யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
நீதிமொழிகள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் ‘மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னார்.’ (1 இராஜாக்கள் 4:32) அவர் சொன்ன ஞானமான வார்த்தைகளை நாம் கேட்பதற்கு வழி இருக்கிறதா? ஆம், இருக்கிறது. சாலொமோன் சொன்ன அநேக பழமொழிகள் பைபிளில் நீதிமொழிகள் என்ற புத்தகத்தில் உள்ளன; இப்புத்தகம் சுமார் பொ.ச.மு. 717-ல் எழுதி முடிக்கப்பட்டது. அதன் கடைசி இரண்டு அதிகாரங்களை மட்டும் வேறு எழுத்தாளர்கள் எழுதியதாகச் சொல்லப்படுகிறது; அதாவது, யாக்கேயின் குமாரனாகிய ஆகூரும் லேமுவேல் ராஜாவும் எழுதியதாகச் சொல்லப்படுகிறது. எனினும், சாலொமோனின் மறுபெயரே லேமுவேல் என்பதாக சிலர் நினைக்கிறார்கள்.
‘ஞானம், போதகம்’ ஆகிய இரண்டையும் ‘அறிந்துகொள்ள’ உதவுவதே கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்த நீதிமொழிகள் புத்தகத்தின் நோக்கம். (நீதிமொழிகள் 1:2) ஞானம் என்பது காரியங்களைத் தெளிவாகப் பகுத்துணர்வதற்கும், அறிவைப் பயன்படுத்தி பிரச்சினைகளைச் சரிசெய்வதற்குமுரிய திறனாகும்; இதைப் பெற்றுக்கொள்ள நீதிமொழிகள் புத்தகம் நமக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, போதகத்தையும், அதாவது தார்மீகப் பயிற்சியையும் பெற்றுக்கொள்ள உதவுகிறது. இந்த நீதிமொழிகளுக்குக் கவனம் செலுத்தி, அவற்றின் ஆலோசனைகளுக்குச் செவிசாய்ப்பது நம் இருதயத்தைச் செயல்படத் தூண்டுவிக்கிறது; அது நமக்குச் சந்தோஷத்தைத் தரும், வெற்றிக்கு வழிவகுக்கும்.—எபிரெயர் 4:12.
‘ஞானத்தைச் சம்பாதியுங்கள், சிட்சையை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளுங்கள்’
‘[மெய்] ஞானமானது வீதிகளில் [உரத்த] சத்தமிடுகிறது’ என சாலொமோன் கூறுகிறார். (நீதிமொழிகள் 1:20) அதன் தெளிவான, உரத்த சத்தத்திற்கு நாம் ஏன் செவிசாய்க்க வேண்டும்? ஞானத்தைச் சம்பாதிப்பதால் கிடைக்கும் நன்மைகளை 2-ம் அதிகாரம் குறிப்பிடுகிறது. யெகோவாவிடம் நெருங்கிச் செல்வது எப்படி என்பதை 3-ம் அதிகாரம் அலசுகிறது. இதற்கு அடுத்த அதிகாரத்தில் சாலொமோன் இவ்வாறு கூறுகிறார்: “ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். புத்திமதியை [அதாவது, சிட்சையை] உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே.”—நீதிமொழிகள் 4:7, 13.
