வயதானவர்களுக்கு மதிப்புக் கொடுங்கள்
‘முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணுங்கள்.’ —லேவி. 19:32.
1. இன்று மனிதர்களின் நிலைமை என்ன?
மனிதர்கள் முதுமையின் பாதிப்புகளால் கஷ்டப்பட வேண்டுமென்பது யெகோவாவின் நோக்கம் அல்ல. பூரண ஆரோக்கியத்துடன் பூஞ்சோலை பூமியில் சந்தோஷமாக வாழ்வதற்காகவே அவர் நம்மைப் படைத்தார். ஆனால், இன்று நிலைமை எப்படி இருக்கிறது? “படைப்புகளெல்லாம் ஒன்றாகக் குமுறிக்கொண்டும் வேதனைப்பட்டுக்கொண்டும் இருக்கின்றன.” (ரோ. 8:22) பாவத்தின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனிதர்களைப் பார்க்கும்போது யெகோவாவுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்! உதவிக்காக ஏங்கி நிற்கும் வயதானவர்கள் பலர், இன்று கைவிடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.—சங். 39:5; 2 தீ. 3:3.
2. வயதானவர்கள் நம் மத்தியில் இருப்பதைப் பார்த்து ஏன் சந்தோஷப்படுகிறோம்?
2 யெகோவாவின் மக்களாகிய நாம் நம்முடைய சபைகளில் வயதானவர்கள் இருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறோம். அவர்களுடைய ஞானம் நமக்குப் பயனளிக்கிறது, அவர்களுடைய விசுவாசம் நம்மைப் பலப்படுத்துகிறது. அவர்களில் சிலர், நம்முடைய பெற்றோராகவோ உற்றாராகவோ இருக்கலாம். அவர்கள் நம் குடும்பத்தாராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அவர்களுடைய நலனில் நமக்கு அக்கறை இருக்கிறது. (கலா. 6:10; 1 பே. 1:22) இப்போது, வயதானவர்களை யெகோவா எப்படிக் கருதுகிறார் என்பதையும் குடும்பத்தாரும் சபையாரும் அவர்களை எப்படிக் கவனித்துக்கொள்ளலாம் என்பதையும் பார்க்கலாம். இதை ஆராய்வது நம் அனைவருக்கும் பயனளிக்கும்.
‘முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாதீர்’
3, 4. (அ) சங்கீதம் 71-ஐ எழுதியவர் யெகோவாவிடம் எதற்காக மன்றாடினார்? (ஆ) சபையிலுள்ள வயதானவர்கள் கடவுளிடம் எதற்காக ஜெபிக்கலாம்?
3 “முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்” என்று சங்கீதம் 71:9-ல் சங்கீதக்காரன் குறிப்பிட்டிருக்கிறார். இந்தச் சங்கீதம், 70-ஆம் சங்கீதத்தின் தொடர்ச்சியாக இருக்கலாம். அதன் மேற்குறிப்பில் “தாவீதின் சங்கீதம்” என்ற வார்த்தைகள் காணப்படுவதால், சங்கீதம் 71:9-லுள்ள வார்த்தைகள் தாவீதின் வேண்டுகோளாகவே இருக்க வேண்டும். அவர் சிறுவயதுமுதல் முதிர்வயதுவரை யெகோவாவை வழிபட்டு வந்தார்; யெகோவா அவரை பல முக்கியமான வழிகளில் பயன்படுத்தினார். (1 சா. 17:33-37, 50; 1 இரா. 2:1-3, 10) அப்படியிருந்தும், யெகோவாவின் தயவு தனக்கு எப்போதும் வேண்டுமென்பதை உணர்ந்த தாவீது, தள்ளாடும் வயதிலும் தன்னைக் கவனித்துக்கொள்ளும்படி மன்றாடினார்.—சங்கீதம் 71:17, 18-ஐ வாசியுங்கள்.
