இன்றும் என்றும் சந்தோஷமாய் இருத்தல்
“நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.”—ஏசாயா 65:18.
1. நூற்றாண்டுகளாக தனிப்பட்ட நபர்களை எவ்வாறு மெய் வணக்கம் பாதித்திருக்கிறது?
நூற்றாண்டுகள் முழுவதுமாக, மெய்க் கடவுளாகிய யெகோவாவை சேவிப்பதில் திரளான மக்கள் மிகுந்த சந்தோஷத்தைக் கண்டடைந்திருக்கின்றனர். மெய் வணக்கத்தில் சந்தோஷமாயிருந்த அநேகரில் தாவீதும் ஒருவர். உடன்படிக்கைப் பெட்டி எருசலேமுக்கு கொண்டுவரப்பட்டபோது, “தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடு . . . கொண்டுவந்தார்கள்,” என்று பைபிள் விவரிக்கிறது. (2 சாமுவேல் 6:15) யெகோவாவை சேவிப்பதில் இத்தகைய சந்தோஷம் வெறும் கடந்தகால காரியமல்ல. நீங்கள் அதில் பங்குகொள்ள முடியும். புதுப் பங்குகள்கொண்ட சந்தோஷமும்கூட விரைவில் உங்களுடையதாய் ஆகலாம்!
2. திரும்பிவந்த யூதர்கள்மீதான ஏசாயா 35-ம் அதிகாரத்தின் முதல் நிறைவேற்றத்திற்கும் அப்பால், மற்றொரு நிறைவேற்றத்தில் இன்று யார் உட்பட்டிருக்கின்றனர்?
2 முந்திய கட்டுரையில், ஏசாயா 35-ம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள உந்துவிக்கும் தீர்க்கதரிசனத்தின் முதல் நிறைவேற்றத்தை நாம் ஆராய்ந்தோம். திரும்பநிலைநாட்டும் தீர்க்கதரிசனம் என்று நாம் இதை சரியாகவே அழைக்கலாம், ஏனென்றால் பூர்வ யூதர்களுக்கு அவ்விதமாகத்தான் சம்பவித்தது. அது நம்முடைய காலத்திலும் அதேபோன்ற நிறைவேற்றத்தை உடையதாயிருக்கிறது. எவ்விதமாக? பொ.ச. 33 பெந்தெகொஸ்தே நாளிலிருந்த இயேசுவினுடைய அப்போஸ்தலரோடும் மற்றவர்களோடும் தொடங்கி, யெகோவா ஆவிக்குரிய இஸ்ரவேலருடன் செயல்தொடர்புகொண்டு வந்திருக்கிறார். ‘தேவனுடைய இஸ்ரவேலர்’ என்று அப்போஸ்தலன் பவுல் அழைக்கிறவர்களின் பாகமாக ஆன இவர்கள், கடவுளுடைய ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட மனிதர்கள். (கலாத்தியர் 6:16; ரோமர் 8:15-17) 1 பேதுரு 2:9-ல், இந்தக் கிறிஸ்தவர்கள் ‘தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, ராஜரீகமான ஆசாரியக்கூட்டம், பரிசுத்த ஜாதி, அவருக்குச் சொந்தமான ஜனம்’ என்று அழைக்கப்படுவதையும் நினைவுபடுத்திப்பாருங்கள். ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட வேலையை பேதுரு அடையாளங்காட்டி சொல்வதாவது: ‘உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவியுங்கள்.’
நம்முடைய நாளில் ஒரு நிறைவேற்றம்
3, 4. நவீன காலங்களில் ஏசாயா 34-ம் அதிகாரம் நிறைவேற்றமடைந்தபோது இருந்த நிலைமை என்ன?
3 இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், பூமியிலிருந்த ஆவிக்குரிய இஸ்ரவேலரின் மீதியானோர் இத்தகைய செய்தியை அறிவிப்பதில் சுறுசுறுப்பாய் இல்லாமலிருந்த ஒரு சமயம் இருந்தது. கடவுளுடைய ஆச்சரியமான ஒளியில் அவர்கள் முழுமையாக களிகூரவில்லை. உண்மையில் சொல்லப்போனால், அவர்கள் கணிசமானளவு இருளில் இருந்தார்கள். அது எப்பொழுது? அதைக் குறித்து யெகோவா தேவன் என்ன செய்தார்?
