காலமெல்லாம் அன்பு காட்ட முடியுமா?
‘நேசத்தின் தழல் அக்கினித் தழலும் அதின் ஜூவாலை கடும் ஜூவாலையுமாயிருக்கிறது [‘யாவின் ஜூவாலையுமாயிருக்கிறது,’ NW].’—உன். 8:6.
1, 2. உன்னதப்பாட்டு புத்தகம் யாருக்கெல்லாம் ரொம்ப பிரயோஜனமாக இருக்கும்? (ஆரம்பப் படம்)
இதை கொஞ்சம் கற்பனை செய்துப் பாருங்கள்: கல்யாண மேடையில் மணமகனும் மணப்பெண்ணும் நிற்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறார்கள், அவர்களுடைய கண்களில் காதல் தெரிகிறது. இதையெல்லாம் கல்யாணத்திற்கு வந்தவர்கள் பார்த்து ரசித்துக்கொண்டு இருக்கிறார்கள். கல்யாண பேச்சை கொடுத்த சகோதரர், இந்த புதுமண ஜோடி அன்பாக கைகோர்த்து நிற்பதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார். அவர் மனதில் ஒரு பக்கம், இன்னொரு யோசனையும் ஓடுகிறது. அதாவது, ‘அவங்களுக்குள்ள இருக்கிற அன்பு, நாளாக நாளாக அதிகமாகுமா இல்ல கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு அப்படியே மறைஞ்சு போயிடுமா?’ கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பை காட்டினால் வாழ்க்கையில் சூறாவளி போன்ற பிரச்சினைகள் வந்தாலும் அவர்களுடைய பந்தம் உறுதியாக நிலைத்திருக்கும். ஆனால், கல்யாணம் ஆன நிறையப் பேர் கொஞ்ச நாட்களிலேயே பிரிந்துவிடுகிறார்கள். இதைப் பார்க்கும்போது, ‘கணவன்-மனைவிக்குள்ள இருக்கிற அன்பு கடைசி வரை நீடிக்குமா’ என்று நீங்கள் ஒருவேளை நினைக்கலாம்.
2 சாலொமோன் ராஜா வாழ்ந்த காலத்திலும் உண்மையான அன்பு காட்டியவர்களை பார்ப்பது ரொம்ப அபூர்வமாக இருந்தது. அதனால்தான், “நான் ஆயிரத்தில் ஒருவனை நல்லவனாக கண்டுபிடித்தேன். ஆனாலும் ஒரு நல்ல பெண்ணைக் கூடக் கண்டுபிடிக்க முடியவில்லை. தேவன் மனிதனை நல்லவனாகவே படைத்தார். ஆனால் ஜனங்கள் கெட்டுப்போக பல வழிகளைக் கண்டுபிடித்தனர். இதுவும் நான் கற்றுக்கொண்ட இன்னொரு பாடமாகும்” என்று சாலொமோன் எழுதினார். (பிர. 7:26-29, ஈஸி டு ரீட் வர்ஷன்) அவர் வாழ்ந்த காலத்தில், பொய்க் கடவுளை வணங்கின நிறைய பெண்கள் இஸ்ரவேலில் இருந்தார்கள். அவர்கள் ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்ததால் இஸ்ரவேல் மக்களில் நிறையப் பேர் அவர்களைப் போலவே ஒழுக்கங்கெட்டவர்களாக மாறிவிட்டார்கள்.a (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அதனால்தான் சாலொமோன் அப்படி எழுதினார். இதை எழுதுவதற்கு சுமார் 20 வருடங்களுக்கு முன்பு உண்மையான அன்பை காட்டிய ஒரு காதல் ஜோடியைப் பற்றி ஒரு கவிதை எழுதினார். அதுதான் பைபிளில் இருக்கிற உன்னதப்பாட்டு என்ற புத்தகம். இந்த உன்னதப்பாட்டில் இருந்து, உண்மையான அன்பு என்றால் என்ன, அதை நாம் எப்படி காட்டலாம் என்று தெரிந்துகொள்ளப் போகிறோம். நீங்கள் கல்யாணம் ஆனவராக இருந்தாலும் சரி இல்லையென்றாலும் சரி, இது உங்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருக்கும்.
