யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
சங்கீத புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்—மூன்றாம், நான்காம் பகுதிகள்
கடவுளிடம் ஜெபத்தில் சங்கீதக்காரன் இவ்வாறு கேட்கிறார்: “பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ?” (சங்கீதம் 88:11) நிச்சயம் முடியாது. ஏனென்றால், உயிரிருந்தால்தானே யெகோவாவைத் துதிக்க முடியும். நாம் உயிர்வாழ்வதே யெகோவாவைத் துதிப்பதற்குத்தான். ஆகவே, ஒவ்வொரு நாளையும் அவரைத் துதிப்பதற்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சங்கீத புத்தகத்தின் மூன்றாம் நான்காம் பகுதிகள், அதாவது 73-106 சங்கீதங்கள், படைப்பாளரைப் புகழ்வதற்கும் அவரது பெயரைத் துதிப்பதற்கும் நிறைய காரணங்களை அளிக்கின்றன. இச்சங்கீதங்களை சிந்தித்துப் பார்ப்பது, ‘தேவனுடைய வார்த்தை’ மீதுள்ள நம் நன்றியை அதிகரிக்க வேண்டும்; அதோடு, அவரைத் துதிக்க வித்தியாசமான பதங்களை தெரிந்து கொள்ளவும், நம் துதிகளின் தரத்தை அதிகரிக்கவும் நம்மைத் தூண்ட வேண்டும். (எபிரெயர் 4:12) ஆகவே, முதலில் சங்கீத புத்தகத்தின் மூன்றாம் பகுதியை நாம் மிகுந்த கவனத்துடன் ஆராயலாம்.
“எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்”
மூன்றாம் பகுதியிலுள்ள முதல் 11 சங்கீதங்களும் ஆசாபினால் அல்லது அவருடைய வீட்டாரால் இயற்றப்பட்டவை. தவறான சிந்தையால் வழிவிலகி போகாதபடி ஆசாபை எது தடுத்தது என்பதை 73-ம் சங்கீதம் விளக்குகிறது. “எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்” என்ற பாடல் வரிகள் அவர் சரியான தீர்மானத்திற்கு வந்ததைக் காட்டுகிறது. (சங்கீதம் 73:28) எருசலேமின் அழிவைப் பற்றிய புலம்பலை 74-ம் சங்கீதத்தில் காணலாம். யெகோவாவை நீதியுள்ள நியாயாதிபதி, சிறுமைப்பட்டவர்களை இரட்சிக்கிறவர், ஜெபத்தைக் கேட்கிறவர் என 75, 76 மற்றும் 77-ம் சங்கீதங்கள் வர்ணிக்கின்றன. மோசேயின் காலத்திலிருந்து தாவீதின் காலம்வரையான இஸ்ரவேலரின் சரித்திரத்தை 78-ம் சங்கீதம் அலசுகிறது. ஆலயத்தின் அழிவைக் குறித்து 79-ம் சங்கீதம் புலம்பிப் பாடுகிறது. அடுத்ததாக, கடவுளுடைய மக்களை மீட்டு, பழைய நிலைக்கு திரும்பக் கொண்டுவரும்படி செய்யப்பட்ட ஜெபம் 80-ம் சங்கீதத்தில் இடம்பெற்றிருக்கிறது. யெகோவாவுக்குக் கீழ்ப்படியச் சொல்லி 81-ம் சங்கீதம் அறிவுறுத்துகிறது. பொல்லாத நியாயாதிபதிகளுக்கு தண்டனை வழங்கும்படி ஏறெடுக்கப்பட்ட ஜெபம் சங்கீதம் 82-ல் காணப்படுகிறது. கடவுளுடைய விரோதிகளுக்குத் தண்டனை வழங்கும்படி செய்யப்பட்ட ஜெபம் 83-ம் சங்கீதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
“என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது [அதாவது ஏக்கமுமாயிருக்கிறது]” என கோராகின் புத்திரருடைய பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன. (சங்கீதம் 84:2) சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்கள்மீது ஆசீர்வாதத்தைப் பொழியும்படி கடவுளிடம் வேண்டப்படும் ஜெபமே 85-ம் சங்கீதம். பொருளாதார ஆசீர்வாதங்களைவிட ஆன்மீக ஆசீர்வாதங்களே மதிப்புமிக்கவை என்பதை இந்தச் சங்கீதம் வலியுறுத்துகிறது. தனக்குப் பாதுகாப்பளிக்கும்படியும் போதிக்கும்படியும் 86-ம் சங்கீதத்தில் கடவுளிடம் தாவீது மன்றாடுகிறார். சீயோனையும் அங்கு பிறந்த மக்களையும் பற்றிய பாடல் 87-ம் சங்கீதத்தில் உள்ளது. யெகோவாவுக்கு ஏறெடுக்கப்பட்ட ஜெபம் 88-ம் சங்கீதத்தில் இடம்பெற்றுள்ளது. தாவீதிடம் செய்யப்பட்ட உடன்படிக்கை மூலம் யெகோவா காட்டிய அன்பையும் தயவையும் 89-ம் சங்கீதம் வலியுறுத்துகிறது. இந்தச் சங்கீதத்தை இயற்றியவர் ஏத்தான், இவர் சாலொமோனின் காலத்தில் வாழ்ந்த நான்கு ஞானிகளில் ஒருவராக இருந்திருக்கலாம்.—1 இராஜாக்கள் 4:31.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
73:9—பொல்லாதவர்கள் “தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது,” எவ்விதத்தில்? பொல்லாதவர்கள் பரலோகத்திலோ பூமியிலோ உள்ள எவரையும் பொருட்படுத்தாததால் வாய் கூசாமல் கடவுளைத் தூஷிக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய நாவினால் மனிதரையும் பழித்துப் பேசுகிறார்கள்.