4 அது, முதல் உலகப் போர் நடந்த காலத்தில், 1914-ல் மேசியானிய ராஜ்யம் பரலோகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட பிறகு விரைவிலேயே ஆகும். பல்வேறு நாடுகளிலுள்ள சர்ச் குருமார்களின் ஆதரவினால் தேசத்தினர் ஒருவருக்கொருவர் கோபமூண்டவர்களாய் இருந்தார்கள். (வெளிப்படுத்துதல் 11:17, 18) கர்வமுடனிருந்த ஏதோம் தேசத்தாருக்கு விரோதமாக கடவுள் எவ்வாறு இருந்தாரோ, அவ்வாறே உயர்த்தப்பட்ட குருவர்க்கத்தினரைக் கொண்ட விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்திற்கும் விரோதமாக இருந்தார். எனவே, மாதிரிப்படிவமான ஏதோமாகிய கிறிஸ்தவமண்டலம், ஏசாயா 34-ம் அதிகாரத்தின் நவீனகால நிறைவேற்றத்தை உணரும் நிலையில் இருக்கிறது. நிரந்தரமாக நிர்மூலமாக்கப்படுவதன் மூலம் வருகிற இந்த நிறைவேற்றம், பூர்வ ஏதோமுக்கு எதிரான முதல் நிறைவேற்றத்தைப் போலவே நிச்சயமான ஒன்றாக இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 18:4-8, 19-21.
5. நம்முடைய நாளில் ஏசாயா 35-ம் அதிகாரம் என்ன விதமான நிறைவேற்றமடைந்திருக்கிறது?
5 சந்தோஷத்தின் பேரில் முக்கியத்துவத்தைக் கொண்ட, ஏசாயா தீர்க்கதரிசனத்தின் 35-ம் அதிகாரத்தைப் பற்றியதென்ன? அதுவும்கூட நம்முடைய நாளில் நிறைவேற்றமடைந்திருக்கிறது. அதெப்படி? ஆவிக்குரிய இஸ்ரவேலரை ஒருவித சிறையிருப்பிலிருந்து திரும்ப நிலைநாட்டுவதில் இது நிறைவேற்றமடைந்திருக்கிறது. அநேகர் இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிற வாழ்நாட்காலத்திற்குள்ளாகவே சம்பவிக்கிற, சமீபகால தேவராஜ்ய சரித்திரம் என்று உண்மையில் சொல்லப்படுகிறதிலுள்ள நிகழ்ச்சிகளை நாம் ஆராய்வோமாக.
6. ஆவிக்குரிய இஸ்ரவேலரின் மீதியானோர் சிறைபடுத்தப்பட்ட நிலைக்கு வந்தார்கள் என்று ஏன் சொல்லப்படலாம்?
6 முதல் உலகப் போர் நடந்த சமயத்தின் ஓரளவான குறுகிய காலத்தில், ஆவிக்குரிய இஸ்ரவேலரின் மீதியானோர் முழுமையாக சுத்தமானவர்களாகவும் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவானவர்களாகவும் தங்களை வைத்துக்கொள்ளவில்லை. அவர்களில் சிலர் கோட்பாட்டுக்குரிய பிழைகளினால் கறைபட்டவர்களாயும் போரிடுகிற தேசங்களுக்கு ஆதரவு தரும்படி நெருக்கப்படுகையில் யெகோவாவின் சார்பாக முழுமையாக நடுநிலை வகிக்காமல் ஒத்துபோகிறவர்களாயும் இருந்தார்கள். போர் நடந்த அந்த ஆண்டுகளின்போது, அவர்கள் எல்லா விதமான துன்புறுத்துதலையும் அனுபவித்தார்கள், அவர்களுடைய பைபிள் பிரசுரங்கள் அநேக இடங்களில் தடைசெய்யப்பட்டுமிருந்தன. கடைசியாக, மிக முக்கிய பொறுப்பிலிருந்த சகோதரர்களில் சிலர் பொய் குற்றச்சாட்டுகளினால் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். கடந்த இந்தச் சம்பவத்தை வைத்துப் பார்க்கையில், ஒரு கருத்தில், கடவுளுடைய மக்கள் சுயாதீனமுள்ளவர்களாய் இருப்பதற்குப் பதிலாக சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இருந்தார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாயில்லை. (யோவான் 8:31, 32-ஐ ஒப்பிடுக.) ஆவிக்குரிய காட்சியில் அவர்கள் மிக மோசமாக குறைவுபட்டவர்களாய் இருந்தார்கள். (எபேசியர் 1:16-18) கடவுளைத் துதிப்பதில் அவர்கள் ஓரளவு ஊமைத்தனத்தை காண்பித்தார்கள்; அதன் விளைவாக ஆவிக்குரிய விதத்தில் கனியற்றவர்களாய் இருந்தார்கள். (ஏசாயா 32:3, 4; ரோமர் 14:11; பிலிப்பியர் 2:11) பாபிலோனில் சிறைபட்டிருந்த பூர்வ யூதர்களுடைய சூழ்நிலைமைக்கு இது எவ்வாறு ஒத்திருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா?
7, 8. நவீனகால மீதியானோர் என்ன வகையான திரும்பநிலைநாட்டப்படுதலை அனுபவித்தனர்?
