளிர்ச்சியடையும்படிச் செய்கிறது, ஏறக்குறைய நாம் வியர்த்துக்கொட்டும்போது உடம்புச்சூடு தனிவதுபோல. வளர்ச்சிக்குப் புரதம் உண்டாக்குவதற்கு, நைட்ரஜன் சர்க்கரையோடு, அல்லது கார்போஷைட்ரேட்டுகளோடு கலக்கவேண்டும். இலை, காற்றிலிருந்து எடுக்கப்படும் வாயுவடிய நைட்ரஜனைப் பயன்படுத்தமுடியாது, ஆனால் மண்ணின் வடிவமைப்பு பூமியில் உள்ள நைட்ரஜன் வாயுவைத் தண்ணீரில் கரையக்கூடிய நைட்ரேட்டுகளாகவும் நைட்ரைட்டுகளாகவும் மாற்றமுடியும், இது பின்பு வேர்களிலிருந்து இலைக்கு ஏறிச்செல்கிறது. தங்களுடைய புரதங்களில் இந்த நைட்ரஜனைப் பயன்படுத்தினத் தாவரங்களும் விலங்குகளும் மரித்து, அழுகிச் சிதைய ஆரம்பிக்கும்போது, நைட்ரஜன் வெளியிடப்படுகிறது; இது நைட்ரஜன் சுழற்சியை முழுமைப்படுத்தும். இது எல்லாவற்றிலும் உட்பட்டுள்ள சிக்கலான அமைப்பு மலைக்க வைக்கிறது, வெறும் தற்செயல் நிச்சயமாகச் செய்யமுடியாத ஒன்று.
பேச்சோ, வார்த்தைகளோ, சப்தமோ இல்லாமல் அவை பேசும்!
13. நட்சத்திரங்கள் நிறைந்த வானங்கள் தாவீதுக்கு அறிவித்தது என்ன, அவை நம்மிடம் தொடர்ந்து சொல்வது என்ன?
13 பார்ப்பவர்களைப் போற்றுதல் உணர்ச்சியினால் நிரப்பும் நட்சத்திரங்கள் நிறைந்த இரவு வானம், படைத்தவரின் என்னே ஒரு வியப்பூட்டும் வசீகரிப்பாக இருக்கிறது! சங்கீதம் 8:3, 4-ல், தாவீது தான் உணர்ந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்: ‘உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்?’ காண கண், கேட்க காது, உணர இருதயம் உடையவர்களுக்கு, இந்த நட்சத்திரம் நிறைந்த வானங்கள் பேசும், தாவீதுக்கு அவை செய்ததுபோல: “வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது.”—சங்கீதம் 19:1-4.
14. நட்சத்திரங்களில் ஒன்றின் இயக்க ஆற்றல் ஏன் நமக்கு அவ்வளவு அத்தியாவசியமானது?
14 நட்சத்திரங்களைப்பற்றி அதிகமதிகமாக அறிய வரவர, அவை நம்மிடம் அதிகமதிகமாகச் சப்தமாகப் பேசுகின்றன. ஏசாயா 40:26-ல் அவற்றின் பேரளவான ஆற்றலை மனதில் வைக்கும்படித் தூண்டப்படுகிறோம்: “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.” அவற்றில் ஒன்றாகிய நம்முடைய சூரியனின் ஈர்ப்புச் சக்தியும் இயக்குவிக்கும் ஆற்றலும், பூமியை அதன் சுற்றுவட்டப்பாதையிலே கட்டுப்படுத்தியிருக்கச் செய்கின்றன, தாவரங்களை வளரச்செய்கின்றன, நம்மை வெதுவெதுப்பாக இருக்கச்செய்கின்றன, இது எல்லா உயிர் வகைகளும் பூமியில் இருப்பதைக் கூடியக்காரியமாக்குகின்றன. ஆவியில் தூண்டப்பட்டு அப்போஸ்தலர் பவுல் சொன்னார்: “மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது.” (1 கொரிந்தியர் 15:41) நம் சூரியன் போன்ற மஞ்சள் நட்சத்திரங்கள், மேலும் நீல நட்சத்திரங்கள், பெரிய சிவப்பு நட்சத்திரங்கள், சிறிய வெள்ளை நட்சத்திரங்கள், நியூட்ரான் நட்சத்திரங்கள், வெடிக்கும் சூப்பர்நோவா நட்சத்திரங்கள் போன்றவை எல்லையற்ற ஆற்றலை வெளியிடுகின்றன என்பது அறிவியலுக்குத் தெரியும்.
