பைபிளின் முக்கிய குறிப்புகள் சங்கீதம் 42-72
யெகோவாவுக்கு காத்திரு
யெகோவாவின் ஊழியர்கள் விசுவாசத்தின் பரீட்சையை சகிப்புத்தன்மையோடு எதிர்ப்படலாம். ஏனெனில் கடவுள் அவர்களுடைய அடைக்கலமாகவும் மீட்பராகவும் இருக்கிறார். இக்காரியமானது சங்கீதங்களின் புத்தகம் இரண்டில் மிக நன்றாக காட்டப்பட்டிருக்கிறது! ஆம், 42 முதல் 72 வரையான சங்கீதங்களில் நம் சார்பாக யெகோவா தேவன் செயல்படுவதற்கு நாம் ஜெப சிந்தையோடு காத்திருப்போமானால் நாம் சகிக்கமுடியும் என்பதை நிரூபிக்கிறது.
“கடவுளுக்கு காத்திரு“
சங்கீதம் 42 முதல் 45-ஐ தயவுசெய்து வாசிக்கவும். நாடுகடத்தப்பட்ட ஒரு லேவியன், தான் யெகோவாவின் ஆலயத்துக்கு போக முடியாமலிருப்பதற்காக வருத்தப்படுகிறான், ஆனால் கடவுள் தன்னுடைய மீட்பராக செயல்படும்படி கடவுளுக்காக காத்திருப்பதில் அவன் திருப்தியடைகிறான். (சங்கீதம் 42, 43) அதன் பின்பு ஆபத்திற்குள்ளாகியிருக்கும் தேசத்தினிடமிருந்து விண்ணப்பம் வருகிறது. இது ஒருவேளை எசேக்கியாவின் நாட்களில் அசீரியா படையெடுப்பின் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். (சங்கீதம் 44) அடுத்தபடியாக ஒரு ராஜரீக திருமண பாட்டு மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவை சுட்டிக்காட்டுகிறது. இவர் ‘சத்தியம், தாழ்மை, நீதி ஆகியவற்றிற்காக சவாரி செய்கிறார்.’—சங்கீதம் 45.
◆ 42:1—சங்கீதக்காரன் எப்படி ‘நீரோடையை வாஞ்சிக்கும் மானை’ப் போலிருந்தான்?
ஏதோ ஒரு காரணத்திற்காக இந்த லேவியன் சிறையிருப்பிலிருந்தான். அவன் யெகோவாவின் ஆலையத்து ஆராதனைக்கு போகமுடியாததானது அவனுக்கு பெரும் இழப்பாக இருந்தது. அதனால் அவன் தன்னை வறட்சியான தண்ணீரற்ற நாட்டிலே தண்ணீருக்காக ஏங்கும் வேட்டையாடப்பட்ட தாகமுள்ள மானை அல்லது பெண் மானை போன்று உணர்ந்தான். யெகோவாவுக்காகவும் கடவுளை அவருடைய ஆலயத்திலே வணங்கும் சிலாக்கியத்திறகாகவும் அவன் தாகமாயிருந்தான்! ஏங்கினான்!.—வசனம் 2.
◆ 45:1—என்ன ‘நல்ல விசேஷத்தினால்’ சங்கீதக்காரனின் இருதயம் தூண்டப்பட்டது?
இந்த சங்கீதத்தின் ஒரு பகுதி இயேசு கிறிஸ்துவுக்கு பொருத்தப்படுகிறது. (சங்கீதம் 45:6, 7; எபிரெயர் 1:8, 9) எனவே அந்த சங்கீதக்காரனின் இருதயம் ஒரு எதிர்கால நிகழ்ச்சியினால் தூண்டப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளும்கூட, இந்த “நல்ல விசேஷத்தை” அறிவிப்பதில் உந்துவிக்கப்படுகின்றனர்.