இவ்வுலகின் ஒழுக்கக்கேடான வழிகளிலிருந்து விலகிச் செல்ல எது நமக்கு உதவும்? நீதிமொழிகள் 5-ம் அதிகாரம் அதற்கு விடை அளிக்கிறது: சிந்திக்கும் திறனைப் பயன்படுத்துங்கள், உலகின் கவர்ச்சிமிக்க வழிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதால் வரும் மோசமான பாதிப்புகளைப் பற்றியும் சிந்தித்துப் பாருங்கள். யெகோவாவுடன் உள்ள நம் பந்தத்திற்குப் பங்கம் ஏற்படுத்துகிற பழக்கங்களையும் மனப்பான்மைகளையும் குறித்து அடுத்த அதிகாரம் எச்சரிக்கிறது. ஒழுக்கக்கேடான நபர் செயல்படும் விதத்தை 7-ம் அதிகாரம் வெட்டவெளிச்சமாக்குகிறது. ஞானத்தின் மதிப்பையும் வேண்டுகோளையும் மனம் கவரும் விதத்தில் 8-ம் அதிகாரம் விவரிக்கிறது. இந்த அதிகாரங்களுக்கு எல்லாம் ஊக்கமூட்டும் முடிவுரையாக 9-ம் அதிகாரம் அமைகிறது; உவமை வடிவில் அமைந்துள்ள இந்த அதிகாரம் நம் உள்ளத்தைச் செயல்படத் தூண்டுவிக்கிறது, ஞானத்தைத் தேட ஊக்குவிக்கிறது.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:7 (NW); 9:10—யெகோவாவுக்குப் பயப்படுவது எவ்விதத்தில் ‘அறிவின் ஆரம்பமாகவும்,’ ‘ஞானத்தின் ஆரம்பமாகவும்’ இருக்கிறது? யெகோவாமீது பயமில்லாமல் எந்த அறிவையும் பெற முடியாது; ஏனெனில் சகலத்தையும் படைத்தவர் அவரே, பைபிளின் நூலாசிரியரும் அவரே. (ரோமர் 1:20; 2 தீமோத்தேயு 3:16, 17) மெய்யறிவு அனைத்திற்கும் அவரே ஊற்றுமூலர். ஆகையால், யெகோவா மீதுள்ள பயபக்தியிலிருந்துதான் அறிவு ஆரம்பமாகிறது. தேவபயம் ஞானத்திற்கும் ஆரம்பமாயிருக்கிறது; ஏனெனில் அறிவு இல்லாமல் எந்த ஞானமும் இல்லை. அதுமட்டுமல்ல, யெகோவாமீது பயம் இல்லாதவர், தனக்கிருக்கும் அறிவை வைத்து படைப்பாளரைக் கௌரவிக்க மாட்டார்.
5:20; 7:4—ஒரு வேசி ஏன் “அந்நிய ஸ்திரீ” என அழைக்கப்படுகிறாள்? நீதிமொழிகள் 2:16, 17 வசனங்கள் ஓர் ‘அந்நிய பெண்ணை,’ ‘தேவனுடைய உடன்படிக்கையை மறந்தவள்’ என விவரிக்கிறது. ஆகவே, ஒரு வேசி உட்பட, பொய்க் கடவுட்களை வணங்கிய அல்லது நியாயப்பிரமாண சட்டத்தைத் தள்ளிவிட்ட எந்தவொரு ஆணும் பெண்ணும் அந்நியராகக் கருதப்பட்டார்.—எரேமியா 2:25; 3:13.
7:1, 2—‘என் வார்த்தைகள்,’ ‘என் கட்டளைகள்’ என்பவற்றில் உட்பட்டிருப்பவை யாவை? பைபிள் போதனைகளோடுகூட இவற்றில் குடும்ப அங்கத்தினர்களின் நன்மைக்காக பெற்றோர் வகுக்கும் விதிமுறைகளும் உள்ளன. இளம் பிள்ளைகள் இந்த விதிமுறைகளையும் பெற்றோர் தரும் பைபிள் போதனைகளையும் ஏற்றுக்கொள்வது அவசியம்.
8:30 (NW)—“கைதேர்ந்த வேலையாள்” யார்? ஆளாக உருவகப்படுத்தப்பட்டுள்ள ஞானம், தன்னைக் கைதேர்ந்த வேலையாள் என சொல்லிக்கொள்கிறது. ஞானத்தின் தன்மைகளை விவரிப்பதற்காக இந்தச் சொற்றொடர் பயன்படுத்தப்பட்டாலும், பூமிக்கு வருவதற்கு முன் பரலோகத்திலிருந்த கடவுளுடைய முதற்பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையே இது அடையாள அர்த்தத்தில் குறிக்கிறது. ஒரு மனிதனாக அவர் பூமியில் பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பே, ‘கடவுளுடைய வழியின் ஆதியாகப் படைக்கப்பட்டிருந்தார்.’ (நீதிமொழிகள் 8:22) சகலமும் சிருஷ்டிக்கப்படுகையில் தம் தகப்பனோடு சேர்ந்து ‘கைதேர்ந்த வேலையாளாக’ சுறுசுறுப்புடன் வேலை செய்தார்.—கொலோசெயர் 1:15-17.