உண்மையான அன்பை காட்ட முடியும்
3. ஒரு ஆணும் பெண்ணும் உண்மையான அன்பை காட்ட முடியும் என்று எப்படி சொல்லலாம்?
3 உன்னதப்பாட்டு 8:6-ஐ வாசியுங்கள். அன்பை, “கடும் ஜூவாலை, [அதாவது, யாவின் ஜூவாலை, NW]” என்று இந்த பாட்டு சொல்கிறது. அதன் அர்த்தம் என்ன? யெகோவாவிடம் இருக்கும் மிக முக்கியமான குணமே அன்புதான். அவரைப் போலவே நம்மையும் படைத்திருப்பதால், நம்மாலும் மற்றவர்கள்மீது அன்பு காட்ட முடிகிறது. (ஆதி. 1:26, 27) ஆதாமை படைத்ததற்குப் பிறகு, யெகோவா ஏவாளை படைத்தார். அழகான ஏவாளை பார்த்ததும், ஆதாமுக்கு அவள்மீது காதல் வந்தது. அவளைப் பார்த்த சந்தோஷத்தில், ஒரு காதல் பாட்டை பாடினார். ஆதாமுடைய எலும்பில் இருந்துதான் யெகோவா ஏவாளை படைத்தார். அதனால், ஏவாளும் ஆதாமை ரொம்ப நேசித்தாள். (ஆதி. 2:21-23) ஒரு ஆணையும் பெண்ணையும் படைக்கும்போதே அவர்கள் ஒருவரையொருவர் உண்மையாக நேசிக்கும் விதத்தில், காலமெல்லாம் அன்பு காட்டும் விதத்தில்தான் யெகோவா படைத்திருக்கிறார்.
4, 5. உன்னதப்பாட்டின் கதை என்ன?
4 ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் உண்மையாக நேசிக்க முடியும் என்பதை உன்னதப்பாட்டு காட்டுகிறது. சூலேம் (அல்லது, சூனேம்) கிராமத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணுக்கும் ஆடு மேய்க்கிற ஒரு ஆணுக்கும் மலர்ந்த காதல் கதைதான் இது. இந்தப் பெண் அவளுடைய அண்ணன்களின் திராட்ச தோட்டத்தில் வேலை செய்துகொண்டு இருந்தாள். அந்த தோட்டத்திற்குப் பக்கத்தில்தான் சாலொமோன் ராஜாவும் அவருடைய படைவீரர்களும் கூடாரம்போட்டு இருந்தார்கள். சாலொமோன் ராஜா, அவளைப் பார்த்ததும் அவள் அழகில் மயங்கி காதல் வசப்படுகிறார். வேலைக்காரர்களை அனுப்பி அந்த பெண்ணை அவருடைய கூடாரத்திற்கு அழைத்து வர சொல்கிறார். அவளுடைய அழகை வர்ணித்து கவிதை சொல்கிறார்; அவளுக்கு நிறையப் பரிசு பொருட்களை தருகிறார். அந்தப் பெண்ணுடைய மனதை கவருவதற்காக சாலொமோன் என்ன செய்தும், அவள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தான் காதலிக்கிற மேய்ப்பனோடுதான் வாழ்வேன் என்று உறுதியாக சொல்கிறாள். (உன். 1:4-14) அவளை தேடி அவளுடைய காதலன் அந்த இடத்திற்கு வருகிறான். அவர்கள் இரண்டு பேரும் சந்தித்தபோது, அழகான வார்த்தைகளால் அவர்களுடைய காதலை வெளிப்படுத்துகிறார்கள்.—உன். 1:15-17.