74:13, 14—யெகோவா ‘ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்ததும், முதலைகளின் தலைகளை சுக்குநூறாக்கிப் போட்டதும்’ எப்போது? ‘எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்’ ‘[நைல்] நதிகளின் நடுவிலே படுத்துக்கிடக்கும் பெரிய முதலை’ என அழைக்கப்படுகிறான். (எசேக்கியேல் 29:3) பார்வோனுடைய பலவான்களையும் இந்த முதலை அர்த்தப்படுத்தலாம். அவற்றின் தலைகளை சுக்குநூறாக்கிப் போட்டது, இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து யெகோவா விடுவிக்கையில் பார்வோனையும் அவனது படையையும் படுதோல்வி அடையச் செய்ததைக் குறிக்கலாம்.
75:4, 5, 10—“கொம்பு” என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன? ஒரு மிருகத்திற்கு அதன் கொம்புகள் வலிமைமிக்க ஆயுதமாக இருக்கின்றன. ஆகவே, “கொம்பு” என்ற வார்த்தை அடையாள அர்த்தத்தில் வலிமையை, அதாவது பலத்தை அர்த்தப்படுத்துகிறது. யெகோவா தமது மக்களின் கொம்புகளை உயர்த்தி, அவர்களை மேன்மைப்படுத்துகிறார்; அதேசமயத்தில், ‘துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுகிறார்.’ ‘நம் கொம்பை உயர்த்தாதிருக்கும்படி’ அதாவது பெருமை, கர்வம் ஆகியவற்றை தவிர்க்கும்படி நாம் எச்சரிக்கப்படுகிறோம். ஒருவருக்கு உயர்வு அளிப்பவர் யெகோவாவே; அதனால், சபையில் கொடுக்கப்படும் பொறுப்புகளை யெகோவாவிடமிருந்து வந்தவையாகக் கருத வேண்டும்.—சங்கீதம் 75:7.
76:10—“மனுஷனுடைய கோபம்” எவ்வாறு யெகோவாவை மகிமைப்படுத்தும்? நாம் கடவுளுடைய ஊழியர்களாக இருப்பதால், மற்ற மனிதர்கள் நம்மீது கோபத்தில் கொதித்தெழலாம், அதை யெகோவா அனுமதிக்கையில் நல்ல விளைவுகள் ஏற்படலாம். நாம் படுகிற எந்தக் கஷ்டமும் ஏதாவதொரு விதத்தில் நம்மைப் பயிற்றுவிக்கலாம். நாம் போதுமானளவு பயிற்றுவிப்பை பெறும்வரைதான் அந்தக் கஷ்டத்தை யெகோவா அனுமதிக்கிறார். (1 பேதுரு 5:10) ‘மனிதனுடைய மிஞ்சுங்கோபத்தை கடவுள் அடக்குகிறார்.’ ஒருவேளை, நம்முடைய உயிரே போகுமளவுக்கு நாம் துன்பப்பட்டால்? அதுவும்கூட யெகோவாவுக்குப் புகழ் சேர்க்கிறது; எப்படியெனில், நாம் உண்மையோடு சகித்திருப்பதை பார்க்கிறவர்களும் கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பிக்கலாம்.