9:17—“திருட்டுத் தண்ணீர்” என்பது என்ன, அது ஏன் ‘தித்திக்கிறது’? மணவாழ்வில் பாலியல் நெருக்கத்தை அனுபவிப்பதை, கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட புத்துணர்ச்சி அளிக்கும் தண்ணீரைக் குடிப்பதோடு பைபிள் ஒப்பிடுகிறது. ஆகவே, திருட்டுத் தண்ணீர் என்பது கள்ளத்தனமான பாலியல் தொடர்புகளையே குறிக்கிறது. (நீதிமொழிகள் 5:15-17) கள்ளத்தனமாக பாலியல் தொடர்பு கொள்ளும்போது அந்தத் தண்ணீர் அவர்களுக்குத் தித்திப்பதுபோல் தெரிகிறது.
நமக்குப் பாடம்:
1:10-14. செல்வந்தராவதற்கு உறுதி அளிப்பதன் மூலம் தங்களுடைய கெட்ட வழிகளுக்கு வரும்படி பாவிகள் நம்மை இழுக்கும்போது, அதற்கு இணங்கி விடாதபடி நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும்.
3:3. அன்புள்ள தயவையும் உண்மையையும் நாம் உயர்வாக மதிக்க வேண்டும்; கழுத்தில் அணியும் விலையுயர்ந்த ஆபரணத்தைப் போல, அக்குணங்களை யாவரறிய வெளிக்காட்ட வேண்டும். அதோடு, அவற்றை நம் இருதயப் பலகையில் எழுதிக்கொள்ள வேண்டும், அவற்றை நம் சுபாவத்தின் முக்கிய அங்கமாக்கிக்கொள்ள வேண்டும்.
4:18. ஆன்மீக அறிவொளி படிப்படியாகக் கிடைக்கிறது. அந்த ஒளியில் தொடர்ந்து நடக்க வேண்டுமென்றால், நாம் மனத்தாழ்மையையும் சாந்த குணத்தையும் எப்போதும் வெளிக்காட்ட வேண்டும்.
5:8. ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதற்கான தூண்டுதல்கள் எல்லாவற்றிலிருந்தும் நாம் தூர விலகியிருப்பது அவசியம். அவை புத்தகங்கள், பத்திரிகைகள், இசை, பொழுதுபோக்கு, இன்டர்நெட் போன்ற எவற்றிலிருந்து வந்தாலும்கூட.
5:21. யெகோவாவை நேசிக்கிற ஒருவர் கணநேர இன்பங்களுக்காக அவரோடுள்ள சிறந்த பந்தத்தை விட்டுக் கொடுத்துவிடுவாரா? நிச்சயம் மாட்டார்! நம் செயல்களை யெகோவா பார்க்கிறார், நாம் அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டுமென்ற உணர்வு, ஒழுக்கச் சுத்தத்தைக் காத்துக்கொள்வதற்குப் பலமான தூண்டுகோலாய் அமைகிறது.
6:1-5. மற்றவர்களுக்காகப் ‘பிணையப்படுவதை,’ அதாவது பண விஷயங்களில் ஞானமின்றி மற்றவர்களுக்காக உத்தரவாதம் அளிப்பதைத் தவிர்க்கும்படி இந்த வசனங்கள் சிறந்த ஆலோசனையைக் கொடுக்கின்றன, அல்லவா? நாம் செய்தது ஞானமற்ற செயல் என்பது நன்கு யோசித்துப் பார்க்கும்போது தெரிய வருகையில், உடனடியாக “விரைந்தோடிச் சென்று” அவரை வருந்தி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; பிரச்சினையை சரிசெய்ய நம்மால் எவற்றையெல்லாம் செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்ய வேண்டும்.
6:16-19. இந்த ஏழு அடிப்படை குணங்களில் கிட்டத்தட்ட எல்லா வகையான தீய செயல்களும் உட்பட்டுள்ளன. அவற்றை நாம் அடியோடு வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
6:20-24. பிள்ளைகளை பைபிள் போதனைகளுக்கு இசைய வளர்ப்பது பாலியல் ஒழுக்கக்கேட்டில் மாட்டிக்கொள்ளாதபடி அவர்களைப் பாதுகாக்கிறது. ஆகவே, பிள்ளைகளை பைபிள் போதனைகளின்படி வளர்ப்பதில் பெற்றோர் அசட்டையாக இருந்துவிடக் கூடாது.