4 இன்று அநேகர் தாவீதைப் போலவே இருக்கிறார்கள். முதுமையும் ‘தீங்கு நாட்களும்’ அவர்களைப் பாதித்தாலும், யெகோவாவுடைய சேவையில் சிறந்ததைச் செய்கிறார்கள். (பிர. 12:1-7) அவர்களில் அநேகருக்கு முன்புபோல் ஊழியத்திலும் மற்ற வேலைகளிலும் அதிகமாக ஈடுபட முடிவதில்லை. தாவீதைப் போல அவர்களும் தங்களைத் தொடர்ந்து ஆசீர்வதிக்கும்படியும் கவனித்துக்கொள்ளும்படியும் யெகோவாவிடம் மன்றாடலாம். தாங்கள் செய்யும் ஜெபங்களுக்கு யெகோவா பதிலளிப்பார் என்பதை அவர்கள் உறுதியாக நம்பலாம். தாவீதின் மன்றாட்டுக்கு பதிலளித்த யெகோவா அவர்களுடைய ஜெபங்களுக்கும் பதிலளிப்பார்.
5. யெகோவா தம்மை உண்மையோடு வழிபடும் வயதானவர்களை எப்படிக் கருதுகிறார்?
5 தம்மை உண்மையோடு வழிபடும் வயதானவர்களை யெகோவா உயர்வாகக் கருதுகிறார் என்றும் அவர்களுக்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டுமென அவர் எதிர்பார்க்கிறார் என்றும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (சங். 22:24-26; நீதி. 16:31; 20:29) “நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்” என்று லேவியராகமம் 19:32 சொல்கிறது. இந்த வார்த்தைகள் எழுதப்பட்ட காலத்திலும் சரி இன்றும் சரி, வயதானவர்களைக் கவனித்துக்கொள்வது ஒரு முக்கியமான பொறுப்பு. அப்படியானால், அவர்களைக் கவனித்துக்கொள்வது எப்படி? அது யாருடைய பொறுப்பு?
குடும்பத்தாரின் பொறுப்பு
6. பெற்றோரைக் கவனிப்பதில் இயேசு எப்படி முன்மாதிரியாக விளங்கினார்?
6 “உன் தகப்பனுக்கும் உன் தாய்க்கும் மதிப்புக் கொடு” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (யாத். 20:12; எபே. 6:2) தங்களுடைய பெற்றோரைக் கவனிக்காமல் விட்டுவிட்ட பரிசேயர்களையும் வேத அறிஞர்களையும் கண்டனம் செய்தபோது, இயேசு இந்தக் கட்டளையை வலியுறுத்திக் காட்டினார். (மாற். 7:5, 10-13) இந்த விஷயத்தில் அவர் சிறந்த முன்மாதிரியாக இருந்தார். கழுமரத்தில் சாகும் தறுவாயில் இருந்தபோது, விதவையாக இருந்த தம் தாயைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை தம் அன்பு சீடனாகிய யோவானிடம் ஒப்படைத்தார்.—யோவா. 19:26, 27.
7. (அ) குடும்பத்தாருக்கு என்ன பொறுப்பு இருப்பதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் சொன்னார்? (ஆ) பவுல் என்ன சூழ்நிலையில் இதைக் குறிப்பிட்டார்?
7 குடும்பத்தாரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கிறிஸ்தவர்களுக்கு இருப்பதைப் பற்றி கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 தீமோத்தேயு 5:4, 8, 16-ஐ வாசியுங்கள்.) தீமோத்தேயுவுக்கு பவுல் எழுதிய அந்தச் சூழ்நிலையைக் கவனியுங்கள். சபையில் யார் பண உதவியைப் பெறலாம், யார் பெற முடியாது என்பதை அங்கே விவரித்தார். பிள்ளைகளோ பேரப்பிள்ளைகளோ வேறு உறவினர்களோ இருந்தால், அவர்கள்தான் முக்கியமாக வயதான விதவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார். அப்படிச் செய்தால், சபைக்கு வீணான பணச் செலவு ஏற்படாது. இன்றும், வயதான பெற்றோருடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதன் மூலம் கிறிஸ்தவர்கள் ‘தேவபக்தியை’ காட்டுகிறார்கள்.
8. வயதான பெற்றோரைக் கவனிப்பது சம்பந்தமாக பைபிள் ஏன் திட்டவட்டமான அறிவுரைகளைக் கொடுப்பதில்லை?