78:24, 25—மன்னா, ‘வானத்தின் தானியம்’ என்றும் ‘தூதர்களின் அப்பம்’ என்றும் அழைக்கப்படுவது ஏன்? மன்னா, தேவதூதர்களின் உணவு என இந்த இரண்டு சொற்றொடர்களுமே அர்த்தப்படுத்துவதில்லை. அது வானத்திலிருந்து பொழிந்ததால்தான் ‘வானத்தின் தானியம்’ என சொல்லப்பட்டது. (சங்கீதம் 105:40) தேவதூதர்களின் இருப்பிடம் பரலோகம் என்பதால், ‘தூதர்களின் அப்பம்’ என்ற சொற்றொடர், பரலோகத்திலிருக்கிற கடவுள்தான் அதை அளித்தார் என்பதை அர்த்தப்படுத்தியிருக்கலாம். (சங்கீதம் 11:4) இஸ்ரவேலருக்கு மன்னாவை அளிக்க தேவதூதர்களைக்கூட யெகோவா பயன்படுத்தியிருக்கலாம்.
82:1, 6—இங்கு ‘தேவர்கள்’ என்றும் “உன்னதமானவரின் மக்கள்” என்றும் சொல்லப்படுகிறவர்கள் யார்? இந்த இரண்டு சொற்றொடர்களும் இஸ்ரவேலில் இருந்த நியாயாதிபதிகளைக் குறிக்கின்றன. இவர்கள் கடவுளின் சார்பாக பேசுகிறவர்களாகவும் அவருக்குப் பிரதிநிதிகளாகவும் இருந்ததால் அந்தப் பெயர்கள் பொருத்தமானவையே.—யோவான் 10:33-36.
83:2—‘தலையெடுப்பது,’ அதாவது தலையைத் தூக்குவது எதை அர்த்தப்படுத்துகிறது? இந்த சைகை, பொதுவாக எதிர்ப்பதற்கு, சண்டையிடுவதற்கு அல்லது ஒடுக்குவதற்கு அதிகாரத்தை பயன்படுத்துவதையோ நடவடிக்கை எடுப்பதையோ குறிக்கிறது.
நமக்குப் பாடம்:
73:2-5, 18-20, 25, 28. துன்மார்க்கர் செழித்து வாழ்வதைப் பார்த்து நாம் பொறாமைப்பட்டு அவர்களுடைய கெட்ட வழிகளை பின்பற்றக்கூடாது. அவர்கள் சறுக்கலான இடங்களில் நிற்கிறார்கள். ஆகவே, அவர்கள் ‘பாழான இடங்களில் விழுவது’ நிச்சயம். அபூரண மனிதரின் ஆட்சியில் துன்மார்க்கம் ஒருபோதும் ஒழியாது. ஆகவே, அதை ஒழிப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சி வீணானது. அதற்குப் பதிலாக துன்மார்க்கத்தைச் சமாளிப்பதற்கு ஆசாபைப் போல நாம் ‘தேவனை அண்டிக்கொண்டிருக்கலாம்;’ அவருடன் நெருங்கிய பந்தத்தை வைத்திருப்பதில் இன்பம் காணலாம்; இதுவே ஞானமான செயல்.
73:3, 6, 8, 27. பெருமை, அகந்தை, ஏளனம், மோசடி ஆகியவற்றில் விழுந்துவிடாதபடி நம்மைக் காத்துக்கொள்வது அவசியம். அவற்றால் ஆதாயம் கிடைப்பதுபோலத் தெரிந்தாலும்கூட அவற்றை ஒதுக்கித் தள்ளுவது அவசியம்.
73:15-17. நாம் குழம்பிப் போயிருக்கும் சூழ்நிலையில் நம்மை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் எண்ணங்களை வெளியே சொல்லாமலிருக்க வேண்டும். அப்படிச் சொல்வது மற்றவர்களை உற்சாகமிழக்கவே செய்யும். நம்முடைய பிரச்சினைகளைப் பற்றி அமைதியாக தியானித்துப் பார்ப்பதன் மூலமும், சக ஊழியர்களுடன் கூட்டுறவுகொள்வதன் மூலமும் அவற்றைச் சரிசெய்வது அவசியம்.—நீதிமொழிகள் 18:1.