7:5. ஞானத்தின் மீதும் புரிந்துகொள்ளுதலின் மீதும் பிரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நம்மை வழிநடத்துவதற்குத் தனித்தனி நீதிமொழிகள்
சாலொமோன் எழுதிய மற்ற நீதிமொழிகள் சுருக்கமான தனித்தனி கூற்றுகளாகும். இவை, எதிரிடையாகவும், இணையாகவும், ஒப்பிட்டுக் காட்டுகிறதாகவும் இருக்கின்றன; இவை, நம் நடத்தை, பேச்சு, மனப்பான்மை ஆகியவற்றின் பேரில் மிகச் சிறந்த பாடங்களைப் புகட்டுகின்றன.
யெகோவாவுக்குப் பயபக்தி காட்டுவதன் முக்கியத்துவத்தை 10-24 அதிகாரங்கள் வலியுறுத்துகின்றன. 25-29 அதிகாரங்களிலுள்ள நீதிமொழிகள் “யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர்” நகலெடுத்தவை. (நீதிமொழிகள் 25:1) இந்த நீதிமொழிகள், யெகோவாவைச் சார்ந்திருக்கவும் பிற முக்கிய பாடங்களையும் நமக்குக் கற்றுத் தருகின்றன.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
10:6—எவ்வாறு ‘கொடுமை துன்மார்க்கனுடைய வாயை அடைக்கிறது’? துன்மார்க்கனைப் பொதுவாக மற்றவர்கள் கடுமையாய் பகைப்பதால் அவர்களுடைய பகைமை அவனுடைய வாயை அடைக்கிறது என்ற கருத்தை இது தரலாம். மூல எபிரெய மொழியில் இது மற்றொரு அர்த்தத்தையும் தரலாம். இது இவ்வாறு சொல்கிறது: “துன்மார்க்கனுடைய வாய் கொடுமையை மறைக்கிறது.” துன்மார்க்கன் இனிக்க இனிக்க பேசுவதன் மூலம், பிறருக்குக் கெடுதல் செய்ய வேண்டுமென்ற தன் தீய எண்ணத்தை மறைப்பதை இது அர்த்தப்படுத்தலாம்.
10:10—“கண்சாடை காட்டுகிறவன்” எப்படி வேதனை உண்டாக்குகிறான்? ‘பேலியாளின் மனுஷன்,’ அதாவது ஒன்றுக்கும் உதவாத மனுஷன், ‘ஆகடியம் [அதாவது, தாறுமாறாக] பேசுவது’ மட்டுமல்லாமல் ‘கண்சாடை காட்டுவது’ போன்ற அங்க அசைவுகளால் தன் உள்நோக்கத்தை மறைக்கவும் பார்க்கிறான். (நீதிமொழிகள் 6:12, 13) இத்தகைய ஏமாற்று வேலை, அதனால் பாதிக்கப்படுவோருக்கு மிகுந்த மன வேதனையைத் தரலாம்.
10:29—‘கர்த்தரின் வழி’ என்பது என்ன? மனிதகுலத்திடம் யெகோவா செயல்படும் விதத்தை இது குறிக்கிறது; நாம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கைப் பாதையை இது குறிப்பதில்லை. மனிதரிடம் கடவுள் செயல்படும் விதம் கள்ளங்கபடற்றவர்களுக்குப் பாதுகாப்பையும் துன்மார்க்கருக்கு நாசத்தையும் அர்த்தப்படுத்துகிறது.
11:31—நீதிமானைவிட அதிகமாக துன்மார்க்கன் ஏன் சரிக்கட்டப்பட வேண்டும்? சரிக்கட்டப்படுதல் என்ற வார்த்தை ஒவ்வொருவரும் பெறுகிற சிட்சையை அல்லது தண்டனையைக் குறிக்கிறது. நீதிமான் தவறு செய்கையில், அதற்கான சிட்சையைப் பெறுகிறார். துன்மார்க்கன் வேண்டுமென்றே பாவம் செய்கிறான், திருந்தி வாழ மறுக்கிறான். அதனால், அவன் கடும் தண்டனையைப் பெற்றுக்கொள்கிறான், அதற்கு அவன் தகுதியுள்ளவனே.
12:23—ஒருவர் தன் ‘அறிவை அடக்கி வைப்பது’ எப்படி? அறிவை அடக்கி வைப்பது என்பது அதை வெளிக்காட்டாமல் இருப்பதை அர்த்தப்படுத்துவதில்லை. மாறாக, ஒருவர் தன்னைப் பெரிய அறிவாளியாக தம்பட்டம் அடிக்காமல், அதை விவேகத்துடன் வெளிக்காட்டுவதை அர்த்தப்படுத்துகிறது.