8 சுருங்கச் சொன்னால், வயதான பெற்றோரின் பொருளாதாரத் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு பிள்ளைகளுக்கு இருப்பதாக பவுல் குறிப்பிட்டார். விசுவாசியாக இருக்கும் பெற்றோரைப் பற்றியே அவர் சொன்னாலும், விசுவாசத்தில் இல்லாத பெற்றோரையும் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது. பெற்றோரைப் பிள்ளைகள் கவனித்துக்கொள்ளும் விதம் வேறுபடுகிறது. ஏனென்றால், பிள்ளைகளுடைய சூழ்நிலைகள் வித்தியாசப்படலாம். அதோடு, பெற்றோரின் தேவைகள், சுபாவம், உடல்நலம் ஆகியவை வேறுபடுகின்றன. சிலருக்கு நிறைய பிள்ளைகள் இருக்கலாம், மற்றவர்களுக்கு ஒரேவொரு பிள்ளை இருக்கலாம். வயதான சிலருக்கு அரசாங்க உதவி கிடைக்கலாம், மற்றவர்களுக்கு கிடைக்காமல் போகலாம். பெற்றோரின் விருப்பங்களும் வேறுபடுகின்றன. எனவே, வயதான பெற்றோரைக் கவனித்துக்கொள்வதற்காக பிள்ளைகள் எடுக்கும் முயற்சியைக் குறைகூறுவது சரியாக இருக்காது. பைபிளின் அடிப்படையில் எடுக்கப்படும் எந்தத் தீர்மானத்தையும் யெகோவா ஆசீர்வதிக்கிறார்; பூர்வ காலத்திலிருந்தே இது உண்மையாக இருக்கிறது.—எண். 11:23.
9-11. (அ) சிலருக்கு என்ன கஷ்டமான சூழ்நிலை வரலாம்? (கட்டுரையின் முதல் படத்தைப் பாருங்கள்.) (ஆ) முழுநேர சேவையிலிருக்கும் பிள்ளைகள் ஏன் அவசரப்பட்டு தங்களுடைய சேவையை விட்டுவிடக் கூடாது? உதாரணம் கொடுங்கள்.
9 தொலைதூரத்தில் இருக்கும் பிள்ளைகளால் பெற்றோரைப் பார்த்துக்கொள்வது கஷ்டம்தான். ஒருவேளை, கீழே விழுந்ததாலோ எலும்பு முறிவு ஏற்பட்டதாலோ வேறு ஏதாவது காரணத்தாலோ பெற்றோருடைய உடல்நிலை மோசமடையலாம். அப்போது, அவர்களைப் பார்க்க பிள்ளைகள் உடனடியாக வர வேண்டியிருக்கும். அதன் பிறகு, கொஞ்ச காலத்திற்கோ நீண்ட காலத்திற்கோ அவர்களுக்கு உதவி தேவைப்படலாம்.a
10 தொலைதூர இடங்களில் முழுநேர சேவை செய்பவர்கள் கஷ்டமான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கலாம். பெத்தேல் அங்கத்தினர்கள், மிஷனரிகள், பயண கண்காணிகள் ஆகியோர் தங்களுடைய சேவையைப் பொக்கிஷமாக, யெகோவாவின் ஆசீர்வாதமாக கருதுகிறார்கள். இருந்தாலும், அவர்களுடைய பெற்றோருக்கு ஏதாவது உடல்நலப் பிரச்சினை வந்துவிட்டால், ‘பெற்றோரை கவனிக்கிறதுக்காக எங்க நியமிப்பை விட்டுதான் ஆகணும், வேற வழியே இல்ல’ என்றுதான் நினைப்பார்கள். ஆனால், உங்கள் பெற்றோர் அதைத்தான் விரும்புகிறார்களா என்பதைக் குறித்து ஜெபம் செய்து சிந்தித்துப் பாருங்கள். யாருமே அவசரப்பட்டு தங்களுடைய விசேஷித்த நியமிப்பை விட்டுவிடக் கூடாது, எப்போதுமே அதற்கான அவசியமும் இருக்காது. சிறிது காலத்திற்கு மட்டும் உதவி தேவைப்படுவதாக இருந்தால், உங்களுடைய நியமிப்பைத் தொடர்ந்து செய்வதற்கு சபையிலுள்ள சகோதரர்கள் உங்கள் பெற்றோருக்குச் சந்தோஷமாக உதவுவார்கள், அல்லவா?—நீதி. 21:5.
