யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—முதல் பகுதி
நம்மைப் படைத்த யெகோவா தேவனுக்கு அதிகமான துதிகளை ஏறெடுக்கிற பைபிள் புத்தகம்தான் சங்கீத புத்தகம். இப்பெயர் அதற்கு பொருத்தமாக இருக்கிறது. இனிமையான பாடல்களைக் கொண்ட இப்புத்தகமே பைபிளிலுள்ள மிகப் பெரிய புத்தகம். இப்பாடல்கள் யெகோவாவின் அருமையான பண்புகளையும், வல்லமையான செயல்களையும், எண்ணிறந்த தீர்க்கதரிசனங்களையும் விவரிக்கின்றன. இப்புத்தகத்திலுள்ள அநேக பாடல்கள், அவற்றை எழுதியவர்களின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்துகின்றன. இப்புத்தகத்திலுள்ள விஷயங்கள் சுமார் ஆயிரம் ஆண்டு காலப்பகுதியை உள்ளடக்குகின்றன. அதாவது, தீர்க்கதரிசியான மோசேயின் காலம்முதல் பாபிலோனிலிருந்து இஸ்ரவேலர் விடுதலைபெற்றது வரையான காலப்பகுதியை உள்ளடக்குகிறது. இதை எழுதியவர்கள்: மோசே, தாவீது ராஜா, மற்றும் சிலர். இவர்கள் எழுதிய சங்கீதங்களை ஆசாரியனான எஸ்றா தொகுத்து இன்று இருப்பதுபோல ஒரே புத்தகமாக உருவாக்கினார்.
வெகுகாலமாகவே, இப்புத்தகத்தில் உள்ள பாடல்கள் ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை பின்வருவன: (1) சங்கீதம் 1-41; (2) சங்கீதம் 42-72; (3) சங்கீதம் 73-89; (4) சங்கீதம் 90-106; (5) சங்கீதம் 107-150. இக்கட்டுரையில் இதன் முதல் பகுதியைச் சிந்திக்கப் போகிறோம். இப்பகுதியிலுள்ள மூன்று சங்கீதங்களைத் தவிர மற்றவை பூர்வ இஸ்ரவேல் ராஜாவான தாவீதால் இயற்றப்பட்டவை. 1, 10, மற்றும் 33-ம் சங்கீதங்களை இயற்றியவர்கள் யார் என தெரியவில்லை.
“என் தேவன் எனக்கு மலையாக இருக்கிறார்”
முதலாம் சங்கீதம், யெகோவாவுடைய வேதத்தில் பிரியமாய் இருப்பவர் சந்தோஷமுள்ளவர் என்று அறிவிக்கிறது. இரண்டாம் சங்கீதம், குறிப்பாக கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பேசுகிறது.a கடவுளிடம் ஏறெடுக்கப்பட்ட வேண்டுதல்களே இந்த முதல் பகுதியில் அதிகம் இடம்பெற்றுள்ளன. உதாரணமாக, 3-5, 7, 12, 13, 17 ஆகிய சங்கீதங்கள் விரோதிகளிடமிருந்து விடுவிக்கும்படி செய்யப்பட்ட விண்ணப்பங்களாகும். யெகோவாவின் மேன்மையோடு ஒப்பிட மனிதர்கள் எவ்வளவு சிறியவர்கள் என்பதை எட்டாம் சங்கீதம் எடுத்துக் காட்டுகிறது.
