மனத்தாங்கல்களை எப்படி சரிசெய்துகொள்கிறீர்கள்?
தினமும் வித்தியாசமான ஆட்களோடு பழகுவதே ஆனந்தம்தான். அவர்களிடமிருந்து புது புது விஷயங்களை தெரிந்துகொள்கிறோம். ஆனால், இது சில சமயங்களில் மனஸ்தாபங்களுக்கும் இடங்கொடுக்கிறது. அவற்றில் சில சிறு கீறல்கள் போல் எளிதில் மறந்துவிடக் கூடியவை. ஆனால், சிலவோ பூகம்பமாக வெடிக்கக் கூடியவை. அவை எப்படிப்பட்டவையாய் இருந்தாலும்சரி, அவற்றை நாம் எப்படி தீர்த்துக்கொள்கிறோமோ அதில்தான் நம் மன, உணர்ச்சி, ஆன்மீக நலன் சார்ந்திருக்கிறது.
மனத்தாங்கல்கள் எதுவாக இருந்தாலும் எந்தளவுக்கு சுமுகமாக அவற்றை தீர்த்துக்கொள்கிறோமோ, அந்தளவுக்கு நிம்மதியாக வாழ முடியும். மேலும், மற்றவர்களோடு சமாதானமாகவும் இருக்க முடியும். பூர்வ நீதிமொழி ஒன்று இதைத்தான் சொல்கிறது: “மன அமைதி உடல் நலம் தரும்.”—நீதிமொழிகள் 14:30, பொது மொழிபெயர்ப்பு.
ஆனால், இதற்கு முற்றிலும் எதிரிடையானது இதுவே: ‘தன் கோபத்தை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம் போலிருக்கிறான்.’ (நீதிமொழிகள் 25:28) நமக்கும் பிறருக்கும் கேடுண்டாக்கும் தீய காரியங்களைச் செய்யத் தூண்டும் கெட்ட எண்ணங்களுக்கு இடம் கொடுக்க நாம் யாராவது விரும்புவோமா? கோபத்தில் கொப்பளிக்கும் வார்த்தைகள் அதைத்தான் செய்யும். மற்றவர்களோடு இருக்கும் கருத்து வேறுபாடுகளை நாம் எப்படி தீர்த்துக்கொள்கிறோம் என்பது நம் மனப்பான்மையை பொருத்ததே. எனவே, நாம் நம்முடைய மனப்பான்மையை சோதித்தறிய வேண்டுமென இயேசு தம் மலைப்பிரசங்கத்தில் சொன்னார். (மத்தேயு 7:3-5) மற்றவர்களைப் பற்றி குறை கூறிக்கொண்டே இல்லாமல், வித்தியாசமான கருத்துக்களையும் பின்னணியையும் உடையவர்களோடும் எப்படி நட்பை வளர்த்துக்கொள்ளலாம் என்பதை யோசிக்க வேண்டும்.
மனப்பான்மை
கெட்ட எண்ணங்களும் மனப்பான்மைகளும் நம்மில் எவருக்குமே வரக்கூடியதுதான். இதைப் புரிந்துகொள்வது, மனத்தாங்கல்களைத் தீர்த்துக்கொள்ள உதவும். மனத்தாங்கல்கள் இருப்பதாக நாமே நினைத்துக்கொண்டாலும்சரி அல்லது உண்மையிலேயே இருந்தாலும்சரி, அவற்றை தீர்த்துக்கொள்ள இதுவே முதல் படி. இதைத்தான் பைபிளும் குறிப்பிடுகிறது: நாம் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி” இருக்கிறோம். (ரோமர் 3:23) மேலும், பிரச்சினைக்கு காரணம் எப்போதுமே மற்றவர்களல்ல என்பதைப் பகுத்துணரவும் வேண்டும். இது சம்பந்தமாக, யோனாவின் அனுபவத்தை சற்று ஆராய்வோம்.