நமக்குப் பாடம்: சிறையிருப்பிலிருக்கும் சங்கீதக்காரனின் அனுபவம் யெகோவாவின் ஜனங்களோடு நாம் இப்பொழுது அனுபவிக்கும் அந்த கூட்டுரவிற்காக ஆழ்ந்த போற்றுதலை காட்டுவதற்கு நம்மை உந்துவிக்க வேண்டும். துன்புறுத்தலின் காரணமாக வெளியேற முடியாத நிலைமை அவர்களோடு கூட்டுறவு கொள்வதிலிருந்து தற்காலிகமாக நம்மை தடை செய்யுமானால், பரிசுத்த சேவையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி ஆகியவற்றை நாம் தியானிக்கலாம். தம்முடைய வணக்கத்தார் மத்தியில் சுறுசுறுப்பான கூட்டுறவிற்குள் மீண்டுமாக சேர்க்கப்படுவதற்காக நாம் “கடவுளுக்காக காத்திருக்கையில்” சகிப்புத்தன்மைக்காக ஜெபிப்போமாக.—சங்கீதம் 42:4, 5, 11; 43:3-5.
நமது இரக்கமுள்ள அடைக்கலம்
தயவுசெய்து சங்கீதம் 46 முதல் 51 வரை வாசியுங்கள். யெகோவா, நமது அடைக்கலம், யுத்தங்களை ஓயப்பண்ணுவார். (சங்கீதம் 46) அவரே “பூமியின் மீதெங்கும் ராஜா” கண்ணுக்கு புலப்படாத இந்த பாதுகாவலரே சதா காலத்திற்கும் நம் கடவுள். (சங்கீதம் 47, 48) ஒடுக்கப்பட்டவர்கள் யெகோவாவுக்காக காத்திருக்க வேண்டும். ‘தங்கள் ஸ்தோத்திர [நன்றி] பலியை செலுத்துகிறவர்கள்’ எல்லாரும் ‘தேவனுடைய இரட்சிப்பை காண்பார்கள்.’ (சங்கீதம் 49, 50) நாம் தவறிழைத்தாலும், ஆனால் பத்சேபாளுடன் தான் செய்த பாவத்துக்கு மனவருந்தின தாவீதை போன்று நாமிருந்தால், கடவுள் நம்மை இரத்தப்பழியிலிருந்து நீங்கலாக்கி விடுவிப்பார். காரணம் ‘நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை அவர் புறக்கணியார்.’—சங்கீதம் 51.
◆ 46:2—எவ்வாறு ‘பூமி நிலைமாறக்கூடும்?’
பூமியின் இயற்கையான புடைத்தெழுச்சியினால், மலைகள் சமுத்திரத்தினுள் மறைந்துபோனாலும் கடவுளில் நம்பிக்கையுள்ளவர்கள் பயப்படுவதற்கு காரணமில்லை. என்ன நிகழ்ந்தாலும் யெகோவாவை தங்கள் அடைக்கலமாக கொண்டு அசைக்க முடியாத திடநம்பிக்கையுள்ளவர்களாக இருக்கலாம்.
◆ 51:5—எந்த பாவத்தை குறித்து தாவீது பேசிக் கொண்டிருந்தான்?
விவாக உறவுகள், கர்ப்பந்தரித்தல், மற்றும் பிறப்பு ஆகியவை பாவம் என்று அவன் அர்த்தப்படுத்தவில்லை; அல்லது தன்னுடைய தாயின் எந்த குறிப்பான பாவத்தை குறித்தும் அவன் பேசிக்கொண்டில்லை. மாறாக, ஆதாமின் ஒரு சந்ததியானாக அவன் தன்னுடைய சொந்த பாவ இயல்பை ஒப்புக்கொள்பவனாக இருந்தான். (யோபு 14:4; ரோமர் 5:12) யெகோவா தாவீதுக்கு இரக்கத்தை காண்பித்தார். இது ராஜ்ய உடன்படிக்கையின் காரணமாக மட்டுமல்ல, ஆனால் அவன் பாவமுள்ள மனப்போக்கை சுதந்தரித்திருந்ததன் காரணமாகவும் அவன் மனந்திரும்பியதன் காரணமாகவுமே இரக்கம் காண்பித்தார்.—2 சாமுவேல் 7:12-16.
நமக்குப் பாடம்: எருசலேம் அசீரியர்களால் பயமுறுத்தப்பட்ட காலத்திற்கே சங்கீதம் 46 பொருந்தும். ‘கடவுள் அடைக்கலமானவர்’ ‘ஆபத்துக்காலத்தின்போது அனுகூலமான துணையுமானவர்’ என்பதை அறிந்தவனாக அரசனாகிய எசேக்கியா யெகோவா தேவனிடம் விண்ணப்பித்தான், அந்த நகரம் அற்புதமாய் இரட்சிக்கப்பட்டது. (2 இராஜாக்கள் அதிகாரம் 19) இக்கட்டு காலத்தில் நாமும்கூட யெகோவாவை நமது அடைக்கலமாக ஆக்கிக்கொள்ள வேண்டும். எப்படி? அவர் மீது நம்பிக்கை வைப்பதன் மூலமும் அவருடைய வார்த்தைக்கு கீழ்ப்படிவதன் மூலமும் மற்றும் அவருடைய அமைப்பை பற்றிக் கொண்டிருப்பதன் மூலமும்.