11 இரண்டு சகோதரர்களின் அனுபவத்தைக் கவனியுங்கள். அவர்களில் இளையவர், தென் அமெரிக்காவில் மிஷனரியாகச் சேவை செய்து வந்தார். மூத்தவரோ நியு யார்க், புருக்லினிலுள்ள தலைமை அலுவலகத்தில் சேவை செய்து வந்தார். அவர்களுடைய வயதான பெற்றோர் ஜப்பானில் இருந்தார்கள். ஒரு சமயத்தில் அவர்களைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு எப்படி உதவலாம், அதற்காக என்ன செய்யலாம் என்று பார்ப்பதற்காக இருவரும் தங்களுடைய மனைவிகளோடு அங்கு சென்றார்கள். சில காலத்திற்குப் பிறகு, பெற்றோரைக் கவனிப்பதற்காகத் தங்களுடைய நியமிப்பை விட்டுவிடலாம் என இளையவர் நினைத்தார். அந்தச் சமயம் பார்த்து, பெற்றோரின் சபையிலுள்ள மூப்பர் குழு ஒருங்கிணைப்பாளரிடமிருந்து ஃபோன் வந்தது. அவர்களுடைய சூழ்நிலையைப் பற்றி மூப்பர்கள் பேசியதாகவும் முடிந்தவரை அவர்கள் தங்களுடைய சேவையைத் தொடரவே மூப்பர்கள் விரும்புவதாகவும் அவர் சொன்னார். அந்த மிஷனரிகளின் சேவையை மூப்பர்கள் உயர்வாகக் கருதியதால் அவர்களுடைய பெற்றோரின் தேவைகளைத் தாங்களே கவனித்துக்கொள்ள முடிவு செய்தார்கள். மூப்பர்கள் காட்டிய அன்பையும் அக்கறையையும் பார்த்து அந்தக் குடும்பத்திலுள்ள எல்லோரும் நெகிழ்ந்துபோனார்கள்.
12. பெற்றோரைக் கவனிப்பது சம்பந்தமாக தீர்மானம் எடுக்கும்போது எதை மனதில் வைக்க வேண்டும்?
12 வயதான பெற்றோரைக் கவனிப்பதற்காக ஒரு கிறிஸ்தவ குடும்பம் என்ன தீர்மானம் எடுத்தாலும், அது கடவுளுடைய பெயருக்கு மகிமை சேர்க்குமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இயேசுவின் காலத்திலிருந்த மதத் தலைவர்களைப் போல நாம் இருக்கக் கூடாது. (மத். 15:3-6) நாம் எடுக்கும் தீர்மானங்கள் கடவுளுக்கும் சபைக்கும் புகழ் சேர்க்க வேண்டும்.—2 கொ. 6:3.
சபையின் பொறுப்பு
13, 14. வயதானவர்களைச் சபைகள் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதை பைபிள் எப்படிக் காட்டுகிறது?
13 மேலே பார்த்தபடி, எல்லோராலும் முழுநேர ஊழியர்களின் பெற்றோரைக் கவனித்துக்கொள்ள முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், சபைகளால் அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ள முடியும் என்பதை முதல் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவம் காட்டுகிறது. எருசலேம் சபையிலிருந்த “எல்லாருடைய தேவையும் பூர்த்தி செய்யப்பட்டது” என பைபிள் சொல்கிறது. அதற்காக, அந்தச் சபையார் எல்லோருமே பணக்காரர்களாக இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. சிலர் ஏழ்மையில் இருந்தார்கள். அதனால், ஒவ்வொருவருடைய “தேவைக்கு ஏற்றபடி எல்லாருக்கும் [பணம்] பகிர்ந்து கொடுக்க” ஏற்பாடு செய்யப்பட்டது. (அப். 4:34, 35) பிறகு, சபையில் மற்றொரு பிரச்சினை எழும்பியது. கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளன்று கிறிஸ்தவர்களாக மாறியவர்கள், தங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்வதற்காக எருசலேமில் சில காலம் தங்கியிருந்தார்கள். “அன்றாட உணவு வழங்கும் விஷயத்தில் அவர்கள் மத்தியிலிருந்த விதவைகள் சரியாகக் கவனிக்கப்படவில்லை.” எனவே, அந்த விதவைகளுக்குத் தேவையான உணவை பாரபட்சமின்றி பகிர்ந்தளிப்பதற்காக மூப்பர்கள் தகுதிவாய்ந்த ஆண்களை நியமித்தார்கள். (அப். 6:1-5) அது தற்காலிக ஏற்பாடாக இருந்தாலும், வயதான சகோதர சகோதரிகளின் தேவைகளைச் சபையால் கவனித்துக்கொள்ள முடியும் என்பதை இது காட்டுகிறது.