7 ஆனால் கடவுள் தம்முடைய நவீனகால ஊழியர்களை அந்த நிலையிலே விட்டுவிடுவாரா? இல்லை, ஏசாயா மூலமாக முன்னுரைக்கப்பட்டதற்கு இசைவாக, அவர்களை திரும்பநிலைநாட்டுவதில் தீர்மானமுள்ளவராய் இருந்தார். இவ்வாறாக, ஆவிக்குரிய இஸ்ரவேலரின் மீதியானோரை ஆவிக்குரிய ஒரு பரதீஸில் செழுமைக்கும் ஆரோக்கியத்திற்கும் திரும்பநிலைநாட்டுவதுடன், 35-ம் அதிகாரத்திலுள்ள இதே தீர்க்கதரிசனம் நம்முடைய நாளில் தெள்ளத்தெளிவான நிறைவேற்றத்தைக் காண்கிறது. எபிரெயர் 12:12-ல், பவுல், ஏசாயா 35:3-ஐ அடையாள அர்த்தத்தில் பொருத்திக்காண்பித்தார்; அதன்மூலம் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் இந்தப் பகுதியை நாம் ஆவிக்குரிய விதத்தில் பொருத்துவதன் திருத்தமானத்தன்மையை உறுதிப்படுத்தினார்.
8 போருக்குப் பிற்பட்ட காலப்பகுதியில், ஆவிக்குரிய இஸ்ரவேலரின் மீந்திருந்த அபிஷேகம் செய்யப்பட்டோர், உருவகநடையில் சொல்லப்போனால், சிறையிருப்பிலிருந்து வெளியே வந்தார்கள். அவர்களை விடுவிப்பதற்கு யெகோவா தேவன் மிகப் பெரிய கோரேசாகிய இயேசு கிறிஸ்துவை பயன்படுத்தினார். இவ்வாறாக, எருசேலேமிலுள்ள சொல்லர்த்தமான ஆலயத்தைத் திரும்ப கட்டுவதற்கு தங்களுடைய தேசத்திற்குத் திரும்பிச்சென்ற பூர்வ யூத மீதியானோருடைய வேலைக்கு ஒப்பான திரும்ப கட்டும் வேலையை இந்த மீதியானோர் செய்ய முடியும். மேலுமாக, நவீன காலத்திலுள்ள இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலர் அடையாள அர்த்தமுள்ள ஏதேன் தோட்டமாகிய பசுமையான ஒரு ஆவிக்குரிய பரதீஸைப் பண்படுத்தவும் உருவாக்கவும் தொடங்க முடியும்.
9. ஏசாயா 35:1, 2, 5-7-ல் விவரிக்கப்பட்டுள்ளது போன்ற காரியம் நம்முடைய நாளில் எவ்வாறு நிகழ்ந்தது?
9 மேற்சொல்லப்பட்டவற்றை மனதிற்கொண்டு, ஏசாயா 35-ம் அதிகாரத்தை மறுபடியுமாக நாம் சிந்திக்கலாம், முதலாவதாக 1, 2 வசனங்களைப் பாருங்கள். வறண்ட ஒரு பிரதேசமாக தோன்றியது உண்மையிலேயே பூர்வ சாரோனின் சமவெளியைப் போல பூத்து கனிதர தொடங்கியது. பிறகு, 5 முதல் 7 வசனங்களைப் பாருங்கள். இன்னும் உயிரோடிருந்து யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்புடனிருக்கிற அநேக மீதியானோரின் மனக்கண்கள் திறக்கும்படி செய்யப்பட்டது. 1914-லும் அதற்குப் பிறகும் சம்பவித்த காரியங்களின் அர்த்தத்தை அவர்களால் மிக நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. மீதியானோருடன் சேர்ந்து இப்பொழுது சேவை செய்துவருகிற ‘திரள்கூட்டத்தை’ உண்டுபண்ணுகிற நம்மில் பலரிலும் அது செல்வாக்கு செலுத்தியிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 7:9.
நீங்கள் அந்த நிறைவேற்றத்தின் பாகமானவர்களா?
10, 11. (அ) ஏசாயா 35:5-7-ன் நிறைவேற்றத்தில் நீங்கள் எப்படி உட்பட்டிருக்கிறீர்கள்? (ஆ) இத்தகைய மாற்றங்களைக் குறித்து தனிப்பட்ட விதமாக நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?
10 உதாரணத்திற்கு உங்களையே எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவின் சாட்சிகளுடன் தொடர்புகொள்வதற்கு முன்பாக, தவறாமல் நீங்கள் பைபிள் வாசித்தீர்களா? நீங்கள் அவ்வாறு செய்திருந்தால், எந்தளவுக்குப் புரிந்துகொள்ளுதலைப் பெற்றிருந்தீர்கள்? உதாரணமாக, மரித்தோருடைய நிலைமையைப் பற்றிய சத்தியத்தை இப்பொழுது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இந்த விஷயத்தில் அக்கறைகாட்டுகிற ஒருவருக்கு, ஆதியாகமம் 2-ம் அதிகாரம், பிரசங்கி 9-ம் அதிகாரம், மற்றும் எசேக்கியேல் 18-ம் அதிகாரத்திலும் மற்றநேக பகுதிகளிலும் உள்ள பொருத்தமான வசனங்களை ஒருவேளை உங்களால் எடுத்துக்காண்பிக்க முடியும். ஆம், அநேக தலைப்புப் பொருள்களில் அல்லது விவாதங்களில் பைபிள் என்ன போதிக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருக்கக்கூடும். சுருக்கமாக சொல்லப்போனால், பைபிளின் அர்த்தம் உங்களுக்குப் புரிகிறது, மற்றவர்களுக்கு நீங்கள் அதிலுள்ள பெரும்பாலானவற்றை விளக்கிக்கூற முடியும், சந்தேகமில்லாமல் நீங்கள் அவ்வாறு செய்துமிருக்கிறீர்கள்.