மீட்பு உறுதியளிக்கப்படுகிறது
சங்கீதம் 52 முதல் 57 வரை வாசியுங்கள். ‘ஜீவனுள்ளோர் தேசத்திலிருந்து’ ஒரு கெட்ட ஆளை கடவுள் நிர்மூலமாக்குவார். அவருடைய ஜனங்களை எவராவது எதிர்த்தால் அவர்களுடைய எலும்புகளை சிதறடிப்பார்! (சங்கீதம் 52, 53) சவுலால் வேட்டையாடப்பட்டபோது தாவீது தெய்வீக மீட்பை குறித்து திடநம்பிக்கையுள்ளவனாக இருந்தான். துரோக செயல்களுக்கு இறையானவனாக சங்கீதக்காரன் யெகோவாவின் மீது பாரத்தை வைத்தான். (சங்கீதம் 54, 55) துன்பங்களுக்கு ஒரு முடிவை ஏற்படுத்தும்படி கடவுளுக்கு காத்திருப்பதில் சங்கீதக்காரன் திருப்தியுள்ளவனாக இருந்தான்—சங்கீதம் 56, 57.
◆ 52:8—எவ்வாறு நீதிமான் ஒரு ஒலிவ மரத்தை போன்று இருக்கிறான்?
ஒரு ஒலிவ மரம் கனிதரும் தன்மை, அழகு, பெருந்தன்மை ஆகியவற்றை அடையாளப்படுத்தக்கூடும். (எரேமியா 11:16; ஓசியா 14:6) இந்த சங்கீதத்தில் ஒரு மோசமான முடிவுக்கு வரக்கூடிய துன்மார்க்க சதிகாரன் பாதுகாக்கப்பட்டு அபரிமிதமான வளர்ச்சியுடன் செழித்தோங்கக்கூடிய நீதியுள்ள ஆளுக்கு நேர் எதிராக வித்தியாசப்படுத்திக் காட்டப்படுகிறான்.
◆ 54:1—‘உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சியும்’ என்று ஏன் தாவீது சொன்னான்?
அந்த தெய்வீக பெயர் எந்த ஒரு மர்ம சக்தியையும் உடையதாக இல்லை. ஆனால் கடவுளை தாமே பிரதிநிதித்துவம் செய்யக்கூடும். எனவே இந்த வேண்டுதல் மூலம் யெகோவா தமது ஜனத்தை இரட்சிக்க வல்லமையுள்ளவராயிருக்கிறார் என்பதை தாவீது ஒப்புக்கொண்டான். (யாத்திராகமம் 6:1-8) தாவீது எங்கே இருக்கிறான் என்பதை சீப் ஊரார் சவுலுக்கு தெரியப்படுத்தின போதிலும், இஸ்ரவேலர்கள் மீது பெலிஸ்தியர் படையெடுத்து வந்ததானது சவுல் தாவீதை பின்தொடருவதை விட்டு செல்லும்படி செய்தது. (1 சாமுவேல் 23:13-29; சங்கீதம் 54, மேல் வாசகம்) இவ்வாறாகவே யெகோவா தாவீதை இரட்சித்தார்.
நமக்குப் பாடம்: தாவீதின் எதிரிகள் அவனுக்கு முன்பாக குழிவெட்டினார்கள். (சங்கீதம் 57:6) ஒரு மனிதனை வீழ்த்துவதற்குரிய இப்படிப்பட்ட ஒரு குழியானது யெகோவாவின் ஊழியர்களுக்கு இடருண்டாக்கக்கூடிய ஆபத்தான சூழ்நிலைமைகளை அல்லது மறைவான சதிவேலைகளை குறிக்கக்கூடும். ஆனால் கடவுளுடைய ஊழியர்களின் எதிரிகள் தங்களுடைய பொல்லாத திட்டங்களால் தாங்களே வீழ்ச்சியடையக்கூடும். ஆகவே நாம் யெகோவாவின் பேரில் சார்ந்திருந்து முன்னெச்சரிக்கையோடிருப்போமானால் நமது விடுதலை உறுதியளிக்கப்படுகிறது.—நீதிமொழிகள் 11:21; 26:27.
