ஒரு காலத்தில், பொன்னிலும் விலையேறப்பெற்றது
ஒரு வாசனைத் திரவியமாக அது கிரீஸின் அரங்குகளில் தூவப்பட்டது. நீரோ வெற்றிப் பெற்றவனாய் ரோமுக்குள் வரும்போது, தெருக்களில் அது தெளிக்கப்பட்டது. சாலொமோன் அதை விலையேறப்பெற்ற ஒன்றாய் மதித்தான். (சாலொமோனின் உன்னதப்பாட்டு 4:14) ஒரு காலத்தில் அது பொன்னிலும் விலையேறப்பெற்றதாய் இருந்தது. இன்றுங்கூட இது உலகிலேயே மிக உயர்ந்த விலை கொண்ட வாசனை திரவியமாகக் கருதப்படுகிறது. இப்படி இருப்பதுதான் குங்குமப்பூ.
இந்த அசாராணமான செம்பொன் வாசனை திரவியம் குங்குமப்பூவின் மகரந்தத்திலிருந்து உண்டாகிறது. இது இலைவேனிற் காலத்தில் அநேக தோட்டங்களை அழகுபடுத்தும் செடிவகையைச் சேர்ந்தது. இது காய்ந்த சுண்ணாம்பு நிலத்தில் செழிப்பாய் வளருகின்றது, ஸ்பய்னின் லா மான்சா பிரதேசம் இப் பயிர் வகைக்கு உகந்ததாயிருக்கிறது.
மத்தியதரைப் பிரதேசத்துக்குரிய குங்குமச் செடி ஆரம்பகாலங்களிலிருந்தே சிறிய ஆசியாவில் பயிர் செய்யப்பட்டுவந்தது. நூற்றாண்டுகளுக்குப் பின்னர், மூர்ஸ் அதை ஸ்பய்னுக்குக் கொண்டுவந்து பயிர் செய்வதை ஊக்குவித்தனர். பதார்த்தங்களுக்கு வாசனையூட்டவும், பல்வலி, மாதவிடாய் வலி, மற்றும் விஷக் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு சிகிச்சையளிக்கவும் இதைப் பயன்படுத்தினர். இன்றும் குங்குமப்பூ சமையலறையில் உயர்ந்த இடத்தைப் பெறுகின்றது, ஸ்பனிய பேலா மற்றும் ஃபிரஞ்சு பெளவிலாபேய்ஸ் போன்ற பிரபல உணவுகளுக்கு மணமும் நிறமும் கூட்டுகின்றன.
விரைவாகப் பயிர் செய்தலும் அறுவடையும்
லா மான்சாவில் பரந்த சமவெளியில் நூற்றாண்டுகள் கழிந்தும் மாற்றங்கள் இல்லை. குங்குமத்தின் விளைச்சல் இளவேனிற் காலத்தில் துவங்குகிறது, அப்பொழுதுதானே கிழங்குகள் லா மான்சாவின் செம்மண்ணில் பயிர் செய்யப்படுகின்றன. இலையுதிர் காலத்தில் அதன் அறுவடை, இது மூன்று வாரங்களுக்குத் தொடருகிறது. எல்லா வேலையுமே கைகளால்தான் செய்யப்படுகின்றன, நவீன இயந்திரங்களும் முறைகளும் இன்னும் பயன்படுத்தப்படவில்லை.
முதலில் வருவதுதான் ஒவ்வொன்றாக ஆயிரக்கணக்கான பூக்களைப் பறிக்கும் இடுப்பை முறித்திடும் வேலை. இது அக்டோபர் மாதத்தின் முடிவில் செய்யப்படுகிறது, அப்பொழுது இலையுதிர்காலத்தின் முதல் குளிர் வந்துவிட்டிருக்கும். அப்பொழுது நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் இச்செடிகள் விளையும் தங்களுடைய நிலங்களுக்குச் செல்கின்றனர். அவர்கள் மலர்ந்திருக்கும் புது மலர்கள் மீது குனிந்துகொண்டிருக்க, ஆச்சரியமான வேகத்தில் அவர்களுடைய அருந்திறன் மிகுந்த கைகள் அந்த மென்மையான மலர்களைப் பறிக்கின்றன.
விரைவிலேயே அவர்களுடைய கூடைகள் காலை அறுவடையால் நிறைந்து வீட்டுக்கு எடுத்துச்செல்ல ஆயத்தமாகிவிடுகின்றன. அங்கு அந்தப் புது மலர்கள் தட்டுகளில் காற்றுவாங்க பரப்பப்படுகின்றன. இப்பொழுது அதைவிட கடினமான வேலை ஆரம்பமாகிறது, குங்குமப்பூவிலிருந்து குங்கும கேசரத்தை—பூவின் பெண் உறுப்பை—பிரிப்பது.
கேசரங்களைப் பிரித்தல்
லா மான்சாவின் வழக்கத்தைப் பின்பற்றி, முழு குடும்பங்களும் அந்த அறுவடையை நிறைவேற்றுவதில் பங்குபெறுகின்றனர். மூன்று வாரங்களுக்கு அவர்கள் நாள் ஒன்றுக்கு 19 மணி நேரம் என்ற கணக்கில் உழைக்கின்றனர்.