73:21-24. துன்மார்க்கர் வளமாக வாழ்வதைப் பார்த்து ‘மனக்கசப்படைவது,’ சிந்திக்கும் திறனற்ற மிருகத்தைப்போல் செயல்படுவதற்கு ஒப்பிடப்படுகிறது. இது வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு திடுதிப்பென செயல்படுவதாக இருக்கும். அதற்கு மாறாக, நாம் யெகோவாவுடைய ஆலோசனைகளின்படி நடக்க வேண்டும்; அவர் நம்முடைய ‘வலதுகையைப் பிடித்து’ தாங்கி ஆதரிப்பார் என்ற முழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, யெகோவா நம்மை ‘மகிமையில் ஏற்றுக்கொள்வார்,’ அதாவது தம்முடன் அன்யோன்யமாக வைத்துக்கொள்வார்.
77:6. ஆன்மீக சத்தியங்களிடம் இருதயப்பூர்வமான அக்கறை காட்டி, அவற்றை கவனமாக ஆராய்வதற்கு நேரம் செலவிட்டு படிப்பதும் தியானிப்பதும் அவசியம். தனித்திருந்து இவ்வாறு படித்து தியானிப்பதற்கு நேரம் ஒதுக்குவது எவ்வளவு முக்கியம்!
79:9. யெகோவா நம் ஜெபங்களை, முக்கியமாக அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவது சம்பந்தமான ஜெபங்களை கவனித்துக் கேட்கிறார்.
81:13, 16. யெகோவாவுக்குச் செவிகொடுப்பதும் அவருடைய வழிகளில் நடப்பதும் அபரிமிதமான ஆசீர்வாதங்களைத் தரும்.—நீதிமொழிகள் 10:22.
82:2, 5. அநீதிகள் ‘பூமியின் அஸ்திபாரங்களையெல்லாம் அசைக்கின்றன.’ அதாவது, அவை மனித சமுதாயத்தின் ஸ்திரத்தன்மையை ஆட்டங்காணச் செய்கின்றன.
84:1-4, 10-12. யெகோவாவை வணங்குவதற்குரிய இடத்தை சங்கீதக்காரர்கள் உயர்வாக மதித்ததும் அங்கு சேவை செய்வதில் அவர்கள் அடைந்த திருப்தியும் நமக்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.
86:5 (NW). யெகோவா ‘மன்னிக்கத் தயாராயிருப்பதற்கு’ நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்கலாம்! தவறுசெய்து மனந்திரும்புவோருக்கு இரக்கம் காட்ட தகுந்த காரியங்கள் ஏதாவது தென்படுகிறதா என்று யெகோவா தேடிப்பார்க்கிறார்.
87:5, 6. பரதீஸ் பூமியில் நித்திய ஜீவனைப் பெறுகிறவர்கள் பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டவர்களின் பெயரை அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறதா? அதற்கு வாய்ப்பிருப்பதை இந்த வசனங்கள் காட்டுகின்றன.
88:13, 14. ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காக பலமுறை ஜெபம் செய்தும் பதில் கிடைக்க தாமதமாகலாம். நம்முடைய பக்தி எந்தளவு உண்மையானது என்பதை நாம் நிரூபித்துக்காட்ட வேண்டுமென்று யெகோவா விரும்புவதே அதற்குக் காரணமாக இருக்கலாம்.
“அவரைத் துதித்து அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்”
யெகோவாவை உற்சாகம்பொங்க புகழ்வதற்கு அநேக காரணங்களை சங்கீத புத்தகத்தின் நான்காம் பகுதி குறிப்பிடுகிறது. அவற்றை நாம் இப்போது பார்க்கலாம். ‘நித்தியத்தின் ராஜாவோடு’ ஒப்பிட மனிதனின் வாழ்க்கை நிலையற்றது என்பதை 90-ம் சங்கீதத்தில் மோசே எடுத்துக்காட்டுகிறார். (1 தீமோத்தேயு 1:17) சங்கீதம் 91:2-ல் யெகோவாவை ‘தன் அடைக்கலம், தன் கோட்டை,’ அதாவது தன்னுடைய பாதுகாப்பின் பிறப்பிடம் என மோசே குறிப்பிடுகிறார். அடுத்துவரும் சில சங்கீதங்கள் கடவுளுடைய அருமையான பண்புகளையும் உயர்ந்த எண்ணங்களையும் அற்புதமான செயல்களையும் பற்றிச் சொல்கின்றன. அவற்றில் மூன்று சங்கீதங்கள், “கர்த்தர் [“யெகோவா,” NW] ராஜரிகம்பண்ணுகிறார்” என்ற வார்த்தைகளுடன் ஆரம்பிக்கின்றன. (சங்கீதம் 93:1; 97:1; 99:1) யெகோவாவே நம் படைப்பாளர் என்று கூறி ‘அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரிக்கும்படி’ சங்கீதக்காரன் நம்மை அழைக்கிறார்.—சங்கீதம் 100:4.
