யெகோவாவின் வார்த்தை ஜீவனுள்ளது
பிரசங்கி புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
“ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான்” என கோத்திர பிதாவாகிய யோபு குறிப்பிட்டார். (யோபு 14:1) நம்முடைய குறுகிய வாழ்நாள் காலத்தில் பயனற்ற காரியங்களிலும் முயற்சிகளிலும் ஈடுபட்டு, வாழ்க்கையை வீணடிக்காதிருப்பது எவ்வளவு முக்கியம்! அப்படியானால், என்னென்ன காரியங்களுக்காக நம்முடைய நேரத்தையும் சக்தியையும் வளங்களையும் செலவிட வேண்டும்? என்னென்ன காரியங்களைத் தவிர்க்க வேண்டும்? பைபிளில் பிரசங்கி புத்தகத்திலுள்ள ஞானமான வார்த்தைகள் இவ்விஷயத்தில் சிறந்த வழிநடத்துதலைத் தருகின்றன. இவற்றிலுள்ள தகவல் ‘இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுப்பதாய்’ இருக்கிறது; அர்த்தமுள்ள வாழ்க்கை வாழவும் நமக்கு உதவுகிறது.—எபிரெயர் 4:12.
ஞானத்திற்குப் பெயர்போனவரும் பூர்வ இஸ்ரவேலின் ராஜாவுமான சாலொமோனே இப்புத்தகத்தை எழுதியவர். வாழ்க்கையில் உண்மையிலேயே எது முக்கியமானது, எது முக்கியமற்றது என்பதற்குரிய நடைமுறை ஆலோசனைகள் இப்புத்தகத்தில் உள்ளன. தான் மேற்கொண்ட சில கட்டட பணிகளைப் பற்றி சாலொமோன் இதில் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பணிகள் முடிந்த பிறகு, ஆனால் மெய் வணக்கத்தை விட்டு அவர் விலகுவதற்கு முன்பு இப்புத்தகத்தை அவர் எழுதியிருக்க வேண்டும். (நெகேமியா 13:26) இது, பொ.ச.மு. 1000-க்கு முன், அவருடைய 40 வருட ஆட்சியின் முடிவில் எழுதப்பட்டதைக் காட்டுகிறது.
எது மாயை?
“எல்லாம் மாயை” என சொல்கிறார் பிரசங்கி. “சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன?” என்று அவர் கேட்கிறார். (பிரசங்கி 1:2, 3) “மாயை,” “சூரியனுக்குக் கீழே” என்ற வார்த்தைகள் பிரசங்கி புத்தகத்தில் அடிக்கடி வருகின்றன. “மாயை” என்பதற்கான எபிரெய வார்த்தையின் நேர்ப்பொருள் “மூச்சு” அல்லது “ஆவி” என்பதாகும். இது, விஷயம் இல்லாததை, நிலைக்காததை, நீடித்த பயன் இல்லாததைக் குறிக்கிறது. “சூரியனுக்குக் கீழே” என்ற வார்த்தை “இந்தப் பூமியில்” அல்லது “இந்த உலகத்தில்” என்ற அர்த்தத்தைத் தருகிறது. ஆகவே எல்லாம், அதாவது கடவுளுடைய விருப்பத்திற்கு எதிரான மனிதனுடைய முயற்சிகள் எல்லாம் மாயையே.
“நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; . . . செவிகொடுக்கச் சேர்வதே நலம்” என சாலொமோன் கூறுகிறார். (பிரசங்கி 5:1) யெகோவாவுடைய உண்மை வணக்கத்தில் ஈடுபடுவது மாயை அல்ல. சொல்லப்போனால், அவரோடுள்ள நம் பந்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ்வதற்கு முக்கிய அம்சமாகத் திகழ்கிறது.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
1:4-10—இயற்கை சுழற்சிகள் எவ்விதத்தில் ‘வருத்தத்தினால் நிறைந்திருக்கின்றன,’ அதாவது நம்மை சலிப்படைய செய்கின்றன? பூமியில் உயிர் வாழ்வதற்குத் தேவையான மூன்று முக்கிய செயல்பாடுகளைப் பற்றி மட்டுமே பிரசங்கி குறிப்பிடுகிறார். அவையாவன: சூரியனின் இயக்கம், காற்று வீசும் விதம், நீர் சுழற்சி. உண்மையில், எக்கச்சக்கமான இயற்கை சுழற்சிகள் உள்ளன, அவை மிகவும் சிக்கலானவை. அவற்றை ஆராய்வதற்காக ஒருவர் தன் ஆயுட்காலம் முழுவதையும் செலவழித்தாலும் முற்றிலும் புரிந்துகொள்ள முடியாது. அப்படி ஆராய்வது உண்மையிலேயே சலிப்படைய செய்வதாய் இருக்கும். முடிவே இல்லாத இந்தச் சுழற்சிகளோடு நம்முடைய குறுகிய வாழ்நாளை ஒப்பிடுவதும் சலிப்படைய செய்கிறது. புதுப்புது கண்டுபிடிப்புகளுக்கு எடுக்கும் முயற்சிகளும்கூட சலிப்படைய செய்கின்றன. புதிய கண்டுபிடிப்புகள் என எதுவுமே இல்லை, எல்லாமே மெய்க் கடவுள் வகுத்திருக்கிற, படைப்பில் அவர் ஏற்கெனவே பயன்படுத்தியிருக்கிற நியமங்கள்தான்.
2:1, 2—நகைப்பைக் குறித்து “பைத்தியம்” என்று சொல்லப்படுவதேன்? நகைப்பு நம் கஷ்டங்களை அப்போதைக்கு மறக்கடிக்கலாம். மகிழ்ச்சி நம் மனபாரத்தைக் குறைக்கலாம். என்றாலும், அது நம் கஷ்டங்களை நீக்கிவிடுவதில்லை. ஆகவேதான், நகைப்பின் மூலம் சந்தோஷத்தை நாடுவது “பைத்தியம்” என சொல்லப்படுகிறது.
3:11—கடவுள் எவற்றை “அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்”? சரியான காலத்தில் கடவுள் “நேர்த்தியாக,” அதாவது பொருத்தமாகவும் சிறப்பாகவும் செய்துள்ள காரியங்களாவன: ஆதாம் ஏவாளின் படைப்பு, வானவில் உடன்படிக்கை, ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கை, தாவீதோடு செய்த உடன்படிக்கை, மேசியாவின் வருகை, கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக இயேசு கிறிஸ்து முடிசூட்டப்படுதல். என்றாலும், சீக்கிரத்தில் மற்றொன்றையும் யெகோவா “நேர்த்தியாகச்” செய்வார். அதுதான் நீதியான புதிய உலகம்; அதை தக்க சமயத்தில் அவர் நிறைவேற்றுவார் என நம்பிக்கையோடு இருக்கலாம்.—2 பேதுரு 3:13.
5:9—“பூமியில் விளையும் பலன் யாவருக்குமுரியது” என்பதன் அர்த்தம் என்ன? பூமியில் குடியிருக்கிற அனைவரும் ‘பூமியில் விளையும் பலனை’ சார்ந்திருக்கிறார்கள். எந்த ராஜாவும் அதற்கு விதிவிலக்கல்ல. தன் நிலத்தின் பலனைப் பெற ராஜா அந்த நிலத்தில் பாடுபட்டு பயிர்செய்கிற வேலையாட்களையே நம்பியிருக்கிறார்.
நமக்குப் பாடம்:
1:15. இன்று நடக்கிற கொடுமைகளையும் அநீதிகளையும் சரிசெய்வதற்காக நம்முடைய நேரத்தையும் சக்தியையும் செலவிடுவது வீண். கடவுளுடைய ராஜ்யத்தால் மட்டுமே துன்மார்க்கத்தை ஒழித்துக்கட்ட முடியும்.—தானியேல் 2:44.
