உத்தமத்தில் நடந்திடுங்கள்
“நானோ என் உத்தமத்திலே நடப்பேன்.”—சங்கீதம் 26:11.
1, 2. (அ) மனிதர்கள் உத்தமமாக இருப்பது, எவ்வாறு யெகோவாவின் சர்வலோகப் பேரரசுரிமை சம்பந்தப்பட்ட விவாதத்தின் ஒரு முக்கிய பாகமாகிவிட்டது? (ஆ) யெகோவாவின் பேரரசுரிமையை ஆதரிப்பதை அவரது புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகள் எவ்வாறு காட்ட முடியும்?
ஏதேன் தோட்டத்தில் சாத்தான் கலகம் செய்தபோது ஒரு சர்வலோக விவாதத்தை எழுப்பினான். கடவுளுக்குத் தமது சிருஷ்டிகளை ஆளும் உரிமை இருக்கிறதா என்ற விவாதமே அது. சிறிது காலத்திற்குப் பிறகு, சாத்தான் மற்றொரு விவாதத்தை எழுப்பினான். மனிதர்கள் ஆதாயத்தை எதிர்பார்த்துத்தான் கடவுளுக்குச் சேவை செய்வார்கள் என்ற விவாதம் அது. (யோபு 1:9-11; 2:4) இவ்வாறு, மனிதர்கள் உத்தமமாக இருப்பது, யெகோவாவின் சர்வலோகப் பேரரசுரிமை சம்பந்தப்பட்ட விவாதத்தின் ஒரு முக்கிய பாகமாகிவிட்டது.
2 கடவுளுடைய பேரரசுரிமை, அவரது சிருஷ்டிகள் காட்டும் உத்தமத்தைச் சார்ந்ததாக இல்லை என்பது உண்மைதான்; ஆனால் அவரது சிருஷ்டிகளான மனிதர்களும் சரி தூதர்களும் சரி, பேரரசுரிமை சம்பந்தப்பட்ட விவாதத்தில் தாங்கள் எப்பக்கத்தில் இருக்கிறார்கள் என்பதைக் காட்ட முடியும். எப்படி? உத்தமத்தில் நடப்பதன் மூலம் அல்லது நடக்காதிருப்பதன் மூலம் காட்ட முடியும். ஆகவே முக்கியமாக உத்தமத்தன்மையின் அடிப்படையிலேயே அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
3. (அ) யோபுவும் தாவீதும் எதை சோதித்து நியாயந்தீர்க்கும்படி யெகோவாவிடம் கேட்டனர்? (ஆ) உத்தமத்தன்மை சம்பந்தமாக என்ன கேள்விகள் எழுகின்றன?
3 யோபு நம்பிக்கையோடு இவ்வாறு சொன்னார்: “சுமுத்திரையான தராசிலே [யெகோவா] தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.” (யோபு 31:6) பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான தாவீதும் தன் உத்தமத்தை சோதிக்கும்படியே யெகோவாவிடம் இவ்வாறு கேட்டார்: “கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை.” (சங்கீதம் 26:1) நாமும் உத்தமத்தில் நடப்பது எவ்வளவு அவசியம்! ஆனால் உத்தமத்தன்மை என்றால் என்ன? உத்தமத்தில் நடப்பது என்றால் என்ன? உத்தமத்தில் தொடர்ந்து நடந்திட நமக்கு எது உதவும்?
‘நான் உத்தமத்திலே நடக்கிறேன்’
4. உத்தமத்தன்மை என்பது என்ன?
4 உத்தமத்தன்மை என்பது நீதி நேர்மையுடன், குற்றங்குறையின்றி இருப்பதைக் குறிக்கிறது. அதேசமயத்தில் சரியானதைச் செய்வதை மட்டுமே அது குறிக்காது. அது தார்மீக ரீதியில் முழுமையை அல்லது இருதயப்பூர்வ தேவபக்தியின் நிறைவை அர்த்தப்படுத்துகிறது. சாத்தான், யோபுவின் உள்நோக்கத்தைக் கேள்விக்கிடமாக்கி இவ்வாறு கடவுளிடம் சொன்னான்: “நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்.” (யோபு 2:5) ஆகவே உத்தமத்தில் நடப்பதற்கு சரியான செயல் மட்டுமல்ல, சரியான உள்நோக்கமும் தேவை.