14:17 (NW)—“சிந்திக்கும் திறமையுள்ளவன் பகைக்கப்படுவது” எப்படி? “சிந்திக்கும் திறமை” என்பதற்கான எபிரெய வார்த்தை பகுத்துணர்வை அல்லது துர்ச் சிந்தனையை அர்த்தப்படுத்தலாம். பொதுவாக, கெட்ட எண்ணங்களை உடையவன் பகைக்கப்படுகிறான். ஆனால், பகுத்துணர்வுள்ளவரும்கூட பகைக்கப்படுகிறார்; அதற்குக் காரணம், இவர் சிந்திக்கும் திறமையைப் பயன்படுத்துகிறார்; ‘உலகத்தின் பாகமாக இல்லாதிருக்கிறார்.’—யோவான் 15:19, NW.
18:19—‘அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப் பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிதாயிருப்பது’ எப்படி? முற்றுகையிடப்பட்டிருக்கும் ஓர் அரணான பட்டணத்தைப் போல, ஒருவர் மற்றொருவருடன் சமரசமாவதற்கு விடாப்பிடியாக மறுக்கலாம். அப்படியிருக்க அவருக்கும் தவறு செய்தவருக்கும் இடையேயுள்ள விரோதங்கள் கடக்க முடியாத “கோட்டைத் தாழ்ப்பாள்கள் போலிருக்கும்.”
நமக்குப் பாடம்:
10:11-14. நம்முடைய வார்த்தைகள் மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்கு, திருத்தமான அறிவு நம் மனதில் நிரம்பியிருக்க வேண்டும், அன்பு நம் இருதயத்தைத் தூண்ட வேண்டும், ஞானம் நாம் பேச வேண்டியதைத் தீர்மானிக்க வேண்டும்.
10:19; 12:18; 13:3; 15:28; 17:28. நாம் அளவாகப் பேசுகிறவர்களாயும், யோசித்துப் பேசுகிறவர்களாயும் இருப்போமாக.
11:1; 16:11; 20:10, 23. வியாபார விஷயங்களில் நாம் நேர்மையாய் இருக்கும்படி யெகோவா விரும்புகிறார்.
11:4. பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத் தனிப்பட்ட பைபிள் படிப்பு, கூட்டங்கள், ஜெபம், வெளி ஊழியம் ஆகியவற்றைத் தவிர்ப்பது முட்டாள்தனம்.
13:4. சபையில் ஒரு ஸ்தானத்தைப் பெற ‘விரும்புவது’ அல்லது புதிய உலகில் வாழ வேண்டுமென விரும்புவது மட்டும் போதாது. அதற்குத் தகுதிபெற சுறுசுறுப்பாக உழைப்பதும் ஊக்கமாக முயலுவதும் அவசியம்.
13:24; 29:15, 21. அன்பான ஒரு பெற்றோர் தன்னுடைய பிள்ளைக்குச் செல்லம் கொடுத்து கெடுக்கவோ, அதன் தவறுகளைக் கண்டும் காணாமல் விட்டுவிடவோ மாட்டார். மாறாக, அவற்றை முளையிலேயே கிள்ளியெறிய நடவடிக்கை எடுப்பார்.
14:10. நம் அடிமனதின் உணர்ச்சிகளை எல்லா சமயத்திலும் அப்படியே வெளிப்படுத்தவும் முடியாது, நம்மைப் பார்ப்பவர்கள் அவற்றை எப்போதுமே புரிந்துகொள்ளவும் முடியாது. அதனால் உணர்ச்சி ரீதியில் மற்றவர்களால் முழுமையாக ஆறுதல் தர முடியாது. ஆகவே, யெகோவாவை மட்டுமே சார்ந்திருந்து சில கஷ்டங்களை நாம் சகிக்க வேண்டியிருக்கலாம்.
15:7. ஒரு விவசாயி எல்லா விதைகளையும் ஒரே இடத்தில் கொட்டிவிடுவதில்லை. அவ்வாறே நாம் அறிந்த எல்லா விஷயங்களையும் ஒரே நேரத்தில் ஒருவரிடம் சொல்லிவிடக் கூடாது. ஞானமுள்ளவர் தேவைக்கேற்ப தான் பெற்ற அறிவை கொஞ்சம் கொஞ்சமாக இறைக்கிறார்.