5 சாலொமோன் எருசலேமுக்கு திரும்பி போகும்போது அந்த பெண்ணையும் கூடவே அழைத்துக்கொண்டு போகிறார். அந்த காதலன் அவளை பின்தொடர்ந்து போகிறான். (உன். 4:1-5, 8, 9) சாலொமோன் ராஜாவின் ஆசை வார்த்தைகள் எதுவும் அந்த பெண்ணின் மனதை மாற்றவில்லை. என்னதான் பரிசுகளை அள்ளிக் கொடுத்தாலும், அந்த மேய்ப்பன்மீது அவளுக்கு இருந்த காதல் கொஞ்சமும் குறையவில்லை. (உன். 6:4-7; 7:1-10) அதனால், அந்தப் பெண்ணை அவளுடைய சொந்த ஊருக்கே சாலொமோன் அனுப்பி வைக்கிறார். அதற்குப் பிறகு, அவளுடைய காதலன் அவளைப் பார்க்க ‘வெளிமானை’ போல் வேகமாக ஓடிவருவான் என்று அவள் சொல்கிறாள்.—உன். 8:14.
6. உன்னதப்பாட்டில் யார் பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்வது ஏன் கஷ்டமாக இருக்கலாம்?
6 இந்த பாட்டு அந்தளவுக்கு அருமையாக இருந்ததால்தான், இதை “உன்னதப்பாட்டு” என்று சொல்கிறார்கள். (உன். 1:1) இந்த கதையில் வருகிறவர்களுடைய பெயர் எதையுமே சாலொமோன் தன்னுடைய பாட்டில் சொல்லவில்லை. அதனால் யார் பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்வது கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும், இதில் வருகிற வார்த்தைகளை வைத்து யார் பேசுகிறார்கள் என்று தெரிந்துகொள்ள முடியும். இந்த பாட்டின் கவிதை நயம் குறையாமல் இருப்பதற்காகத்தான் சாலொமோன் நிறைய தகவல்களை கொடுக்கவில்லை.
‘உமது நேசம் திராட்சரசத்தைவிட இன்பமானது’
7, 8. காதலர்கள் இரண்டு பேரும் அவர்களுடைய காதலை எப்படி வெளிப்படுத்தினார்கள்? இதற்கு சில உதாரணங்களை சொல்லுங்கள்.
7 இந்த காதலர்கள் பேசுகிற வார்த்தைகளில் இருந்தே, ஒருவர்மீது ஒருவர் எந்தளவு அன்பு வைத்திருந்தார்கள் என்று தெரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் இரண்டு பேரும் ‘நேசத்தை’ வெளிக்காட்டுவதற்காக சொன்ன வார்த்தைகள் ஒருவேளை நமக்கு புதிதாக இருக்கலாம். (உன். 1:2) ஏனென்றால், அவர்கள் சுமார் 3,000 வருடங்களுக்கு முன் வாழ்ந்தார்கள். அவர்களுடைய கலாச்சாரத்திற்கும் நம்முடைய கலாச்சாரத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதனால், அவர்கள் பேசின வார்த்தைகளுக்கும் இப்போது நாம் பேசுகிற வார்த்தைகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. உதாரணத்திற்கு, அந்த காதலன் அவளைப் பார்த்து, “உன் கண்கள் புறாக்கண்கள்” என்று சொன்னான். ஏனென்றால், அவளுடைய பார்வை அவ்வளவு அன்பாக, பாசமாக இருந்தது. (உன். 1:15) அவளும் தன்னுடைய காதலனின் கண்கள் புறா கண்களைப் போல அழகாக இருப்பதாக சொல்கிறாள். (உன்னதப்பாட்டு 5:12-ஐ வாசியுங்கள்.) ஏனென்றால், அவளுடைய காதலனின் கண்கள், சாம்பல் நிறமும் நீல நிறமும் கலந்த ஒரு அழகான புறா, பாலில் நீந்துவது போல் அவளுக்கு இருந்தது.