15 பல கண்டுபிடிப்பாளர்கள் படைப்பிலிருந்தே கற்றுக்கொண்டிருக்கின்றனர், மேலும் உயிர்வாழும் சிருஷ்டிகளின் திறமைகளையே பார்த்துப் பின்பற்ற முயற்சிசெய்திருக்கின்றனர். (யோபு 12:7-10) படைப்பின் மிக விசேஷித்த அம்சங்களில் சிலவற்றை மட்டும் கவனியுங்கள். கடல் நீரின் உப்பை நீக்கும் சுரப்பிகளையுடைய கடற்பறவைகள்; மின்சாரத்தை உண்டாக்கும் மீன்கள், விலாங்கு மீன்கள்; ஒளி உண்டுபண்ணும் மீன்கள், புழுக்கள், பூச்சிகள்; ஒலிமானியைப் பயன்படுத்தும் வெளவால்கள், டால்ஃபின்கள்; காகிதம் உருவாக்கும் குளவிகள்; பாலங்களைக் கட்டும் எறும்புகள்; நீர் தேக்கங்களைக் கட்டும் நீர்நாய்கள்; உள்ளிணைக்கப்பட்ட வெப்பமானிகளைக் கொண்ட பாம்புகள்; நீர்ப்பரப்புக்கு வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் சுவாசிக்க உதவும் உறுப்புகள் (ஸ்னார்க்கல்ஸ்), மூழ்குக் கூண்டுகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் குட்டைகளில் வாழும் பூச்சிகள்; ஜெட் முன்செலுத்தியைப் பயன்படுத்தும் எட்டுக்காலிகள்; ஏழு வகையான வலைகளை உருவாக்கி, பொறிக்கதவுகள், பின்னல்கள், சுருக்குக் கண்ணிகள் போன்றவற்றை உண்டாக்கும் சிலந்திகள், மிகுந்த உயரத்தில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பிரயாணம்செய்யும் பலூன் பயணிகளைப் போன்ற குழந்தை சிலந்திகளையும் கொண்டிருக்கின்றன; நீர்மூழ்கி கப்பல்களைப்போல மிதக்கும் தொட்டிகளைப் பயன்படுத்தும் மீன்கள், நண்டு-நத்தைப்போன்றவைகள்; மேலுமாக பறவைகள், பூச்சிகள், கடலாமைகள், மீன்கள், பாலூட்டிகள் போன்றவை செய்யும் வியப்பில் ஆழ்த்தும் இடப்பெயர்ச்சிகள்—அறிவியலின் சக்தியினால் விளக்கப்படமுடியாத திறமைகள்.
16. அறிவியல் கண்டுபிடிப்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, என்ன அறிவியல் உண்மைகளைப் பைபிள் பதிவுசெய்திருந்தது?
16 அறிவியல் பூர்வமான உண்மைகளை அறிவியல் அறிய வருவதற்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, பைபிள் அவற்றை பதிவுசெய்தது. பாஸ்டர் என்பவருக்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே, மோசேயின் நியாயப்பிரமாணம் (பொ.ச.மு. 16-ம் நூற்றாண்டு) நோய்க்கிருமிகளிலிருந்து ஜாக்கிரதையாய் இருக்கவேண்டிய எச்சரிப்பைப் பிரதிபலித்தது. (லேவியராகமம், அதிகாரங்கள் 13, 14) பொ.ச.மு. 17-ம் நூற்றாண்டில் யோபு குறிப்பிட்டார்: “அவர் . . . பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார்.” (யோபு 26:7) கிறிஸ்துவிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே, இரத்த ஓட்டத்தைப்பற்றி சாலொமோன் எழுதினார். இதைப்பற்றி அறிவதற்கு, மருத்துவ அறிவியல் 17-ம் நூற்றாண்டு வரை காத்திருக்கவேண்டியதாக இருந்தது. (பிரசங்கி 12:6) அதற்கு முன்பாகவே, சங்கீதம் 139:16 மரபியல் கோட்பாடுப்பற்றிய அறிவைப் பிரதிபலித்தது: “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.” இயற்கை வல்லுநர்கள் இடப்பெயர்ச்சியைப்பற்றிப் புரிந்துகொள்வதற்கு முன்பே, பொ.ச.மு. 7-ம் நூற்றாண்டில் எரேமியா 8:7-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளதுபோல, எரேமியா எழுதினார்: “ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்.”—NE.
பரிணாமவாதிகள் தேர்ந்தெடுக்கும் “சிருஷ்டிகர்”
17. (அ) படைக்கப்பட்ட அதிசயங்களுக்குப் பின் ஓர் அறிவுக்கூர்மைமிக்க படைத்தவர் இருக்கிறார் என்பதைக் கண்டுணர மறுக்கும் சிலரைப்பற்றி ரோமர் 1:21-23 என்ன சொல்கிறது? (ஆ) ஒருவிதத்தில், பரிணாமவாதிகள் தங்களுடைய ‘சிருஷ்டிகர்’ ஆக எவற்றைத் தேர்தெடுக்கின்றனர்?