11 இருப்பினும், ‘பைபிள் சத்தியத்தைப் பற்றி அறிந்திருக்கிற எல்லாவற்றையும் நான் எவ்வாறு கற்றுக்கொண்டேன்? யெகோவாவின் மக்களுடன் படிப்பதற்கு முன்பாக, சற்றுமுன் குறிப்பிடப்பட்ட எல்லா வசனங்களையும் நான் கண்டுபிடித்திருந்தேனா? அவற்றை நான் புரிந்துகொண்டு, அதன் முக்கியத்துவத்தின் சம்பந்தமாக சரியான முடிவுகளை எடுத்திருந்தேனா?’ என்று நாம் ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்வது நல்லது. மனந்திறந்து சொல்லப்போனால், ஒருவேளை இல்லை என்பதே இந்தக் கேள்விகளுக்கான பதில். இந்த வார்த்தைகளைக் குறித்து எவரும் புண்பட்டுவிடக்கூடாது, ஆனால் இந்த வசனங்களையும் அவற்றின் அர்த்தத்தையும் குறித்து அடிப்படையில் நீங்கள் குருடராக இருந்தீர்கள் என்று சொல்லலாம். அப்படித்தான் அல்லவா? அவை பைபிளிலேயே இருந்தன, ஆனால் உங்களால் அதைப் பகுத்துணர முடியவில்லை அல்லது அவற்றின் முக்கியத்துவத்தைக் கிரகித்துக்கொள்ள முடியவில்லை. அப்படியானால், ஆவிக்குரிய விதமாக உங்களுடைய கண்கள் எவ்வாறு திறக்கப்பட்டன? அது, ஏசாயா 35:5-ஐ அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரில் நிறைவேறும் விதத்தில் யெகோவா செய்திருக்கிறவற்றின் மூலமாகும். அதன் விளைவாக உங்களுடைய கண்களும் திறக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் இனிமேலும் ஆவிக்குரிய இருளில் இல்லை. நீங்கள் காணமுடியும்.—வெளிப்படுத்துதல் 3:17, 18-ஐ ஒப்பிடுக.
12. (அ) இது அற்புதகரமான சரீர சுகப்படுத்துதலுக்கான காலமல்ல என்று நாம் ஏன் சொல்லலாம்? (ஆ) நம்முடைய நாளில் ஏசாயா 35:5 நிறைவேற்றமடைந்த விதத்தை, சகோதரர் எஃப். டபிள்யு. ஃபிரான்ஸ் பற்றிய விஷயம் எப்படி விளக்குகிறது?
12 நூற்றாண்டுகளாக பைபிளிலும் கடவுளுடைய செயல்தொடர்புகளிலும் ஆழ்ந்த விழிப்புணர்வுள்ள மாணாக்கர்கள், வரலாற்றில் இது சரீரப்பிரகாரமாக சுகப்படுத்தும் அற்புதங்களுக்கான காலமல்ல என்பதை அறிந்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 13:8-10) ஆகவே, இயேசு கிறிஸ்து தாம் மேசியா, கடவுளுடைய தீர்க்கதரிசி என்பதை நிரூபிப்பதற்கு குருடரின் கண்களை அவர் திறப்பதை நாம் எதிர்பார்ப்பதில்லை. (யோவான் 9:1-7, 30-33) செவிடர் அனைவரும் மீண்டும் கேட்பதற்கு அவர் உதவிசெய்வதுமில்லை. அபிஷேகம் செய்யப்பட்டவர்களில் ஒருவரும் உவாட்ச் டவர் சொஸைட்டியின் அப்போதைய பிரஸிடென்ட்டுமான ஃபிரட்ரிக் டபிள்யு. ஃபிரான்ஸ், 100-வது வயதை நெருங்குகையில், சட்டரீதியில் குருடராக இருந்தார், மேலும் செவியுணர்வுக் கருவியைப் பயன்படுத்த வேண்டியவராகவும் இருந்தார். சில ஆண்டுகளாக வாசிப்பதற்கு அவரால் பார்க்கக்கூட முடியவில்லை; இருப்பினும், ஏசாயா 35:5-ன் கருத்தில் யார்தான் அவரை குருடராக அல்லது செவிடராக நினைத்துப்பார்ப்பார்? அவருடைய கூர்மையான ஆவிக்குரிய காட்சி, கடவுளுடைய உலகளாவிய மக்களுக்கு ஓர் ஆசீர்வாதமாக இருந்தது.
13. முற்றிலுமான என்ன மாற்றத்தை அல்லது திரும்பநிலைநாட்டுதலை கடவுளுடைய நவீனநாளைய ஜனங்கள் அனுபவித்தனர்?
13 அல்லது உங்களுடைய நாவைப் பற்றியதென்ன? கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் தங்களுடைய ஆவிக்குரிய சிறையிருப்பின்போது ஊமையானவர்களாய் இருந்திருக்கலாம். ஆனால் கடவுள் அந்த நிலைமையை ஒருசமயம் முற்றிலும் மாற்றிய பிறகு, கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தையும் எதிர்காலத்திற்கான அவருடைய வாக்குறுதிகளையும் பற்றி அவர்கள் அறிந்திருக்கிறவற்றின்பேரில் அவர்களுடைய நாவுகள் மகிழ்ச்சியினால் கெம்பீரித்துப் பாட ஆரம்பித்தன. உங்களுடைய நாவை கட்டவிழ்ப்பதற்கும்கூட அவர்கள் உதவி செய்திருக்கக்கூடும். கடந்த காலத்தில் நீங்கள் எந்தளவுக்கு பைபிள் சத்தியத்தைக் குறித்து மற்றவர்களிடம் பேசினீர்கள்? ‘படிப்பதை நான் அனுபவித்து மகிழுகிறேன், ஆனால் முன்பின் தெரியாதவர்களிடம் நான் போய் ஒருபோதும் பேசமாட்டேன்,’ என்று நீங்கள் ஒருசமயத்தில் யோசித்திருக்கலாம். இருப்பினும், ‘ஊமையன் நாவு’ இப்பொழுது ‘மகிழ்ச்சியினால் கெம்பீரிக்கிறது’ என்பது உண்மை அல்லவா?—ஏசாயா 35:6.
14, 15. நம்முடைய நாளில் ‘பரிசுத்த வழியில்’ எவ்வாறு அநேகர் நடந்திருக்கின்றனர்?
14 பாபிலோனிலிருந்து விடுதலைபெற்ற பூர்வ யூதர்கள் தங்களுடைய தாயகத்திற்குத் திரும்பிவர நெடுந்தூரம் பிரயாணம் செய்யவேண்டியிருந்தது. நம்முடைய நாளில் அது எதற்கு ஒத்திருக்கிறது? சரி, ஏசாயா 35:8-ஐப் பாருங்கள்: “அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை.”
15 ஆவிக்குரிய சிறையிருப்பிலிருந்து அவர்கள் விடுதலைபெற்றது முதற்கொண்டு, இப்பொழுது இலட்சக்கணக்கான வேறே ஆடுகள் தங்களுடன் சேர்ந்துகொண்டிருக்கிற அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோர், மகா பாபிலோனிலிருந்து வெளியேறி அடையாளப்பூர்வமான பெரும்பாதைக்கு, ஒருவரை ஆவிக்குரிய பரதீஸிற்கு வழிநடத்துகிற பரிசுத்தமுள்ள சுத்தமான வழிக்கு வந்திருக்கிறார்கள். இந்தப் பரிசுத்தத்தின் பெரும்பாதையில் இருப்பதற்கு தகுதிபெறவும் தொடர்ந்திருக்கவும் நாம் அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறோம். உங்களைக் குறித்தே சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் பின்பற்றுகிற ஒழுக்கநெறி தராதரங்களும் நியமங்களும், நீங்கள் இந்த உலகின் பாகமாக இருந்தபோது இருந்ததைவிட இப்பொழுது அதிக உயர்வானவையாக இல்லையா? உங்களுடைய சிந்தையையும் நடத்தையையும் கடவுளுடைய தராதரங்களுக்கேற்ப பொருத்துவதற்கு நீங்கள் அதிகளவான முயற்சி செய்கிறதில்லையா?—ரோமர் 8:12, 13; எபேசியர் 4:22-24.
16. பரிசுத்த வழியில் நாம் நடக்கையில் எப்படிப்பட்ட நிலைமைகளை நாம் அனுபவித்து மகிழலாம்?
16 இந்தப் பரிசுத்தத்தின் வழியில் நீங்கள் தொடர்ந்து செல்கையில், அடிப்படையில் நீங்கள் மிருகத்தனமான மனிதர்களைக் குறித்த பயமற்றவர்களாய் இருக்கிறீர்கள். உண்மைதான், பேராசையுள்ள அல்லது பகைமையுள்ள மக்கள் அடையாளப்பூர்வமாக உங்களை உயிரோடு விழுங்கிவிடாதபடி கவனமாயிருக்க வேண்டும். மற்றவர்களுடன் தொடர்புகொள்வதில் பெரும்பாலானவர்கள் பலாத்காரம் செய்கிறவர்களாக இருக்கிறார்கள். கடவுளுடைய மக்கள் மத்தியில் என்னே ஓர் வித்தியாசம்! அவர்கள் பாதுகாப்பான ஓர் சூழ்நிலையில் இருக்கின்றனர். உங்களுடைய சக கிறிஸ்தவர்கள் சந்தேகமின்றி பரிபூரணரல்லர்; சிலசமயங்களில் ஒருவர் தவறு செய்துவிடுகிறார் அல்லது புண்படுத்திவிடுகிறார். ஆனால் உங்களுடைய சகோதரர்கள் வேண்டுமென்றே உங்களுக்கு தீங்கிழைப்பதில்லை அல்லது உங்களை விழுங்கிவிடுவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். (சங்கீதம் 57:4; எசேக்கியேல் 22:25; லூக்கா 20:45-47; அப்போஸ்தலர் 20:29; 2 கொரிந்தியர் 11:19, 20; கலாத்தியர் 5:15) மாறாக, அவர்கள் உங்களில் அக்கறை காட்டுகின்றனர்; அவர்கள் உங்களுக்கு உதவி செய்திருக்கின்றனர்; அவர்கள் உங்களுடன் சேவைசெய்ய விரும்புகின்றனர்.
17, 18. என்ன கருத்தில் இப்பொழுது ஒரு பரதீஸ் இருக்கிறது, அது நம்மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது?
17 ஆகையால், 1 முதல் 8 வரையுள்ள வசனங்களின் தற்கால நிறைவேற்றத்தை மனதிற்கொண்டு, ஏசாயா 35-ம் அதிகாரத்தை நாம் ஆராயலாம். ஆவிக்குரிய பரதீஸென்று சரியாகவே அழைக்கப்படுகிற ஒன்றை நாம் கண்டுபிடித்திருக்கிறோம் என்பது தெளிவாயில்லையா? இல்லை, அது உண்மையிலேயே பரிபூரணமாக இல்லை—இன்னமும் பரிபூரணமாயில்லை. ஆனால், அது பரதீஸாயிருக்கிறது, ஏனென்றால் நாம் இங்கு ஏற்கெனவே, வசனம் 2-ல் சொல்லப்பட்டுள்ளபடி, “கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்[கிறோம்].” அதன் விளைவென்ன? வசனம் 10 சொல்கிறது: “கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.” உண்மையில், நாம் பொய் மதத்திலிருந்து வந்திருப்பதும் கடவுளுடைய தயவில் நாம் மெய் வணக்கத்தை நாடித்தொடருவதும் சந்தோஷத்தை தூண்டுவிக்கிறது.
18 மெய் வணக்கத்துடன் சம்பந்தப்பட்ட சந்தோஷம் தொடர்ந்து பெருகுகிறது, அல்லவா? அக்கறைகாட்டும் புதியவர்கள் மாற்றங்களைச் செய்வதையும் பைபிள் சத்தியத்தில் நிலைநிற்பவர்களாய் ஆவதையும் நீங்கள் காண்கிறீர்கள். சபையில் இளைஞர்கள் வளர்ந்து ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதை நீங்கள் கவனிக்கிறீர்கள். முழுக்காட்டுதல்கள் நடைபெறுகின்றன, அதில் உங்களுக்குத் தெரிந்திருப்பவர்கள் முழுக்காட்டப்படுவதை நீங்கள் காண்கிறீர்கள். இன்று அவை சந்தோஷப்படுவதற்கான, நிறைவான சந்தோஷத்திற்கான காரணங்கள் அல்லவா? ஆம், நம்முடைய ஆவிக்குரிய சுயாதீனத்திலும் பரதீஸிய நிலைமைகளிலும் மற்றவர்கள் நம்முடன் சேர்ந்திருப்பது என்னே சந்தோஷம்!
இன்னும் எதிர்காலத்திலிருக்கிற நிறைவேற்றம்!
19. நம்பிக்கையான என்ன எதிர்பார்ப்பை ஏசாயா 35-ம் அதிகாரம் நம்மில் நிரப்புகிறது?
19 நாம் இதுவரையாக ஏசாயா 35-ம் அதிகாரத்தை, யூதர்களின் திரும்பிவருதலுடன் அதன் முதல் நிறைவேற்றம் சம்பந்தமாகவும் இன்று நடந்துவருகிற ஆவிக்குரிய நிறைவேற்றம் சம்பந்தமாகவும் கலந்தாராய்ந்தோம். ஆனால் அது முடிவல்ல. இன்னும் அதிகம் இருக்கிறது. பூமியில் சொல்லர்த்தமான பரதீஸிய நிலைமைகள் வரவிருக்கிற திரும்ப நிலைநாட்டப்படுதலைப் பற்றிய பைபிள்பூர்வமான உறுதியோடு தொடர்புடையவையாய் இருக்கின்றன.—சங்கீதம் 37:10, 11; வெளிப்படுத்துதல் 21:4, 5.
20, 21. ஏசாயா 35-ம் அதிகாரத்தைக் குறித்ததில் இன்னும் மற்றொரு நிறைவேற்றம் இருக்கிறது என்று நம்புவது ஏன் தர்க்கரீதியாகவும் வேதப்பூர்வமாகவும் இருக்கிறது?
20 ஒரு பரதீஸைப் பற்றிய உயிரூட்டமுள்ள வர்ணனைகளை அளித்து, அதன் பின்பு அதன் நிறைவேற்றங்களை ஆவிக்குரிய காரியங்களுக்கு மட்டுப்படுத்துவது யெகோவா தேவனுக்குப் பொருத்தமாயிருக்காது. உண்மையில், ஆவிக்குரிய நிறைவேற்றங்கள் முக்கியத்துவமுடையவை அல்ல என்பதை சொல்வதற்கல்ல இது. சொல்லர்த்தமான பரதீஸ் நிலைநாட்டப்பட்டாலும்கூட, அழகிய இயற்கை காட்சி மற்றும் சமாதானமுள்ள விலங்குகள் மத்தியில் ஆவிக்குரிய விதத்தில் மோசம்போக்குகிற ஆட்களாலும், மூர்க்க மிருகங்களைப் போல நடந்துகொள்கிற மனிதர்களாலும் சூழப்பட்டிருந்தால், அது நம்மை திருப்திப்படுத்தாது. (தீத்து 1:12-ஐ ஒப்பிடுக.) ஆம், ஆவிக்குரிய காரியம் முதலில் வரவேண்டும், ஏனெனில் அது மிக முக்கியமானது.
21 இருந்தபோதிலும், வரவிருக்கிற பரதீஸ் நாம் இப்பொழுது அனுபவிக்கிற, எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக அனுபவிக்கவிருக்கிற ஆவிக்குரிய அம்சங்களுடன் முடிவடைந்துவிடுவதில்லை. ஏசாயா 35-ம் அதிகாரம் போன்ற தீர்க்கதரிசனங்களின் சொல்லர்த்தமான நிறைவேற்றத்தை எதிர்பார்ப்பதற்கு நமக்கு நல்ல காரணமிருக்கிறது. ஏன்? சரி, 65-ம் அதிகாரத்தில், ‘புதிய வானங்களும் புதிய பூமியும்’ பற்றி ஏசாயா முன்னறிவித்தார். யெகோவாவின் நாளைத் தொடர்ந்து என்ன சம்பவிக்கும் என்பதை விவரிக்கையில் அப்போஸ்தலன் பேதுரு அதன்மீது கவனத்தைத் திருப்பினார். (ஏசாயா 65:17, 18; 2 பேதுரு 3:10-13) ‘புதிய பூமி’ மெய்ம்மையாகும்போது, ஏசாயா விவரித்த அம்சங்கள் உண்மையிலேயே இருக்கும் என்று பேதுரு சுட்டிக்காண்பித்தார். அது, ஒருவேளை உங்களுக்கு பழக்கமாயிருக்கிற வர்ணனைகளையும்—வீடுகளைக் கட்டி அவற்றில் குடியிருத்தல்; திராட்சைத் தோட்டங்களை நாட்டி அதன் கனிகளைப் புசித்தல்; ஒருவர் தன்னுடைய கைகளின் கிரியைகளை நெடுநாள் அனுபவித்தல்; ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து வாசம்பண்ணுதல்; உலகளாவ எந்தவித தீங்கும் ஏற்படாதிருத்தல் ஆகியவற்றையும்—உட்படுத்துகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், நீடித்த வாழ்க்கை, பாதுகாப்பான வீடுகள், ஏராளமான உணவு, திருப்தியளிக்கும் வேலை, விலங்குகளுக்கு மத்தியிலும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலும் சமாதானம்.
22, 23. ஏசாயா 35-ம் அதிகாரத்தின் எதிர்கால நிறைவேற்றத்தில் சந்தோஷத்திற்கான என்ன ஆதாரம் அங்கு இருக்கும்?
22 அந்த எதிர்பார்ப்பு உங்களை சந்தோஷத்தால் நிரப்பவில்லையா? நிரப்ப வேண்டும், ஏனெனில் அவ்விதமாக வாழும்படிதான் கடவுள் நம்மை படைத்தார். (ஆதியாகமம் 2:7-9) ஆகையால், நாம் சிந்தித்துக்கொண்டிருக்கிற ஏசாயா 35-ம் அதிகாரத்திலுள்ள தீர்க்கதரிசனம் சம்பந்தமாக அது எதைக் குறிக்கிறது? சந்தோஷத்துடன் ஆர்ப்பரித்துப் பாடுவதற்கு நமக்கு கூடுதலான காரணம் இருக்கிறது. சொல்லர்த்தமான பாலைவனங்களும் வறண்ட பிரதேசங்களும் நம்மை களிகூரும்படி செய்து பூத்துக்குலுங்கும். நீலநிற கண்கள், அல்லது கருமைநிற கண்கள், அல்லது இன்பகரமான வேறு நிறத்தையுடைய கண்களைக் கொண்டிருந்து, ஆனால் இப்பொழுது குருடராக இருக்கிறவர்கள் காணமுடியும். செவிடராயுள்ள நம்முடைய சக கிறிஸ்தவர்கள், அல்லது நம்மில் சரிவர காதுகேளாதவர்களும்கூட, தெளிவாக கேட்கமுடியும். கடவுளுடைய வார்த்தை வாசிக்கப்பட்டு விளக்கப்படுவதைக் கேட்பதற்கும், மரங்களில் வீசும் தென்றல் காற்றின் மென் ஓசையையும் ஒரு சிறுபிள்ளையின் சிரிப்பொலியையும் பறவையின் கீதத்தையும் கேட்பதற்கும் அத்திறமையை பயன்படுத்துவது என்னே ஓர் சந்தோஷம்!
23 முடவர்கள், இப்பொழுது மூட்டு அழற்சியினால் பாதிக்கப்படுகிறவர்கள் உட்பட, வேதனையில்லாமல் நடந்து திரிவார்கள். என்னே ஓர் விடுதலை! பின்பு சொல்லர்த்தமான நீரோட்டங்கள் பாலைவனத்தின் வழியே பீறிட்டுப் பாய்ந்தோடிவரும். அலைகளைப் போல் மோதும் தண்ணீரை பார்ப்போம், நீர்க்குமிழியின் சத்தத்தைக் கேட்போம். நாம் அங்கே நடந்துசென்று பசும் புல்லையும் நாணற்செடிகளையும் தொடக்கூடியவர்களாய் இருப்போம். உண்மையிலேயே அது திரும்பநிலைநாட்டப்பட்ட பரதீஸாக இருக்கும். பயமின்றி சிங்கம் அல்லது இத்தகைய மற்ற விலங்கைச் சுற்றியிருப்பதில் என்ன சந்தோஷம்? நாம் அதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை, ஏனெனில் நாம் அனைவரும் அந்தக் காட்சியை ஏற்கெனவே கற்பனை செய்துபார்த்து அனுபவித்திருக்கிறோம்.
24. ஏசாயா 35:10-ல் உள்ள வார்த்தைகளை நீங்கள் ஏன் ஒத்துக்கொள்ளலாம்?
24 ஏசாயா நமக்கு உறுதியளிக்கிறார்: “கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்.” ஆகவே, சந்தோஷத்துடன் ஆர்ப்பரிப்பதற்கு நமக்கு காரணமிருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்ளலாம். ஆவிக்குரிய பரதீஸில் யெகோவா தம்முடைய மக்களின் சார்பாக ஏற்கெனவே செய்துவருகிற காரியங்களின் பேரில் சந்தோஷப்படுங்கள், மேலும் மிக சமீபத்திலிருக்கிற சொல்லர்த்தமான பரதீஸில் நாம் எதிர்பார்க்கக்கூடிய காரியங்களின் பேரில் சந்தோஷப்படுங்கள். சந்தோஷமாய் இருப்பவர்களைப் பற்றி—நம்மைப் பற்றி—ஏசாயா எழுதுகிறார்: “சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.”—ஏசாயா 35:10.
நீங்கள் கவனித்தீர்களா?
◻ ஏசாயா 35-ம் அதிகாரம் என்ன இரண்டாவது நிறைவேற்றத்தை அடைந்திருக்கிறது?
◻ ஏசாயா முன்னறிவித்த அற்புதகரமான மாற்றங்களுக்கு ஆவிக்குரிய விதத்தில் எது ஒத்திருக்கிறது?
◻ இந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் நீங்கள் எவ்வாறு பங்குகொண்டிருக்கிறீர்கள்?
◻ ஏசாயா 35-ம் அதிகாரம் எதிர்காலத்திற்கான நம்பிக்கையால் நம்மை நிரப்புகிறது என்று நாம் ஏன் சொல்லலாம்?
[பக்கம் 15-ன் படம்]
ஜூன் 1918-ல் மிக முக்கிய பொறுப்பிலிருந்த ஏழு சகோதரர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த, நியூ யார்க், புருக்லினிலுள்ள ரேமன்ட் தெருவில் அமைந்துள்ள சிறைச்சாலை
[பக்கம் 16-ன் படம்]
அவருடைய பிற்பட்ட ஆண்டுகளில் சட்டரீதியாக குருடராய் இருந்த போதிலும், சகோதரர் ஃபிரான்ஸின் ஆவிக்குரிய காட்சி கூர்மையாக இருந்தது
[பக்கம் 17-ன் படங்கள்]
ஆவிக்குரிய வளர்ச்சியும் முன்னேற்றமும் சந்தோஷத்திற்கான காரணங்கள்