14 எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் கிறிஸ்தவ விதவைகளுக்கு சபைகள் உதவலாம் என்பதைப் பற்றி தீமோத்தேயுவுக்கு பவுல் கொடுத்த ஆலோசனையை ஏற்கெனவே பார்த்தோம். (1 தீ. 5:3-16) கஷ்டத்திலோ தேவையிலோ இருக்கிற அநாதைகளையும் விதவைகளையும் மற்றவர்களையும் கவனித்துக்கொள்வது பற்றி பைபிள் எழுத்தாளரான யாக்கோபும் குறிப்பிட்டிருக்கிறார். (யாக். 1:27; 2:15-17) “வாழ்க்கைக்குத் தேவையானவற்றை வைத்திருக்கும் ஒருவன் தன்னுடைய சகோதரன் வறுமையில் இருப்பதைக் கண்ணாரக் கண்டும், அவன்மீது கரிசனை காட்ட மறுத்தால் கடவுள்மீது அவனுக்கு அன்பு இருக்கிறதென்று எப்படிச் சொல்ல முடியும்?” என்று அப்போஸ்தலன் யோவானும் கேட்டார். (1 யோ. 3:17) தேவையில் இருப்போரைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கிறதென்றால், சபைக்கும் இருக்கிறது என்றுதானே அர்த்தம்?
15. வயதான சகோதர சகோதரிகளுக்கு உதவுவதில் என்ன விஷயங்கள் உட்பட்டுள்ளன?
15 சில நாடுகளில், வயதானவர்களுக்கு அரசாங்கம் உதவித்தொகை அளிக்கிறது, உடல்நல பராமரிப்புக்கான ஏற்பாட்டையும் வேறு பல உதவிகளையும் செய்கிறது. (ரோ. 13:6) மற்ற நாடுகளில், அப்படிப்பட்ட ஏற்பாடுகள் இல்லாமலிருக்கலாம். எனவே, வயதான சகோதர சகோதரிகளுக்கு குடும்பத்தாரும் சபையும் எந்தளவு உதவலாம் என்பது அவர்களுடைய சூழ்நிலையைப் பொறுத்தது. தொலைதூரத்தில் வாழ்ந்து வரும் பிள்ளைகளால் தங்களுடைய வயதான பெற்றோரை முழுமையாகக் கவனித்துக்கொள்ள முடியாமல் போகலாம். அப்படிப்பட்ட சமயங்களில், குடும்பச் சூழ்நிலையைப் பற்றி பெற்றோரின் சபையிலுள்ள மூப்பர்களிடம் அவர்கள் பேச வேண்டும். அப்போதுதான் மூப்பர்களால் அந்தச் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ முடியும். உதாரணத்திற்கு, அரசாங்க உதவியைப் பெறுவது சம்பந்தமாக பெற்றோரிடம் மூப்பர்கள் பேசலாம். அவர்களுக்கு முக்கியமான கடிதங்கள் ஏதாவது வந்திருக்கிறதா, அவர்கள் மருந்து மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிடுகிறார்களா என்பதைக் கவனிக்கலாம். இந்தத் தகவல்களை பிள்ளைகளிடம் மூப்பர்கள் சொல்லும்போது நடைமுறையான தீர்வுகள் கிடைக்கும், பெற்றோரின் நிலைமை மோசமடையாமல் பார்த்துக்கொள்ளவும் முடியும். வயதான பெற்றோருக்கு உதவவும் ஆலோசனை கொடுக்கவும் இப்படி யாராவது அருகிலேயே இருந்தால் குடும்பத்தினரின் கவலைகளைக் குறைக்க முடியும்.
16. சபையிலுள்ள சிலர் வயதானவர்களுக்கு எப்படி உதவுகிறார்கள்?