8 இந்த காதலர்கள் அவர்களுடைய அழகை மட்டுமே புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தார்களா? இல்லை. அவர்கள் இரண்டு பேரிடம் இருந்த நல்ல குணங்களையும் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அவனுடைய காதலி மற்றவர்களிடம் ரொம்ப அன்பாக, கனிவாக பேசினாள். (உன்னதப்பாட்டு 4:7, 11-ஐ வாசியுங்கள்.) அதனால்தான் அந்த காதலன், “உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது” என்று சொன்னான். அவள் பேசின வார்த்தைகள் பாலும் தேனும் போல் சுவையாக, இனிமையாக இருந்தது. “நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை” என்று அந்த மேய்ப்பன் சொன்னான். அதாவது, அவள் ரொம்ப அழகாகவும் எந்த குறையும் இல்லாமல் இருப்பதாகவும் சொன்னான். அவன், தன் காதலியின் அழகை மட்டுமல்ல, அவளிடம் இருந்த இனிமையான குணங்களையும் புகழ்வதற்காகத்தான் இப்படி சொன்னான்.
9. (அ) கணவன் மனைவிக்குள் எப்படிப்பட்ட அன்பு இருக்க வேண்டும்? (ஆ) அந்த அன்பை அவர்கள் ஏன் வெளிப்படையாக சொல்ல வேண்டும்?
9 யெகோவாவை வணங்குகிற ஒரு கணவனும் மனைவியும் கல்யாணத்தை வெறுமனே ஒரு ஒப்பந்தமாக நினைப்பது இல்லை. காலமெல்லாம் சேர்ந்து இருக்க வேண்டிய ஒரு பந்தமாக நினைக்கிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் உயிராக நேசிக்கிறார்கள், உண்மையான அன்பை காட்டுகிறார்கள். உண்மையான அன்பு என்றால் என்ன? மற்றவர்களிடம் நாம் காட்டுகிற சுயநலமில்லாத அன்பா? (1 யோ. 4:8) குடும்பத்தில் இருப்பவர்களிடம் நாம் காட்டுகிற அன்பா? நண்பர்களிடம் காட்டுகிற அன்பா? (யோவா. 11:3) காதலர்கள் ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பா? (நீதி. 5:15-20) இந்த நாலு வகையான அன்பும் கலந்ததுதான் கணவன் மனைவிக்குள் இருக்கிற உண்மையான அன்பு. கணவனும் மனைவியும் எவ்வளவு வேலையாக இருந்தாலும் சரி, அவர்கள் பேசுகிற விதத்திலும் நடந்துகொள்கிற விதத்திலும் இந்த உண்மையான அன்பை காட்ட வேண்டும். சில கலாச்சாரங்களில், கல்யாணத்திற்குப் பிறகுதான் கணவனும் மனைவியும் பழகவே ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பேசிப் பழகி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும்போது அவர்களுக்குள் இருக்கிற அன்பு வளரும். அந்த அன்பை அவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அப்படி சொன்னால்தான், அவர்களுக்குள் இருக்கிற நெருக்கம் இன்னும் அதிகமாகும். திருமண பந்தமும் பலப்படும்.
10. அன்பை வெளிப்படையாக சொல்வதால் என்ன நன்மை?