2:4-11. கட்டடக் கலை, தோட்டக் கலை, இசைக் கலை போன்றவற்றில் ஈடுபடுவதும் சொர்க்கபோகமாக வாழ்வதும் ‘காற்றைப் பிடிக்க முயலுவதாயிருக்கிறது.’ (NW) ஏனெனில், அவை வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தையும் தருவதில்லை, நிரந்தர சந்தோஷத்தையும் அளிப்பதில்லை.
2:12-16. மனித ஞானமானது மதியீனத்தைவிட மேலானதாய் இருப்பதற்குக் காரணம், அது சில பிரச்சினைகளைத் தீர்க்க உதவுகிறது. ஆனால், மரணம் ஏற்படுகையில் மனித ஞானத்தால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. இத்தகைய ஞானத்தின் காரணமாக, ஒருவர் பேரும் புகழும் சம்பாதித்திருந்தாலும்கூட, மரித்த பின் அவர் சீக்கிரத்திலேயே மறக்கப்பட்டுவிடுகிறார்.
2:24; 3:12, 13, 22. நம் உழைப்பின் பலனை அனுபவிப்பதில் தவறில்லை.
2:26. “தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு” தரும் தெய்வீக ஞானம் சந்தோஷத்தை அளிக்கிறது. கடவுளோடு நல்லுறவு வைத்துக்கொள்ளாமல் இந்த ஞானத்தைப் பெறவே முடியாது.
3:16, 17. எல்லா சந்தர்ப்பத்திலும் நியாயம் கிடைக்குமென எதிர்பார்ப்பது நடைமுறையானதல்ல. இன்று உலகில் நடப்பவற்றைக் கண்டு கவலைப்படுவதற்குப் பதிலாக, காரியங்களை யெகோவா சரிசெய்வதற்காகக் காத்திருக்க வேண்டும்.
4:4. கைத்திறனைப் பயன்படுத்தி கடுமையாக உழைக்கும்போது திருப்தி கிடைக்கிறது. ஆனால், மற்றவர்களை விஞ்சிவிட வேண்டுமென்று கடுமையாக உழைப்பது போட்டி மனப்பான்மையையே தூண்டிவிடுகிறது; அதோடு, வன்மத்தையும் பொறாமையையும்கூட வளர்த்துவிடலாம். நல்ல எண்ணத்தோடு கிறிஸ்தவ ஊழியத்தில் நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
4:7-12. சொத்துசுகங்களைவிட மனித உறவுகளே மிக முக்கியமானவை; செல்வத்தைச் சேர்ப்பதற்காக அந்த உறவுகளை விட்டுவிடக் கூடாது.
4:13. வயதும் பதவியும் எப்போதுமே மரியாதையைப் பெற்றுத் தராது. பொறுப்புள்ள ஸ்தானங்களில் உள்ளவர்கள் ஞானமாக நடக்க வேண்டும்.
4:15, 16. ‘ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளைக்கு’ ஆரம்பத்தில் ‘எல்லா ஜனங்களுடைய’ ஆதரவும் இருக்கும்; ஆனால், பிற்பாடு ‘இவர்மேல் அவர்கள் பிரியம் வைக்காமற்போவார்கள்.’ ஆம், பேரும் புகழும் நிரந்தரமற்றவை.
5:2. நம்முடைய ஜெபங்களில் அதிக வார்த்தைகளைப் பயன்படுத்த அவசியமில்லை, ஆனால், அவை ஆழ்ந்து சிந்தித்து, பயபக்தியுடன் செய்யப்படுபவையாய் இருக்க வேண்டும்.
5:3-7. பொருளுடைமைகளைப் பற்றி சதா சிந்தித்துக்கொண்டிருப்பது, தன்னல ஆசைகளைத் திருப்தி செய்துகொள்வதன் பேரில் பகல்கனவு காண வைத்துவிடுகிறது. இது மன அமைதியையும் இரவு தூக்கத்தையும் பறித்துவிட்டு, நம்மைக் கனவுலகிற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. அதிகமான வார்த்தைகளைப் பேசுவது ஒருவரை மற்றவர்களுக்கு முன்பாக முட்டாளாக்கிவிடும்; அதோடு, அவசரப்பட்டு தேவனுக்குப் பொருத்தனை செய்யவும் வைத்துவிடும். ‘தேவனுக்குப் பயந்திருப்பது’ இவை இரண்டிலிருந்தும் நம்மைத் தடுக்கிறது.