யெகோவா தம் மக்களை பாதுகாக்கிறவர் என்பதை விவரித்து தாவீது இவ்வாறு பாடுகிறார்: “என் தேவன் எனக்கு மலையாக இருக்கிறார். நான் அவரில் அடைக்கலம் புகுவேன்.” (சங்கீதம் 18:2, NW) 19-ம் சங்கீதம், யெகோவாவைப் படைப்பாளராகவும் சட்டப் பிரமாணிகராகவும் புகழ்ந்து பாடுகிறது; 20-ம் சங்கீதம் அவரை இரட்சகராகப் போற்றிப் புகழ்கிறது; 21-ம் சங்கீதம் அபிஷேகம் செய்யப்பட்ட ஒரே ராஜாவான இயேசுவின் இரட்சகராக யெகோவாவைச் சிறப்பித்துக் காட்டுகிறது. 23-ம் சங்கீதம் யெகோவாவை மிகப்பெரிய மேய்ப்பராக சித்தரிக்கிறது; 24-ம் சங்கீதம் அவரை மகத்தான ராஜாவாக வர்ணிக்கிறது.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
2:1, 2—ஜாதிகள் சிந்திக்கிற ‘விருதாக் காரியம்’ என்ன? ‘விருதாக் காரியம்’ என்பது தொடர்ந்து தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள மனித அரசாங்கங்கள் சதா கவலைப்படுவதைக் குறிக்கிறது. அவற்றின் நோக்கம் நிச்சயம் தோல்வியடையப்போவதால் இது விருதாவாக இருக்கிறது. “கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும்” செயல்படுகிற இந்த அரசாங்கங்கள் வெற்றி பெற முடியுமா என்ன?
2:7—‘கர்த்தருடைய தீர்மானம்’ என்பது என்ன? இந்தத் தீர்மானம், யெகோவா தமது பிரிய மகன் இயேசு கிறிஸ்துவோடு செய்த ராஜ்ய உடன்படிக்கையாகும்.—லூக்கா 22:28, 29.
2:12—எவ்விதமாக மனித ஆட்சியாளர்கள் ‘குமாரனை முத்தஞ்செய்ய’ முடியும்? பைபிள் காலங்களில், முத்தம் செய்வது நட்புக்கும் உண்மைத்தன்மைக்கும் அடையாளமாக இருந்தது. விருந்தினரை வரவேற்கும் ஒரு முறையாக அது இருந்தது. பூமியின் ராஜாக்கள் குமாரனை முத்தம் செய்யும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறார்கள். அவரை மேசியானிய ராஜாவாக வரவேற்பதன் மூலம் அதைச் செய்ய முடியும்.
3:தலைப்பு—சில சங்கீதங்களுக்கு தலைப்பு கொடுக்கப்பட்டிருப்பது ஏன்? சில சமயங்களில், தலைப்பை வைத்து அதன் எழுத்தாளரைக் கண்டுபிடிக்க முடிகிறது; எப்படிப்பட்ட சூழ்நிலையில் அது இயற்றப்பட்டது என்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது (உதாரணம்: 3-ம் சங்கீதம்); எந்த நோக்கத்திற்காக எழுதப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது (உதாரணம்: 4, 5 சங்கீதங்கள்); இசைக்குரிய குறிப்புகளையும் அளிக்கிறது (உதாரணம்: 6-ம் சங்கீதம்).
3:2—“சேலா” என்பது என்ன? வெறுமனே பாடும்போதோ இசைக் கருவியுடன் பாடும்போதோ இடையில் சற்று நிறுத்தி மெளனமாக தியானிப்பதற்காகவே இது கொடுக்கப்பட்டிருக்கிறதென பொதுவாகக் கருதப்படுகிறது. பாட்டின் கருத்தை அல்லது உணர்ச்சியை மனதில் ஆழமாக பதியவைப்பதற்காக இந்த இடை நிறுத்தம் கொடுக்கப்பட்டது. ஆகவே, மற்றவர்களுக்கு முன் வாசிக்கையில் அந்த வார்த்தையை உச்சரிக்க வேண்டியதில்லை.
11:3—நிர்மூலமாகிற அஸ்திபாரங்கள் யாவை? சட்டம், நீதி, ஒழுங்கு இவையே இந்த அஸ்திபாரங்கள். மனித சமுதாயம் இவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இவையாவும் ஒழுங்கற்றுப் போகையில், சமுதாயம் சீர்குலைகிறது, நீதியும் மறைந்துவிடுகிறது. இப்படிப்பட்ட நிலைமையில் “நீதிமான்” கடவுளை முற்றிலும் சார்ந்திருக்க வேண்டும்.—சங்கீதம் 11:4-7.