5. உத்தமத்தில் நடப்பதற்கு நாம் பரிபூரணர்களாக இருக்க வேண்டியதில்லை என்பதை எது காட்டுகிறது?
5 இருந்தாலும் உத்தமத்தில் நடப்பதற்கு பரிபூரணமாக இருக்க வேண்டியதில்லை. தாவீது ராஜா அபூரணராக இருந்தார், வாழ்க்கையில் பல குற்றங்களைச் செய்தார். இருந்தாலும் அவர் ‘மன உத்தமமாய்’ நடந்தார் என பைபிள் சொல்கிறது. (1 இராஜாக்கள் 9:4) ஏன்? ஏனென்றால் அவர் யெகோவாவை நேசித்தார். இருதயப்பூர்வ பக்தியைக் காட்டினார். தன் தவறுகளை மனப்பூர்வமாக ஒத்துக்கொண்டு, கடிந்துகொள்ளுதலை ஏற்று, தன்னை திருத்திக்கொண்டார். ஆக, யெகோவாவிடம் இருதயப்பூர்வ பக்தியையும் அன்பையும் காட்டுவதன் மூலம் தாவீது உத்தமத்தில் நடந்தார் என்பது தெரிகிறது.—உபாகமம் 6:5, 6.
6, 7. உத்தமத்தில் நடப்பதற்கு எதையெல்லாம் செய்ய வேண்டும்?
6 உத்தமத்தன்மை என்பது வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தில் மட்டுமே—உதாரணத்திற்குக் கடவுளை வழிபடும் விஷயத்தில் மட்டுமே—வெளிக்காட்டப்பட வேண்டிய குணம் அல்ல. அது நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் வெளிக்காட்டப்பட வேண்டிய குணமாகும். தாவீது தன் உத்தமத்தில் ‘நடந்தார்.’ “இந்த வினைச்சொல்லாகிய ‘நடத்தல்’ என்பது ஒருவர் நடத்தும் ‘வாழ்க்கைமுறையை’ குறிக்கிறது” என த நியூ இன்டர்ப்ரெட்டர்ஸ் பைபிள் சொல்கிறது. ‘உத்தம மார்க்கத்தாரை’ பற்றி சங்கீதக்காரன் இவ்வாறு பாடினார்: “[கடவுளுடைய] சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.” (சங்கீதம் 119:1-3) ஆகவே உத்தமத்தன்மை என்பது, கடவுளுடைய சித்தத்தை எப்போதும் தேடுவதையும் அவரது வழிகளில் நடப்பதையும் குறிக்கிறது.
7 உத்தமத்தில் நடப்பதற்கு, அனுகூலமற்ற சூழ்நிலைகளிலும் கடவுளிடம் பற்று மாறாத பக்தி காட்ட வேண்டும். சோதனைகளை நாம் சகிக்கும்போதும், துன்பங்களின் மத்தியிலும் உறுதியாக இருக்கும்போதும், தேவபக்தியற்ற உலகிலுள்ள கவர்ச்சிகளை எதிர்க்கும்போதும் நம் உத்தமத்தன்மை தெளிவாகத் தெரிகிறது. அதன் மூலம் நாம் ‘யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறோம்,’ ஏனென்றால் அவரை நிந்திக்கிறவனுக்கு அவரால் பதில் கொடுக்க முடிகிறது. (நீதிமொழிகள் 27:11) ஆகவே “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன்” என்று சொன்ன யோபுவைப் போல் நாமும் திடதீர்மானமாக இருப்பது சிறந்தது. (யோபு 27:5) உத்தமத்தில் நடப்பதற்கு எவையெல்லாம் நமக்கு உதவுமென 26-ஆம் சங்கீதம் காட்டுகிறது.
‘என் சிறுநீரகங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப் பாரும்’
8. தாவீது தன் சிறுநீரகங்களையும் இருதயத்தையும் சோதித்துப் பார்க்கும்படி யெகோவாவிடம் கேட்டுக் கொண்டதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
8 “கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப் பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் [அதாவது, சிறுநீரகங்களையும்] என் இருதயத்தையும் புடமிட்டுப் பாரும்” என தாவீது ஜெபம் செய்தார். (சங்கீதம் 26:2) சிறுநீரகங்கள் உடலில் மிக உள்ளே அமைந்திருக்கும் உறுப்புகளாகும். ஆகவே அடையாளப்பூர்வ சிறுநீரகங்கள் ஒருவரது உள்ளார்ந்த சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் குறிக்கின்றன. அவ்வாறே, அடையாளப்பூர்வ இருதயமானது உள்ளத் தூண்டுதல்கள், உணர்ச்சிகள், அறிவுத்திறன் என அனைத்தும் சேர்ந்த உள்ளான மனிதனைக் குறிக்கிறது. தன்னைச் சோதித்துப் பார்க்கும்படி யெகோவாவிடம் தாவீது வேண்டியபோது, தன் உள்ளார்ந்த சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் கூர்ந்து ஆராயும்படியே கேட்டுக்கொண்டார்.