யெகோவா சொன்னபடி, யோனா நினிவே பட்டணத்திற்கு செல்கிறார். அந்தப் பட்டணத்தின் ஜனங்கள்மேல் வரப்போகிற கடவுளுடைய நியாயத்தீர்ப்பைப் பற்றி பிரசங்கிக்கிறார். அதைக் கேட்டு ஜனங்கள் மனந்திரும்புகிறார்கள். உண்மையான கடவுள்மீது விசுவாசத்தை வளர்க்கின்றனர். (யோனா 3:5-10) ஜனங்கள் மனந்திரும்பியதால் யெகோவா மன்னிக்கிறார். அதனால் அவர் அந்தப் பட்டணத்தை அழிக்கவில்லை. ஆனால், ‘யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவர் கடுங்கோபங்கொள்கிறார்.’ (யோனா 4:1) யெகோவா இரக்கம் காட்டுவதைக்கண்டு யோனா கோபம் கொள்வது ஆச்சரியமாய் இருக்கிறதல்லவா? யோனா ஏன் யெகோவா மேல் கோபங்கொள்கிறார்? யெகோவா அந்த ஜனங்களை அழிக்காததால், அந்த ஜனங்களின் முன்னிலையில் தனக்கு கெளரவக் குறைச்சல் என தன்னைப் பற்றித்தான் யோனா நினைத்துக்கொண்டிருந்தாரே தவிர யெகோவாவின் இரக்கத்தை அவர் மதிக்க தவறிவிட்டார். யோனா தன் மனப்பான்மையை மாற்றிக் கொள்ளவும் கடவுளுடைய இரக்கத்தின் மகத்தான மதிப்பை புரிந்துகொள்ளவும் யெகோவா சிறந்த ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளச் செய்தார். (யோனா 4:7-11) இந்த சம்பவத்தில், மாற்றிக்கொள்ள வேண்டியது யோனாவின் மனப்பான்மையே தவிர யெகோவாவுடையதல்ல.
சில சந்தர்ப்பங்களில் நம் மனப்பான்மைகளை நாமும் மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறதா? அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு அறிவுறுத்துவதாவது: “கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.” (ரோமர் 12:10) இதன் அர்த்தம் என்ன? ஒரு விதத்தில் சொல்லப்போனால், நாம் ஒருவரோடு ஒருவர் பழகும்போது நியாயமாக இருக்க வேண்டுமென பவுல் நம்மை உற்சாகப்படுத்துகிறார். மேலும், உடன் கிறிஸ்தவர்களை மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்தும்படி நினைப்பூட்டுகிறார். எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் தீர்மானிப்பதற்கான சுதந்திரம் ஒவ்வொருவருக்குமே இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதையே இது அர்த்தப்படுத்துகிறது. மேலுமாக பவுல் நமக்கு நினைப்பூட்டுவதாவது: “அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே.” (கலாத்தியர் 6:5) எனவே, மனத்தாங்கல்கள் பெரிதாகி பெரும்பிளவை ஏற்படுத்துவதற்கு முன்னமே, நம் மனப்பான்மையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டுமா என யோசிப்பதே ஞானமானது! யெகோவாவின் சிந்தையையே நாமும் கொண்டிருப்பதற்கு கடினமாக முயற்சி செய்ய வேண்டும். கடவுளை நேசிப்பாரோடு சமாதானமாக இருக்க பிரயாசப்பட வேண்டும்.—ஏசாயா 55:8, 9.
நம் அணுகுமுறை
இரு பிள்ளைகள் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு எனக்கு உனக்கு என போட்டி போட்டு இழுத்துக்கொண்டிருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இது கைச்சண்டையோடு நின்றுவிடுமா? இல்லை. பிள்ளைகள் ஒன்றையொன்று வாய்க்கு வந்தபடி திட்டியும்கொள்வர். இருவரில் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தாலோ அல்லது வேறே யாராவது இடையில் புகுந்து சமாதானம் பண்ணி வைத்தாலொழிய இந்த சண்டை ஓயாது.
ஆதியாகமம் புத்தகத்திலுள்ள பதிவு இதைத்தான் அறிவுறுத்துகிறது. ஆபிரகாமின் மேய்ப்பர்களுக்கும் அவருடைய உறவினனான லோத்துவின் மேய்ப்பர்களுக்கும் சண்டை மூண்டது. இதை ஆபிரகாம் கேள்விப்பட்டதும், அவர் லோத்துவை அணுகி இப்படி சொல்கிறார்: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.” அவர்களுடைய உறவில் எந்த பங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ஆபிரகாம் உறுதியாய் இருந்தார். இதற்காக அவர் என்ன செய்தார்? வயதில் மூத்தவராகிய ஆபிரகாம், தனக்கு வேண்டிய இடத்தை தேர்ந்தெடுக்கும் உரிமையை லோத்துவுக்கு விட்டுக்கொடுக்க தயாராக இருந்தார். தன் வீட்டாரையும் மந்தையையும் எங்கே கொண்டு செல்ல விரும்புகிறாரோ அந்த இடத்தை லோத்து சொல்லும்படி ஆபிரகாம் கேட்டார். பச்சைப் பசேல் என்றிருந்த சோதோம் கொமோராவை தனக்காக லோத்து தேர்ந்தெடுத்தார். இப்படி, ஆபிரகாமும் லோத்துவும் சமாதானத்தோடே பிரிந்தனர்.—ஆதியாகமம் 13:5-12.
மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்காக, ஆபிரகாமைப்போல் நாமும் விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறோமா? மனத்தாங்கல்களை தீர்த்துக்கொள்ள மிகச் சிறந்த மாதிரியை இந்த பைபிள் பதிவு நமக்கு அளிக்கிறது. ‘நமக்குள் வாக்குவாதமே வேண்டாம்’ என ஆபிரகாம் கெஞ்சி கேட்டுக் கொண்டார். சமாதானமான ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்பதே ஆபிரகாமின் உள்ளான ஆசை. எப்படிப்பட்ட மனஸ்தாபங்களாக இருந்தாலும்சரி, இப்படிப்பட்ட அணுகுமுறை நிச்சயமாகவே சமாதானத்தை கொண்டு வரும். ஆபிரகாம் முடிவாக சொன்ன வார்த்தைகளை கவனியுங்கள்: “நாம் சகோதரர்.” தனிப்பட்ட விருப்பங்களுக்காக அல்லது தற்பெருமைக்காக மதிப்பு மிக்க உறவை நாம் ஏன் முறித்துக்கொள்ள வேண்டும்? எது முக்கியமோ அதற்கு ஆபிரகாம் அதிக கவனம் கொடுத்தார். சுயமரியாதையோடும் கண்ணியத்தோடும் இதைச் செய்தார். அதேசமயம், தன் உறவினனுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பு, மரியாதையையும் கொடுத்தார்.
மனத்தாங்கல்களை தீர்த்துக்கொள்ள சில சமயங்களில், மூன்றாவது நபர் யாராவது தலையிட வேண்டி வரலாம். ஆனால், அதற்கு இடங்கொடுக்காமல் யார் யாருக்குள் பிரச்சினையோ, அவர்களே தீர்த்துக்கொண்டால் மிக நல்லதல்லவா! மனத்தாங்கல்கள் ஏற்படும்போது, சகோதரர்களோடு சமாதானம் பண்ணிக்கொள்வது, அதாவது மன்னிப்பு கேட்பது அவசியமானாலும், முதலாவது நாம் முன்வர வேண்டுமென இயேசு உற்சாகப்படுத்துகிறார்.a (மத்தேயு 5:23, 24) இப்படி செய்ய வேண்டுமானால், மனத்தாழ்மை மிக மிக அவசியம். இதைத்தான் பவுலும் சுட்டிக்காட்டுகிறார்: “நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் . . . மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.” (1 பேதுரு 5:5) உடன் வணக்கத்தாரை எப்படி நடத்துகிறோமோ அதன் அடிப்படையில்தான் கடவுளுடன் நமக்கிருக்கும் உறவும் சார்ந்திருக்கிறது.—1 யோவான் 4:20.
சபையில் சமாதானம் நிலவுவதற்காக நம் உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். யெகோவாவின் சாட்சிகளுடைய சபையின் பாகமாகியிருக்கும் ஆட்களில் பெரும்பாலானோர் கடந்த ஐந்து வருடங்களில் வந்தவர்களே. இவர்கள், கடவுளுடைய உண்மை வணக்கத்தாரின் குடும்ப அங்கத்தினர்கள். இது நம் இருதயங்களை ஆனந்தத்தில் திளைக்க செய்கிறதல்லவா! நாம் எப்படி நடந்துகொள்கிறோமோ, அது இவர்களையும் சபையில் உள்ள மற்றவர்களையும் பாதிக்கும். என்னவிதமான பொழுதுபோக்குகளை, விருப்ப வேலைகளை, சமூக கூட்டுறவுகளை, அல்லது வேலையை தெரிந்தெடுக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இவற்றை வைத்துதான் மற்றவர்கள் நம்மை எடை போடுவர். எனவே, இந்த விஷயங்களில் கவனமாய் இருப்பது நல்லது. நம்முடைய செயல்கள் அல்லது வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, மற்றவர்களுக்கு இடறலாக இருக்குமா?
அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு நினைப்பூட்டுகிறார்: “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:23, 24) சகோதரர்களுக்கிடையே அன்பையும் ஐக்கியத்தையும் பலப்படுத்துவதிலே கிறிஸ்தவர்களாக நாம் அதிக ஆர்வமுடையவர்களாய் இருக்க வேண்டும்.—சங்கீதம் 133:1; யோவான் 13:34, 35.
இதமளிக்கும் வார்த்தைகள்
நாம் பேசும் வார்த்தைகள் நல்ல பலன்களைத் தரவல்லவை. “இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.” (நீதிமொழிகள் 16:24) இந்தப் பழமொழி நூற்றுக்குநூறு உண்மை என்பதை எப்பிராயீம் மனுஷர் எழுப்பிய வாக்குவாதத்தை கிதியோன் சாதுரியமாக சமாளித்தது நிரூபிக்கிறது.