6:1-9. செல்வமும், மகிமையும், தீர்க்காயுசும், அதோடு பெரிய குடும்பமும்கூட இருந்து, இவை எல்லாவற்றையும் அனுபவிக்க சூழ்நிலைகள் இடங்கொடுக்காவிட்டால் அவற்றால் என்ன பயன்? “ஆசையானது அலைந்து தேடுகிறதைப் பார்க்கிலும்,” அதாவது திருப்திப்படுத்த முடியாத ஆசைகளைத் திருப்திப்படுத்த முயலுவதைப் பார்க்கிலும், “கண் கண்டதே நலம்,” அதாவது, நிஜத்தை ஏற்றுக்கொள்வதே நல்லது. அப்படியென்றால், ‘உண்ணவும் உடுக்கவும் உண்டாயிருந்தால் போதும்’ என்ற எண்ணத்தோடு இருப்பதே சிறந்த வாழ்க்கைப் போக்காகும்; அது, வாழ்க்கையில் பயனுள்ள காரியங்களை அனுபவித்து, யெகோவாவோடு நெருங்கிய உறவை வைத்துக்கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பதையும் உட்படுத்துகிறது.—1 தீமோத்தேயு 6:8.
ஞானிகளுக்கு ஆலோசனை
நம்முடைய நற்பெயரை எப்படிக் காத்துக்கொள்ளலாம்? மனித ஆட்சியாளர்களைக் குறித்ததிலும் நாம் காண்கிற அநீதிகளைக் குறித்ததிலும் நம் மனப்பான்மை எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும்? மரித்தவர்கள் உணர்வற்றவர்களாய் இருப்பதால், இப்போது நம்முடைய வாழ்க்கையை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? இளைஞர்கள் தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் எந்த விதத்தில் ஞானமாகப் பயன்படுத்தலாம்? இப்புத்தகத்தின் 7 முதல் 12 அதிகாரங்களில், இக்கேள்விகளின் பேரிலும் இன்னும் பிற விஷயங்களின் பேரிலும் சிறந்த ஆலோசனைகளை பிரசங்கி வழங்குகிறார்.
வேதப்பூர்வ கேள்விகளுக்குப் பதில்கள்:
7:19—ஞானம் எப்படி ‘பத்து அதிபதிகளைப் பார்க்கிலும் அதிக பெலமுள்ளது’? பைபிளில் பத்து என்ற எண் முழுமையைக் குறிக்க அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஞானம் தரும் பாதுகாப்பின் மதிப்பு, நகரத்தைக் காவல் காக்கிற முழு படைவீரர்களைவிடவும் பெரியது என சாலொமோன் சொல்கிறார்.
10:2—ஒருவருடைய இருதயம் ‘வலது கையில்’ அல்லது ‘இடது கையில்’ இருக்கிறது என்பதன் அர்த்தம் என்ன? பெரும்பாலும், வலது கை என்பது ஆதரவான நிலையைக் குறிக்கிறது. ஆகவே, ஒருவருடைய இருதயம் வலது கையில் இருப்பது, நல்லது செய்யும்படி அவருடைய இருதயம் தூண்டுவதை அர்த்தப்படுத்துகிறது. தவறான வழியில் செல்ல இது ஒருவரைத் தூண்டுமானால், அவருடைய இருதயம் இடது கையில் இருக்கிறது என்று அர்த்தம்.
10:15 (NW)—‘மூடரின் கடின உழைப்பு அவர்களை இளைக்கப்பண்ணுவது’ எப்படி? ஒருவருக்குச் சரிவர நிதானிக்கத் தெரியாவிட்டால், அவருடைய கடின உழைப்பினால் எவ்வித பலனும் கிடைக்காது. அது அவருக்குத் திருப்தியையும் அளிக்காது. அத்தகைய அயராத உழைப்பு அவருக்குக் களைப்பையே ஏற்படுத்தும்.