9. நம் அடையாளப்பூர்வ சிறுநீரகங்களையும் இருதயத்தையும் யெகோவா எவ்விதத்தில் புடமிடுகிறார்?
9 தாவீது, தன் சிறுநீரகங்களையும் இருதயத்தையும் புடமிட்டுப் பார்க்கும்படி யெகோவாவிடம் கெஞ்சினார். நம் உள்ளார்ந்த இயல்பை யெகோவா எவ்வாறு புடமிடுகிறார்? தாவீது இவ்வாறு பாடினார்: “எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும் [“திருத்தும்,” NW].” (சங்கீதம் 16:7) இதன் அர்த்தம் என்ன? தெய்வீக ஆலோசனை தாவீதினுடைய உள்ளார்ந்த சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் எட்டி, அங்கேயே தங்கி, அவற்றைத் திருத்தின என்பதே இதன் அர்த்தம். தெய்வீக ஆலோசனை நம்மையும் அதேபோல் திருத்த முடியும்; அதற்காக கடவுளுடைய வார்த்தை, அவரது பிரதிநிதிகள், அவரது அமைப்பு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் ஆலோசனைகளை நன்றியோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்; அவை நம்மில் உள்ளூர பதிந்திட அனுமதிக்கவும் வேண்டும். அதோடு, இவ்வகையில் நம்மை புடமிடும்படி தவறாமல் யெகோவாவிடம் கேட்பதும் உத்தமத்தில் நடக்க நமக்கு உதவும்.
‘உம்முடைய கிருபை எனக்கு முன்பாக இருக்கிறது’
10. கடவுளுடைய சத்திய பாதையில் நடந்திட தாவீதுக்கு எது உதவியது?
10 “உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன்” என தாவீது தொடர்ந்து சொன்னார். (சங்கீதம் 26:3) கடவுள் கிருபையோடு செய்த காரியங்களை தாவீது நன்கு அறிந்திருந்தார்; அவற்றைப் போற்றுதலோடு சிந்தித்துப் பார்த்தார். “என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே” என பாடினார். அப்படிப்பட்ட ‘உபகாரங்களில்’ ஒன்றை நினைத்துப் பார்த்து அவர் இவ்வாறு தொடர்ந்து சொன்னார்: “ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப் பண்ணினார்.” (சங்கீதம் 103:2, 6, 7) மோசேயின் காலத்தில் இஸ்ரவேலர் எகிப்தியரால் ஒடுக்கப்பட்டதை நினைத்து தாவீது இவ்வாறு சொல்லியிருக்கலாம். அப்படியானால், இஸ்ரவேலரை விடுவிக்கப் போவதைப் பற்றி மோசேயிடம் யெகோவா வெளிப்படுத்திய விதங்களைச் சிந்தித்துப் பார்த்தது அவரது இருதயத்தைத் தொட்டிருக்கும்; கடவுளுடைய சத்திய பாதையில் நடந்திட வேண்டும் என்ற அவரது தீர்மானத்தை பலப்படுத்தியிருக்கும்.
11. உத்தமத்தில் நடந்திட நமக்கு எது உதவும்?
