‘விவேகி தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்’
விவேகமுள்ளவர் காரியங்களைக் கையாளுவதிலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும் திறமைசாலியாக விளங்குகிறார். புத்திசாலியாக இருக்கிறார். தீர்மானம் எடுப்பதில் சரியானவராகவும் புரிந்துகொள்வதில் கூரறிவுடையவராகவும் திகழ்கிறார். நியாயமானவராகவும் கவனமுள்ளவராகவும் பகுத்துணர்வுள்ளவராகவும் ஞானமுள்ளவராகவும் இருக்கிறார். ஏமாற்றுபவராகவோ சதிசெய்பவராகவோ இருக்க மாட்டார். “விவேகியானவன் அறிவோடு நடந்து கொள்ளுகிறான்” என நீதிமொழிகள் 13:16 சொல்கிறது. ஆம், விவேகம் விரும்பத்தக்க ஒரு குணம்.
அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படி விவேகத்தை காட்டலாம்? நம்முடைய தெரிவுகளில், மற்றவர்களை நடத்தும் விதத்தில், பல்வேறு சூழ்நிலைகளுக்குப் பிரதிபலிக்கும் விதத்தில் இப்பண்பு எவ்வாறு தெளிவாக தெரிகிறது? விவேகமுள்ளவர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் யாவை? என்ன ஆபத்துகளை அவர்கள் தவிர்க்கிறார்கள்? பூர்வ இஸ்ரவேலின் அரசரான சாலொமோன் இந்தக் கேள்விகளுக்கு நடைமுறையான பதில்களைத் தருகிறார். நீதிமொழிகள் 14:12-25-ஐ வாசிக்கையில் இதைத்தான் நாம் தெரிந்துகொள்கிறோம்.a
உங்கள் பாதையை ஞானமாய் தேர்ந்தெடுங்கள்
ஞானமாய் தெரிவுகள் செய்வதற்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும், எது சரி எது தவறு என்பதைப் பகுத்துணரும் திறமை நிச்சயம் தேவை. என்றாலும், பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.” (நீதிமொழிகள் 14:12) ஆகவே, எது சரியானது போல் தோன்றுகிறது, ஆனால் உண்மையிலேயே எது சரியானது என்பதைப் பகுத்துணருவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய வஞ்சகமான பாதைகள் அநேகம் இருப்பதையே “மரண வழிகள்” என்ற சொற்றொடர் சுட்டிக்காட்டுகிறது. நாம் அறிந்திருக்க வேண்டிய, தவிர்க்க வேண்டிய அம்சங்கள் சிலவற்றை கவனியுங்கள்.
பொதுவாக, இவ்வுலகில் செல்வந்தர்களாகவும் பிரபலமானவர்களாகவும் திகழ்பவர்கள் மதிக்கப்படுகிறார்கள். சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவர்கள் வெற்றி பெற்றிருப்பதால், அவர்கள் செயல்படும் முறையே சரியானது என்பது போல் தோன்றலாம். ஆனால், செல்வத்தையும் புகழையும் பெற இப்படிப்பட்ட ஆட்கள் பயன்படுத்தும் வழிமுறைகளைப் பற்றியென்ன? அவை எப்பொழுதும் நேர்மையானவையாகவும் ஒழுக்கமானவையாகவும் இருக்கின்றனவா? அதோடு, மத நம்பிக்கைகளில் நன்கு ஆர்வம் காட்டுகிற சிலரும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய உள்ளப்பூர்வமான ஆர்வம் அவர்களுடைய நம்பிக்கைகள் சரியானவை என்பதை உண்மையிலேயே நிரூபிக்கிறதா?—ரோமர் 10:2, 3.
தன்னையே ஏமாற்றிக்கொள்ளும் போக்கும்கூட ஒரு வழியை செம்மையானதாகத் தோன்றச் செய்யலாம். தனிப்பட்ட விதமாக எது சரியென நாம் உணருகிறோமோ அதன் அடிப்படையில் தீர்மானங்கள் எடுத்தால், திருக்குள்ள வழிகாட்டியான இருதயத்தின் மீது நாம் சார்ந்திருக்கிறோம் என்று அர்த்தம். (எரேமியா 17:9) விஷயங்களை நன்கு அறியாத, பயிற்றுவிக்கப்படாத மனசாட்சி தவறான வழியை சரியென நினைக்கச் செய்துவிடலாம். அப்படியானால், சரியான பாதையைத் தேர்ந்தெடுக்க எது நமக்கு உதவும்?
‘நன்மை எது தீமை எது என்பதை கண்டறிவதற்குப் பகுத்துணரும் திறமைகளை நாம் பயிற்றுவிக்க’ வேண்டும், இதற்காக கடவுளுடைய வார்த்தையின் ஆழமான சத்தியங்களை ஊக்கமாய் படிப்பது அத்தியாவசியம். அதோடு, பைபிள் நியமங்களைப் ‘பயன்படுத்து’வதன் மூலமே இத்தகைய திறமைகளை நாம் பயிற்றுவிக்க வேண்டும். (எபிரெயர் 5:14, NW) பார்வைக்குச் சரியானது போல் தோன்றுகிற ஒரு வழி, ‘ஜீவனுக்கு வழிநடத்தும் இடுக்கமான பாதையிலிருந்து’ நம்மை திசைதிருப்பி விடாதவாறு கவனமாக இருக்க வேண்டும்.—மத்தேயு 7:13, 14.
‘மனம் துக்கப்படுகையில்’
மனநிம்மதி இல்லாதபோது நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? நெஞ்சைப் பிளக்கும் வேதனையை நகைப்பும் கேளிக்கையும் தணித்துவிடுமா? மதுபானத்தில் மனச்சோர்வை மூழ்கடிக்க முயல்வது, போதைப்பொருட்களை துஷ்பிரயோகம் செய்வது, நெறிமுறையற்ற வாழ்க்கை பாணியைப் பின்பற்றுவது ஆகியவற்றின் மூலம் அத்தகைய உணர்ச்சிகளைப் போக்க முயற்சி செய்வது விவேகமா? இல்லை என்பதே பதில். “நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு” என ஞானமுள்ள அந்த அரசர் கூறுகிறார்.—நீதிமொழிகள் 14:13அ.
நகைப்பு வேதனையை மறைக்கலாம், ஆனால் அதைப் போக்கிவிடுவது இல்லை. “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு” என பைபிள் கூறுகிறது. “அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம் பண்ண ஒரு காலமுண்டு.” (பிரசங்கி 3:1, 4) மனச்சோர்வு தொடர்ந்திருந்தால், அதை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், தேவைப்படும் சமயத்தில் ‘நல்யோசனையை’ நாட வேண்டும். (நீதிமொழிகள் 24:6)b நகைப்பும் கேளிக்கையும் ஓரளவு பலன் தருகின்றன, என்றாலும் நல்யோசனையை நாடுகையில் கிடைக்கும் பலனோடு ஒப்பிடுகையில் நகைப்பும் கேளிக்கையும் தரும் பலன் சிறிதளவே. மோசமான கேளிக்கைகளையும் மிதமிஞ்சிய பொழுதுபோக்கையும் எச்சரித்து சாலொமோன் இவ்வாறு கூறுகிறார்: “அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம்.”—நீதிமொழிகள் 14:13ஆ.
உண்மையற்றவர், நல்லவர் —எப்படி திருப்தி அடைகிறார்கள்?
“பின்வாங்கும் இதயமுளோன் [அதாவது உண்மையற்றவன்] தன் வழிகளிலே திருப்திகொள்வான், நல்லவன் திருப்தியாவது தன் செய்கைகளிலே” என இஸ்ரவேலின் அரசர் கூறுகிறார். (நீதிமொழிகள் 14:14, திருத்திய மொழிபெயர்ப்பு) உண்மையற்றவரும் நல்லவரும் தங்களுடைய செயல்களின் பலனால் எப்படி திருப்தி அடைகிறார்கள்?
உண்மையற்றவர் கடவுளுக்கு கணக்குக் கொடுப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆகவே, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்வது உண்மையற்ற நபருக்கு முக்கியமல்ல. (1 பேதுரு 4:3-5) இத்தகைய நபர் பொருளாசைமிக்க தனது வாழ்க்கை பாணியால் வரும் பலனைக் கொண்டு திருப்தியடைகிறார். (சங்கீதம் 144:11-15அ) மறுபட்சத்தில், நல்லவரோ ஆன்மீக விஷயங்களுக்கு அக்கறை காட்டுகிறார். தான் செய்யும் எல்லா செயல்களிலும், கடவுளுடைய நீதியான தராதரங்களை உறுதியாகப் பின்பற்றுகிறார். இத்தகைய மனிதர் தனது செயல்களின் பலனால் திருப்தியடைகிறார், ஏனென்றால் யெகோவாவே அவருடைய கடவுள், உன்னதமானவரை சேவிப்பதால் வரும் ஒப்பற்ற சந்தோஷத்தை அவர் அனுபவிக்கிறார்.—சங்கீதம் 144:15ஆ.
‘எல்லா வார்த்தையையும் நம்பாதீர்கள்’
அனுபவமற்றவனுடைய வழிகளையும் விவேகியினுடைய வழிகளையும் வேறுபடுத்தி, சாலொமோன் இவ்வாறு கூறுகிறார்: “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.” (நீதிமொழிகள் 14:15) விவேகி எளிதில் ஏமாற மாட்டார். தான் கேட்கிற எல்லாவற்றையும் நம்பாமல் அல்லது தனக்காக மற்றவர்கள் சிந்திப்பதற்கு இடமளிக்காமல், அவர் தனது நடைகளை ஞானமாக யோசித்துப் பார்க்கிறார். கிடைக்கும் எல்லா உண்மைகளையும் ஒன்றுசேர்த்து, அறிவுடன் செயல்படுகிறார்.
உதாரணமாக, “கடவுள் இருக்கிறாரா?” என்ற கேள்வியை எடுத்துக்கொள்ளுங்கள். பேதையானவன் பிரபலமான நம்பிக்கையை அல்லது பிரபலமானவர்கள் நம்புவதை ஏற்றுக்கொள்கிறான். மறுபட்சத்தில், விவேகியோ உண்மைகளை ஆராய நேரம் ஒதுக்குகிறார். ரோமர் 1:20, எபிரெயர் 3:4 போன்ற வேதவசனங்களைச் சிந்தித்துப் பார்க்கிறார். ஆன்மீக விஷயங்களில், மதத் தலைவர்களுடைய கருத்துகளை விவேகமுள்ளவர் அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. ‘அந்த ஏவப்பட்ட வார்த்தைகள் கடவுளிடமிருந்து வருகின்றனவா என்பதை சோதித்துப் பார்க்கிறார்.’—1 யோவான் 4:1, NW.
‘எல்லா வார்த்தையையும் நம்பாதீர்கள்’ என்ற அறிவுரையைப் பின்பற்றுவது எவ்வளவு ஞானமானது! கிறிஸ்தவ சபையில் மற்றவர்களுக்கு அறிவுரை கொடுக்கும் உத்தரவாதமுள்ளவர்கள் முக்கியமாக இதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். வெளிப்படுத்தப்பட்ட விஷயத்தின் முழு விவரத்தையும் அறிவுரை வழங்குபவர் தெரிந்திருக்க வேண்டும். தான் கொடுக்கும் அறிவுரை நியாயமற்றதாகவோ ஒருதலைபட்சமாகவோ இராதபடி நன்றாக செவிகொடுத்துக் கேட்டு, எல்லா பக்கங்களிலுமிருந்து வரும் உண்மைகளை ஒன்றுதிரட்ட வேண்டும்.—நீதிமொழிகள் 18:13; 29:20.
“சிந்திக்கும் திறமையுள்ளவர் பகைக்கப்படுகிறார்”
ஞானிக்கும் மூடனுக்கும் இடையே உள்ள மற்றொரு வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி, இஸ்ரவேலின் அரசர் இவ்வாறு கூறுகிறார்: “ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங் கொண்டு துணிகரமாயிருக்கிறான். முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான் [“சிந்திக்கும் திறமையுள்ளவன் பகைக்கப்படுகிறான்,” NW].”—நீதிமொழிகள் 14:16, 17.
தவறான பாதையில் செல்வதால் வரும் விளைவுகளைக் குறித்து ஞானவான் பயப்படுகிறார். ஆகவே, அவர் ஜாக்கிரதையாக இருக்கிறார், தீமையை விட்டுவிலகுவதற்குத் தனக்கு உதவுகிற எந்த ஆலோசனையையும் அவர் உயர்வாக மதிக்கிறார். மதிகேடனுக்கோ இத்தகைய பயமில்லை. தன்னம்பிக்கையுடன் இருப்பதால், மற்றவர்கள் சொல்லும் அறிவுரையை அகந்தையுடன் புறக்கணித்துவிடுகிறார். எளிதில் கோபாவேசப்படுகிறார், இத்தகைய நபர் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறார். ஆனால் சிந்திக்கும் திறமையுள்ளவர் ஏன் பகைக்கப்படுகிறார்?
‘சிந்திக்கும் திறமைகள்’ என மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொற்றொடருக்கு மூலமொழியில் இரண்டு அர்த்தங்கள் உள்ளன. நேர்மறையான கருத்தில் பார்த்தால், அது பகுத்துணர்வை அல்லது புத்திசாலித்தனத்தைக் குறிக்கலாம். (நீதிமொழிகள் 1:4; 2:11; 3:21) எதிர்மறையான கருத்தில் பார்த்தால், பொல்லாத எண்ணங்களை அல்லது தீய சிந்தையை அது குறிக்கலாம்.—சங்கீதம் 37:7; நீதிமொழிகள் 12:2; 24:8.
“சிந்திக்கும் திறமையுள்ளவர்” என்ற சொற்றொடர் தீய எண்ணத்துடன் திட்டம் தீட்டுகிறவரைக் குறிக்கிறதென்றால், அவர் ஏன் பகைக்கப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல. என்றாலும், பகுத்துணர்வுடையவரும்கூட இத்தகைய குணமில்லாதவர்களால் பகைக்கப்படலாம், அல்லவா? உதாரணமாக, தங்களுடைய மனத்திறன்களைப் பயன்படுத்துகிறவர்களும் ‘இந்த உலகத்தின் பாகமில்லாதிருக்கத்’ தீர்மானிப்பவர்களும் இந்த உலகத்தாரால் பகைக்கப்படுகிறார்கள். (யோவான் 15:19) தங்களுடைய சிந்திக்கும் திறமைகளைப் பயன்படுத்தி மோசமான நடத்தையைத் தவிர்ப்பதற்கு சகாக்களுடைய தீய செல்வாக்கை எதிர்த்து நிற்கிற கிறிஸ்தவ இளைஞர்கள் கேலி செய்யப்படுகிறார்கள். உண்மை வணக்கத்தார் இவ்வுலகத்தாரால் பகைக்கப்படுகிறார்கள், ஏனென்றால் இவ்வுலகம் பிசாசாகிய சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது.—1 யோவான் 5:19.
‘தீயோர் நல்லோருக்கு முன்பு குனிவதுண்டு’
விவேகமுள்ளவர் அனுபவமற்றவர்களிலிருந்து மற்றொரு விதத்திலும் வேறுபடுகிறார். “பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 14:18) பகுத்துணர்வு இல்லாததால், அனுபவமற்றவர்கள் முட்டாள்தனத்தை தேர்ந்தெடுக்கிறார்கள். இதுவே அவர்களுடைய வாழ்க்கையாகிறது. மறுபட்சத்தில், ராஜாவை கிரீடம் கனப்படுத்துவது போல், விவேகமுள்ளவர்களை அறிவு அலங்கரிக்கிறது.
“தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு” என ஞானமுள்ள அரசர் கூறுகிறார். (நீதிமொழிகள் 14:19) வேறு வார்த்தைகளில் சொன்னால், தீயோர் மீது நல்லோர் கடைசியில் வெற்றிசிறப்பர். இன்று கடவுளுடைய ஜனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் அவர்கள் அனுபவித்து வரும் உயர்ந்த வாழ்க்கை முறையையும் சிந்தித்துப் பாருங்கள். யெகோவாவுடைய ஊழியர்கள் அனுபவிக்கும் இந்த ஆசீர்வாதங்களைப் பார்த்து எதிரிகள் சிலர் அடையாளப்பூர்வமான யெகோவாவின் பரலோக ஸ்திரீக்கு முன், அதாவது பூமியிலிருக்கும் ஆவியால் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர் முன், ‘குனியும்’ கட்டாயத்திற்கு ஆளாவார்கள். அந்த எதிரிகள், பூமியிலுள்ள கடவுளுடைய அமைப்பின் பாகம் உண்மையிலேயே பரலோக அமைப்பின் பாகத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதை இப்போது ஒத்துக்கொள்ளாவிட்டாலும் அர்மகெதோனின்போது ஒத்துக்கொள்ள வேண்டிவரும்.—ஏசாயா 60:1, 14; கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 16:14, 16.
‘ஏழைக்கு இரங்குதல்’
மனித இயல்பைப் பற்றி சாலொமோன் இவ்வாறு கூறுகிறார்: “ஏழைகளுக்கு அவர்களுடைய பக்கத்து வீட்டாரும்கூட நண்பர்களாக இருப்பதில்லை. ஆனால் செல்வர்களுக்கோ ஏராளமான நண்பர்கள்.” (நீதிமொழிகள் 14:20, ஈஸி டு ரீட் வர்ஷன்) அபூரண மனிதருடைய விஷயத்தில் இது எவ்வளவு உண்மை! சுயநலத்தின் காரணமாக ஏழைக்குத் தயவு காட்டாமல் செல்வந்தருக்கே அவர்கள் தயவு காட்டுகிறார்கள். செல்வந்தருக்கு அநேக நண்பர்கள் இருந்தாலும், அவர்களுடைய செல்வத்தைப் போலவே அவர்களுடைய நண்பர்களும் நிலையில்லாமல் போய்விடுகிறார்கள். ஆகவே, பணத்தாலோ முகஸ்துதியாலோ நண்பர்களை சம்பாதிப்பதை நாம் தவிர்க்க வேண்டும், அல்லவா?
பணக்காரரை காக்காய்பிடித்து எளியோரை தாழ்வாய் கருதுகிறோம் என்பதை நமது நேர்மையான சுயபரிசோதனை நமக்கு வெளிப்படுத்தும்போது என்ன செய்யலாம்? இப்படி பாரபட்சம் காட்டுவதை பைபிள் கண்டனம் செய்கிறது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அது இவ்வாறு கூறுகிறது: “அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும்; ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பர்.”—நீதிமொழிகள் 14:21, பொது மொழிபெயர்ப்பு.
கஷ்டத்தில் இருப்போருக்கு நாம் கரிசனை காண்பிக்க வேண்டும். (யாக்கோபு 1:27) இதை எப்படி செய்யலாம்? ‘இவ்வுலக செல்வத்தை,’ அதாவது பணம், உணவு, உடை, உறைவிடம் மற்றும் தனிப்பட்ட கவனத்தை, கொடுப்பதன் மூலமே. (1 யோவான் 3:17, பொ.மொ.) இத்தகைய ஆட்களுக்கு உதவி செய்கிறவர் சந்தோஷமுள்ளவர், ஏனென்றால் ‘வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதிலேயே அதிக சந்தோஷம் இருக்கிறது.’—அப்போஸ்தலர் 20:35, NW.
அவர்களுடைய முடிவு என்னவாகும்?
“மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” என்ற நியமம் விவேகமுள்ளவருக்கும் பொருந்துகிறது, மூடனுக்கும் பொருந்துகிறது. (கலாத்தியர் 6:7) விவேகமுள்ளவர் நன்மையானதை செய்கிறார், மூடனோ தீமையை செய்கிறான். ‘தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்கள் அல்லவோ?’ ஆம், அவர்கள் வழிதவறிப் போகிறார்கள் என்பதே பதில். “நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.” (நீதிமொழிகள் 14:22) நன்மை செய்கிறவர்கள் பிறருடைய ஆதரவையும் கடவுளுடைய அன்புள்ள தயவையும் பெறுகிறார்கள்.
வெற்றியை கடின உழைப்புடனும் தோல்வியை வெற்று பேச்சுடனும் சம்பந்தப்படுத்தி சாலொமோன் இவ்வாறு கூறுகிறார்: “கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.” (நீதிமொழிகள் 14:23, பொ.மொ.) இந்த நியமம் நம்முடைய ஆன்மீக முயற்சிகளுக்கு நிச்சயம் பொருந்துகிறது. கிறிஸ்தவ ஊழியத்தில் கடினமாக ஈடுபடும்போது, அநேகருக்கு கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஜீவனை காக்கும் சத்தியத்தை சொல்வதால் வரும் பலன்களைப் பெறுகிறோம். நமக்கு கிடைக்கும் எந்தவொரு தேவராஜ்ய நியமிப்பையும் உண்மையுடன் நிறைவேற்றுவது சந்தோஷத்தையும் திருப்தியையும் தருகிறது.
“ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி; மதிகேடருக்கு அவர்களது மடமைதான் பூமாலை” என நீதிமொழிகள் 14:24 (பொ.மொ.) சொல்கிறது. ஞானிகள் அடைய முயலும் ஞானம் ஓர் ஆஸ்தியாக இருக்கிறது என்பதை இது அர்த்தப்படுத்தலாம். அது அவர்களுக்கு மணிமுடியாக இருக்கிறது, அவர்களை அலங்கரிக்கிறது. மறுபட்சத்தில், மூடரோ மூடத்தனத்தைத்தான் சம்பாதிக்கிறார்கள். “செல்வம் அதை நன்றாக பயன்படுத்துகிறவருக்கு ஆபரணமாக இருக்கிறது, . . . மூடரிடமோ மூடத்தனமே இருக்கிறது” என்றும் இந்த நீதிமொழி அர்த்தப்படுத்தலாமென ஒரு நூல் கூறுகிறது. எதுவாக இருந்தாலும்சரி, மூடனைவிட ஞானி சிறந்த பலன்களைப் பெறுகிறார்.
“மெய்ச் சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான்” என இஸ்ரவேலின் அரசர் கூறுகிறார். (நீதிமொழிகள் 14:25) நீதிவிசாரணை விஷயங்களில் இது நிச்சயமாகவே உண்மையாக இருக்கிறது, என்றாலும் நம்முடைய ஊழியத்தில் அது எப்படி பொருந்துகிறது என்பதை கவனியுங்கள். ராஜ்யத்தைப் பிரசங்கித்து சீஷராக்கும் நம்முடைய வேலையில் கடவுளுடைய வார்த்தைக்குச் சாட்சி கொடுப்பதும் உட்பட்டுள்ளது. அப்படி சாட்சி கொடுப்பது நல்மனமுள்ளோரை பொய் மதத்திலிருந்து மீட்டு அவர்களுடைய உயிரைப் பாதுகாக்கிறது. நமக்கும் நம்முடைய போதனைக்கும் தொடர்ந்து கவனம் செலுத்துவதன் மூலம் நம்மையும் நமக்கு செவிசாய்ப்பவர்களையும் இரட்சித்துக் கொள்வோம். (1 தீமோத்தேயு 4:16) இப்படி தொடர்ந்து செய்கையில், வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் விவேகமாக நடந்துகொள்வதற்கு விழிப்புடன் இருப்போமாக.
[அடிக்குறிப்புகள்]
a நீதிமொழிகள் 14:1-11 பற்றிய விளக்கத்தை நவம்பர் 15, 2004 காவற்கோபுரம், பக்கங்கள் 26-30-ல் காணலாம்.
[பக்கம் 18-ன் படம்]
எது சரி எது தவறு என்பதை கண்டுபிடிப்பதற்கு ஆழமான சத்தியங்களை நாம் ஊக்கமாய் படித்தாக வேண்டும்
[பக்கம் 18-ன் படம்]
பொருளாசைமிக்க வாழ்க்கை பாணி உண்மையிலேயே திருப்தி அளிக்கிறதா?