17 படைக்கப்பட்ட அதிசயங்களுக்குப் பின் ஓர் அறிவுக்கூர்மைமிக்க படைத்தவர் இருக்கிறார் என்பதைக் கண்டுணர்வதற்கு மறுக்கிற சிலரைக்குறித்து ஒரு வசனம் இவ்வாறு சொல்கிறது: “தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.” அவர்கள், “தேவனுடைய சத்தியத்தை . . . பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள்.” (ரோமர் 1:21-23, 25) பரிணாம அறிவியல் வல்லுநர்களோடு இதே நிலைதான் இருக்கிறது, அவர்கள் உண்மையில், அடுக்கடுக்கான ஒரு கற்பனைச் சங்கிலியிணைப்பை, ஓரணு உயிரி-புழுக்கள்-மீன்கள்-நில நீர் வாழ்வன-ஊர்வன-பாலூட்டிகள்-“குரங்கு-மனிதர்கள்” என்பதை, தங்களுடைய ‘சிருஷ்டிகராகக்’ கொண்டிருக்கின்றனர். ஆனாலும், சங்கிலியிணைப்பை ஆரம்பிக்க ஓரணு உயிரி ஒன்று உண்மையிலேயே இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கின்றனர். அறியப்பட்ட மிகச் சிறிய உயிரி, ஒரே சமயத்தில் தனக்குள் நிறைவேறும் ஆயிரக்கணக்கான வேதியியல் வினைகளில் ஈடுபடும் பத்தாயிரம் கோடி அணுக்களை உடையதாயிருக்கிறது.
18, 19. (அ) உயிரை ஆரம்பித்தவர் என்று புகழப்படவேண்டியவர் யார்? (ஆ) யெகோவாவின் படைப்பில் எவ்வளவை நாம் காண முடியும்?
18 யெகோவா தேவன், உயிரைப் படைத்தவர். (சங்கீதம் 36:9) அவரே மகத்தான மூலகாரணர். அவருடைய பெயர், யெகோவா, என்பதற்கு “உண்டாகும்படிச் செய்விக்கிறார்” என்று பொருள். அவருடைய படைப்புகளை நாம் எண்ணிமுடியாது. மனிதன் அறிந்திருப்பதைக் காட்டிலும் நிச்சயமாகவே லட்சக்கணக்கில் அதிகமிருக்கும். சங்கீதம் 104:24, 25 இதைப்பற்றிய சிறுகுறிப்புரைத்தது: “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்.” யோபு 26:14 இதைத் தெளிவாகச் சொல்கிறது: “இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார்?” நாம் ஒருசில கடைக்கோடிகளைப் பார்க்கமுடிகிறது, ஒருசில மெல்லிய ஓசைகளை நாம் கேட்க முடிகிறது, ஆனால் அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை முழுமையாகப் புரிந்துகொள்வது, நமக்கு எட்டாத ஒன்று.
19 எனினும், அவருடைய இயற்கை படைப்புகள் மூலம் அவரைக் காண்பதைவிட மேலான ஓர் ஊற்றுமூலம் நமக்கு இருக்கிறது. அந்த மேலான ஊற்றுமூலம் அவருடைய வார்த்தையாகிய பைபிள். நாங்கள் இப்போது பின்வரும் கட்டுரையை அந்த ஊற்றுமூலத்திடம் கவனத்தைத் திருப்புகிறோம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ பெருங்காற்றிலிருந்து யெகோவா யோபுவிடம் பேசியபோது யோபு என்ன கற்றறிந்தார்?
◻ பவுல், சிலர் போக்குச்சொல்ல இடமில்லை என்று ஏன் சொன்னார்?
◻ தண்ணீர் சுழற்சி எவ்வாறு செயல்படுகிறது?
◻ சூரியவொளி நமக்குச் செய்யும் முக்கியமான செயல்கள் யாவை?
◻ அறிவியல் கண்டுபிடிப்பதற்கு முன்பே, என்ன அறிவியல் உண்மைகளைப் பைபிள் வெளிப்படுத்தியது?
11. (அ) மகா பெரிய செக்கோயா மரம் ஏன் அவ்வளவு வியப்பூட்டுவதாயிருக்கிறது? (ஆ) ஒளிச்சேர்க்கையில் முதல் வேதிவினையைப்பற்றிய அவ்வளவு ஆச்சரியமூட்டும் காரியம் என்ன?
15. படைப்புகளிலிருந்து கண்டுபிடிப்பாளர்கள் எதைக் கற்று பின்பற்ற முயற்சிசெய்திருக்கின்றனர்?