11 கடவுளுடைய வார்த்தையை தவறாமல் படிப்பதும், படிப்பவற்றைத் தியானிப்பதும் உத்தமத்தில் நடந்திட நமக்கு உதவும். உதாரணத்திற்கு, போத்திபாரின் மனைவி யோசேப்பை ஒழுக்கக்கேடாக நடக்க தூண்டியபோது அவர் எவ்வாறு அவ்விடத்தை விட்டே ஓடிப்போனார் என்பதை நாம் தியானித்துப் பார்க்கலாம்; அப்படி செய்தால், அலுவலகத்தில், பள்ளியில், அல்லது மற்ற இடங்களில் அதேபோன்ற சூழ்நிலை நமக்கு ஏற்படுகையில் நிச்சயம் நாமும் அங்கிருந்து ஓடிப்போவோம். (ஆதியாகமம் 39:7-12) ஒருவேளை இந்த உலகத்தில் சொத்து சுகத்தையும் பேரும் புகழையும் பெறும் வாய்ப்புகளிடம் நாம் ஈர்க்கப்பட்டால் யாரைப் பற்றி தியானிக்கலாம்? எகிப்தின் செல்வச்செழிப்பை நிராகரித்த மோசேயைப் பற்றி தியானிக்கலாம். (எபிரெயர் 11:24-26) அடுத்ததாக, யோபுவின் சகிப்புத்தன்மையை மனதில் வைப்பது, வியாதிகளும் கடுந்துயரங்களும் ஏற்பட்டாலும் யெகோவாவிடம் பற்று மாறாதவர்களாக இருக்க வேண்டும் என்ற நம் தீர்மானத்தை நிச்சயம் பலப்படுத்தும். (யாக்கோபு 5:11) நாம் ஒருவேளை துன்புறுத்தப்பட்டால்? சிங்கங்களின் கெபியில் போடப்பட்ட தானியேலின் அனுபவத்தை தியானிப்பது நமக்குத் தைரியமளிக்கும்!—தானியேல் 6:16-22.
“வீணரோடே நான் உட்காரவில்லை”
12, 13. எப்படிப்பட்ட தோழர்களை நாம் தவிர்க்க வேண்டும்?
12 தாவீது தன் உத்தமத்தை பலப்படுத்திய மற்றொரு விஷயத்தையும் குறிப்பிட்டார்; “வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் [அதாவது, தங்கள் சுயரூபத்தை மறைப்பவர்களிடத்தில்] நான் சேருவதில்லை. பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன்” என்று கூறினார். (சங்கீதம் 26:4, 5) தாவீது துன்மார்க்கரோடு உட்காரவே இல்லை. கெட்ட தோழமையை அவர் அறவே வெறுத்தார்.
13 இவ்விஷயத்தில் நாம் எப்படி இருக்கிறோம்? டிவி நிகழ்ச்சி, வீடியோ, சினிமா, இன்டர்நெட் போன்றவற்றின் மூலம் வீணரோடு உட்காருகிறோமா அல்லது உட்கார மறுக்கிறோமா? சுயரூபத்தை மறைத்துக்கொள்ளும் வஞ்சகரை விட்டு விலகியிருக்கிறோமா? பள்ளியில் அல்லது அலுவலகத்தில் சிலர் நண்பர்கள் போல் நம்மிடம் கபடநாடகம் ஆடலாம். கடவுளுடைய சத்திய பாதையில் நடக்காத அப்படிப்பட்டவர்களோடு நெருக்கமாகப் பழக நாம் விரும்புகிறோமா? விசுவாச துரோகிகள்கூட, தாங்கள் நேர்மையானவர்களென சொல்லிக்கொள்வார்கள்; உண்மையில், யெகோவாவுக்குச் சேவை செய்வதிலிருந்து நம்மை வழிவிலக வைப்பதற்காகத் தங்கள் கெட்ட எண்ணத்தை மூடி மறைப்பார்கள். மேலும், கிறிஸ்தவ சபையில் சிலர் இரட்டை வாழ்க்கை வாழ்கிறார்களா? அவர்களும் தங்கள் சுயரூபத்தை மறைத்துக்கொள்கிறார்கள். உதவி ஊழியரான ஜேசன் என்ற சகோதரருக்கு இளம் பிராயத்தில் அப்படிப்பட்ட சில நண்பர்கள் இருந்தார்கள்; அவர்களைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஒருநாள் ஒருவன் என்னிடம் இப்படி சொன்னான்: ‘நாம் இப்போது எப்படி நடந்துகொள்கிறோம் என்பது முக்கியமே இல்லை, ஏனென்றால் புதிய உலகம் வரும்போதுதான் செத்துவிடுவோமே, எதையோ அனுபவிக்காம போயிட்டோம் என்ற உணர்வுகூட நமக்கு இருக்காதே.’ இப்படிப்பட்ட பேச்சைக் கேட்டதும்தான் எனக்கு சுரீர் என்று உறைத்தது. புதிய உலகம் வரும்போது உயிரோடு இருக்க வேண்டுமென்றுதான் எனக்கு ஆசை.” ஆகவே ஜேசன் புத்திசாலித்தனமாக அப்படிப்பட்ட தோழர்களை விட்டு விலகினார். “ஏமாந்து போகாதீர்கள். கெட்ட தோழர்கள் நல்ல பழக்கவழக்கங்களை கெடுப்பார்கள்” என அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தார். (1 கொரிந்தியர் 15:33, NW) கெட்ட தோழர்களைத் தவிர்ப்பது எவ்வளவு அவசியம்!