11:7, 8—“வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே” என்பதன் அர்த்தம் என்ன? வெளிச்சமும் சூரியனும் வாழ்க்கையை இனிமையாக்குகின்றன. நாம் உயிரோடிருப்பது நல்லது என்றும் இருளின் நாட்கள், அதாவது முதுமையின் நாட்கள், நம் இளமைத் துடிப்பை பறித்துவிடுவதற்கு முன் வாழ்க்கையை ‘மகிழ்ந்து’ அனுபவிக்க வேண்டும் என்றும் சாலொமோன் குறிப்பிடுகிறார்.
11:10—“இளவயதும் வாலிபமும்” மாயை என சொல்லப்படுவதேன்? நீராவியைப்போல இளமைத் துடிப்பின் நாட்கள் சீக்கிரத்தில் மறைந்துவிடுகின்றன. ஆகவே, இவற்றை சரியாகப் பயன்படுத்தாவிட்டால், இவை மாயையாக, அதாவது வீணானவையாக இருக்கும்.
நமக்குப் பாடம்:
7:6. பொருத்தமற்ற சமயத்தில் நகைப்பது எரிச்சலூட்டுவதாயும் பானையின் கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போல் பயனற்றதாயும் இருக்கிறது. அத்தகைய நகைப்பை நாம் தவிர்க்க வேண்டும்.
7:21, 22. மற்றவர்கள் நம்மைப் பற்றி சொல்வதைக் கேட்டு நாம் அளவுக்குமீறி கவலைப்படக் கூடாது.
8:2, 3; 10:4. முதலாளியோ, அதிகாரியோ நம்மைக் கண்டிக்கையில் அல்லது நம்மைத் திருத்துகையில் அமைதியாக இருப்பது ஞானமானது. அவருடைய ‘சமூகத்தைவிட்டு விலகத் துரிதப்படுவதைவிட,’ அதாவது அவசரப்பட்டு ராஜினாமா செய்துவிடுவதைவிட அமைதியாக இருப்பதே சிறந்தது.
8:8; 9:5-10, 12. வலையில் மீன் பிடிபடுவதுபோல அல்லது கண்ணியில் பறவைகள் சிக்கிவிடுவதுபோல நம் வாழ்க்கையும் எதிர்பாராத விதமாய் முடிவடையலாம். மரிக்கையில் ஒருவரின் உயிர் சக்தி பிரிவதை யாராலும் தடுக்க முடியாது; மனிதகுலத்தோடு மரணம் தொடுக்கிற போரிலிருந்து யாராலும் விடுபடவும் முடியாது. ஆகவே, நம்முடைய நேரத்தை வீணடித்துவிடக் கூடாது. நாம் உயிருக்கு மதிப்பு கொடுக்கும்படியும் அதை பயனுள்ள விதத்தில் அனுபவித்து மகிழும்படியும் யெகோவா விரும்புகிறார். இதைச் செய்வதற்கு, வாழ்க்கையில் யெகோவாவின் சேவைக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும்.
8:16, 17. மனிதகுலத்திற்குக் கடவுள் செய்துள்ள எல்லாவற்றையும், மனிதர் மத்தியில் நடக்கும்படி அவர் அனுமதித்துள்ள எல்லாவற்றையும் பற்றி நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது; அதற்காக எவ்வளவுதான் தூக்கத்தைத் தியாகம் செய்தாலும்கூட புரிந்துகொள்ள முடியாது. நடக்கிற அநியாயங்களை எல்லாம் நினைத்து வருந்துவது நம் சந்தோஷத்தைத்தான் பறிக்கும்.
9:16-18. பெரும்பாலோர் ஞானத்தை உயர்வாகக் கருதாவிட்டாலும்கூட நாம் அதை மதிப்புள்ளதாகவே கருத வேண்டும். மூடன் எவ்வளவு உரக்கக் கத்தினாலும் அமைதியான முறையில் ஞானிகள் சொல்லும் வார்த்தைகளே விரும்பி கேட்கப்படுகின்றன.