“அமைதியாய் காத்திருத்தல்”
சங்கீதம் 58 முதல் 64 வரை வாசிக்கவும். அநியாயத்தின் பேரிலிருந்த கவலையின் காரணமாக துன்மார்க்கருக்கெதிராக தெய்வீக பழிதீர்ப்பு நடவடிக்கை எடுக்கப்படும்படி தாவீது ஜெபித்தான். (சங்கீதம் 58, 59) தோல்வியினால் அச்சுறுத்தப்பட்டபோது, அவன் மீட்புக்காக மன்றாடினான். மேலும் சத்துருக்களை கடவுள் நசுக்கிப் போடுவார் என்பதை குறித்து நிச்சயமாயிருந்தான். (சங்கீதம் 60) யெகோவா தேவன் ஏற்கனவே தாவீதின் அடைக்கலமாக இருந்திருக்கிறார்; எனவே அவன் இரட்சிப்புக்காக அமைதியாய் காத்திருப்பான். (சங்கீதம் 61, 62) பலவந்தமாய் வனாந்தரத்துக்கு செல்ல நேரிட்டபோது—இது ஒருவேளை அப்சலோம் கலகம் செய்தபோதிருக்கலாம்—தாவீது ‘கடவுளின் செட்டைகளின் நிழலிலே களிகூர்ந்தான்.’ (சங்கீதம் 63) “அக்கிரமக்காரருடைய கலகத்திலிருந்து” பாதுகாப்பளிக்கப்படும்படியாகவும் தாவீது கேட்டான். நீதிமான் யெகோவாவினிடத்தில் அடைக்கலத்தை கண்டடைவான் என்பதிலும் அவன் நம்பிக்கையுள்ளவனாக இருந்தான்.—சங்கீதம் 64.
◆ 58:3-5—துன்மார்க்கர் எவ்வாறு ஒரு சர்ப்பத்தை போன்றிருக்கின்றனர்?
சர்ப்பத்தின் விஷம் எவ்வாறு சாவுக்கேதுவாய் இருக்கக்கூடுமோ அவ்வாறே துன்மார்க்கரின் பொய்யும் பழிசொற்களும் அதற்கு பலியாகக்கூடியவர்களின் நற்பெயரை அழித்துப்போடக்கூடும். (சங்கீதம் 140:3; ரோமர் 3:13; யாக்கோபு 3:8) இதுமட்டுமின்றி கூடுதலாக துன்மார்க்கர் “தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள்.” ஏனெனில் அவர்கள் வழிநடத்துதலுக்கு செவிகொடுக்கவும் மற்றும் ஏற்றுக்கொள்ளவும் மறுக்கிறார்கள்.
◆ 63:3—கடவுளுடைய கிருமை (அன்புக்கனிவு, NW) ஏன் “ஜீவனைப் பார்க்கிலும் நல்லது?”
கடவுளைவிட்டு விலகிய வாழ்க்கை உண்மையான நோக்கத்தில் குறைவுபடுகிறது. ஆனால் தாவீதினிடத்தில் வெளிக்காட்டப்படக்கூடிய யெகோவா தேவனின் உண்மை மாறாத அன்பு அவனுடைய வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தை கொடுத்தது. கடவுளிடமுள்ள நெருக்கமான உறவு, அவருடைய அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களுக்கு எப்பொழுதுமே வாழ்க்கையை அர்த்தமுள்ள ஒன்றாக ஆக்குகிறது. தெய்வீக உதவியையும் மற்றும் வழிநடத்துதலையும் அவர்களுக்கு உறுதியளிக்கிறது. மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நித்தியமாக அனுபவிக்கும் எதிர்நோக்கை கொண்டிருக்க உதவுகிறது.