21:3—‘பொற்கிரீடத்தின்’ விசேஷம் என்ன? பல போர்களில் வென்ற தாவீதைக் கெளரவிப்பதற்காக நிஜ கிரீடம் சூட்டப்பட்டதா அல்லது இது அடையாள அர்த்தமுள்ள ஒன்றைக் குறிக்கிறதா என்பது தெரியவில்லை. என்றாலும், 1914-ல் யெகோவாவிடமிருந்து ராஜ கிரீடத்தை, அதாவது ஆட்சியுரிமையை இயேசு பெற்றதை இது தீர்க்கதரிசனமாகக் குறிப்பிடுகிறது. பொன்னால் செய்யப்பட்ட இந்தக் கிரீடம், அவருடைய ஆட்சி உயர்தரமானது என்பதைக் காட்டுகிறது.
22:1, 2—யெகோவா தன்னை கைவிட்டுவிட்டதாக தாவீது ஏன் நினைத்திருக்கலாம்? விரோதிகளிடமிருந்து வந்த பிரச்சினைகளால் ‘இருதயம் மெழுகுபோலாகி, குடல்களின் நடுவே உருகி’ விழும் அளவுக்கு தாவீது பயங்கர மனவேதனையில் தவித்தார். (சங்கீதம் 22:14) இதனால், யெகோவா அவரைக் கைவிட்டுவிட்டதாக அவர் நினைத்திருக்கலாம். இயேசுவைக் கழுமரத்தில் அறைந்தபோது, அவரும் இந்த விதமாகவே நினைத்தார். (மத்தேயு 27:46) நம்பிக்கையிழந்த சூழ்நிலையில் தாவீது பட்ட மனவேதனையை அவருடைய வார்த்தைகள் பிரதிபலிக்கின்றன. என்றாலும், சங்கீதம் 22:16-21-ல் பதிவு செய்யப்பட்டுள்ள அவரது ஜெபம், கடவுள் மீதுள்ள விசுவாசத்தை அவர் இழந்துவிடவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.
நமக்குப் பாடம்:
1:1. யெகோவாவை நேசிக்காதவர்களுடன் நாம் சகவாசம் வைத்துக்கொள்ளக் கூடாது.—1 கொரிந்தியர் 15:33, NW.
1:2. நாம் ஒவ்வொரு நாளும் ஆன்மீக விஷயங்களைச் சிந்திப்பது அவசியம்.—மத்தேயு 4:4.
4:4. கோபம் வருகையில், பின்னால் வருத்தப்படும் அளவுக்கு எதையாவது பேசிவிடாமல் இருப்பது புத்திசாலித்தனம்.—எபேசியர் 4:26.
4:5. நம்முடைய உள்நோக்கங்கள் நல்லதாயும் நம்முடைய நடத்தை யெகோவாவின் தராதரங்களுக்கு ஏற்றதாயும் இருந்தால் மட்டுமே ஆன்மீக ரீதியில் “நீதியின் பலிகளைச்” செலுத்துகிறோம் என்று அர்த்தம்.
6:5. வாழ்வதற்கு இதைவிட என்ன நல்ல காரணம் இருக்க முடியும்?—சங்கீதம் 115:17.
9:12. இரத்தப்பழிக்கு காரணமானவர்களைத் தண்டிப்பதற்காக யெகோவா விசாரணை செய்கிறார்; அதே சமயத்தில், “சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை” அவர் மறக்க மாட்டார்.
15:2, 3; 24:3-5. உண்மை வணக்கத்தார் சத்தியத்தையே பேச வேண்டும், பொய் ஆணையிடவும் புறங்கூறவும் கூடாது.
15:4. நாம் பைபிளுக்கு முரணாக ஆணையிடாத வரையில் அதை நிறைவேற்ற நம்மாலான அனைத்தையும் செய்ய வேண்டும்—அது மிகவும் கஷ்டமானதாய் இருந்தால்கூட.
15:5. யெகோவாவின் வணக்கத்தாரான நாம் பணத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது.
17:14, 15. இந்த ‘உலகத்தின் மக்கள்’ செல்வச் செழிப்புடன் வாழ்வதிலும் குடும்பத்தைக் கவனிப்பதிலும் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்தை விட்டுச் செல்வதிலும் முழுமூச்சாய் ஈடுபடுகிறார்கள். ஆனால் தாவீதோ கடவுளுடைய ‘முகத்தைத் தரிசிப்பதற்காக,’ அதாவது கடவுளுடைய தயவைப் பெறுவதற்காக அவருடன் ஒரு நல்ல பெயரை ஏற்படுத்திக்கொள்வதிலேயே மிகவும் குறியாக இருந்தார். யெகோவாவின் வாக்குறுதிகளுக்கு தாவீது ‘விழித்தெழும்போது’ அவரது ‘சாயலைக் கண்டு திருப்தியாவார்,’ அதாவது யெகோவா தன்னோடு இருந்ததை அறிந்து மகிழ்ச்சியடைவார். தாவீதைப் போலவே, நாமும் ஆன்மீக ஆஸ்திகள்மீது நம் கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும்.