10 உங்கள் மனதில் பொங்கி வரும் அன்பையும் பாசத்தையும் மனம்விட்டு வெளிப்படையாக சொல்வதால் இன்னொரு நன்மையும் இருக்கிறது. அதாவது, எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உங்கள் மணத்துணை உங்களுக்கு உண்மையாக இருப்பார், அந்த சூலேமியப் பெண்ணை போலவே! அந்தப் பெண் தன்னுடைய காதலனுக்கு உண்மையாக இருந்தாள். சாலொமோன் அவளை மயக்க நினைத்து ‘தங்க ஆபரணங்களை’ எல்லாம் கொடுத்தார். அதுமட்டுமா, ‘சந்திரனைப்போல் அழகாகவும், சூரியனைப்போல் பிரகாசமாகவும்’ இருக்கிறாள் என்று சாலொமோன் அவளை புகழ்ந்தார். (உன். 1:9-11; 6:10) ஆனால், அந்த சூலேமியப் பெண் அவளுடைய மனதை மாற்றிக்கொள்ளவே இல்லை. காதலனை பிரிந்து இருந்தாலும் அவளால் எப்படி அவனுக்கு உண்மையாக இருக்க முடிந்தது? அந்த சமயத்தில் எந்த விஷயங்கள் அவளுடைய மனதிற்கு ஆறுதலாக இருந்தது? (உன்னதப்பாட்டு 1:2, 3-ஐ வாசியுங்கள்.) காதலை வெளிப்படுத்த அவன் சொன்ன அன்பு வார்த்தைகளை அவள் யோசித்துப் பார்த்தாள். அது அவளுக்கு எவ்வளவு சந்தோஷத்தை கொடுத்தது என்று நினைத்துப் பார்த்தாள். அவளுக்கு அது ‘திராட்சரசத்தைப் பார்க்கிலும் இன்பமாய்’ இருந்தது. ‘பரிமள தைலத்தை,’ அதாவது மணம்வீசும் எண்ணெயை, தலைக்கு வைக்கும்போது அது இதமாக இருப்பது போல் அவன் சொன்ன வார்த்தைகள் அவள் மனதிற்கு ஆறுதலாக இருந்தது. (சங். 23:5; 104:15) இதைப் போலவே ஒரு கணவனும் மனைவியும் அவர்களுக்குள் இருக்கிற அன்பையும் பாசத்தையும் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அப்போதுதான், அவர்களுக்குள் இருக்கிற அன்பு அதிகமாகும். அந்த அன்பான வார்த்தைகள் மனதில் பசுமையாக இருக்கும்போது, அவர்களுடைய அன்பு காலமெல்லாம் குறையாமல் இருக்கும்.
‘நானே விரும்பும்வரை காதலைத் தட்டி எழுப்பாதீர்’
11. சூலேமியப் பெண்ணிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 சாலொமோன் ராஜா எவ்வளவோ முயற்சி செய்தும், அந்தப் பெண்ணுக்கு அவர்மேல் கொஞ்சம்கூட காதல் வரவில்லை. அதனால்தான் அவள் அரண்மனையில் இருந்த பெண்களிடம், ‘காதலைத் தட்டி எழுப்பாதீர்; நானே விரும்பும்வரை அதைத் தட்டி எழுப்பாதீர்’ என்று உறுதியாக சொல்லிவிட்டாள். (உன். 2:7; 3:5, பொது மொழிபெயர்ப்பு) கல்யாணம் பண்ண நினைக்கிறவர்கள், இந்த சூலேமியப் பெண்ணிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? யாரை வேண்டும் என்றாலும் காதலிக்கலாம், கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு ஏற்ற ஒரு நபர் கிடைக்கும் வரை பொறுமையாக இருங்கள். அப்போதுதான் அந்த நபரை, உங்களால் உண்மையாக நேசிக்க முடியும்.
12. அந்த பெண் ஏன் அந்த மேய்ப்பனை காதலித்தாள்?
12 அவன் ‘வெளிமானைப்’ போல் அழகாக இருப்பதாக அவள் நினைத்தாள். அவன் கைகள் ‘உருண்ட பொன்தண்டுகளைப்’ போல் வலிமையாக இருந்ததாகவும், கால்கள் ‘பளிங்கு தூண்களைப்’ போல் அழகாக, பலமாக இருந்ததாகவும் அவள் சொன்னாள். அவனுடைய அழகையும் பலத்தையும் மட்டும் பார்த்துத்தான் அவனை காதலித்தாளா? இல்லை. யெகோவாமீது அவனுக்கு இருந்த உண்மையான அன்பையும், அவனிடம் இருந்த நல்ல குணங்களையும் பார்த்துத்தான் அவள் காதலித்தாள். அதனால்தான், ‘காட்டு மரங்களுக்கு இடையே நிற்கும் கிச்சிலிமரம்’ [அதாவது, ஆப்பிள் மரம், NW] போல் அவன் அவளுக்கு தெரிந்தான்.—உன். 2:3, 9; 5:14, 15, பொ.மொ.