10:1. நம் சொல்லையும் செயலையும் குறித்ததில் நாம் கவனமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். மதிப்புக்குரிய ஒருவர் சற்றே புத்தியின்றி நடந்துகொண்டால் போதும் அவருடைய பெயர் கெட்டுவிடுகிறது. உதாரணமாக, ஒரேயொரு தடவை சட்டென கோபப்படுவது, ஒரேயொரு முறை அளவுக்குமீறி குடிப்பது, ஒரேயொரு சமயம் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவது போன்றவை அதற்குக் காரணமாகி விடலாம்.
10:5-11. தகுதியில்லாத ஒருவன் உயர்ந்த ஸ்தானத்தில் இருப்பது பொறாமைப்படத்தக்க விஷயம் அல்ல. ஒரு சிறிய வேலையைச் செய்வதற்குக்கூட திறமையில்லாதிருப்பது தீய விளைவுகளையே ஏற்படுத்தும். மாறாக, ‘ஞானத்தைப் பயன்படுத்தி ஒரு காரியத்தை செவ்வையாய்ச் செய்ய’ திறமையை வளர்த்துக்கொள்வதுதான் நல்லது. அப்படியானால், பிரசங்க வேலையிலும் சீஷராக்கும் வேலையிலும் திறம்பட்டவர்களாக ஆவது எவ்வளவு முக்கியம்!
11:1, 2. நாம் முழு இருதயத்தோடு தாராள குணத்தைக் காட்ட பழகிக்கொள்ள வேண்டும். அப்போது மற்றவர்கள் நம்மிடமும் தாராள குணத்தைக் காட்டுவார்கள்.—லூக்கா 6:38.
11:3-6. வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாரா சம்பவங்கள் நம்மை தடுமாற வைத்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
11:9; 12:1-7. இளைஞர்கள் யெகோவாவுக்கு முன் பொறுப்புள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, தங்களுடைய இளமைக் காலம் முடிந்துவிடுவதற்கு முன் தங்களுடைய நேரத்தையும் சக்தியையும் கடவுளுடைய சேவையில் அவர்கள் பயன்படுத்த வேண்டும்.
நம்மை வழிநடத்த “ஞானிகளின் வாக்கியங்கள்”
“இதமான வார்த்தைகளை” தேடிக் கண்டுபிடித்து எழுத பிரசங்கி வகைதேடினார்; அவ்வார்த்தைகளை நாம் எப்படிக் கருத வேண்டும்? மனித ஞானத்தை வெளிப்படுத்துகிற ‘அநேக புஸ்தகங்களை’ போலின்றி, “ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத் தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.” (பிரசங்கி 12:10-12) ‘ஒரே மேய்ப்பரான’ யெகோவா தந்துள்ள ஞானமான வார்த்தைகள் ‘அறையப்பட்ட ஆணிகள்போல’ நம் வாழ்க்கையை உறுதிப்படுத்துகின்றன.
பிரசங்கி புத்தகத்திலுள்ள ஞானமான ஆலோசனைகளைக் கடைப்பிடிப்பது திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ நமக்கு உதவுகிறது. அதுமட்டுமல்ல, ‘தேவனுக்கு முன்பாகப் பயந்திருப்பவர்கள் நன்றாயிருப்பார்கள்’ என நமக்கு உறுதியளிக்கப்படுகிறது. அப்படியானால், ‘தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள’ வேண்டுமென்ற தீர்மானத்தில் நாம் உறுதியாய் இருப்போமாக.—பிரசங்கி 8:12; 12:13.
[பக்கம் 15-ன் படம்]
கடவுள் நேர்த்தியாகச் செய்துள்ளவற்றில் ஒன்று தக்க சமயத்தில் நிறைவேறும்
[பக்கம் 16-ன் படம்]
உணவு, தண்ணீர், நம் உழைப்பின் பலனைக் காண்பது என இவையாவும் கடவுள் தந்த பரிசுகள்