19:1-6. பேசவோ சிந்திக்கவோ முடியாத படைப்புகள்கூட யெகோவாவை மகிமைப்படுத்தும்போது, பேசவும் சிந்திக்கவும் வழிபடவும் முடிந்த மனிதர்களாகிய நாம் எந்தளவுக்கு அதிகமாக யெகோவாவை மகிமைப்படுத்த வேண்டும்?—வெளிப்படுத்துதல் 4:11.
19:7-11. யெகோவா நம்மிடத்தில் கேட்கிற காரியங்கள் நமக்கு எவ்வளவு பிரயோஜனமுள்ளவை!
19:12, 13. தவறுகளும் துணிகர செயல்களும் நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய பாவங்களாகும்.
19:14. நாம் செய்கிற காரியங்களில் மட்டுமல்ல, நாம் சொல்கிற, சிந்திக்கிற காரியங்களிலும் மிகுந்த கவனம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
‘என் உத்தமத்திலே என்னைத் தாங்கி நிலைநிறுத்தினீர்’
உத்தமத்தில் தொடர்ந்து நடப்பதற்கு தாவீது மனதார ஆசைப்பட்டார், அதில் உறுதியாகவும் இருந்தார், இப்பகுதியிலுள்ள முதல் இரண்டு சங்கீதங்களில் இதை அவர் எவ்வளவு அருமையாக தெரிவித்திருக்கிறார்! “நானோ என் உத்தமத்திலே நடப்பேன்” என அவர் பாடுகிறார். (சங்கீதம் 26:11) பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு ஜெபம் செய்கையில் அவர் இவ்வாறு ஒப்புக்கொள்கிறார்: “நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.” (சங்கீதம் 32:3) யெகோவாவிடம் உண்மையாய் இருப்பவர்களுக்கு தாவீது இவ்வாறு உறுதி அளிக்கிறார்: “கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது.”—சங்கீதம் 34:15.
சங்கீதம் 37-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரை இஸ்ரவேலருக்கு எவ்வளவு பயனுள்ளதாய் இருந்தது! இந்தப் பொல்லாத உலகத்தின் “கடைசி நாட்களில்” வாழ்கிற நமக்கும் எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கிறது! (2 தீமோத்தேயு 3:1-5) சங்கீதம் 40:7, 8 வசனங்கள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி தீர்க்கதரிசனமாக இவ்வாறு குறிப்பிடுகிறது: “இதோ வருகிறேன், புஸ்தகச் சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது; என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது.” இந்தப் பகுதியிலுள்ள கடைசி சங்கீதம், பத்சேபாளிடத்தில் தாவீது பாவம் செய்ததைத் தொடர்ந்து வந்த வருடங்களில் அவர் பட்ட பல கஷ்டங்களின்போது உதவிக்காக யெகோவாவிடம் மன்றாடியதைப் பற்றியது. அவர் இவ்வாறு பாடுகிறார்: ‘நீர் என் உத்தமத்திலே என்னைத் தாங்கி நிலைநிறுத்தினீர்.’—சங்கீதம் 41:12.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
26:6, 7—நாம் எவ்வாறு தாவீதைப் போல யெகோவாவின் பீடத்தை அடையாள அர்த்தத்தில் சுற்றி வருகிறோம்? இந்தப் பீடம் யெகோவாவின் சித்தத்தை, அதாவது மனிதனின் இரட்சிப்பிற்காக இயேசு கிறிஸ்துவின் பலியை ஏற்றுக்கொள்ளும் அவரது சித்தத்தை அடையாளப்படுத்துகிறது. (எபிரெயர் 8:5; 10:5-10) மீட்கும்பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம் யெகோவாவின் பீடத்தை நாம் சுற்றி வருகிறோம்.