13. அந்த மேய்ப்பன் ஏன் சூலேமியப் பெண்ணை காதலித்தான்?
13 அந்த சூலேமியப் பெண் அவ்வளவு அழகாக இருந்ததால்தான் சாலொமோன் ராஜா அவளைப் பார்த்து மயங்கினார். அவருக்கு 60 ராணிகளும் 80 வைப்பாட்டிகளும், இன்னும் நிறைய இளம் பெண்களும் இருந்தார்கள். இருந்தாலும், இந்த சூலேமியப் பெண்ணின் அழகை பார்த்து அவருடைய மனதை பறிகொடுத்தார். அந்த மேய்ப்பனும் அவளுடைய அழகை மட்டுமே பார்த்துத்தான் காதலித்தானா? இல்லவே இல்லை. யெகோவாமீது அவளுக்கு இருந்த அன்பையும், அவளிடம் இருந்த நல்ல குணங்களையும் பார்த்துதான் அவளை காதலித்தான். உதாரணத்திற்கு, அந்த பெண் ரொம்ப பணிவாக நடந்துகொண்டாள். அதனால்தான், அவள் தன்னை ஒரு சாதாரண பூவிற்கு ஒப்பிட்டு இப்படி சொன்னாள்: “சாரோன் சமவெளியில் உள்ள காட்டு மலர் நான்.” ஆனால், அவளுடைய காதலனுக்கு அவள் ரொம்ப விசேஷமானவளாக இருந்ததால், “முட்புதர் நடுவில் இருக்கும் லீலிமலர்” போல் அவள் இருக்கிறதாக அவன் சொன்னான்.—உன். 2:1, 2; 6:8, பொ.மொ.
14. கல்யாணம் பண்ண நினைக்கிறவர்கள், சூலேமியப் பெண்ணிடம் இருந்தும் மேய்ப்பனிடம் இருந்தும் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 “நம் எஜமானரைப் பின்பற்றுகிற ஒருவரையே” கல்யாணம் பண்ண வேண்டும் என்று யெகோவா சொல்கிறார். (1 கொ. 7:39) அதாவது ஞானஸ்நானம் எடுத்த யெகோவாவின் சாட்சியைத்தான் காதலிக்க வேண்டும் கல்யாணம் பண்ண வேண்டும் என்று சொல்கிறார். இதனால் என்ன நன்மை? கல்யாணம் ஆனவர்கள் தினம் தினம் நிறையப் பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். இரண்டு பேருக்கும் யெகோவாவோடு ஒரு நெருங்கிய பந்தம் இருந்தால்தான் இதையெல்லாம் சமாளித்து சந்தோஷமாக வாழ முடியும். கல்யாணம் பண்ண ஆசை இருக்கிறவர்கள், சூலேமியப் பெண்ணை போலவும் மேய்ப்பனைப் போலவும் இருக்க வேண்டும். யெகோவாமீது அன்பு இருக்கிற, நல்ல குணங்கள் இருக்கிற, ஒருவரை கல்யாணம் பண்ண வேண்டும்.
‘என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டம்’
15. கல்யாணம் பண்ணப் போகிறவர்கள் சூலேமியப் பெண்ணிடம் இருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
15 உன்னதப்பாட்டு 4:12-ஐ வாசியுங்கள். தன்னுடைய காதலியை ஏன் ‘அடைக்கப்பட்ட தோட்டம்’ என்று அந்த மேய்ப்பன் சொன்னான்? பூட்டியிருக்கிற தோட்டத்திற்குள் யாராலும் போக முடியாது. அந்த பெண்ணும் அப்படித்தான் இருந்தாள். அதனால்தான், அவளுடைய மனதிற்குள் ராஜாவாலும் நுழைய முடியவில்லை. அவளுடைய மனது, ஒரு ‘கதவு’ போல் இல்லாமல், ஒரு ‘மதில்’ போல் உறுதியாக இருந்தது. அவள் அந்த மேய்ப்பனைத்தான் காதலித்தாள், அவனைத்தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்று உறுதியாக இருந்தாள். (உன். 8:8-10) அதனால்தான், ராஜா அவளை மயக்க என்ன செய்தும் அவளுடைய மனதை மாற்ற முடியவில்லை. அப்படியென்றால், சூலேமியப் பெண் உண்மையாக இருந்ததை போலவே கல்யாணம் பண்ணப் போகும் கிறிஸ்தவர்களும் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருக்க வேண்டும், வேறு யார்மீதும் ஆசைப்படக் கூடாது.