பூக்கள் திறக்கப்பட்டு, கேசரங்கள் மிக கவனமாகப் பறிக்கப்படுகின்றன. ஈரமான, கருஞ்சிவப்பு கேசரங்கள்—ஒவ்வொரு மலருக்கும் மூன்று கேசரங்கள் உள்ளன—தட்டுகளில் சேர்க்கப்படுகின்றன. இங்குதான் குங்குமப்பூவின் இரகசியம் இருக்கிறது. தி நியு என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறபடி, ஒரு பவுண்டு குங்குமம் பெறுவதற்கு 75,000 மலர்கள் தேவைப்படும்!
இந்தக் கட்டத்தில் வேகமும் அனுபவமும் அவசியமாயிருக்கிறது, ஏனென்றால் குங்குமப்பூ பறிக்கப்படும் அதே நாளில் கேசரமும் பிரிக்கப்படவேண்டும். மலர்கள் மிக வேகமாக உலர்ந்து, ஒட்ட ஆரம்பித்துவிடுகின்றன, இது கேசரத்தைப் பிரித்திடுவதைக் கடினமாக்குகிறது. மற்றும் கேசரம் சரியான இடத்தில் கிள்ளியெடுக்கப்பட வேண்டும்; இல்லாவிடில் அது மன்சா செலக்டாவாக, எல்லா குங்குமத்திலும் விசேஷமானவையாக தகுதிபெறாது.
கேசரத்தை வறுப்பது
கடினமான வேலை கடைசியாக முடிக்கப்பட்ட பின்பு, கேசரங்கள் வலைத் தட்டுகளில் காய்வதற்காகக் கவனமாக பரப்பப்படுகின்றன. இந்தச் சமயத்தில் தான் அடுப்புக்கரி நெருப்பு ஆயத்தப்படுத்தப்படுகிறது, மற்றும் விலையேறப்பெற்ற கேசரங்கள் இருக்கும் தட்டுகள் நெருப்பில் வைக்கப்படுகின்றன. அந்த மென்மையான கேசரங்கள் கருகி புகையாகிவிடுவதைத் தவிர்ப்பதற்கான எல்லா முன்னெச்சரிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. அவை வறுக்கப்பட வேண்டும், புகையாகிவிடக்கூடாது.
தாழ்ந்த நெருப்பில் சுமார் 15 நிமிடங்கள் இருந்த பின்னர், குங்குமம் அதன் எடையில் ஏறக்குறைய 80 சதவீத எடையை இழந்துவிடுகிறது. ஏறக்குறைய இரண்டரை ஏக்கர் பரப்பு அறுவடை—ஏறக்குறைய 100 பவுண்டுகள் எடை குங்குமம்—வெறுமென 20 பவுண்டு உலர்ந்த குங்குமத் தூளாக ஆகிறது.
காய வைக்கும் முறை முடிந்தவுடன், இப்பொழுது ஆழ்ந்த சிவப்பு குங்குமத் துகள் சேர்த்து வைக்கப்படுவதற்கு தயாராகிவிட்டது. கரிய ப்ளாஸ்டிக் பைகளில் இறுக்கமாக முத்திரையிடப்பட்டு வெளிச்சத்திற்கு பாதுகாப்பாய் வைக்கப்படுகிற லா மான்சாவின் “செம்பொன்” ஒரு குங்கும வியாபாரிக்கு விற்கப்படுவதற்குக் காத்திருக்கிறது.
ஓர் அழகிய மலரிலிருந்து மகிழ்ச்சியூட்டும் வாசனை திரவியம்
குங்குமம் ஃப்ரான்ஸ், இத்தாலி, கிரீஸ், ஈரான், மற்றும் இந்தியாவில் விளைவிக்கப்பட்டாலும், உலக குங்கும வியாபாரத்தின் 70 சதவீதம் ஸ்பெய்னிலிருந்து கிடைக்கிறது. இது ஓரளவுக்கு கசப்பு சுவை கொண்டது, இது உலகமுழுவதும் கோழி, அரிசி, கடல் உணவுக்கு சுவையும் மணமும் ஊட்டிட பயன்படுத்தப்படுகிறது, அதே சமயத்தில் ஸ்கண்டிநேவியர் குங்கும வாசனை மிகுந்த ரொட்டியை மகிழ்ந்து புசிக்கின்றனர். ஜப்பானில் விலையுயர்ந்த பொருட்களுக்கு வண்ணமிடுவதற்கு ஒரு வண்ணப்பொருளாக இன்றும் பயன்படுத்தப்படுகிறது.
குங்குமச் செடி பயிர் செய்வது வெறுமென பொருளாதார ரீதியில் சிக்கனத்திற்கு மட்டுமல்ல. சராசரியாக 5,000 சதுர அடி நிலப்பரப்புடைய எல்லா நிலங்களிலுமே இச்செடியின் மலர்கள் ஒரே சமயத்தில் மலரும் நாட்கள் இருக்கின்றன. அந்த ஒரு நாள்தான் டையா டெல் மான்டோ—மேல் போர்வையின் நாள் என்று அழைக்கப்படுகிறது. நிலம் முழுவதும் ஒரு கருநீல போர்வையால் போர்த்தியிருக்கும். அப்படிப்பட்ட ஒரு நாளில், லா மான்சாவின் தூசு படிந்த நிலங்கள் தீர்க்கதரிசியின் வார்த்தைகளை நம் நினைவுக்குக் கொண்டுவருகிறது: “வனாந்திர வெளி களிகூர்ந்து குங்குமச் செடி போன்று பூத்துக்குலுங்கும்.”—ஏசாயா 35:1, NW. (g89 10/8)