யெகோவாவுக்கு பயப்படுகிற ஒரு ராஜா தன் ஆட்சியை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்? தாவீது ராஜா இயற்றிய 101-ம் சங்கீதத்தில் அதற்கான பதிலைக் காணலாம். அதற்கடுத்த சங்கீதம், யெகோவா “திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார்” என்று சொல்கிறது. (சங்கீதம் 102:16) 103-ம் சங்கீதம் யெகோவாவின் அன்பையும் கருணையையும் இரக்கத்தையும் நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறது. கடவுள் பூமியில் படைத்திருக்கும் ஏராளமான பொருள்களைக் குறித்து சங்கீதக்காரன் வியந்து இவ்வாறு கூறுகிறார்: “கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது.” (சங்கீதம் 104:24) நான்காம் பகுதியிலுள்ள கடைசி இரண்டு சங்கீதங்களும் யெகோவாவின் அற்புத படைப்புகளுக்காக அவரை மகிமைப்படுத்துகின்றன.—சங்கீதம் 105:2, 5; 106:7, 22.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
91:1, 2—‘உன்னதமானவரின் மறைவிடம்’ என்பது என்ன, நாம் எவ்வாறு அதில் ‘தங்க’ முடியும்? இது அடையாள அர்த்தமுடைய ஓர் இடத்தைக் குறிக்கிறது. ஆன்மீக பாதுகாப்பையும் அடைக்கலத்தையும் தருகிற, அதாவது ஆன்மீக ரீதியில் தீங்கு ஏற்படாதபடி பாதுகாக்கப்படுகிற ஒரு நிலையைக் குறிக்கிறது. கடவுளில் நம்பிக்கையில்லாத ஆட்கள் இந்த இடத்தை அறியாததால், இது மறைவிடம் என அழைக்கப்படுகிறது. யெகோவாவை நம் அடைக்கலமாகவும் கோட்டையாகவும் கருதுவதன் மூலமும் சர்வலோகத்தின் பேரரசராக அவரை மகிமைப்படுத்துவதன் மூலமும் ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதன் மூலமும் அவருடைய நிழலில் தங்குகிறோம். நமக்கு உதவ அவர் எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதை நாம் அறிந்திருப்பதால் ஆன்மீக ரீதியில் நாம் பாதுகாப்பாக உணருகிறோம்.—சங்கீதம் 90:1.
92:12—‘நீதிமான் பனையைப்போல் செழித்து வளருவான்’ என சொல்லப்பட்டிருப்பது எவ்விதத்தில்? பனை மரம் நல்ல பலன்தருவதற்கு பேர்பெற்றிருக்கிறது. நீதிமான் பனையைப்போல் இருப்பதற்குக் காரணம், அவர் யெகோவாவின் பார்வையில் நேர்மையுள்ளவராக இருக்கிறார், அதோடு நற்கிரியைகளான அநேக “நல்ல கனிகளைக்” கொடுத்துக்கொண்டே இருக்கிறார்.—மத்தேயு 7:17-20.
நமக்குப் பாடம்:
90:7, 8, 13, 14. நாம் தவறு செய்யும்போதெல்லாம் மெய்க் கடவுளுடன் நாம் வைத்திருக்கும் பந்தத்திற்கு பங்கம் ஏற்படுகிறது. அந்தரங்க பாவங்களை அவரிடமிருந்து நாம் மறைக்க முடியாது. என்றாலும், நாம் உண்மையிலேயே மனந்திரும்பி, தவறை அறவே விட்டுவிட்டால், அவர் நமக்கு மீண்டும் தயவுகாட்டி ‘அவரது கிருபையால் திருப்தியாக்குவார்.’
90:10, 12. நம்முடைய வாழ்நாள் குறுகியதாய் இருப்பதால், ‘நம்முடைய நாட்களை எண்ண’ வேண்டும். எப்படி? ‘ஞான இருதயமுள்ளவர்களாவதன்’ மூலம், அதாவது ஞானமாக செயல்படுவதன் மூலம் நம்முடைய மீதமுள்ள நாட்களை வீணாக்காமல், யெகோவாவுக்குப் பிரியமான வழியில் செலவிட முடியும். இதற்காக, ஆன்மீக காரியங்களுக்கு முதலிடம் கொடுப்பதும் நம்முடைய நேரத்தை ஞானமாக பயன்படுத்துவதும் அவசியம்.—எபேசியர் 5:15, 16; பிலிப்பியர் 1:9.
90:17. ‘நம்முடைய கைகளின் கிரியையை உறுதிப்படுத்தும்படியும்’ ஊழியத்தில் நம்முடைய முயற்சிகளை ஆசீர்வதிக்கும்படியும் யெகோவாவிடம் ஜெபிப்பது சரியானதே.
92:14, 15. கடவுளுடைய வார்த்தையை ஊக்கமாய்ப் படிப்பதன் மூலமும் யெகோவாவின் மக்களுடன் தவறாமல் கூட்டுறவு கொள்வதன் மூலமும் முதியவர்கள் தொடர்ந்து ‘புஷ்டியும் பசுமையுமாய்’ இருக்கிறார்கள். அதாவது ஆன்மீக ரீதியில் சுறுசுறுப்புடன் இருந்து சபையில் மதிப்புமிக்க பொக்கிஷங்களாய் திகழ்கிறார்கள்.
94:19. நம் ‘உள்ளத்தின் விசாரங்களுக்கு’ எது காரணமாக இருந்தாலும், பைபிளில் கடவுள் கொடுத்துள்ள ‘ஆறுதல்களை’ படித்து தியானிப்பது நம்மைத் தேற்றும்.
95:7. 8. பைபிளின் ஆலோசனையைக் கேட்பதும் அதற்குக் கூர்ந்த கவனம் செலுத்துவதும் உடனடியாகக் கீழ்ப்படிவதும் நம் இருதயத்தைக் கடினப்படுத்தாதபடி தடுக்கும்.—எபிரெயர் 3:7, 8.
106:36, 37. இந்த வசனங்கள், விக்கிரகங்களை வணங்குவதை பேய்களுக்கு பலியிடுவதோடு சம்பந்தப்படுத்துகின்றன. அப்படியானால், விக்கிரகத்தைப் பயன்படுத்துகிற ஒருவர் பேய்களின் தொல்லைக்கு ஆளாகலாம் என்பதை இது காட்டுகிறது. அதனால்தான், “விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக” என பைபிள் நம்மை ஊக்குவிக்கிறது.—1 யோவான் 5:21.
ஜனங்களே, யாவைத் துதியுங்கள்!
சங்கீத புத்தகத்தின் நான்காம் பகுதியிலுள்ள கடைசி மூன்று பாடல்களும் “அல்லேலூயா,” அதாவது ஜனங்களே, யாவைத் துதியுங்கள்! என்ற அறிவுரையுடன் முடிவடைகின்றன. கடைசி சங்கீதத்தின் ஆரம்ப வார்த்தையும் இதுதான். (சங்கீதம் 104:35; 105:45; 106:1, 48) சொல்லப்போனால், “அல்லேலூயா” என்ற வார்த்தை சங்கீத புத்தகத்தின் நான்காம் பகுதியில் அடிக்கடி வருகிறது.
யெகோவாவைத் துதிப்பதற்கு நமக்கு நிச்சயமாகவே நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஆம், 73-106 வரையான சங்கீதங்கள் நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைத்திருக்கின்றன; நம் பரலோகத் தகப்பனுக்கான நன்றியால் நம் இதயத்தை நிரப்பியிருக்கின்றன. அவர் நமக்கு ஏற்கெனவே செய்துள்ளவற்றையும் எதிர்காலத்தில் செய்யவிருப்பவற்றையும் பற்றி சிந்திக்கும்போது “யாவைத் துதி” என்று முழு பலத்தோடு சொல்ல நாம் தூண்டப்படவில்லையா?
[பக்கம் 10-ன் படம்]
ஆசாபைப் போல நாமும் ‘தேவனை அண்டிக்கொண்டிருப்பதன்’ மூலம் துன்மார்க்கத்தைச் சமாளிக்க முடியும்
[பக்கம் 11-ன் படம்]
சிவந்த சமுத்திரத்தில் பார்வோன் முறியடிக்கப்படுகிறான்
[பக்கம் 11-ன் படம்]
மன்னா, “தூதர்களின் அப்பம்” என அழைக்கப்படுவது ஏன் என்று தெரியுமா?
[பக்கம் 13-ன் படம்]
நம் ‘உள்ளத்தின் விசாரங்களை’ நீக்க எது உதவுகிறது?