16. காதலிக்கிறவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று உன்னதப்பாட்டு சொல்கிறது?
16 அந்த மேய்ப்பன் தன் காதலியோடு சேர்ந்து நடந்து போக ஆசைப்பட்டான். ஆனால் அந்த பெண்ணின் அண்ணன்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவர்களுடைய திராட்ச தோட்டத்தை காவல் காக்க சொல்லி அவளை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள்? தங்கை மேல் நம்பிக்கை இல்லாததாலா, அதாவது அவர்கள் இரண்டு பேரும் ஏதாவது தவறு செய்துவிடுவார்கள் என்று சந்தேகப்பட்டதாலா? இல்லை! அவள் தவறு செய்வதற்கு ஏற்ற மாதிரி ஒரு சூழ்நிலை அமைந்துவிடக் கூடாது என்று நினைத்ததால்தான் அப்படி செய்தார்கள். (உன். 1:6; 2:10-15) காதலிக்கிறவர்கள் இதிலிருந்து ஒரு நல்ல விஷயத்தை தெரிந்துகொள்ளலாம். ஒழுக்கங்கெட்ட செயலில் உங்களை தள்ளிவிடுகிற எந்த சூழ்நிலையையும் தவிர்த்துவிடுங்கள். நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருக்கும்போது, எந்த மாதிரி விஷயங்களை செய்யலாம், செய்யக் கூடாது என்று முன்னதாகவே முடிவு செய்யுங்கள். இரண்டு பேரும் தனியாக இருக்காதீர்கள். உங்கள் அன்பை வெளிப்படுத்தும்போது, யெகோவாவுக்கு பிடிக்காத எதையும் செய்துவிடாதீர்கள்.
17, 18. உன்னதப்பாட்டில் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் உங்களுக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கிறது?
17 கணவனும் மனைவியும், கடைசிவரை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். ஒருவர்மீது ஒருவர் உண்மையான அன்பை காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பொதுவாக, கல்யாணம் ஆன புதிதில் எல்லாரும் அன்பாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய திருமண பந்தம் கடைசிவரை நிலைத்திருக்க வேண்டும் என்றால் அவர்களுக்குள் இருக்கிற அன்பு எப்போதும் அணையாத நெருப்பு போல் இருக்க வேண்டும்.—மாற். 10:6-9.
18 நீங்கள் கல்யாணம் பண்ண வேண்டும் என்று நினைத்தால், யெகோவாமீது உண்மையான அன்பு இருக்கிற, நல்ல குணங்கள் இருக்கிற ஒருவருக்காக காத்துக்கொண்டு இருங்கள். அப்படிப்பட்ட ஒருவரை கல்யாணம் செய்ததற்கு பிறகு உங்கள் இரண்டு பேருக்குள் இருக்கிற அன்பு நிலைத்திருக்க கடினமாக முயற்சி செய்யுங்கள். இந்த உன்னதப்பாட்டில் பார்த்த விதமாக காலமெல்லாம் அன்பு காட்ட முடியும். ஏனென்றால், உண்மையான அன்பு ‘யாவின் ஜூவாலையை’ போல் இருக்கிறது.—உன். 8:6, NW.
a ஜனவரி 15, 2007 காவற்கோபுரம் பக்கம் 31-ஐ பாருங்கள்.