கிதியோனுக்கும் மீதியானியருக்கும் இடையே கடும் போர் நடந்துகொண்டிருந்தது. எனவே, உதவிக்காக எப்பிராயீம் மனுஷரை கிதியோன் அழைத்தார். போர் முடிவடைந்தது. ஆனாலும், எப்பிராயீம் மனுஷர் கிதியோனை குறை கூறினர். சண்டை ஆரம்பித்தபோதே ஏன் தங்களை கூப்பிடவில்லை என கடுமையாக விவாதித்தனர். “அவனோடே பலத்த வாக்குவாதம் பண்ணினார்கள்” என பதிவு சொல்கிறது. அதற்கு கிதியோன் அளித்த பதில்: “நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா? தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம்.” (நியாயாதிபதிகள் 8:1-3) அந்த வாக்குவாதம், படுநாசம் விளைவிக்கும் மாபெரும் கோத்திரப் போராக மாறியிருக்க வேண்டியது. ஆனால், சாந்தப்படுத்தும், இதமான வார்த்தைகளால் கிதியோன் அதை தவிர்த்தார். கர்வமும் தற்பெருமையும் ஒருவேளை எப்பிராயீம் கோத்திரத்தாரை அப்படி பேசச் செய்திருக்கலாம். என்றாலும், சமாதானமான ஒரு முடிவை கொண்டுவர, அவர்களுடைய அந்தப் போக்கு கிதியோனை எந்தவிதத்திலும் தடை செய்யவில்லை. நாமும் அதேமாதிரியை பின்பற்ற முடியுமா?
ஒருவருடைய மனசுக்குள் குமுறிக்கொண்டிருக்கும் கோபம், எரிமலையாய் கொப்பளிக்கும்போது அது குரோதச் செயல்களாய் வெளிவருகின்றன. எனவே, மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கும் இடங்கொடுங்கள். அவர்களுடைய கருத்துக்களுக்கும் மதிப்பு கொடுங்கள். நம் செயல் எவ்விதத்திலாவது அவர்களுடைய கோபத்தை கிளறிவிட்டிருக்கிறதா? அப்படியானால், சிக்கலையோ அல்லது மனஸ்தாபத்தையோ உருவாக்கியதில் நமக்கும் பங்கிருக்கிறதென ஒத்துக்கொள்கிறோமா? பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கியதற்காக வருத்தம் தெரிவிக்கிறோமா? யோசித்து, நிதானமாக பேசும் வார்த்தைகள் பிளவுபட்ட உறவை சரிசெய்ய உதவும். (யாக்கோபு 3:4) மனக்கலக்கத்தில் தவிக்கும் சிலருக்கு கனிவான, ஆதரவான வார்த்தைகளே போதும். பைபிள் சொல்லுகிறபடி “விறகில்லாமல் நெருப்பு அவியும்.” (நீதிமொழிகள் 26:20) நல்ல நோக்கத்தோடு, யோசித்து, கவனமாக சொல்லும் வார்த்தைகள் ‘உக்கிரத்தை மாற்றும்.’ காயத்திற்கு போடும் மருந்தாக இருக்கும்.—நீதிமொழிகள் 15:1.
அப்போஸ்தலனாகிய பவுலும் இதைத்தான் வலியுறுத்துகிறார்: “கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.” (ரோமர் 12:18) மற்றவர்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது நம் கையில் இல்லை. ஆனால், சமாதானத்தை அதிகரிக்க நம்மாலான எல்லாவற்றையும் செய்யலாம். நம்முடைய அல்லது மற்றவர்களுடைய அபூரணங்களைப் பெரிதுபடுத்திக்கொண்டிராமல், பலன்தரும் பைபிள் நியமங்களை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தலாம். யெகோவா போதிக்கும் முறையில் நம் மனஸ்தாபங்களைத் தீர்த்துக்கொண்டால், நித்திய சந்தோஷத்தையும் சமாதானத்தையும் பெறுவோம்.—ஏசாயா 48:17.
[அடிக்குறிப்புகள்]
a அக்டோபர் 15, 1999, காவற்கோபுரம் இதழில் வெளிவந்துள்ள “மனசார மன்னியுங்கள்” மற்றும் “உங்கள் சகோதரரை ஆதாயப்படுத்திக் கொள்ளலாம்” எனும் கட்டுரைகளை பார்க்கவும்.
[பக்கம் 24-ன் படம்]
எந்த விஷயமாக இருந்தாலும் எல்லாம் நாம் சொல்கிறபடிதான் நடக்க வேண்டுமென சாதிக்கிறோமா?
[பக்கம் 25-ன் படம்]
மனஸ்தாபத்தை தீர்க்க விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை காட்டியதில் ஆபிரகாம் மிகச் சிறந்த முன்மாதிரி