16 சபையிலுள்ள வயதானவர்கள்மீதுள்ள அன்பினால், கிறிஸ்தவர்கள் சிலர் தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறார்கள். அவர்கள்மீது அதிக அக்கறை காட்டுகிறார்கள். அவர்களைக் கவனித்துக்கொள்ள ஆளுக்கொரு வேலையைச் செய்கிறார்கள். ஒருவர் மாற்றி ஒருவர் அவர்களைப் பார்த்துக்கொள்கிறார்கள். முழுநேர ஊழியத்தில் தங்களால் ஈடுபட முடியாவிட்டாலும் அந்த வயதான பெற்றோரின் பிள்ளைகளாவது அந்தச் சேவையைத் தொடர்ந்து செய்யட்டும் என நினைக்கிறார்கள். இது சிறந்த மனப்பான்மை, அல்லவா? என்னதான் சகோதரர்கள் உதவினாலும், பிள்ளைகள் தங்களால் முடிந்தவரை பெற்றோரைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் வார்த்தைகள் வயதானோரை உற்சாகப்படுத்தட்டும்
17, 18. வயதானவர்களைக் கவனித்துக்கொள்ளும்போது எப்படிப்பட்ட மனப்பான்மையைக் காட்டலாம்?
17 வயதானவர்களும் அவர்களைக் கவனிப்பவர்களும் நம்பிக்கையான மனப்பான்மையைக் காட்டும்போது கஷ்டமான சூழ்நிலையையும் எளிதாகச் சமாளிக்க முடியும். வயதாக வயதாக, சிலருக்கு மனச்சோர்வும் மனஉளைச்சலும்கூட ஏற்படலாம். எனவே, அவர்களுக்கு மதிப்புக் கொடுக்கவும் அவர்களை உற்சாகப்படுத்தவும் விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். அதற்காக, அவர்களிடம் நம்பிக்கையூட்டும் விதத்தில் பேச வேண்டும். அவர்கள் இத்தனை காலமாக யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருந்ததற்காக அவர்களைப் பாராட்ட வேண்டும். யெகோவாவுக்காக அவர்கள் செய்த எல்லாவற்றையும் அவர் ஒருபோதும் மறக்க மாட்டார், நாமும் மறப்பதில்லை.—மல்கியா 3:16-ஐயும் எபிரெயர் 6:10-ஐயும் வாசியுங்கள்.
18 அதோடு, நகைச்சுவை உணர்வுடன் நடந்துகொள்ளும்போது வயதானவர்களுக்கும் சரி அவர்களைக் கவனிப்பவர்களுக்கும் சரி அன்றாட வேலைகள் பாரமாகத் தெரியாது. (பிர. 3:1, 4) வயதானவர்கள் பலர் தங்களைக் கவனிப்பவர்களிடம் அதிகாரமாக நடந்துகொள்ளாதபடி பார்த்துக்கொள்கிறார்கள். அன்பாக இருந்தால்தான், தங்களை மற்றவர்கள் நன்றாகக் கவனித்துக்கொள்வார்கள், தங்களை அடிக்கடி பார்க்க வருவார்கள் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். “வயசான ஒரு நண்பரை உற்சாகப்படுத்தலாம்னு போனேன். ஆனா, நான் உற்சாகத்தோடு திரும்பி வந்தேன்” என்று அநேகர் சொல்வதைக் கேள்விப்படுகிறோம்.—நீதி. 15:13; 17:22.
19. கஷ்டமான சூழ்நிலைகளில் உறுதியோடிருக்க இளையோருக்கும் முதியோருக்கும் எது உதவும்?
19 முதுமையும், பாவத்தின் விளைவுகளும் முடிவுக்கு வரும் அந்த நாளுக்காக நாம் ஆசை ஆசையாகக் காத்திருக்கிறோம். அதுவரையில், கடவுளுடைய ஊழியர்கள் முடிவில்லா வாழ்வுக்கான நம்பிக்கையை விட்டுவிடாமல் இருக்க வேண்டும். கடவுளுடைய வாக்குறுதிகள்மீது நாம் வைத்திருக்கும் விசுவாசம், கஷ்டங்களோ உபத்திரவங்களோ வரும்போது நாம் ஆட்டங்காணாதிருக்க நமக்கு உதவும். அந்த விசுவாசத்தினால் “நாம் சோர்ந்துபோவதில்லை; நம்முடைய உடல் அழிந்து வந்தாலும், நம்முடைய உள்ளம் நாளுக்குநாள் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.” (2 கொ. 4:16-18; எபி. 6:18, 19) வயதானவர்களைக் கவனித்துக்கொள்பவர்களுக்கு உதவும் சில நடைமுறையான ஆலோசனைகளை அடுத்த கட்டுரையில் காணலாம்.
a வயதான பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பயனளிக்கும் சில ஆலோசனைகளை அடுத்த கட்டுரையில் காணலாம்.