15:15; 18:14. நம்பிக்கையான மனநிலையோடு இருப்பது, வேதனைமிக்க சூழ்நிலைகளிலும்கூட சந்தோஷத்தைக் காண நமக்கு உதவும்.
17:24. “மூடனுடைய” கண்களும் மனதும் முக்கியமான காரியங்களின் மீது நிலைக்காமல் அலைபாய்ந்துகொண்டிருக்கும். அவ்வாறின்றி, ஞானத்தோடு செயல்படுவதற்கு நாம் புரிந்துகொள்ளுதலை நாட வேண்டும்.
23:6-8. உபசரிக்க மனமுள்ளவரைப்போல் நடிப்பதை நாம் தவிர்க்க வேண்டும்.
27:21. புகழ்ச்சியானது, நாம் யார் என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். புகழ்ச்சியானது யெகோவாவுக்கு நாம் எந்தளவு கடன்பட்டிருக்கிறோம் என்பதை உணர வைத்தால், அவருக்குத் தொடர்ந்து சேவை செய்ய நம்மை ஊக்குவித்தால், அது நமக்கு மனத்தாழ்மை இருப்பதைக் காட்டும். ஆனால், அந்தப் புகழ்ச்சி, தற்பெருமை அடையச் செய்தால் அது மனத்தாழ்மை இல்லாததைக் காட்டும்.
27:23-27. மேய்ப்பர்களோடு சம்பந்தப்பட்ட சூழலைப் படம்பிடித்துக் காட்டுகிற இந்த நீதிமொழிகள், கடுமையாக உழைத்து, எளிய வாழ்க்கையில் திருப்தி காண்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. குறிப்பாக, கடவுளைச் சார்ந்திருப்பதன் அவசியத்தை இந்த வசனங்கள் நம் மனதில் பதிய வைக்க வேண்டும்.a
28:5. ஜெபத்தின் மூலம் ‘கர்த்தரைத் தேடி’ அவருடைய வார்த்தையை ஆழ்ந்து படிப்போமானால், அவர் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அவருக்குச் சேவைச் செய்வதற்குத் தேவையான ‘சகலத்தையும் நாம் அறிந்துகொள்ளலாம்.’
‘உபதேச வாக்கியங்கள்’
நீதிமொழிகள் புத்தகம் இரண்டு ‘உபதேச வாக்கியங்களுடன்’ முடிவடைகின்றன. (நீதிமொழிகள் 30:1; 31:1) பேராசையைத் திருப்திப்படுத்த முடியாது என்பதையும் ஒரு மனிதன் பெண்ணை வஞ்சிக்கிற வழிகளைக் கண்டுபிடிக்க முடியாது என்பதையும் சிந்திக்க வைக்கும் ஒப்புமைகளின் மூலம் ஆகூர் தன்னுடைய உபதேசத்தில் விளக்கிக் காட்டுகிறார்.b தற்பெருமையையும் கோபமாகப் பேசுவதையும் பற்றிக்கூட அதில் அவர் எச்சரிக்கிறார்.
லேமுவேலுக்கு அவருடைய தாய் போதித்த உபதேசத்தில், திராட்சைரசத்தையும் மதுபானத்தையும் அருந்துவது, நீதியாக நியாயந்தீர்ப்பது ஆகியவை பற்றிய சிறந்த ஆலோசனைகள் உள்ளன. ஒரு நல்ல மனைவியைப் பற்றிய விவரிப்பும் அதில் உள்ளது. அது முடிவாக இவ்வாறு சொல்கிறது: “அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.”—நீதிமொழிகள் 31:31.
ஞானத்தைச் சம்பாதியுங்கள், சிட்சையை ஏற்றுக்கொள்ளுங்கள், தேவபயத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், யெகோவாமீது சார்ந்திருங்கள். இவையெல்லாம் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட நீதிமொழிகள் அளிக்கிற மதிப்புமிக்க பாடங்கள், அல்லவா? ஆம், இவற்றின் ஆலோசனைகளைப் பின்பற்றி, ‘கர்த்தருக்குப் பயந்து நடக்கிற’ மனுஷன் பெறும் சந்தோஷத்தை நாமும் அனுபவிப்போமாக.—சங்கீதம் 112:1.
[அடிக்குறிப்புகள்]
[பக்கம் 16-ன் படங்கள்]
மெய்யறிவு அனைத்திற்கும் யெகோவாவே ஊற்றுமூலர்
[பக்கம் 18-ன் படம்]
‘அறிவை இறைப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது?