நீதியை விதைத்து, கடவுளின் அன்புள்ள தயவை அறுவடை செய்யுங்கள்
“அந்நியருக்கு உத்தரவாதம் அளிப்போர் நிச்சயம் அல்லற்படுவர், கைகுலுக்குவதை வெறுப்போரோ கவலையின்றி இருப்பர்.” (நீதிமொழிகள் 11:15, NW) இரத்தினச் சுருக்கமான இந்தப் பழமொழி பொறுப்புணர்வுடன் செயல்படுவதை எவ்வளவு வலிமையோடு தெரிவிக்கிறது! அந்நியருக்காக பிணை கையெழுத்திடுவது தொல்லையை வரவேற்பதாக இருக்கும். கைகுலுக்குவதை தவிர்த்து—இது பூர்வ இஸ்ரவேலில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதைப் போன்ற ஒரு செயல்—பணப் பிரச்சினையில் சிக்காமல் கவலையின்றி வாழுங்கள்.
இங்கு தெளிவாக சொல்லப்படும் நியமம் இதுவே: “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.” (கலாத்தியர் 6:7) “நீதிக்கென்று விதை விதையுங்கள்; [“அன்புள்ள,” NW] தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்” என ஓசியா தீர்க்கதரிசி குறிப்பிட்டார். (ஓசியா 10:12) காரியங்களை கடவுளுடைய வழியில் செய்வதன் மூலம் நீதியை விதைத்து அவருடைய அன்புள்ள தயவை அறுவடை செய்யுங்கள். இந்த நியமத்தை அடிக்கடி பயன்படுத்தி, சரியான செயலை செய்யவும் நேர்மையான பேச்சை பேசவும் தகுந்த விதத்தில் நடக்கவும் இஸ்ரவேலின் அரசனாகிய சாலொமோன் வலிமையுடன் உற்சாகப்படுத்துகிறார். அவருடைய ஞானமான பொன்மொழிகளை கூர்ந்து ஆராய்வது நீதியை விதைப்பதற்கு நம்மை உற்சாகப்படுத்தும்.—நீதிமொழிகள் 11:15-31.
‘அழகை’ விதைத்து ‘மகிமையை’ அறுவடை செய்யுங்கள்
“அழகுடைய பெண்ணுக்கு மகிமை வந்துசேரும், கொடுங்கோலருக்கோ செல்வம் வந்துசேரும்.” (நீதிமொழிகள் 11:16, NW) அழகுடைய பெண்ணுக்கு—“கனிவுள்ள பெண்ணுக்கு”—கிடைக்கும் நீடித்த மகிமையையும் கொடுங்கோலனுக்கு கிடைக்கும் தற்காலிக செல்வத்தையும் இந்த வசனம் வேறுபடுத்திக் காட்டுகிறது.—பொது மொழிபெயர்ப்பு.
மகிமை சேர்க்கும் அழகை ஒருவர் எப்படி பெறலாம்? “நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறனையும் காத்துக்கொள், அவை . . . உன் கழுத்துக்கு அழகாயிருக்கும்” என சாலொமோன் அறிவுரை வழங்கினார். (நீதிமொழிகள் 3:21, 22, NW) ‘ராஜாவின் உதடுகளில் அழகு சிந்துகிறது.’ (சங்கீதம் 45:1, 2, NW) ஆம், நடைமுறை ஞானம், சிந்திக்கும் திறன், நாவை தகுந்த முறையில் பயன்படுத்துதல் ஆகியவை ஒருவருடைய மதிப்பையும் அழகையும் கூட்டும். விவேகமுள்ள பெண்ணின் விஷயத்தில் அது நிச்சயமாகவே உண்மை. இதற்கு ஓர் உதாரணம், மூடன் நாபாலின் மனைவி அபிகாயில். அவள் “விவேகத்தில் சிறந்தவளாகவும் ரூபத்தில் அழகானவளாகவும் இருந்தாள்,” தாவீது ராஜா அவளுடைய ‘புத்திசாலித்தனத்தை’ புகழ்ந்து பேசினார்.—1 சாமுவேல் 25:3, 33, NW.
உண்மையான அழகுடைய தேவபக்திமிக்க பெண் நிச்சயமாகவே மகிமை அடைவாள். அவளை அநேகர் புகழ்ந்து பேசுவார்கள். மணமாகியிருந்தால், அவளுடைய கணவரின் கண்களிலும் மகிமை அடைவாள். சொல்லப்போனால், முழு குடும்பத்திற்கும் மகிமை சேர்ப்பாள். அவளுடைய மகிமையோ சீக்கிரத்தில் மறைந்துபோகும் மகிமை அல்ல. “திரண்ட செல்வத்தைவிட நற்பெயரைத் தெரிந்துகொள்வது மேல்; வெள்ளியையும் பொன்னையும்விடப் புகழைப் பெறுவதே மேல்.” (நீதிமொழிகள் 22:1, பொ.மொ.) கடவுளிடம் அவள் எடுக்கும் நற்பெயர் அழியாத மதிப்புடையது.
கொடுங்கோலனுடைய—‘இரக்கமற்ற மனிதனுடைய’—சூழ்நிலையோ இதற்கு எதிர்மாறானது. (நீதிமொழிகள் 11:16, நியூ இன்டர்நேஷனல் வர்ஷன்) கொடுங்கோலன் துன்மார்க்கரோடும் யெகோவாவின் வணக்கத்தாருடைய எதிரிகளோடும் வகைப்படுத்தப்படுகிறான். (யோபு 6:23; 27:13) இப்படிப்பட்டவன் ‘தேவனை தனக்கு முன்பாக நிறுத்துவதில்லை.’ (சங்கீதம் 54:3) அப்பாவிகளை ஒடுக்கி அவர்களை சுயநல ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இப்படிப்பட்டவன் ‘மணல்போல் வெள்ளியை குவிக்கலாம்.’ (யோபு 27:16, பொ.மொ.) என்றாலும், ஒரு நாள் அவன் படுக்கையிலிருந்து எழுந்திருக்க மாட்டான், கண் திறக்கும் நாளிலே கண்மூடி விடுவான். (யோபு 27:19) அவன் சேர்த்த அனைத்து செல்வமும் படைத்த சாதனைகளும் எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் போய்விடும்.—லூக்கா 12:16-21.
நீதிமொழிகள் 11:16 எவ்வளவு முக்கியமான பாடத்தைப் புகட்டுகிறது! அழகும் கொடுங்கோன்மையும் எதை அறுவடை செய்யும் என்பதை நமக்கு இரத்தினச் சுருக்கமாய் சொல்வதன் மூலம் நீதியை விதைக்கும்படி இஸ்ரவேலின் அரசன் நம்மை உந்துவிக்கிறார்.
‘அன்புள்ள தயவு’ நன்மைகள் செய்கிறது
மானிட உறவுகள் சம்பந்தமாக மற்றொரு பாடத்தையும் சாலொமோன் சொல்கிறார்: “தயையுள்ள [“அன்புள்ள தயவுடைய,” NW] மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான்.” (நீதிமொழிகள் 11:17) “இந்தப் பழமொழி சொல்லும் குறிப்பு என்னவென்றால், மற்றவர்களிடம் நல்ல விதமாகவோ கெட்ட விதமாகவோ எப்படி நடந்துகொண்டாலும் நினைக்காத அல்லது எதிர்பாராத விளைவுகள் உண்டாகும்” என அறிஞர் ஒருவர் கூறுகிறார். லீசா என்ற இளம் பெண்ணை கவனியுங்கள்.a அவள் நல்லெண்ணம் படைத்தவளாக இருந்தாலும், ஊழியத்திற்கு சொன்ன இடத்திற்கு சொன்ன நேரத்திற்கு செல்ல மாட்டாள். 30 நிமிடமோ அல்லது அதற்கும் அதிகமான நேரமோ கழித்து வருவது அவளுக்கு சர்வசாதாரணம். இதனால் லீசா எந்த விதத்திலும் தனக்கு நன்மை செய்து கொள்வதில்லை. தங்களுடைய பொன்னான நேரம் வீணாவதால் மற்றவர்கள் பொறுமையிழந்து அவளோடு இனிமேல் ஊழியம் செய்வதை தவிர்த்தால் அவர்களை லீசா குறைகூற முடியுமா?
பரிபூரணவாதியும், அதாவது எல்லாவற்றையும் மிகச் சிறப்பாக செய்ய துடிப்பவரும், தன்னை கடூரமாகவே நடத்திக் கொள்கிறார். அடைய முடியா இலக்குகளை அடைய எப்பொழுதும் சளைக்காமல் உழைக்கிறார், சோர்வையும் ஏமாற்றத்தையுமே தரும் ஒரு சூழலை தனக்கு ஏற்படுத்திக் கொள்கிறார். மறுபட்சத்தில், எதார்த்தமான, நியாயமான இலக்குகளை நாம் வைக்கும்போது பலனடைகிறோம். நாம் மற்றவர்களைப் போல விஷயங்களை சட்டென்று கிரகித்துக்கொள்ள முடியாமல் இருக்கலாம். வியாதியோ வயோதிபமோ நம்மீது சில கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நம்முடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தில் நாம் ஒருபோதும் சோர்வடையாமல் இருப்போமாக, ஆனால் நம்முடைய வரம்புகளைப் புரிந்துகொண்டு நடப்பதில் தொடர்ந்து நியாயமானவர்களாய் இருப்போமாக. நம்முடைய தகுதிக்கேற்ப ‘நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை செய்யும்போது’ மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருப்போம்.—2 தீமோத்தேயு 2:15, NW; பிலிப்பியர் 4:5, NW.
நீதிமான் எவ்வாறு பயனடைகிறான், கடூரன் எவ்வாறு தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான் என்பதை கூடுதலாக விளக்கும்போது ஞானமுள்ள அரசன் இவ்வாறு கூறுகிறார்: “பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல; நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர். நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்; தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர். வஞ்சக நெஞ்சினர் ஆண்டவரின் இகழ்ச்சிக்குரியவர்; மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவர்.” “கையோடே கைகோத்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.”—நீதிமொழிகள் 11:18-21; பொ.மொ.
பல்வேறு விதங்களில் இந்த வசனங்கள் பின்வரும் அடிப்படைக் குறிப்பை வலியுறுத்துகின்றன: நீதியை விதைத்து அதன் பலனை அறுவடை செய்யுங்கள்! உழைக்காமலேயே ஊதியம் பெற துன்மார்க்கன் வஞ்சனையையோ சூதாட்டத்தையோ நாடலாம். இத்தகைய ஊதியம் உண்மையில் ஊதியமல்ல என்பதால் அவன் ஏமாறுவான். நேர்மையாக பாடுபடுபவர் உண்மையான ஊதியம் பெறுகிறார், அதில் அவர் பாதுகாப்பை கண்டடைகிறார். கடவுளுடைய அங்கீகாரம் இருப்பதால், குற்றமற்றவர் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையோடு இருக்கிறார். ஆனால் துஷ்டனோ எவ்வாறு தண்டிக்கப்படுவான்? வஞ்சனையை சூழ்ச்சியோடு செய்வதில் “கையோடே கைகோத்தாலும்” துன்மார்க்கன் தண்டனைக்குத் தப்பான். (நீதிமொழிகள் 2:21, 22) நீதியை விதைப்பதற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த புத்திமதி!
புத்திசாலிக்கு மெய் அழகு
“மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்” என சாலொமோன் தொடர்ந்து சொல்கிறார். (நீதிமொழிகள் 11:22) பைபிள் காலங்களில் மூக்குத்திகள் பிரபலமான அலங்காரமாக இருந்தன. பெண்ணின் மூக்கில் போடப்படும் பொன் மூக்குத்தி அல்லது புல்லாக்கு எப்பொழுதும் பளிச்சென ஜொலிக்கும். இத்தகைய அழகிய ஆபரணம் ஒரு பன்றியின் மூக்கில் இருப்பது எவ்வளவு பொருத்தமற்றது! வெளித்தோற்றத்திற்கு அழகுடைய “மதிகேடான” ஒருவரும் அப்படித்தான் இருக்கிறார். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், இத்தகையோருக்கு அலங்காரம் தகுந்ததல்ல. அது பொருத்தமற்றது—துளிகூட கவர்ச்சியாக இருப்பதில்லை.
மற்றவர்களுக்கு முன் நம்முடைய தோற்றம் எப்படி இருக்கிறது என்பதைக் குறித்து கவலைப்படுவது இயல்பானதே. ஆனால் நம்முடைய முகத்தையோ உடலமைப்பையோ குறித்து ஏன் மிதமீறி கவலைப்பட வேண்டும் அல்லது அதிருப்தியடைய வேண்டும்? நம்முடைய முகத்தின் பல்வேறு அம்சங்களைப் பொருத்ததில் நாம் எதுவும் செய்ய முடியாது. அதோடு சரீர தோற்றமே நம் வாழ்க்கைக்கு உயிர்நாடி அல்ல. நாம் விரும்புகிற, மெச்சுகிற பெரும்பாலோர் எளிய தோற்றமுடையவர்களே என்பது உண்மை அல்லவா? உடல் கவர்ச்சி மகிழ்ச்சிக்குத் திறவுகோல் அல்ல. என்றென்றும் கடவுளுடைய குணங்களைப் பிரதிபலிக்கும் அக அழகே உண்மையில் மதிப்புமிக்கது. அப்படியானால் புத்தியுள்ளவர்களாய் இருந்து இத்தகைய குணங்களை வளர்த்துக்கொள்வோமாக.
“உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும்”
“நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்” என சாலொமோன் குறிப்பிடுகிறார். எப்படி என்பதை உதாரணத்துடன் விளக்குகிறார்: “வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு.”—நீதிமொழிகள் 11:23, 24.
நாம் சுறுசுறுப்புடன் கடவுளுடைய வார்த்தையை வாரியிறைக்கும்போது—பேசும்போது—அதன் “அகலமும், நீளமும், ஆழமும், உயரமும்” இன்னதென்று நிச்சயமாகவே நாம் நன்கு புரிந்துகொள்கிறோம். (எபேசியர் 3:18) தன் அறிவைப் பயன்படுத்தாமல் இருப்பவரோ உள்ளதையும் இழக்கும் அபாயத்தில் இருக்கிறார். ஆம், “சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான். பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.”—2 கொரிந்தியர் 9:6.
“உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.” (நீதிமொழிகள் 11:25) மெய் வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்கு நம்முடைய நேரத்தையும் பொருளாதார வளங்களையும் பயன்படுத்தும்போது, யெகோவா நம்மைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுவார். (எபிரெயர் 13:15, 16) அவர் ‘வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமல் போகுமட்டும் நம்மேல் ஆசீர்வாதத்தை வருஷிப்பார்.’ (மல்கியா 3:10) அவருடைய இன்றைய ஊழியர்களின் ஆவிக்குரிய செழுமையை சற்று சிந்தித்துப் பாருங்கள்!
நீதிமான்கள் மற்றும் துன்மார்க்கரின் மாறுபட்ட ஆசைகளுக்கு மற்றொரு உதாரணத்தைத் தந்து, சாலொமோன் இவ்வாறு கூறுகிறார்: “தானியத்தைப் பதுக்கி வைப்போரை மக்கள் சபிப்பர்; தானியத்தை மக்களுக்கு விற்போரோ ஆசி பெறுவர்.” (நீதிமொழிகள் 11:26, பொ.மொ.) விலை குறைவாக இருக்கும்போது பொருட்களை வாங்கி குவித்துக்கொண்டு, அவை குறைந்துபோய் விலை உயரும்வரை அவற்றை பதுக்கி வைத்து பணம் சம்பாதிப்பது லாபகரமாய் இருக்கலாம். நுகர்வதை கட்டுப்படுத்தி சேமிப்பை காத்துக்கொள்வதில் ஓரளவு நன்மை இருந்தாலும், சுயநலத்தோடு இப்படி செய்கிறவரை மக்கள் பொதுவாக சபிப்பார்கள். மறுபட்சத்தில், அவசர காலத்தில் கொள்ளை லாபம் பெறுவதிலிருந்து விலகியிருப்பவர் மக்களின் ஆதரவை சம்பாதித்துக் கொள்கிறார்.
நன்மையை அல்லது நீதியானதை தொடர்ந்து விரும்பும்படி நம்மை உற்சாகப்படுத்தி இஸ்ரவேலின் அரசன் இவ்வாறு கூறுகிறார்: “நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப் போலே தழைப்பார்கள்.”—நீதிமொழிகள் 11:27, 28.
நீதிமான் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறான்
முட்டாள்தனமான செயல் எப்படி தீய விளைவுகளை உண்டாக்கும் என்பதை விளக்கி சாலொமோன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தன்னுடைய சொந்த வீட்டிற்கு தொல்லையை கொண்டுவருகிறவன் காற்றை சுதந்தரிப்பான்.” (நீதிமொழிகள் 11:29அ, NW) ஆகான் செய்த தவறு ‘அவன் மீது தொல்லையை கொண்டுவந்தது,’ (பொ.மொ.) அவனும் அவனுடைய வீட்டாரும் கல்லெறிந்து கொலை செய்யப்பட்டார்கள். (யோசுவா, 7-ம் அதிகாரம்) இன்று, கிறிஸ்தவ குடும்பத்தின் தலைவரும் அவருடைய வீட்டிலுள்ள மற்றவர்களும் தவறு செய்வதில் உட்படலாம், அது கிறிஸ்தவ சபையிலிருந்து அவர்கள் நீக்கப்படுவதில் விளைவடையும். கடவுளுடைய கட்டளைகளுக்கு தனிப்பட்ட விதமாக கீழ்ப்படிய தவறுவதாலும் தன்னுடைய குடும்பத்தாரின் வினைமையான தவறை பொறுத்துக்கொள்வதாலும் ஒருவர் தன் சொந்த வீட்டின் மீது தொல்லையை வரவழைத்துக் கொள்கிறார். அவரும் ஒருவேளை அவருடைய குடும்பத்தாரும் மனந்திரும்பாத பாவிகள் என்ற அடிப்படையில் கிறிஸ்தவ கூட்டுறவிலிருந்து நீக்கப்படுவார்கள். (1 கொரிந்தியர் 5:11-13) அதனால் அவருக்கு என்ன லாபம்? பொருளோ மதிப்போ இல்லாத காற்றுதான் மிஞ்சும்.
“மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்” என அந்த வசனம் தொடர்ந்து சொல்கிறது. (நீதிமொழிகள் 11:29ஆ) மூடனுக்கு நடைமுறை ஞானம் இல்லாததால், அதிக பொறுப்புமிக்க வேலையை அவனிடம் நம்பி ஒப்படைக்க முடியாது. மேலும், தன்னுடைய சொந்த வேலைகளை தாறுமாறாக நிர்வகிப்பது ஏதாவதொரு விதத்தில் வேறொருவருக்கு கடமைப்பட்டவனாகும்படி செய்கிறது. இத்தகைய ஞானமற்றவன் “ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.” அப்படியானால், நம்முடைய நடவடிக்கைகள் எல்லாவற்றிலும் நல்யோசனையையும் நடைமுறை ஞானத்தையும் பயன்படுத்துவது இன்றியமையாதது என்பது தெளிவாகிறது.
“நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்” என அந்த ஞானமுள்ள அரசன் நமக்கு உறுதியளிக்கிறார். (நீதிமொழிகள் 11:30) இது எவ்வாறு சம்பவிக்கிறது? தன்னுடைய சொல்லிலும் செயலிலும் நீதிமான் பிறருக்கு ஆன்மீக போஷாக்கை அளிக்கிறான். யெகோவாவுக்கு சேவை செய்யும்படி அவர்கள் தூண்டப்படுகிறார்கள், கடைசியில் அவர்கள் கடவுள் தரும் ஜீவனை பெற்றுக்கொள்ளக்கூடும்.
‘பாவி பலன் பெறுவது எவ்வளவு அதிக நிச்சயம்’
மேற்குறிப்பிடப்பட்டுள்ள நீதிமொழிகள் நீதியை விதைப்பதற்கு எப்பேர்ப்பட்ட உந்துவிக்கும் புத்திமதியை நமக்கு அளிக்கின்றன! “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்ற நியமத்தை மற்றொரு விதத்தில் பொருத்தி சாலொமோன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “நீதிமானும், இதோ, பூமியிலே பலன் பெறுவான், தெய்வ பயமற்றவனும் பாவியும் பலன் பெறுவது எவ்வளவு அதிக நிச்சயம்!”—நீதிமொழிகள் 11:31, திருத்திய மொழிபெயர்ப்பு.
நீதிமான் சரியானதைச் செய்ய முயற்சி செய்கிறபோதிலும் சிலசமயங்களில் அவன் அடி சறுக்குகிறது. (பிரசங்கி 7:20) தன் தவறுகளுக்காக சிட்சையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் ‘பலனளிக்கப்படுவான்.’ ஆனால் நேர்மையான வழியில் நடப்பதற்கு முயலாமல் வேண்டுமென்றே தவறான வழியில் செல்கிற துன்மார்க்கனைப் பற்றி என்ன சொல்லலாம்? அவன் அதிகமான ‘பலனைப்’ பெற—கடுமையான தண்டனையைப் பெற—தகுந்தவன்தானே? “நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?” என அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பேதுரு 4:18) ஆகவே, நமக்கு பயனளிக்கத்தக்கதாக எப்பொழுதும் நீதியின் விதைகளை விதைக்க உறுதிபூண்டிருப்போமாக.
[அடிக்குறிப்பு]
a பெயர் மாற்றப்பட்டுள்ளது.
[பக்கம் 28-ன் படம்]
“அழகு” அபிகாயிலுக்கு “மகிமை” சேர்த்தது
[பக்கம் 30-ன் படங்கள்]
‘பொல்லாதவர் பெறும் ஊதியம் ஊதியமல்ல; நீதிமான் உண்மையான ஊதியம் பெறுகிறார்’
[பக்கம் 31-ன் படம்]
‘பெருக விதைத்து பெருக அறுங்கள்’