நமக்குப் பாடம்: கடவுள் தன் சார்பாக செயல்படுவதற்கு “அமைதலாய் காத்திருப்பதில் தாவீது திருப்தியடைந்தான். (சங்கீதம் 62:1-7) யெகோவாவினுடைய சித்தத்திற்கு தன்னை கீழ்ப்படுத்தியவனாய் அவன் பாதுகாப்பாய் உணர்ந்தான், மேலும் கடவுள் பேரில் அவனுக்கு அமைதியான நம்பிக்கை இருந்தது. இப்படிப்பட்ட உறுதி நமக்கு இருக்குமானால் எதிரிகளிடமிருந்தும் உபத்திரவங்களிலிருந்தும் தெய்வீக விடுதலையை எதிர்பார்த்தவர்களாய் நாம் காத்திருக்கும் இவ்வேளையில் “தேவ சமாதானம்” நம்முடைய இருதயங்களையும் மனங்களையும் காத்துக்கொள்ளும்.—பிலிப்பியர் 4:6, 7; சங்கீதம் 33:20.
நம்முடைய மீட்பரை துதியுங்கள்
சங்கீதம் 65 முதல் 72 வரை வாசியுங்கள். பயிர்களின் செழுமையான விளைச்சலுக்கும், வளமான தண்ணீர் இறைதலுக்கும் பசுமையான மேய்ச்சல் நிலத்திற்கும் ஏராளமான மந்தைக்கும் மூலக்காரணராக யெகோவா துதிக்கப்படுகிறார். (சங்கீதம் 65) “‘அவருடைய நாமத்தின் மகத்துவத்தை கீர்த்தனம் பண்ண”வேண்டும். (சங்கீதம் 66) அவரை புகழ்ந்திட வேண்டும். “இரட்சிப்பை அருளும் தேவனாக” அவர் துதிக்கப்பட வேண்டும். (சங்கீதம் 67, 68) மேசியாவின் துன்பங்கள் முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் யெகோவா தேவனை “விடுவிக்கிறவராக” உயர்த்திப்பேசுகிறது. அவருடைய உதவிக்காக சங்கீதக்காரன் காத்திருப்பான். (சங்கீதம் 69-71) இப்படிப்பட்ட பற்றுறுதி பலனளிக்கப்படும். ஏனெனில் ஒடுக்குதலிலிருந்து பூமி முழுவதிற்குமான செழுமையும் மற்றும் விடுதலையும் மேசியாவின் ஆசீர்வதிக்கப்பட்ட ஆட்சியின்போது உறுதியளிக்கப்படுகின்றன.—சங்கீதம் 72.
◆ 68:11—அந்த “மிகுதியான” ஸ்திரீகள் “கூட்டம்” யாராலானது?
சத்துருக்களை ஒழிப்பதற்கு இஸ்ரவேலின் யுத்த மனுஷரை யெகோவா தேவன் பயன்படுத்திய பின்பு அந்த வெற்றியின் நற்செய்தியை இஸ்ரவேல ஸ்திரீகள் இசையோடும், பாட்டோடும் மற்றும் நடனத்தோடும் பிரசித்திப்படுத்தினார்கள். (1 சாமுவேல் 18:6, 7); யாத்திராகமம் 15:20, 21 ஒப்பிட்டுப் பார்க்கவும்) கடவுளுடைய “வசனத்துக்கு” அல்லது கட்டளைக்கு கீழ்ப்படிகிறவர்களாய், வாக்களிக்கப்பட்ட தேசத்திலிருந்த சத்துருக்கு எதிராக இஸ்ரவேலின் ஆண்கள் போர் செய்து முறியடித்தார்கள். இது வெற்றிக்கொண்டாட்டங்களின்போது அறிவிப்பதற்குரிய நற்செய்தியை அந்த இஸ்ரவேல பெண்களுக்கு கொடுத்தது. இன்று, பெண் ஊழியர்கள் ராஜ்ய பிரசங்கிகளாக ஒரு குறிப்பிடத்தக்க பாகத்தை வகித்துக் கொண்டிருக்கின்றனர். யெகோவாவின் ‘வசனத்துடன்’ சம்பந்தப்பட்டிருக்கும் நற்செய்தியை சொல்லிவருகின்றனர். இது மேசியானிய ராஜாவாகிய இயேசு கிறிஸ்துவின்கீழ் தேசங்கள் விரைவில் அடிபணியும்படி செய்யப்படும் என்ற எச்சரிக்கை வழங்குதலையும் உட்படுத்துகிறது.
◆ 69:23—சத்துருக்களின் இடுப்புகளை கடவுள் தள்ளாடசெய்யும்படி கேட்கப்படுவது ஏன்?
இடுப்பிலுள்ள பலமான தசை நார்கள் விறைப்பாகும்போது அவை அதிக சக்தியை வெளிப்படுத்தக்கூடும். ஆனால் ஆற்றல் இழப்பானது இடுப்பு நடுங்குவதில் அல்லது தள்ளாடுவதில் விளைவடையக்கூடும். ஒருவேளை பயத்தின் காரணமாக அவ்வாறு இருக்கக்கூடும். மீட்பிற்கான இந்த விண்ணப்பத்தில் தாவீது தன் எதிரிகள் தவறாக பிரயோகிக்கக்கூடிய பலத்தை பறித்துப்போடும்படி கடவுளிடம் கேட்கிறான்.
◆ 72:16—இந்த செழுமை எதைக் குறிக்கிறது?
அதன் விளைவு லீபனோனைப்போல் என்று சொல்லும்போது லீபனோனின் பசுமையான ஓங்கிவளரும் (மிக உயர்ந்த) சோலைகளை போன்று அதிக நெருக்கமாயும் உயரமாயும் வளரும் தானியங்களை குறிக்கக்கூடும். ஒருவேளை தட்டையான மேட்டுச்சியிலிருந்து மலையின் உச்சிவரையாக செழித்தோங்கக்கூடிய கனமான கதிர்கொத்துக்களை தாங்கி நிற்கும் உயரமான தடித்த நடுத்தண்டுகள் லீபனோனின் உயரமான பெருத்த கேதுரு மரங்களுக்கு ஒப்பிடப்படலாம். இது மேசியாவினுடைய ஆட்சியின்போது இருக்கும் அமோக விளைச்சலை வழக்கமாக சுட்டிக்காட்டுகிறது. மேலும் அந்த ‘நகரத்தார் புல்லைப்போல் செழித்தோங்குவார்கள்’ என்ற உண்மையானது இயேசுவின் பூமிக்குரிய பிரஜைகள் மெய்யாகவே ஏராளமாயிருப்பர் என்பதை சுட்டிக் காட்டுகிறது.
நமக்குப் பாடம்: சங்கீதக்காரன் ஜெபித்ததாவது: “அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர்.” (சங்கீதம் 71:20) இப்படிப்பட்ட இக்கட்டுகளை கடவுள் உண்டுபண்ணுகிறதில்லை என்றாலும் அவரை நிந்திக்கிறவனாகிய பிசாசுக்கு பதிலளிக்க வேண்டுமென்பதற்காக நாம் சோதிக்கப்படும்படி அவர் அனுமதிக்கிறார். (யாக்கோபு 1:13; நீதிமொழிகள் 27:11) நம்முடைய சக்திக்கு மேலாக சோதிக்கப்படுவதற்கு யெகோவா ஒருபோதும் அனுமதிப்பதில்லை. சோதனைகளினூடே பலமான விசுவாசத்துடன் கடந்துவருவதற்கு உதவக்கூடும். (1 கொரிந்தியர் 10:13; 1 பேதுரு 1:6, 7) அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்கள் முதல் உலக யுத்தத்தின் உச்சக்கட்டத்தில் துன்புறுத்தப்பட்டபோது “அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும்” கண்டனர். ஆனால் யெகோவா அவர்களை 1919-ல் திரும்பவும் உயிர்ப்பித்தார். அவர்கள் ராஜ்ய பிரசங்கவேலையில் தொடர்ந்து முன்னேறினார்கள். பின்பாக, அவர்களுடன் திரள்கூட்டத்தினர் சேர்ந்துக்கொண்டனர். (வெளிப்படுத்துதல் 7:9) இப்படிப்பட்ட விளைவுகளுக்காக நிச்சயமாகவே மிகப்பெரிய மீட்பருக்கே துதி உரித்தாகுக.
கடவுள் நம் சார்பாக செயல்படும்படி காத்திருக்க விசுவாசம் தேவைப்படுகிறது. நாம் அமைதலாய் காத்திருக்க வேண்டி இருக்கலாம். ஏனெனில் நம்முடைய கடினமான காலங்களை மாற்றியமைக்க நாம் எதுவுமே செய்ய முடியாது. என்போதிலும் சங்கீதக்காரனைப் போன்று நாம் யெகோவாவுக்காக காத்திருப்பதில் திருப்தியடைவோமானால் நம்மால் சகித்திருக்க முடியும். (w86 10/15)