29:3-9—அச்சமூட்டுகிற விதத்தில் கடந்து செல்லும் இடிமின் புயலுக்கு யெகோவாவின் சத்தம் ஒப்பிடப்பட்டிருப்பது ஏன்? யெகோவாவின் வியத்தகு வல்லமையை சித்தரிப்பதற்காகவே இவ்வாறு ஒப்பிடப்பட்டிருக்கிறது.
33:6—யெகோவாவுடைய ‘வாயின் சுவாசம்,’ என்பது என்ன? இது யெகோவாவின் செயல் நடப்பிக்கும் சக்தியை, அதாவது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது; இதைப் பயன்படுத்தியே வானத்தை அவர் படைத்தார். (ஆதியாகமம் 1:1, 2) பலமான சுவாசத்தைப்போல யெகோவாவின் ஆவியும் தொலைதூரம்வரை சென்று அவர் நினைத்தவற்றைச் சாதிப்பதால் அது அவருடைய வாயின் சுவாசம் என அழைக்கப்படுகிறது.
35:19—சத்துருக்கள் தன்னைப் பார்த்து கண் சிமிட்டாமல் இருக்கும்படி கடவுளிடம் தாவீது மன்றாடியதன் அர்த்தம் என்ன? கண் சிமிட்டுவது, தாவீதின் விரோதிகள் அவருக்கு எதிராக தீய திட்டங்கள் தீட்டி அவற்றில் வெற்றி பெற்று மகிழ்ச்சி அடைந்ததை அர்த்தப்படுத்தியிருக்கலாம். அவர்கள் அப்படிச் செய்யாதிருப்பதற்காக தாவீது மன்றாடினார்.
நமக்குப் பாடம்:
26:4. இன்டர்நெட் சாட் ரூம்களில் தங்களுடைய சுயரூபத்தை மறைக்கும் வஞ்சகர்களுடனும், பள்ளியிலோ வேலையிடத்திலோ கெட்ட உள்நோக்கத்துடன் நண்பர்கள்போல் பழகுபவர்களுடனும், நல்லவர்கள்போல் நடிக்கிற விசுவாச துரோகிகளுடனும், இரட்டை வாழ்க்கை வாழ்பவர்களுடனும் நாம் சகவாசம் வைக்காதிருப்பது சிறந்தது.
26:7, 12; 35:18; 40:9. கிறிஸ்தவ கூட்டங்களில் நம் உதடுகளினால் யெகோவாவைத் துதிப்பது அவசியம்.
26:8; 27:4. கிறிஸ்தவ கூட்டங்களுக்கு மிகுந்த ஆர்வத்துடன் செல்கிறோமா?
26:11. உத்தமத்திலே தொடர்ந்து நடப்பதற்கு தான் உறுதிபூண்டிருப்பதைப் பற்றி யெகோவாவிடம் தாவீது தெரிவித்தார், அதேசமயத்தில் தன்னுடைய மீட்புக்காகவும் மன்றாடினார். ஆம், நம்முடைய அபூரணத்தின் மத்தியிலும் நாம் தொடர்ந்து உத்தமமாய் நடக்கலாம்.
29:10. “ஜலப்பிரவாகத்தின்மேல்,” யெகோவா உட்கார்ந்திருக்கிறார் என சொல்லப்பட்டிருப்பது, அவர் தமது வல்லமையை தம்முடைய முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்பதைக் குறிக்கிறது.
30:5. யெகோவாவின் பிரதான குணம் அன்பு—கோபம் அல்ல.
32:9. கடிவாளத்திற்கோ சவுக்கடிக்கோ கீழ்ப்படிகிற கோவேறு கழுதையைப் போல் நாமிருக்க யெகோவா விரும்புவதில்லை. மாறாக, அவருடைய சித்தத்தைப் புரிந்துகொண்டு அவருக்குக் கீழ்ப்படிவதையே அவர் விரும்புகிறார்.
33:17-19. மனிதனால் ஏற்பாடு செய்யப்பட்ட எவற்றாலும், அவை எந்தளவு பலமுள்ளதாய் இருந்தாலும் சரி, நம்மை இரட்சிக்க முடியாது. நாம் யெகோவாவிலும் அவருடைய ராஜ்ய ஏற்பாடுகளிலுமே நம்பிக்கை வைக்க வேண்டும்.