‘உம்முடைய அதிசயங்களையெல்லாம் அறிவிப்பேன்’
14, 15. நாம் என்ன செய்யும்போது யெகோவாவின் ‘பீடத்தைச் சுற்றி வருகிறோம்’ என சொல்லலாம்?
14 “கர்த்தாவே, . . . நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றி வருகிறேன்” என தாவீது தொடர்ந்து சொன்னார். எதற்காக? “துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக [அதாவது, அறிவிப்பதற்காக]” என அவரே சொன்னார். (சங்கீதம் 26:6, 7) ஒழுக்கத்தில் எப்போதும் சுத்தமாயிருக்க தாவீது விரும்பினார்; ஏனெனில் யெகோவாவை வணங்கவும் அவரிடமுள்ள தம் பக்தியை அறிவிக்கவும் அது அவசியம் என உணர்ந்திருந்தார்.
15 ஆசரிப்புக் கூடாரத்திலும் பிற்பாடு ஆலயத்திலும் கடைப்பிடிக்கப்பட்ட உண்மை வணக்கம் சம்பந்தமான அனைத்து காரியங்களும் ‘பரலோகத்திலுள்ளவற்றின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருந்தன.’ (எபிரெயர் 8:5; 9:23) அங்கிருந்த பீடம், யெகோவாவின் சித்தத்தை, அதாவது மனிதனின் இரட்சிப்பிற்காக இயேசு கிறிஸ்துவின் பலியை ஏற்றுக்கொள்ளும் அவரது சித்தத்தை அடையாளப்படுத்தியது. (எபிரெயர் 10:5-10) ஆகவே நாம் அந்தப் பலியில் விசுவாசம் வைக்கும்போது, குற்றமில்லாமையில் நம் கைகளைக் கழுவி, யெகோவாவின் ‘பீடத்தைச் சுற்றி வருகிறோம்’ என சொல்லலாம்.—யோவான் 3:16-18.
16. கடவுளுடைய அதிசயங்களைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவிப்பது நமக்கு எவ்வாறு நன்மை அளிக்கிறது?
16 மீட்கும்பொருளினால் கிடைக்கும் எல்லா நன்மைகளையும் நினைத்துப் பார்க்கும்போது, நம் இருதயத்தில் நன்றியுணர்வு பெருக்கெடுக்கிறது அல்லவா? ஆம், யெகோவாவிற்கும் அவரது ஒரேபேறான குமாரனிற்கும் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அந்த நன்றியுணர்வோடு யெகோவாவின் அதிசயங்களையெல்லாம் மற்றவர்களுக்கு அறிவிப்போமாக. அவர் ஏதேன் தோட்டத்தில் மனிதனைப் படைத்தது முதல், புதிய உலகில் அனைத்தையும் புதிதாக்கப்போவது வரை எல்லா அதிசயங்களையும் அறிவிப்போமாக. (ஆதியாகமம் 2:7; அப்போஸ்தலர் 3:21) ராஜ்யத்தை பிரசங்கிக்கும் வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் ஈடுபடுவது ஆவிக்குரிய விதத்தில் நமக்கு எப்பேர்ப்பட்ட பாதுகாப்பு! (மத்தேயு 24:14; 28:19, 20) இந்த வேலைகளில் மும்முரமாக ஈடுபடுவது நம் எதிர்கால நம்பிக்கையைப் பிரகாசமாக வைத்துக்கொள்ள உதவுகிறது; அதோடு, கடவுளுடைய வாக்குறுதிகளின் பேரிலான நம் விசுவாசத்தை உறுதியாக வைத்துக்கொள்ளவும், யெகோவா மீதும் மனிதர்கள் மீதும் உள்ள நம் அன்பை உயிர்ப்புள்ளதாக வைத்துக்கொள்ளவும் உதவுகிறது.
“நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்புகின்றேன்”
17, 18. கிறிஸ்தவ கூட்டங்களை நாம் எவ்வாறு கருத வேண்டும்?
17 பலிபீடம் வைக்கப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரம் இஸ்ரவேலில் யெகோவாவின் வணக்கத்திற்கான மைய இடமாக இருந்தது. அந்த இடத்தில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருவதாக தாவீது இவ்வாறு யெகோவாவிடம் சொன்னார்: “ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்புகின்றேன்; உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்.”—சங்கீதம் [திருப்பாடல்கள்] 26:8, பொது மொழிபெயர்ப்பு.
18 யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வதற்காக நாம் கூடிவரும் இடங்களை அதிகம் விரும்புகிறோமா? ஆன்மீக போதனை அளிக்கப்படும் இடமாகிய ஒவ்வொரு ராஜ்ய மன்றமும் அந்தந்தப் பகுதியில் உண்மை வணக்கத்திற்கான மையமாகத் திகழ்கிறது. அதோடு, ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட மாநாடுகளும் வட்டார மாநாடுகளும் விசேஷ மாநாட்டு தினங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அங்கு யெகோவாவின் ‘நினைப்பூட்டுதல்கள்’ கலந்தாலோசிக்கப்படுகின்றன. அவற்றை ‘மிக அதிகமாய் நேசிக்க’ கற்றுக்கொண்டால், அப்படிப்பட்ட கூட்டங்களுக்குச் செல்லவும் அங்கு சொல்லப்படுபவற்றை கூர்ந்து கவனிக்கவும் ஆர்வமாக இருப்போம். (சங்கீதம் 119:167, NW) நம்முடைய நலனில் அக்கறை காட்டி, தொடர்ந்து உத்தமத்தில் நடந்திட உதவிசெய்யும் உடன் விசுவாசிகளோடு இருப்பது எப்பேர்ப்பட்ட புத்துணர்ச்சி அளிக்கிறது!—எபிரெயர் 10:24, 25.
‘என் உயிரை வாரிக்கொள்ளாதேயும்’
19. என்ன பாவங்களுக்கான குற்றத்தைச் சுமக்க தாவீது விரும்பவில்லை?
19 கடவுளுடைய சத்திய பாதையிலிருந்து விலகுவதன் விளைவுகளை தாவீது முழுமையாக அறிந்திருந்ததால் இவ்வாறு கெஞ்சினார்: “என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும். அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது.” (சங்கீதம் 26:9, 10) தீவினை செய்யும் அல்லது பரிதானம் வாங்கும் தேவபக்தியற்ற ஆட்களின் பட்டியலில் சேர்க்கப்பட தாவீது விரும்பவில்லை.
20, 21. எது நம்மை உலக வழிகளில் செல்ல வைக்கும்?
20 இவ்வுலகம் ஒழுக்கக்கேடான பழக்கவழக்கங்களால் நிரம்பியிருக்கிறது. டிவி, பத்திரிகைகள், சினிமாக்கள் ஆகியவை ஒழுக்கங்கெட்ட நடத்தையை—‘காமவிகாரத்தை’—ஊக்குவிக்கின்றன. (கலாத்தியர் 5:19) சிலர் ஆபாசத்திற்கு அடிமையாகியிருக்கிறார்கள், இது ஒழுக்கங்கெட்ட நடத்தைக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் அப்படிப்பட்ட செல்வாக்குகளுக்கு எளிதில் அடிபணிந்துவிடுகிறார்கள். சில நாடுகளில் திருமணத்திற்கு முன் ஆணும் பெண்ணும் பழகுவது, அதாவது டேட்டிங் செய்வது வழக்கம்; ஆகவே டீனேஜர்கள் தாங்களும் டேட்டிங் செய்ய வேண்டுமென நினைத்துக் கொள்கிறார்கள். திருமண வயதை எட்டுவதற்கு வெகு முன்பே அநேக இளைஞர்கள் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். தங்கள் காம உணர்வுகளைத் திருப்தி செய்துகொள்வதற்கு முறைகேடாக நடக்கத் தொடங்கி, சீக்கிரத்திலேயே வேசித்தனத்தில்கூட ஈடுபட்டுவிடுகிறார்கள்.
21 கெட்ட செல்வாக்குகளுக்கு அடிமையாவதில் பெரியவர்களும் விதிவிலக்கல்ல. நேர்மையற்ற வியாபார பழக்கங்களும் சுயநலத்தோடு எடுக்கப்படும் தீர்மானங்களும் உத்தமத்தன்மை இல்லாததையே காட்டுகின்றன. உலக வழிகளில் நடப்பது யெகோவாவிடமிருந்து நம்மை வெகு தூரம் பிரிக்கத்தான் செய்யும். ஆகவே “தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி” தொடர்ந்து உத்தம வழியில் நடந்திடுவோமாக.—ஆமோஸ் 5:15.
“என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும்”
22-24. (அ) சங்கீதம் 26-ன் முடிவான வார்த்தைகளில் என்ன உற்சாகமான கருத்தைக் காண்கிறீர்கள்? (ஆ) அடுத்த கட்டுரை எந்தக் கண்ணியைப் பற்றி விவரிக்கும்?
22 தாவீது முடிவாக இவ்வாறு கடவுளிடம் சொன்னார்: “நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும். என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.” (சங்கீதம் 26:11, 12) தாவீது உத்தமத்தில் தொடர்ந்து நடக்கத் தீர்மானம் எடுத்ததற்கும், தன்னை மீட்டுக்கொள்ளுமாறு வேண்டுதல் செய்ததற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இது எப்பேர்ப்பட்ட உற்சாகமளிக்கும் கருத்து! நாம் பாவிகளாக இருந்தாலும் உத்தமத்தில் நடந்திட தீர்மானமாயிருந்தால் யெகோவா நமக்கு உதவுவார்.
23 கடவுளுடைய பேரரசுரிமையை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மதித்துப் போற்றுகிறோம் என்பதை நம் வாழ்க்கைமுறை காட்டட்டும். உள்ளார்ந்த சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் ஆராய்ந்து புடமிடும்படி நாம் ஒவ்வொருவரும் யெகோவாவிடம் ஜெபத்தில் கேட்கலாம். அவரது வார்த்தையை ஊக்கமாக படிப்பதன் மூலம் அவரது சத்தியத்தை எப்போதும் நினைவில் வைக்கலாம். கெட்ட தோழர்களைத் தவிர்த்து சபைகளின் நடுவே யெகோவாவைத் துதிக்கலாம். மேலும், ராஜ்ய பிரசங்கிப்பு வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் வைராக்கியமாக பங்குகொள்வோமாக; கடவுளுடன் உள்ள நம் மதிப்புமிக்க உறவை இவ்வுலகம் அறுத்துவிட அனுமதிக்காதிருப்போமாக. உத்தமத்தில் நடந்திட நம்மாலான அனைத்தையும் செய்யும்போது, யெகோவா நம்மீது இரக்கம் காட்டுவார் என்ற நம்பிக்கையோடு இருக்கலாம்.
24 உத்தமத்தன்மை வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உட்படுத்துவதால், உயிருக்கு ஆபத்தான ஒரு கண்ணியைக் குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும்; அதுதான் மதுபான துஷ்பிரயோகம். இதைப் பற்றி அடுத்த கட்டுரை விவரிக்கும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகள் உத்தமத்தன்மையின் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்படுவது ஏன் பொருத்தமானது?
• உத்தமத்தன்மை என்றால் என்ன? உத்தமத்தில் நடப்பது எதையெல்லாம் உட்படுத்துகிறது?
• உத்தமத்தில் நடந்திட எது நமக்கு உதவும்?
• தொடர்ந்து உத்தமத்தில் நடந்திட என்ன ஆபத்துக்களைக் குறித்து நாம் அறிந்திருந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும்?
[பக்கம் 14-ன் படம்]
யெகோவாவின் கிருபை பொருந்திய செயல்களை உங்கள் கண்களுக்கு முன்பாக வைத்திருக்கிறீர்களா?
[பக்கம் 14-ன் படம்]
உங்களது உள்ளார்ந்த சிந்தனைகளை ஆராயும்படி யெகோவாவிடம் தவறாமல் கேட்கிறீர்களா?
[பக்கம் 15-ன் படங்கள்]
சோதனைகளின் மத்தியிலும் உத்தமராய் இருப்பது யெகோவாவின் இருதயத்தை மகிழ்விக்கிறது
[பக்கம் 17-ன் படங்கள்]
உத்தமத்தில் நடந்திட உங்களுக்கு உதவுவதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளை பிரயோஜனப்படுத்திக் கொள்கிறீர்களா?