34:10. கடவுளுடைய ராஜ்யம் சம்பந்தப்பட்ட காரியங்களுக்கு தங்களுடைய வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கிறவர்களுக்கு எப்பேர்ப்பட்ட ஆறுதலை இது அளிக்கிறது!
39:1, 2. சக விசுவாசிகளுக்குத் தீங்கு செய்வதற்காக பொல்லாதவர்கள் நம்மிடத்தில் தகவல் கேட்கும்போது, ‘வாயைக் கடிவாளத்தினால் அடக்கிவைத்து’ மவுனமாக இருப்பது நல்லது.
40:1, 2. யெகோவாவுக்காக காத்திருந்தால், “பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து” வெளியே வருவதுபோல் துயரத்திலிருந்து நாம் வெளியே வரமுடியும்.
40:5, 12. நாம் பெற்றிருக்கும் ‘எண்ணிக்கைக்கு மேலான’ ஆசீர்வாதங்களைச் சிந்தித்துப் பார்த்தோமானால், தீமைகளும் நாம் செய்த குற்றங்களும் நம்மை நெருக்கிப்போடாது. அவை எண்ணிக்கைக்கு அடங்காதவையாக இருந்தாலும் இதுவே உண்மை.
‘கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர்’
முதல் பகுதியிலுள்ள 41 சங்கீதங்களும் எவ்வளவு ஆறுதலையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன! நாம் சோதனைகளை அனுபவித்தாலும் சரி, குற்றமுள்ள மனசாட்சியால் அலைக்கழிக்கப்பட்டாலும் சரி, கடவுளுடைய வல்லமைமிக்க வார்த்தையாகிய இப்பகுதியிலிருந்து பலத்தையும் ஊக்கத்தையும் பெற முடிகிறது. (எபிரெயர் 4:12) வாழ்க்கைக்கு நம்பகமான வழிநடத்துதலைத் தரும் விஷயங்கள் இந்தச் சங்கீதங்களில் புதைந்து கிடக்கின்றன. நாம் பல கஷ்டங்களை அனுபவித்தாலும் யெகோவா நம்மைக் கைவிடமாட்டார் என்ற உறுதியைத்தான் இந்தச் சங்கீதங்கள் மீண்டும் மீண்டும் எடுத்துரைக்கின்றன.
சங்கீதப் புத்தகத்தின் இந்த முதல் பகுதி பின்வரும் வார்த்தைகளுடன் நிறைவு பெறுகிறது: “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.” (சங்கீதம் 41:13) முதல் பகுதியிலுள்ள சங்கீதங்களை ஆராய்ந்த பிறகு, யெகோவாவைத் ஸ்தோத்திரிக்க, அதாவது துதிக்க நாம் தூண்டப்படவில்லையா?
[அடிக்குறிப்பு]
a இரண்டாம் சங்கீதத்தின் முதல் நிறைவேற்றம் தாவீதின் காலத்தில் நடந்தேறியது.
[பக்கம் 19-ன் சிறு குறிப்பு]
உயிரற்ற படைப்புகளே யெகோவாவை மகிமைப்படுத்தும்போது நாம் எந்தளவுக்கு அதிகமாக யெகோவாவை மகிமைப்படுத்த வேண்டும்!
[பக்கம் 17-ன் படம்]
முதல் 41 சங்கீதங்களில் பெரும்பாலானவற்றை இயற்றியவர் தாவீது
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவை மிகப் பெரிய மேய்ப்பராக வர்ணிக்கிற சங்கீதம் எதுவென தெரியுமா?
[பக்கம் 20-ன் படம்]
நாம் ஒவ்வொரு நாளும் ஆன்மீக விஷயங்களைச் சிந்திப்பது அவசியம்
[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]
நட்சத்திரங்கள்: Courtesy United States Naval Observatory
[பக்கம் 19-ன் படத்திற்கான நன்றி]
நட்சத்திரங்கள், பக்கங்கள் 18 மற்றும் 19: Courtesy United States Naval Observatory
[பக்கம் 17-ன் படத்திற்கான நன்றி]
நட்சத்திரங்கள்: Courtesy United States Naval Observatory